டிசம்பர் 2015 இல் தமிழகத்தில் ‘ஓவியா பதிப்பக’ வெளியீடாக வெளிவரவிருக்கும் வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவல் பற்றி மேலும் சில குறிப்புகள்…..

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

இளங்கோ ஓர் ஈழத்துத்தமிழ் அகதி. இலங்கையின் 1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அகதியாகக் கனடா நோக்கிப் புலம்பெயர்கின்றான் கதையின் நாயகனான இளங்கோ. ஆனால் அவனது பயணம் அமெரிக்காவின் பாஸ்டன் நகருடன் நின்று விடுகின்றது. அவனை கனடாவின் மான்ரியாலுக்கு ஏற்றிச்செல்லவிருந்த விமானம் நிறுவனம் மறுத்து விடுவதால் அவன் அமெரிக்காவிலேயே அகதிக்கோரிக்கை விடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றான். அவனை நியுயார்க்கிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றார்கள். அங்கு சுமார் மூன்று மாதங்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றான். சட்ட விரோதக்குடிவரவாளனாக நியுயார்க் மாநகரில் சுமார் ஒரு வருடம் வரையில் அலைந்து திரிகின்றான்  எந்தவிதச் சட்ட ஆவணங்களுமற்ற நிலையில், சுமார் ஒரு வருடம் வரையில் அவன் எவ்விதம் நியூயார்க் மாநகரில் தப்பிப்பிழைக்கின்றான் என்பதுதான் ‘குடிவரவாளன்’ நாவலின் பிரதான கரு.

இந்நாவல் அக்காலகட்டத்தில் அவன் வாழ்வில் எதிர்ப்படும் பல்வேறு வேற்றின மக்களுடனான அனுபவங்களை விவரிக்கின்றது. அமெரிக்காவுக்கு அகதியாக ஜேர்மனியிலிருந்து வரும் ரஞ்சிற்சிங், அவன் தடுப்பு முகாமிலிருந்து வெளியே வந்ததும் தங்கியிருக்கும் வீட்டுச்சொந்தக்காரரான இந்தியத்தம்பதியினர் அஜித்/பத்மா தம்பதியினர் அங்கு அவனுக்கு அறிமுகமாகும் வங்காளியான கோஷ், அங்கு தங்கியிருக்கும் ட்ரக் சாரதியான பஞ்சாபைச்சேர்ந்த மான்சிங், வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் முகவன் பீற்றர், அவனிடம் பணி புரியும் ஹென்றி, நியூ ஜேர்சியிலுள்ள கடலுணவு உணவகத்தின் பிரதான சமையல்காரன் கிரேக்கனான நெப்போலியன், அவனது உதவியாளன் மார்க், குடிவரவுத்திணைக்கள அதிகாரி டிம் காங்கின், நடை பாதைத்தம்பதியினரான மராத்திய ஹரிபாபு  தம்பதியினர், அவர்களிடம் பணிபுரியும் எஸ்கிமோ ஹென்றி, தோலாடைகளை விற்பனை செய்யும் இத்தாலியக்கடைக்காரனான கார்லோ, நியூயார்க் சட்டத்தரணி அனிஸ்மான், சட்டவிரோதக்குடிவரவாளர்களின் நிலையை வைத்துச் சுரண்டிப்பிழைப்பை நடாத்தும் ஸ்பானிஸ் வேலை வாய்ப்பு முகவனான பப்லோ  எனப்பல்வேறு இனங்களைச்சேர்ந்த கதாபாத்திரங்கள் நாவல் முழுவதும் வருகின்றன.

இவர்களுடனான இளங்கோவின் அனுபவங்களை விபரிப்பதே ‘குடிவரவாளன்’ நாவலின் முக்கிய நோக்கம்.

நாவலின் ஆரம்பத்தில் இளங்கோவின் 1983 காலகட்டத்துக் கலவர அனுபவங்கள் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் நியூயார்க் மாநகரத்தில் தப்பிப்பிழைப்பதற்காக அவன் செய்யும் தொழில்கள் பற்றி நாவல் விபரிக்கின்றது. கூடவே அமெரிக்க அரசின் சட்டவிரோதக்குடிகள், அகதிகள் பற்றிய சட்ட திட்டங்களை விமர்சிக்கின்றது நாவல். தப்பிப்பிழைப்பதற்காக நடைபாதைகளில் பல்வேறு தொழில்கள் செய்கின்றான்; உணவகங்களில் வேலை செய்கின்றான். இவ்விதம் இளங்கோவின் அனுபவங்களை விபரிக்கும் நாவல் அவனது உறுதியான, வாழ்வினை எதிர்நோக்கும் உள்ளத்தினையும் விபரிக்கின்றது.

Oviya Pathippagam
17-16-5A, K.K.Nagar,
Batlagundua – 642 202
Tamil Nadu, India

Phone: 04543 – 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com