நிகழ்வுகள் / அறிவித்தல்கள்: வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா | தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ – 2015 | ‘சிட்னி’யில் கறுப்பு ஜூலை நிகழ்வு! | இனம் இணைய ஆய்விதழ் இனிதே தொடக்கம்!
வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா!
– தகவல்: வெலிகம ரிம்ஸா முஹம்மது –
வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `அறுவடைகள்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தாயக ஒலி ஆசிரியர் திரு தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக இலண்டன் இலக்கிய நிறுவகத்தின் தலைவர் வவுனியூர் இரா உதயணன் அவர்களும் சிறப்பதிதிகளாக அல்ஹாஜ் எம்.எம். சப்ரி, டாக்டர் அல்ஹாஜ் ஏ.பி. அப்துல் கையூம் (ஜே.பி), கே. அரசரத்தினம், ந. கருனை ஆனந்தன், உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர், மு. கதிர்காமநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எம். சப்ரி நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார்.
வரவேற்புரையை தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும், வெளியீட்டுரையை கவிஞர் நஜ்முல் ஹுஸைனும் நிகழ்த்த, கவி வாழ்த்தை தாஜுல் உலூம் கலைவாதி கலீல் பாடுவார். நயவுரையை திருமதி வசந்தி தயாபரன் வழங்க ஏற்புரையை நூலாசிரியரும், நன்றியுரையை ஊடகவியலாளர் கே. பொன்னுத்துரையும் நிகழ்த்துவார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா தொகுத்து வழங்கவுள்ளார்.
`அறுவடைகள்’ வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 11 ஆவது நூல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ – 2015
– தகவல்: தமிழ் ஸ்டுடியோ –
நண்பர்களே, சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களை கொண்டாடவும், திரைப்பட வளர்ச்சியில் பங்கெடுக்கும் போற்றவும், தமிழ் ஸ்டுடியோ இயக்கம் 2010 ஆம் ஆண்டு லெனின் விருதை தொடங்கியது. 2015 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது திரைப்பட ஆவணக் காப்பகத்தை தோற்றுவித்த திரு. பி.கே. நாயர் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
யார் பி.கே. நாயர்?
பரமேஸ் கிருஷ்ணன் நாயர் (பி.கே.நாயர்) 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். இளமைப்பருவத்தில்தான் அவருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் மேலோங்கியிருக்கிறது. குறிப்பாக 1940களில் வெளியான, படங்களான, கே.சுப்ரமணியத்தின், ”அனந்தசயனம்”, ”பக்தபிரகலாதா”படங்களைச் சொல்லலாம். ஆனாலும், இவரது சினிமாவின் ஆசைக்கு குடும்பத்திலிருந்து போதிய ஆதரவுகள் கிடைக்கவில்லை.
பின்னர் 1953ல் கேரளப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவுடன், தனது திரைப்பட ஆசையைத் தொடர பம்பாய்க்குச் சென்றுவிட்டார். பம்பாயில் படப்பிடிப்பு நுணுக்கங்களையும், சினிமா எடுக்கும் முறையையையும், அப்போது பிரபலமாகயிருந்தவர்களான, மெஹபூப் கான், பிமல் ராய், ஹிரிஷ்கேஷ் முகர்ஜி போன்றோரிடம் பயிலும் வேளையிலேயே, திரைப்படத் துறையில் பிறரைப் போல சாதிக்க தனக்கு இன்னும் தகுதிகள் வேண்டுமென்றும், திரைப்படக் கல்வித் துறை சார்ந்து தான் செயல்பட்டால் தன் எதிர்காலம் நன்றாகயிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டார்.
1961ஆம் ஆண்டு, பூனே திரைப்படக் கல்லூரியில் உதவி ஆய்வாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கு பேராசிரியர்களாக இருந்த மரியா செடோன், மற்றும் சதீஸ் பகதூர் ஆகியோருடன் இணைந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு “சினிமா ரசனை” வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். பின்னர்., 1964லிலிருந்து இந்திய தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தின் (NFAI) நிறுவனர் மற்றும் இயக்குனராகவும் இருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய திரைப்படங்களை, அர்ப்பணிப்போடு NFAIக்கு கொண்டுவந்திருக்கிறார்.
பல முக்கியத் திரைப்படங்கள் பி.கே.நாயர் அவர்களின் பெருமுயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் சில: தாதா சாகேப் பால்கேயின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ மற்றும் காலிய மர்தன், எஸ்.எஸ்.வாசனின் ‘சந்திர லேகா’, உதய் சங்கரின் ‘கல்பனா’, ”மார்த்தாண்ட வர்மா”, பாம்பே டாக்கிஸின் படங்களான ”ஜீவன் நையா”, ”பந்தன்”, ”கங்கன்”, ”அச்சுத் கன்யா”, மற்றும் ”கிஸ்மத்” முதலானவை அடங்கும்.
பி.கே.நாயரின் வாழ்க்கையைக் குறித்து ஆவணப்படம் ஒன்றும் “செல்லுலாய்ட் மேன்” என்ற பெயரில் சிவேந்திரா சிங் துங்கர்பூர் என்பவரால் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் பல விருதுகளையும் வென்றுள்ளது.
ஏன் பி.கே. நாயருக்கு? தமிழில் திரைப்படம் சார்ந்த பல்வேறு மாயைகளை உடைக்கவும், திரைப்படம் சார்ந்த பல்வேறு உட்கூறுகளை பரவலாக அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் பணியை தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து செய்து வருகிறது. சினிமா என்பதே வெறுமனே சினிமா அல்ல. அது பல்வேறு கலைகளின் தொகுப்பு.
பல நுண்கலைகளும், தொழில்நுட்பமும் ஒன்று சங்கமிக்கும் இடம். ஒரு கேமராவை வைத்துக்கொண்டு சில கதாப்பாத்திரங்களை நடிக்க வைத்து அதனை பதிவு செய்து, திரையரங்கில் திரையிட்டு மக்கள் பார்த்தால் அதுதான் திரைப்படம் என்கிற தவறான கண்ணோட்டமே தமிழ் சினிமா வரலாற்றில் விரவிக் கிடக்கிறது. ஆனால் சினிமாவின் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்தும், அதன் வரலாறு, அழகியல், அரசியல் சார்ந்த புரிதல் பெரும்பாலும் திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்கே இருப்பதில்லை. அத்தகைய நிலையை துடைத்தெறிய லெனின் விருது அவசியமாகிறது.
தமிழில் நல்ல சினிமா உருவாவதற்கான பல்வேறு வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சுயாதீனத் திரைப்படக் கலைஞர்கள் படமெடுத்தால் அந்த படத்தை யார் பார்ப்பது, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் எப்படி கிடைக்கும்? திரையரங்க வெளியீடுகளில் மற்ற திரைப்பட கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், பொருளாதாரமும் சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே முதலில் சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களை நாம் கொண்டாட வேண்டும். அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும்.
படமெடுப்பவர்களை போலவே, சினிமாவின் பின்னணியில் அதன் வளர்ச்சிக்காகவும், மக்களின் ரசனைக்காகவும் பாடுபடும் பலரையும் நாம் ஆதரிக்க, கொண்டாட வேண்டும். அப்போதுதான் சினிமா அதன் அடுத்தக் கட்ட வளர்ச்சியை எட்டும். பி.கே. நாயர் தன்னுடைய அயராத பணியினால் இந்தியாவில் பெரும்பாலான திரைப்படங்களை மீட்டெடுத்தார். தொடர்புடைய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இல்லாத அக்கறை பி.கே. நாயருக்கு இருந்தது. திரைப்படங்களை அதன் பிரதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்கிற தீராத ஆசையும், அதற்கான ஓயாத உழைப்பையும், எதிர்பாராத பல்வேறு சிக்கலையும் பி.கே நாயர் சந்தித்தார். ஆனாலும், தன்னுடைய பணியில் தொய்வடையாது, தொடந்து பல்வேறு மொழிகளில் வெளிவந்த பல ஆயிரக்கணக்கான திரைப்படங்களை மீட்டெடுக்கும் பணியை செவ்வனே செய்து முடித்தார். திரைப்பட ரசனையை வளர்க்கும் விதமாக பல்வேறு நாடுகளுடன் போட்டிபோட்டு நல்ல சினிமா ரசனை வகுப்பை முன்னெடுத்தார். ரசனை மாற்றம், திரைப்பட வளர்ச்சி ஆகிய இரண்டு துறையிலும் பி.கே. நாயரின் பணி அளப்பரியது.
அவரது இந்த பணியை போற்றும் விதமாக தமிழ் ஸ்டுடியோ இயக்கம் 2015 ஆம் ஆண்டுக்கான லெனின் விருதை அவருக்கு அளித்து தன்னை பெருமைப்படுத்திக் கொள்கிறது. ஒரு மாபெரும் ஆளுமையை கொண்டாடும் இந்த தருணத்தை பெற்றமைக்காக தமிழ் ஸ்டுடியோ பெரும் கவுரமாக கருதுகிறது.
விருது வழங்கும் விழா சென்னையில் எதிவரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக பி.கே. நாயர் பற்றிய ஆவணப்படமான செல்லுலாயிட் மேன் தமிழ்நாடு முழுக்க திரையிடப்படவிருக்கிறது. விருது வழங்கும் நாளன்று சென்னையிலும் இந்த திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது.
படத்தொகுப்பாளர் ’பீ. லெனின்’ பெயரில் விருது ஏன்?
படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவர்கள் தமிழில் யதார்த்த சினிமாக்களின் வருகைக்கும், சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடி. வணிக நோக்கத்தை பிரதானமாகக் கொண்ட வெகுஜனப் படங்களில் ஆரம்பகாலத்தில் வேலை செய்திருக்கிறார். மறுப்பதற்கில்லை. ஆனால், இதே காலக்கட்டத்தில் மலையாளத்தில் பரதன் உள்ளிட்ட முக்கியமான இயக்குனர்களுடன் வேலை செய்கிறார். இந்தியாவின் முக்கியமான திரைப்படங்களை தன்னுடைய படத்தொகுப்பு பாணியால் செரிவூட்டுகிறார். படத்தொகுப்பின் மூலம் கதையை சொல்லும் புதிய உத்தியை அறிமுகம் செய்கிறார். மேலும், வெகுஜன சினிமாக்களின் எண்ணிக்கை அதிக அளவில் வரத்துவங்கியபொழுது, தேவையில்லாத பாட்டுகள், வன்முறை, ஆபாசங்கள் என சினிமாவின் கமர்ஷியல் தனங்கள் எல்லையைத் தாண்டுகிறது. அச்சமயத்தில் இனிமேலும் இதுபோன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்யமாட்டேன் என்று, அவராகவே தமிழ் சினிமா சிக்கிக்கொண்டிருக்கின்ற சூழலிருந்து படிப்படியாக வெளியே வந்தவர். அப்பொழுது, லெனின் படத்தொகுப்பு செய்தாராயின் படம் தேறிவிடும், என அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரையே நாடி வந்துகொண்டிருந்த காலம். லெனின் சினிமாவில் அனைவருக்கும் தேவையானவராக இருந்தார், அவரின் படத்தொகுப்பிற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடவும் தயாரிப்பாளர்கள் தயாராகவே இருந்தனர். லெனின் பணத்தின்மீது நாட்டம் கொள்ளவில்லை, நல்ல சினிமாக்களின் மீது காதல் கொண்டிருந்தார்.
தமிழ்ச்சினிமாவின் குறுகிய எல்லையிலிருந்து வெளியே வந்தவுடன், குறும்படங்களிலும், சமரசமற்ற யதார்த்த திரைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்புடன் ஈடுபட்டார். தனக்கான பார்வையை உறுதிசெய்து ஸ்திரப்படுத்திக்கொண்டார். தான் நினைத்தபடியே சுதந்திரமாக படங்களும் எடுக்க ஆரம்பித்தார். லெனின், 1992ல் இயக்கிய ‘நாக் அவுட்’ என்ற குறும்படம்தான், முதன்முதலில் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் அல்லாத ஒருவர்,
தமிழகத்தில் எடுத்த குறும்படம், என்ற சிறப்பு பெறுகிறது. அதுவரை பிலிம் இன்ஸ்டியூட் படிப்பவர்கள், திரைப்படத்திற்கான பரிசோதனை முயற்சியாக மட்டுமே சில குறும்படங்கள் எடுத்து வந்தனர். அவைகள் வெளியுலக பார்வைக்கும் அதிகமாக காண்பிக்கப்பட மாட்டாது. அதனையல்லாமல், ‘நாக் அவுட்’ பரவலான கவன ஈர்ப்பையும் பெற்று அதைப்போன்று பல குறும்படங்கள் வருவதற்கும், குறும்படங்கள் பற்றிய புரிதல் அனைவருக்கும் தெரிவதற்கும் காரணமாக அமைந்தது. தமிழ் குறும்படங்களுக்கு படத்தொகுப்பாளர் லெனின் தான் முன்னோடி.
இதுமட்டுமின்றி, “நாக் – அவுட்’டிற்கு முன்பு வரையிலும், தேசிய விருதானது குறும்படங்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால், லெனினின் ‘நாக் அவுட்’ முதன்முதலாக தேசிய விருது பெற்ற குறும்படம். முழுநீளப் படங்கள் மட்டுமே தேர்வுப்பட்டியலில் இருந்ததை போராடி மாற்றி, குறும்படங்களுக்கும் தேசிய விருதிற்கான அங்கீகாரம் கிடைக்கச்செய்வதில் லெனின் தீவிரம் காட்டினார். குறும்படங்களும் மதிக்கப்பட்டு, விருது வழங்கப்பட வேண்டும் என்ற தன் நியாயத்தை முன்னிலைப்படுத்தினார். அவர் மூலமாகவே தேசிய விருதில் குறும்படங்களுக்கும் தனியான கெளரவம் கிடைக்கின்றது. அன்றிலிருந்து இன்றுவரை குறும்படங்களுக்கு தனித்த அங்கீகாரமும், அவர்களுக்கென்று தேசிய விருதில் ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இன்று வரையிலும் அது தொடர்கின்றது. இதற்குக்காரணமும் லெனின் அவர்களே.
பின்னர் ’ஊருக்கு நூறு பேர்’, ’செடியும் சிறுமியும்’, ’எத்தனை கோணம் எத்தனை பார்வை’, போன்ற பல படங்கள் எடுத்திருக்கிறார். இவை எவையுமே திரையரங்க வெளியீட்டிற்காக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்ல. திரையரங்க வெளியீடு இல்லாமலேயே தான் இயக்கிய படங்களை ஊரெங்கும் கொண்டு செல்ல முடியும் என்பதற்கும், திரையரங்குகள் மறுத்தாலும் அப்படத்திற்கு விருதுகள் கிடைக்கப்பெறும், என பரவலான சமூகத்திற்கு உணர்த்த தானே முன்னோடியாக விளங்கினார்.
கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவெனில், இது வரையிலும் எடுக்கப்பட்ட படங்கள் திரையரங்க வெளியீட்டினை மட்டுமே சிரமேற்கொண்டு எடுக்கப்பட்ட படங்களாக இருக்கின்றன. திரையரங்கத்தில் வெளியாகவில்லையெனில் அதனை ஒரு படமாக கூட யாரும் பொருட்படுத்துவதில்லை.
இத்தகைய கட்டுப்பாடுகளையெல்லாம் லெனின் அவர்களே முதலாவதாக கலைகிறார். அண்டை மாநிலமான கேரளாவில் தொலைக்காட்சி உரிமைக்காக மட்டுமே படம் எடுக்கின்றனர். அந்த உரிமையின் மூலம் கிடைக்கின்ற பணத்தில் அவர்கள் பொருளாதாரத்தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
மேலும், தமிழ்நாட்டு மக்கள் திரையரங்குகளில் படம் பார்த்தே பழக்கப்பட்டவர்கள். ஆனால், லெனினின் ’நாக் அவுட்’, த.மு.எ.க.ச மூலமாக ஊர், ஊராக திரையிடப்படுகிறது. திரையரங்கத்தின் வாயிலாக மட்டுமில்லாமல், திரையிடலின் வாயிலாகவும், தன் படத்தினை எந்த ஊர் மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிரூபித்தவர் படத்தொகுப்பாளர் லெனின். இவ்வாறான சூழ்நிலையில் சுயாதீனத்திரைப்படங்கள் எடுத்திருக்கின்றவர்களுக்கு விருது கொடுக்கின்றோம் என்றால், படத்தொகுப்பாளர் பீ. லெனினைத் தவிர இவ்விருதின் பெயருக்கு பொருத்தமானவர்கள் வேறுயாரும் கிடையாது.
தமிழகத்தில் திரைப்படங்களை இயக்கமாக மாற்றி மக்களிடம் கொண்டுசேர்த்ததும் லெனின்தான். படம் எடுப்பதோடு நின்றுவிடாமல், அதனை மக்களிடம் கொண்டுசேர்ப்பிப்பதும் உண்மையான கலைஞன் என்பனின் கடமை என்பதை நன்கு உணர்ந்து செயலாற்றுபவர்.
எனவேதான் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயராலேயே, அவரின் பிறந்த தினமான ஆகஸ்டு 15ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படுகின்றது.
http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_5_announcements.php
thamizhstudioarun@gmail.com
‘சிட்னி’யில் கறுப்பு ஜூலை நிகழ்வு!
– Sydney Tamil Events –
கறுப்பு ஜூலை…. தமிழர் வாழ்வில் மறக்கப்பட முடியாத திருப்பு முனை.“தமிழர்களுக்கு இலங்கைத்தீவின் மற்றைய பாகங்களில் இடமில்லை, அவர்கள் தாயக இடங்களுக்கே செல்லட்டும்” என்று அப்போதைய அதிபர் ஜே ஆர் ஜெயவர்த்தனே பிரகடனப்படுத்திய கோரமான நிகழ்வுகளை நாம் மறந்துவிடலாமா?
Black July Commemoration & Sydney Tamil Memorial Opening
Sunday, 26th July 2015, 2.00 – 4.00 pm
Rockwood Cemetery, Martyrs Section
Centenary Drive Entrance, Plot 5, Necropolis Drive
Contact : 0403 490 724 or 0449 201 103
வாருங்கள்… அதனை நினைவு கூர. தமிழர் நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் நடுகல் அருகே….
ஜூலை 26ம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை 2 மணியிலிருந்து மாலை 4 மணி வரை
ரூக்வூட் மயானத்தின் மாவீரர் பகுதியிலுள்ள நடுகல் அருகே
ஒன்றிணைந்து நினைவு கூருவோம்.
காற்றுவெளி மின்னிதழின் ஆடி மாத இதழ் வெளியாகியுள்ளது.
– முல்லை அமுதன் –
வணக்கம், தொடர்ந்து மின்னம்பலத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுவரும் காற்றுவெளி மின்னிதழின் ஆடி மாத இதழ் பார்வைக்கு தரப்பட்டுள்ளது.அடுத்த இதழுக்கான படைப்புக்களைக் கோரப்பட்டுள்ள நிலையில் தங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.
காற்றுவெளி உங்கள் பார்வைக்கு : http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
நட்புடன்,
முல்லைஅமுதன்
mullaiamuthan@gmail.com
இனம் இணைய ஆய்விதழ் இனிதே தொடக்கம்!
– செ.பா .சிவராசன் –
கீதம் பதிப்பகம் சார்பில் 2016 ஜனவரியில் நடைபெறவிருக்கும் 39 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபல திரைப்பட பாடலாசிரியரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் நூலாசிரியர் ஆக கவிஞர்களுக்கு வாய்ப்பு , நூலில் ஆசிரியர் ஆக வழி முறை:- http://www.vahai.myewebsite.com/ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . கவிஞரே..
இவ் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு நூலின் ஆசிரியர் ஆகவும் , இப்படி எழுதும் ஆற்றல் பெற்ற கவிஞர்களும் இருக்கிறார்கள் என சமுதாயத்திற்கு அடையாளம் காட்டவும் இந்த நூல் உதவும் என்பதால் இப் புத்தகம் கவி உலகிற்கு திருப்பம் தரும் வெளியீடாக அமைய உள்ளது. மிக மிக நல்ல கவிதையினை இந்த நூலிற்காக படையுங்கள் கவிஞரே.
” செல்லும் வழியில் வலிகள் இருந்தாலும்
வெல்லும் வழியில் விதிகள் செய்வோம் “
வாழ்த்துகளுடன்
cpsivarasan@gmail.com
செ.பா .சிவராசன்