2017 ஒரு பார்வை!

2017-2018வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாகவும், சிலரின் வாழ்வில் துயரமிக்கதாகவும் அமைந்து விடுகிறது. அவ்வகையில் கடந்து செல்லும் இந்த 2017 எதை எதை விட்டுச் செல்கிறது என்பதை இந்தச் சாமான்யனின் பார்வையில் மீட்டுப் பார்க்கிறேன். எனது மீள்பார்வை கொஞ்சம் சத்தமாக உங்கள் முன்றலிலும் விழுகிறது.

முதலாவதாக சர்வதேச அரங்கை எடுத்துப் பார்க்கிறேன். 2017ம் ஆண்டின் ஆரம்பம் அனைத்து உள்ளங்களையும் வித்தியாசமான உணர்வுகளால் தாக்கியது. ஜனநாயக ரசியலில் முன்னனியில் நிற்கும் மேலை நாடுகளில் ஒன்றான அமெரிக்கா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கப் போகிறது ? எனும் கேள்வி அரசியல் ஆர்வலர்கள் தொடங்கி, சாதரண மக்கள் வரை சர்வதேச அளவில் மிகப்பெரிய கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. தனது தேர்தல் பிரசார மேடைகளில் மிகத் தீவிரமான வகதுசாரப் போக்கைக் கடைப்பிடித்த அமெரிக்க ஜனாதிபது ட்ரம்ப் அவர்கள் பயணிக்கப் போகும் பாதையும், அப்பாதையினால் ஏற்படப்போகும் சர்வதேச தாக்கத்தைப் பற்றிய ஒருவிதமான அச்ச உணர்வும் மக்களிடையே பரவியிருந்தது. இன்றைய சூழலில் அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகும் நிலையில் அவரின் அதிகாரம் நான் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலான சர்வதேச தாக்கத்தையே எற்படுத்தியிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் மீதான அவரது செயற்பசடுகளும், அமெரிக்க உள்நாட்டு இனவாதப் பிரச்சனைகளின் மேலோக்கத்திற்கு துணை போகும் அவரது சில செயற்பாடுகளையும் தவிர இதுவரை மட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே திரு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து தேசத்தை எடுத்துக் கொண்டால் 2016 நடைபெற்ற “ப்ரெக்ஸிட்” எனும் ஜரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் சர்வதேச வாக்கெடுப்பின் முடிவே இன்றுவரை இங்கிலாந்தின் அரசியலில் முன்னனியில் நிற்கிறது என்பதுவே உண்மை. இதன் எதிரொலியாக ஒரு தேர்தலை இங்கிலாந்து எதிர்கொண்டதும், ஒரு மைனாரிட்டி அரசாங்கம் அமைய வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டதும் இங்கிலாந்து அரசியலில் 2017 பதித்த முத்திரைகள் என்றால் மிகையாகாது. இந்த ப்ரெக்ஸிட் என்பது ஜரோப்பிய முன்னனியின் மீதுதான் தாக்கம் ஏர்படுத்தியது என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கிலாந்து மக்களின் அரசியல் களத்தையே இரு பாதிகளாகப் பிரித்துள்ளது என்பதும், ஒரு விதமான இனத்துவேஷத்தை மக்கள் மனங்களில் தூவியிருக்கிறது என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகின்றன. இவ்வரசியல் பிரிவு என்பது கட்சிரீதியானது மட்டுமல்ல கட்சி பேதங்களைக் கடந்து வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை சில சமயங்களில் இணைத்திருக்கிறது என்பதும் உண்மை. 2017ம் ஆண்டு இதுவரை மூன்று அமைச்சர்களைக் காவு கொண்டிருக்கிறது. வெவ்வேறு காரணங்களுக்காக இதுவரை மூன்று அமைச்சர்கள் இதுவரை தமது பதவிகளை இராஜினாமச் செய்துள்ளார்கள். இங்கிலாந்துப் பிரதமரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே தொங்கிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் எதிர்காலப் பொருளாதாரம் ஒரு பின்னடைவைத் தற்காலிகமாகவேனும் எதிர்கொள்ளப் போகிறது என்பது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் உண்மையாகிறது. 2018 எமக்கு என்ன கொண்டு வரப்போகிறது என்பது . . . .

மற்றைய ஜரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டால், அதில் முன்னனி வகிக்கும் ஜேர்மனி, பிரான்சு. ஆஸ்ட்ரியா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளிநாட்டவருக்கெதிரான ஒருவகை இனத்துவேஷ அடிப்படையிலான அரசியலே மேன்மை வகிக்கிறது என்பது கவலைக்குரிய விடயமாகவே இருக்கிறது 2017ல் தலைதூக்கிய இப்பிரச்சனை 2018ல் எத்தகைய வடிவத்தை எடுக்கப் போகிறது என்பதை அரசியல் அவதானிகள் மிகவும் அவதானத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 2017 ஜேர்மனிய, பிரான்சு தேர்தல்களில் ஒருபுதுவிதமான அரசியல் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

வடகொரியாவின் தொடரும் அச்சுறுத்தல்கள் எங்கே உலக அமைதிக்குப் பங்கம் விளைவித்து விடுமோ எனும் அச்சம் அனைவரின் மனங்களிலும் மேலோங்கியுள்ளது. சிரியா நாட்டின் போர் ஓரளவுக்கு அடக்கப்பட்டு விட்டாலும் மக்கள் முழுமையான விடிவுக்குள் நுழைந்து விட்டார்களா? என்பது கேள்விக்குறியே ! அமேரிக்கா ஜனாதிபதியிம் சமீபத்திய செயற்பாட்டினால் இஸ்ரேலிய, பாலஸ்|தீன அமைதிப் பேச்சுக்கள் பின்னடைந்தது போன்றதோர் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியின் முழுத்தாக்கமும் 2018ல் தான் உணரப்படும் போன்றே தோன்றுகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைதியின்மைக்கு 2018 ஒரு விடிவை நல்குமா? என்பது உலக நலம் விரும்ப்பிகள் அனைவரின் மனங்களிலும் ஆவலோடு மேலோங்கும் கேள்வியாகிறது. ரஸ்ய நாட்டின் அரசியல் பாதை, சீனாவின் பொருளாதார மேன்மை என்பன சர்வதேச அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது ? இதற்கான விடைகலும் 2018க்குள் தான் ஒளிந்து கிடக்கின்றன.

2017 இயற்கை அனர்த்தங்களையும், பயங்கரவாத தாக்குதல்களையும், வாரி வழங்கித்தான் இருக்கின்றது. இங்கிலாந்தில் மன்செஸ்டர், லண்டன் நகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும், அமெரிக்க நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும் மற்றும் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் நிகழ்ந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் 2017ம் ஆண்டு மக்கள் மனதில் நீங்கா வடுக்களைப் பதித்திருக்கின்றது. இயற்கை அன்னை மக்களின் பேராசையின் பால் கொண்ட ஆவேசம் தான் இயற்கை அனர்த்தங்களாக உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

அதேநேரம் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் துயருறும் மனங்களுக்கு ஒருவிதமான ஆறுதலை நல்குகின்றன என்பதும் உண்மையே. ஆனால் இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றங்கள் அடிமட்ட மக்கலுக்கு சென்றடையும் வேகம் 2018ல் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைத்து மனங்களினதும் மாறாத அவா என்பதும் உண்மையே ! தமிழ்நாட்டின் அரசியல்களம் 2017ல் மிகவும் வேதனையளிப்பதாகவே உள்ளது. அரசியல் நிலை சீரடைந்து 2018ல் மக்கள் ஒரு ஸ்திரமான நிர்வாகத்தினக் காணவேண்டும் என்பது பிரார்த்தனையாகவே உள்ளது.

எனது பிரத்தியேக வாழ்வினைப் பொறுத்தவரை 2017 ஒரு மிதமான ஆண்டாகவே இருந்திருக்கிறது . நான் விருப்ப ஓய்வுதியம் எடுத்து இது மூன்றாவது ஆண்டாகும் இருப்பினும் பல இன்னோரன்ன காரணங்களினால் எனது எழுத்துப் பணி நான் எதிர்பார்த்த வகையில் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. சிறிது மந்தமாகவே இருந்திருக்கிறது. 2017 ஆண்டின் சிகரமாக விளங்கியது யூலை மாதம் கனடாவில் நான் கலந்து கொண்ட எனது யாழ் மத்திய கல்லூரி 70களின் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வே ! அடுத்து என் வாழ்வில் புதுவரவாக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்மிடையே வந்துதித்த எனது இனிய பேத்தியின் உறவே 2017ம் ஆண்டு என் மனதினை மகிழ்வால் நிறைத்தது என்றால் மிகையாகாது. என்னால் முடியாது என்று எண்ணியிருந்த சிலவற்றை முடித்ததும், முடிக்கக்கூடிய பலவற்றை முடிக்காமல் விட்டதும் 2017 என்பதும் உண்மை. நவம்பர் நாம் பேற்கொண்ட பத்துநாட்கள் கப்பற் பயணம் கொடுத்த அனுபவங்களின் தளம் 2017 என்பதும் ஒரு மறக்க முடியா இன்ப அனுபவமே !

வாழ்க்கை என்பது அனுபவமே ! அகவைகள் ஒவ்வொன்றும் அவசரமாய் ஓடி எனது 61வது அகவையின் நடுவில் 2018க்குள் நுழைகிறேன். 2017ஜ விட 2018 மகிழ்ச்சிகரமானதாக அமையும் எனும் நம்பிக்கையின் அடித்தளமே வாழக்கையை நடத்துகிறது. அதற்காக 2018ல் துன்பங்கள் எதுவுமே அண்டாது என்று கூறிவிட முடியுமா? எது வந்தாலும் அதிலுள்ள நன்மைகளை எடுத்து தீமைகளைத் தவிர்த்துப் பார்க்க எம்மை பக்குவப் படுத்திக் கொள்வதே சரியான மார்க்கமாகும்.

ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா! வா!
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா! வா!

என்கிறது கவியரசரின் ஒரு பாடல் வரிகள். இளமையைத் தொலைத்து விட்டு முதுமையின் வாயிலில் நிற்பவன் நான். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் தரும் இனிமைகளை மனதில் தேக்கி வைத்து அதன் வலிமையோ [புதுவருடத்தினுள் நுழைவது ஒன்றே எமக்கு இருக்கும் ஒரே வழி.

இளையோர், முதியோர் அனைவருக்கும் இப்பாமரனின் எளிமையான புதுவருட வாழ்த்துக்கள்.

30.12.1017

ssakthi@btinternet.com