கனடா, மிசசாகாவில் உள்ள சொப்பா குடும்ப மன்றத்தின் கனடாதினக் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை, யூன் மாதம் 30 ஆம் திகதி 2018 இல் மிசசாகாவலியில் உள்ள எல்.சி. ரெயிலர் அரங்கில் கொண்டாடப்பட்டது. 500 மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பு கடந்த ஒன்பது வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. சென்ற சனிக்கிழமை மிசசாகா நகரில் கனடா தினம் கொண்டாடப்பட்ட போது பல்வேறு சமூகம் சார்ந்த பல அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர்.
கனடாதின விழாவின் ஆரம்பத்தில் விசேட விருந்தினர் ரஜீவ்கரன் முத்துராமன் அவர்களால் கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, சொப்கா மன்றக் கீதம் ஆகியன மன்ற அங்கத்தவர்களால் இசைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வைத்தியகலாநிதி வி. பிகராடோ, திருமதி பிகராடோ ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். இந்த நிகழ்வின்போது கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டு, அவரது பிரதம விருந்தினர் உரையும் அப்போது இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்திருந்த மிசசாகா மேயர் மதிப்புக்குரிய போணி குறம்பி (டீழnnநை ஊசழஅடிநை) அவர்களின் உரை இடம் பெற்றது. தொடர்ந்து நகரசபை, மாகாணசபை அங்கத்தவர்களின் உரைகள் இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து மன்றத்தின் முன்னாள் தலைவியும், தற்போதைய காப்பாளருமான சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்கள் மன்றத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தனால் அவரது கடந்தகால சேவைகளைப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து மன்றத்தின் தலைவரும் எழுத்தாளருமான குரு அரவிந்தனின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் சொப்கா மன்றத்தின் தற்போதைய செயற்பாடுகள் பற்றிப் பார்வையாளர்களுக்கு விளக்கிக் கூறினார். சிறார்கள் இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், ரிறிலிம் வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்கான நடைபவனி, ஒன்றுகூடல்கள், இசை, நடன பயிற்சி வகுப்புகள், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மொழி வகுப்புக்கள், உணவு வங்கிக்கான உணவு தானம், இரத்தவங்கிக்கான இரத்ததானம், வருமானவரிச் சேவை, பூங்காவைத் துப்பரவு செய்தல் போன்ற சொப்கா மன்றத்தால் ஆற்றப்படும் சமூகசேவைகள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டன. இதைவிட ஆண்டுதோறும் அங்கத்தவர்களின் ஆக்கங்களைக்கொண்ட சொப்கா மஞ்சரி வெளிவருவதாகவும், சென்ற வருடம் பெண் அங்கத்தவர்கள் எழுதிய சிறுகதைகள் அடங்கிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றை சொப்கா வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிடார். மேலும் தாயகத்தில் உள்ள தெல்லிப்பழை வைத்திய சாலைக்கு முடிந்தளவு நிதி சேகரித்துக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரங்கம் நிறைந்த இந்தக் கனடாவிழாவில் மன்ற அங்கத்தவர்களால் மட்டுமே மேடையேற்றப்பட்ட பல கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம் பெற்றன. கனடா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி அடைந்தவர்களுக்குப் பாராட்டுப் பத்திரமும் பணப்பரிசும் வழங்கப்பட்டது. இதற்கான பொறுப்பை அம்பிகா நகைமாளிகை அதிபர் திருமதி ஜெயசீலி இன்பநாயகம் ஏற்றுக் கொண்டார். சொப்காவின் தன்னார்வத் தொண்டர்களும் பாராட்டப்பட்டு, வழமைபோல இம்முறையும் மன்ற அங்கத்தவர்கள் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு உயர் கல்விக்கான புலமைப் பரிசுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
மன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய கனடா தினம் பற்றிய சிறார்களின் உரை, தமிழர்களின் பாரம்பரிய நடனம், மயில் நடனம், பாடல்கள், ‘முகங்கள்’ நாடகம், சொப்கா இளைஞர்களின் இசை நிகழ்ச்சி போன்றவை இந்தக் கனடா தின விழாவின் போது இடம் பெற்றன. விழாவின் நிகழ்ச்சிகளை செல்வி தக்ஷா பாலநாதன், செல்வி றுவிங்கா ஸ்ரீசண்முகதாசன் ஆகியோர் சிறப்பாகக் கொண்டு நடத்தினர். மன்றச் செயலாளர் செல்வி திவாணி நாராயணமூர்த்தி அவர்களின் நன்றி உரையும் அதைத் தொடர்ந்து இரவு விருந்துடனும் விழா இனிதே நிறைவடைந்தது. அடுத்த ஆண்டு சொப்கா மன்றம் தனது 10வது ஆண்டு நிறைவைச் சிறப்பாகக் கொண்டாட இருப்பதும், அடுத்த சனிக்கிழமை ரிறிலிம் வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்கான சொப்காவின் நடைபவனி 07-07-2018 நடைபெற இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
kuruaravinthan@hotmail.com