வாசிப்பும், யோசிப்பும் 198: ‘முறிந்த பனையின்’ நினைவு தினம் செப்டம்பர் 21!

'முறிந்த பனையின்' நினைவு தினம் செப்டம்பர் 21! இன்று (செப்டம்பர் 21) ராஜினி திரணகமவின் நினைவு தினம். மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மானுடநேயப்போராளியாக அவரை வரலாறு என்றென்றும் நினைவில் நிறுத்தி வைத்திருக்கும். மருத்துவத்துறைப்பேராசிரியையாகத் தான் கற்றதை தன் மண்ணின் மாணவர்களுக்குப் போதித்த அதே சமயம் , தான் பிறந்த மண்ணில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காகவும் போராடியவர் அவர். அவற்றை எந்தவிதப்பாரபட்சமுமில்லாமல் ஆவணமாக்கிப் பதிவு செய்தவர்களிலொருவர். அவர் நினைத்திருந்தால் அவரது படிப்புக்கு மேனாடொன்றில்  செல்வச்செழிப்புடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவற்றையெல்லாம் துறந்துவிட்டு, தான் பிறந்த மண்ணுக்குத் திரும்பியவர். அதுவும் மண் போர்களினால் கொந்தளித்துக்கொண்டிருந்த சமயம் திரும்பினார். அச்சூழலுக்குள் நின்று உரத்துத் தன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் அவர்.

அவரைக்கொன்றவர்கள் யார்? பலர் பலரைக்கூறுகின்றார்கள். என்னால் அவ்விதம் யாரையும் குறிப்பிட்டுக்கூற முடியாது. என்னிடம் அவற்றுக்கான ஆதாரங்கள் இல்லை. அவை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் அவை நிரூபிக்கப்படாதவரையில் என்னால் யாரையும் குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்ட முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ராஜினி திரணகம தான் இறப்பதற்கு முன்னர் தன் மரணம் தன் மண்ணைச்சேர்ந்த ஒருவராலேயே புரியப்படும் என்று எழுதியிருக்கின்றார். அவ்விதமே நடந்தது என்பதில் மட்டும் யாருக்கும் சந்தேகமிருக்காது.

அவரைக்கொன்றவர்கள் யார் என்று தெரிந்தவர்கள் அவ்வப்போது பொதுவாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ஆதாரங்களுடன் தெரியப்படுத்துங்கள். ஆய்வுக்கட்டுரையாக எழுதுங்கள். ஆதாரங்கள் இருந்தால் நீதித்துறையினை நாடுங்கள். இவை எவற்றையும் செய்யாமல் பொதுவாகக் கூறுவதால் எந்தவிதப்பயனுமில்லை. இன்று இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் சென்றுவிட்டன. இந்நிலையில் இது போன்ற யுத்தக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் அவ்வாதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். இலங்கை அரசுக்கெதிரான யுத்தக்குற்றங்களை வலியுறுத்துவதுபோல், இவ்விதமான படுகொலைகளுக்கும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

ராஜினி திரணகம படுகொலை செய்யபட்டபோது எந்தவிதப்போராட்ட அமைப்பிலும் போராளியாக இருக்கவில்லை. மருத்துவப்பேராசிரியையாக, சாதாரணப்பொதுமக்களிலொருவராகத்தானிருந்தார். இனியாவது அவரது மரணம் பற்றி அடிக்கடி இணையங்களில் வந்து பெயர்களைக்குறிப்பிட்டு ஆதாரங்களை முன் வைக்காது குற்றஞ்சாட்டுபவர்கள் , அவர்களிடமுள்ள ஆதாரங்களை முன் வைக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டும்.

 

இவரைப்பற்றிய நினைவுகள் தோன்றும்போதெல்லாம் இவரை ஒரு தடவை சந்தித்தது நினைவுக்கு வராமல் போகாது. மொறட்டுவைப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க் வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகையினை மருத்துவ பீட மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக கைதடியில் அமைந்திருந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குச் சென்றிருந்தேன். ‘நுட்பம்’ இதழினை வாங்கி அங்குள்ள மாணவர்களுக்கு விநியோகித்தார். அந்தச்சிரித்த முகம் பசுமையாக இன்னும் நினைவிலுள்ளது. அப்பொழுது நான் நினைத்திருக்கவில்லை அந்தப்பேராசிரியையின் வாழ்வு இவ்விதம் முடியுமென்று. அச்சந்திப்பு குறுகிய காலச்சந்திப்பாக இருந்தபோதும், என் நினைவுகளில் பதிந்துவிட்ட முக்கியமான , மறக்க முடியாத சந்திப்புகளிலொன்றாகிவிட்டது.

‘முறிந்த பனை’ என்னும் நூல் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களைப் பட்டியலிடுகின்றது. அவற்றிலுள்ளவை பொய்யானவையாக இருப்பின் அவற்றை வெளிப்படுத்துங்கள். ஆனால் இதுவரையில் யாரும் அவற்றில் உள்ள விடயங்களைப்பொய் என்று ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டவில்லை (எனக்குத்தெரிந்த வரையில்). அவ்விதம் அந்த நூல் சாடும் மனித உரிமை மீறல்கள் தவறென்றால், அந்த நூலின் முக்கியத்துவமும் இல்லாமல் போகும். அதுவரையில் ராஜனி திரணகமவை வரலாறு மனித உரிமைகளுக்காகப் போராடிய ஒருவராக , அதற்காகத் தன் வாழ்வைக்கொடுத்த ஒருவராக  நினைவில் நிறுத்தி வைத்திருக்கும். தான் நம்பியவற்றுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அவர்.

‘முறிந்த பனை’க்காகச் சிறிது மெளனம் காப்போம்.

ngiri2704@rogers.com