அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா வருவது அக்கட்சியினரின் பிரச்சினை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறுதிவரையில் எதற்காக யாரையும் சந்திக்காத வகையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்? எதற்காக அப்பலோ மருத்துவ நிலையம் அடிக்கடி அவரது உடல் நிலை பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட வேண்டும். இச்சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமரர் ஜெயலலிதாவின் நிலையினை வெளிப்படுத்தும் காணொளிகள் வெளியிடப்பட வேண்டும். இச்சந்தேகங்கள் தீர்க்கப்பட்டால் மட்டுமே சசிகலா அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களின் ஆதரவைப் பெற முடியும். ஜனநாயக நாடொன்றில் மாநிலமொன்றின் முதல்வர் இவ்விதம் நடத்தப்பட்டிருப்பது கேள்விக்குரியது மட்டுமல்ல கேலிக்குரியதுமாகும்.
பல சந்தேகங்களை ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியிருப்பதால் அவரது உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் தீர்க்கப்படாமல், அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களைப்புறக்கணித்து அதிமுகவின் முக்கிய புள்ளிகள் செயற்படுவார்களென்றால் , எதிர்காலச்சட்டசபைத்தேர்தலில் அதிமுக பல பிரிவுகளாகப் பிரிபடுவது தவிர்க்க முடியாதது.
உண்மையில் ஜெயலலிதாவின் உடல் நிலை ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆபத்தான கட்டத்திலிருந்திருக்கலாம். அவரது உண்மை நிலை மக்களுக்கூ தெரிந்தால் மக்கள் கொதித்தெழலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாயிருக்கும். எனவே மக்களை ஜெயலலிதாவின் முடிவுக்குத் தயார் செய்து அவரது முடிவினை அறிவித்திருந்தால் மக்கள் பொங்கியெழ மாட்டார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்தால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படலாம். அதனைக்காரணம் காட்டி மத்திய அரசு அதிமுக அரசைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை நிலை பிரதமர் மோடிக்குத் தெரிந்திருந்த காரணத்தினால் போலும் அவர் ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவ நிலையத்துக்கு வந்து பார்க்கவில்லையோ தெரியவில்லையோ?
அப்பலோ மருத்துவர்கள், அங்கு பணி புரியும் ‘கிங்காங்’ தாதிகள், வைத்தியர்கள் எல்லோரும் அங்கு தங்கியிருந்த முதல்வர் ஜெயலலிதா பற்றிப்பல்வேறு கதைகளைக் கூறியுள்ளனர். இங்கிலாந்து வைத்தியரும் ஜெயலலிதாவின் நிலை பற்றி அறிக்கை விட்டிருக்கின்றார்.
இன்னுமொரு கதையும் நிலவுகின்றது. ஜெயலலிதா சசிகலாவால் தாக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அப்பலோவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்தக் கதை கூறுகிறது. ஒருவேளை ஜெயலலிதா யாரையாவது சந்தித்தால் அதுபற்றிய உண்மை வெளிப்பட்டுவிடலாம் என்ற அச்சம் காரணமாகவா அவர் யாரையும் சந்திப்பதிலிருந்து இறுதிவரையில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார் ? அதனால்தானா அவரை வெளி நாடெதற்கும் மேலதிக மருத்துவச் சிகிச்சை எதற்கும் அனுப்பாமல் வைத்திருந்தார்கள்? என்றெல்லாம் நியாயமான கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கான பதில்கள் கிடைக்க வேண்டும்.
இன்னுமொரு காரணமும் இருக்கலாமோ என்றொரு சந்தேகம் தோன்றுகின்றது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும் அதன் பின்னரே ஜெயலலிதாவுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் அறியப்படுகின்றது. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தப்புவதற்கு ஜெயலலிதாவின் மரணம் ஏனையவர்களுக்கு உதவகூடுமோ என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் முடிவு அறிவிக்கப்பட்டு அவரது இறுதிக்கிரியைகளும் நடந்து முடிந்துவிட்டன. இனியாவது உண்மை வெளிப்பட வேண்டும். அவ்விதம் வெளிப்படாவிட்டால் சசிகலாவின் மேல் சந்தேகமே ஏற்படும். அவ்விதமான சந்தேகம் எதிர்காலத்தில் அரசியல்ரீதியிலான தோல்வியையே தரும்.. அப்பலோவில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறுதியில் மரணித்தது வரையிலான ஜெயலலிதாவின் நிலை பற்றிய உண்மை வெளிப்பட வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணம் பற்றிய கேள்விகளுக்குரிய பதில்கள் எதனையும் வெளிப்படுத்தாமல் , சசிகலா அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக வந்தாலும், எதிர்காலத் தேர்தல்களில் தோல்வியைத்தழுவும் வாய்ப்புகளே உள்ளன. எதிர்க்கட்சிகள் குறிப்பாக திமுக ஜெயலலிதாவின் மரணத்தைக்காரணமாக வைத்து அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களை மீண்டும் தன் பக்கம் இழுப்பதில் வெற்றியடையக் கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜெயலலிதா மறைவு: மேலும் சில ஊகங்கள்…
அண்மையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்து நீண்ட நாள்களாக இருக்க வேண்டுமென்பதையே அண்மைய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமிழச்சி (பிரான்ஸ்) கூறியதுபோல் செப்டம்பரிலேயே அவர் மறைந்திருக்கலாமோ என்று சந்தேகப்படுவது கூட நியாயமான சந்தேகமாகத்தானிருக்கிறது. அவர் இறந்து விட்டது நிச்சயமாகத்தெரிந்திருந்ததனால்தான் போலும் இந்தியப்பிரதமர் ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவ நிலையத்தில் வந்து பார்க்கவில்லைபோலும்.அவ்விதம் ஜெயலலிதா இறந்திருந்தால் என்பதை வைத்துப்பார்க்கும்போது பலரின் நடவடிக்கைகளுக்கான காரணங்கள்கூடத் தெளிவாகப்புரிபடுகின்றன.
வதந்திகளின் அடிப்படையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை ஊகித்துப்பார்ப்போம்.
1. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு முதல்வருக்குப் பாதகமான முறையில் வர இருப்பதாகவும், அதற்குப் பதிலாக முதல்வர் மத்திய அரசுக்குத் தேவையான மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கு ஜெயலலிதா மறுத்திருக்கலாம். இதனால் சசிகலா ஆத்திரப்பட்டிருக்கலாம். ஏனென்றால் மீண்டும் சிறை செல்ல வேண்டிவரவேண்டுமேயென்ற அச்சம் காரணமாகத்தான். சில நேரம் வதந்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தபடி சசிகலா ஜெயலலிதாவை ஆத்திரத்தில் அடித்துக்கூட இருக்கலாம். இதனால் கீழே விழுந்த ஜெயலலிதா மயங்கியிருக்கலாம்.
2. அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அங்கு மரணமடைந்திருக்கலாம். அல்லது நினைவு திரும்பாமல் இருந்திருக்கலாம். அவ்விதம் அவர் மரணமடைந்திருந்தால் அவரது சொத்துகள், கட்சியில் தன் குடும்பத்தவரின் நிலையைப் பலப்படுத்தல் போன்ற காரணங்களுக்காக அவரது மரணத்தை உடனடியாக அறிவிக்காமல் வைத்திருக்கக்கூடும். மேலும் அவரது மரணச்செய்தி வெளியே தெரிந்தால் தமிழகத்தில் கலவரங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு. இச்சமயத்தில் மத்திய அரசு தன் வலையை வீசி இருக்கலாம். தமிழகத்தில் அமைதி இல்லை. ஜெயலலிதாவின் மரணம் அதனை ஏற்படுத்தியுள்ளது. இக்காரணங்களுக்காக தமிழகத்தில் சட்டசபை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படும். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கிலும் சசிகலா போன்றவர்கள் சிறை செல்ல வேண்டு வரும். இவற்றைத்தவிர்ப்பதாகவிருந்தால் உடனடியாகத் தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். இவ்விதம் மோடியின் மத்தியின் அரசு வற்புறுத்தியிருக்கலாம். அதன் காரணமாகவே ஜெயலலிதா இருந்தவரையில் ஒப்புதல் அளிக்காமல் இருந்த மூன்று மசோதாக்களை இன்றைய முதல்வர் பன்னீர்ச்செல்வம் உடனடியாக ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொண்டார்போலும்.
3. மேலும் சசிகலாவால் தாக்கப்பட்டு ஜெயலலிதா அப்பலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஒருவேளை அவரை யாராவது பார்க்கும்போது அவருக்கு நினைவு திரும்பினால் உண்மை வெளிப்பட்டுவிடுமல்லவா.? அதற்காகத்தான்போலும் யாருமே ஜெயலலிதாவைச் சந்திக்காமல் அவர் மரணமடையும்வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்போலும்.
4. அப்படியானால் அப்பலோ மருத்துவர்கள், தாதிகள், வைத்தியர்கள் எல்லோரும் கதை கதையாகக் கூறுகின்றார்களே? எப்படி? என்று யாரும் சந்தேகப்படலாம். அவர்களுக்குப் போதிய அளவு பணம் கொடுகப்பட்டு அவர்கள் அனைவரது வாய்களும் அடைக்கப்பட்டிருக்கலாம்.
5. இதெப்படி ஜெயலலிதா இறந்து ஒரு நாள் கழிவதற்குள்ளேயே அதிமுகவினர் பதவிப்பிரமாணம் எடுக்கலாம்? என்றொரு கேள்வி எழலாம். அதற்குக் காரணம்.. ஜெயலலிதா இறந்து பல நாள்களாகி விட்டிருக்கக்கூடும்.. அதற்குள் சகல விடயங்களுக்கும் போதிய அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன்பின்னரே பதவிப்பிரமாணம் செய்திருக்கின்றார்கள்.
இவையெல்லாம் ஊகங்களே. ஆனால் நியாயமான ஊகங்களே. தமிழகத்தின் பிரதான் ஊடகங்களெல்லாம் வாய்பொத்தி, கைகட்டி நிற்கையில் யு டியூபில் ‘லைவ் டாக்கிஸ்’ போன்ற நூற்றுக்கணக்கான செய்திச் ‘சானல்கள்’ உண்மைக்காகக் குரல் கொடுக்கின்றன. நடிகை கெளதமி, நடிகர் மன்சூர் அலிகான், தமிழச்சி (பிரான்ஸ்) மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி போன்றோர் துணிந்து குரல் கொடுக்கின்றார்கள்.
சமூக ஊடகங்களை அரசியல்வாதிகள் புறக்கணிக்க முடியாத நிலை இன்றுள்ளது. ஆக நிச்சயமாக உண்மை வெளிவரலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிமுக மீண்டும் சட்டசபைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றால், சசிகலா அக்கட்சியின் பொதுச்செயலாளராக வரவேண்டுமென்றால், அதிமுக உடையாமல் உறுதியாக இருக்க வேண்டுமென்றால் இச்சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். மேலும் சசிகலா எந்தத்தவறும் செய்யாமல் இருக்கக் கூடும். அவ்விதம் அவர் இருப்பின் உண்மை வெளிப்படுவது அதிமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும் அவர் பிரகாசிக்க உதவும் என்பதே உண்மை.