வாசிப்பும், யோசிப்பும் 214 : தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் பற்றியொரு பார்வை…

முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும்தீபா ஜெயகுமார்ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைப்பற்றி பல்வேறு ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருவதைப்பார்த்து அப்படி என்னதான் இவரிடம் இருக்கிறது என்று பார்ப்போமேயென்று அவரது நேர்காணல்களுள்ள காணொளிகள் சிலவற்றைப் பார்த்தேன், பார்த்தபோது அவருக்கும் , மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குமிடையிலுள்ள பல ஒற்றுமைகள் புலப்பட்டன. தமிழ் மொழியைப்பாவிக்கும் முறையிலும், உரையாடும் முறையிலும், நிதானமாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையிலும் ஜெயலலிதாவை தீபா நினைவுறுத்துவதை அவதானிக்க முடிந்தது.

இந்தியா வாரிசு அரசியலுக்குப் பெயர் போன நாடுகளிலொன்று. பிரதமர் இந்திராகாந்தி மரணமடைந்தபோது எந்தவித அரசியல் அனுபவமுமற்ற ராஜிவ் காந்தி முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு இந்தியாவின் பிரதமாரானது யாவரும் அறிந்ததே. எனவே ஜெயலலிதா மறைந்த சோகத்திலிருக்கும் பெரும்பாலான மக்களுக்குத் தீபாவைப்பார்க்கும்போது ஜெயலலிதாவையே பார்ப்பது போலிருக்கும் உணர்வு தோன்றுவதும், அந்த உணர்வின் அடிப்படையில் அவரையே அதிமுகவின் அடுத்த தலைவராக எண்ணினாலும், ஆதரவு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எம்ஜிஆரின் மறைவின் போது ஜெயலலிதா பலராலும் ஓரங்கட்டப்பட்டார். அது போல் ஜெயலலிதாவின் மறைவின்போதும் தீபா ஜெயலலிதாவின் இறுதிக்காலத்தில் தனது அத்தையைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

எம்ஜிஆரின் மறைவின்போது அதிமுகவின் கட்சியின் முக்கிய பிரமுகர்களெல்லாரும் ஜானகி ராமச்சந்திரனுக்கே ஆதரவு கொடுத்தனர். ஆனால் அம்மோதலில் மக்கள் ஜெயலலிதாவுக்கே ஆதரவாக நின்றனர். இன்று அதிமுகவின் அனைத்து முக்கிய கட்சிப்பிரமுகர்களெல்லாரும் சசிகலாவுக்கே ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்கள் பலர் அவ்விதம் இருப்பதாகத்தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய வித்தியாசம்: ஜெயலலிதா எம்ஜிஆர் மறைந்தபோது அதிமுகவில் ஏற்கனவே இணைந்து நிறைந்த அரசியல் அனுபவம் வாய்க்கப்பெற்றிருந்தவராகவிருந்தார். தீபாவுக்கு அந்த அரசியல் அனுபவமில்லை. ஆனால் வாரிசுகளை ஏற்றுக்கொள்ளும் மக்கள் மிக இலகுவாகத் தீபாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறுவதற்கில்லை.

இந்தியாவின் பெரும்பாலான மாநில மக்கள் அறிவின் அடிப்படையில் அல்ல, உணர்வின் அடிப்படையிலேயே தம் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பவர்கள். குறிப்பாகத் தமிழக மக்கள் இந்த விடயத்தில் ஒரு படி மேலே. அண்ணா, பாசமிகு தம்பி, எங்கள் வீட்டுப் பிள்ளை, அம்மா என்று அரசியல்வாதிகளைத் தம் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டு வாக்குகளை இடுபவர்கள்.

தற்போதுள்ள சூழலில் சசிகலா அவர்களைக் கட்சி சின்ன அம்மா என்று முன்னிலைப்படுத்தினாலும், ஜெயலலிதாவின் இறுதிக்காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சைகளில் காட்டப்பட்ட மர்மம், ஏற்கனவே ஊடகங்களில் வெளியான சசிகலா பற்றிய எதிர்மறையான பிம்பங்கள் இவையெல்லாம் தேர்தலென்று வரும்போது பொதுமக்கள் அவருக்கு ஆதரவு தருவதைக் குறைப்பதற்கான சாத்தியங்களையே காட்டுகின்றன. எம்ஜிஆரின் மறைவையடுத்து அதிமுக இரண்டாகப்பிரிவடைந்தை நிலையில் அது திமுகவுக்குச் சாதகமாக அமைந்தது போல், அடுத்துவரும் சட்டசபைத்தேர்தலில் அதிமுக தீபாம் சசிகலா என்று ஈரணிகளாகப்பிரிபடுபவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. இதனால் இலாபம் அடையப்போவது திமுகதான். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவுக்கு வழி சமைக்கப்போகின்றது அதிமுகவில் ஏற்படப்போகும் பிளவு.
எவ்விதம் அன்று பிரிந்திருந்த அதிமுகவிலிருந்து வலிமையான தலைவராக ஜெயலலிதா உருவெடுத்தாரோ அவ்விதமே இம்முறையும் பிரிந்திருக்கும் அதிமுகவிலிருந்து வலிமையான தலைவரொருவர் உருவாக வேண்டும். தீபா, சசிகலா என்று ஈரணிகளாக அதிமுக பிரிவடைந்தால் , அதிலிருந்து வலிமையான தலைவராகத் தீபா வருவதற்கே சாத்தியங்கள் தென்படுகின்றன.

வாசிப்பும், யோசிப்பும் தமிழகச் சட்டசபைத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கு வருடங்களுள்ளன. அதற்கிடையில் நடைபெறவுள்ள இடைதேர்தல்களில் கலந்துகொண்டு தன்னை அரசியல்ரீதியாக நிரூபிக்க வேண்டிய நிலையில் தீபாவும், சசிகலாவுமுள்ளனர். தற்போதுள்ள சூழலில்  தீபாவுக்கே இப்போட்டியில் வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.

இந்நிலையினை மாற்ற வேண்டுமானால் சசிகலா அவர்கள் அவர்மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள அனைத்துக்கும் நியாயமான பதில்களைத்தரவேண்டும். அப்பலோ மருத்துவமனையில் நடந்தது என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதன்பிறகு மக்களிடத்தில் சென்று தன்னை எந்தவித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்த வேண்டும். இவை எவற்றையும் செய்யாமல், மக்களிடத்தில் சென்று ஆதரவினைத் தேடினால் சசிகலாவுக்கு எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே.

ngiri2704@rogers.com