1. எழுத்தாளர் மைக்கலின் முகநூல் கருத்துகள் பற்றி…
நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது முகநூல் பதிவொன்றில் “தமிழிலக்கியம் ஏன் எப்போதுமே வாழ்வின் இருளையும்/துன்பங்களையும் பேசுகிறது? ” என்றொரு கேள்வியினையும், “ஜப்பானில் காமிக்ஸ் நூற்கள்தான் மிக விற்பனையாகின்றனவாம். அப்படியொரு வாசிப்பை நாம் வழமைபடுத்தவேண்டும்.” என்றொரு கருத்தினையும் “ஒரு படைப்பு, மனுஷவாழ்க்கைக்கு நம்பிக்கை தரவேண்டும். தொய்ந்த மனதை ஆரவாரித்து ஆர்முடுகலாக்க வேண்டும்.”என்றொரு கருத்தினையும் கூறியிருந்தார். அவை என் சிந்தையில் ஏற்படுத்திய சிந்தனைகளை அப்பதிவுகளுக்கு எதிர்வினைகளாகக் கொடுத்திருந்தேன். அவற்றை ஒரு பதிவுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.
1. நண்பரே! மானுட வாழ்வு என்பது பல்வேறு முரண்பட்ட உணர்வுகளையும் உள்ளடக்கியதுதான். இதுவரை கால உங்களது வாழ்க்கையை மட்டுமே நினைத்துப்பாருங்கள். அந்த வாழ்வு இன்பகரமான உணர்வுகளாலும், துன்பகரமான உணர்வுகளாலும், நேர்மறை / எதிர்மறை உணர்வுகளாலும், வெற்றி/ தோல்விகளாலும், இறப்பு/பிறப்புகளாலும் உள்ளடக்கியிருப்பதைக் காண்பீர்கள். அனைவர் நிலையும் இதுதான்.,… இவைபோன்ற முரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியதுதானே மானுட வாழ்வு. தமிழிலக்கியம் மட்டுமல்ல உலக இலக்கியம் அனைத்துமே தத்யயேவ்ஸ்கியிலிருந்து, சேக்ஸ்பியரிலிருந்து,.. தகழி சிவசங்கரம்பிள்ளை வரை. கோகுலம் சுப்பையா வரை, சிவராம் காரந் வரை, வைக்கம் முகம்மது பஷீர் வரை மானுடத்தின் இருண்ட, ஒளிர்ந்த பக்கங்களைத்தாம் பேசுகின்றன.
2. தமிழில் கூட தரமான இலக்கிய நூல்களை விட காமிக்ஸ், மர்ம நாவல்கள், ரமணி சந்திரன் வகை நாவல்கள் (இவை பெரும்பாலும் இன்பச்சுவை மிகுந்தவை) எல்லாம் நிறைய வருகின்றனவே.. …ஜப்பானிய காமிக்ஸ் நூல்கள் ஜப்பானில் மட்டுமல்ல மேற்குநாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப்பெற்றவை. நூல்களாக மட்டுமல்ல , திரைப்படங்களாகவும், தொலைகாட்சித் தொடர்களாகவும் வரவேற்பைப் பெற்றவை.
3. //ஒரு படைப்பு, மனுஷவாழ்க்கைக்கு நம்பிக்கை தரவேண்டும்.தொய்ந்த மனதை ஆரவாரித்து ஆர்முடுகலாக்க வேண்டும்.// இவ்விதமான படைப்புகள் பல மலையாள மொழியில், வங்க மொழியில் நிறையவேயுள்ளன. எஸ்.கே.பொற்கேகாட்டின் நாவலான ‘ஒரு கிராமத்தின் கதை’ , தகழியின் ‘ஏணிப்படிகள்’ ,, ‘ஒரு தோட்டியின் கதை’ எம்.டி,வாசுதேவன் நாயரின் ‘காலம்’ போன்ற நாவல்கள் மனிதனொருவனின் முழு வாழ்க்கையை பால்ய காலத்திலிருந்து முதுமை வரை, இன்ப துன்பங்களுடன் விபரிக்கின்றன. ‘நான்’ என்னும் மராத்திய நாவல் மரணம் வரை விபரிக்கின்றது. தமிழில் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நீண்ட நாவலானாலும், முடிவில் இன்பத்துடன் முடிகின்றது. இடையிலும் தனிமனித விரகதாபத்தை வெளிப்படுத்துகின்றது. ஆனால் இவையெல்லாம் இருப்பின் போராட்டங்களைச் சித்திரிக்கும் அதே சமயம் ஒருவிதத்தில் இருப்பில் நம்பிக்கையயும் வெளிப்படுத்துவனவாக எனக்குத் தோன்றுகின்றன. தத்யயேவ்ஸ்கியின் பெரு நாவல்கள் மானுடத்தின் இருண்ட பக்கங்களைச் சித்திரித்தாலும், இறுதியில் மதம் மூலம் அனைத்துக்கும் தீர்வு என்று நம்பிக்கையினை ஊட்டிட முனைகின்றன (அவரது தீர்வினை நாம் ஏற்கிறோமோ இல்லையோ).
2. ஈழத்துத் தமிழ்க்கவிதையுலகில் கவிஞர் மஹாகவியின் பங்கு அளப்பரியது. இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடி அவரெனலாம். அவரது பிறந்த தினம் ஜனவரி 9.
ஈழத்துக் கவிதையுலகில் தடம் பதித்த கவிஞர் மஹாகவியின் கவிதைகள் பல எனக்குப் பிடித்தவை. மிகவும் அழகாகச் சொற்கள் வந்து விழுந்திருக்கும் கவிதைகள் , கவித்துவமும் கருத்தாழமும் மிக்கவை. அவரது கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதையாகப் ‘புள்ளி அளவில் ஒரு பூச்சி’ கவிதையைக் கூறுவேன்.
இது அநேகமானவர்கள் வாழ்வில் சாதாரணமாக நடைபெறும் நிகழ்வுகளிலொன்று. பல தடவைகள் புத்தகங்களைப் புரட்டும்போது உள்ளே இறந்து , உலர்ந்திருக்கும் பூச்சிகளைப் பார்த்திருப்போம். அதனைக் கவிஞரும் பார்க்கின்றார். அவ்விதம் இறந்து கிடந்த பூச்சியொன்றினைக் கவிஞர் வரியொன்றின் முடிவில் பிள்ளைத்தனமாகப் போட்ட காற்புள்ளியென்று நினைத்துப் புறங்கையால் தட்டி விடுகின்றார். அப்பொழுதுதான் உணர்கின்றார் அதுவொரு பூச்சியென.
உண்மையில் இக்கவிதையை இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஏற்கனவே இறந்து கிடந்த பூச்சியொன்றை, புள்ளியாக எண்ணித் தட்டி, அது ஏற்கனவே இறந்ததுதெரியாமல், அது இறந்தது தன்னால்தானென எண்ணிக் கவிஞர் கவலையுறுவதாகக் கொள்ளலாம். அல்லது புள்ளியாகத் தென்பட்ட பூச்சி கவிஞரின் புறங்கைத் தட்டுதலால் இறந்துவிட , அது பற்றித் துயருற்ற கவிஞரின் உணர்வாகக் கொள்ளலாம். ‘கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்ட’ அந்தப் பூச்சி வலியால் உலைவுற்று வாய் கூடத் திறக்கவில்லை. ‘காட்டெருமை காலடியிற் பட்ட தளிர்போல, நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்ததுபோல்’ நெரியுண்டு கிடந்தது. அதனுடைய சா நீதியன்று என்று கவிஞரின் மனம் வருந்துகிறது. ‘நினையாமல் நேர்ந்ததிது, தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே’ என்று அந்தப் பூச்சியிடம் மன்னிப்புக் கேட்கும் கவிஞரால் மேலும் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. கவிஞரின் உயிர்கள் மீதான அன்பினைப் புலப்படுத்தும் அற்புதமான கவிதையிது. கவிஞரின் உள்ளத்தில் ஏற்படுத்திய பாதிப்பை எவ்விதம் அற்புதமான வரிகளில் கவிதையாகப் படைத்து விட்டார்! நான் முதன் முதலில் இக்கவிதையைப் படித்தது சென்னையிலிருந்து வெளிவந்த ‘அக்கரை இலக்கியம்’ தொகுப்பிலிருந்துதான்.
கவிஞர் மஹாகவியின் புகழ் பெற்ற காப்பியங்களிலொன்றான ‘கண்மணியாள் காதை’யில் வரும் யாழ்ப்பாணம் பற்றிய கவிதை வரிகளும் எனக்கு மிகவும் பிடித்தவை.
முழுக்கவிதையும் கீழே:
1. புள்ளி அளவில் ஒரு பூச்சி – – மஹாகவி –
புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம்
ஒத்திருந்த வேளை!
ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.
நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு
வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்
“தாயே’ என அழுத
சத்தமும் கேட்கவில்லை.
கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.
காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.
மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!
காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.
‘கண்மணியாள் காதை’யில் வரும் ‘கண்மணி’, ‘செல்லையன்’ ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான ‘காரிருள்’ காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும். அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த யாழ்ப்பாணம் பற்றிய வரிகள் சில:
“யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!” எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு –
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!
“ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!” என்றோர் கதை வந்ததுண்டு –
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
‘ஈழத் தமிழகம்’ என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!
“ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!”
என்ற ஒரு கதை சொல்வதுண்டு –
“ஏறி உயர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!” என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!
3. தமிழ்த்திரையுலகில் உண்மையான சகல கலா வல்லுநர் எஸ்.பாலச்சந்தர்!.
நடிகர் சந்திரபாபு பொதுவாகத் தான் நடித்த படங்களில் தனக்காகப் பாடல்களைப் பாடும் வழக்கமுள்ளவர். ஆனால் ஓரிரு படங்களில் பிற நடிகர்களுக்கும் குரல் கொடுத்திருக்கின்றார். அதிலொரு திரைப்படம்தான் ஏவி.எம்.நிறுவனத்தால் ஐம்பதுகளில் ஆரம்பத்தில் தயாரித்து வெளியிடப்பட்ட ‘பெண்’ இத்திரைப்படத்தில் நடிகர் சந்திரபாபு நடித்திருக்கவில்லை. ஆனால் வேறு நடிகர் ஒருவருக்காகக் குரல் கொடுத்திருக்கின்றார். அவ்விதம் அவர் அப்படத்தில் குரல் கொடுத்தது ‘பெண்’ திரைப்படத்தில் நடிகர் வையந்திமாலாவுக்கு இணையாக நடித்திருந்த வீணை எஸ்.பாலச்சந்தருக்குத்தான். அந்தப்பாடல்தான் ‘கல்யாணம்.. வேண்டும் வாழ்வில் கல்யாணம்..’ பாடல்.
வீணை எஸ்.பாலச்சந்தர் (சுந்தரம் பாலச்சந்தர்) தமிழ்த்திரையுலகிலும் பல சாதனைகளைப் புரிந்தவர். இசையமைப்பாளராக, இயக்குநராக, பின்னணிப்பாடகராக, நடிகராக எனத்தன் முகங்களை வெற்றிகரமாகக் காட்டியவர்.
1934இல் வெளியான ‘சீதா கல்யாணம்’ திரைப்படம் மூலம் நடிகராக முதன் முதலில் அறிமுகமானார்.
தமிழ்த்திரையுலகில் திகில் படங்களைக் கலைத்துவம் வழங்கியவர். ‘பொம்மை’, ‘நடு இரவில்’, ‘அந்த நாள்’ போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணிப்பாடகர் எனப்பல்துறைகளில் பங்களிப்புச் செய்தவர்.
வீணை பாலச்சந்தரைப்பற்றி இன்னுமொரு முக்கியமான விடயம்: இவர் வீணை இசையை எந்தவொரு குருவிடமும் கற்றுக்கொள்ளவில்லை. தானே தன் முயற்சியால் கற்றுக்கொண்டவர் என்பதுதான் அது.
இவரது திரைப்படப் பங்களிப்பைப் பற்றி விக்கிபீடியாவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது” “1934 ஆம் ஆண்டில் பிரபாத் கம்பனியின் சீதா கல்யாணம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது தந்தை சனகராகவும், தமையன் ராஜம் இராமராகவும், தமக்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தமக்கை சரசுவதி ஊர்மிளையாகவும் நடித்திருந்தனர். பாலச்சந்தர் இதில் இராவணனின் அரண்மனையில் கஞ்சிரா வாசிப்பவராகத் தோன்றினார். தொடர்ந்து “ரிஷயசிருங்கர்” (1934), “ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்” (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: தேவகி (1951), ராஜாம்பாள் (1951 திரைப்படம்), ராணி (1952), இன்ஸ்பெக்டர் (1953), பெண் (1954), கோடீஸ்வரன் (1955), டாக்டர் சாவித்திரி (1955) மற்றும் மரகதம் (1959). திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். இது நிஜமா (1948), என் கணவர் (1948), கைதி (1951), அவனா இவன்? (1962), பொம்மை (1964) மற்றும் நடு இரவில் (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளிலும் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய அந்த நாள் (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது. எதி நிஜம் (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்”
இவரைப்பற்றிய முழுக்கட்டுரை: https://ta.wikipedia.org/s/8bk
தமிழ்த்திரையுலகில் உண்மையான சகல கலா வல்லுநரென்றால் அவர் எஸ்.பாலச்சந்தர்தான்.
4. இசை கேட்கும் நேரம் இது: உனது மலர் கொடியிலே. எனது மலர் மடியிலே. உனது நிலா விண்ணிலே. எனது நிலா கண்ணிலே.’
‘பாத காணிக்கை’ திரைப்படத்தில் வரும் எல்லாப் பாடல்களுமே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள். எம்.எஸ்.வி / ராமமூர்த்தி இசையில், கவிஞர் கண்ணதாசனின் வரிகளைப் பி.சுசீலா / எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் கேட்பதும் இன்பகரமான அனுபவம்தான். இப்பாடலுக்குத் திரையில் நடித்திருக்கும் இருவருமே உணர்வுகளைக்கொட்டி நடிப்பதில் வல்லவர்கள். சாவித்திரியின் நடிப்பில் நிதானம் கலந்த முதிர்ச்சி இருக்கும். விஜயகுமாரி உணர்ச்சிகள் கொந்தளிக்கக் குமுறி நடிப்பதில் முன்னுக்கு நிற்பார். இருவருமே எனக்குப் பிடித்த நடிகைகளே.
இந்தப்பாடல் பெண்கள் இருவரின் மனநிலையை விபரிப்பது. இருவருமே ஒருவனைக் காதலிக்கின்றார்கள். அவர்களது மனநிலையை அற்புதமாகக் கவிஞர் கண்ணதாசன் விபரித்திருப்பார் பாடல் வரிகளில்.
சாவித்திரி பாடுவார் ‘உனது மலர் கொடியிலே. ஆனால் எனது மலர் மடியிலே’ என்று. அதாவது இங்கு மலர் என்று உருவகிக்கப்படுவது அவரது காதலை. ‘உனது மலர் கொடியிலே. இன்னும் உன் கைக்கெட்டாதது. ஆனால் எனக்கோ அந்த மலர் கிட்டி விட்டது. உனது நிலா இன்னும் விண்ணிலேதான். ஆனால் எனது நிலாவோ இங்கே என் கண்ணிலேயேயல்லவா உள்ளது” இவ்வர்த்தத்தில்தான் சாவித்திரி பாடுவார். இதற்குப் பதிலடியாக விஜயகுமாரி ‘உனது மலர்தான் கொடியிலே. எனது மலர் கையிலே. உனது நிலாதான் வானிலே. ஆனால் எனது நிலாவோ அருகிலே’ என்று பாடுவார்.
பின்னர் விஜயகுமாரி ‘கண் மயங்கிக் காதல் பயணம் போகும் உனது தோணி கடலிலேயே மூழ்கி விடும்’ என்னும் அர்த்தத்தில் பாட, பதிலுக்குச் சாவித்திரி ‘காலம் பார்த்து நிச்சயம் எனது காதல் பயணத்தைத்தொடரும் தோணி கரை வந்தொதுங்கும்’ என்று பாடுவார்.
‘கடலில் வீசும் காற்றினாலும், மழையினாலும் அதாவது எதிர்ப்புகளினாலோ, தடைகளினாலோ எனக்கும் அவருக்குமிடையிலான சொந்தம் மாறப்போவதில்லை’ என்று பதிலுக்கு விஜயகுமாரி பாடுவார்.
இவ்விதமாக ஒருவருக்கொருவர் அவர் எனக்குத்தான் சொந்தமென்று உரிமை கொண்டாடிப்பாடும் பாடலில் வரும் இறுதி வரிகள்தாம் எனக்கு மிகவும் பிடித்தவை.
‘ஆற்று வெள்ளம் தடையை மீறி பாய்ந்து செல்லும் அவரிடம். அதாவது அவர் மீது பெருக்கெடுக்கும் எனது காதல் நதியானது தடைகளையெல்லாம் மீறி அவரிடம் சென்றடையும்’ என்று விஜயகுமாரி பாட,
அதற்குப் பதிலடியான உணர்வுகளை முகத்தில் படர விட்டவாறு சாவித்திரி ‘ இன்னுமா உனக்கு ஆசை? ‘ என்று கேட்டுவிட்டுத்தொடர்வார் ‘அந்த நெஞ்சம் , என் காதலரின் நெஞ்சம் என்னிடமுள்ளதே. உனக்கு இன்னுமா ஆசை?’ என்று பாடுவார். அக்கட்டத்தில் சாவித்திரி மீண்டுமொருமுறை தான் ஏன் நடிகையர் திலகம் என்பதை நிரூபிப்பார். அதன் முடிவில் காதல் மன்னன் புன்னகைத்தபடி நிற்கும் காட்சியுடன் பாடல் முடிவடையும்.
முழுப்பாடல் வரிகளும் கீழே:
படம் : பாத காணிக்கை
குரல்கள் : பி.சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
நடிகர்கள்: சாவித்ரி, விஜயகுமாரி
உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே
எனது நிலா கண்ணிலே
உனது மலர் கொடியிலே
எனது மலர் கையிலே
உனது நிலா வானிலே
எனது நிலா அருகிலே
கண் மயங்கிப் பயணம் போகும்
உனது தோணி கடலிலே
காலம் பார்த்து வந்து சேரும்
எனது தோணி கரையிலே
காற்றினாலும் மழையினாலும்
எனது சொந்தம் மாறுமா
காயுமா கனியுமா
கையில் வந்து சேருமா
கையில் வந்து சேருமா
பிறந்தபோது பிறந்த சொந்தம்
இணைந்ததம்மா நினைவிலே
வளர்ந்தபோது வளர்ந்த சொந்தம்
மலர்ந்ததம்மா மனதிலே
ஆற்று வெள்ளம் தடையை மீறி
பாய்ந்து செல்லும் அவரிடம்
ஆசையா.. இன்னுமா…
அந்த நெஞ்சம் என்னிடம்
அந்த நெஞ்சம் என்னிடம்
ngiri2704@rogers.com