வாசிப்பும், யோசிப்பும் 219: தி.ஜா.வின் ‘அன்பே! ஆரமுதே!’

தி.ஜா.வின் ‘அன்பே! ஆரமுதே!’

தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!'தமிழில் எனக்குப் பிடித்த முக்கியமான நாவலாசிரியர் தி.ஜானகிராமன். இவரது ‘செம்பருத்தி’, ‘மோகமுள்’, ‘மலர் மஞ்சம்’, மற்றும் ‘அன்பே ஆரமுதே’ ஆகிய நாவல்கள் இவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை. ‘அன்பே ஆரமுதே’ நாவலை என் பதின்ம வயதுகளில் வாசித்திருக்கின்றேன். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவலை அழகாக ‘பைண்டு’ செய்யப்பட்ட நிலையில், ஓவியங்களுடன் வாசித்திருக்கின்றேன். அன்று இந்த நாவலை வாசித்ததற்கும், இன்று வாசிப்பதற்குமிடையில் நாவலை அனுபவிப்பதில், புரிந்து கொள்வதில் நிறையவே வித்தியாசங்களுள்ளன. ஏனென்றால் இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் இளம் வயதினரல்லர். முதுமையை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வயதினர். இவ்வயதினரின் உளவியலை பதின்ம வயதுகளில் புரிந்து கொள்வது வேறு. பாத்திரங்களின் வயதில் புரிந்து கொள்வதென்பது வேறு 🙂

கதை இதுதான். அனந்தசாமி என்னும் சன்யாசி, சென்னையில் வாழும் மக்களுக்கு வர்க்க, சமூக வேறுபாடுகளற்ற நிலையில் நாட்டு வைத்தியம் செய்பவர். பந்தங்களைத் தன் இளவயதில் துறந்தவருக்குப் பந்தங்கள் அவரிடம் வைத்தியம் பார்க்கும் சென்னைவாசிகள்தாம். நாவல் அனந்தசாமியின் தாயாரின் மரணத்துடன் ஆரம்பமாகின்றது. அவருக்குச் சகோதர, சகோதரிகள் நல்ல நிலையில் இருந்தாலும், யாருமே வயதான தாயாரைத் தம்முடன் வைத்துப்பார்க்கத்தயாரில்லை. அனந்தசாமியே தாயாரைத்தன்னுடன் கூட்டி வந்து பராமரிக்கின்றார். இந்நிலையில்தான் தாயாரும் இறந்து விடுகின்றார். இவரிடம் வைத்தியம் பார்க்கும் செல்வந்தப்பெண்மணியொருத்திதான் நாகம்மாள். அவளுக்கு ஒரு மகள் சந்திரா.  காதல் தோல்வியால் துயரத்துக்குள்ளாகியிருப்பவள் சந்திரா.

இந்நிலையில் நாகம்மாளிடம் புது தில்லியில் காலேஜ் ஒன்றில் சரித்திரப்பேராசிரியராகப் பணிபுரியும் ருக்கு என அழைக்கப்படும் ருக்மணி , அவளது தோழி, வருகின்றாள்.

அவள் யார்? முப்பது வருடங்களுக்கு முன்னர் அனந்தசாமிக்கும் ,அவளுக்குமிடையில் திருமணம் நடைபெறத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் ஆன்மிக ஈடுபாடு மிக்கவராக விளங்கிய அனந்தசாமி திருமண நாளன்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுகின்றார். சன்யாசியாக அலைந்து திரிகின்றார். இதற்கிடையில் ருக்குவின் நின்று விட்ட கல்யாணத்தின் பின்னர் ருக்கு மீண்டுமொரு கல்யாணம் செய்யவேயில்லை. அவள் தில்லியில் வசிக்கும் , மகளை இழந்த துயரத்திலிருக்கும் தனது பெரியப்பாவுடன் சென்று விடுகின்றாள். அங்கு படித்துக் காலேஜொன்றில் பேராசிரியராகவும் பணி தொடங்கி விடுகின்றாள்.

வழக்கம்போல் நாகம்மாளுக்கு வைத்தியம் பார்க்க வரும் அனந்தசாமியும், ருக்மிணியும் சந்தித்துக்கொள்கின்றனர்.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் அவரைச் சந்தித்த ருக்குவோ தனது புது தில்லி திரும்பும் முடிவை மாற்றி, சென்னையிலேயே இருக்க முடிவு செய்து விடுகின்றாள். அதற்குக் காரணம் அனந்தசாமிதான். இதுபற்றி நாவலில் மிகவும் அழகாக விபரித்திருப்பார் நாவலாசிரியர். உதாரணத்துக்கு ஒரு மாதிரி:

ருக்குவின் சென்னையிலே தங்கும் முடிவைப்பற்றி அனந்தசாமிக்கும், ருக்குவுக்குமிடையில் நடைபெறும் உரையாடல் நாவலின் முக்கியமான உரையாடல்களிலொன்று.

‘அன்பே ஆரமுதே’: பக்கம் 146, 147 & 148]

// அனந்தசாமி:: “உங்களைப் புரிந்து கொள்வதே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது” என்றார் அனந்தசாமி.

ருக்கு: “நான் அந்தச் சிரமங்களெல்லாம் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். நான் பாட்டுக்கு எங்கோ ஒரு வீட்டில் குடியிருப்பேன். நீங்கள்  விருப்பமிருந்தால் வரலாம். ஆனால் கட்டாயமாக இல்லை. நாகம்மாள் வீட்டுக்கு அடிக்கடி வருவேன். அப்பொழுது பார்த்துக்கொள்வேன்.” சற்று நிறுத்தி யோசித்து விட்டு மீண்டும் சொன்னாள் ருக்மிணி. ‘அப்படியெல்லாம் சிரமம் கூட நினைக்காதவள் இங்கு ஏன் மெனக்கெட்டு வர வேண்டும். சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் முப்பது  வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது. நான் வருகிறேன்.” என்று மீண்டும் எழுந்தாள் அவள்.//

இவ்விதமாகத் திருமண நாளன்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடிச்சென்று , சன்யாசியாக, நாட்டு வைத்தியராக வாழ்ந்து வரும் அனந்தசாமியின் வாழ்வில் மீண்டும் , அவர் திருமணத்தன்று யாரைக் கைவிட்டுச் சென்றாரோ , அந்தப்பெண், ருக்கு (சரித்திரப்பேராசிரியை ருக்மிணி எதிர்ப்படுகின்றாள். நாகம்மாளின் மகள் சந்திராவும் இவருடனும், ருக்மிணியுடனும் அன்பாகப் பாசத்துடன் பழகுகின்றாள். டொக்கி என்னும்  பெண்ணொருவரும் தந்தையைப்போல் அனந்தசாமிமீது பாசம் கொட்டி வாழ்ந்து வருகின்றாள்.  சன்யாசியாக ஓடிப்போனவரின் வாழ்க்கை, முப்பது வருடங்களுக்குப் பின்னர் தன்னால் கைவிடப்பட்ட பெண்ணைச் சந்திப்பதுடன் மீண்டும் மாறுகின்றது.

நாவல் முழுவதும் அனந்தசாமியின் வாழ்க்கையை அற்புதமாக விபரிக்கின்றது.

நாவல் அக்காலத்துச் சென்னையைப்படம் பிடிக்கிறது. தி.ஜா.வின் எழுத்து நடை அற்புதமானது. நாவலில் வரும் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்கள் வாசிக்க வாசிக்க இன்பத்தைத்தருபவை. பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்களை இயற்கையாக, அலுப்புத்தட்டாமல் எழுத்தில் வடிப்பதில் தி.ஜா.வுக்கு நிகர் தி.ஜா.வேதான்.

தி.ஜா.வின் எழுத்தைப்பற்றிப்பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானது முறை தவறிய காமத்தை மையமாக வைத்தே அவரது கதைகள் இருப்பதாக. என்னைப்பொறுத்தவரையில் அது சரியானதொரு விமர்சனமல்ல. மோகமுள், அன்பே ஆரமுதே போன்ற படைப்புகள் காதலை (காமத்தையல்ல) சிறப்பாக எடுத்துரைக்கும் படைப்புகள்.

ngiri2704@rogers.com