மாஸ்டர் சிவலிங்கம் தொடர்பாக கடந்த 22 ஆம் அங்கத்தில் எழுதியிருந்த குறிப்புகளில் 1964 ஆம் ஆண்டு யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் நான் படிக்கின்ற காலத்தில் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலிருந்து வருகைதந்த மாணவர்களின் வள்ளி திருமணம் கூத்து அரங்காற்றுகையை ரசித்த தகவலை எழுதியிருந்தேன். அதனைப்படித்திருக்கும் தம்பிராஜா பவானந்தராஜா என்பவர் எழுதியிருந்த குறுஞ்செய்தியை பதிவுகள் இணைய இதழ் நடத்தும் நண்பர் கிரிதரன் எனக்கு அனுப்பியிருந்தார். குறிப்பிட்ட வள்ளிதிருமணம் கூத்தை மாணவர்களுக்கு பயிற்றுவித்தவர்தான் பவானந்தராஜாவின் தந்தையார் அண்ணாவியார் தம்பிராஜா. 1965 இல் யாழ். மகாஜனாக்கல்லூரியில் நடந்த அகில இலங்கை ரீதியிலான போட்டியிலும் அண்ணாவியார் தம்பிராஜாவின் குருக்கேத்திரன் போர் என்ற கூத்து முதல் பரிசுபெற்றதாகவும் , பேராசிரியர் மௌனகுரு அவர்களும் தமது தந்தையாரிடம் கூத்து பயின்ற மாணவர்களில் ஒருவர் எனவும் அவரது செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 53 வருடங்களுக்கு முன்னர் பார்த்து ரசித்த வள்ளிதிருமணம் கூத்து எனக்கு நினைவிலிருக்கிறது. அதன் அண்ணாவியாரின் பெயர் மறந்துவிட்டது. நினைவுபடுத்திய அண்ணாவியார் மகனுக்கு நன்றி.
கடந்த காலங்களை நினைவுபடுத்தினால் இதுபோன்ற பல அரிய தகவல்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இதற்கு முன்னர் தொண்டமனாறில் வசிக்கும் குந்தவை என்ற படைப்பாளியைப்பற்றி எழுதியிருந்தபோதும், கனடாவிலிருந்து நகுலசிகாமணி என்ற அன்பர் தொடர்புகொண்டு, வல்வெட்டித்துறை ஆவணக்காப்பகத்தில் பேணப்படும் பெரிய நங்கூரத்தை வழங்கியவர் குந்தவைதான் எனவும் அவரது மூதாதையர்கள் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவுக்கு கப்பலோட்டிய தமிழர்கள் என்ற தகவலையும் அறியத்தந்திருந்தார். அண்மையில் வெளியாகியிருக்கும் எனது சொல்லவேண்டிய கதைகள் நூலில் குந்தவை பற்றிய ( நாற்சார் வீடு என்ற அங்கத்தில்) கதையில் நகுலசிகாமணியின் தகவலையும் சேர்த்துக்கொண்டேன்.
அன்று மட்டக்களப்பில் நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், என்னை ஊடகப்பள்ளியில் பணியாற்றும் ஏற்கனவே எனக்கு நன்கு தெரிந்த பத்திரிகையாளர் அருள்சங்கீத்திடம் அழைத்துச்சென்றார். இவர் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலாரத்தினத்தின் பேரனாவார். இருக்கிறம் என்ற இதழின் ஆசிரியர் குழுவிலிருந்தவர். 2011 மாநாட்டில்தான் இவர் எனக்கு அறிமுகமானார். அந்த ஆண்டு வெளியான இருக்கிறம் இதழ்களின் பிரதிகளை எடுத்துவந்து மாநாட்டின் பேராளர்களுக்கு இலவசமாகவே வழங்கினார். அரசியல் சமூக, கலை, இலக்கிய விமர்சன இதழாக வெளியான இருக்கிறம் இணைய இதழாகவும் வெளியாகியிருக்கிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அருள்சங்கீத் அந்த ஊடகப்பள்ளியிலும் விரிவுரையாற்றுகிறார். நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் இதுபோன்ற ஊடகப்பள்ளிகள் இருக்கவில்லை. இலங்கை மன்றக்கல்லூரிகளில் என்றாவது ஒரு நாள் ஊடகத்துறை சார்ந்த பயிலரங்குகள் மாத்திரமே நடைபெறும். தற்காலத்தில் நவீன தொழில்நுட்பம் சார்ந்து ஊடகத்துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்திருப்பதனால், ஊருக்கு ஊர் ஊடகப்பள்ளிகள் இயங்குகின்றன. ஒளிப்படத்துறையிலும் டிஜிட்டல் முறை வந்திருப்பதனால், இளம்தலைமுறையினர் இவற்றில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
ஒரு காலத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், கணக்கியல் முதலான துறைகளில் ஆர்வம் காண்பித்தார்கள். தமது பிள்ளைகள் டொக்டர்களாகவோ, எஞ்சினியர்களாகவோ, சட்டத்தரணிகளாகவோ, கணக்காளராகவோ வரவேண்டும் என்ற கனவுதான் எமது தமிழ் சமூகத்திடம் முன்பு நீடித்திருந்தது. காலம் மாறியது. தற்போது இலங்கைப் பாடசாலைகளில் ஊடகக் கல்வியும் ( Media Studies) ஒரு பாடமாகியிருக்கிறது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். காணாமலாக்கப்பட்டார்கள். அச்சுறுத்தப்பட்டார்கள். அதனால் பலர் நாட்டைவிட்டும் வெளியேறினார்கள். எனினும், ஊடகத்துறை உயிரையும் பறிக்கும் எனத்தெரிந்தும் இன்று இலங்கையில் ஊடகப்பள்ளிகள் தோன்றியிருப்பது மிக முக்கியமான மாறுதல்தான். இலங்கையில் ஊருக்கு ஊர் ஊடக அமையங்களும் உருவாகியிருக்கின்றன. அன்று அருள் சங்கீத் தாம் பணியாற்றும் அந்த ஊடகப்பள்ளியின் வகுப்பறைகளை எமக்கு காண்பித்தார். ஒளிப்படக்கலை, பத்திரிகை பக்க வடிவமைப்பு, தொலைக்காட்சியில் எவ்வாறு பணியாற்றுவது முதலான பலதரப்பட்ட பயிற்சிகளுக்காக மாணவர்கள் இருபாலாரும் வருவது பற்றிச்சொன்னார்.
” தாத்தா எப்படி இருக்கிறார்..?” என்று எங்கள் மூத்த பத்திரிகையாளர் ‘கோபு’ கோபாலரத்தினம் பற்றி விசாரித்தேன். அவர் மட்டக்களப்பில் தனது மகளிடம்தான் இருக்கிறார் என்று திருகோணமலையில் என்னைச்சந்தித்த டான் தொலைக்காட்சி ‘ஈழநாடு’ குகநாதன் சொல்லியிருந்தார். மட்டக்களப்பு வந்ததும் இருவரும் கோபுவை பார்க்கச்செல்வது என்றுதான் தீர்மானித்திருந்தோம். எனினும், குகநாதன் அவசரமாக அன்று காலை யாழ்ப்பாணம் செல்லவேண்டியிருந்தமையால், கோபாலகிருஷ்ணனுடன் அன்று மாலை கோபாலரத்தினத்தை பார்க்கச்சென்றேன். தாத்தா கடும் சுகவீனமுற்றிருப்பதாக பேரன் அருள் சங்கீத் சொன்னார். தற்பொழுது தங்களுடன்தான் இருப்பதாகவும் வீட்டுக்கு வருமாறும் அழைத்தார்.
2013 ஆம் ஆண்டு திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு புறப்பட்டபோது தொலைபேசி ஊடாக எனது வரவை கோபுவிடம் சொல்லிவிட்டு பயணத்தை தொடங்கியிருந்தாலும், இடையில் திருகோணமலை – மூதூர் பாதையில் வெள்ளம் பரவியிருந்தமையால் பெரிய சுற்றுச்சுற்றி நடு இரவில் அவரைக் காணச் சென்றிருக்கின்றேன். அந்த இரவில் எனக்காக உறங்காமல் விழித்திருந்து காத்திருந்த கோபு அவர்கள், இம்முறை பகல்பொழுதில் நான் சென்றிருந்தபோது, ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமல், எழுந்திருந்து நடக்கவும் முடியாமல் முடங்கியிருந்த காட்சி மனதை உலுக்கியது. முதுமை இயலாமையுடன் நோய் உபாதையும் அவரை பெரிதும் தாக்கியிருந்தமையால் பேசுவதற்கும் சுவாசிப்பதற்கும் சிரமப்பட்டார். அருள்சங்கீத்தின் தயார் (கோபுவின் மகள்) அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து, ” அப்பா… யார் வந்திருக்கிறார்… தெரிகிறதா…?” எனக்கேட்டாலும், அவரால் என்னை சிரமப்பட்டுத்தான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவரை ஆசனத்தில் அமரவைத்துவிட்டு, நானும் கோபாலகிருஷ்ணனும் அருகே நெருக்கமாக அமர்ந்துகொண்டு உரையாடினோம்.
அவருடனான எனது நட்புறவு 1975 இல் ஆரம்பித்தது. மல்லிகை ஜீவாதான் இவரை எனக்கு யாழ்ப்பாணம் ஈழநாடு அலுவலகத்தில் அறிமுகப்படுத்தியவர். இவரும் வீரகேசரியில் 1953 இல் ஒப்புநோக்காளராகவே இணைந்தவர். பின்னாளில் பத்திரிகையாளர்களாகவும் படைப்பிலக்கியவாதிகளாகவும் உருவானவர்களில் பலர் தொடக்கத்தில் அச்சுக்கோப்பாளர்களாகவும் ஒப்புநோக்காளர்களாகவுமே இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. தமிழகத்தில் சிலம்புச்செல்வர் மா.பொ.சி., ஜெயகாந்தன், விந்தன் ஆகியோரும் இலங்கையில் கோபாலரத்தினம், ஸி.எஸ். காந்தி, மலைத்தம்பி ஆகியோரும் 1983 இற்குப்பின்னர் நானும் நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம், பிரணதார்த்திஹரன் , சிவராஜா, அற்புதானந்தன் ஆகியோரும் பத்திரிகையாளர்களாக மாறியிருக்கின்றோம். இந்தத் தகவல் பின்னணி எமக்கு இருப்பதனால் கோபுவிடத்தில் எனக்கு மரியாதை அதிகம். இவர் பற்றி நான் முன்பொருதடவை எழுதிய குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன.
கோபுவும் 1953 இல் வீரகேசரி பத்திரிகையில் ஒரு ஒப்புநோக்காளராகவே பணியில் அமர்ந்தார். பின்னர், ஆசிரியபீடத்தில் இணைந்து ஒரேசமயத்தில் அலுவலக நிருபராகவும் துணைஆசிரியராகவும் பணியாற்றி பத்திரிகையாளனாக உருவானார். அப்பொழுது அவர் பெற்ற மாதச்சம்பளம் 72 ரூபாதான். 1960 இல் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அந்த வேலையை இழந்து யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். கோபு, வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர்.
1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப்(?) படை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார். தனது சிறை அனுபவங்களை ஜூனியர் விகடனில் தொடராக எழுதினார். ‘ஈழமண்ணில் ஒரு இந்தியச்சிறை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய குறிப்பிட்ட தொடர் பிரான்ஸில் குகநாதன் வெளியிட்ட பாரிஸ் ஈழநாடு வார இதழிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது. பின்னர் தனி நூலாக வெளியானது. ஏற்கனவே அவர் இதழ்களில் பதிவுசெய்த ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பாக ‘ அந்த ஒரு உயிர்தானா உயிர்’ என்ற நூலையும், பத்திரிகைப்பணியில் அரை நூற்றாண்டு, முடிவில்லாப்பயணத்தில் முடியாத வரலாறு ஆகிய நூல்களையும் வரவாக்கியுள்ளார். போர்க்காலத்தில் இயக்கங்கள் மற்றும் இலங்கை இந்திய படைகளுக்கு மத்தியில் பத்திரிகையாளர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்திருப்பார்கள்? என்பதை கோபலரத்தினத்தின் குறிப்பிட்ட நூல்கள் ஆழமாகப்பதிவு செய்துள்ளன.
மேற்குறித்த பதிவை எழுதும் முன்னர் நான் அவரிடம் 2013 இல் பின்வரும் கேள்வியையும் கேட்டிருந்தேன். “இதுவரையில்….இலங்கையில் ஊடகவியலாளர்களின் வாழ்வையும் பணிகளையும் அவர்கள் எதிர்நோக்கிய இன்னல்களையும் சித்திரிக்கும் நாவல் எதுவும் வெளியாகவில்லையே…. உங்களால் எழுதமுடியும்…..எழுதுங்களேன்…”
அப்பொழுது அவரது பதில் பின்வருமாறு: “ நான் ஒரு இலக்கியப்பிரதியாளன் அல்ல. அனுபவங்களை பதிவு செய்யும் ஊடகவியலாளன். உங்களைப்போன்ற பத்திரிகையாளர்களாகவே செயற்பட்டு அதேசமயம் இலக்கியப்படைப்பாளிகளாகவும் இயங்குபவர்கள்தான் எழுதவேண்டும்.”
நான்கு ஆண்டுகள் கடந்தபின்னர், அவரை இம்முறை பார்த்தபோது ஊடகத்துறை சம்பந்தமாக எதுவுமே கேட்கவில்லை. அவ்வாறு கேட்கும் நிலையில் நானும் இல்லை. அதற்குப்பதில் சொல்லும் நிலையில் அவரும் இல்லை. முதுமை தந்திருக்கும் சோர்வும், நோய் உபாதையும் அவரை பெரிதும் பாதித்திருப்பதனால், அவர் அறியாத பல பத்திரிகை, இலக்கிய உலகச்செய்திகளை சொன்னபோது, மௌனமே பாஷையாக என்னை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பத்திரிகை உலக நண்பர்கள் பலர் மறைந்துவிட்ட தகவலும் அவருக்குத்தெரியாது. வேறு ஒரு உலகத்தில் அவர் மௌனமாக வாழ்கிறார். அந்திமகாலத்தில் அந்தக்கோலத்தில் இவரைப்போன்று, ஏற்கனவே தமிழகத்தில் ராஜம் கிருஷ்ணனையும் சிட்னியில் காவலூர் இராஜதுரையையும், பேராசிரியர் பொன். பூலோக சிங்கத்தையும் பார்த்திருக்கின்றேன். நாம் கடக்கவிருக்கும் பாதையை எமக்கு முன்னே கடந்துசென்றுகொண்டிருக்கும் மூத்த பத்திரிகைத்துறை ஆளுமையிடமிருந்து விடைபெறும்போது, தனது வாரிசாக பேரன் அருள் சங்கீத்தை ஊடகத்துறைக்கு வழங்கியிருக்கிறார் என்ற திருப்தியும் எஞ்சியிருந்தது. கனத்த மனத்துடன் அங்கிருந்து புறப்பட்டேன்.
அன்றைய பகல்பொழுதில் பார்க்கவேண்டிய ஏனைய சிலரையும் சந்தித்துவிட்டு, மாலையானதும் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடம் நோக்கிச்சென்றோம். மகுடம் கலை இலக்கிய வட்டம் அன்றைய தினம் ஒழுங்கு செய்திருந்த கலாபூஷணம் எஸ். எதிர்மன்னசிங்கம் அவர்களின் பவள விழாவும் சமீபத்தில் அவர் எழுதி மகுடம் பதிப்பாக வந்திருக்கும் ‘ கிழக்கிலங்கைத் தமிழ் மக்களின் பண்பாட்டுப்பாரம்பரியம்’ நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறவிருந்தது. எதிர்மன்னசிங்கம் எனக்கு இலக்கிய நண்பராகவும் அதே சமயம் ஒரு திருமண சம்பந்தத்தினால் உறவினருமானவர். நீர்கொழும்பில் எனது சித்தப்பா முறையான ராஜா யோகலிங்கம் என்பவர் 1970 காலப்பகுதியில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பாட்டா பாதணி விற்பனைப்பிரதிநிதியாக பணியாற்றியவர். இவர் எனது அம்மாவின் தாய் மாமனாரின் மகன். என்னை விட வயது குறைந்தவராயிருந்தாலும் சித்தப்பா முறையானவர். அவரை பாட்டா ராஜா என்றுதான் மட்டக்களப்பிலும் எங்கள் ஊரிலும் அழைப்பார்கள். எதிர்மன்னசிங்கத்தின் துணைவியாரின் தங்கையைத்தான் பாட்டா ராஜா, காதலித்து மணம் முடித்தார். அவரது திருமணம் 1974 ஆம் ஆண்டு கல்லடியில் அமைந்திருக்கும் ஒரு கோயிலில் இரவு வேளையில் நடந்தது. அங்குதான் பெண் வீட்டார் தரப்பில் எதிர்மன்னசிங்கம் எனக்கு அறிமுகமானார். அன்று முதல் சொந்த பந்த உறவுக்கு அப்பால் நாம் நெருங்கியிருப்பது இலக்கியத்தில்தான். இலங்கை வரலாற்றில் ஒரு எதிர்மன்னசிங்கம் இருந்திருக்கிறார். அவர் பதினைந்து – பதினாறாம் நூற்றாண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்து கால் நூற்றாண்டு காலம் தனது பதவியை தக்கவைத்துக்கொண்டு, போர்த்துக்கீசருக்கு தண்ணி காண்பித்தவர். எட்டாம் பரராஜசேகரன் என்ற வரலாற்றுப்பெயர்கொண்ட அந்த அரசனின் இயற்பெயருடன் ஈழத்து இலக்கிய வரலாற்றில் இணைந்திருப்பவர் இந்த எதிர்மன்னசிங்கம்.
குறிப்பிட்ட விழா பற்றியும் எதிர்மன்னசிங்கம் அவர்களின் கலை, இலக்கியப்பணி பற்றியும் அடுத்த அங்கத்தில் எழுதுகின்றேன்.
(பயணங்கள் தொடரும்)
letchumananm@gmail.com-