எழுத்தாளர் முருகபூபதியின் எழுத்துகளை நான் விரும்பிப்படிப்பவன். குறிப்பாக அண்மைக்காலமாக அவர் எழுதிவரும் கட்டுரைகள் பல காரணங்களினால் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆவணப்பதிவுகளாகவும், இலக்கியச்சிறப்பு மிக்க பிரதிகளாகவும் அவை இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் சிறந்த ஊடகவியலாளராகவும், அதே சமயம் இலக்கியப்படைப்பாளியாகவும் இருப்பதுதான். இதனால்தான் அவரது எழுத்து வாசிப்பதற்குச் சுவையாகவும், அவற்றில் காணப்படும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் பிரமிப்பூட்டுவனவாகவும் இருக்கின்றன. அவரது ‘சொல்ல மறந்த கதைகள்’ தொகுதியினை அண்மையில் வாசித்தேன். தமிழகத்திலிருந்து சிபிச்செல்வனின் ‘மலைகள்’ பதிப்பகத்தினூடு மிகவும் நேர்த்தியாக வெளிவந்துள்ள நூலிது. இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் யுகமாயினி (சஞ்சிகை), உதயம் (இதழ்) ஆகிய இதழ்களிலும், தேனீ இணையத்தளம், அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்தளம் மற்றும் பதிவுகள் இணைய இதழ், நடேசனின் வலைப்பதிவு மற்றும் மேலும் சில இதழ்கள், இணையத்தளங்களில் வெளிவந்ததாகத் தனது முன்னுரையில் மறக்காமல் பதிவு செய்திருக்கின்றார். ‘இலக்கியத்தால் ஒன்றுபடுவோம்’ என்று அம்முன்னுரையினை முடித்திருக்கும் முருகபூபதி மேற்படி நூலினை ‘கொடிய போர்களினால் உலகெங்கும் மடிந்த இன்னுயிர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்’ என்று சமர்ப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்நூலிலுள்ள கட்டுரைகள் கூறும் விடயங்கள் பல் வகையின. முருகபூபதி ஊடகவியலாளராகவிருந்ததால், அரசியல்ரீதியாகவும், இலக்கியரீதியாகவும் அவருக்கு இன, மத, மொழி கடந்து பலருடனும் தொடர்புகள் இருந்திருக்கின்றன, அதனால் பலருடன் அவர் பழகும், பணி புரியும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக வாசகர்களான எமக்கு நல்ல பல அனுபவப் பதிவுகள் கட்டுரைகளாகக் கிடைத்திருக்கின்றன.
நூலில் காணப்படும் இலங்கையின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களில் சேகுவேராக் கட்சியென்று ஆரம்பத்தில் அறியப்பட்ட கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இயக்கம் (ஜே.வி.பி இயக்கம்) பற்றிய பல தகவல்கள் கட்டுரைகளில் காணப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணிக்கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேரடியாகப்பழகும் சந்தர்ப்பம் முருகபூபதிக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்தில் இலங்கையின் இடது சாரிக்கட்சிகளுடன் இணைந்து இயங்கிய முருகபூபதி, பின்னர் அவர்கள் செயற்பாடுகளில் அதிருப்தியுற்று ஜேவிபியில் இணைந்து செயற்பட்டதுதான். ஜேவியின் பொதுச்செயலாளராகவிருந்த லயனல் போபகே இவரது குடும்ப நண்பராகவும் விளங்கியிருக்கின்றார். ஜே.வி.பி.யின் தலைவரான ரோகண விஜேவீராவுடன் பழகுவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஜே.வி.பி.தலைவர் ரோகண விஜேவீராவுடனான தனது நேரடி அனுபவங்களையெல்லாம் கட்டுரைகளில் பதிவு செய்திருக்கின்றார் நூலாசிரியர். குறிப்பாக ‘நிதானம் இழந்த தலைமை’ கட்டுரையினைக் குறிப்பிடலாம்.
ரோகண விஜேவீராவுக்கு முருகபூபதி தமிழ் படிப்பித்திருக்கின்றார். விடுதலைப்புலிகளின் ஆரம்பகாலத்துப் பிரசுரங்களிலொன்றான ஜே.வி.பி.யினரின் தோல்வியில் முடிவடைந்த முதலாவது புரட்சியினைப்பற்றிய பிரசுரம் அது. அதனை அவருக்குச்சிங்களத்தில் மொழிபெயர்த்து விளங்கப்படுத்தியிருக்கின்றார். அவரது அரசியல் பேச்சுகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார். இவற்றையெல்லாம் தனது கட்டுரைகளில் பதிவு செய்திருக்கும் முருகபூபதி ஜே.வி.பி.யினரின் தோல்வியுற்ற முதற் புரட்சியின்போது இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட கதிர்காம அழகி பிரேமவதி மனம்பேரி பற்றிய விபரங்களையும் பதிவு செய்திருக்கின்றார். இவ்விதம் ஜேவியினருடனான தனது அனுபவங்களைப்பதிவு செய்திருக்கும் விடயங்களில் ரோகணவிஜேவீராவின் எதிர்மறையான குணவியல்புகளையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவசரப்பட்டு நண்பர்களைப்பகைத்துக்கொள்வது ரோகண விஜேவீராவின் மிகப்பெரிய பலவீனம் என்றும் குறிப்பிடுகின்றார். அத்துடன் தன்னைக் கைது செய்த முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க மீது அவர் கொண்டிருந்த கோபம் இறுதிவரை மாறவேயில்லை என்பதையும் முருகபூபதி வெளிப்படுத்துகின்றார்.
இன்னுமொரு கட்டுரையான ‘கண்ணுக்குள் சகோதரி’ என்னும் கட்டுரை நெஞ்சைத்தொடும் சிங்களச்சகோதரி ஒருவரின் செயலை விபரிக்கின்றது. ஒருமுறை முருகபூபதி கொழும்பில் ஜேவியினரின் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருக்கின்றார். அச்சமயம் எழுதுவதற்குப் பாவிக்கப்பட்ட சிவப்பு மைத்துளி கண்ணொன்றினுள் விழுந்து தொல்லை தரத்தொடங்குகின்றது. இச்சமயம் அங்கு ஜேவியினரின் காரியாலயத்தில் பணி புரிந்து கொண்டிருந்த சிங்களப்பெண்ணொருத்தி தனக்குத்தெரிந்த அண்மையில் தாய்மை அடைந்திருந்த சிங்களப்பெண்ணொருத்தியிடமிருந்து தாய்ப்பாலைப் பெற்று வந்து கண்ணுக்குள் மருந்தாகப்பாவிக்க உதவுகின்றார். இது எனக்குச் சிறு பிராயத்து நினைவொன்றினை ஏற்படுத்துகின்றது. அப்பொழுது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதுதானிருக்கும். அப்பொழுது வவுனியாவில் குருமண்காட்டுப்பகுதியில் வசித்து வந்தேன். அக்காலகட்டத்தில் எனக்கு ஒருமுறை கண் நோய் வந்து விட்டது. கண் நோய் வந்தால் காலைகளில் எழும்பும்போது கண்களைத்திறப்பது சிரமமாயிருக்கும். அப்பொழுது அருகில் வசித்துக்கொண்டிருந்த தாயொருத்தியிடம் தாய்ப்பால் வாங்கி வந்து அம்மா கண்களில் இட்டது இப்பொழுதும் நினைவு வருகின்றது. அக்காலகட்டத்தில் மக்கள் எவ்வளவுதூரம் இவை போன்ற விடயங்களிலெல்லாம் அன்புடன் இணைந்து உதவி வாழ்ந்தார்கள் என்பதை இப்பொழுது நினைக்கையில் வியப்புத்தான் ஏற்படுகின்றது.
நூலின் இன்னுமொரு கட்டுரையான ‘காவி உடைக்குள் ஒரு காவியம்’ என்னும் கட்டுரையில் உடுகம்பொலைக்கண்மையிலிருந்த கொரஸ்ஸ கிராமத்திலிருந்த புத்த விகாரையின் பிரதம குருவான பண்டிதர் ரத்ன வண்ச தேரோவைபற்றிய அனுபவங்களைப் பதிவு செய்கின்றார். மினுவாங்கொடையில் வசித்து வந்த எழுத்தாளர் நிலாமினால் அறிமுகப்படுத்தப்பட்ட அத்தேரர் எழுபதுகளிலேயே தமிழ் படித்திருந்ததுடன், தமிழ் இலக்கியங்களிலும் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டிருந்தார் என்பதைக்கட்டுரை விரிவாகவே பதிவு செய்கின்றது. ‘முள்ளும் மலரும்’ நாவலை எழுதிய உமாசந்திரனின் ‘முழு நிலா’ நாவலைச் சிங்களத்தில் மொழி பெயர்க்கவிருந்த தேரர் பின்னர் அதற்குப் பதிலாகச் செங்கை ஆழியானின் ‘வாடைக்காற்று’ நாவலை மொழி பெயர்த்ததையும் பின்னர் அப்பிரதி தொலைந்து விட்டதையும் , அது தேரரில் ஏற்படுத்திய உளரீதியிலான பாதிப்பையும் கட்டுரை விபரிக்கின்றது. இலங்கையில் தமிழ் சிங்களப்படைப்பாளிகளுக்கிடையில் பாலமாக விளங்கிய தேரரின் பல நிகழ்வுகளைக் கட்டுரையில் முருகபூபதி ஆவணப்படுத்தியிருக்கின்றார்.
இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உமாசந்திரனின் ‘முழு நிலா’ என்னும் நாவல் பற்றிய பதிவு என் பால்ய காலத்து வாசிப்பனுபவம் பற்றிய நினைவுகளில் நனவிடை தோய வைத்து விட்டது. என் வாசிப்பின் ஆரம்பக்கட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்த படைப்புகளிலொன்று இந்த ‘முழு நிலா’ நாவல். ஆனந்த விகடனில் தொடராக ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியான நாவல். என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்த படைப்புகளிலொன்று. இதில்வரும் உப்பிலி, நளினா ஆகியோர் இன்னும் நினைவிலுள்ளார்கள். மறக்க முடியாத பாத்திரங்கள்.
நூலிலுள்ள இன்னுமொரு கட்டுரை ‘காலிமுகம்’. அக்கட்டுரை பதிவு செய்துள்ள விடயம் எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. 1960ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அப்போது பிரதமராகவிருந்த காலியைச்சேர்ந்த தஹநாயக்க தோற்று விடுகின்றார். தான் தோற்றுப்போனதை அறிந்ததும், தமது சிறிய சூட்கேஸில் தமது சில உடைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த சேவகர்களிடம் தான் ஊருக்குப் போவதாகக் கூறிவிட்டு காலி வீதிக்கு வந்து பஸ் ஏறி கொழும்பு புறக்கோட்டை பிரதான பஸ் நிலையம் சென்று காலி பஸ்ஸில் ஒரு சாதாரணப்பிரசையாக ஏறிச்சென்ற தஹநாயக்கவின் எளிமையான பண்பினைக்கட்டுரை வெளிப்படுத்தும்போது அது எம்மை வியப்பிலாழ்த்துகின்றது. இப்படியும் எளிமை மிகுந்த சிங்களப்பிரதமரொருவர் இலங்கையில் இருந்தாரா என்று ஆச்சரியப்படவும் வைக்கின்றது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினராகத் தஹநாயக்கா இருந்த காலத்தில் துணி வகைகளில் விலைவாசியேற்றத்தைக் கண்டித்துக் கோவணத்துடன் பாராளுமன்றத்தினுள் நுழைந்து அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த விவாதத்தில் கலந்து கொள்ள முயன்றவர். அவ்விதம் அன்று கோவணத்துடன் தஹநாயக்க நுழைந்து விவாதத்தில் கலந்துகொள்ள சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனையும் மேற்படி கட்டுரை ஆவணப்படுத்துகின்றது. தஹநாயக்க கோவணத்துடன் பாராளுமன்றம் சென்ற காட்சிகள் புகைபடங்களாகப் பத்திரிகைகளில் வெளியாகிப்பரபரப்பை ஏற்படுத்தியதை அறிந்திருக்கின்றேன்
தொகுப்பிலுள்ள இன்னுமொரு கட்டுரை ‘அநாமதேய தொலைபேசி அழைப்பு’. அப்பொழுது முருகபூபதி வீரகேசரி நிறுவனத்தில் ஒப்பு நோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். அப்போதெல்லாம் அவர் நண்பர்களுடன் ஆமர் வீதியில், அதற்கண்மையிலிருக்கும் உணவகங்களில் புட்டு, சம்பல், நண்டுக்கறி போன்ற சுவையான உணவுகளைச்சாப்பிடுவதையெல்லாம் கட்டுரையின் ஆரம்பப்பகுதி விபரிக்கின்றது. இக்காலகட்டத்தில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையில் ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் மன்னார் முருங்கனில் புலனாய்வுத்துறை அதிகாரியான பஸ்தியாம்பிள்ளையுடன் மேலும் சிலர் புலிகள் இயக்கத்தினரால் படுகொலை செய்யப்படுகின்றார்கள். புலிகளின் ஆரம்பக்காலகட்டம். புலிகள் பிளவு படாமல் . உமாமகேசுவரனைத் தலைவராகக் கொண்டு இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம். அப்படுகொலையைத்தொடர்ந்து இளைஞரொருவர் அக்கொலைக்கும், ஏனைய கொலைகள் சிலவற்றுக்கும் புலிகள் சார்பில் உரிமை கோரிப் பிரசுரமொன்றினை வீரகேசரியின் பாதுகாவலர் அறையில் கொடுத்து விட்டு மறைந்து விடுகின்றார். அதனைப்பற்றி இக்கட்டுரை ஆவணப்படுத்துகின்றது. அவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் இன்றைய நிலை பற்றிய சிந்தனையை ஒரு கணம் தட்டி விடுகின்றது மேற்படி கட்டுரை. மெல்லியதொரு ஏக்கம் கலந்த உணர்வொன்று படர்கின்றது.
தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் இன்னுமொரு முக்கியமான கட்டுரை ‘வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை’ அரியாலையைச்சேர்ந்த குஞ்சியம்மா என்னும் தமிழ்த்தாயொருத்தியின் வாழ்வை அக்காலத்தில் நிலவிய இலங்கையின், இலங்கைத்தமிழரின் அரசியற் சூழல்கள் எவ்விதம் அலைக்கழிய வைக்கின்றன என்பதை ஆவணப்படுத்தும் கட்டுரையை வாசித்து முடித்ததும் ஒரு சிறுகதையினை வாசித்தது போன்ற உணர்வினைத்தரும் வகையில் இலக்கியச்சிறப்பு மிக்கதாகக் கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அக்கட்டுரை கூறும் கதை புனைவல்ல அபுனைவு.
குஞ்சியம்மாவின் மகன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச்சேர்ந்த போராளிகளொருவர். அக்காலகட்டத்தில் டெலோவுக்கும், புலிகளுக்குமிடையிலான உள்முரண்பாடுகள் மோதலாக வெடித்து, புலிகள் டெலோவைத்தடை செய்வதுடன், அவர்கள் மேல் ஆயுத யுத்தமொன்றினையும் தொடங்கி அழிப்பதில் முடிகின்றது. அச்சமயம் தமிழகத்தில் இருந்ததால் உயிர் தப்பிய குஞ்சியம்மாவின் மகன் ஊர் திரும்பியதும் புலிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றார். குஞ்சிம்மா புலிகளின் முகாம்களுக்கு அலைந்து திரிகின்றார். ஒரு கட்டத்தில் புலிகள் அவரது மகனை விடுதலை செய்து அனுப்பி விடுகின்றார்கள். அதன் பிறகு தனது மகனை வெளிநாடு அனுப்புவதற்காக பஸ்ஸுல் கொழும்பு செல்கையில் அவர்களுடன் கூட வந்த , அரியாலையைச்சேர்ந்த அவர்களை நன்கு அறிந்த தமிழர் ஒருவரால் இராணுவத்துக் காட்டிக்கொடுக்கப்பட்டு குஞ்சியம்மாவின் மகன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுகின்றார். மீண்டும் குஞ்சியம்மாவின் மகனைத்தேடிய அலைச்சல் ஆரம்பித்துவிடுகின்றது. அவரது மகனை இலங்கைப்படையினர் ஆனையிறவு முகாம், கொழும்புப் புறக்கோட்டை பொலிஸ் நிலையம், பூசா முகாமென்று மாறி மாறி அலைகழிக்கின்றார்கள். இறுதியில் இந்தியப்படையினர் இலங்கை வந்த காலத்தில், ஒப்பந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளிலொருவராகக் குஞ்சுயம்மாவின் மகனும் விடுதலையாகி ஒருவழியாக வெளிநாடு செல்கின்றார். வெளிநாட்டிலிருந்த குஞ்சியம்மாவின் கணவரும் நாடு திரும்பி இறந்தும் விடுகின்றார். ஆனால் குஞ்சியம்மாவின் நிலை? கட்டுரை இறுதியில் இவ்வாறு முடிகின்றது: ‘.. தனது பிள்ளைகளை வெளிநாடுகளில் விட்டு விட்டு இன்றும் பிள்ளையார் கோயொலடியில் வாழ்ந்துகொண்டு , பிள்ளைகளுக்காக விரதமிருந்தும் உபவாசமிருந்தும் பிரார்த்தித்துக்கொண்டிருக்கின்றார். வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை.’ இப்பதிவு நெஞ்சினைத்தொடும் பதிவு. இப்பதிவுக்குக் ‘குஞ்சியம்மா’ என்றே தலைப்பிட்டிருக்கலாமென்று தோன்றுகின்றது.
தொகுதியின் இன்னுமொரு கட்டுரை ‘லிபரேஷன் ஒப்பரேஷன் ஒத்திகை’. இலங்கையில் இந்தியப்படையெடுப்புக் காரணமாக அமைந்த இலங்கை அரசின் வடமராச்சி நோக்கிய ‘லிபரேஷன் ஒப்பரேஷன்’ காலகட்ட இலங்கை இந்திய அரசியல் நிலையினை எடுத்துரைக்கும் கட்டுரையில் , அக்காலகட்டத்தில் வீரகேசரி நிறுவனத்துக்குச் செய்திகள் சேகரிப்பதற்காகத் தான் எவ்விதம் யாழ் மாவட்டத்தில் செயற்பட்டேன் என்பதையும் விபரிக்கின்றார். அக்காலகட்டத்தில் வீரகேசரியின் ஆசிரியராக இருந்தவர் ஆ.சிவனேசச்செல்வன் என்பதையும் கூடவே பதிவு செய்கின்றார். ஊடக தர்மத்தின் அடிப்படையில் தான் எவ்விதம் யாழ்மாவட்டத்திலிருந்து செய்திகளைக் கொழும்புக்குக் கொண்டுவந்த விபரத்தைத் தன்னால் சொல்ல முடியாது என்று கூறும் முருகபூபதி ‘அந்தப் பயணத்தில் எமது தமிழ் மக்கள் பாரிய இழப்புகளை எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதற்கான அறிகுறிகளை நான் வடமராட்சியில் கண்டுகொண்டேன்’ என்றும் குறிப்பிடுகின்றார். அத்துடன் ‘லிபரேஷன் ஒப்பரேஷன்’ தாக்குதலில் தனது மனைவியின் மூத்த சகோதரியும் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட விபரத்தையும் கட்டுரையில் பதிவு செய்கின்றார்.
தொகுதியின் மேலுமிரு கட்டுரைகள் இலங்கைத்தமிழரின் இலக்கிய, அரசியல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘காத்திருப்பு: புதுவை நினைவுகள்’ என்னும் கட்டுரைகள்தாம் அவை. கட்டுரைகள் கவிஞர் புதுவை இரத்தினதுரையுடனான எழுத்தாளர் முருகபூபதியின் அனுபவங்களை, உணர்வுகளை விரிவாகவே விபரிக்கின்றன. மேற்படி கட்டுரைகளில் முருகபூபதி புதுவை இரத்தினதுரை பற்றிப் பதிவு செய்த முக்கியமான விடயங்கள் சில:
1. “புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர் விடுபடவில்லை” (காத்திருப்பு: புதுவையின் நினைவுகள்’ – இரண்டாவது கட்டுரை)
2. “புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை முன்னர் அதாவது 1971-1983 காலப்பகுதியில் அதிகமாக கொழும்பிலிருந்து நண்பர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட குமரன் இதழிலேயே படித்திருக்கின்றேன். வரதபாக்கியான் என்ற புனைபெயரிலும் எழுதியிருப்பவர். கவிதைத்துறையில் தன்னைக்கவர்ந்தவர்கள் இருவர் என்று குமரன் இதழ்களின் முழுமையான தொகுப்பு நூலில் குறிப்பிட்டுள்ளார் கணேசலிங்கன்” (காத்திருப்பு: புதுவையின் நினைவுகள்’ – முதற் கட்டுரை)
3. “காத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு. காதலர்களின் காத்திருப்பும் பரஸ்பரம் அன்பு நிறைந்த தம்பதியரின் காத்திருப்பும் நண்பர்களின் காத்திருப்பும் சோகத்தையும் சுகத்தையும் நினைவுகளையும் சுமந்துகொண்டிருப்பவை. நானும் ஒருவருக்காக காத்திருக்கின்றேன். வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை கரையைத்தழுவும் அலைகளை திரும்பிப்போ என்று எவரும் கட்டளை இடுவதில்லை.குருவிகளுக்கு இதுதான் உங்கள் கூடு என்று எவரும் பாதை காட்டிவிடுவதில்லை. கவிஞனும் இப்படித்தான். அவனுக்கு எவரும் அடியெடுத்துக்கொடுக்க முடியாது, கொடுக்கவும் கூடாது.” என்று தனது கவித்துவமான எழுத்துக்களுக்கு வாக்குமூலம் அளித்து உயிரூட்டிய இனிய நண்பனுக்காக கத்துக்கிடக்கின்றேன். வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது வாழ்நாளில் எத்தனைபேரை வாய் இனிக்க அண்ணா என்று அழைத்தார் என்பது எனக்குத்தெரியாது. ஆனால் அவர் புதுவை அண்ணா என்று விளித்த கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காக நான் காத்திருக்கின்றேன். புதுவை எனக்கு அண்ணனோ தம்பியோ இல்லை. தோழன். அவ்வப்போது மச்சான் என்று பரஸ்பரம் அழைத்துக்கொள்ளும் உரிமைகலந்த உறவு எம்மிடையே படர்ந்திருந்தது.” ((காத்திருப்பு: புதுவையின் நினைவுகள்’ – முதற் கட்டுரை)
4. வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு வண.பிதா ஜோசப் அடிகளார் முன்செல்ல, புதுவை இரத்தினதுரை, யோகி, லோரன்ஸ் திலகர், இளம்பரிதி, எழிலன், தங்கன், திலக், பேபி சுப்பிரமணியம் போன்ற பலர் பின்தொடர்ந்து சென்று சரணடைந்தார்கள் என்ற தகவலை ஊர்ஜிதம் செய்துகொள்ள முடிகிறது. அவர்களுடன் வந்த பெண்கள் குழந்தைகள் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். நானும் மற்றவர்களைப்போன்று எனது இனிய நண்பனுக்காக, அவரது குடும்பத்தினர் போன்று காத்துக்கிடக்கின்றேன்.
……… தனது அன்னையை நெஞ்சுருகி நினைத்துப்பாடியிருக்கும் கவிஞர், இப்படியும் ஒரு கவிதையை எங்களிடம் விட்டுச்சென்றுள்ளார்:- முடிவு காண்பேன்” ((காத்திருப்பு: புதுவையின் நினைவுகள்’ – இரண்டாவது கட்டுரை)
இவ்விதமாகச்செல்லும் புதுவை பற்றிய இரண்டாவது கட்டுரை புதுவையின் கீழுள்ள கவிதையுடன் முடிவடைகின்றது.
“‘கன்னியர் அழகைப்பாடேன், காதலைப்பாடேன், வானின்
வெண்ணிலா தன்னைப்பாடேன், விசரரைப்பாடேன், ஆனால்…
எண்ணரும் துயரத்தோடு ஏழைகள் வாழும் வாழ்க்கை
இன்னுமா? பொறுக்கமாட்டேன். இதற்கொரு முடிவு காண்பேன்
கற்றவர் என்ற மாயைக் கவிஞர்கள் சிரித்தபோதும்
சற்றுமே நில்லேன், ஏழைச்சனங்களின் துயரம் போக்கச்
சொற்களாற் கவிதை யாப்பேன் துயரிதாற் போகாதென்றால்…
பெற்றதாய் தடுத்தபோதும் போர்க்களம் புகுந்து சாவேன்.”
இவ்விதமாகத் தன் ஊடக, இலக்கிய, அரசியல் வாழ்க்கை அனுபவங்களை, உணர்வுகளைச் ‘சொல்ல மறந்த கதைகள்’ தொகுதியில் மறக்காமல் சொல்லி ஆவணப்படுத்துகின்றார் எழுத்தாளர் முருகபூபதி. அவ்விதம் சொல்வதையும் ஏனோ தானோவென்று வரட்டுத்தனமாகச்சொல்லாமல் உணர்வுபூர்வமாக, இலக்கியச்சிறப்புடன் சொல்லுகின்றார். அதனால்தான் முருகபூபதி சொல்லிச்செல்லும் ‘சொல்ல மறந்த கதைகள்’ தொகுதி இலக்கியச்சிறப்பும், ஆவணச்சிறப்பும் மிக்கதாக முக்கியத்துவம் பெறுகின்றது; நெஞ்சினைத்தொடும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதை மறக்காமல் ஆனால் உறுதியாக இங்கு நான் சொல்லுவேன்.
ngiri2704@rogers.com