‘ பிரமிளின் தவளைக்கவிதை பற்றியதொரு புரிதல்.’ என்னுமொரு கட்டுரையினை ஏற்கனவே ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்திருந்தேன்.முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அதில் மேற்படி கவிதை பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1539:-17-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
அந்தக் கட்டுரையில் நான் பிரமிள் அவர்களின் ‘தவளைக்கவிதை’ பற்றிக்குறிப்பிட்டிருந்ததுடன் இப்பதிவினை வாசிப்பது நல்லதென்பதால் அக்கட்டுரையில் அக்கவிதை பற்றிய எனது புரிதலின் சாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு மேலே செல்வோம். ஏனெனில் இப்பதிவானது அவரது அக்கவிதையின் தோற்றத்துக்கான மூலம் பற்றியது என்பதால் அக்கட்டுரை பற்றி மீண்டுமொருமுறை பார்ப்பதும் அவசியமானதே. அக்கட்டுரையின் அக்கவிதை பற்றிய கருத்துகளின் சாரம் வருமாறு:
“நூறு புத்தி உள்ள மீனை எடுத்துக் கோத்திட முடிந்தது ஈர்க்கில். மீன் பெருமைப்பட்ட புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. இது போல் தன் புத்தி அதனிலும் அதிகமென்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி விட்டால், அதன் மேல் கல்லை ஏற்றி வைத்து விட்டால், அதன் கதை அவ்வளவுதான். அதனால் மீண்டும் நிமிர்ந்திட முடிகிறதா? ஆமை பெருமைப்பட்ட அதன் புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியுமா? ஆனால் இவற்றுடன் ஒப்பிடும்பொழுது குறைந்தளவே புத்தி உடையதாகக் கூறிக்கொள்ளும் தவளையை மட்டும் பிடிக்க முடிந்ததா? இங்கு கவிஞர் தவளையைக் கவிதையாக உருவகிக்கின்றார். அந்தத் தவளையோ கைகளுக்கு அகப்படாமல் தத்தித் தத்திச் செல்கிறது. இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையைத் தவளையாக உருவகித்திருப்பதால் (தவளை கவிதை என்று கூறாமல் , தவளைக்கவிதை என்று கூறியிருப்பதால்; தவளை கவிதை என்று கூறியிருந்தால், தவளையும் கவிதையும் என்று பொருளாகியிருக்கும்), நூறு புத்தியுள்ள மீனையும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையையும் ஏனைய பிரிவுகளாகக் கருதலாம். ஒரு விதத்தில் நூறு புத்தியுள்ள மீனை சிறுகதைக்கும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையை (ஆடி அசைந்து நிதானமாகச் செல்வதால்) நாவலுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிறுகதை எழுதுவதற்குரிய அறிவுத் தேடலை விட நாவல் எழுதுவதற்குரிய தேடல் மிக அதிகம். அதனால்தான் சிறுகதைக்குரிய அறிவுத் தேடலை நூறு புத்தியாகவும், நாவலுக்குரிய தேடலை ஆயிரம் புத்தியாகவும் எழுத்தாளர் கருதுகின்றார். ஆனால் கவிதைக்குரிய அறிவுத் தேடல் அதிகமாக இல்லாவிட்டாலும் (அதனால்தான் தவளைக் கவிதை தனக்கு ஒரு புத்தி என்கின்றது), மேலும் ஏனைய பிரிவுகளை விட , கவிதையானது உணர்ச்சியின் விளைவாக உருவாவது. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளுக்குத் தேவையான அறிவுத்தேடலும், ஆக்குவதற்குரிய நேரமும் இதற்குத் தேவையில்லை. ஆனால் , நல்லதொரு கவிதையினை உருவாக்குவது சிறுகதையினை எழுதுவதை விட, நாவலொன்றினை எழுதுவதை விடச் சிரமமானது. அதனால் தான், கவிதையானது எழுத்தாளரின் பிடிக்குள் அகப்படாமல் தத்தி, நழுவிச் செல்கிறது. அதனால்தான் எழுத்தாளர் கவிதையினைத் தவளையாக உருவகிக்கின்றார்…… கவிதையைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளைவிட எழுதுவது மிகவும் இலகுவானதென்று பலர் எண்ணி விடுகின்றார்கள். அதனால்தான் புற்றீசல்கள்போல் தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் முளைத்து விடுகின்றார்கள். உண்மையில் பிரமிள் புற்றீசல்கள்போல் படையெடுத்த புதுக்கவிஞர்களால் நிறைந்துவிட்ட அன்றைய தமிழ் இலக்கியப் பரப்பின் மீதான விமர்சனமாகத்தான் மேற்படி ‘தவளைக்கவிதை’ என்னும் கவிதையினை எழுதியிருக்கின்றாரென்று படுகிறது. கவிதை எழுதுவதை மிகவும் இலகுவாக எண்ணி ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் பொழிந்து தள்ளும் கவிஞர்களை நோக்கி, ‘நீங்கள் மிகவும் இலகுவாகக் கருதிப் படைக்கின்றீர்களே கவிதைகள். அவை கவிதைகளே அல்ல. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளை விடக் கவிதை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது.’ என்று சாடுகின்றார் பிரமிள். …….. ஆயிரக்கணக்கில் புற்றீசல்களைப் போல் பெருகியிருக்கும் தமிழ்க் கவிஞர்கள். கவிதையோ இவர்களின் கைகளில் அகப்படாமல் தத்தித் தத்தி ஓடுகிறது. இவர்களும் அதன் பின்னால் தத்தித் தத்தி ஓடுகின்றார்கள். ஆனால் கவிதைதான் இவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. இவர்கள் கவிஞர்களா? பித்தர்கள் இவர்கள் என்று சாடுகின்றார். மேற்படிக் கவிதைக்குத் ‘தவளைக் கவிதை’ என்று தலைப்பிட்டுள்ளதால் கவிதையின் முதன்மைப் பொருள் சமகாலத் தமிழ்க் கவிதையும் அதனைப் படைக்கும் கவிஞர்களும். மேலும் மேற்படி கவிதையினை இன்னுமொரு கோணத்திலும் அணுகலாம். எதற்காகக் கவிதையினைத் தவளைக் கவிதை என்றார்? குறைந்த அளவு அறிவுத் தேடலும் ஆயிரக்கணக்கில் பிரசவிக்கப்படும் இன்றைய தவளைக் கவிதையானது தத்தித் தத்தித் தப்பிப் போகுது. எதனிடமிருந்து உண்மைக் கவிதையிடமிருந்து. தவளைக்கு இன்னுமொரு பெயர் மண்டூகம். மண்டூகம் என்பதற்கு இன்னுமொரு பொருள்: மண்டுகளின் ஊகம். அதாவது முட்டாள்களின் ஊகம். ஆக, இன்றைய தமிழ்க் கவிதையானது மண்டுகளின் ஊகம் என்று சாடுகிறாரோ பிரமிள்?”
இவ்விதம் அப்பதிவினில் எழுதியிருந்தேன். இனி இப்பதிவுக்கு வருவோம்.
தவளைக் கவிதை
– பிரமிள் –
தனக்கு புத்தி
நூறு என்றது மீன் –
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்
தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை –
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை.
‘எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் –
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை –
’நூறு புத்தரே!
கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!
ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!
இந்தக்கவிதையினை இதுவரையில் முற்று முழுதாகப் பிரமிளின் கவிதையாகத்தான் எண்ணியிருந்தேன். ஆனால் அண்மையில்தான் இந்தக்கவிதைக்கான மூலம் ஒரு நாட்டுப்பாடல் என்பதை அறிந்திருந்தேன். அந்த நாட்டுப்பாடலின் வரிகளை உள்வாங்கித் ‘தவளைக்கவிதை’ என்னும் உருவகத்தின் மூலம் ‘கவிதைத்தவளை’ என்னுமோர் இன்னுமோர் உருவகத்தைப் பிரமிள் உருவாக்கியிருக்கும் அற்புதம் அவரது கவித்துவப் படைப்பாற்றலைப் புலப்படுத்துகின்றது. உண்மையில் ‘தவளைக்கவிதை’ என்னும் உருவகம் பிரமிள் கவிதையில் பாவித்திருப்பது. ஆனால் ‘கவிதைத்தவளை’ என்னும் உருவகத்தை அவர் கவிதையினை வாசிப்பவர்கள் தம் சிந்தையில் உணர்ந்துகொள்ளும் வகையில் ‘தவளைக்கவிதை’ என்னும் உருவகத்தைக் கவிஞர் பிரமிள் பாவித்திருக்கின்றார்.
உண்மையில் கவிஞர் பிரமிளின் சிந்தனையில் இக்கவிதையின் பொறியினை ஏற்படுத்தியது ஒரு நாட்டுப்பாடலே. அந்தப்பாடலைப்பற்றி அண்மையில்தான் இலக்கியவாதியொருவரின் நேர்காணலொன்றில் அறிந்துகொண்டேன்.
அண்மையில் இலண்டனில் வசிக்கும் அமரர் எழுத்தாளர் அகஸ்தியரின் புதல்வி நவஜோதி யோகரட்னம் அவர்கள் தனது ‘மகரந்தச் சிதறல்’ என்னுமொரு நூலினை என் வாசிப்புக்காக அனுப்பியிருந்தார். அந்நூல் அவர் ஊடகங்கள் பலவற்றுக்காகப் பல்வகை ஆளுமைகளுடன் கண்ட நேர்காணல்களிலிருந்து 33 தமிழ்ப்பெண்மணிகளின் நேர்காணல்களைக்கொண்டு தொகுக்கப்பட்ட நூல். இலண்டனில் வசிக்கும் இசை, நாட்டியம், நாடகம், ஓவியம், இலக்கியம், அரசியல், மருத்துவம் மற்றும் தொழில்முயற்சி ஆகிய துறைகளில் ஒளிரும் பெண் ஆளுமைகளுடன் நவஜோதி ஜோகரட்னம் அவர்கள் நடாத்திய நேர்காணல்களை உள்ளடகியுள்ளது இந்த நூல். தவிர்க்கப்பட முடியாத பெண் ஆளுமைகளை வெளிப்படுத்தும் நல்லதொரு நூல். இந்நூல் பற்றி இன்னுமொரு சமயம் விரிவாகவே எழுதுவேன்.
இந்நூலின் இலக்கியம் என்னும் பிரிவினுள் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், புனிதா பேரின்பராஜா, தமிழரசி சிவபாதசுந்தரம், யமுனா தர்மேந்திரன், றீற்றா பற்றிமாகரன், மாதவி சிவலீலன் மற்றும் உதயகுமாரி பரமலிங்கம் (நிலா) ஆகியோருடனான நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. அதிலுள்ள தமிழரசி சிவபாதசுந்தரத்துடனான ‘தமிழரசி சிவபாதசுந்தரம்: புலமை மரபும், புதுமையும்’ என்னும் கட்டுரையே அது. அதில்தான் தமிழரசி சிவபாதசுந்தரம் கவிஞர் பிரமிளின் மேற்படிக் கவிதை பற்றிய தனது கருத்துகளைத்தெரிவித்திருக்கின்றார்.
அந்நேர்காணலில் தமிழரசி சிவபாதசுந்தரம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:
1. கவிஞர் பிரமிள் திருகோணமலையில் பிரபல்யமான நாட்டுப்பாடலொன்றினைத் தனது மேற்படி ‘தவளைக்’ கவிதைக்குப் பாவித்துள்ளார். அந்த நாட்டுப்பாடல் வரிகள் வருமாறு:
ஆயிரம் புத்தரே மல்லாத்தரே கல்லேத்தரே
நூறு புத்தரே கண்ணுக்க கோர்த்தரே
பத்துப் புத்தரே கடக்கட முடக்கரே
ஓடு புத்தரே தத்தரே பித்தரே.
2. இப்பாடல் கந்தளாயில் வாழ்ந்த மீனவர்களால் பாடப்பட்ட பாடலாகும்.
இப்பாடலுக்கான கதையினைத் தமிழரசி அவர்கள் மேற்படி நேர்காணலில் விபரித்திருக்கின்றார். அதன் சாரம் வருமாறு: மீனவர்களின் வலையினில் ஆமை, மீன், நண்டு மற்றும் தவளை ஆகியன அகப்பட்டுக்கொண்டன. அப்பொழுது ஆமை ‘எனக்கு ஆயிரம் புத்தி’ எப்படியாவது தப்பிக்கொள்வேன்’ என்று பெருமிதப்பட்டுக்கொண்டது. மீனும் ‘எனக்கு நூறு புத்தி. நானும் தப்பிக்கொள்வேன்’ என்று ஆமையின் பெருமிதத்தில் கலந்து கொண்டது. நண்டும் தனக்குப் புத்தி பத்து என்றும், அதனைப்பாவித்துத் தானும் ஆமையைப்போல், மீனைப்போல் வலையிலிருந்து தப்பிக்கொள்வேன் என்றது. இதனைக்கேட்ட தவளை மிகவும் துயரமடைந்தது. அது தன்னைப்படைத்ததாகக் கருதப்படும் கடவுளை எண்ணி ‘கடவுளே! ஆமைக்கு புத்தி ஆயிரம். மீனுக்கு நூறு. நண்டுக்குப் பத்து. எனக்கு மட்டும் ஏன் ஒன்று வைத்தாய். நான் எவ்விதம் இவ்விக்கட்டிலிருந்து தப்புவேன்’ என்று கேள்வி எழுப்பியது. ஆனால் நடந்ததோ வேறு.. ஆமையை, மீனை, நண்டினை எடுத்துக்கொண்ட மீனவர்கள் தவளையை மட்டும் போய்த்தொலை என்று விட்டு விட்டார்கள்.
மேற்படி நாட்டுப்பாடலில் வரும் நண்டு பற்றிய வரிகளை மட்டும் கவிஞர் பிரமிள் தவிர்த்துக்கொண்டார். ஏனென்று தெரியவில்லை. ஆனால் மேற்படி நாட்டுப்பாடல் வரிகளை உள்வாங்கி அவர் படைத்த தவளைக்கவிதை என்னும் உருவகம் அவரது கவித்துவத்தின், படைப்பாற்றலின் வெளிப்பாடு. படிமக் கவிஞரான பிரமிள் நாட்டுப்பாடலொன்றின் வரிகளைக்கொண்டு படைத்திட்ட இன்னுமொரு படிமம் தான் ‘தவளைக்கவிதை’. அப்படிமத்தினூடு வாசகர்கள் மனதினில் விரித்திட்ட இன்னுமொரு படிமம்தான் ‘கவிதைத்தவளை’.
ஆதார நூல்:
நவஜோதி யோகரட்னம் ‘மகரந்தச் சிதறல்’ [பக்கம் 162 / 163 ]