புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இந்தப்பத்திரிகை /சஞ்சிகையினை நடத்தியவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.
ஜோர்ஜ் இ.குருஷேவ் விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளை விமர்சித்து எழுதியவர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் ஆயுதபோராட்டம் முடிந்து, மெளனித்ததன் பின்பு ஆக்ரோஷமாக விமர்சித்து வருவதைப்போல் அல்லாமல் , விடுதலைப்புலிகளின் காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதியவர். அதேசமயம் தான் ஆசிரியராக, பதிப்பாளராகவிருந்து வெளியிட்ட தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் அனைத்து அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் இடம் கொடுத்தார். அவர்கள்தம் படைப்புகளைப் பிரசுரித்தார். தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது.
தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான ‘எழுக அதிமானுடா!’ தொகுப்பினை அச்சிட்ட அச்சியந்திரமும் அதுவே. அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) )சுமார் ஐந்து வருடங்கள் வரையில் ‘தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.
தாயகம் (கனடா) பத்திரிகை /சஞ்சிகையின் 50 இதழ்களைப் ‘படிப்பகம்’ (http://padippakam.com ) இணையத்தளத்தில் வாசிக்கலாம். தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையிலேயே கவிஞர் கந்தவனம் அவர்களின் மணிக்கவிதைகள்’ முதலில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் கலாமோகன் தாயகத்தில் தன் சொந்தப்பெயரிலும், புனைபெயர்களிலும் நிறைய படைப்புகளை எழுதியிருக்கின்றார். ஜெயந்தீசனின் குட்டிக்கதைகள் வெளிவந்த காலகட்டத்தில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றவை. கலாமோகனே ஜெயந்தீசன் என்பதைச் சில வருடங்களின் முன்னரே அறிந்துகொண்டேன். கலாமோகனின் மொழிபெயர்புப்படைப்புகளும் வெளியாகியுள்ளன.
தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் எழுத்தாளர்கள் பலரின் பல்வகைப்படைப்புகள் நூற்றுக்கணக்கில் வெளியாகியுள்ளன. தாயகம் (கனடா) வெளிவந்த காலகட்டத்தில் அது இங்கு வெளியாகும் ஏனைய பத்திரிகைகளைப்போல் இலவசமாக வழங்கப்படவில்லை. காசு கொடுத்து வாங்கிப்படிக்குமொரு பத்திரிகை / சஞ்சிகையாகவே வெளியானதென்பதும் , அதுவும் சுமார் ஐந்து வருடங்கள் வரையில் வெளியானதென்பதும் குறிப்பிடத்தக்கது. தாயகம் (கனடா) சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தில் அதனைக் காசு கொடுத்து வாங்கிப்படிப்பதெற்கென்று நூற்றுக்கணக்கான வாசகர்களிருந்தார்கள். படைப்பாளிகளிருந்தார்கள்.
தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் வெளியான எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி என் நினைவிலுள்ளவற்றின் அடிப்படையில் இங்கு சிறிது கூறலாமென்று நினைக்கின்றேன். தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையின் பிரதிகள் அனைத்தும் ஆசிரியர் ஜோர்ஜ்.இ.குருஷேவிடமிருக்குமென்று நினைக்கின்றேன். மீண்டுமொருமுறை அவற்றைப்பார்த்துவிட்டு தாயகம் (கனடா) பற்றி விரிவாக எழுதவேண்டுமென்று விருப்பமுள்ளது. இலக்கிய ஆய்வாளர்கள் , பட்டப்படிப்பு மாணவர்கள் தாயகம் (கனடா) பற்றி விரிவாக ஆய்வுகள் செய்வது மிகுந்த பயனுள்ளது.
தாயகம் (கனடா)வில் எழுத்தாளர்கள் அருள் சுப்ரமணியம், மாத்தளை சோமு (ஆஸ்திரேலியா), செழியன் (ஒரு போராளியின் நாட்குறிப்பு), வ.ந.கிரிதரன் (கணங்களும், குணங்களும், வன்னி மண், அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும், அமெரிக்கா, நவசீதா ஆகிய நாவல்கள்) தொடர்களாக வெளியாகியுள்ளன. வ.ந.கிரிதரனின் நாவலான 1983 (83 இனக்கலவரத்தை மையமாகக்கொண்டது) தொடராக வெளிவந்து முற்றுபெறாமலேயே நின்று போனது. ‘காலம்’ செல்வம் எழுதிய நாடகமொன்றும் தொடராக வெளியாகியுள்ளதாக ஞாபகம். கடல்புத்திரனின் ‘வேலிகள்’ ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவல்களும் , சிறுகதைகளும் ‘தாயகம்’ சஞ்சிகையில் வெளியாகின. அமரர் உமாகாந்தனின் உலக அரசியல் பற்றிய கட்டுரைகள் தொடராக வெளிவந்துள்ளன. எழுத்தாளர் ஆனந்த பிரசாத்தின் ‘ஆடலுடன் பாடல்’ என்னும் இசைக்கலை பற்றிய பத்தியெழுத்து , சின்னத்தம்பி வேலாயுதம் அவர்களின் ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாறு பற்றிய ‘ஈழம் ஒரு தொடர்கதை’ தொடர், ‘அசை’ என்னும் சிவதாசனின் பத்தி (இதன் காரணமாகவே சிவதாசன் பின்னர் ‘அசை’ சிவதாசன் என்று அழைக்கப்பட்டார்.) , வ.ந.கிரிதரனின் ‘மரபும், கவிதையும்’ பற்றிய தொடர்,,. இவ்விதம் பலரின் பத்தி எழுத்துகளுட்படப் பல படைப்புகள் தாயகம் (கனடா) வெளிவந்த காலகட்டத்தில் அதில் வெளியாகியுள்ளன. நேசனின் மொழிபெயர்ப்பில் ஜீன் போல் சார்த்தரின் ‘கறை படிந்த கைகள்’ என்னும் நாடக மொழிபெயர்ப்பும் தொடராக வெளிவந்தது ஞாபகத்திலுள்ளது. வசந்த திசாநாயக், பற்றிக் பெர்னான்டோ, சரத் த சில்வா, ரஞ்சித் குமார ஆகியோர் சிங்களத்தில் எழுதிய ‘ஜே.வி.பி.யின் வரலாற்றுக்கதை’யினை செ;லோகநாதன் மொழிபெயர்ப்பில் ‘தாயகம்’ (கனடா)’ வெளியிட்டுள்ளது. பேராசிரியர் சிவசேகரத்தின் கட்டுரைகளும் அக்காலகட்டத்தில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.
தாயகம் (கனடா)வில் அதிக அளவில் சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. வ.ந.கிரிதரனின் சிறுகதைகள் பல (மணிவாணன் என்னும் பெயரிலும், வ.ந.கிரிதரன் என்னும் பெயரிலும்) வெளியாகியுள்ளன. சுமதி ரூபன், மொனிக்கா, கனடா மூர்த்தி, சுகன், சிவதாசன், ஜோர்ஜ் இ.குருஷேவ் , பவான், பாலசுந்தரன், இணுவையூர் ஞா.வடிவேலனார் எனப் பலரின் சிறுகதைகள் தாயகத்தில் வெளியாகியுள்ளன. தாயகம் (கனடா)வில் பவான் எழுதிய ‘முகமில்லாத மனிதர்கள்’ சிறுகதை எஸ்.பொ / இந்திரா பார்த்தசாரதி தொகுத்து வெளியிட்ட ‘பனியும், பனையும்’ தொகுப்பில் வெளியாகி, எழுத்தாளர் சுஜாதாவால் சிலாகிக்கப்பட்டதும் நினைவுக்கு வருகின்றது. எழுத்தாளர் பவான் யார் என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் அதற்கான பதில் கிடைக்கவில்லை. உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் அறியத்தரவும். இணுவையூர் ஞா. வடிவேலனாரின் ஆக்கங்கள் பல தாயகம் (கனடா)வில் வெளியாகியுள்ளன. தாயகம் ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவ்வின் சிறுகதையொன்றும் ‘பனியும், பனையும்’ தொகுப்பில் வெளியாகியுள்ளது. ‘தாயகம்’ (கனடா)வில் ஜோர்ஹ்.இ.குருஷேவ் எழுதிய ‘கொலைபேசி’ மிகுந்த வாதப்பிரதிவாதங்களை உருவாக்கிய சிறுகதை.
தாயகம் (கனடா)வில் நூற்றுக்கணக்கில் கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன. கவிஞர் பா.அ.ஜெயகரன், கெளரி, வ.ந.கிரிதரன், அ.கந்தசாமி, மலையன்பன் (‘உதயன்’ ஆசிரியர் லோகேந்திரலிங்கம். இவர் ‘தாயகம்’ சஞ்சிகையில் பல்வேறு புனைபெயர்களில் எழுதினார்.), ரதன்,, ராவுத்தர்,, மொனிக்கா, சுமதி ரூபன், நிவேதிகா, க.கலாமோகன், நந்தன், தினேஷ்குமார் ,நிலா குகதாசன், அருண், சி.கிருஷ்ணராஜா என்று பலர் கவிதைகள் எழுதியிருக்கின்றார்கள். இப்பட்டியலைபூர்த்தி செய்ய உங்கள் ஞாபகத்திலுள்ள தாயகம் (கனடா) கவிஞர்களைப்பற்றிய விபரங்களை அறியத்தாருங்கள். கவிதைகளைத் ‘தாயகம்’ ‘புதுக்க விதை’ என்னும் தலைப்பில் வெளியிட்டு வந்தார்கள். நல்லதொரு தலைப்பு. புதுக்கவிதைகள் , புதுக்க விதைத்த கவிதைகள் என்று ஒரு கல்லில் இரு மாங்காய்கள்.
க.கலாமோகன் பிரெஞ்சுப்படைப்புகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார்.
உதாரணத்துக்குக் கலாமோகனின் கவிதையொன்று:
கவிதை: புகலிடம்
– க. கலாமோகன் –
ஒரு சிறைச்சாலையிலிருந்து தப்பி
இன்னொரு பெரிய
சிறைச்சாலைக்குள் நான்
சிக்குப்பட்டு விட்டேன்.
வ.ந.கிரிதரனின் ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு தொடராகத் தாயகம் (கனடா)வில் வெளியானது. அத்துடன் வ.ந.கிரிதரனின் ‘வளர்முக நாடுகளின் குடிமனைப்பிரச்ச்னை’ பற்றிய கட்டுரைத்தொடரும் தாயகம் (கனடா)வில் வெளியாகியுள்ளது.
இன்னுமொரு விடயத்தையும் நிச்சயம் குறிப்பிட வேண்டும். கனடா மூர்த்தி என்று அறியப்பட்ட எழுத்தாளர் நாராயணமூர்த்தி ஓவியரும் கூட. இவரது ஓவியத்துடன் வ.ந.கிரிதரனின் ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’ நாவல் வெளிவந்துள்ளது. அத்துடன் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் வெளியான ‘முனிவர் கேள்வி பதில்கள்’ வெளிவந்த காலத்தில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றவை. அந்த ‘முனிவர்’ வேறு யாருமல்லர் கனடா மூர்த்தியே.
தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான கடைசிப்பக்கமான க(ல்)லாநிதி கியூறியஸ் ஜி யின் பக்கமும் (ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவே க(ல்)லாநிதி கியூறியஸ் ஜி ) அங்கதச்சுவைமிக்க பத்தியாக வெளிவந்து அனைவரது கவனத்தையும் பெற்றதொரு பகுதி.
தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் வெளியான படைப்புகள் பற்றிய அனைத்து விபரங்களும் முதலில் ஆவணப்படுத்தப்பட்டு, முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். தனி மனிதனாக வாராவாரம் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினை வடிவமைப்பு, தட்டச்சு, வெளியீடு, அச்சமைப்பு என அனைத்தையும் தான் ஒருவரே தனியாகப்பொறுப்பெடுத்து, சக எழுத்தாளர்களின் ஆக்கப்பங்களிப்புகளுடன் அவ்விதழினை வெளியிட்டு வந்திருப்பதே பாராட்டுக்குரியது மட்டுமல்ல வியப்புக்குரியதும்தான்.
‘படிப்பகம்’ இணையத்தளத்தில் (http://padippakam.com/ ) ‘தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையின் ஐம்பது பிரதிகளை வாசிக்கலாம். புகலிடத்தமிழர்களால் வெளியிடப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. தாயகம் (கனடா)வில் எழுதிய பலர் இன்று பல்துறைகளில் அறியப்பட்டவர்களாகவிருக்கின்றார்கள். ‘காலம்’ செல்வம் அருளானந்தம் கூடத் தாயகம் (கனடா)வில் எழுதியவர்தான். இதுவரை வெளியான ‘காலம்’ இதழ்களில் ஒன்றிலாவது தாயகம் (கனடா) பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரை அல்லது கனடாத் தமிழ் இலக்கியத்தில் ‘தாயகம்’ சஞ்சிகையின் பங்களிப்பு பற்றிய சிறு குறிப்பு ஏதாவது வெளியாகியுள்ளதா என்பதை நான் அறியேன். அவ்விதம் வெளியாகியிருந்தால் அறியத்தாருங்கள்.
ngiri2704@rogers.com