ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்
23-ம் அத்தியாயம்: பத்மா – ஸ்ரீதர் திருமணம்!
தான் குருடாகிவிட்டது தனக்குப் பெருங் குறைதான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அதற்காகத் தன்னை நேசித்தவர்கள் தன்னை வெறுத்தொதுக்குவார்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே ஸ்ரீதருக்கு ஏற்பட்டதில்லை. “நான் நேசித்த ஒருவருக்கு இவ்வித இடர்ப்பாடு ஏற்பட்டிருக்குமேல், எவ்விதம் நடந்து கொள்ளுவேன்?” என்று அவன் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மையேயாயினும் அவ்விதம் அவன் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு அவன் அளித்திருக்கக் கூடிய பதில் பின் வருமாறே அமைந்திருக்கும், “பாவம், கண்ணை இழந்துவிட்டாள் அவன், இந்த நேரத்தில் தான் எனது அன்பு அவனுக்கு அதிகமாகத் தேவை. ஆகவே தான் அவனுக்கு முன்னிலும் அதிகமாக அதை அள்ளி வழங்குவேன்.” ஆம், நிச்சயமாக ஸ்ரீதர் இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் என்பதோடு அவ்வாறே நடந்துமிருப்பான். இப்படிப்பட்ட அவன் தன் ஒளி மங்கிய நிலையிலே, பத்மாவின் அன்பு தன் மீது முன்னிலும் பார்க்கப் பன்மடங்கு அதிகமாகச் சுரக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லையல்லவா?
இன்னும் ஸ்ரீதர் கண்களை இழந்ததற்குப் பதிலாக, பத்மா கண்களை இழந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஸ்ரீதர் பதைபதைத்திருப்பான். இரவும் பகலும் பத்மாவுக்காக உருகி இருப்பான். அவள் மீது அவனுக்கு ஏற்கனவே இருந்த மாறாக் காதல் அழியாத நிரந்தரக் காதலாக, சிரஞ்சீவிக் காதலாக வளர்ச்சியடைந்திருக்கும். அந்தக் காதலின் அரவணைப்பிலே பத்மாவின் உள்ளம் தன் துன்பத்தை மறந்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்திருக்கும்.
ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் ஏதாவதொன்றை நம்பினால் அந்த நம்பிக்கையை ஐயங்களும் அச்சங்களும் அரிப்பதற்கு அவன் விடுவதேயில்லை. கள்ளங்கபடமற்ற அவனது மனதின் இயற்கையான ஒரு போக்காக இது அமைந்துவிட்டது. அதனாலேயே பத்மாவுடன் தான் காதல் புரியத் தொடங்கிய போது கூட அதைத் தனது தந்தை சிவநேசர் ஒரு வேளை எதிர்க்கக் கூடும் என்ற அச்சம் அவனுக்கு ஏற்படவில்லை. சரியான காரியங்களை யாரும் எதற்காக எதிர்க்கப் போகிறார்கள் என்பதே அவ்னது எண்னம். அதனால்தான் அவனிடம் சுரேஷ் “அப்பா உன் திருமணத்தை ஆட்சேபிக்கக் கூடும்” என்று எடுத்துரைத்த போது கூட “உனக்கு எனது அப்பாவைப் பற்றித் தெரியாது.” என்று பதிலளித்தான் அவன். இன்னும் தாய் பாக்கியம் “நீ கண் பார்வை இழந்திருப்பதால் பத்மா உன்னை நிராகரிக்கக் கூடும்.” என்ற போதும் இதே போன்ற ஒரு பதிலை அவன் அளித்ததும் அதனால்தான். “அம்மா உனக்குப் பத்மாவைப் பற்றித் தெரியாது. அதனால் தான் இப்படிப் பேசுகிறாய்.” என்று தீர்ப்பளித்தாள் அவள்.
இன்னும் அவன் கருத்திலே “பத்மா மிகவும் நல்லவள்.” இவ்வசனத்தை அவன் தனது தாய் பாக்கியத்துக்கும் ஏன் தந்தையார் சிவநேசருக்கும் கூடக் கூறியிருக்கிறான். ஆகவே நல்லவளான பத்மா, நளாயினி போன்ற பத்மா தன்னை நிராகரிக்கக் கூடும் என்ற நினைவுக்கே அவள் நெஞ்சில் இடமில்லாது போயிற்று. அதன் காரணமாக கொழும்பிலிருந்து சீக்கிரமே நல்ல செய்தி வரும் என்றும், ஓரிரு வாரங்களிலேயே தனது திருமண நாள் குறிக்கப் பட்டுவிடும் என்றும் எண்ணினான் அவன்.
ஆனால் தாய் பாக்கியம் ‘கிஷ்கிந்தா’விலிருந்து அவனோடு டெலிபோனில் பேசும் போது பத்மாவின் தந்தையார் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறி, அதனால் விஷயங்கள் சற்றுத் தாமதமாகலாம் என்று குறிப்பிட்டிருந்தாள். இது அவனுக்குச் சிறிது ஏமாற்றத்தை உண்டு பண்ணியதானாலும் “என்ன செய்வது” என்று பொறுத்துக் கொண்டாள். தாயிடம் பரமானந்தருக்கு என்ன நோய் என்று அவன் கேட்டதும் அவளுக்கு அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக “இருதய நோய், சிறிது கடுமையாகத் தானிருக்கிறது” என்று சொல்லி வைத்தாள்.
ஸ்ரீதரை இடையிடையே ஞாபகப்படுத்திக் கொண்டவர்களில் நன்னித்தம்பியரின் முதலாம் வகுப்புப் பட்டதாரி மகள் சுசீலா ஒருத்தி. பத்மாவைப் பெண் பார்க்கப் போன சிவநேசருடனும் பாக்கியத்துடனும் தந்தையார் நன்னித்தம்பி சென்றிருந்ததால் ஸ்ரீதரைப் பற்றித் தாயார் செல்லம்மாவுடன் அடிக்கடி பேசுவதற்கு அவளுக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
காலையில் தாயும் மகனும் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாய் போட்டு, அதில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, சுசீலா தாயிடம் “பாவம் அந்த ஸ்ரீதர், சீக்கிரமே அவருக்குக் கல்யாணம் நடக்குமல்லவா?” என்றாள்.
“ஓமென்றுதான் நினைக்கிறேன். கல்யாணத்திற்காக ஒன்றிரண்டு நாள் நாம் ‘அமராவதி’யில் போய்த் தங்கும்படி கூட நேரிடலாம். ஆனால் பாக்கியமிருக்கிறாரே. அந்த மனுஷிக்காக நான் எதுவும் செய்வேன்.” என்றாள் தாய்.
சுசீலா “அம்மா, இப்பொழுது ஸ்ரீதர் அந்தப் பெரிய வீட்டில் தனியாகவல்லவா இருக்கிறார்? எப்படி அவர் தனியாய் இருப்பாரோ எனக்குத் தெரியாது. எனக்கென்றால் பயமேற்பட்டுவிடும். வா அம்மா, நாங்கள் ‘அமராவதி’க்குப் போய் ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு வருவோம். கண் பார்வை இழந்தாவருக்கு நாங்கள் போவது ஒரு தெம்பாகவிருக்கும்” என்றாள்.
அதற்குச் செல்லம்மா ‘ஸ்ரீதர் தனியாக இல்லை. பாரதியாரும், பிள்ளைகளும் அங்கே இருக்கிறார்கள். என்றாலும் வா, போய் விட்டு வருவோம். ஆனால் ஒன்று. ஸ்ரீதரைப் பார்த்து விட்டு நீ அன்றைக்குப் போல் மீண்டும் அழுதுவிடக் கூடாது. தெரிகிறதா?” என்றாள்.
“போ அம்மா, நான் என்ன குழந்தைப் பிள்ளையா அழுவதற்கு? இப்பொழுது நான் முன் போலில்லை. எனக்கு இப்பொழுது முன்னிலும் பார்க்க மனத் திடம் எவ்வளவோ அதிகம்” என்றாள் சுசீலா.
அவர்களிருவரும் ‘அமராவதி’க்குப் போன போது அதன் பெரிய இரும்புக் கேட்டுகள் மூடப்பட்டுக் கிடந்தன. பக்கத்திலிருந்த சிறு கதவு மட்டும் திறந்திருந்தது. மாளிகைக் காவலாளி அவர்களைக் கண்டதும் “என்னம்மா எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டாள். “தம்பி ஸ்ரீதர் தனியாக இருக்கிறாரல்லவா? சும்மா பார்த்துப் பேசிவிட்டு போக வந்தோம்.” என்றாள் செல்லம்மா. “சரி அம்மா போங்கள்” என்று அவர்களுக்கு வழி காட்டினான் அவன். நன்னித்தம்பியர் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் ‘அமராவதி’ வளவுக்கு வந்து போவதற்கு எப்பொழுதுமே எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை.
சுசீலாவும் தாயும் வழியிலே இருந்த பெரிய வெள்ளை ஜம்பு மரத்தைத் தாண்டி மாளிகையை நோக்கி நடந்தார்கள். ஜம்புக் காய்கள் ஒன்றிரண்டு கீழே விழுந்து கிடந்தன. அவற்றிலொன்றை எடுத்து வாயால் கடித்துச் சாப்பிட்ட வண்ணமே மாளிகையை நோக்கி நடந்தாள் சுசீலா. தாய் செல்லம்மாவோ தனக்கு ஜம்புக்காய் பிடிக்காது என்று கூறிவிட்டாள். ஜம்புக்காய் தனக்கு வயிற்றுவலியை உண்டாக்கும் என்பது அனுபவத்தால் அவளுக்கு ஏற்பட்ட நம்பிக்கை.
சுசீலாவும் தாயும் மாளிகையைச் சமீபிக்க மோகனாவின் குரல் காற்றிலே மிதந்து வந்தது. “பத்மா, பத்மா” என்ற அதன் மழலைக் கூச்சல் தாயையும் மகளையும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து வேப்ப மரத்தின் கீழே மாங்கொட்டை போட்டு விளையாடிக் கொண்டிருந்த சின்னைய பாரதியின் குழந்தைகளின் கூச்சலும் அவர்கள் காதுகளைத் துளைத்தது. சின்னக் குழந்தை லட்சுமியோ தன்னைப் பெரிய பிள்ளகள் தமது விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாததால் சிணுங்கிச் சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அதைக் கண்ட சுசீலா “பாவம்” என்று சொல்லிக் கொண்டே குழந்தையை ஓடிப் போய்த் தூக்கிக் கொண்டு “ஏன் அழுகிறாய், பாப்பா?” என்று கேட்டாள். தாய் செல்லம்மா, “குழந்தையைக் கீழே விடு. சேலை ஊத்தையாகிறதல்லவா?” என்று சொன்னாள். சுசீலாவோ அதைப் பொருட்படுத்தவில்லை. குழந்தைக்குக் கிச்சு கிச்சுக் காட்டினாள். செக்கச் செவேலென்று குண்டாயிருந்த குழந்தை சிரித்து விளையாட ஆரம்பித்தது. சுசீலாவின் பின்னலைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேனென்றது. சுசீலா “பின்னலை விடு. இல்லாவிட்டால் அடிப்பேன்.” என்று பயமுறுத்தினான். குழந்தை அப்பொழுதும் விடவில்லை. “விடு தங்கச்சி விடு” என்று மீண்டும் சப்தமிட்டாள் சுசீலா. அவ்வாறு கூறிக் கொண்டே கையிலிருந்த ஜம்புக்காயை அதற்கு உண்ணக் கொடுத்தாள்.
அப்பொழுது விறாந்தையில் ஒரு சலனம் ஏற்பட்டது. அங்கே நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதர் எழுந்து நின்று கொண்டு முக மலர்ச்சியோடு, “யாரது? பத்மாவல்லவா? அம்மா, பத்மாவை நீ அழைத்துக் கொண்டு வந்து விட்டாயா? ஏனம்மா நீ எனக்கு இதை டெலிபோனில் அறிவிக்கவில்லை.” என்று கேட்டான்.
சுசீலாவும் தாயும் குழப்பமடைந்தனர். அவன் பேசியதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஸ்ரீதருக்கு பத்மா மீது அவன் கொண்ட எல்லை மீறிய காதலின் காரணமாகப் பைத்தியம் தான் பிடித்துவிட்டதோ என்ற சந்தேகம் கூட அவர்களுக்கு ஏற்பட்டது. என்றாலும் இது என்ன விஷயம் என்றறிய விரும்பிய செல்லம்மா “பத்மாவா? பத்மா இங்கில்லையே. நானும் சுசீலாவுமல்லவா இங்கிருக்கிறோம்.” என்றாள்.
“ஆ. பொய் சொல்ல வேண்டாம். இப்போது தானே பத்மா பேசினாள்?” என்றாள் ஸ்ரீதர்.
அதற்குச் சுசீலா பதிலளித்தாள்:
“இல்லையே, இங்கு பேசியது ஒன்றில் அம்மா. அல்லது நான்” என்று சுசீலா கூறவே ஸ்ரீதர் கல கலவென்று நகைத்துக் கொண்டு “என்னை ஏமாற்ற வேண்டாம் பத்மா. நான் ஏமாற மாட்டேன். நீ பத்மா தான். உன் குரலை நான் மறந்துவிடவில்லை. என் கண்கள் குருடுதானே என்று நீ இப்படி வேடிக்கை செய்கிறாய். ஆனால் இந்த வேடிக்கை எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை பத்மா.” என்றான்.
இப்பொழுது செல்லம்மாவுக்கும் சுசீலாவுக்கும் பளிச்சென்று ஓர் ஐயமேற்பட்டது. ஒரு வேளை சுசீலாவின் குரல் பத்மாவின் குரல் போலிருக்கிறதோ என்பதே அது. அது தான் அவன் சுசீலாவின் குரல் பத்மாவின் குரலாக எண்ணிக் கொண்டு இப்படிப் பேசுகிறான். இந்தக் குழறுபடி மேலும் நீடிப்பது நல்ல நல்ல என்றெண்ணிய செல்லம்மா ஸ்ரீதரிடம், “தம்பி, நீ நினைப்பது தவறு. அம்மா இன்னும் கொழும்பிலிருந்து வரவில்லை. நாளைக் காலை அவர்கள் வரக் கூடும். இதற்கிடையில் நீ தனியாய் இருக்கிறாய். போய்ப் பார்த்துவிட்டு வருவோம் என்று சுசீலாவும் நானும் உன்னைப் பார்க்க வந்தோம்” என்றாள்.
ஸ்ரீதரின் நிலை எக்கச்சக்கமாகிவிட்டது. செல்லம்மா கூறியது உண்மையே என்பது அவனுக்குத் தெரிந்து விட்டது. ஆம். சுசீலாவின் குரல்தான் பத்மாவின் குரல் போல அவனுக்குக் கேட்டிருக்கிறது. உண்மையில் அவர்கள் அவனை ஏமாற்ற முயலவில்லை. தன் காதுதான் தன்னை ஏமாற்றிவிட்டது. இதை நினைத்ததும் அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. என்றாலும், “என்ன ஆச்சரியம், பத்மாவுக்கும் சுசீலாவுக்கும் எத்தகைய குரலொற்றுமை” என்று அதிசயித்தான் அவன்.
பின்னர், ஒருவாறு நிலைமையைச் சமாளித்துக் கொண்டு, வேலைக்காரர்களை அழைப்பித்து செல்லம்மாவுக்கும் சுசீலாவுக்கும் குளிர்பானங்களைக் கொடுக்கும்படி செய்வித்தான். அதன்பின் இசைத்தட்டு சங்கீதத்தை அவர்களோடு உட்கார்ந்து கேட்டான். சுசீலாவோ, பாதியில் குழந்தை லட்சுமியை அழைத்துக் கொண்டு ‘அமராவதி’ வளவைச் சுற்றிப் பார்க்கப் போய் விட்டாள். அங்கே அவள் மானோடும் மயிலோடும் சிறிது நேரம் விளையாடினாள். பின்னர் தோட்டத்துத் தடாகத்தில் தாமரைப் பூக்களிடையே நீந்தி விளையாடிய மீன்களை லட்சுமிக்கு வேடிக்கை காண்பித்தாள். இவ்வாறு சிறிது நேரத்தைக் கழிந்த பின்னர் தாயும் மகளும் வீடு திரும்பினார்கள். வழியிலே சுசீலா செல்லம்மாவிடம், ‘அப்பா எப்பொழுதம்மா கொழும்பிலிருந்து வீடு திரும்புவார்.” என்று கேட்டாள். “யாருக்குத் தெரியும்? இருந்தாலும் அநேகமாக நாளை திரும்பலாம்” என்று பதிலளித்தாள் தாய்.
செல்லம்மா கூறியவாறே நன்னித்தம்பியர் சிவநேசருடனும் பாக்கியத்தோடும் அடுத்த நாள் யாழ்ப்பாணம் மீண்டார். கொழும்பிலிருந்து வருபவர்கள் ‘அமராவதி’யை அடையுமுன்னர் நன்னித்தம்பியர் வீட்டைக் கடந்தே செல்ல வேண்டும். அவ்வாறு கடக்கும் கட்டத்துக்குச் சிவநேசரின் கார் வந்ததும் நன்னித்தம்பி “ஐயா எங்கள் வீட்டில் இறங்கித் தாகசாந்தி செய்து செல்ல வேண்டும்.” என்று சிவநேசரைத் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். “சரி” என்று சம்மதித்த சிவநேசர் காரோட்டியிடம் காரை நிறுத்தும்படி கட்டளையிட்டார்.
சிவநேசர் அவ்வாறு நன்னித்தம்பியின் கோரிக்கைக்கு எவ்வித பதிலுமின்றிச் சம்மதித்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. பாக்கியமும் அவரும் நன்னித்தம்பியரும் கஞ்சா நல்லையாவுமாகச் சேர்ந்து, பரமானந்தர் சுகவீனமாக இருப்பதால் பத்மாவின் திருமணத்தை இன்னும் ஓரிரு மாதங்களுக்கு நடந்த முயலாத நிலை தோன்றியிருப்பதாக ஸ்ரீதரிடம் சொல்லுவதற்கு முடிவு செய்திருந்தார்கள். இருந்தாலும் இவ்வாறு மனமறிந்த படு பொய்யைத் தமது அன்பு மகனுக்குக் கூறுவதில் அவருக்குத் திருப்தியில்லை. இவ்விஷயம் அவர் மனத்தையும், ஏன் பாக்கியத்தின் மனதையும் கூடப் பெரிதும் குடைந்து கொண்டேயிருந்தது. ஆகவே அவர்கள் நெஞ்சம் ‘அமராவதி’க்குப் போய் அங்கே ஸ்ரீதரை நேரில் பார்ப்பதற்கே கூசியது. இப்படிப்பட்ட நேரங்களில் விஷயங்களைத் தள்ளிப்போட முயல்வது பலரது வழக்கம். நன்னித்தம்பியர் வீட்டில் சிறிது நேரம் தங்கிச் செல்வது தாம் விரும்பாத விஷயத்தை மேலும் சிறிது தாமதிக்க உதவக் கூடுமல்லவா?
சிவநேசரின் கார் வீட்டு வாசலில் நின்றதும் சுசீலா துள்ளிக் குதித்து ஓடி வந்து விஷயம் என்னவென்று பார்த்தாள். “அம்மா, அப்பா வந்துவிட்டார்” என்று அங்கிருந்தபடி தாய்க்குக் குரல் கொடுத்தாள் அவள். காரோட்டி சுப்பிரமணியம் காரிலிருந்து இறங்கிக் கார்க் கதவைத் திறந்தான். பாக்கியமும் சிவநேசரும் ஒருவர் பின்னொருவராக இறங்கினார்கள். நன்னித்தம்பியர் முன்னாற் சென்று விறாந்தையில் அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகளை இழுத்து வைத்தார். செல்லம்மாவும் சுசீலாவும் சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றார்கள். ஆனால் வீட்டின் காவல் நாயான வைரவப்பிள்ளை மட்டும் விருந்தினர் வருகையை ஆட்சேபிப்பது போல் குலைக்க ஆரம்பித்தது. “வைரவப்பிள்ளை, பேசாமலிரு.” சுசீலா, நாயை அதட்டினாள்.
“வைரவப்பிள்ளையா? யாரது?” என்றார் சிவநேசர். “அது எங்கள் நாயின் பெயர்.” என்றார் நன்னித்தம்பியர். அசாதாரணமான அந்தப் பெயரைக் கேட்டதும் இலகுவில் சிரிக்காத சிவநேசர் முகத்தில் கூட புன்னகை பூத்துவிட்டது. “அது சுசீலா வைத்த பெயர்.” என்றாள் செல்லம்மா. அதைக் கேட்ட பாக்கியம் சுசீலாவின் முகத்தைப் பார்த்துப் புன்னகை செய்தாள். சுசீலாவோ நாணத்தால் அங்கிருந்து விரைவாக நழுவி விட்டாள். மனத்தில் பெரிய பாசம் இருந்த போதிலும் இச்சிறிய சம்பவம் எல்லோர் மனதிலும் ஒரு வித கலகலப்பை ஏற்படுத்தவே செய்தது. சுசீலாவின் அதட்டலைக் கேட்டு வைரவப்பிள்ளையும் அடங்கிவிட்டது. மெல்லச் சிவநேசர் பக்கம் சென்று வாலைக் குழைத்துக் கொண்டு நின்றது. செல்லம்மா “சுசீலாவின் குரல் கேட்டால் போதும். நாயனார் உடனே அடங்கிவிடுவார்” என்று வேடிக்கையாகச் சொன்னாள். எல்லோரும் சிரித்தார்கள்.
நன்னித்தம்பியரின் வீடு இரண்டு மூன்று அறைகளுடன் கூடிய மிகச் சிறிய வீடேயானாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருந்தது. வீட்டைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள். அவற்றின் கீற்றுகளினூடே வீசிக் கொண்டிருந்த தென்றற் காற்று, வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய முல்லைச் செடியின் வாசத்தை வாரிக் கொணர்ந்து மூக்கிற் புகுத்தி, மனதில் ஓர் இன்பப் போதையை ஏற்றியது. இன்னும் வீட்டு விறாந்தைக்குச் சமீபமாக வரிசையாக நடப்பட்டிருந்த ரோஜாச் செடிகள் செழித்துப் பூத்திருந்த பென்னம் பெரிய ரோஜா மலர்களுடன் அழகுக் காட்சி நல்கின. எல்லாம் சுசீலாவின் கை வண்ணம். பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று வந்திருந்தும், இன்னும் வேலை எதுவும் கைக்குக் கிடைக்காததால் வீட்டை அழகுபடுத்தும் இத்தகைய பணிகளை ஒழுங்காகச் செய்து வந்தாள் அவள்.
பாக்கியமும் சிவநேசரும் அச்சிறிய இல்லத்தின் அழகிய தோற்றத்தை உள்ளூர மெச்சினார்கள்.
செல்லம்மா சிவநேசருக்கும் பாக்கியத்துக்கும் ஆட்டுப் பால் கலந்து கோப்பியை எவர்சில்வர் தம்ளர்களில் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்கள் அதை அருந்திய பின்னர் ஸ்ரீதரின் பிரச்சினையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
பாக்கியம் “என் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. ஸ்ரீதருக்கு என்ன சொல்லப் போகிறேன்?” என்ற கவலையோடு கூறினாள். “ஏன் என்ன விஷயம்?” என்றாள் செல்லம்மா. சுசீலாவோ பெரியவர்கள் பேச்சில் தான் கலந்து கொள்வது நல்லதல்ல என்று உள்ளே போய்விட்டாள். இருந்தாலும் உள்ளே இருந்தபடியே அவளால் ஒற்றுக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. அதிலும் கல்யாண விவகாரம், அதுவும் காதலோடு பின்னிய கல்யாண விவகாரமென்றால் யாருக்குத்தான் அதைப் பற்றி ஆறிய ஆசை ஏற்படாது? ஆகவே அக்கறையோடு ஒற்றுக் கேட்க ஆரம்பித்தாள் அவள்.
பாக்கியமும் நன்னித்தம்பியும் விஷயத்தை விளக்கினார்கள். “ஸ்ரீதர் உண்மையாக நேசிக்கும் பெண் அவள். அவளில்லாவிட்டால் தனக்கு வாழ்வில்லை என்று ஸ்ரீதர் நினைக்கிறான். மேலும் அவளை ஒழிய வேறொருத்தியை இந்த வாழ்க்கையில் திருமணம் செய்வதில்லை என்று தனக்குள் தானே சத்தியம் செய்து கொண்டிருக்கிறான் அவன். இன்னும் இவ்வுலகில் பத்மாவைப் போல் தன்னை வேறு யாரும் நேசிக்கவில்லை என்றும் அவன் நம்புகிறான். ஆனால் அப்படி அவன் ஆசையோடு காதலிக்கும் யுவதி அவனைக் குருடனென்று கூறிவிட்டாள். குருடனை மணமுடிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டாள். இதை நாம் எப்படி அவனுக்குச் சொல்வது? பத்மா தன்னைக் கை விட்டு விட்டாள் என்ற செய்தியை அவனால் தாங்க முடியுமா? ஸ்ரீதரால் அதைத் தாங்க முடியாது. நெஞ்சம் வெடித்துச் செத்து விடுவான். செல்லம்மா, நான் என்ன செய்வேன்?” என்று புலம்பினாள் பாக்கியம்.
சிவநேசர், “ஆம், நன்னித்தம்பி, பத்மா ஸ்ரீதரைக் கைவிட்ட செய்தியை நாம் அவனுக்குச் சொல்லவே கூடாது. அவனால் அதைத் தாங்க முடியாது. எங்கள் ஒரே மகன் அவன். ‘அமராவதி’யின் ஆசைக் கொழுந்து. இவ்விஷயத்தைக் கேட்டால் உள்ளம் வெதும்பிப் போய்விட மாட்டானா? அவன் எம்மைக் கண்டதும் நல்ல செய்தி கூறுவோமென்று எதிர்பார்ப்பான். அப்படிப்பட்டவனுக்கு நாம் எப்படி இந்த உண்மையைக் கூறுவது?” என்றார்.
சில விநாடி நேரம் ஒருவரும் ஒன்றும் பேசாது மெளனமாயிருந்தார்கள். பின் நன்னித்தம்பி பேசினார். “என்னைப் பொறுத்தவரையில் நான் ஏழை. அந்தஸ்தில் உங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் ஏற முடியாது. இல்லாவிட்டால் நிச்சயம் எனது மகள் சுசீலாவை ஸ்ரீதருக்கு நான் மணமுடித்துத் தருவேன். ஸ்ரீதருக்குக் கண்ணில்லாதது ஒன்றுதானே குறை? மற்றும் அழகில், அறிவில், படிப்பில், அந்தஸ்தில், செல்வத்தில், திடகாத்திரத்தில் எல்லாவற்றிலும் சிறந்தவர் உங்கள் மகன். அவருக்கு இணையான ஒரு வாலிபரை இம்முழு உலகத்திலுமே காண முடியாது.” என்றார்.
ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்த சுசீலாவின் உள்ளம் திக்கென்றது. ஸ்ரீதரைப் பத்மா நிராகரித்தாள் என்ற செய்தியைக் கேட்டு, “பாவம் ஸ்ரீதர்” என்று பதைபதைத்துப் போயிருந்த அவள், தன் பெயர் இழுக்கப்பட்டதும் மின்னலால் தாக்குண்டவள் போலானாள். “உண்மையில் ஸ்ரீதரில் ஒரு குறையுமே இல்லை.” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள். நன்னித்தம்பியர், கண் பார்வை குறைந்ததை ஒரு குறையாகக் குறிப்பிட்டது கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.
சிவநேசர் நன்னித்தம்பியின் பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டார். “நன்னித்தம்பி, நீ உண்மையாகவே இதைச் சொல்லுகிறாயா? அல்லது வெறும் ஒப்புக்குப் பேசுகிறாயா?” என்று கேட்டார்.
“சத்தியமாகச் சொல்லுகிறேன். ஆனால் இதைச் சொல்ல நான் எவ்வளவு அஞ்சுகிறேன் தெரியுமா? சேர் நமசிவாயத்தின் வழி வந்த உங்களுடன் நாம் சம்பந்தம் செய்வது பற்றிப் பேசும் போதே என்னுடம்பு நடுங்குகிறது.” என்றார் நன்னித்தம்பி. செல்லம்மா “இந்தப் பேச்சில் என்ன பிரயோசனம்? ஸ்ரீதர் இவ்வுலகில் ஒரே ஒரு பெண்ணையே விரும்புகிறான். அது பத்மா. அவன் ஒரு போதும் சுசீலாவையோ வேறு யாரையோ திருமணம் செய்யச் சம்மதிக்க மாட்டான்” என்றாள்.
சுசீலாவும் “ஆம் அது உண்மைதானே? அம்மா மிகவும் புத்திசாலி. படிக்காதவளாயிருந்தும் எவ்வளவு விவேகமாகச் சிந்திக்கிறாள்.” என்று நினைத்துக் கொண்டாள்.
சிவநேசர் சிறிது நேரம் மெளனமாயிருந்துவிட்டு “ஸ்ரீதருக்கு நாம் பத்மா அவனை நிராகரித்து விட்டாள் என்று சொல்லாமல் சுசீலாவைத் திருமணம் செய்து வைத்தால், சுசீலாவும் வாழ்க்கை பூராவும் தானே பத்மா என்று நடிக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமாகக் கூடிய காரியமா? இன்னும் அவள் தன்னை உண்மையாகக் காதலிப்பதாக நம்பிய பத்மாவே குருடனோடு தன்னால் வாழ முடியாது என்று கூறிவிட்டால். இந்நிலையில் வேறெந்தப் பெண் அவனுடன் வாழச் சம்மதிப்பாள்? சுசீலாவைப் பொறுத்தவரையில் அவள் ஸ்ரீதருடன் எப்பொழுதுமே பழகியதில்லை. ஆகவே அவனிடம் இத்தகைய தியாகத்தை நாம் எதிர்பார்க்க முடியுமா? சுசீலா அதற்குச் சம்மதிப்பாளா? நாடகத்தில் வாழ்க்கையை நடித்துக் காட்டுவது இலகுவானது. ஆனால் வாழ்க்கையையே நாடகமாக்கி நடித்துக் கொண்டிருப்பது மிக மிகக் கடினம். சுசீலா இதைச் செய்தால் எங்கள் குலம் தழைப்பது மட்டுமல்ல, பட்டுப் போன ஸ்ரீதரின் வாழ்வும் தளிர்க்கும். தான் காதலில் அடைந்த தோல்வியை அறியாமலே அவன் மகிழ்ச்சியோடு வாழ முடியும். ஆனால் எதற்கும் சுசீலாவும் சம்மதிக்க வேண்டுமே” என்றார்.
நன்னித்தம்பியர் “சுசீலாவைக் கூப்பிட்டுக் கேட்டுப் பார்ப்போம்.” என்றார்.
“வேண்டாம். எப்படி நாம் ஒரு பெண்ணிடம் குருடனைக் கட்டிக் கொள்வாயா என்று கேட்பது? நான் திருமணம் பேசிய கந்தப்பசேகரர் மகள் அவனைக் கைவிட்டாள். இப்பொழுது அவன் காதலித்த பெண்ணே கைவிட்டுவிட்டாள். இந்நிலையில் சுசீலாவிடம் நான் இக்கேள்வியைக் கேட்க மாட்டேன். இது நடக்கக் கூடியதல்ல.”
இவ்வாறு அவர் கூறி நிறுத்தியதுதான் தாமதம். சுசீலா திடீரென கதவடியில் தோன்றினாள். அவள் கண்கள் கண்ணீரால் குளமாயிருந்தன. ஒரு விநாடி ஒன்றும் பேசாது நின்றாள் அவள். எல்லோரும் அவள் திடீர் வரவைக் கண்டு திடுக்கிட்டார்கள். அவள் முகத்தை நோக்கினார்கள்.
பீறி வரும் உனர்ச்சிப் பெருக்கோடு, அவள் தந்தையார் நன்னித்தம்பியின் முகத்தை நோக்கித் தளதளத்த குரலில் “அப்பா, நீங்கள் இங்கே பேசியது முழுவதையும் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் ஸ்ரீதரைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயார். அவருடைய வாழ்க்கையில் விளக்கேற்றுவதற்காக நீங்கள் கூறிய விதம் பத்மாவாக மாறிவிடவும் தயார். இன்றிலிருந்து நீங்களும் என்னைப் பத்மாவென்றே அழையுங்கள்.” என்றாள்.
பாக்கியத்துக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தன் கணவர் சிவநேசரின் ஆலோசனையை அவன் ஏற்றுக் கொண்டு விட்டாளா? “சுசீலா, நீ உண்மையைத் தான் கூறுகிறாயா? ஸ்ரீதரைக் கல்யாணம் செய்யச் சம்மதிக்கிறாயா? என்னுடைய குருட்டுப் பிள்ளையைக் கட்ட நீ சம்மதிக்கிறாயா? உண்மைதானா சுசீலா, அல்லது விளையாடுகிறாயா? என் குருட்டு மகனுக்கு மணப்பெண்ணாக, எனக்கு மருமகளாக வர நீ உண்மையிலேயே விரும்புகிறாயா?” என்றாள் அவள்.
சுசீலா “ஸ்ரீதரை இப்படிக் குருடு, குருடு என்று நீங்களே சொல்லலாமா? அப்படிச் சொல்லாதீர்கள். அவரில் ஒரு குறையுமே எனக்குத் தெரியவில்லை. அவர் போல் அழகர், நல்லவர், அன்புள்ளம் படைத்தவர் யாருக்குக் கிடைப்பார்? நான் அவரைக் கல்யாணம் செய்ய முற்றிலும் சம்மதம்.” என்றாள்.
சிவநேசர் கண்கள் கலங்கின. பாக்கியம் எழுந்து அவனைத் தன் மார்போடணைத்துக் கொண்டாள். செல்லம்மாவை நோக்கி “இன்றிலிருந்து உன் மகள் என் மகளாகிவிட்டாள். ஸ்ரீதரை விட இவளைத்தான் என் பிள்ளை என்று நான் போற்றுவேன். இனிமேல் இவள் தான் அமராவதி.” என்றாள்.
சுசீலா சிரித்தாள். “ஸ்ரீதர் என் குரலைப் பத்மாவின் குரலென்று எண்ணுகிறார். நேற்று நடந்த விஷயத்தை அம்மாவிடம் கேளுங்கள்.” செல்லம்மா விஷயத்தைச் சொன்னாள். அதைக் கேட்ட பாக்கியம், “அப்படியானால் விஷயம் மிகச் சுலபமாகிவிட்டது.” என்றாள்.
சிறிது நேரத்தில் சிவநேசரும் பாக்கியமும் “அமராவதி”க்குப் போனதும் ஸ்ரீதர் பாக்கியத்திடம் “அம்மா விஷயம் என்னவாயிற்று?” என்று ஆவலோடு கேட்டாள்.
“என்ன ஆவது? அடுத்த வாரம் உனக்கும் பத்மாவுக்கும் திருமணம்.” என்றாள் பாக்கியம்.
“அப்படியானால் உனக்குப் பத்மாவைப் பிடித்திருக்கிறதென்று சொல்லு. அதுதான் நான் முன்னரே சொல்லியிருக்கிறேனே – பத்மா மிகவும் நல்லவள் என்று. நீ நம்பமாட்டேன் என்றாய். இப்போது என்ன சொல்லுகிறாய்? பத்மா நல்லவள்தானே? நான் சொன்னதில் தவறில்லையல்லவா?”
“ஆம் ஸ்ரீதர். பத்மா மிகவும் நல்லவள்.”
இதைக் கேட்ட ஸ்ரீதரின் மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது. அப்பா என் திருமணத்தை முதலில் எதிர்த்த போதிலும் இப்பொழுது அவரே முன்னின்று எல்லாவற்றையும் செய்துவிட்டார். உனக்கும் அவருக்கும் நான் என்ன கைமாறு செய்வேன் அம்மா?” என்றான் அவன். ஸ்ரீதரின் ஆனந்தம். உண்மையில் அர்த்தமில்லாத ஓர் ஆனந்தம் – அது பொய்மையில் பிறந்த ஏமாளியின் ஆனந்தம் என்பதை நினைத்ததும் பாக்கியத்தின் மனம் துன்பப்படவே செய்தது. இருந்தாலும் என்ன செய்வது? அவள் தனக்குள்ளேயாவது இன்பத்துடன் வாழ்வதற்கு இதை விட வேறு வழி என்ன? இந்த வழியும் தோன்றியிருக்கா விட்டால், “பத்மா உன்னைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டாள்.” என்று அவனுக்குச் சொல்லும் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன விபரீதம் நடந்திருக்குமோ, தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருப்பானோ அல்லது பைத்தியமே பிடித்திருக்குமோ – யாருக்குத் தெரியும்? இவ்வாறு எண்ணித் தனது உள்ளத்தைத் தேற்றிக் கொண்டாள் பாக்கியம்.
கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிப் பாக்கியம் ஸ்ரீதருக்குப் பின் வருமாறு விவரித்தாள்:
“பத்மாவின் அப்பாவுக்குக் கடுமையான இருதய நோய். அவரைப் படுக்கையிலிருந்து எழக் கூடாது என்று டாக்டர்கள் தடை செய்திருக்கிறார்கள். அதனால் அவரால் இங்கு வர முடியாது. இருந்தாலும் பத்மாவை உடனே யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்று திருமணத்தை நடத்திவிடுங்கள் என்று கூறிவிட்டார் அவர். அந்த ஏற்பாட்டின் படி இன்னும் ஒரு வாரத்தில் விமான மூலம் பத்மா இங்கு வந்து விடுவாள். வந்த உடனேயே திருமணம் நடைபெறும். பெண்ணின் தகப்பனார் திருமணத்தில் பங்கு கொள்ள முடியாத நிலையில் இருப்பதால், விசேஷமான கொண்டாட்டங்கள் வேண்டியதில்லை என்று அப்பா தீர்மானித்திருக்கிறார். எங்கள் வீட்டுக் கோயிலிலேயே கல்யாணத்தை நடத்திவிட எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம்.”
ஸ்ரீதர் எப்பொழுதும் அந்தஸ்துக்கேற்ற படாடோப வாழ்க்கையையும் கொண்டாட்டங்களையும் விரும்புவனாதலால் காதும் காதும் வைத்தாற் போன்ற திருமணத்தை அவன் விரும்பவில்லை. என்றாலும் குருடனுக்கு இது போதாதா என்ற எண்ணமும் அவனுக்கு ஏற்பட்டது. “எப்படியும் என் வாழ்வின் ஜோதி என்று வாழ்ந்தடைந்து விட்டாளே, அது போதும்.” என்று திருப்தியுற்றான் அவன்.
பாக்கியம் செய்த ஏற்பாட்டின்படி ஒரு வாரம் கழித்து சுசீலா ‘அமராவதி’ வளவுக்கு வந்தாள். அவன் வந்ததை அறிந்ததும் ஸ்ரீதர் மோகனாவைத் தூண்டி “பத்மா” என்று அழைக்கும்படி செய்தான். அன்று பிற்பகலே ‘அமராவதி’க் கோவிலில் பஞ்ச நாதக் குருக்கள் புரோகிதத்தில் பத்மா – ஸ்ரீதர் திருமணம் நடைபெற்றது. புற உலகிற்கு அது ஸ்ரீதர் – சுசீலா திருமணமானாலும் ஸ்ரீதரின் உள்ளுலகில் அது பத்மா – ஸ்ரீதர் திருமணம்தானே!
பாக்கியம் ‘அமராவதி’ மாளிகையின் மிகப் பெரியதும் ஆடம்பரமானதுமான அறையை ஸ்ரீதரின் திருமண அறையாக மாற்றியிருந்தார்கள். தெய்வலோகம் போல் அலங்கரிக்கப்பட்டுப் பல விதமான வாசனைப் பொருள்களின் மூக்கைப் பிய்க்கும் நறுமணத்துடன் விளங்கிய அவ்வறையினுள் விலையுயர்ந்த பட்டாடைகள் புனைந்து, தன் அந்தகக் கணவனுடன் பள்ளிக் கொள்ளச் சென்றாள் சுசீலா.
“பத்மா, நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. இல்லாவிட்டால் குருடனென்றறிந்ததும் நீ என்னை நிராகரித்திருப்பாயல்லவா? நீ எவ்வளவு நல்லவள். உன்னைப் போன்ற உத்தமி இவ்வுலகில் யாருக்குக் கிடைப்பாள்? நீ இந்த ஜென்மத்தில் மட்டும் எனது காதலியல்ல. சென்ற ஜென்மத்திலும் அதற்கு முன்னைய ஜென்மங்களிலும் நீயே என் காதலியும் மனைவியுமாக விளங்கிருக்கிறாய். இனி வரும் ஜென்மங்களிலும் நானுன்னைப் பிரிய மாட்டேன். ஊழிக் காலத்திலே உலகம் முற்றாக அழியும் வரை நாம் இப்படியே பிறப்புக்கும் பிறப்பு காதலாகச் சென்றுக் கொண்டேயிருப்போம். ஏன், சைவ மதத்தின் படி ஆத்மாக்கள் என்றும் அழிவற்றன அல்லவா? சர்வ சங்காரத்தின் பின் தோன்றும் நவ உலகிலும் கூட நாம் மீண்டும் கணவன் மனைவியாகக் கூடுவோம். ஆம் பத்மா, என்னால் உன்னைப் பிரியவே முடியாது” என்று காதல் மொழிகளை விடாது பேசினான் ஸ்ரீதர்.
சுசீலா ஸ்ரீதரை எவ்வளவு தூரம் தன் பேச்சாலும் செயலாலும் மகிழ்விக்க முடியுமோ அவ்வளவு தூரம் அவனை மகிழ்வித்தாள். பத்மாவுக்கும் அவளுக்குமிருந்த குரலொற்றுமை இதற்குப் பேருதவியாயிருந்தது. விடிவதற்கு முன் ஸ்ரீதர் சுசீலாவிடம் “பத்மா நீ எவ்வளவு நல்லவள்.”, “நீ எவ்வளவு நல்லவள்” என்று குறைந்தது பத்தாயிரம் தடவையாவது சொல்லியிருப்பான்.
‘அமராவதி’யில் இவை நடந்து கொண்டிருக்க, கொழும்பில் கமலநாதனுடன் காதற் பேச்சுப் பேசி கால்பேஸ் கடற்கரையில் புற்றரையில் அமர்ந்திருந்தாள் பத்மா. கமலநாதன் மீசையைத் தன் காந்தள் விரல்களால் முறுக்கி மேலேற்றிவிட்ட அவள், “மீசையை இப்படி முறுக்கிவிடுங்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருக்கும்” என்று ஆலோசனை கூறினாள்.
கமலநாதன் “ஸ்ரீதரின் தந்தையார் பெண் கேட்டு வந்தாராமே? நீ மறுத்துவிட்டாயாமே. அவன் கண்கள் குருடென்பதனால்தானே நீ இந்தக் கல்யாணத்தை மறுத்தாய்?” என்று கேட்டான்.
அதற்குப் பத்மா “உங்களுக்குப் பைத்தியமா? முனிசிப்பல் விளையாட்டுச் சங்க நடன விருந்தன்று உங்களோடு நெருங்கிப் பழகிய அன்றே ஸ்ரீதரை நான் மறந்து விட்டேன். ஆளைப் பார், தெரியாதவர் மாதிரிப் பேசுகிறார்” என்றாள். அவ்வாறு சொல்லிக் கொண்டே இருளிலே அவனது தோளிலே தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.
இவை நடந்து ஒரு மாதம் கழித்து கொழும்பு ‘தப்ரபேன்’ ஹோட்டலில் கமலநாதன் – பத்மா திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தேறியது. நகர மேயர் உட்படப் பல பிரமுகர்கள் திருமணத்துக்கு வந்திருந்தார்கள். பரமானந்தருக்கோ பத்மாவின் திருமணம் ஒரு பாரம் தீர்ந்தது போன்ற உணர்ச்சியைக் கொடுத்தது. தங்கமணியும் கல்யாணத்துக்கு வந்திருந்தாள். விமலாவும் லோகாவும் கல்யாணக் கேக்குகளை இரசித்துச் சாப்பிட்டார்கள். அடுத்த வீட்டு அன்னம்மா இக்கல்யாணத்தின் பயனாகத் தன் வாழ்வில் முதல் முதலாக ஒரு பெரிய ஹோட்டலின் உட்புறத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றாள். இப்படிப்பட்ட இடங்களில் நடமாடி அவளுக்கு முன்னர் பழக்கமில்லாவிட்டாலும், இது பற்றிப் பத்மாவின் ஆலோசனைகளை முன்னரே அவள் பெற்றிருந்தபடியால் ஓரளவு விரசமில்லாமலே அவள் அங்கு நடந்து கொண்டாள்.
திருமணத்தின் பின்னர் தம்பதிகள் ‘பெலிஹூல் ஓயா’ என்னும் மலை நாட்டுச் சுகவாசஸ்தலத்துக்குத் தமது ‘தேன் நிலவு’க்குப் போனார்கள்.
24-ம் அத்தியாயம்: நாடகமே உலகம்!
“அமராவதி” இப்பொழுது ஒரு நாடக அரங்கமாகி விட்டது. ஓர் ஆள் மாறாட்ட நாடகம் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏதோ பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து வைப்பதற்காக நாடகத்தைத் தொடங்கியாகி விட்டது. ஆனால் கடைசி வரை இந்நாடகத்தை வெற்றிகரமாக நடத்துவது அவ்வளவு இலகுவாகத் தோன்றவில்லை. இந்நாடகத்தில் சிவநேசர் உட்பட எல்லோரும் வெறும் பார்வையாளர்களாகவும், மேடை நிர்வாகிகளாகவுமிருக்க, நடிகையாக இருந்து நாடகத்தின் முழுப் பாரத்தையும் தோளிலே சுமக்க வேண்டிய பொறுப்பு சுசீலாவைச் சார்ந்துவிட்டது. தான் ஏற்றுக் கொண்ட நாடக பாத்திரத்திற்கேற்ற குரற் பொருத்தம், வயது, படிப்பு என்பன அவளுக்கு அமைந்திருந்தமை இதற்கு உதவியாக இருந்தது உண்மைதான். என்றாலும் ஸ்ரீதரும் பத்மாவும் நீண்ட காலம் ஒருவருடன் ஒருவர் பழகியவர்களாததால் பழைய சம்பவங்கள் பலவற்றை அவன் சுசீலாவிடம் இடையிடையே ஞாபகமூட்டிய போது, அவனது வசனங்களுக்குப் பொருத்தமான பதில் வசனங்களைப் பேசுவது சுசீலாவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சில வேளைகளில் பொருத்தமான பதில்கள் அடியோடு தோன்றாது போகும். அவ்வேளைகளில் விஷயங்களைத் திறமையாகப் பூசி மெழுகி மழுப்ப வேண்டியிருந்தது. இயற்கையாகவே சுசீலா புத்திசாலியாகவும் கற்பனை வளம் வாய்க்கப் பெற்றவளாகவும் விளங்கியதால், இதை அவளால் ஓரளவாவது சாதிக்க முடிந்தது. இன்னும் பொதுவாகவே ஆண்களை விடப் பெண்களுக்குப் பொய் சொல்லும் ஆற்றல் அதிகம் என்று சொல்லுவார்கள். இதன் உணமை எப்படியிருந்த போதிலும், சுசீலாவைப் பொறுத்தவரையில் இந்த ஆற்றலை மிக விரைவில் அவள் தன்னிடம் வளர்ந்துக் கொண்டு ஸ்ரீதரின் வாழ்க்கைக்கு இன்பத்தை அளிக்கத் தன்னாலானதை எல்லாம் செய்து வந்தாள்.
இயற்கையாகவே இளகிய இதயம் படைத்த அவள், ஸ்ரீதரின் நிலையைப் பார்த்து ஏற்கனவே அவன் மீது அனுதாபம் கொண்டிருந்ததால், சிவநேசரும் பாக்கியமும் அவனது பெற்றோருடன் உள்ளத் தவிப்போடு பேசிய வார்த்தைகளைக் கேட்டதும் தன்னை மறந்து உணர்ச்சிப் பெருக்கில் ஒன்றையும் யோசியாமல் திடீர் முடிவுக்கு வந்து அந்தகனான ஸ்ரீதரின் ஆள் மாறாட்ட மனைவியாகி, இன்று அவனோடு இல்லறமென்னும் நுகத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாள். இந்தத் திருமணத்தில் இருந்த பிரச்சினை ஒரு குருடனை அவள் கட்டினாள் என்பதல்ல. இன்னொரு பெண்ணாக நடிக்க வேண்டியிருந்ததே, பெரிய தொல்லையாக இருந்தது. சாதாரணமாக மேடை நாடக நடிகர்களைப் போலவே நாடகம் உண்மையில் ஆரம்பிக்கும் வரை அதாவது அமராவதிக் கோவிலில் தாலி கட்டி ஸ்ரீதரோடு பள்ளியறை புகும் வரை தான் ஏற்றுக் கொண்ட பாத்திரம் எத்தகைய கஷ்டமான பாத்திரம் என்பதை அவள் உணரவில்லை.
உண்மையில் பத்மா என்ற பெயரை திடுதிடுப்பென்று ஏற்றுக் கொண்ட போதிலும், பத்மாவின் தந்தை பெயர் என்ன, தாயின் பெயரென்ன இருவரும் ஜீவந்தராயிருக்கிறார்களா, இவர்களில் எவராவது இறந்து போய் விட்டார்களா என்பது போன்ற சாதாரண விவரங்களைக் கூட அவள் போதிய அளவு சேகரித்து கொள்ளவில்லை. இதனால் ஒரு வேளை ஸ்ரீதர் சுசீலாவின் ஆள் மாறாட்டத்தைத் தெரிந்துக் கொண்டுவிட்டால் என்ன ஆவது? அவ்விதம் அவன் தெரிந்து கொண்டுவிட்டால் என்ன விபரீதம் நேரிடுமோ? இதை எண்ணியதும், சுசீலாவை நெஞ்சை நடுங்க வைக்கும் பேரச்சம் பீடித்தது. அதனால் ஸ்ரீதருடன் பேசும்போது மிகவும் சாவதானமாக யோசித்துப் பேச வேண்டியது தன் கடமை எனபதை உணர்ந்தாள் அவள். தவறான ஒரு சொல் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடலாம். ஆகவே எப்பொழுதும் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிவிட்டது.
தனது திருமணத்தின் முதலிரவன்று படுக்கையறையில் நாணத் தெளிந்து ஸ்ரீதருடன் சாதாரணமாகப் பேசிப் பழக ஆரம்பித்த பிறகு அவனுக்கு உற்சாகமூட்டுவதற்காக அவன் கன்னத்தில் முத்தமிட்டு, ஒரு காதற்பாட்டைக் குரலெடுத்துப் பாடினாள் சுசீலா. ஸ்ரீதர் அதைக் கேட்டதும் மிகுந்த ஆச்சரியத்துடன் “பத்மா, நீ எப்போது பாடக் கற்றுக் கொண்டாய்? என்னுடன் எத்தனையோ மாதங்களாக ஊர் சுற்றித் திரிந்தும் ஒரு நாளும் நீ பாடியதில்லை” என்றான். சுசீலா திருதிரு என்று விழித்தாளாயினும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “நான் என்னுடைய சங்கீதத் திறமையை எங்கள் முதலிரவுக்கென்றே ஒளித்து வைத்திருந்தேன். பெண்கள் ஆண்களைப் போல் தங்கள் திறமைகளை ஒரேயடியாகக் காட்டிவிட மாட்டார்கள்” என்றாள். ஸ்ரீதருக்கு அப்பதில் திருப்தியாகவே பட்டது. விடிவதற்கிடையில் “பத்மா இன்னும் பாடு, இன்னும் பாடு” என்று அவளைப் பலமுறை பாட வைத்துவிட்டான் அவன்.
இச்சம்பவம் அவள் மனப் பயத்தை மேலும் அதிகரித்துவிட்டது. மிகவும் கஷ்டமான பரீட்சையில் தான்சிக்கிக் கொண்டு விட்டதாகவும், அதில் தன்னால் சித்தி எய்துவது சாத்தியந்தானா என்றும் அவள் கலங்கலானாள். இவ்வாறு அவள் கலங்கியபோது சில காலத்துக்கு முன்னர் தான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது கண்டியில் சக மாணவிகள் சிலருடன் தான் பார்த்த ஹிந்தி படமொன்று அவளுக்கு ஞாபகம் வந்தது. இப்படத்தின் கதாநாயகன் தன்னைப் போன்ற உருவமைந்த இன்னொருவனாக நடித்துச் சில மோசடிகள் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதற்கு அவனுக்கு பெருந் துணையாக அமைகிறது மற்றவனின் தினக்குறிப்பு புத்தகம். விரிவாக எழுதப்பட்ட இத்தினக்குறிப்புப் புத்தகத்தில் அவனது முழு விவரங்களும் காணப்படுகின்றன. அவற்றை நன்கு உபயோகித்துத் தனது மோசடிகளை மிகவும் திறம்படச் செய்ய முடிகிறது கதாநாயகனால். உண்மையில் மற்றவரின் மனைவியைக் கூடத் தானே அவளது உண்மைக் காதலன் என்று நம்ப வைத்துவிடுகிறான் அவன். இக்கதை ஞாபகம் வந்ததும் சுசீலா ஸ்ரீதரிடம் தினக்குறிப்புப் புத்தகம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமென்றும், அவ்வாறு அவனெழுதிய தினக்குறிப்புப் புத்தகம் இருக்கும் பட்சத்தில் அது தனக்குப் பெருந் துணையாகலாம் என்பதால் அதனைத் தேடிப் பார்க்க வேண்டும் என்றும் முடிவு செய்தாள். அவளது இம்முயற்சி வீண் போகவில்லை. ஸ்ரீதரின் தினக்குறிப்புப் புத்தகம் அவளிடம் சிக்கவே செய்தது. ஆனால் சினிமாக் கதையில் காட்டப்பட்ட விரிவான தினக்குறிப்புப் புத்தகம் போல் அது அமையவில்லை. அப்படிப்பட்ட வசதியான நிலைமைகள் சினிமாவிலோ கதைகளிலோதான் காணப்படும். வாழ்க்கையில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது துர்லபம். இருந்தாலும் அவள் கைக்கு அகப்பட்ட ஸ்ரீதரின் தினக்குறிப்புப் புத்தகம் அவளுக்கு ஓரளவு உபயோகமாகவே அமைந்தது. ஸ்ரீதரின் அறையில் காணப்பட்ட பெரிய அலமாரியைத் துருவி ஆராய்ந்த போதே அது அவளுக்கு அகப்பட்டது.
தினக்குறிப்புப் புத்தகம் வைத்திருப்பது இப்பொழுது மிகவும் கர்நாடகமாகக் கருதப்பட்டு வருகிறது. தப்பித் தவறித் தினக்குறிப்புப் புத்தகம் வைத்திருப்பவர்களும் கூட அதை வேலைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உதவியான கால சூசிகையாகப் பயன்படுத்துகின்றனரே அல்லாமல் விரிவான வாழ்க்கை வரலாற்றை அதில் எழுதுவதில்லை. முன்னரெல்லாம் அப்படியல்ல. படித்தவர்கள் தமது அன்றாட அனுபவங்களை மறவாது பதிய வைப்பதற்குத் தினக்குறிப்புப் புத்தகங்களை உபயோகித்தனர். இவ்வாறு அவர்கள் எழுதி வைத்த தினக்குறிப்புகள் பல, பின்னர் நூல்களாகக் கூட வெளியிடப்பட்டிருக்கின்றன. பிரெஞ்சு எழுத்தாளர் அன்ட்ரே கிடேயின் தினக்குறிப்பு நூல் இவற்றில் பிரசித்தமான ஒன்று.
ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவன் தனது தினக்குறிப்புப் புத்தகத்தை விரிவான வாழ்க்கை வரலாறு போலவும் எழுதவில்லை. வெறும் கால சூசிகையாகவும் வைக்கவில்லை. இரண்டுங் கெட்ட ஒரு முறையில் அவன் அதை எழுதி வைத்திருந்தான்.இன்னும் அவன் அதை விடாது தொடர்ந்து எழுதவுமில்லை. சில சமயம் பல வாரங்களுக்கு ஒரு குறிப்புமே காணப்படவில்லை. இன்னும் சில சமயங்களில் தொடர்ந்தாற் போல் இரண்டு வாரங்களுக்கு ஒரே உற்சாகமாகக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தான்.
அவன் எழுதியிருந்த குறிப்பில் ஒன்று பின்வருமாறு:
“இன்று பத்மா பரமானந்தர் என்ற பெண்ணை நாடக மன்றக் கூட்டத்தில் சந்தித்தேன். அவள் என்னுடன் நாடக மன்றத்தின் கூட்டுச் செயலாளராகத் தெரியப்பட்டாள். அவளே இவ்வுலகின் பேரழகி. அவளுக்கு என்னைப் பிடித்திருந்தது. இருவரும் பல்கலைக்கழக நூல் நிலையத்துக்கு அருகாமையிலுள்ள நூல்களமைந்த நடைபாதையில் நீண்ட நேரம் உரையாடி நின்றோம். அவள் இளைப்பாறிய ஒரு வாத்தியாரின் மகள். என் தகப்பனார் என்ன தொழில் புரிகிறார் என்று அவள் கேட்டாள். அவரும் இளைப்பாறிய ஒரு வாத்தியாரே என்று புளுகொன்றை அவிழ்த்துவிட்டேன். நான், அவளிடம் இவ்வாறு பொய் சொல்லாமல் நான் கோடீஸ்வரர் சிவநேசரின் மகன் என்று கூறியிருந்தால், நிச்சயம் அவள் மிரண்டு போயிருப்பாள். என்னிடம் பேசவே அஞ்சியிருப்பாள். நான் பெரும் பணக்காரனாயிருப்பது பல்கலைக்கழகத்தில் எனக்கு எவ்வளவு தொல்லையை உண்டு பண்ணுகிறது. ஆண்களும் சரி, பெண்களும் சரி, என்னை மிகவும் கனம் பண்ணவே செய்கிறார்கள். ஆனால் எவருமே என்னிடம் அஞ்சாது மனந்திறந்து பேச வருகிறார்களில்லை. இதனால் நண்பர்களில்லாத காட்டு வாழ்க்கையாக என் வாழ்க்கை கழிகிறது. இந்நிலையைப் போக்கத்தான் நான் பத்மாவுக்குப் பொய் சொன்னேன். ஆனால் இவ்வாறு நான் பொய் சொன்னது சரிதானா?”
இன்னொரு குறிப்பு பல்கலைக்கழக நாடகத்தன்று பத்மா தனது தந்தை பரமானந்தரை ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைத்ததைக் கூறியது. ஆகஸ்ட் 14ந் திகதியன்று எழுதப்பட்ட குறிப்பில், “இன்று என் கண்மணி பத்மாவின் பிறந்த தினம்.” என்று கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு பல தகவல்கள் குறிப்புகளில் காணப்பட்டமை, சுசீலாவுக்குத் தன் நாடகத்தைத் திருப்திகரமாக ஆடுவதற்கு உதவியதென்றாலும் அவற்றில் சில அவளது பெண்மையுணர்ச்சியைக் கிளறிப் பொறாமையையும் கோபத்தையும் அவளிடம் தோற்றுவிக்கவும் செய்தன. நீச்சல் ராணிப் போட்டியைப் பற்றி எழுதும் போது பத்மாவின் தொடைகளைச் சிற்றெறும்புகள் கடித்த விவரத்தையும் தான் அத்தழும்புகளைத் தடவிவிட்டதையும் வேடிக்கையாக எழுதியிருந்தான் ஸ்ரீதர். அதை வாசித்ததும் தினக்குறிப்புப் புத்தகத்தைக் கிழித்தெறிந்துவிடலாமா என்று கொதிப்படைந்தாள் அவள். தன் கண்களை அல்லது காதுகளை உண்மையில் நேசிக்கும் எந்தப் பெண்ணால்தான், அவளை இன்னொரு பெண் தீண்டுவதைப் பொறுக்க முடியும்? உண்மையில் அப்பொழுது பத்மா மட்டும் பக்கத்திலிருந்தால் அவளைக் கைகளால் பிறாண்டி விரட்டிவிட்டிருப்பாள் சுசீலா. அத்தகைய கொந்தளிப்பு அவளையறியாமலே சுசீலாவுக்கு ஏற்பட்டுவிட்டது. சிற்றெறும்புகள் அவளைக் கடித்தது போதாது, பூரானும் சிலந்திப் பூச்சியும் கூட பத்மாவுக்குக் கடித்திருக்க வேண்டுமென்று சிந்தித்தாள் அவள். “போயும் போயும் நல்ல பெண்ணிடம் போய் அவர் இவ்வளவு அன்பைக் காட்டுகிறார். கண் பார்வை குன்றியதும் குருடனுக்கு மனைவியாக மாட்டேன் என்று கூறிய கல் நெஞ்சுக்காரப் பெண்ணுக்கல்லவா அவர் இவ்வளவு அன்பைக் காட்டியிருக்கிறார். வேறு வேலையில்லாமல் தழும்பைத் தடவி விட்டாராம் அவர். கொள்ளிக்கட்டையால் சுட்டிருக்க வேண்டும் அவளை.” என்று அர்த்தமில்லாமல் தன்னுள் தான் சீறிய அவள் திடீரெனக் கன்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டாள்.
சுசீலா ஸ்ரீதரைக் கல்யாணத்துக்கு முன் காதலிக்கவில்லை என்பது உண்மையேயாயினும், வெறும் இரக்க உணர்ச்சி , பெண்மையிடத்துலுள்ள தாய்மையிற் பிறந்த அனுதாப உணர்ச்சி மட்டுமே அப்பொழுது அவள் உள்ளத்தில் அலை மோதியது என்பது உண்மையேயாயினும், முதலிரவின் நெஞ்சுறவின் பின்னர் அவள் இதயம் முற்றாகத் திறந்து அவனை அங்கே சிறையிட்டு வைத்துவிட்டது. இனி அவனை யாரும் தொடவிடேன். அவன் என் சொத்து, அவன் சொன்னது போல் ஏழேழு ஜென்மத்துக்கும் அதற்கப்பாலும் ஊழிவரையும், ஊழிக்குப் பின்னாலும் கூட அவன் எனக்கே உரியவன். அவனை வேறு எவளாவது தொட வந்தால் உடனே அவளைச் சுட்டுச் சாம்பலாக்கி விட்டே மறு வேலை பார்ப்பேன் என்ற ரீதியில் அவள் எண்ணக்கோவை ஒரு சங்கிலித் தொடர் போல் வளர்ந்துவிட்டது. “ஸ்ரீதர், கண்தான் மயங்கியிருக்கிறதே தவிர, இனிமை கலந்த அன்புப் பேச்சிலேயும் இதர கவர்ச்சிப் பண்புகளிலேயும் இப்படிப்பட்ட ஆண் மகன் எங்கே இருக்கிறான்? இப்படிப்பட்டவன் என் கணவனாகக் கிடைக்க எங்கள் புண்ணியாக செய்தேன்?” என்பது போன்ற நினைவுகள் அவள் மனதை மயக்க வைத்தன. இருந்தாலும் அவள் உள்ளத்தில் பெரும் ஏக்கம் ஒன்றும் ஏற்படவே செய்தது. “நான் தான் அவரைக் காதலிக்கிறேன். அவர் என்னைக் காதலிக்கவில்லை” என்பதே அது. “அவர் என்னை அதாவது சுசீலாவைக் கல்யாணம் செய்யவில்லை. பத்மாவைத்தான் திருமணம் செய்திருக்கிறார். என்ன அநியாயம்? அவரை வெறுத்தொதுக்கிய பெண்ணுக்காக அவருள்ளம் உருகுகிறது. எனக்காக அல்ல.” என்று வெதும்பினாள் அவள். ஒவ்வொரு தடவையும் ஸ்ரீதர் சுசீலாவை நோக்கிப் பத்மா என்றழைத்தபோது அவள் இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு சுக்கு நூறாகப் பிளப்பது போலிருந்தது அவளுக்கு. போதாதற்கு மோகனாவின் “பத்மா, பத்மா” என்ற கூச்சல் வேறு வீடு முழுவதையும் நிறைந்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்கும் போதெல்லாம் சுசீலாவுக்கு அதன் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாமா என்று கூடத் தோன்றும். ஆனால் இயற்கையிலேயே உயிரினங்கள் மீது அன்பும் இரக்கமும் கொண்ட அவள் அடுத்த விநாடியே மனதை மாற்றிக் கொண்டுவிடுவாள். “இந்த உலகத்தில் ஒருவனுக்குத் தன் பெயரை விட இனிமையான சொல் வேறில்லை.” என்பார்கள். ஆனால் சுசீலாவைப் பொறுத்த வரையில் அவள் தன் பெயரை முற்றாக இழந்துவிட்டாள். ஒருவன் பெயர் இன்னொருவருக்கு வெறும் சொல்லாக மட்டும், ஓர் இடுகுறியாக மட்டும் காட்சியளிக்கலாம் ஆனால் அவனுக்கோ அது அவனது உள்ளுணர்வில் கலந்த உயிர்ப்பொருளுக்குச் சமானமாயிருக்கிறது. அந்த உயிரை இழந்து, ஒரு வேதனை நிறைந்த வெறுமை நிலையிலிருந்தாள் சுசீலா.
ஸ்ரீதரின் பொருள்களைத் துருவி ஆராய்ந்து சுசீலாவின் கைக்கு அகப்பட்ட இன்னொரு பொருள் பத்மாவின் நீச்சலுடைப் படம். “இது தான் பத்மாவாக இருக்க வேண்டும். நீச்சலுடையில் அவளைக் கடற்கரையில் படமெழுதியதாகத் தினக்குறிப்பிலே எழுதியிருக்கிறாரல்லவா? அப்படம் இதுவாகத் தானிருக்க வேண்டும்.” என்று எண்ணிய அவள் அப்படத்தை ஒரு நிமிட நேரம் உற்றுப் பார்த்துவிட்டுத் தன்னை அறியாமலே அதன்மீது காறித் துப்பிவிட்டாள். “இந்தக் கொடியவளை நினைத்தல்லவா அவர் இன்னும் உருகிக் கொண்டிருக்கிறார்? அவள் பெயரைச் சொல்லியல்லவா என்னை அழைக்கிறார்?” என்ற நினைவு அவள் உள்ளத்தில் ஏற்படுத்திய எரிச்சலுக்கு அளவே இல்லை. “இந்தப் படத்தை என் கண்கள் இனி காணக் கூடாது” என்று எண்ணிய அவள் அப்படத்தை அமராவதி மாளிகையின் அதிக புழக்கமில்லாத ஓர் அறைக்குள் கொண்டு போய்ப் போட்டாள். “சனியன், நீ இனி இங்கேயே கிட” என்று படத்துடன் பேசினாள் அவள்.
இவ்வாறு அவள் இடையிடையே உணர்ச்சிவசப்பட்டாளாயினும் நாடகத்தை ஒழுங்காக நடிப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாகவே இருந்தாள்.
நாடக நடிகை இவ்விதம் தன்னைப் பலவாற்றாலும் சிறப்பாகத் தயார் செய்து கொண்டிருக்க, நாடக அரங்க நிர்வாகத்தைத் திறம்பட நடத்தும் வேலையில் சிவநேசர் தன் புலனைச் செலுத்தி வந்தார்.
ஸ்ரீதர் – சுசீலா திருமணம் முடிந்ததும் சிவநேசருக்கு ஏற்பட்ட முதலாவது அச்சம் வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் எல்லோருக்கும் நன்னித்தம்பியின் மகள் சுசீலாவை ஏற்கனவே நன்கு தெரியுமாதலால், அவர்கள் மூலம் சில சமயம் ஸ்ரீதர், தங்கள் ஆள் மாறாட்ட நாடகத்தைத் தெரிந்து கொள்ளக் கூடும் என்பதாகும். இதனைத் தவிர்க்க, இரு வழிகளே இருந்தன. ஒன்று விஷயத்தை வெளிப்படையாகவே வேலைக்காரர்களிடம் பேசி அவர்களுக்கு அதைப் பற்றி மூச்சுவிடக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போடுவது. மற்றது, வேலைக்காரர்களை வேலையிலிருந்து நீக்கிப் புதிய வேலைக்காரர்களை நியமித்துவிடுவது. இதில் இரண்டாவது வழியையே பின்பற்றுவது என்று சிவநேசர் முடிவு செய்தார்.
‘அமராவதி’ வளவில் வாசக் காவலாளி தொடக்கம், வீட்டு வேலைக்காரி தெய்வானை ஈறாக மொத்தம் பதினாறு வேலைக்காரர்கள் இருந்தார்கள். ஸ்ரீதரின் திருமணம் முடிந்த அடுத்த நாளே அவர்கள் எல்லோரையும் வெவ்வேறு இடங்களுக்கு வேலை மாற்றம் செய்தார் சிவநேசர். ஒரு சிலர் கிளி நொச்சியிலிருந்த அவரது விவசாயப் பண்ணைக்கும், மற்றும் சிலர் களுத்துறையிலிருந்த ரப்பர்த் தோட்டத்துக்கும் அனுப்பப்பட்டனர். சிலர் சிலாபத்திலும் நீர்கொழும்பிலுமிருந்த அவரது தென்னந்தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். தெய்வானை சுந்தரேஸ்வரர் கோவில் கணக்கப்பிள்ளை வீட்டில் தங்கியிருந்து கோவில் வளவைச் சுத்தம் செய்யும் வேலைக்கு அனுப்பப்பட்டாள்.
இவ்வாறு இவர்கள் அனுப்பப்பட்டதால் ஏற்பட்ட காலி ஸ்தானங்களை நிரப்ப, களுத்துறை ரப்பர்த் தோட்டத்திலிருந்தும், சிங்களத் தொழிலாளர் பலர் அமராவதிக்குக் கொண்டு வரப்பட்டனர். தெய்வானைக்குப் பதிலாக குசுமா என்னும் சிங்களப் பெண் வீட்டு வேலைக்காரியாக நியமிக்கப்பட்டாள். இந்த ஏற்பாடுகள் யாவும் சேர்ந்து ஆள் மாறாட்ட நாடகம் திறம்பட நடப்பதை உறுதி செய்தன. போதாதற்கு மாளிகை வாசலின் காவலும் முன்னிலும் அதிகமாகப் பலப்படுத்தப்பட்டது. மிகவும் அவசியமானவர்கள் மட்டுமே வீட்டுக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள். சின்னைய பாரதியாரைப் பொறுத்தவரையில் அவர் மட்டும் மாளிகைக்கு வர அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மனைவி, பிள்ளைகள் அடிக்கடி அமராவதிக்கு வருவது நிறுத்தப்பட்டது.
பாவம், ஸ்ரீதரோ தன்னை ஏமாற்ற நடந்த இந்த முயற்சிகள் எதையும் அறியமாட்டான். அவனைப் பொறுத்த வரையில் கபோதியாய் இருந்தாலும் தன்னை போன்ற அதிர்ஷ்டசாலி இவ்வுலகில் வேறு யாரும் இல்லை என்றே அவன் நம்பினான். என்றும் எப்பொழுதும் ஒரு கனவுலகிலே, எல்லையற்ற இன்பத்தின் மடியிலே அவன் புரண்டு கொண்டிருந்தான். இரவு பகல் என்று பாராது தன் அன்புப் ‘பத்மா’வைத் தன் அருகில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பதே அவன் பொழுது போக்காயிற்று. பத்மா இருக்கும் போது எனக்கு வேறென்ன குறை என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான் அவன்.
சுசீலாவைப் பொறுத்த வரையில் தனது பாகத்தை மிகவும் கவனமாக நடித்து வந்தாள். அவனுக்குத் தன் கையால் முட்டைக் கோப்பி தயாரித்துக் கொடுப்பாள். பின்னர் ஸ்நான அறைக்கு அவனை அழைத்துச் சென்று அவனைக் குளிப்பாட்டுவாள். முன்பெல்லாம், சிவநேசருக்கு முகச் சவரம் செய்பவரும் சவரத் தொழிலாளி ஒருவன் ஸ்ரீதருக்கும் சவரம் செய்துவிடுவது வழக்கம். சுசீலா வந்த பிறகு இதை அவள் நிறுத்தி விட்டாள். ‘சேப்டி ரேசரா’ல் தானே தன் கையால் ஸ்ரீதருக்குச் சவரம் செய்துவிடப் பழகிக் கொண்டாள் அவள். இவ்விதம் அவள் சவரம் செய்ய ஆரம்பித்தது இருவருக்கும் நல்ல வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருந்தது. இவை முடிந்ததும் அவனுக்கு நல்ல ஆடைகளை உடுக்கத் தருவாள். பக்கத்திலிருந்து அவனுக்குப் பிரியமான உணவுகளை உண்ணக் கொடுப்பாள். பின் காலைப் பத்திரிகைகளை வாசித்துக் காட்டுவாள். அவன் விரும்பினால் ‘ரேடியோ’ வைப்பாள். ரேடியோகிராமில் இசைத் தட்டுகளைப் போடுவாள். வளவில் அவனை அங்குமிங்கும் அழைத்துச் சென்று பொழுது போக உதவுவாள். புத்தகங்களை வாசித்துக் காட்டுவாள். வேடிக்கைக் கதைகள் சொல்லுவாள். சில சமயங்களில் பாட்டுகள் பாடி அவனை மகிழ்விப்பாள். இவற்றை எல்லாம் அவள் உற்சாகமாகவே செய்த போதிலும், சுசீலா என்பதற்குப் பதிலாக ஸ்ரீதர் அவளை பத்மா என்றழைத்தபோது மட்டும் அவள் உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டது. ஆனால் அந்த வேதனையை எவ்விதமும் வெளிக் காட்டாமல் ஸ்ரீதருக்கு மகிழ்ச்சி தருவதிலேயே அக்கறையாக இருந்தாள் அவள்.
ஸ்ரீதர் சுசீலாவைப் பத்மாவென்று பொதுவாக அழைத்த போதிலும் இடையிடையே டார்லிங், இராசாத்தி, என் கண்ணே, கிளியே என்றெல்லாம் அழைப்பான். இவ்விதம் அவள் அழைக்கும் போது சுசீலாவின் மனம் மகிழும். ஒரு நாள் அவள் ஸ்ரீதரிடம் ” நீங்கள் என்னைப் பத்மா என்றழைக்க வேண்டாம். வேறு பெயர் சொல்லி அழையுங்கள்.” என்றாள்.
“ஏன்? பத்மா என்ற பெயர் அழகாயில்லையா? எவ்வளவு அழகான பெயர் அது?” என்றாள் ஸ்ரீதர்.
“ஆனால் அதைவிட அழகான பெயர்கள் எத்தனையோ இருக்கின்றனவே உலகில்” என்றாள் சுசீலா.
“ஒன்றைச் சொல்லு” என்றான் ஸ்ரீதர்.
சுசீலா சிறிது நேரம் பேசாதிருந்துவிட்டு, ” நான் உங்களை இராசா என்றழைக்கிறேன். நீங்கள் என்னை இராசாத்தி என்று அழையுங்கள்” என்றாள். “சரி இராசாத்தி, அப்படியே அழைக்கிறேன்.” என்றான் ஸ்ரீதர் சிரித்துக் கொண்டு. தன் அன்புக் கணவனின் இதயத்துக்குத் தன்னோடு போட்டியிட்ட சக்களத்தியான பத்மா என்ற சொல் தன் காதில் அடிக்கடி விழாது போனால் அது போதும் என்பதே அவள் கருத்து. ஆனாலும் ஸ்ரீதர் இரண்டு முறை அவளை இராசாத்தி என்று அழைத்தால் மூன்றாம் முறை அவளைப் பத்மா என்றழைக்கவே செய்தான்.
ஆள் மாறாட்ட நாடகத்தை எவ்வித பிடியுமின்றி முற்றும் வெற்றிகரமான ஒரு நாடகமாக நடத்திவிட வேண்டுமென்பதே சிவநேசரின் திட்டம். ஆகவே அதற்குத் தடையாக இருந்த சகல விஷயங்களையும் வெட்டிச் சாய்த்து வந்தார் அவர்.
ஸ்ரீதர் சில சமயங்களில் பரமானந்தரின் சுகத்தைப் பற்றி விசாரிப்பாள். “பத்மா, அவரை அமராவதியில் வந்திருக்கும்படி சொல்வதுதானே.” என்று அவன் இடையிடையே சுசீலாவிடம் கூறுவது வழக்கம். அவள் இது பற்றிப் பாக்கியத்திடம் சொன்னாள். பாக்கியம் அதைச் சிவநேசரிடம் எடுத்துக் கூறவே, சிவநேசர் இப்பிரச்சினையை ஒரே திரியாக முடித்துக் கட்டிவிட ஒரு திட்டம் தீட்டிவிட்டார்.
ஒரு நாள் அவர் ஸ்ரீதரிடம் “கொழும்பிலிருந்து டெலிபோன் செய்தி வந்திருக்கிறது. பரமானந்தர் திடீரென மாரடைப்பால் செத்துவிட்டாராம். பத்மாவும் நாங்களும் போய் வருகிறோம். நன்னித்தம்பியும் மனைவியும் இங்கு உன் தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள்” என்று கூறிப் ‘பத்மா’வையும் பாக்கியத்தையும் அழைத்துக் கொண்டு கொழும்பு ‘கிஷ்கிந்தா’வுக்குப் புறப்பட்டுவிட்டார். இரண்டு நாட் கழித்து அவர் ‘அமராவதி’ மீண்ட போது பரமானந்தர் பிரச்சினை மீண்டும் தலை எடுக்காதபடி முற்றாகத் தீர்ந்துவிட்டது.
கொழும்பிலிருந்து மீண்ட சுசீலாவிடம் ஸ்ரீதர், “பத்மா, அப்பா இறந்தது உனக்குப் பெரிய கவலையாயிருக்குமே, என் செய்வது. நாடகக் கலையில் அவர் போல் ஆர்வம் கொண்ட வேறு கிழவர் எவரையும் நான் பார்த்ததில்லை.” என்றான்.
சுசீலா உண்மையில் அப்பாவை இழந்தவள் போலவே நடிக்க வேண்டியதாயிற்று. கண்ணுக்கு முன்பே தந்தை நன்னித்தம்பியர் சுறுசுறுப்போடு நடமாடிக் கொண்டிருக்க, தந்தையை இழந்தவள் போல நடிப்பது அவளுக்கு இலேசாக இருக்கவில்லை. “அப்பா இறந்துவிட்டார்” என்று சொல்லும் ஒவ்வொரு தடவையும் அப்பா “நீண்ட நாள் வாழ வேண்டும்” என்று தனக்குள் தானே தெய்வங்களை வேண்டிக் கொண்டாள் அவள்.
பாக்கியத்தைப் பொறுத்தவரையில் தன் மகனைப் பல்வேறு பொய்களால் ஏமாற்ற வேண்டியிருக்கிறது என்பது அவளுக்கு அதிக துக்கத்தைத் தரவே செய்ததாயினும் இது சம்பந்தமாக வள்ளுவரின் குறளொன்று அவள் துக்கத்தை ஓரளவு குறைத்தது. வள்ளுவர் “பொய்மையும் வாய்மை உடைத்தே புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்” (குற்றமற்ற நன்மையைத் தருமாயின் பொய்யும் சத்தியத் தன்மை கொண்டதேயாகும்) என்று கூறியிருப்பதை அவள் இடையிடையே நினைவுபடுத்திக் கொண்டாள். சிவநேசரும் தானும் சுசீலாவுமாகச் சேர்ந்து அவ்வீட்டில் நடத்திக் கொண்டிருந்த நாடகம் பொய்மை நிறைந்ததேயாயினும், அபாக்கியவானான ஓர் இளைஞனுக்கு அதனால் இன்ப வாழ்வு சித்தித்தது சிறப்பல்லவா என்று அவள் தன்னைத் தானே தேற்றிக் கொள்வது வழக்கம்.
இந்த ஆள் மாறாட்ட நாடகத்தால் சுசீலாவுக்கு ஏற்பட்ட சோதனைகளோ பல. உதாரணமாக ஸ்ரீதரும் சுசீலாவும் மேல் மாடியில் ஊஞ்சற் பலகையில் ஒரு நாள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, தந்தை நன்னித்தம்பியரும் தாய் செல்லம்மாவும் அங்கு வந்தனர். ஆளரவம் கேட்ட ஸ்ரீதர் “இராசாத்தி, அது யார்?” என்று கேட்டான்.
சுசீலா திடுக்கிட்டு விட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வாய் தவறி “அப்பாவும் அம்மாவும்” என்று சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? “அப்பாவா? அப்பா பரமானந்தர் தான் செத்துவிட்டாரே? அம்மாதான் உனக்கில்லையே?” என்று ஸ்ரீதர் கூறியிருப்பானல்லவா? அதன் பயனாக நாடகமே முற்றாக வெளிப்பட்டிருக்கவும் கூடும். ஆகவே எப்படியோ தன் வாயை அடக்கிக் கொண்டு, “நன்னித்தம்பியரும் பெண்சாதியும்” என்று கூறினாள் அவள். பெற்ற தாயையும் தந்தையையும் கூடத் தாய் தந்தையர் என்று கூற முடியாத நிலை. சொந்த அப்பாவையும் அம்மாவையும் கூட பிறத்தியாரைப் போல் பேர் சொல்லி அழைக்க வேண்டியிருக்கிறதே என்றெண்ணியதும் அவள் நெஞ்சம் பட்ட வேதனையைக் கூற முடியாது.
தன் கணவனின் சுகத்துக்காகத் தன்னைத் தானே இவ்வாறு அழித்துக் கொண்டு வாழ்ந்தாள் சுசீலா. அவள் தன் பெயரை மட்டுமா இழந்தாள். பெற்றோரையுமல்லவா இழந்து விட்டாள்.
ஸ்ரீதருக்குத் தனது திருமணத்தை விமரிசையாகச் செய்ய முடியாது போய் விட்டதே என்பதும், ‘கிஷ்கிந்தா’வில் கனவு கண்ட மாதிரித் தனது நண்பன் சுரேஷ் தனது கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியாது போய் விட்டதே என்பதும் பெரும் கவலையைத் தந்து வந்த விஷயங்களாகும். இருந்தாலும் என்ன செய்வது, சற்றும் நினையாத மாதிரிச் சந்தர்ப்ப சூழல்கள் மாறிப் போய் விட்டதால் ஏற்பட்ட விளைவுகள் இவையென்று அவன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான்.
இருந்தாலும் திடீரெனச் சுரேஷின் நினைவு வந்ததும் ஒரு வேலைக்காரனின் துணையோடு யாருமறியாமல் சுரேசுக்கு ஒரு கடிதத்தை எழுதிப் போட்டுவிட்டான் ஸ்ரீதர். பெரிய காகிதங்களில் கொட்டை எழுத்துகளில் எழுதிய அக்கடிதத்தை அவன் தன் ‘பத்மா’வுக்குக் காட்ட விரும்பவில்லை. கடிதத்தில் பத்மாவை வானளாவப் புகழ்ந்திருந்ததால் நிச்சயம் ‘பத்மா’ அதை வெட்கத்தின் காரணமாகத் தபாலில் சேர்க்க மறுத்திருப்பாள் என்று அவன் அஞ்சியதே அதற்குக் காரணம்.
இக்கடிதத்தில் ஸ்ரீதர் தானே இவ்வுலகின் பெரிய அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டிருந்தான். “இல்லா விட்டால் நான் குருடனாகிய பிறகும் பத்மா என்னை மணமுடிக்கச் சம்மதித்திருப்பாளா?” என்று அவன் கேட்டிருந்தான். ‘பத்மா’ போன்ற ஒரு பெண் இப்படி ஒரு குருடனைத் திருமணம் செய்த வரலாற்றை நான் கதைகளில் கூடப் படித்ததில்லை. ஆகவே அவளை ஓர் உத்தமி என்றும், தெய்வப் பெண்ணென்றும் நான் கொண்டாடுவதில் தப்பில்லையல்லவா? சுரேஷ், நீ ‘அமராவதி’க்கு வந்தால் பத்மாவின் பெருமையை நேரே காண்பாய். கண்ணற்ற எனக்குக் கண்ணக விளங்குகிறாள் அவள்.” என்று அவன் எழுதியிருந்தான்.
இதற்குச் சுரேஷ் விமானத் தபால் மூலம் அனுப்பிய பதில் பத்து நாட்களில் வந்து சேர்ந்துவிட்டது. அதைச் சுசீலாவிடம் கொடுத்து வாசிக்கும் படி சொன்னான் ஸ்ரீதர். சுசீலா வாசித்தான்:
என் அன்பு நண்பா ஸ்ரீதர்,
உண்மைதான். நீ அதிர்ஷ்டசாலியே. உன் கண்கள் பார்வை இழந்ததை அறிந்தும் உன்னைத் திருமணம் செய்த பத்மாவை எவ்வளவும் பாராட்டலாம். அவளை நீ உன் வாழ்வின் தெய்வமென்கிறாய். நான் அதை மறுக்கமாட்டேன். நீ சகல சம்பத்தும் பெற்று வாழ வேண்டுமென்பதே என் நினைவு. நான் இலங்கை வந்ததும் உன்னைக் காண அமராவதிக்கு ஓடி வருவேன். பிற பின்.
இப்படிக்கு, சுரேஷ்.
இக்கடிதத்தை வாசித்துக் காட்டிய சுசீலாவுக்குத் தாங்கொணாத கொந்தளிப்பு உள்ளத்தில் ஏற்பட்டது. பத்மா, பத்மா, பத்மா – தன்னை உயிரிலும் மேலாக நேசித்த காதலனை, கண் பார்வை குன்றியதென்பதற்காக ஒரேயடியாகக் கைவிட்டுவிட்ட கேடு கெட்ட பெண் தெய்வப் பெண்ணாகப் போற்றப்படும் இவ்விசித்திரத்தை என்னென்பது? இதை யாருக்குச் சொல்வது? கொடுமை செய்த பத்மா போற்றப்படுகிறாள். ஆனால் சுசீலாவோ? அவள் பெயரே உலகிலிருந்து மறைந்து விட்டது. ஆம், ஸ்ரீதருடைய உள்ளக் கோவிலின் மூலஸ்தானத்தில் பத்மா வீற்றிருக்க, சுசீலாவுக்கோ அக்கோவிலின் பிரகாரங்களில் கூட இடமில்லாது போய்விட்டது.
பல்லைக் கடித்துக் கொண்டு நாத் தளு தளுக்கக் கடிதத்தை வாசித்த சுசீலாவிடம் ஸ்ரீதர் “பார்த்தாயா சுரேஷின் கடிதத்தை. அவனும் என்னைப் போலவே உன்னை ஒரு தெய்வ மகளாகக் கொண்டாடுகிறான்” என்றான். சுசீலா என்ன சொல்லுவாள்?
ஒரு நாள் சுசீலா ஸ்ரீதரிடம் ஏதோ ஒரு திடீர் நினைப்பிலே “உங்களுக்கு நன்னித்தம்பியர் மகள் சுசீலாவைத் தெரியுமா?” என்று கேட்டான்.
“ஆம் தெரியும்” என்று தலையை ஆட்டிய ஸ்ரீதர் “ஏன் நீ அவளைச் சந்தித்தாயா?” என்று ஒரு கேள்வியையும் கேட்டு வைத்தான்.
பேதையான சுசீலா “ஆம், நேற்றுச் சந்தித்தேன். அவளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.” என்று கேட்டாள். ஸ்ரீதர் சுசீலாவைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்ல மாட்டானா என்ற உள்ளத்தின் ஏக்கத்திலேயே அவள் அக்கேள்வியைக் கேட்டாள்.
ஆனால் ஸ்ரீதரோ “சுசீலாவைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது? நான் என் பத்மாவைத் தவிர வேறு பெண்களைப் பற்றி எப்பொழுதுமே எண்ணுவதில்லை இராசாத்தி” என்றான்.
பத்மா! அவள் என்ன சொக்குப் பொடி போட்டாளோ ஸ்ரீதரின் உள்ளத்தை இவ்வளவு தூரம் கவர்ந்துவிடுவதற்கு.
சுசீலாவின் வாழ்க்கையில் இடையிடையே இப்படிப்பட்ட எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த போதிலும், அவற்றைத் தனது திட சங்கல்பத்துக்கு விடப்பட்ட சவாலாகக் கருதி எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு கொண்டிருந்தாள் அவள். “நான் ஸ்ரீதரைத் திருமணம் செய்வதற்குத் திடீர் முடிவு செய்தது எனது சொந்த இன்பத்தைக் கருதியல்லவே. பட்டுப் போன அவரது வாழ்க்கையைத் தளிர்க்க வைப்பதற்குத்தானே. அதில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். அவ்வெற்றியை மேலும் பேணுவதற்கு நான் செய்ய வேண்டிய தியாகங்கள் பல. அவற்றைப் பெரிதுபடுத்தி ஒருபோதும் நான் என் சிந்தையைக் கலங்க விட மாட்டேன்.” என்று தீர்மானித்த அவள் நாளடைவில் எதையும் தாங்கும் நெஞ்சுரத்தைப் பெற்றுவிட்டாள்.
சில சமயங்களில் விசித்திரமான எண்ணங்கள் சிலவும் அவள் உள்ளத்தில் வரும். “பத்மாவோடு பழகுவதற்கு முன் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கேற்பட்டிருந்தால் நிச்சயம் அவர் இன்று பத்மாவை நேசிப்பது போல் என்னை நேசித்திருப்பார். என் பேச்சு அவருக்குப் பிடித்திருக்கிறது. என் பாட்டு அவருக்குப் பிடித்திருக்கிறது. நான் தினசரி அவருக்குச் செய்யும்ப் பணிவிடைகள் அவருக்குப் பிடித்திருக்கின்றன. என் கைகளின் திரட்சி, தோளின் வளைவு, ஏன் பொதுவாக என் அங்க அமைப்பு முழுவதும் அவருக்குப் பிடித்திருக்கிறது. அடிக்கடி அவர் அவற்றை வர்ணிக்கத் தானே செய்கிறார். ஏன் அன்றொரு நாள் “பத்மா, முன்னர் நீ இவ்வளவு மொளு மொளு என்றிருக்க மாட்டாயே. திருமணத்திற்குப் பின் கொழுத்து விட்டாய். நிச்சயம் அது உன் அழகைக் கூட்டியிருக்கும். ஆனால் என்னால்தான் உன்னழகைப் பார்க்க முடியாதே” என்றாரல்லவா? இது எதைக் காட்டுகிறது? தன் நினைவிலுள்ள பத்மாவின் மனச் சித்திரத்தையும் என்னையும் ஒப்பிட்டு நானே பத்மாவிலும் பார்க்க அழகி என்று அவர் கருதுவதைத் தானே? அப்படியானால் இருவரையும் ஒரு சேரக் கண்டிருந்தால் நிச்சயம் என்னைத்தான் அவர் விரும்பியிருப்பார்?” – இத்தகைய எண்ணங்கள் சுசீலாவின் இதயத்தில் ஒருவித திருப்தியைக் கொண்டு வரும்; உள்ளத்தின் சோகம் விஸ்வரூபம் எடுத்து வாழ்க்கையைக் கெடுக்காது தடுக்கும்.
ஸ்ரீதர் – சுசீலா திருமணம் நடந்து பத்து மாதங்கள் கழித்து ஒரு நாள் ‘அமராவதி’ வளவில் பெரிய கொண்டாட்டம். குலத்தை விளங்க வைக்கச் சின்ன ஸ்ரீதரன் ஒருவன் அங்கு வந்துவிட்டதே அதற்குக் காரணம். வீடு ஓரே ஒளிமயமாயிற்று. எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்பட்டது. பிள்ளை பிறப்பதற்கு முன் ஸ்ரீதரை ஓர் அச்சம் மிகுந்திருந்தது. ஆகவே தாய் பாக்கியம் சுசீலாவின் அறையிலிருந்து ஓடி வந்து அவனை உச்சி மோந்து “அடே உனக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கிறான்” என்ற போது “அம்மா, அவன் கண்கள் எப்படியிருக்கின்றன? நன்றாயிருக்கின்றன அல்லவா?” என்று கேட்டான் ஸ்ரீதர்.
“இது என்னடா கேள்வி. அவன் கண்கள் மிகவும் நன்றாயிருக்கின்றன. நீ பிறந்த போது எவ்வளவு அழகாயிருந்தாயோ அதை விட அழகாயிருக்கிறான் அவன்” என்றாள் தாய்.
“ஆனால் அதைத்தான் என்னால் பார்க்க முடியாதே” என்றான் ஸ்ரீதர்.
அதைக் கேட்ட பாக்கியத்தின் கண்கள் கலங்கின.
ஸ்ரீதரின் குருட்டுக் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. அது ஆனந்தக் கண்ணீரா? அவன் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது உண்மையேயாயினும், தன் அழகு மகனைத் தான் பார்க்க முடியாதே என்ற ஏக்கமும் அவன் இதயத்தைப் பிய்க்கவே செய்தது.
25-ம் அத்தியாயம்: சுரேஷின் திகைப்பு!
ஸ்ரீதர் தன் மகன் பிறந்து ஆறு மாதங்களின் பின் ஒரு நாள் காலை 10 மணியளவில் ‘அமராவதி’ மாளிகைக்கு முன்னாலிருந்த பெரிய வேப்பமரத்தின் குளிர்ந்த நிழலில் ஒரு வசதியான நாற்காலியில் உட்கார்ந்து தன் குண்டு மகனோடு விளையாடிக் கொண்டிருந்தான். செக்கச் செவேலென்று உருண்டு திரண்டு சீனத்துப் பொம்மை போல் விளங்கிய முரளிதரன் – அது தான் சின்னச் ஸ்ரீதரின் பெயர்- ஸ்ரீதரின் மடியில் ஒரு நிலையில் நில்லாது புரள்வதும், பல விதமான ஒலிகளைச் செய்து சிரித்துக் கூத்தடிப்பதுமாக இருந்தான். நல்ல தேகாரோக்கியத்துடனும் உயிர்த் துடிப்போடும் விளங்கிய முரளி என்னதான் சின்னவனாக இருந்தாலும், அவனை அங்குமிங்கும் விழுந்து விடாமல் பிடித்து வைத்து வேடிக்கை காண்பிப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஆகவே “முரளி, புரளி பண்ணாதே” என்ற இன்பப் பல்லவியை அடிக்கடி பாடிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர். அவனுக்கு அந்தப் பல்லவியைத் திருப்பித் திருப்பிச் சொல்வதில் தனி ஆனந்தம்.
ஸ்ரீதருக்கு முன்பு இசை என்றால், உயிரல்லவா? அப்போதெல்லாம் பிரபல இசைக் கவிஞர்களின் இசைத்தட்டுகளை ரேடியோகிராமில் போட்டு, அவற்றைக் கேட்டு மகிழ்வது அவனது வழக்கம். ‘பத்மா’வையும் “பாடு, பாடு” என்று அடிக்கடி தொல்லைப்படுத்துவான். ஆனால் இப்பொழுதோ அவை முற்றாக நின்றுவிட்டன. முரளியின் “கீயா மாயா” மழலையும் அவன் கைதட்டிச் சிரிக்கும் ஒலியுமே அவனுக்குப் பேரிசையாக அமைந்துவிட்டன. ஏன்? முரளியின் அழுகை கூட, “ஐயோ, அவன் ஏன் அழுகிறான்?” என்ற வேதனையை மனதில் ஏற்படுத்திய போதிலும் ஓர் இன்னிசையாகவே அவன் காதுகளுக்குப் பட்டது.
“பார் இராசாத்தி! திருவள்ளுவர் சொன்னது எவ்வளவு உண்மை! “யாழினிது குழலினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்?” என்பதை முரளி பிறந்த பிறகு தான் நான் நன்கு உணர்கிறேன். ஆனால் திருவள்ளுவரைப் பொறுத்த வரையில் அவர் அறிஞரானதால், அவர் மனைவி வாசுகி அவருக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுக்காமலே, மழலையின் இனிமை அவருக்குத் தெரிந்துவிட்டது, பார்த்தாயா? ‘பத்மா’ என்னைப் பொறுத்தவரையில் நான் வள்ளுவரை விட அதிர்ஷ்டசாலி. நீ வாசுகியைப் போலில்லாமல் எனக்குப் புரளிக்கார முரளியைப் பெற்றுத் தந்துவிட்டாயல்லவா? இந்த வகையில் பார்த்தால் வள்ளுவருக்கு வாய்த்த வாசுகியை விட எனக்கு வாய்ந்த நீ மேலானவள்” என்று அடிக்கடி சொல்லுவான்.
மடியில் குழந்தையை வைத்திருப்பதில் ஸ்ரீதருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. தவறுதலாகத் தனது கைவிரல்கள் முரளியின் கண்களைக் குத்திவிட்டால் என்ன செய்வது என்பதுதான் அது. இப்படிப்பட்ட விபத்து ஏற்படாது தடுப்பதில் அவன் கண்ணும் கருத்துமாயிருந்தாலும், தவறுதலாக அவ்வித நிகழ்ச்சி எதுவும் ஏற்பட்டுவிட்டால், அதனால் முரளிக்கு அதிக துன்பம் விளைந்து விடக் கூடது என்பதற்காகத் தன் கையின் நகங்களைச் சுசீலாவைக் கொண்டு மிக மிக மொட்டையாக வெட்டி வைத்திருந்தான ஸ்ரீதர். அதன் பயனாக முரளியின் மொட்டைக் கோலப் பிஞ்சு விரல்களும் ஒன்று போலவே காட்சியளித்தன. சுசீலா ஒரு நாள் அவர்கள் இருவரது மொட்டை விரல்களையும் ஒட்ட வைத்துக் கொண்டு,
தந்தை விரலும் மொட்டை
தம்பி விரலும் மொட்டை
அப்பா விரலும் மொட்டை
அம்பி விரலும் மொட்டை
இரண்டு பேராலும்
அம்மாவைக் கிள்ள முடியாது
என்று பாட்டுப் பாடிக் கும்மாளமிட்டாள். ஸ்ரீதருக்கு ஒரே ஆனந்தம். “டார்லிங், இந்தப் பாட்டை நீ எங்கே கற்றாய்?” என்று கேட்டான் ஸ்ரீதர். “நானாகப் பாடினேன். நான் தான் தான்தோன்றிக் கவிராயி” என்று கூறிச் சுசீலா மேலும் கும்மாளமடித்தாள். முரளிக்குக் கிச்சுக் கிச்சுக் காட்டினாள்.
“நீ நல்லாய்ப் பாட்டுக் கட்டுகிறாயே. இன்னொரு பாட்டுப் பாடு” என்றான் ஸ்ரீதர்.
சுசீலா பாடினாள். ஆனால் அதற்கு முகவுரையாக “இது அப்பாவைப் பற்றியல்ல, அம்பியைப் பற்றி.” என்று கூற அவள் மறக்கவில்லை.
“பாலைக் கொடுத்தபோது
பாலைக் குடிக்க மறுத்து
புரளிக் கார முரளி
புல்லுத் தின்னப் போனான்
புல்லும் கைய்த்த தென்று
காறித் துப்பி வந்தான்
அம்மா முன்னே வந்து
அண்ணாந்து நின்றான்.
அம்மா அவனைத் தூக்கி
அருந்து பாலை என்றாள்.
அதற்குப் பிறகு முரளி
அச்சாப் பிள்ளை இப்போ.
புரளி செய்வதில்லை.
புல்லுத் தின்பதில்லை.”
சுசீலாவின் பாட்டைக் கேட்டு ஸ்ரீதர் கலகலவென்று சிரித்துவிட்டான். அவன் கண்கள் குருடாயிருந்த போதிலும் இக்கவிதை அவனது மனத்திரையில் தன் மகன் குண்டு முரளி, வெறும் மேலுடன் தன் பூக்கரங்களைப் பின்னால் கட்டிக் கொண்டு அம்மாவை அண்ணாந்து பார்ப்பது போன்ற சித்திரமொன்றைத் தோற்றுவித்து விட்டது. சிறிது நேரம் அதில் சொக்கியிருந்த அவன், “இதுவும் ‘தான்தோன்றிக் கவிராயி’யின் பாட்டுத்தானா?” என்று கேட்டான்.
“ஆம்” என்றாள் சுசீலா, சிரித்துக் கொண்டு.
வாழ்க்கை இவ்வாறு இன்பச் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த போது அதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துவது போல லண்டன் சென்றிருந்த டாக்டர் சுரேஷ் தனது மேற்படிப்பை முடித்துக் கொண்டு இலங்கை மீண்டான். இலங்கை வந்ததும் அவன் செய்ய நினைத்திருந்த முதலாவது வேலைகளில் ஒன்று ‘அமராவதி’க்கு வந்து தனது நண்பன் ஸ்ரீதரைச் சந்தித்து அவன் கண் நோய்ப் பற்றி அவனுடன் பேசி, அவனது கண்களுக்கு மீண்டும் ஒளி கொடுக்கத் தன்னாலான முயற்சியைச் செய்வதாகும்.
சுரேஷைப் பொறுத்தவரையில் அவன் கண் டாக்டரல்லாவிட்டாலும் சிறந்த கண் டாக்டர்களுடன் கண் வைத்தியத்தின் இன்றைய நிலைமை பற்றி அவன் பல தடவை பேசியிருக்கிறான். அதன்படி முன்னர் தீர்க்கப்படாத பல கண்ணோய்கள் இப்பொழுது தீர்க்கப்படக் கூடிய நிலையை அடைந்துவிட்டதையும் ஒரு சில மிகச் சிறந்த அறிவும், துணிவும் கொண்ட கண் டாக்டர்கள் சாதித்ததற்கரிய சில சாதனைகளை இத்துறையில் செய்திருப்பதைப் பற்றியும் அவன் கேள்விப் பட்டிருக்கிறான். இப்படிப்பட்ட கண் டாக்டர்களில் ஒருவர் தான் பிரிட்டிஷ் பேராசிரியர் டாக்டர் நிக்கலஸ் நோர்த்லி. அகில உலகிலும் மிகச் சிறந்த கண் டாக்டர்கள் ஒரு சிலரே இருக்கின்றனர் என்றும் அவர்களில் டாக்டர் நிக்கலஸ் நோர்த்லி ஒருவர் என்றும் பத்திரிகைகள் அவரைப் போற்றிப் புகழ்ந்தெழுதியமையை அவன் பல தடவை வாசித்திருக்கிறான். உண்மையில் அவர் பெயர் இரண்டு தடவை சர்வதேச வைத்தியப் பரிசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டதையும் ஒரு சில அரசியல் காரணங்களினால் அது சாத்தியமாகாது போனதையும் கூட அவன் அறிவான். சூடான செய்திகளைப் பிரசுரிப்பதில் புகழ் பெற்ற ஒரு பிரிட்டிஷ் பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டு, பிரிட்டன் பூராவும் பெரிய பரபரப்பை ஊட்டியதும் அவனுக்குத் தெரியும். பிரிட்டிஷ் பொதுமக்களைப் பொறுத்த வரையில் என்ன தான் எதிர்ப்பிருந்தாலும், என்றைக்கோ ஒரு நாள் டாக்டர் நோர்த்லி சர்வதேச வைத்தியப் பரிசைப் பெற்றே தீர்வார் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கவே செய்தது. சுரேஷ் தன்னுடன் படித்த ஆங்கில மாணவர்களுடன் பேசுவதன் மூலம் இதை அறிந்து கொண்டான்.
மேலும் இது பற்றி ஒரு பத்திரிகையின் நேயர் கடிதப் பகுதியில் எழுதப்பட்ட கடிதங்கள் ஒன்றும் சுரேஷிற்கு இன்னும் நன்கு நினைவிருந்தது. “சர்வதேசப் பரிசு. பேராசிரியர் நோர்த்லியின் சாதனைகளுக்கு அப் பரிசு மிகச் சிறிய பரிசே. அது கிடைக்காததால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை. முழு உலகாலும் கபோதி எனக் கை விடப்பட்ட நான் இருபது வருடங்களின் பின் என் கண்ணை அவரால் மீண்டும் பெற்றேன். என் போன்றவர்களின் நன்றியே அவருக்கு உலகின் மிகப் பெரிய பரிசாம். எந்த நோயாளியும் அரசியல் காரணங்களுக்காக இந்தப் பரிசை இம்மேதைக்களிக்க மறுக்கமாட்டானல்லவா? சர்வதேசப் பரிசு மிகச் சிறியதென்பதற்காகவே அது அவருக்கு அளிக்கப்பட வில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த அற்பப் பரிசு இனி மேல் அவருக்கு அளிக்கப்பட்டால் நிச்சயம் அவர் அதை வாங்கிக் கொள்ளக் கூடாது” என்ற ரீதியில் அது எழுதப்பட்டிருந்தது.
அதிர்ஷ்டவசமாக சுரேஷ் படித்த வைத்தியக் கல்லூரியிலே பேராசிரியர் நோர்த்லியும் கல்வி கற்பித்தார். இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்றென்றால், அதுவும் நழுவி வாயில் விழுந்தது போன்ற நிலைமையும் இவ்விஷயத்தில் சீக்கிரமே உண்டாயிற்று. பேராசிரியர் நோர்த்லி தமது ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியை உலக சமாதான இயக்கத்துக்காகவும் காலனிகளின் விடுதலைக்காகவும் எப்பொழுதும் செலவிட்டு வந்தார். இது சம்பந்தமாக நடைபெற்ற ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் சுரேஷ் படித்த வைத்தியக் கல்லூரி மாணவர் மாணவிகள் அடிக்கடி கலந்து கொள்வது வழக்கம். “காலனி முறை ஒழிக! பேராசிரியர் நோர்த்லி வாழ்க!” என்று அவர்கள் பேராசிரியரின் பின்னல் அட்டைகளைத் தாங்கிச் சுலோகங்களை முழங்கிக் கொண்டு செல்வார்கள். இந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டதால் பேராசிரியருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு சுரேஷிற்கும் ஓரளவு ஏற்பட்டது. வகுப்பில் மிகக் கண்டிப்பாக இருக்கும் பேராசிரியர் இந்த ஊர்வலங்களின் போது ஒரு புது மனிதராகிவிடுவார். சுலோகங்களைத் தானும் சேர்ந்தும் முழங்குவார். மாணவர்களுடன் சேர்ந்து பாட்டுக்கள் கூடப் பாடுவார்.
இவற்றாலேற்பட்ட பழக்கத்தை வைத்து ஒரு நாள் சுரேஷ் அவரிடம் ஸ்ரீதரின் கண் பிரச்சினையைப் பற்றி விவரித்தான். “இதை உங்களால் சுகமாக்க முடியுமா?” என்று கேட்டான்.
அதற்குப் பேராசிரியர் நிக்கலஸ் “உனது கேள்விக்கு நான் எப்படிப் பதிலளிக்க முடியும். கண் நோய்களில் எத்தனையோ வகையுண்டு. இதில் உனது நண்பனின் கண் நோய் எந்தவிதமானதென்பது யாருக்குத் தெரியும்? நன்கு பரீசிலித்துப் பார்த்த பிறகுதான் பதில் சொல்ல முடியும்.” என்ரு கூறிவிட்டுத் திடீரென “ நீ எந்தத் தேசத்தைச் சேர்ந்தவன்? இந்தியாவா?” என்று கேட்டார்.
“இல்லை. இந்தியாவுக்கு அடியில் ஒரு தாமரை பொட்டுப் போல் இருக்கிறதே இலங்கை – அதுவே என் நாடு.” என்றான் சுரேஷ்.
“ஓ! அப்படியா? நான் இலங்கையைப் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அழகான நாடென்று சொல்லுகிறார்கள். நான் அங்கே வந்து உன் நண்பனைப் பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை” என்றார் டாக்டர் நிக்கலஸ்.
சுரேஷ் திகைத்துவிட்டான். ஸ்ரீதர் அதிர்ஷ்டசாலிதான் என்றெண்ணிய அவன், “நிச்சயம் நீங்கள் வர வேண்டும். அங்கே நீங்கள் வேண்டிய காலம் தங்கியிருந்து சுற்றுப்பிரயாணம் செய்வதோடு ஸ்ரீதரையும் குணமாக்க வேண்டும்.” என்று வேண்டிக் கொண்டான்.
“ஆம்.” என்று தலையை ஆட்டிய பேராசிரியர் பின் அதனைத் தொடர்ந்து “ஆனால் என்னைத் தான் உனக்குத் தெரியுமே? கல்லூரி வேலையைத் தவிர்த்து, நூல்கள் எழுதும் வேலை, சிகிச்சை வேலை, சமாதான இயக்க வேலைகள் என்று ஓய்வேயில்லை. ஆகவே திகதி சொல்ல முடியாது. திடுதிப்பென்று அறிவிப்பேன். உடனே பிரயாண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தெரிகிறதா?”
“மெத்தச் சரி” என்றான் சுரேஷ் மகிழ்ச்சியுடன்.
இந்த ஏற்பாட்டைப் பற்றி ஸ்ரீதருக்குச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் தான் யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் ‘அமராவதி’க்குத் தனது மாமனார் வாங்கிக் கொடுத்த புதிய காரில் ஸ்ரீதரைப் பார்க்க வந்தான் சுரேஷ்.
சுரேஷ் ‘கிஷ்கிந்தா’வில் இரண்டு வருட காலம் ஸ்ரீதருடன் ஒன்றாக வாழ்ந்திருந்த போதிலும், ‘அமராவதி’க்கு வந்தது, இதுவே முதல் தடவை. ஆகவே அவனுக்கு ‘அமராவதி’ மாளிகையின் வாசற்காவல் முறை மிகவும் விசித்திரம் நிறைந்ததாகவும் கர்வம் நிறைந்ததாகவும் தோன்றியது. லண்டனிலுள்ள பங்கிங்ஹாம் மாளிகையிலும் கொழும்பிலுள்ள கவர்னர் இல்லத்திலும் தான் அவன் இத்தகைய ஏற்பாடுகளைக் கண்டிருக்கிறான். ஆனால் அவ்விடங்களோ உத்தியோக வாசஸ்தலங்களாயிருப்பதால் அத்தகைய ஏற்பாடுகள் அவற்றுக்கு வேண்டியதுதான். ஆனால் சிவநேசரோ தாம் பணக்காரரென்பதாலும், தமது பிரபுத்துவ அந்தஸ்தைக் காப்பாற்றுவதற்குமாகவே இவ்வித கெடுபிடி ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். சிவநேசரின் இந்தப் போக்கு அவனுக்குப் பிடிக்கவே இல்லை.
“அமராவதி” வாசலுக்குச் சுரேஷ் வந்தபோது பிரதான வாயிலின் இரும்பு ‘கேட்’டுகள் இரண்டும் இறுகச் சாத்திக் கிடந்தன. பக்கத்திலிருந்த சிறிய ‘கேட்’டுக்குச் சமீபமாக காக்கிக் கோட்டு அணிந்த காவற்காரன் நின்று கொண்டிருந்தான். சுரேஷிடம் “யாரைப் பார்க்க வேணும்” என்று கேட்டான் அவன்.
“ஸ்ரீதரைப் பார்க்க வேண்டும். டாக்டர் சுரேஷ் வந்திருப்பதாகச் சொல்லு” என்றான் சுரேஷ். அதைக் கேட்டதும் காவற்காரன் வேப்பமர நிழலில் முரளியோடு விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீதரிடம் விரைந்தான்.
“ஐயா, டாக்டர் சுரேஷ் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்றான்.
“டாக்டர் சுரேஷா! உடனே வரச் சொல்லு” என்றான் ஸ்ரீதர்.
சிறிது நேரத்தில் “அமராவதி’யின் பெரிய ‘கேட்’டுகள் திறக்க, சுரேஷின் கார். வேப்பமரத்துக்குச் சற்றுத் தொலைவிலுள்ள புல் தரையில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சுரேஷ் ஸ்ரீதரைப் பார்த்து “ஸ்ரீதர் செளக்கியமா? நேற்றுத்தான் யாழ்ப்பாணம் வந்தேன். உடனே உன்னைப் பார்க்க வந்துவிட்டேன். அதிருக்க, உனக்கொரு நல்ல செய்தி. உலகத்திலேயே மிகப் பெரிய கண் டாக்டர் உனக்கு வைத்தியம் செய்ய நான் ஏற்பாடு செய்திருக்கிறேன்.” என்றான் உற்சாகமாக.
ஸ்ரீதருக்கு ஒரே மகிழ்ச்சி. மலர்ந்த முகத்தோடு “உண்மையாகவா? யாரது? டாக்டரின் பெயரென்ன?” என்றான்.
சுரேஷ் விவரங்களைக் கூறினான். அதன்பின் “ஸ்ரீதர்! நீ உன் கண் பார்வையை இழந்து விட்டாய் என்றறிந்ததும் நான் எவ்வளவு மனம் வருந்தினேன் தெரியுமா? கண் பார்வை இழந்த உனது நிலை எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்வதற்காக நான் லண்டனில் என் அறையிலே கண்களை மூடிக் கொண்டு பல தடவைகள் அங்குமிங்கும் நடந்து பார்த்தேன். உண்மையில் கண் பார்வையை இழப்பது என்பது மிகவும் பயங்கரமான ஒரு விஷயமே. ஆனால் நீயே அதை மிகவும் தைரியமாக எதிர்கொண்டு சமாளித்துவிட்டாய். உன் நிலையில் வேறு எவரும் உன்னைப் போல் இவ்வளவு சந்தோசமாயிருக்க மாட்டார்கள். அதற்காக உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று சொல்லிக் கொண்டே ஸ்ரீதரின் மடியிலிருந்த முரளியின் கன்னத்தைக் கிள்ளி வேடிக்கை காட்டினான். அதன்பின் அவனைத் தன் கரங்களால் தூக்கி “உன் மகன் சரியாக உன்னைப் போலவே இருக்கிறான். இவன் போன்ற அழகான குழந்தையைப் பெற நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலியாய் இருக்க வேண்டும். அவனோடு உன்னைப் பார்க்கும் போது உனக்குக் கண் பார்வை குறைந்ததையிட்டு எனக்கு அனுதாபம் ஏற்படவில்லை. பொறாமைதான் ஏற்படுகிறது. ஆனால் இவ்வளவு அழகான பிள்ளையைப் பார்க்க முடியவில்லையே என்று உனக்குக் கவலை இருக்கலாமல்லவா? பேராசிரியர் நிக்கலஸ் நோர்த்லி நிச்சயம் அதைப் போக்கி வைப்பார்” என்றான்.
ஸ்ரீதர் சிரித்துக் கொண்டு “உண்மையாகவே முரளி அவ்வளவு அழகாயிருக்கிறானா? அவன் முகத்தையும் உடலையும் என் விரல்களால் ‘பிரெயில்’ புத்தகங்களைத் தடவிப் பார்ப்பது போல் நான் அடிக்கடி தடவிப் பார்ப்பதுண்டு. தளுக்கு மொளுக்கென்று இருக்கிறான். நிறத்தில் என் அம்மாவைப் போல் இருக்கிறானாமே? அப்படி என்றால் அவன் அழகாய்த்தானிருப்பான். ஆனால் அவன் கண்கள் எப்படியிருக்கின்றன சுரேஷ்?” எனான்.
“கண்களா? சரியாக உன் கொட்டைப்பாக்கு விழிகள் போல் மிகப் பெரிய விழிகள். மிகவும் கவர்ச்சியாயிருக்கின்றன” என்று சொல்லிக் கொண்டே சுரேஷ் முரளியை மீண்டும் ஸ்ரீதர் மடியில் வைத்தான். அவன் தன் பிஞ்சு விரல்களால் ஸ்ரீதர் அணிந்திருந்த கறுப்புக் கன்ணாடியைப் பிடுங்கப் பிடிவாதமாக முயன்றான். அவனைச் சமாளிப்பது ஸ்ரீதர்க்கு மிகவும் கஷ்டமாய்ப் போய்விட்டது. கடைசியில் பக்கத்திலிருந்த ஒரு ‘கிலு கிலுப்பையை’ அவன் கையில் திணித்து தனது கண்ணாடியைக் குழந்தையிடமிருந்து காப்பாற்றிக் கொண்டான்.
இதற்கிடையில் சுசீலா அங்கு வந்து விட்டாள். “என்ன தகப்பனும் மகனும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கொண்டே முரளியைத் தன் கரங்களால் தூக்கிய சுசீலா டாக்டர் சுரேஷை ஏற இறங்கப் பார்த்துப் புன்னகை செய்தாள். நல்ல வேளை. “இது யார்?” என்ற கேள்வி அவன் வாயில் வந்ததாயினும் ஏனோ அவன் அக் கேள்வியைக் கேட்டு விடவில்லை.
சுசீலாவின் குரலைக் கேட்டதும் ஸ்ரீதர் “ஆ! பத்மா வந்து விட்டாயா? சுரேஷ்! பத்மாவைப் பார்த்தாயல்லவா? முன்னை விட அவள் இப்போது மிகவும் கொழுத்துப் போயிருக்கிறாள் இல்லையா?” என்றான்.
இதைக் கேட்டதும் சுரேஷ் திகைத்தான். சுசீலாவும் திகைத்துவிட்டாள்.
“என்ன இது? இவள் பத்மாவா? இதென்ன ஆள் மாறாட்டம்?” என்ற சிந்தனையில் ஸ்தம்பித்துக் கல்லாகி நின்றான் சுரேஷ்.
சுசீலாவைப் பொறுத்த வரையில் ஸ்ரீதரைப் பார்க்க ‘அமராவதி’ வளவுள்ளே வர எவரும் அனுமதிக்கப் படாமலிருக்கும் போது “யார் இவன், எப்படி வந்தான்?” என்ற நினைவில் குறுகுறுத்துக் கொண்டிருந்த அவள் நெஞ்சம் சுரேஷ் என்ற பெயரைக் கேட்டதும் திடுக்கிட்டு விட்டது. “சுரேஷா? அவரின் பிரிய நண்பரல்லவா சுரேஷ்? பத்மாவைக் கூட நன்கு அறிந்தவர். ஐயோ அவருக்கு ஆள் மாறாட்டம் தெரிந்துவிடுமே. இதனால் என்ன விபரீதம் நேரிடுமோ?” என்று கவலையடைந்தாள் அவள்.
சுரேஷ் திகைத்துப் போய் நின்ற நிலையிலிருந்து அவனுக்குத் தனது ஆள் மாறாட்டம் நன்கு புரிந்துவிட்டது என்பதை அவள் நன்கு அறிந்துகொண்டாள். தனது திருமண நாளிலிருந்து ஒன்றரை வருட கலத்துக்கு அதிகமாக அவள் நடத்தி அந்த ஆள் மாறாட்ட நாடகம் இன்று தான் முதன் முதலாக வெளியார் ஒருவருக்குத் தெரிய வந்திருக்கிறது. “ஆனால் இதற்குக் காரணம் யார்? நான் தானே?” என்று தன்னைத் தானே குறை கூறிக் கொண்டாள் அவள். “நான் எப்பொழுதும் அவர் பக்கத்திலிருக்க வேண்டுமென்ற நியதியை மீறியதால் அல்லவா இது நடந்திருக்கிறது. நான் பக்கத்திலிருந்தால் காவற்காரன் சுரேஷ் வரவை எனக்குக் கூறியிருப்பானல்லவா? ஆனால் நான் அக்கடமையிலிருந்து தவறி விட்டேன். இதனால் என்ன நிகழப் போகிறதோ?” என்று பயந்தாள் அவள்.
சுரேஷ் “நான் பத்மா அல்ல” என்ற விஷயத்தை ஸ்ரீதருக்குக் கூறிவிட்டால் என்ன செய்வது?” – இந்தப் பிரச்சினை பயங்கரமான ஒரு கேள்விக்குறியாக அவள் உள்ளத்தில் எழுந்தது. இருந்தாலும் அவள் கலங்கி விடவில்லை. என்றுமே சுறுசுறுப்பாகச் சிந்தித்துத் துடுக்காக வேலை செய்யும் பண்புள்ள சுசீலா, நிலைமையைச் சமாளிக்க ஒரு திடீர் முடிவுக்கு வந்துவிட்டாள்.
சுரேஷின் முகத்தை அவள் நிமிர்ந்து நோக்கினாள். அவள் கண்கள் சுரேஷின் கண்களுடன் பேசின. “ஒன்றும் பேச வேண்டாம்.” என்று கண்களால் அவனை எச்சரித்து தலையையும் அதற்குத் தக்கபடி அசைத்து, வாயில் மோதிர விரலை வைத்து மெளனக் குறிப்புக் காட்டினாள். சுரேஷிற்கும் விஷயம் புரிந்துவிட்டது. சிந்தனையின் இரேகைகள் படர்ந்த முகத்தோடு “சரி” என்று தலையை அசைத்தான் அவன்.
இவ்வளவும் அங்கே ஒரு கணத்தில் நடந்து முடிந்து விட்டது. சுரேஷும் சுசீலாவும் தம் பார்வையாலேயே ஓர் ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டார்கள்.
“நான் பத்மாவல்ல. ஆனால் ஸ்ரீதர் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார். நீர் அவருக்கு உண்மையைச் சொல்லி விட வேண்டாம்” என்றது அவளது பார்வை.
“ஆகட்டும்” என்றது சுரேஷின் கண்கள் பதிலுக்கு.
ஆனால் இந்த விஷயம் நடந்து கொண்டிருப்பதைச் சற்றுமறியாத ஸ்ரீதர் சுரேஷிடம், “என்ன சுரேஷ். பேசாமலிருக்கிறாய். எனக்குக் கண் தெரியாவிட்டாலும் கையால் பிடித்துப் பார்க்கும் போது அளவுகள் தெரியத் தானே தெரிகின்றன? நான் சொன்னது சரிதானே? பத்மா முன்னை விட இப்பொழுது பருத்துத்தானே இருக்கிறாள்?” விஷயத்தைத் தொடர்ந்து பேசினான்.
சுரேஷ் “ஆம் பத்மா முன்னை விட பருமன் தான். ஆனால் நான் அதைச் சொல்வது சரியா என்று யோசித்தேன். சிலருக்கு தாம் பருத்திருப்பதை மற்றவர்கள் சுட்டிக் காட்டுவது பிடிப்பதில்லையல்லவா?” என்றான்.
“ஓ! அதுதான் பதில் சொல்ல இவ்வளவு தயங்கினாய் போலும். ஆனால் நீ இவ்வாறு பேசுவதற்குக் காரணம் உனக்குப் பத்மாவைப் பற்றித் தெரியாததுதான். பத்மா அதிசயமான பெண். இல்லாவிட்டால் என் போன்ற குருடனை அவள் கட்டுவாளா? நிச்சயம் நீ எது சொன்னாலும் கோபிக்க மாட்டாள்.” என்றான்.
பின்னர் ஸ்ரீதர் பத்மாவிடம் சுரேஷ் தனக்கு கண் பார்வை தர ஏற்பாடு செய்திருப்பதைப் பற்றியும், உலகப்புகழ் பேராசிரியர் நிக்கலஸ் நோர்த்லி இலங்கை வர இருப்பதையும் பற்றியும் கூறினான். “பார்த்தாயா பத்மா. சுரேஷிற்கு என் மீது எவ்வளவு அன்பு” என்று அவன் கூறி முடிப்பதற்கும் வெளியே அலுவலாகச் சென்றிருந்த சிவநேசரும் பாக்கியம் தமது காரில் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. பாக்கியம் வந்ததை அறிந்ததும் “அம்மா!” எனக் கூவி சீக்கிரமே எனக்குக் கண் பார்வை தரப் போகிறான். அதற்காக உலகிலேயே மிகச் சிறந்த கண் டாக்டரை இலங்கைக்கு அழைத்து வர இருக்கிறான்.” என்றான்.
பாக்கியம் சுசீலாவின் கையிலிருந்த முரளியைத் தன் கரத்தில் வாங்கிக் கொண்டு ஸ்ரீதர் பக்கத்திலுட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். முரளியோ தன் பாட்டியின் நெஞ்சில் ஊசலாடிய பதக்கத்தோடு விளையாடத் தொடங்கினாள்.
சிவநேசர் சுரேஷையும் சுசீலாவையும் தன்னுடன் வரும்படி சைகை காட்டித் தோட்டத்தின் பிற்பகுதிக்கு அழைத்துச் சென்றார். வேலைகாரன் ஒருவனைக் கூப்பிட்டு, சுரேஷிற்கும் தனக்கும் குளிர்பானங்கள் கொண்டு வரும்படியும் உத்தரவிட்டார் அவர்.
குளிர்பானம் வந்ததும் அதை அருந்திக் கொண்டே சிவநேசர் ஆழ்ந்த சிந்தனையோடு “சுரேஷ், ஸ்ரீதருக்கு மீளவும் கண் பார்வை கிடைப்பதை நான் விரும்பவில்லை. அதனால் எவருக்கும் நன்மை ஏற்படாது.” என்றார்.
சுரேஷ் திடுக்கிட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றான்.
“ஏனா? அவனுக்கு இப்பொழுது ஒரு குறையுமில்லை. பணம், செல்வாக்கு, அழகான குழந்தை, அன்பு மனைவி… இவை எல்லாம் அவனுக்கு இன்று இருக்கின்றன. உண்மையில் அவன் இணையற்ற ஓர் இன்ப உலகிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் தன் கண் பார்வையை மீண்டும் பெற்றால், அவனது இவ்வின்ப வாழ்வு சுக்கு நூறாகிவிடும். அவன் தன் காதலை பத்மா என்று எண்ணியிருக்கும் பெண் உண்மையில் வேறு யாரோ என்றறிந்ததும் அவன் அவளை நிச்சயம் நிராகரிப்பான். நாங்கள் செய்த ஆள் மாறாட்டத்துக்காக அவன் எங்கள் எல்லோர் மீதும் கொதிப்படைவான். பத்மா இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா என்றெண்ணித் தன் உயிருக்கே அவன் ஆபத்து விளைவித்துக் கொள்ளவும் கூடும். இந்த நிலையில் அவன் இழந்து போன தன் கண் பார்வையை மீண்டும் பெறுவது தீமையே ஒழிய நன்மையில்லை.”
சிவநேசர் இவ்வாறு சொல்லிவிட்டு, சுசீலாவின் முகத்தைப் பார்த்தார். இவ்விஷயத்தில் தனது அபிப்பிராயத்தை அவர் அறிய விரும்புகிறார் எனத் தெரிந்து கொண்ட சுசீலா சுரேஷை நோக்கி “டாக்டர் சுரேஷ். நாங்கள் இங்கு ஒரு பெரிய நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறோம். உங்கள் நண்பர் பத்மாவைக் காதலித்தார். ஆனால் சந்தர்ப்ப சூழல்கள் அக்காதலை முறியடித்துவிட்டன. விதியின் விளையாட்டால் இன்று நான் அவர் மனைவி. ஆனால் கண் பார்வையை இழந்த அவர் என்னைப் பத்மா என்றே எண்ணுகிறார். என் குரல் அதற்கு உதவியாயிருக்கிறது. இன்று அவர் வழ்வது ஒரு கனவுலகம். ஆனால் அக்கனவைக் கலைக்க வேண்டாம். அவருக்கு இன்பம் அளிப்பதற்காக நாம் நடிக்கும் இந்நாடகத்தில் நீங்களும் ஒரு நடிகராக வேண்டும். இது அவரது இன்பத்துக்காக அவரது நண்பரிடம் அவர் மனைவி செய்யும் கோரிக்கை.” என்றாள்.
சுரேஷிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. திக்பிரமை பிடித்து மெளனமாக நின்றான்.
சிவநேசர் மீண்டும் பேசினார்:
“சுரேஷ்! நீ பேராசிரியர் நோர்த்லி இலங்கை வருவதாகச் சொன்னாயல்லவா? அவர் இங்கு வர வேண்டாம். அவர் வருவதும் கண் பார்வை தருவதும் ஸ்ரீதரின் நிம்மதிக்கும் பங்கம் விளைவிக்கும். ஆகவே அடுத்த தடவை நீ ஸ்ரீதரைச் சந்திக்கும் போது டாக்டர் நோர்த்லி வேலை நெருக்கடியால் இப்போதைக்கு வர முடியாதிருக்கிறதென்று கூறிவிடு. உண்மையில் நாம் இன்று ஸ்ரீதரை ஒரு கனவுலகில் சிறை வைத்திருக்கிறோம். அவன் அக்கனவுலகில் இன்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதை யாரும் கெடுக்கக் கூடாது. இன்னும், வாழ்க்கையே ஒரு கனவென்கிறார்கள் ஒரு சிலர். அப்படியானால் ஸ்ரீதர் மட்டுமல்ல நாம் அனுபவிப்பதும் கனவின்பங்கள் தானே? ஸ்ரீதரின் வாழ்வு அக்கனவுள் இன்னொரு கனவு. அவனும் இன்பங்களை அன்பவிக்கத் தான் செய்கிறான். பார்க்கப் போனால் அவன் நம்மை விட ஒன்றும் அதிகமாக இழந்து விடவில்லை. ஆனால் அவனது கனவு நீங்கினால் அவன் துன்பக் கேணியில் வீழ்ந்து விடுவான். அவன் இன்று அனுபவித்து வரும் மன நிறைவுக்கு முடிவேற்பட்டுவிடும். இதை நாம் தெரிந்து கொண்டு அனுமதிக்க முடியாது.”
சுரேஷின் நிலைமை தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஒருவனுக்குக் கண்பார்வை அளிப்பது பெரிய காரியந்தான். ஆனால் அதன் விளைவு அவனுக்கே தீமை விளைக்கும் என்று சுசீலாவும் சிவநேசரும் சுட்டிக்காட்டிய பின்னர் ஸ்ரீதருக்குக் கண் பார்வை அளிப்பது சரிதானா என்ற சந்தேகம் அவனுக்கே ஏற்பட்டுவிட்டது.
சிவநேசர் “சுரேஷ்! இந்த ஆள் மாறாட்ட நாடகத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காகப் பத்மாவையோ பத்மாவாக நடிக்கும் இப்பெண்ணையோ தெரிந்த எவரையும் ‘அமராவதி’க்கு வர நாங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இன்று அந்த ஏற்பாடுகளில் ஏதோ சிறு குழறுபடி ஏற்பட்டுவிட்டதால் எமது ஆள் மாறாட்ட நாடகத்தை நீ தெரிந்து கொண்டாய். இதன் இரகசியத்தை ஸ்ரீதரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் காப்பாற்றுவதாக நீ வாக்களிக்க வேண்டும்.” என்றார்.
சுரேஷ் “ஆகட்டும்” என்று தலையை அசைத்தான்.
அதன் பின் சுரேஷ், ஸ்ரீதர், சுசீலா, பாக்கியம், சிவநேசர் ஆகிய யாவரும் ஒன்றாக உட்கார்ந்து மத்தியான உணவருந்தினார்கள். முரளியோ ‘ஆயா’வின் மடியில் தூங்கச் சென்றுவிட்டான்.
உணவருந்தி முடிந்த பின்னர், இரண்டு மூன்று தினங் கழித்து மீண்டும் ஸ்ரீதரைச் சந்திக்க வருவதாகக் கூறி சுரேஷ் விடை பெற்றுச் சென்றான்.
வழி நெடுக, தனது வாழ்க்கையிலேயே முதல் முதலாகத் தான் கண்ட அதிசயமான ‘அமராவதி’ வளவு ஆள் மாறாட்ட நாடகத்தைப் பற்றியே அவன் மனம் மீண்டும் மீண்டும் சிந்தனை செய்து கொண்டிருந்தது.
26-ம் அத்தியாயம்: குருடன் கண்ட கனவு!
இருட்பொந்தொன்றிலே நீண்ட காலமாக அடைக்கப்பட்டிருந்த ஒருவன், திடீரென அப்பொந்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஒளிப் பிரவாகத்தால் குளிப்பாட்டப்பட்டால் அவன் நிலை எப்படியிருக்கும்? சுரேஷ் ‘அமராவதி’க்கு வந்து போனதிலிருந்து தனக்கு இந்த நிலை அதி சீக்கிரத்திலேயே வரப் போகிறதென்று மனப்பால் குடிக்க ஆரம்பித்துவிட்டான் ஸ்ரீதர், இனி வானத்துச் சந்திரனையும், முற்றத்து முல்லையையும் தன்னிரு கண்களாலும் கண்டு மகிழலாம் என்ற நம்பிக்கை வந்ததும் அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி கொஞ்சமல்ல. ஆனால் இவற்றைப் பார்ப்பதல்ல, அவனுக்கு முக்கியம். இவற்றை அவன் தன் கண்கள் குருடாவதற்கு முன்னர் போதிய அளவு பார்த்திருக்கிறான் தானே. ஆனால் அவன் தன் வாழ்க்கையிலேயே முன்னர் ஒரு போதும் பார்த்திராத பொருளொன்று இப்பொழுது இவ்வுலகில் இருந்தது. அதைப் பார்ப்பதுதான் அவனுக்கு முக்கியம். ‘அமராவதி’ மாளிகையின் சலவைக்கல் தளத்திலே தவழ்ந்து விளையாடிய அவனது அன்பு மகன் முரளியே அது. எங்கே அவனை ஒரு போதும் தன் வாழ்க்கையில் தன் கண்களால் பார்க்க முடியாதோ என்று அஞ்சியிருந்த அவனுக்குச் சுரேஷின் வருகை புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
“சுரேஷ்! என்ன அற்புதமான நண்பன். கர்ணனுக்கு வாய்ந்த கெளரவ புத்திரன் போல. இல்லை இல்லை. அர்சுனனுக்கு வாய்ந்த கிருஷ்ணனைப் போல – எனக்கு வாய்ந்த அற்புதமான் நண்பன் அவன்” என்று சுரேஷை மெச்சினான் அவன்.
ஸ்ரீதர் குருடான செய்தி அறிந்ததும் லண்டனிலுள்ள தன்னறையில் தானும் கண்ணை மூடிக் கொண்டு குருடன் போல் நடந்து பார்த்ததாக சுரேஷ் கூறினானல்லவா? அது அவனை மிகவும் உருக்கிவிட்டது. பாரதத்தில் பாண்டுவின் அண்ணான திருதராஷ்டிரனின் கண்கள் குருடென்ற காரணத்தினால் அவன் மனைவி காந்தாரி தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு தானும் ஓர் அந்தகியாய்க் காலம் கழித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? தனது பார்வை இழப்பில் பங்கு கொள்ள முயன்ற சுரேஷின் செய்கை காந்தாரியின் இந்தச் செயற்கரும் செய்கையைத் தான் அவனுக்கு ஞாபகமூட்டியது.
சுரேஷ் வந்து போனதிலிருந்து எந்த நேரமும் தன் கண் பார்வையைப் பற்றியே பேச ஆரம்பித்தான் ஸ்ரீதர். சுசீலாவைத் தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டு அவள் பட்டுக் கன்னங்களைத் தன் கரங்களால் தடவிய வண்ணம் “பத்மா, பார், பார், இன்னும் சில நாட்களில் உன்னை முன் போல் என்னால் பார்க்க முடியும். மேலும் கல்கிசையில் நான் உன்னை நீச்சலுடையில் எழுதிய படம் பாதியில் நிறுத்தப்பட்டதல்லவா? கண் பார்வை கிடைத்ததும் அதை முடிப்பதுதான் என் முதல் வேலை. இன்னும் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் அதில் இலங்கை ஓவியக் கண் காட்சிக்கும் அதை அனுப்பி வைப்பேன். கட்டாயம் முதற் பரிசு கிடைக்கும்” என்று ஆர்ப்பரித்தான். தாய் பாக்கியத்தை அழைத்து “அம்மா, இன்னும் சில வாரங்களில் சுரேஷ் என் கண் பார்வையை எனக்குத் தந்து விடுவான். கண் பார்வை கிடைத்ததும் பழையபடி கொழும்புக்குப் போய் என் படிப்பை முடித்துவிட்டு வருவேன். இந்த முறை நீயும் அப்பாவும் கூட “கிஷ்கிந்தா”வில் வந்து என்னுடன் இருக்க வேண்டும்.” என்று என்னென்னவோ பேசினான் அவன். முரளியைத் தன் கரங்களில் தூக்கி வைத்துக் கொண்டு “அடே முரளி, அப்பா உன்னைக் காண முடியாத படி நீ இருளிலே ஒளிந்திருக்கிறாய் அல்லவா? இனி அது முடியாது. இன்னும் சில வாரங்களில் உன்னை நான் கண்டு கொள்வேன். உன்னையும் அழகான படமாகத் தீட்டப் போகிறேன் நான்.” என்று கொஞ்சினான். இதற்கிடையில் கூண்டுக் கிளி மோகனா “முரளி, முரளி” என்று கூப்பிட, “மோகனா, உன்னையும் தான். உன்னை நான் மறக்கவில்லை. உன்னுடைய படத்தையும் பாதியில் நிறுத்தினேனல்லவா? அதையும் சீக்கிரம் முடித்து வைப்பேன்.” என்றான்.
மோகனா இப்பொழுது முன் போல் “பத்மா, பத்மா” என்று கூப்பிடுவதில்லை. அதற்குப் பதிலாகச் சுசீலா அதனை “முரளி, முரளி” என்று கூப்பிடப் பழக்கி வைத்திருந்தாள். இவ்வாறு மோகனா முரளியைக் கூப்பிடும் போதெல்லாம் முரளி அதற்குப் பலத்த குரலில் எதிரொலி கொடுத்துக் கும்மாளமடிப்பது வழக்கம்.
கண் பார்வைக்குப் பற்றி ஸ்ரீதர் அடிக்கடி பேச ஆரம்பித்தது சுசீலாவுக்கு அதிக மன வேதனையை உண்டு பண்ணலாயிற்று. “ஐயோ, பாவம் தன் கண் பார்வையைப் பெற்றுக் கொள்ள அவர் எவ்வளவு தூரம் ஆசைப்படுகிறார். ஆனால் அதற்குக் குறுக்கே நிற்கிறோமே நாம், இது சரியா?” என்று கவலைப்படலானாள் அவள்.
இந்தக் கவலை அன்றிரவு நடைபெற்ற ஒரு சம்பவத்தால் மேலும் அதிகமாயிற்று.
ஸ்ரீதர் ஆழ்ந்த துயிலில் தன்னை மறந்திருந்த சுசீலாவை நடுச்சாமத்தில் தன் கைகளால் தட்டி எழுப்பினான். “நீண்ட நாட்களின் பின்னர் நான் ஓர் கனவு கண்டேன் பத்மா. குருடனாலும் கனவு காண முடியும். நீயும் நானும் முரளியும் நதியருகிலும், சோலையிலும், மலை முகட்டிலும் மலைச்சாரலிலும் இயற்கை அழகுகளை இரசித்துக் கொண்டு ஆடிப் பாடிக் கை கோத்துச் செல்வதாகக் கனவு கண்டேன். ஆனால் முரளியின் முகம் மட்டும் எனக்குத் தெரியவில்லை. அவன் ஒரு முகமூடி அணிந்திருந்தான். இவ்வாறு நாம் போய் கொண்டிருந்த போது வழியிலே சுரேஷ் வந்தான். அவன் முரளியின் முகமூடியைக் கழற்றி வீசினான். அதற்குப் பிறகுதான் முரளியின் முகத்தை நான் முதன் முதலாகப் பார்த்தேன். மிகவும் அழகான பையன் அவன்.” என்று பேசிக் கொண்டே போனான் அவன். “இன்னும் கனவிலே நான் வேறு எதையெல்லாம் கண்டேனென்று சொல்லவா?” என்று கேட்டுவிட்டுக் கவிஞன் போல் பேச ஆரம்பித்தான் அவன், “ஆம், பத்மா, அழகான மலர்களைக் கண்டேன். வண்ண மயிலைக் கண்டேன். வாண வேடிக்கை கண்டேன். தீ கண்டேன். திசை கண்டேன். நிலாவைப் பார்த்தேன். உன் நீண்ட விழிகளையும் கண்டேன். சித்திரங் கண்டேன். சிற்பம் கண்டேன். நாட்டியம் கண்டேன். நற்கனிகளையும் இரத்தினங்களையும் கண்டேன். ஆமாம். அழகான எல்லாவற்றையும் கண்டு களித்தேன் நான்.”
சுசீலா திக் பிரமை பிடித்தவள் போல் அவன் பேசுவதெல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள் என்றாலும், உள்ளே அவள் இதயத்தில் ஆழத்திலே வேதனை ஒன்று வெடித்தெழுந்தது. பெரியதொரு குற்றஞ் செய்துவிட்டது போன்ற உணர்வு அவளை அவனது பேச்சுக்குப் பதிலளிக்கவொண்ணாது தடுத்தது. “ஐயோ, அவர் தம் கண் பார்வையைப் பெறுவதற்கு எவ்வளவு ஆசைப்படுகிறார். ஆனால் அதை நானும் மாமாவுமாகச் சேர்ந்து தடுத்துவிட்டோமே. இது நியாயமா? அக்கிரமமல்லவா?” என்ற எண்ணம் அவள் உள்ளத்தை அரித்தது.
ஸ்ரீதரோ தன் பேச்சை நிறுத்துவதாயில்லை. “பத்மா, என் ஆசைப் பத்மா. சுரேஷ் எவ்வளவு நல்லவன். பார்த்தாயா? அவன் சீக்கிரமே என்னைப் பார்க்க மீண்டும் வருவான். அப்பொழுது அவனிடம் சொல்லி லண்டன் டாக்டரை உடனே வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறிதும் தாமதிக்கக் கூடாது. பத்மா, எனக்கு மிகவும் அவசரம். உன்னையும் முரளியையும் சீக்கிரமே என் கண்களால் பார்க்க வேண்டும். இந்த இருளில் சிறையிலிருப்பதை இனி என்னால் பொறுக்கவே முடியாது. ஆம், பத்மா குருடாயிருப்பது இலேசான விஷயமல்ல. மிக மிக வேதனை, மிக மிகக் கஷ்டம். வேண்டுமானால் உன் கண்களை ஒரு நாள் முழுவதும் கறுப்புத் துணியால் இறுகக் கட்டி வைத்துவிட்டுப் பார். அப்பொழுது தெரியும் கண் பார்வையின் பெருமை. ஆம், இராசாத்தி. ஒரு மனிதனுக்குக் கண் பார்வைதானே மிக மிக முக்கியம். அதைச் சுரேஷ் எனக்குத் தரப் போகிறான். நான் அதிர்ஷ்டசாலி” என்று விடிய விடிய கண்களைப் பற்றிப் பேசிய விதம் சுசீலாவின் உள்ளத்தை வாள் கொண்டறுப்பது போலிருந்தது.
‘அமராவதி’யில் ஸ்ரீதர் இவ்வாறு கனவு கண்டு கொண்டிருக்க, சுரேஷ் வல்வெட்டித் துறையில் தன் வீட்டுக்கு முன்னாலிருந்த மாமரத்தின் கிளைகளூடே சந்திரன் விரித்திருந்த நிலவுப் பின்னணியில் ஒரு சாய்வு நாற்காலியில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவன் நித்திரக் கொள்ளவில்லை. ஸ்ரீதர் விஷயத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்ற பிரச்சினையை விடுவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
“பார்க்கப் போனால் ஸ்ரீதர் மனைவியும் சிவநேசரும் சொல்வது உண்மைதானே? அவன் இன்று ஏமாற்றப்பட்டிருந்தாலும் இன்பத்தில் திளைத்திருக்கிறான். கண் பார்வை கிடைத்தால் அந்த இன்பத்துக்கு முடிவு வந்துவிடுமல்லவா? அதற்கு நான் காரணமாயிருக்கலாமா? கூடாது?” என்று முடிவு செய்வதும், பின்னர், “ஒரு மனிதனுக்குக் கண் பார்வைதானே முக்கியம்? அதனை நாம் ஒருவனுக்குக் கொடுக்க முடிந்தும் கொடுக்காமலிருந்தால் பெரிய கொடூரமல்லவா?” என்று எதிர்மறையாகச் சிந்திப்பதுமாக இருந்தான்.
இரண்டு தினங்கள் கழித்து அவன் மீண்டும் ‘அமராவதி’க்குப் புறப்பட்டபோது இப்பிரச்சினையில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். ஸ்ரீதருக்குக் கண் பார்வை தருவது அவனது நலனுக்கே நல்லதல்ல என்பதே அது. ஆகவே, பேராசிரியர் நிக்கலஸ் நோர்த்லி அதிக வேலையின் காரணமாக இலங்கைக்கு வருவதைச் சில காலத்துக்கு ஒத்தி போட்டுவிட்டார் என்று ஸ்ரீதரிடம் கூறிவிட வேண்டுமென்று முடிவு கட்டி விட்டான் அவன். பின்னர் விஷயத்தை வாழ்க்கை பூராவுமே ஒத்தி போட்டு விடலாம். அவசியமானால் சில காலம் கழித்து, பேராசிரியர் நோர்த்லி இறந்து விட்டார் என்று கூடக் கூறி விடலாம். ஆனால் விவேகியான ஸ்ரீதர் “நோர்த்லி போலவே சிறந்த வேறு கண் வைத்தியர்களும் இருக்கிறார்களல்லவா? நீ கூடச் சொன்னாயே. அவர்களில் ஒருவரை அழைக்கலாமே” என்று கேட்பதென்னவோ நிச்சயம். ஆனால் அதற்கென்ன செய்வது? அவற்றுக்கெல்லாம் அவ்வப்போது மனதில் தோன்றும் சாக்குப் போக்குகளைச் சொல்ல வெண்டியதுதான். ஒரு பொய் சொல்லிவிட்டால் அதைத் தாங்க ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் பொய்களைச் சொல்ல வேண்டியதுதான்.
ஆனால் இந்தச் செய்தியைக் கேட்டதும் ஸ்ரீதர் முகமென்னவோ மாலை நேரத் தாமரை போல் வாடி விடப் போவது நிச்சயம். அதைக் கண் கொண்டு பார்ப்பது கஷ்டம்தான். இருந்தாலும் அவனது நன்மைக்காகப் பல்லைக் கடித்துக் கொண்டேனும் அதைச் செய்ய வேண்டியதுதான்.
இத்தகைய யோசனைகள் தன் சிந்தனையில் ஊசலாட, ‘அமராவதி’யின் பெரிய ‘கேட்டு’களுக்கு ஊடாக சுரேஷ் தன் காரில் உள்ளே சென்ற போது சுசீலா அவனை வழிமறித்தாள். “நில்லுங்கள். சுரேஷ் நீங்கள் ஸ்ரீதரைக் காணு முன் உங்களுடன் சில வார்த்தைகள் நான் பேச வேண்டும்” என்றாள் அவள்.
மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் நின்ற மகிழ மரத்தின் நிழலில் சுரேசும் சுசீலாவும் பேசிக் கொண்டார்கள். நல்ல வேளை. ஸ்ரீதர் மத்தியான உணவுக்குப் பின் தூங்கச் சென்றவன் இன்னும் துயில் கலைந்து எழவில்லை.
சுசீலா சுரேஷிடம் “சுரேஷ், நீங்கள் அமராவதிக்கு வந்திருக்கக் கூடாது. சலனமற்றுப் படிகம் போல் விளங்கிய ஸ்ரீதரின் வாழ்க்கை என்னும் தடாகம் உங்கள் வரவால் முற்றிலும் கலங்கிப் போய்விட்டது. ஐயோ, இன்று அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. என்னால் இதைத் தாங்க முடியாது” என்றாள்.
சுரேஷ் ஒரு பதிலும் பேசாது அவள் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு நின்றான். அவள் என்ன சொல்வதற்கு இப்படிப் பீடிகை போடுகிறாள் என்பது அவனுக்கு முதலில் விளங்க வில்லை.
“நீங்கள் அமராவதிக்கு வரும் வரை ஸ்ரீதர் மிகவும் சந்தோஷமாகவே இருந்து வந்தார். ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்பது போல் அவர் தம் கண் பார்வையை முற்றாக மறந்து முரளியோடு விளையாடுவதிலும் வாழ்க்கையைத் தம் நிலைக்கேற்றவாறு அனுபவிப்பதிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் நீங்கள் வந்து அவரது ஆசைத் தீயை மூட்டி விட்டீர்கள். கண் பார்வை கிடைக்கும் என்ற கனவைத் தூண்டிவிட்டீர்கள். அதன் பயனாக அவர் தமது அமைதியை முற்றாக இழந்து விட்டார். மீண்டும் உலகின் வண்ணங்களையும் வளைவுகளையும் காணத் துடிக்கிறார் அவர். ‘எப்போது என் கண் பார்வை கிடைக்கும்?’ என்று அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டார் அவர். ஆம். சுரேஷ். இராப் பகலாக வெறி பிடித்தவர் போலக் கண் பார்வை, கண் பார்வை என்று கதறுகிறார் அவர். அவர் இவ்வாறு ஓலமிடுவதைக் கேட்க என்னால் சகிக்க முடியவில்லை. இவ்வளவு ஆசையுடன் ஒரு மனிதன் தன் மனதால் விரும்புவதை நாம் தடுக்கலாமா? சுரேஷ், எனது முன்னைய வேண்டுகோளை மறந்து விடுங்கள். நீங்கள் சொன்ன பேராசிரியர் நோர்த்லியை உடனே இங்கிலாந்திலிருந்து ஜெட் விமானம் மூலம் இங்கே வர ஏற்பாடு செய்யுங்கள். உண்மையில் ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவர் என்னை- அதாவது நன்னித்தம்பி மகள் சுசீலாவை நேசிக்கவே இல்லை. ஒரு நாள் என் மனத்தின் சபலத்தை அடக்க முடியாது நான் அவரை நன்னித்தம்பி மகள் சுசீலாவை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் ஞாபகமிருக்கிறது. அதற்கு இப்போதென்ன என்று என்னைக் கேட்டார் அவர். பத்மாவைத்தான் நேசிக்கிறார். ஆனால் அவர் பத்மாவை விட நேசிப்பது தன்னிரு கண்களையும் தான். கண்ணிழந்தவருக்குக் கண் மேல் தானே ஆசையிருக்கும்? ஆகவே நாம் அவர் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால், நாம் அவருக்கு அளிக்க வேண்டியது அவர் கண் பார்வையைத்தான். அதனையும் நாம் அவருக்குக் கொடுக்க முடிந்தும் கொடுக்காமல் இருந்தால் அதை விடப் பெரிய பாவமென்ன?” என்றாள் சுசீலா.
சுரேஷ் சுசீலாவின் வேண்டுகோளைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டான். அவன் சற்றும் எதிர்பாராத வேண்டுகோள் இது. எத்தனையோ தரம் மூளையைக் குழப்பி ஸ்ரீதரின் வாழ்க்கைக்கு நல்ல முடிவு அவன் நிரந்தரமாகக் குருடாயிருப்பதே என்ற தீர்மானத்துக்கு வந்து அதை அமுல் நடத்துவதற்கு வழி வகைகளையும் வகுத்துக் கொண்டு வந்திருந்த அவனுக்கு இது புதிய சிக்கலை உண்டாக்கிவிட்டது.
சுசீலா சொன்னது போல் குற்றம் முழுவதும் தன்னுடையைதுதான் என்பது அவனுக்குத் தெரியத்தான் செய்தது. சும்மா இருந்த அவனுக்குக் கண் பார்வையை மீண்டும் பெறுவதில் ஆசை மூட்டிவிட்டு இப்பொழுது அது முடியாதென்று கூறினால் அவனுக்கு எப்படி இருக்கும்? மனித இதயத்தின் வேதனை எல்லாம் நிறைவேறாத ஆசைகளால் உண்டானதுதானே? ஆசைத் தீயை மூட்டிவிட்டுப் பின்னால் அதனை நீருற்றிக் கரிக்கும்பமாக்குவதா? அதனால் ஏற்படும் ஏக்கத்தைப் பொறுப்பது இலேசான காரியமா என்ன?
ஆனால் ஸ்ரீதர் மீண்டும் தன் கண் பார்வையைப் பெற்றால் அதனால் அவனுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள்? – அவற்றை எண்ணிப் பார்க்கவே பயமாய் இருந்தது. அதில் முதலாவது பலியாக அவஸ்தைப் பட வேண்டியவள் சுசீலாவல்லவா? பாவம் சுசீலா, அவளுக்கு நான் எவ்வளவு தீங்கிழைத்துவிட்டேன்?
பார்க்கப் போனால் இந்தச் சுசீலா எப்படிப்பட்ட அதிரடியான பெண். ஒரு குருடனை மணக்க இசைந்து அவனை மணந்திருக்கிறாள். அதனால் ஏற்படும் வாழ்க்கை வசதியீனங்களெல்லாவற்றையும் அனுபவித்து வருகிறாள். ஆனால் அத்துடன் அவள் பிரச்சினை தீர்ந்து விட வில்லையே. தன்னைத்தான் அழித்துவிட்டு வேறொரு பெண்ணாகவும் வாழ்ந்து வருகிறாள். இப்பொழுது கண் பார்வை பெற்றதும் சுசீலா பத்மாவல்ல என்பதைத் தெரிந்து கொண்ட ஸ்ரீதரின் உள்ளத்தில் வெறியோடு வீசப் போகிற பெரும் புயலிலே தான் ஒரு சிறு மலராகச் சிதைந்து சீரழியவும் துணிந்துவிட்டாள் அவள். தியாகத்தின் எல்லையாக, அன்பின் கோபுரமாக விளங்கும் அவளது இத்துணிவை நினைத்தால் நெஞ்சு நடுங்குகிறதே!….
இவ்வாறு சிந்தித்த சுரேஷ் சுசீலாவிடம், “கண் பார்வை இழந்தவனுக்கு உலகில் கண் பார்வையே முக்கியமென்பது உண்மைதான். ஆனால் ஸ்ரீதருக்குக் கண் பார்வை அளித்தப் பின் அதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை எண்ணிப் பார். நீ தன் பள்ளிக் காதலி பத்மா அல்ல, போலி என்று தெரிந்ததும் அவனுக்கு உன் மீது தாங்க முடியாத வெறுப்பேற்படும். எனவே அவன் உன்னை வெறுத்தொதுக்குவது நிச்சயம். அவன் அப்படிச் செய்தால் அது நியாயமே. உலகிலேயே இதுவரை கண்டும் கேட்டுமிராத பெரும் மோசடியை, ஆள் மாறாட்டத்தை நீங்கள் அவனது வாழ்க்கையில் செய்திருக்கிறீர்கள். இது வரை நான் வாசித்த எந்த நாவலிலும் கூட இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான கட்டத்தை நான் கண்டதில்லை. இந்த மோசடியில் நீயே பிரதான பங்கு வகித்திருக்கிறாய். இப்படிப்பட்ட பயங்கர நாடகத்தை எவரும் பாதியில் விட்டுவிட முடியாது. அதன் முடிவு வரை அதை ஆடியே தீர வேண்டும். அப்பொழுதுதான் அதன் பலா பலன்களிலிருந்து நீ தப்ப முடியும். இந்த நாடகத்துக்கு முடிவு ஒன்றே ஒன்று தான் ஸ்ரீதரின் மரணம், அல்லது உனது மரணம். ஸ்ரீதர் இறப்பதற்கு முன் நீ இறந்தால் பத்மாவே தன்னுடன் அல்லது வாழ்வு முடியும் வரை வாழந்திருந்தாள் என்று அவன் நினைத்துக் கொள்வான். அதே போல உனக்கு முன் ஸ்ரீதர் இறந்தால் அப்பொழுதும் அவனுக்கு விஷயம் தெரிய வராது. ஆகவே புயலடிக்காமலே அவனது வாழ்க்கை முடிந்து விடும். சுசீலா, நீ இப்போது பிடித்திருப்பது புலியின் வால். அதைக் கடைசி வரை நீ கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ள வேண்டும். சிறிது விட்டுக் கொடுத்தாலும் புலி உன் மேல் பாய்ந்து உன்னைத் தின்று விடும். ஆகவே நாடகத்தைப் பாதியில் நிறுத்துவதை ஒரு போதும் முடியாத காரியம். ஆகவே ஸ்ரீதர் கடைசி வரை கண் பார்வையற்றவனாக இருப்பதே மேல்” என்றான்.
சுசீலா, “ நீங்கள் சொல்வது உண்மைதான். இதன் பயனாகப் பயங்கரமான விளைவுகள் ஏற்படப் போகின்றன என்பதும் எனக்குத் தெரியத்தான் செய்கிறது. ஆனால் அந்த விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை நான் விவரமாகக் கற்பனை செய்து பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவ்வித கற்பனை மனத்தின் தைரியத்துக்கு அடியோடு குழி பறித்துவிடும். ஆகவே அது எப்படியும் போகட்டும். என்னைப் பொறுத்தவரையில் எனது ஆள் மாறாட்ட மோசடியின் பலா பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ள நான் முயலவில்லை. எவ்வித பலா பலன்களையும் அது வரும்போது ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் ஸ்ரீதர் கண் பெற வேண்டும். அவர் உள்ளம் அதற்காக அழுகிறது. அதை அவருக்குக் கொடுத்து அதனால் என்ன பலன் ஏற்பட்டாலும் நான் அதனை ஆனந்தமாகப் பெற்றுக் கொள்ளுவேன். சுரேஷ், நீங்கள் இதனை எனக்காகச் செய்துதான் ஆகவேண்டும்.” என்றாள்.
சுரேஷிற்கு அதற்கு மேலும் சுசீலாவை எதிர்த்து நிற்க முடியவில்லை. இன்னும் தன் உயிருக்குயிரான நண்பன் ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதை அவனை விட வேறு யார் தான் அதிகமாக விரும்ப முடியும்? ஆனால் ஒன்று, அதனால் ஸ்ரீதருக்குக் கஷ்டம்தான் விளையப் போகிறது. ஆனால் கண் பாவை இல்லாதிருத்தலும் கஷ்டம் தானே. இன்னும் இதோ கிடைக்கப் போகிறது என்று ஆசையோடு எதிர்பார்க்கப் பட்ட ஒன்று அவ்வாறு கிட்டாமல் போனால், அதுவும் பெரிய துன்பந்தானே. இப்படி இப்பிரச்சினையில் எப்பக்கம் திரும்பினாலும் துயரும் துன்பமுமே முகத்துக்கு முன்னால் சுற்றி நிற்கின்றன. இந்நிலையில் எதைச் செய்வது சரி, எதைச் செய்வது பிழை என்றே அவனுக்குத் தெரியவில்லை. எதையாவது செய்யத்தானே வேண்டும்? அப்படியானால் ஸ்ரீதர் ஆசைப்படுவதை, சுசீலா விரும்புவதைச் செய்துவிட வேண்டியதுதான்.
ஆனால் இதில் ஒரு சிக்கல். இதைப் பற்றிச் சிவநேசர் என்ன நினைப்பார்? அவருடன் இது பற்றிப் பேச வேண்டாமா? சுரேஷ் இந்த விஷயத்தைச் சுசீலா முன்னால் தூக்கிப் போட்டதும், “அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அவரைச் சமாளித்துவிடுகிறேன். தன் மகன் கண் பார்வை பெறுவதை எந்தத் தகப்பன் தான் விரும்பாதிருக்க முடியும்? அவர் விரும்பாவிட்டாலும் நான் அவரை விரும்ப வைத்து விடுவேன்.” என்றாள்.
“அப்படியானால் அது உன் விஷயம். இன்றைக்கே பேராசிரியர் நோர்த்லியுடன் நான் கேபிளில் பேசுவேன். மிக விரைவிலேயே எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவேன்.” என்றான் சுரேஷ்.
சிறிது நேரம் கழித்து ஸ்ரீதர் பிற்பகல் துயில் நீங்கி எழுந்ததும் சுரேஷ் தன் திட்டத்தை ஸ்ரீதரிடம் கூறினான். ஸ்ரீதர் அவன் தோள்களைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினான். “சீக்கிரமே விஷயத்தை முடி. முதலில் உன் முகத்தைப் பார்க்க எனக்கு எவ்வளவு ஆசையாயிருக்கிறது தெரியுமா சுரேஷ்?” என்றான் அவன், குழந்தைப் பிள்ளையைப் போல.
இச்சம்பவம் நடந்த இரவு சுசீலா மாமியார் பாக்கியத்திடம் தானும் சுரேசும் செய்து கொண்ட ஏற்பாடுகளைக் கூறினாள். முதலில் பாக்கியம் அதை முழு மூச்சோடு ஆட்சேபிக்கவே செய்தாள். இருந்தாலும் முடிவில் என்னவோ நடப்பது நடக்கட்டும் என்ற தோரணையில் தனது மனத்தை மாற்றிக் கொண்டுவிட்டாள். அவளால் வேறு என்ன தான் செய்ய முடியும்? இரண்டு மூன்று தினங்களில் சிவநேசரையும் கூட இதே நிலைக்குக் கொண்டு வந்துவிட்டாள் சுசீலா. இவை நடந்து ஓரிரு தினங்கள் கழித்து சுரேஷ் லண்டனுக்குப் பேராசிரியர் நோர்த்லியுடன் கேபிளில் பேசினான்.
“பேராசிரியரே, தங்களுக்கு எப்பொழுது இலங்கை வர வசதியாயிருக்கும்” என்று கேட்டான் சுரேஷ்.
“இந்த மாதம் கல்லூரி விடுமுறை. அத்துடன் கையில் அதிக வேலைகளுமில்லை. மேலும் கீழைத்தேய கண் நோய்களைப் பற்றி நான் ஒரு நூலும் எழுதி வருகிறேனல்லவா? இலங்கையில் அதற்கு வேண்டிய சில குறிப்புகளையும் நான் பெற முடியும். ஆகவே எப்பொழுதும் நான் இலங்கை புறப்படத் தயார். ஏற்பாடுகளைச் செய்.” என்றார் பேராசிரியர்.
சுரேஷிற்கு ஒரே ஆனந்தம். “அப்படியே ஆகட்டும்.” என்று ஏற்பாடுகளைச் செய்தான் அவன்.
இரண்டு வாரங்கள் கழித்து பேராசிரியர் நோர்த்லி ‘அமராவதி’யில் ஸ்ரீதரின் கண்களை மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்தார். அவர் பக்கத்தில் இலங்கையின் சிறந்த கண் வைத்திய நிபுணர்களில் ஒருவரும் சிவநேசரின் குடும்ப நண்பருமான டாக்டர் நெல்சன் நின்று கொண்டிருந்தார்.
பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் கண்களைத் தம்மிடமிருந்த பூதக் கண்ணாடி இணைந்த கருவிகளால் உற்று நோக்கி ஆராய்ந்த வன்ணமே, டாக்டர் நெல்சனுக்குச் சில விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தார். பாக்கியம், சுசீலா, சிவநேசர், சுரேஷ், நன்னித்தம்பியர் ஆகியோரும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
முரளி தனது ஆயாவின் கைகளில் வீற்றிருந்தவன்ணம் கைகொட்டி மழலை மிழற்றினான். “அப்பா அப்பா” என்று சப்தமிட்டான்.
பேராசிரியர் நோர்த்லி அவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு, “யாரிந்த சின்னப்பயல். பெரிய கலாட்டா பண்ணுகிறானே” என்றார் சிரித்துக் கொண்டு. முரளி அவரது வெள்ளை மீசையைத் தன் கால்களால் பற்றிக் கொண்டு விட மாட்டேன் என்று அடம்பிடித்தான். பேராசிரியரை அவனிடமிருந்து விடுப்பது சுசீலாவுக்குப் பெரிய கஷ்டமாய்ப் போய்விட்டது.
ஸ்ரீதர் பேராசிரியரிடம் “அது என் மகன் முரளி அவனை நான் இன்னும் பார்த்ததேயில்லை. அவனைப் பார்க்கத் தான் எனக்குக் கண் வேண்டும் டாக்டர்” என்றான்.
அதைக் கேட்ட பேராசிரியர் மனம் உருகிவிட்டதே. “சரி, என்னாலானதைச் செய்கிறேன்” என்று தம் ஆராய்ச்சியை நீண்ட நேரம் நடத்தினார் அவர். முடிவிலவர் சுரேஷை நோக்கி “சுரேஷ், ஸ்ரீதரின் கண் நோய் மிகவும் சிக்கலான ஒன்று தான். என்றாலும், இந்த நோயைப் பற்றிய முக்கிய விஷயங்கள் பல, சமீப காலத்தில் தெரிய வந்துவிட்டன. பிரெஞ்சு டாக்டர் பீயரே ரோலண்ட் என்பவர் இது பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில் நாலு மாதங்களின் முன்னர் இத்தாலியில் நான் ஓர் ஆபரேஷனை நடத்தினேன். மிக வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் நடத்தப்பட்ட பெண் உலகப் பிரசித்தி பெற்ற நடிகை. அன்னா பெட்ரோனி என்பது அவள் பெயர். இப்பொழுது பழையபடி நடிக்கத் தொடங்கி விட்டாள் அவள்.” என்றார்.
இதைக் கேட்ட ஸ்ரீதருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. அன்றலர்ந்த தாமரை போல் பூரித்த முகத்துடன் புன்னகை மழை பொழிந்தான் அவன். “அம்மா, பத்மா, கேட்டீர்களா பேராசிரியர் பேச்சை? நான் அதிர்ஷ்டசாலி. சுரேசுக்கு நான் நன்றி பாராட்ட வேண்டும்.” என்றான்.
ஆனால் சந்திர சிகிச்சை தாங்கொணாத வேதனை தருமென்ற எண்ணமும் அவனுக்கு ஏற்படாமலில்லை. ஆகவே “சந்திர சிகிச்சை அதிகம் நோகுமோ?” என்று பேராசிரியர் நோர்த்லியை நோக்கி வினவினான்.
பேராசிரியர் நோர்த்லி சிரித்துவிட்டு, “என்ன ஸ்ரீதர், இவ்வளவு பயப்படுகிறாய்? இந்தக் காலத்தில் பெண்கள் கூட சந்திர சிகிச்சைக்கு இவ்வளவு பயப்பட மாட்டார்களே. உனக்கு நோகாமலே கண் பார்வை வேண்டுமா. சரி, அப்படியே செய்கிறேன்.” என்றார்.
ஸ்ரீதரின் சந்திர சிகிச்சைக்கு யாழ்ப்பாண நகரில் டாக்டர் நெல்சனின் கண் வைத்திய சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அது நவீன வசதிகள் பொருந்திய சிறந்த வைத்தியசாலையாக இருந்த போதிலும் பல குறைபாடுகளும் அங்கு இருக்கவே செய்தன. அவற்றை நிவிர்த்திக்க, பேராசிரியர் நோர்த்லி சொன்னபடி பல திருத்தங்கள் அங்கு செய்யப்பட்டன. அத்துடன் அங்கிலாதிருந்த சில நவீன கருவிகளும் ஸ்ரீதரின் சந்திர சிகிச்சைக்கெனக் கொழும்பிலிருந்து விசேஷமாக வரவழைக்கப்பட்டன. இவற்றிற்குரிய செலவுகள் யாவும் சிவநேசரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு பேராசிரியர் நோர்த்லிக்கு வேண்டிய சகல வசதிகளும் அவரால் பெரும் பணச் செலவில் செய்து கொடுக்கப்பட்டன. அவர் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கென ‘அமராவதி’யின் இரண்டு கார்களிலொன்றும் அவரிடம் கொடுக்கப்பட்டது. ஒரு காரோட்டியும் பேராசிரியருக்கென விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டான்.
பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை முடிந்து, அவனது கண்ணின் கட்டை அவிழ்ந்து நோய் குணமாகிவிட்டதா என்று ஊர்ஜிதமாக்கிக் கொண்டதும் யாழ்ப்பாணத்திலிருந்து நேரே பம்பாய்க்கு விமானம் மூலம் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பம்பாயில் உலக சமாதான இயக்கத்தின் இந்தியத் தலைவர் சிலரை அவர் நேரில் பார்த்துப் பேச விரும்பியதே அதற்குக் காரணம்.
இவ்வாறு டாக்டர் நெல்சனின் ஆஸ்பத்திரியில் சந்திர சிகிச்சை ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்க, அதனை எவ்வித கிலேசமுமின்றி வரவேற்றுக் கொண்டிருந்தது ஸ்ரீதரின் உள்ளம் மட்டும்தான். மற்றவர்களோ ஸ்ரீதரின் கண் பார்வையுடன் பெரிய இடி முழக்கத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பாக்கியம், சுசீலா, சுரேஷ், எல்லோருக்கும் இது பொருந்தும். ஏன் சிவநேசருக்கும் கூடத்தான். தமது மனைவி பாக்கியத்திடம் “சுசீலா அற்புதமான பெண். குருடனைக் கட்டுவதற்குத் தானாக முன் வந்தாள். ஆனால் அவள் இப்பொழுது செய்வதோ அதிலும் பார்க்கப் பல மடங்கு துணிவு நிறைந்த செயலாகும். தன் ஆள் மாறாட்ட நாடகம் பிடிபடப் போகிறது என்பதைக் கூடச் சட்டை செய்யாமல், ஸ்ரீதருக்குப் பார்வை தர முன் வருகிறாள் அவள். ஆனால் இதனால் என்ன விபரீதம் நேரிடப் போகிறதோ?” என்று கவலையுடன் கூறினார் அவர்.
அதற்குப் பாக்கியம், “ஆனால் இந்த ஆள் மாறாட்ட நாடகத்துக்குச் சுசீலா மட்டுமா பொறுப்பு? நாமும் கூடத் தானே? ஸ்ரீதர் எங்கள் மீதும் கோபமடையத் தான் போகிறான். இதை நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? வருவது வரட்டும், மாவிட்டபுரம் கந்தன்தான் துணை.” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள்.
27-ம் அத்தியாயம்: ஈடிப்பஸ் நாடகம்
ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை நாளை நிர்ணயிப்பதில் பேராசிரியர் நோர்த்லிக்குப் பலத்த சிரமம் ஏற்பட்டது. முதலாவதாக அவருக்கிருந்த பிரச்சினை காலப் பிரச்சினை. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரால் இலங்கையில் தங்கியிருக்க முடியாதிருந்தது. அவரது தாய்நாட்டில் அவருக்காக எப்பொழுதும் குவிந்திருக்கும் வேலைகள் பல. ஆகவே எவ்வளவு விரைவில் ஸ்ரீதரின் சந்திர சிகிச்சையை முடித்துக் கொண்டு இங்கிலாந்து புறப்பட முடியுமோ அவ்வளவு விரைவில் புறப்பட வேண்டும். அத்துடன், இந்தியாவிலும் ஓரிரு தினங்கள் தங்க வேண்டும். அதுவும் அவருடைய கால அட்டவணையில் இடம் பெற்றிருந்தது. இவை தவிர, ஸ்ரீதரை இன்னொரு தடவை நன்கு பரிசீலித்து, சந்திர சிகிச்சைக்கு அவனைத் தயார் செய்ய வேண்டும். அதற்கும் இரண்டு மூன்று நாள் பிடிக்கும். மேலும் சந்திர சிகிச்சைக்குப் பின்னர் கூட சில குறிப்பிட்ட தினங்கள் கண்ணில் ஏற்பட்ட புண் ஆறும் வரை ஸ்ரீதர் கண் கட்டோடு விளங்க வேண்டும். அக்காலவெல்லையின் முடிவில் கண்களைக் கட்டவிழ்த்துப் பார்த்துத் தமக்குத் திருப்தி ஏற்பட்ட பின்னர் தான் அவரால் இலங்கையை விட்டுப் புறப்பட முடியும். ஆனால் இவற்றுடன் பிரச்சினை தீரவில்லை. ‘அமராவதி’ வளவில் எப்பொழுதும் சோதிடத்துக்கு மிகவும் மதிப்புண்டு. சிவநேசருக்கு, அவற்றில் நம்பிக்கை இல்லையென்றாலும், பாக்கியம் நாளும் கோளும் பார்க்காமல் ஒன்றுமே செய்வதில்லை. அதிலும் சோதிடத்தில் மிக வல்லவரான சின்னைய பாரதி எப்பொழுதும் பக்கத்திலிருக்கும் போது அவரைக் கலக்காமல் எதையும் செய்ய யாருக்குத்தான் மனம் வரும்? ஆகவே, சந்திர சிகிச்சை ஸ்ரீதருக்கேற்ற நல்ல நாளிலும் நடைபெற வேண்டும். எனவே, இவற்றை எல்லாம் பார்த்து இரண்டு மூன்று நாட்களை வீணாக்கியே ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை நாள் நியமிக்கப்பட்டது.
பேராசிரியர் நோர்த்லியைப் பொறுத்த வரையில் நல்ல நாள் பெரிய நாள் என்ற சோதிடப் பேச்செழுந்ததும், அதை அவர் எதிர்த்துப் பரிகசிக்கவே செய்தார். இவற்றை எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று கருதுபவர் அவர். உண்மையில் இங்கிலாந்திலிருந்து பகுத்தறிவு அச்சகச் சங்கத்தில் அவர் ஒரு முக்கிய உறுப்பினர். இருந்தாலும் பண்பே உருவான அவர், ஒரு தாய் தன் மகனின் மிகவும் முக்கியமான ஒரு வாழ்க்கை நிகழ்ச்சி சம்பந்தமாக நாள் பார்க்கும் போது, அதை எதிர்த்து வேறு நாளை நியமித்தல் மனோதத்துவ ரீதியில் அவ்வளவு நல்லதல்ல என்பதால் வெறும் பரிகாசத்துடன் நிறுத்திக் கொண்டு சந்திர சிகிச்சையை சின்னைய பாரதி கூறிய நல்ல நாளன்றே நியமித்துவிட்டார்.
“சந்திர சிகிச்சைக்காகச் சிவநேசர் குடும்பமே டாக்டர் நெல்சனின் ஆஸ்பத்திரியில் நான்கு நாட்களுக்கு முன்னரே குடியேறிவிட்டது. ஸ்ரீதருக்கு ஒரு தனியறையும் அதற்குப் பக்கத்தில் அவனுக்குத் துணையாக இருப்பவர்களுக்கென வேறு ஓர் அறையும் ஒதுக்கிவிடப் பட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது, ஸ்ரீதர் பொழுது போகாமல் இடர்ப்படக் கூடாது என்பதற்காக ‘ரேடியோ கிராம்’ இசைத்தட்டுகள், ‘பிரெயில்’ எழுத்தில் தயாரிக்கப்பட்ட சில புதிய கதைப் புத்தகங்கள் என்பனவும் ஸ்ரீதர் கட்டிலுக்கருகே வைக்கப்பட்டன.
ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் உள்ளத்தில் விநோதமான எண்ணங்கள் பல இடையிடையே எழும். அவன் வண்ணங்களைப் பார்த்து ஏறக்குறைய இரண்டு வருடங்களாகி இருந்தன. இருந்தாலும் வண்ண வித்தியாசங்களை இன்னும் அவனது மனத்திரையிலே அவனால் ஞாபகம் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் அவற்றின் பெயர்கள் தன் மனதில் குழம்பிப் போய்விட்டது போன்ற ஓர் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. உதாரணமாக, நீலமென்றால் எது, பச்சை என்றால் எது என்று யாராவது கேட்டால் ஒன்றின் பெயரை மற்றதற்குத்தான் மாற்றிக் கூறிவிடக் கூடும் என்றா அச்சம் அவனுக்கு உண்டாயிற்று. ஆனால் அதற்கென்ன செய்வது? மீண்டும் வண்ணங்களையும் அவற்றின் பெயரையும் ஒன்றோடொன்று தொடர்புறுத்திக் கற்றுக் கொண்டால் போகிறது என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான் அவன்.
ஸ்ரீதர் கண் பார்வை பெற்றால் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டிய யாராவது இவ்வுலகில் இருந்தால் அது சுசீலாவாகத்தானே இருக்க முடியும்? ஆனால் உண்மை அவ்வாறிருக்கவில்லை. சுசீலா இப்பொழுது சிந்திப்பதையே நிறுத்திவிட்டாள். அவள் மூளை சிறிதும் வேலை செய்யாது ஓய்ந்து விட்டது போல் தோன்றியது. எந்த விஷயத்தையும் அந்த விஷயம் எழும்பும் அந்நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து, கையிலிருக்கும் வேலையைச் செய்வதில் மட்டும் கண்ணும் கருத்துமாயிருந்தாள் அவள். இருந்த போதிலும் அவள் கல கலப்பான பேச்சும், நகைச்சுவையும், பிள்ளைப் பாட்டுகளும் ஓரளவு அடங்கி விடத் தான் செய்தன. இடையிடையே அவள் முரளியை மடியில் தூக்கி வைத்திருந்தாலும், முக்கால் வாசி நேரம் பாட்டி பாக்கியத்தின் மடியிலேயே அவனை போட்டு விட்டாள் அவள். ஆனால் அவன் பாட்டியின் மடியில் இருந்தால் தானே? சிவநேசர், பேராசிரியர் நோர்த்லி உட்பட எல்லோரிடமும் தவழ்ந்து சென்று விளையாடினான் முரளி. முரளி அந்த ஆஸ்பத்திரிக்கே ஓர் அலங்காரப் பொருளாகிவிட்டான். டாக்டர் நெல்சன், டாக்டர் சுரேஷ், தாதியார் – யாவருமே அவனால் கவரப் பட்டுவிட்டவர்கள். ஒரு நாள் பேராசிரியர் நோர்த்லி அவனைத் தூக்கி விளையாட்டுக் காட்ட அவன் அவரது சட்டையில் சல மோசனம் செய்து அசுத்தப்படுத்திவிட்டான். “அடே பயலே, என் சட்டையை அசுத்தம் செய்ததற்கு உனக்கு எதிராகப் பொலீசில் வழக்குத் தொடர்கிறேன். பார்” என்றார் பேராசிரியர். முரளி அதற்கு “சரி போடுங்கள் வழக்கை. யார் வெல்கிறார் பார்ப்போம்.” என்று கூறுவது போல மழலைக் கூச்சலிட்டுக் கை தட்டினான்.
ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிச் சுரேஷ், சிவநேசர், பாக்கியம் ஆகியோரும் கவலைப் படவே செய்தனர். உண்மையில் இது பற்றி அவர்கள் தம்மிடையே பேசிக் கொள்ளவும் செய்தனர். இவ்வுரையாடலின் பயனாகப் பாக்கியம் சுசீலாவிடம், “ஸ்ரீதர் கண் பார்வை வந்ததும் நீ பத்மா அல்ல என்று கண்டு கொள்வானே, அதை நீ எப்படிச் சமாளிக்கப் போகிறாய்” என்று கேட்டாள். அதற்குச் சுசீலா “அது எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.” என்று மட்டும் சொன்னாள். பாக்கியமும் தீர்க்க முடியாத பிரச்சினையை, புண்ணைக் கிளறுவது போல் கிளறிக் கொண்டிருக்க விரும்பாததால் அப்படியே விட்டுவிட்டாள்.
ஸ்ரீதர் சந்திர சிகிச்சைக்குத் தயார் செய்யப்பட்டு வந்த மூன்று நாட்களும் சுசீலா அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள். அத்துடன் அவனுக்கு வேண்டிய தினசரிப் பணிகளையும் புரிந்து கொண்டிருந்தாள் அவள்.
சில சமயங்களில் தான் கண் பார்வையை இழந்தது பற்றிச் சிந்தித்தபோது, பல்கலைக்கழகத்தில் தான் நடித்த ஈடிப்பஸ் நாடகம் ஸ்ரீதருக்கு ஞாபகம் வந்தது. அதில் அவள் மிகவும் நல்ல பெயர் எடுத்திருந்ததால், மன்னன் ஈடிப்பஸ் அவன் மனதில் அடிக்கடி தோன்றுவது வழக்கமாயிருந்தது. இப்பொழுது ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்த போது தேபேஸ் மன்னனின் இந்நினைவு முன்னிலும் பார்க்க மிகவும் அதிகமாயிருந்தது. புகழ்பெற்ற கிரேக்க நாடகாசிரியரின் சொபாக்கிளினின் உணர்ச்சிகரமான அந்நாடகம் இப்பொழுது அவன் மனத்திரையைப் பீறிப் பீறி வந்து கொண்டிருந்தது.
அவனைப் பொறுத்த வரையில் அவன் அறிந்த நாடகங்களில் அதுவே ஆகச் சிறந்தது. அதனால்தான் அதனை மொழி பெயர்த்து அரங்கேற்றியதோடு அதில் தானே கதாநாயகனாகவும் நடித்தான் அவன். அது தவிர, ஈடிப்பஸ் நாடகம் அவன் வாழ்க்கையில் இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்நாடகத்தின் பயனாகத் தானே அவனது காதலி பத்மா அவனுக்குக் கிடைத்தாள்? பரமானந்தர் அறிமுகமானதும் இந்நாடகத்தின் பின்னர் தானே? ஆகவே “இன்று என்னுடன் என் பத்மா இங்கு வாழ்வதற்கே ஈடிப்பஸ் நாடகந்தானே அடிகோலியது?” என்று கூட யோசித்தான் அவன். ஈடிப்பஸ் நாடகம் நினைவுக்கு வந்ததும் அவன் மனதில் பளிச்சிட்ட முக்கியக் காட்சி ஈடிப்பஸ் தன் கண்களைத் தானே குத்திக் கொள்ளும் காட்சியாகும். “இந்நாடகத்தில் ஈடிப்பஸ் தன் கண்களை இழுக்கிறான். ஆனால் நான் அவனை விட அதிர்ஷ்டசாலி. நான் இழந்த பார்வையை மீண்டும் பெறக் கூடியதாயிருக்கிறதல்லவா?…” என்று பலவாறாகத் தன்னையும் ஈடிப்பஸையும் சமப்படுத்தி யோசித்தான் அவன்.
கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் அவன் இந்நாடகத்தில் நடித்த போது பார்த்தவரெல்லாம் நடுங்கிய காட்சி ஈடிப்பஸ் தன் கண்களைக் குத்திக் கொள்ளும் அந்தக் காட்சிதான். சில தினசரிப் பத்திரிகைகளின் கலா விமர்சகர்கள் இக்காட்சியை அளவு மீறிப் புகழ்ந்திருந்தார்கள். அது ஞாபகம் வந்ததும் கண்கள் சுகமாகிப் பழையபடி மற்றவர்கள் போல் நடமாடத் தொடங்கியதும் மீண்டும் ஈடிப்பஸ் நாடகத்தை ஒரு தரமேனும் அரங்கேற்ற வேண்டுமென்ற ஆசை அவனுக்கு. இது பற்றிச் சிந்தித்து போது தனது இலக்கியப் பேராசிரியர் ஈடிப்பஸ் நாடகத்தின் இக் காட்சியைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசியதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. உலக நாடக வரலாற்றிலே இக் காட்சி ஆகச் சிறந்த காட்சி என்று அவர் கூறியதும், அதன் பின்னர் மாணவர்கள் வகுப்பு முடிந்து இது பற்றிய நடத்திய வாதப் பிரதிவாதங்களும் அவனுக்கு நினைவு வந்தன. சிலர் “இரத்த வெறி பிடித்த இந்தச் சுய நோவுக் காட்சியைப் பேராசிரியர் இவ்வாறு மெச்சுகிறாரே” என்று குறைப்பட்டதும், தன்னைப் பொறுத்த வரையில் கூற்றே முற்றிலும் சரி என்று தான் தீர்ப்புக் கூறியதும் அவனுக்கு நினைவு வந்தன.
அப்பொழுது விகடப் பேச்சில் நிபுணனான ஒரு மாணவன் “ஈடிப்பஸின் சுய நோவை மெச்சும் பேராசிரியர் தாமும் சுய நோவில் ஆசை கொண்ட ஒருவராகவே இருக்க வேண்டும். நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து அவரை ஒரு நாள் மொத்துவோமா? அவர் அதற்காக மகிழ்ச்சிதானே அடைவார்?” என்று கூறியதும், மற்ற மாணவர்கள் எல்லோரும் அதைக் கேட்டுக் கொல்லென்று சிரித்தமையும் கூட அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன.
“உண்மையில் ஈடிப்பஸ் நிலையில் இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? தன்னையறியாமல் தாயைப் பெண்டாக்கிப் பிள்ளைகளையும் பெற்றுவிட்டேன் என்ற செய்தி வாளைப் பிழந்து ஒரு மின்னல் போல் ஒருவன் முன் வந்து நிற்குமானால், அவன் என்ன செய்திருப்பான்? அநேகமாக நான் கூட தேபேஸ் மன்னனைப் போலவே என்னிரு கண்களையும் குத்திக் கொண்டிருக்கக் கூடும்.” என்றும் சிந்தித்தான் அவன்.
நான்கு தினங்கள் கழித்து டாக்டர் நோர்த்லி சந்திர சிகிச்சையைச் செய்து முடித்தார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. டாக்டர் நெல்சனும் டாக்டர் சுரேசும் டாக்டர் நோர்த்லிக்குப் பக்கபலமாக இருந்து உதவினார்கள்.
சந்திர சிகிச்சை முடிந்து ஒரு நாள் மட்டும் ஸ்ரீதர் தனது கட்டிலில் ஓய்ந்து போய்க் கிடந்தான். அதன் பின் மிகவும் கல கலப்பாகப் பேச ஆரம்பித்துவிட்டான் அவன். சுசீலாவையும் முரளியையும் அருகே உட்கார வைத்து எதை எதையோ கூறினான் அவன். “பத்மா, இன்னும் சில நாட்களில் பேராசிரியர் நோர்த்லி என் கண்ணை அவிழ்த்துவிடுவார். என் கண்ணை அவிழ்த்ததும் நீ முரளியைத் தூக்கிக் கொண்டு என் முன்னே வர வேண்டும்” அது தான் நான் விழி பெற்றதும் முதலில் காண விரும்பும் காட்சி. தெரிகிறதா?” என்று ஒன்றுக்குப் பல தடவை கூறிவிட்டான் அவன்.
இவை எல்லாம் சுசீலாவின் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கிக் கொண்டிருந்தன. சுசீலா மட்டுமல்ல, பாக்கியம், சிவநேசர், நன்னித்தம்பியர் எல்லோருமே உள்ளூர நடுங்க ஆரம்பித்தார்கள். வானமிடிந்து தலையில் விழுவதை எதிர்பார்ப்பதுபோல பயங்கரமான விளைவுகளை எதிர்பார்த்து இருந்தார்கள் அவர்கள். கண்ணுக்குத் தெரியும் தொலைவில் ஒரு பூகம்பம் வந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது அவர்களுக்கு.
கடைசியில் பூகம்பமும் வரத் தான் செய்தது.
பேராசிரியர் நோர்த்லி தாம் நியமித்த நாளில் ஸ்ரீதர் கன்களின் கட்டுகளை அவிழ்த்தார். அவ்வாறு அவர் கட்டுகளை அவிழ்த்த போது ஸ்ரீதரின் அறையில் டாக்டர்களையும் ஒரு தாதியையும் தவிர வேறு யாரையும் அவர் அனுமதிக்கவில்லை.
கட்டுகளை அவிழ்த்துத் தமது விரல்களினால் பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் விழிகளை மலர்வித்தார்.
ஸ்ரீதர் கண் விழித்தான். உலகமே ஒளிக் கடலில் நீந்திக் கொண்டிருப்பது போல் இருந்தது அவனுக்கு. அப்பொழுது தான் இவ்வுலகில் பிறந்தது போன்ற ஓர் உணர்வு அவளை ஆட்கொண்டது. திக்பிரமை பிடித்தவன் போல் தன் முன்னே நின்ற பேராசிரியரையும் மற்ற டாக்டர்களையும் சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். பின்னர் “கண் தெரிகிறது. கண் தெரிகிறது.” என்று பலமாகச் சப்தமிட்டாள் அவன்.
பேராசிரியர் நோர்த்லி சிரித்தார். டாக்டர் சுரேஷ் அவர் கால்களைப் பற்றிக் கொண்டு “தாங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள். நீங்கள் ஸ்ரீதருக்குச் செய்த இந்த உதவியை எவ்வாறு பாராட்டுவேன்” என்றான். டாக்டர் நெல்சன், “பேராசிரியரே, நீங்கள் மிகவும் பெரிய சாதனையைச் செய்துவிட்டீர்கள். என்னைப் பொறுத்த வரையில் ஸ்ரீதர் இவ்வளவு இலகுவில் கண் பார்வையை மீண்டும் பெறுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” என்றார்.
பேராசிரியர் இப் பாராட்டுரைகளுக்குப் பதிலாக அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்து விட்டு ஸ்ரீதருடன் பேச ஆரம்பித்தார். “ஸ்ரீதர், இது என்ன வர்ணம்?” என்று ஒரு பச்சை வர்ணப் புத்தகத்தை அவனிடம் காட்டிக் கேட்டார் “நீலம்” என்று பதிலளித்தான் ஸ்ரீதர். பின்னர் ஒரு நீல வர்ணக் கடற்காட்சியை அவனிடம் காட்டி “இதன் வர்ணம் என்ன?” என்று அவர் கேட்டார். “பச்சை” என்று பதிலளித்தான் ஸ்ரீதர். அதைக் கேட்ட பேராசிரியர் சுரேஷைப் பார்த்து “உன் நண்பன் மறந்துவிட்டது வர்ணங்களை அல்ல. அவற்றின் பெயர்களை. நீ அவற்றை அவனுக்குத் திருப்பிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.” என்றார்.
ஸ்ரீதர் கட்டிலில் எழுந்துட்கார்ந்து பேராசிரியரின் கைகளைத் தன் கைகளால் பற்றி, “பேராசிரியரே தாங்கள் எனக்கு விழிகளைத் தந்துவிட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்” என்றான். பேராசிரியர் அவன் கன்னங்களைத் தன் கரங்களால் தட்டிவிட்டு, “ஸ்ரீதர் இன்னும் இரண்டு மணி நேரத்தில் என் விமானம் இந்தியா புறப்படுகிறது. நான் போகிறேன். இனி உனக்கு ஒரு குறைவுமில்லை. ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால் டாக்டர் நெல்சன் அவற்றைப் பார்த்துக் கொள்வார்,” என்று கூறி விடை பெற்றார்.
இதற்கிடையில் சுரேஷை உற்றுப்பார்த்த ஸ்ரீதர், “அடே நீ சுரேஷல்லவா?… நீதானே எனக்கும் கண் தர ஏற்பாடு செய்தாய். உன் உதவியை நான் ஒரு போதும் மறவேன்.” என்றான்.
அதற்குச் சுரேஷ், “இந்தச் சம்பிரதாயமான நன்றியுரைகளை எல்லாம் அப்புறம் பேசிக் கொள்வோம். இப்பொழுது பேராசிரியரை விமான நிலையைத்துக்குப் போய் வழியனுப்பி விட்டு வருகிறேன்.” என்று புறப்பட்டான்.
ஸ்ரீதரிடம் விடை பெற்று வந்த பேராசிரியர் நோர்த்லி வெளியிலே சிவநேசர் முதலியவர்களுடன் சில வார்த்தைகளைப் பரிமாறிவிட்டு சுரேசுடன் காரிலேறிப் புறப்பட்டுவிட்டார். புறப்படுமுன் முரளியில் அப்பின கன்னங்களைக் கிள்ளிவிட்டு “முரளி, அப்பா உனக்காகக் காத்திருக்கிறார். போய் பார்” என்று கூறத் தவறவில்லை.
அதன் பின் பாக்கியம், சிவநேசர், நன்னித்தம்பியர், செல்லாச்சி ஆகியோர் குழந்தை முரளியுடன் ஸ்ரீதரின் அறையுள் நுழைந்தார்கள். அவர்களைக் கண்டதும் ஸ்ரீதர் ஆனந்தத்தால் கூத்தாடினான். முரளியைக் கண்டதும் கட்டிலில் எழுந்துட்கார்ந்து அவனைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டு “இவன் தானே முரளி. புரளிக்காரப் பயல். நல்ல அழகாயிருக்கிறானே.” என்று கூறிவிட்டு “பத்மா எங்கே?” என்று கேட்டான்.
பாக்கியம் அதற்கு உடனே பதிலளிக்க வில்லையென்றாலும் இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பிக் கேட்கவே ஏதாவது பதிலளிக்கும் நிர்ப்பந்தம் அவளுக்கேற்பட்டது. “பத்மாவுக்கு சிறிது சுகமில்லை. வீட்டுக்குப் போய்விட்டாள்” என்றாள்.
ஸ்ரீதர் அதைக் கேட்டதும் பதைபதைத்துவிட்டாள். “அப்படியா? அபடியானால் உடனே வீடு போவோம். பத்மாவைக் காண வேண்டும்.” என்றான். தான் முன் கூட்டித் திட்டமிட்டது போல் கண் விழித்ததும் முரளியையும் பத்மாவையும் ஒன்றாகப் பார்க்கவேண்டுமென்ற தன் ஆசைக் கனவு நிறைவேறாது போனதில் ஸ்ரீதருக்குப் பெரிய ஏமாற்றம்.
இவை நடந்து ஒரு மணி நேரம் கழித்து ‘அமராவதி’ மாளிகையில் ஸ்ரீதரின் “பத்மா, பத்மா” என்ற அழைப்பு, பேரொலியாகக் கேட்டது. அந்தப் பெரிய மாளிகையின் பெரிய விறாந்தையிலும் மண்டபங்களிலும் பத்மா, பத்மா என்ற சொல் ஒளியும் எதிரொலியுமாகச் சப்தித்தது.
ஸ்ரீதர் தனது காரில் மிக வேகமாக ‘அமராவதி’ வந்து பத்மாவை அழைத்துக் கொண்டிருந்தாள். காரை ஓட்டி வந்த காரோட்டி காரைப் ‘போர்ட்டிக்கோ’வில் நிறுத்திவிட்டு இறங்கிப் போய்விட்டான். அவள் வாசலில் வாயிற்காவலாளியோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
ஸ்ரீதர் “பத்மா, பத்மா” என்று கூறியவாறு தனது அறைக்குள்ளே போனான். ஆனால் அங்கே ஓர் ஆளரவத்தையும் காணோம். இருந்தாலும் அங்கு ஒரு புறத்தில் இருந்த சிறிய ‘ஸ்கிரீனு’க்குப் பின்னால் ஏதோ சலனம் ஏற்பட்டது போலிருந்தது. விரைந்து சென்று அது என்ன சலனம் என்று பார்த்தான் ஸ்ரீதர்.
அங்கே ஸ்கிரீனுக்குப் பின்னால் ஒரு பெண் நடுங்கிக் கொண்டு நிற்பதைக் கண்டான் அவன். அவள் முன்னே ஒரு சிறிய மேசை. அதில் ஒரு கண்ணாடி கிளாசில் எதையோ கலக்கிக் கொண்டிருந்த அவளை ஸ்ரீதர் அடையாளம் கண்டு கொண்டாள். ஆம், நன்னித்தம்பி மகள் சுசீலா அல்லவா இவள் – இவள் ஏன் இங்கு வந்தாள் என்று அதிசயித்தான் அவன்.
ஆம். சுசீலா தான் அங்கு நின்று கொண்டிருந்தாள். இன்று ஸ்ரீதர் கண் பார்வை பெறுவான் என்பது அவளுக்கு நன்கு தெரிந்திருந்தால் காலையிலிருந்தே ஒரு நிலையில் நில்லாது தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம். “ஸ்ரீதர் முன்னர் நான் தான் பத்மா என்று பேசுவது எப்படி?” என்ற கலக்கம் அவளைப் பீடித்தது. “ஸ்ரீதருக்குக் கண் பார்வை கிடைத்துவிட்டது. இனி நான் இருந்தென்ன, இறந்தென்ன?” என்று எண்னிய அவள் இவ்வுலகில் நச்சுக் கோப்பையே தனக்குத் தஞ்சமென முடிவு கட்டி விட்டாள். அதன் பயனாகவே ஆஸ்பத்திரியிலிருந்து அதிகாலையிலேயே வந்து, தேநீருடன் அசெட்டிக் திராவகத்தைக் கலந்து அதனை அருந்துவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் அவள்.
ஆனால் இறப்பதென்னவோ அவ்வளவு இலேசான காரியமாகத் தெரியவில்லை. தன் ஆள் மாறாட்டக் குழறுபடியின் காரணமாக ஸ்ரீதரிடமிருந்து பிரிவதென்னவோ சுசீலாவுக்கு அவசியமானதாகிவிட்டது. தன் முன்னுள்ள பிரச்சினைக்கு அது ஒன்றுதான் திருப்திகரமான முடிவாகத் தோன்றியது. ஆனால் முரளியிடமிருந்து பிரிவதெப்படி? என் உயிரின் உயிரான, இரத்தத்தின் இரத்தமான அவனை விட்டுவிட்டு நான் போவதா – என்று தயங்கினாள் அவள். அவ்வாறு அவள் தயங்கிக் கொண்டிருந்த போது தான் ஸ்ரீதரின் “பத்மா, பத்மா” என்று அழைப்பு அவள் காதுகளில் எதிரொலிக்க ஆரம்பித்தது. அதைக் கேட்டதும் சுசீலாவின் உள்ளத்தில் புதிய ஆசை ஒன்று தோன்றியது. “இதோ ஸ்ரீதர் கண் பார்வை பெற்று வந்துவிட்டார். சாவதன் முன்னர் ஒரு தரமாவது அவரது விழி பெற்ற நிலையில் அவரைப் பார்த்துவிட வேண்டும்.” என்பதே அது. அந்த ஆசையினால்தான் ‘ஸ்கிரீனி’ன் பின்னல் பூனை போல் பதுங்கி நின்றாள் அவள். அவனறியாமல் அவனை ஒரு தரம் நன்கு பார்த்துவிட வேண்டுமென்பது அவளது ஆசை.
ஆனால் அதற்கிடையில் ஸ்ரீதரிடம் அகப்பட்டுக் கொண்டாள் அவள்.
சுசீலாவைக் கண்டதும் ஸ்ரீதர், “யாரது? நீ ஏன் இங்கு நிற்கிறாய்? நீ நன்னித்தம்பியரின் மகளல்லவா? நான் பத்மாவைக் காண வேண்டும். பத்மாவைக் கூப்பிடு” என்றான்.
சுசீலாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பத்மாவா? நான் தான் பத்மா. ஏன் என் குரல் உங்களுக்குத் தெரியவில்லையா? இது பத்மாவின் குரலில்லையா?” என்று கேட்டாள்.
ஸ்ரீதர் திடுக்கிட்டான்: “ஆம், பத்மாவின் குரல்தான். ஆனால் நீ பத்மா அல்லவே?” என்றான்.
சுசீலா, “உண்மைதான். நான் பத்மா அல்ல – சுசீலா. ஆனால் உங்களை நாங்கள் ஏமாற்றிவிட்டோம். பத்மாவுக்குப் பதிலாக உங்கள் அப்பாவும் அம்மாவும் என்னை பத்மா என்று சொல்லி உங்களுக்கு மணம் செய்து வைத்தார்கள். நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள்.” என்றாள். அவ்வாறு சொல்லிக் கொண்டே நச்சுத் திராவகத்தை மடக்கென்று வாயில் ஊற்றுவதற்குக் கிளாசைக் கையிலே எடுத்தாள் சுசீலா.
அதைக் கண்ட ஸ்ரீதர், “என்ன இது? நீ என்ன குடிக்கப் போகிறாய்?” என்றான்.
“நஞ்சு – அசெட்டிக் அசிட்” என்றாள் சுசீலா. அதைக் கேட்ட ஸ்ரீதர் அப்படியே பாய்ந்து கிளாசைத் தன் கைகளால் பற்றினான். இதனால் ஏற்பட்ட சந்தடியில் கிளாஸ் நிலத்தில் குப்புற விழுந்து சுக்கு நூறாக உடைந்தது.
சுசீலா ஒன்றும் தெரியாமல் திகைத்துப் போய் நின்றாள். அவன் கண்கள் ஸ்ரீதரின் பார்வை பெற்ற கண்களால் அள்ளி விழுங்குவது போல் நோக்கின.
ஸ்ரீதர், “ நீ சொன்னது உண்மைதானா? நீதானா என்னுடன் பத்மாவாக வாழ்ந்தவள்? என் முரளிக்குத் தாய் நீதானா?” என்று ஒன்றின் பின் ஒன்றாகப் பல கேள்விகளைக் கேட்டான்.
ஒவ்வொன்றையும் “ஆம், ஆம்” என்று உறுதிப்படுத்தினாள் சுசீலா.
ஸ்ரீதர் ‘அமராவதி’யை நோக்கிக் காரில் புறப்பட்டதும் அவன் பின்னாலேயே சிவநேசரும் பார்வதியும் குழந்தை முரளியுடன் புறப்பட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தது தான் தாமதம். சுசீலாவும் ஸ்ரீதரும் தங்கள் அறையுள் பலமாகப் பேசிக் கொண்டிருப்பது அவர்கள் காதில் வீழ்ந்தது. அதைக் கேட்ட பாக்கியம் அவர்கள் அறையுள் நுழையப் போனாள். ஆனால் சிவநேசர் அதைத் தடுத்தார். “வேண்டாம் அவர்கள் எதையும் பேசிக் கொள்ளட்டும். பேசி முடிந்து வெளியில் வந்த பின் விஷயத்தை நாம் சுசீலாவிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.” என்றார். பாக்கியமும் ஒப்புக்கொண்டு கீழே விறாந்தையில் முரளியை ஆயாவிடம் ஒப்படைத்துவிட்டுச் சிவநேசருடன் உட்கார்ந்து கொண்டான். முரளி சிறிது நேரத்தில் ஆயாவின் அரவணைப்பில் தூங்கிவிட்டான்.
சிவநேசரும் பாக்கியமும் ஸ்ரீதர் தன் கண் பார்வையைப் பெறுவது சுசீலாவுக்குப் பெரிய பிரச்சினையையே உண்டு பண்ணும் என்று உணர்ந்த போதிலும், அது தற்கொலை பன்ணும் அளவுக்கு அவளைத் தூண்டும் என்று ஒரு போதும் எண்ண வில்லை. எனவே அவர்கள் இது விஷயமாக ஓரளவு பரபரப்பு அடைந்திருந்த போதிலும், அளவுமீறிய பதை பதைப்படைந்தார்கள் என்பதற்கில்லை. ஆகவே ‘அமராவதி’யின் விறாந்தையில் அவர்கள் மிக அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள்.
ஸ்ரீதர் சுசீலாவை நோக்கிக் குமுறிக் கொண்டிருந்தான். “நான் குருடன். அதை உபயோகித்து என் பெற்றோர்களே என்னை ஏமாற்றிவிட்டர்கள். உன்னைப் பத்மா என்று கூறி என்னை மோசம் செய்துவிட்டார்கள். சிச்சீ! எத்தகைய மடையன் நான்? எப்படிப்பட ஏமாளி நான். நினைக்கவே வெட்கமாயிருக்கிறது” என்றாள்.
சுசீலாவுக்கு என்ன பதிலும் கூறத் தோன்றவில்லை. கற்சிலை போல் நின்று கொண்டிருந்தாள்.
ஸ்ரீதர் பேசிக் கொண்டே போனான். உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவன் பேசியது ஒரு நாடக நடிகன் நாடகத்தின் உச்சக் கட்டத்தில் பேசுவது போலிருந்தது. ஈடிப்பஸ் அரசன் தனது இழிதகைமையை அறிந்து, கொதிப்படைந்து தன் கண்களைத் தன் கைகளாலேயே சிதைத்தெறியுமுன் எவ்வித உணர்ச்சியுடன் பேசினானோ அத்தகைய உணர்ச்சியுடன் பேசிக் கொண்டு போனான் ஸ்ரீதர்.
அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிலே அவன் சுசீலாவை நோக்கி, “ நீ பத்மாவல்ல. நான் உன்னை வெறுக்கிறேன். நீ என்னை ஏமாற்றியவள். மோசக்காரி. நான் உன்னை என் முழு மனதாலும் வெறுக்கிறேன்.” என்றான்.
இவ்வார்த்தைகள் சுசீலாவை அப்படியே இடிந்து போகச் செய்துவிட்டன. “என் காதால் இந்த வார்த்தைகளைக் கேட்கத்தானா நான் கண்ணற்ற அவரைத் திருமணம் செய்தேன்? அவர் வாழ்க்கை அழிந்து விடுமென்பதற்காக அவர் மீது நான் கொண்ட இரக்கமல்லவா அவரைத் திருமணம் செய் என்ற திடீர் முடிவுக்கு என்னைக் கொண்டு வந்தது? அது மட்டுமல்ல, நான் மட்டும் அவருக்குக் கண் பார்வை அளிக்கக் கூடாது என்று நினைத்திருந்தால் இன்று அவர் என்னை நோக்கி இந்த வார்த்தைகளைக் கூறும் படி ஏற்பட்டிருக்குமா?… இருந்தாலும் பாவம், பிழை அவர் மீதில்லை. அவர் மோசடி செய்யப்பட்டதென்னவோ உண்மை. இந்த நிலையில் யாரும் அவர் போல தானே பேசியிருப்பார்கள்? பிழை என் மீது தான், என் மீதேதான். நான் அவர் இங்கு வருவதற்கு முன்னரே நஞ்சை அருந்தியிருக்க வேண்டும். அவ்வாறு அருந்தியிருந்தால் இந்த வார்த்தைகளை நான் கேட்காதிருக்கலாமல்லவா?” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள்.
சுசீலாவைப் பொறுத்தவரையில், அவள் வாழ்க்கையின் தோல்வி நாள் இன்று. ஒரு பெண்ணினுடைய இதயத்தின் பெரிய வெற்றி காதலின் வெற்றியே. அது போல் காதலின் தோல்விதான் வாழ்க்கையின் தோல்வியும், தான் விரும்பி அன்பு செலுத்திய ஓர் ஆண் மகன் தன் முகத்தைப் பார்த்துச் சிறிதும் கூசாது “ நான் உன்னை வெறுக்கிறேன்.” என்று கூறுவதை எந்தப் பெண்ணால் தான் சகிக்க முடியும்? இவ்வுலகில் எந்த ஓர் ஆணின் மீது தன் முழு அன்பையும் செலுத்தி வந்தாளோ, எவனது சிரிப்பிலே பூரிப்பையும், எவனது துக்கத்திலே உள்ளக் குமுறலையும் கண்டு வந்தாளோ, எவனைத் தன்னுயிரினும் மேலான பொருளாக எண்ணி வந்தாளோ அவன், “நான் உன்னைக் காதலிக்கவில்லை. உன்னை வெறுக்கிறேன்.” என்று கூறிவிட்டான். இனி இந்த வாழ்க்கையில் எனக்கென்ன இருக்கிறது. முரளி… ஆனால் அவன் கூட தந்தையுடன் சேர்ந்து கொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம். அவரால் வெறுக்கப்பட்ட நான் இனி ‘அமராவதி’யில் இருக்க முடியாது. நான் அப்பா வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அப்படி நான் அப்பா வீட்டுக்குப் போகும்போது முரளியை என்னிடம் தருவார்களா? நிச்சயம் தர மாட்டார்கள். என்னை வெறுத்தாலும் முரளி அவர் பிள்ளை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இன்னும் முரளி ‘அமராவதி’யின் ஒரே வாரிசு. அவனை என்னிடம் ஒருபோதும் தர மாட்டார்கள். என் மகன் கோடீஸ்வரன். தங்கத்திலும் வைரத்திலும் புரண்டு வளர்வான் அவன். ஆனால் நான் அவன் தாய் என்பது கூட மறக்கப்பட்டு எங்கோ ஒரு மூலையில் கிடப்பேன். விஷயம் தெரிந்த ஒரு சிலர் மட்டும் அதைப் பற்றி அனுதாபமாகப் பேசுவார்கள். இதை விடக் கேடு கெட்ட வாழ்க்கை என்ன இருக்கிறது? சாவு அதை விட எவ்வளவோ மேலல்லவா? ஆனால் சாவதற்கு நான் எடுத்த முதல் முயற்சி இன்று தோற்றுவிட்டது. இரண்டாம் முறை எப்படியும் வெற்றி பெற்றே தீருவேன். ‘அமராவதி’யில் இல்லாவிட்டாலும் அப்பா வீடு சென்ற பிறகாவது நிச்சயம் நான் நஞ்சு குடித்துச் சாவேன். இது சத்தியம்” என்று தனக்குள் தானே உறுதி கூறிக் கொண்டாள் அவள்.
இவ்வாறு அவன் சிந்தித்துக் கொண்டிருந்த போது அவளை அறியாமலே கண்ணீர் பிரவகித்து கொண்டிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அவள் தன் அழுகையை அடக்க முயன்ற காட்சி மிகப் பரிதாபமாக இருந்தது.
ஸ்ரீதர் அதைப் பார்த்ததும் கலங்கி விட்டான். இதற்கு முன் அவன் தன் வாழ்க்கையில் எவருமே இவ்வாறு கண்ணீர் சிந்திக் கலங்கி நின்றதைத் தன் கண்களால் கண்டதில்லை. “இழந்த கண்கள் மீண்டும் கிடைத்ததும் நான் காணும் முதற் காட்சி இப்படியா அமைய வேண்டும்.” என்று எண்ணினான் அவன்.
“நான் ஏமாற்றப்பட்டேன். பத்மா எங்கள் அந்தஸ்துக்குக் குறைந்தவளென்பதற்காக என் அப்பா செய்த மோசடி இது. ஆனால் உண்மையில் நான் ஏமாறியவன்தானா…”
“ஏறக்குறையக் கடந்த இரண்டு வருட காலமாக சுசீலா என்னுடன் வாழ்ந்து வருகிறாள். உண்மையைச் சொல்லப் போனால் என் வாழ்க்கையின் மிகவும் இன்பகரமான நாட்கள் இந்த இரண்டு வருடங்களும்தானே. சாதாரணமாகக் குருடனின் வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாயிருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இவைதான் என் வாழ்வின் மிகவும் இன்பமான நாட்கள். என் குருட்டு வாழ்க்கைக்கு இன்பச் சுவையை ஊட்டியது யார்? சுசீலா அல்லவா? அவள் பேச்சு எனக்கு இனித்தது. அவள் காட்டிய அன்பு என்னுள்ளத்தின் அடித்தளத்தைத் தொட்டு என்னை மெய்மறக்கச் செய்திருக்கிறது. இன்னும் அவள் என் முன் காட்டிய பணிவை என்னென்பேன். அவளது ஒவ்வொரு செயலும் என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. அவள் பாட்டு என்னைப் பரவசப்படுத்தியது. அவளது விளையாட்டுப் பேச்சு என்னை எப்பொழுதும் சிரிக்க வைத்திருக்கிறது. உண்மையில் நான் தனித்திருக்கும் வேளைகளில், “இப்படிப்பட்ட பெண் வேறு யாருக்கும் இவ்வுலகில் கிடைக்க மாட்டாள். உலகிலேயே மிகச் சிறந்த பெண் எனக்குக் கிடைத்துவிட்டாள்” என்று எனக்குள்ளே நான் எத்தனை தடவை கூறி மகிழ்ந்திருக்கிறேன்? உண்மையில் நான் விரும்பியது போல் பத்மாவைத் திருமணம் செய்திருந்தால் அவள் கூட என்னுடைய உள்ளத்தை இவ்வாறு ஒரு சேரக் கொள்ளை கொண்டிருப்பாளோ என்னவோ? சுசீலா பக்கத்தில் இருந்தால் இன்பம், விலகினால் துன்பம். கடந்த இரண்டு வருட காலத்தில் ஒவ்வொரு நிமிஷத்தையும் இன்ப நினைவாக்கியவள் அவள். உண்மையில் அவள் என் காதற்கன்னி. உயிர்த் துணை, மனதின் அரசி, இதய ராணி. ஆனால் அது இருளில்தான். என் கண்களில் பார்வை இல்லாத போதுதான் பத்மா என்று அவளை நினைக்கும்போது தானே…
ஆனால் பார்வை பெற்றதும் கண்ணால் பார்த்ததும் காதல் மறைந்தது. அழகைப் பொறுத்தவரையில் இவளும் பத்மாவுக்குக் குறைந்தவளல்லதான். உண்மையில் இவள் கண்கள் பத்மாவின் கண்களை விட அழகு. இருந்துமென்ன? என் மனம் விரும்புவது பத்மாவை. அவளே இதுவரை என்னுடன் வாழ்ந்து வந்திருக்கிறாள். ஆனால் கண்கள் வந்ததும் இவள் யாரென்று தெரிந்து விடுகிறது. இவள் பத்மாவல்ல என்று தெரிந்ததும் இவள் மீது வெறுப்புதான் ஏற்படுகிறது. நான் இவளை வெறுக்கிறேன். பத்மாவைத் தவிர வேறு எல்லாப் பெண்களையுமே நான் வெறுக்கிறேன். இந்த நிமிஷம் வரை நான் பத்மாவுடனல்லவா என் மனதில் வாழ்ந்து வருகிறேன்? இன்று திடீரென என் காதலைச் சுசீலாவிடம் மாற்றி அவளுடன் வாழ முடியுமா? அது ஓர் இரண்டாம் திருமணம் போலல்லவா தோன்றுகிறது. நான் என்ன செய்வேன்? சுசீலா? மனதாரப் பார்த்தால் மகராசியாகத் தெரியும் அவள் ஊனக் கண்ணுக்கு வெறுப்பூட்டுபவளாகக் காட்சியளிக்கிறாள். ஆனால் ஐயோ சுசீலாவை நான் வெறுப்பதா? குருடனென்றும் பாராமல் என்னைக் கல்யாணம் செய்தாளே. இரவு பகலாக எனக்குப் பணிவிடை புரிந்தாளே, எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குக் கண் பார்வை கிடந்தால் அதனால் தன் மோசடி வெளியாகித் தான் இன்னங்களுக்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தும் நான் கண் பார்வை பெற வேண்டுமென்று ஊக்கமாக உழைத்தாளே, அந்த உத்தமியையா நான் வெறுப்பது? இல்லை, நான் அவளை வெறுக்கவில்லை. நேசிக்கிறென். காதலிக்கிறேன். அவள் என் காதல் தெய்வம். ஆனால், இருளில்தான் அவள் என் காதலி. உண்மையில் அவளைச் சுசீலா என்று நான் இனங்காணாத வரையில் தான் அவள் என் காதலி. ஒளியில் அவள் ஓர் ஏமாற்றுக்காரி. அவளை நான் விரும்ப முடியாது.
ஆனால் இதுதானா? அவள் காட்டிய அன்புக்கு நான் செய்யும் கைம்மாறு? அவளது தியாகங்களுக்கு நான் செய்யும் பதில்? வெறுப்பு? கூடாது. அவள் நான் வெறுக்கக் கூடாது. நேசிக்க வேண்டும். என்றும் எப்பொழுதும் இரவும் பகலும் அவளைக் காதலிக்க வேண்டும். ஆனால் அதற்குத் தடை? என் கண் பார்வை? ஐயோ, நான் என் கண் பார்வையை ஏன் பெற்றேன்? அது கிடைக்கும் வரை நான் அவளை நேசிக்கத் தானே செய்தேன்? என்னுயிருக்குயிராக அல்லவா அவளை நான் நேசித்தேன்? ஐயோ என் கண் பார்வையால் நான் பெற்ற பயன் இதுதானா?”
ஸ்ரீதரின் மனதில் இடியும் மின்னலும் பூகம்பமும் ஏக காலத்தில் நிகழ்ந்தது போன்ற நிலை. தன்னையிழந்து தவிக்கும் அந்நிலையிலே அவன் கண்கள் அங்குமிங்கும் சுழல்கின்றன. அவ்வாறு சுழன்ற அவனது கண்கள் திடீரென ஓரிடத்தில் நிலைத்தன. ஆம், சுசீலாவுக்குச் சமீபமாக இருந்த மேசையிலே காணப்பட்ட பவுண்டன் பேனாவிலே அவன் கண்கள் அப்படியே நிலைத்துவிட்டன. நஞ்சருந்தி மாள்வதற்கு முன்னர் ஏதாவது எழுதி வைப்போமா என்ற சபலத்தில் சுசீலா கொண்டு வந்திருந்த பேனா அது. அதற்குப் பக்கத்தில் காகிதம் எழுதும் ‘லெட்டர் பாட்’ ஒன்றும் கிடந்தது.
“என் கண்களே என் எதிரிகள். அவை எனக்கு இன்பத்தைக் கொண்டு வரவில்லை. துன்பத்தையே கொண்டு வந்தன. அவை இருக்கும் வரை என்னால் சுசீலாவை நேசிக்க முடியாது…” என்று எண்ணிய அவன் மறுகணம் வெறி பிடித்தவன் போலானான். பவுண்டன் பேனாவைக் கையில் எடுத்தான். மின்னி மறையும் நேரத்துள் அவற்றால் தன்னிரு கண்களையும் குத்திக் கொண்டு “ஐயோ” எனக் கதறினான். உலக் நாடக பாத்திரங்களில் தன்னை முற்றாகக் கவர்ந்து அடிமை கொண்ட ஈடிப்பஸ் போலத் தன் கண்களைத் தானே குத்திக் கொண்டு கதறினான் ஸ்ரீதர்.
இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னைய கிரேக்க நாடகம் ஸ்ரீதரின் வாழ்க்கை நாடகமாகிவிட்டது.
ஒரு முறை கண்ணை மூடி மீண்டும் திறப்பதற்குச் செல்லும் அற்ப நேரத்துள் திடுதிடுப்பென்று நடந்து விட்ட இந்நிகழ்ச்சி சுசீலாவைத் திகிலடைய செய்துவிட்டது. அவள் ஒரே தாவலாகச் ஸ்ரீதரிடம் ஓடினாள். ஆனால் அதற்கு முன்னர் விஷயம் முடிந்து விட்டது. கண்களிலிருந்து இரத்தம் பிரவகித்தது. கண்கள் இரண்டும் இரண்டு புண்களாகிவிட்டன. அதைக் கண்டு ஆற்றாத சுசீலா “ஐயோ நான் என்ன செய்வேன்” என்று உச்சக் குரலில் கூச்சலிட்டாள்.
கீழே விறாந்தையிலிருந்த சிவநேசரும் பாக்கியமும் சுசீலாவின் அலறலைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டார்கள். ஒரே ஓட்டமாக ஸ்ரீதரின் அறைக்கு ஓடினார்கள். “என்ன நடந்தது?” என்று கேட்டார் சிவநேசர்.
“தன் கண்களைத் தாமே குத்திக் கொண்டு விட்டார். உடனே டாக்டர் நெல்சனை அழையுங்கள்.” என்றாள் சுசீலா விம்மியவண்ணம்.
சிவநேசர் உடனே டெலிபோனுக்குச் சென்று டாக்டர் நெல்சனுடன் பேசினார்.
“இங்கு பயங்கரமான நிகழ்ச்சி ஒன்று நடந்துவிட்டது. ஸ்ரீதர் தனது கண்களைத் தானே குத்திக் கொண்டு விட்டான். உடனே வாருங்கள்.”
டாக்டர் நெல்சன் பதைபதைத்துப் போய்விட்டார். சில நிமிஷங்களில் வந்து விடுவதாகக் கூறி டெலிபோனை வைத்தார் அவர்.
28-ம் அத்தியாயம்: மனக்கண்!
டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களை விட்டு சிவநேசரிடம் “இரண்டு கண்களும் மிகவும் பழுதடைந்துவிட்டன. அதிலும் ஒரு கண் முற்றாகவே சின்னாபின்னப்பட்டுவிட்டது. மற்றக் கண்ணை வேண்டுமானால் சந்திர சிகிச்சைகளினால் மீண்டும் குணப்படுத்திப் பார்வையைப் பெற முடியும். ஆனால் ஸ்ரீதர் தான் கண் பார்வையை விரும்பவில்லையே. அதனால் தானே தன் கண்களைத் தானே குத்திக் கொண்டான் அவன்” என்றார். அதற்குச் சிவநேசர் “இப்பொழுது ஸ்ரீதருக்கு வேண்டியது கண் பார்வையல்ல. அவன் கண்ணில் ஏற்பட்டுள்ள புண்ணை முதலில் ஆற்றுங்கள்.” என்றார். சிவநேசரது வேண்டுகோளின் படி டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்ணிலே பட்ட புண்ணுக்கே வைத்தியம் செய்தார். ஒரு சில தினங்களில் புண்ணாறிப் போய்விட்டது. இதன் பயனாக ஸ்ரீதர் மீண்டும் பழையபடி ஆனான். அதாவது மீண்டும் பழைய குருடனாகி விட்டான் ஸ்ரீதர். இருண்ட வாழ்க்கை – ஆனால் அமைதி நிறைந்த இருண்ட வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் ஒன்று. அந்த அமைதி பூரண அமைதி என்று சொல்ல முடியாது.
ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் முன்னர் அவன் குருடனாயிருந்த போதிலும் அப்பழுக்கற்ற இன்பத்தை அனுபவித்து வந்தான். ஆனால் இப்பொழுதோ அவனது இன்பத்தில் சிறிது அழுக்கு விழுந்து விட்டதென்றே சொல்ல வேண்டும். முன்னர் அவனது இருளிலே ஒளிக் கற்றையாக ஒயிலாக உலவி, உள்ளத்துக்கு இன்பமூட்டி வந்தாள் அவனது மனத்தின் மோகினியாகிய பத்மா. அப்பொழுதெல்லாம் அவனோடு இரவும் பகலும் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் வாழ்ந்த சுசீலாவைப் பற்றி இவள் பத்மாவல்ல. வேறு யாரோ என்ற சந்தேகம் ஒரு சிறிதும் இருக்கவில்லையல்லவா? அதன் காரணமாக அப்பொழுது அவன், அனுபவித்த இன்பம் உண்மையில் குறைபாடற்றதாக விளங்கியது. ஆனல் இன்று இருளிலே அவன் கேட்டது பத்மாவின் குரலேயானாலும், சுசீலாவின் முகம் கண்ணுக்கு முன்னே தெட்டந் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்ததால் தனக்கு அவள் மீது ஆத்திரம் உண்டாகிக் கொண்டிருக்கும் என்பதற்காக அவளை இருள் திரையிட்டு முற்றாக அவன் மறந்துவிட்டிருந்தாலும், அவள் பத்மா அல்ல என்ற ஞாபகம் அவன் உள்ளத்திலே அடிக்கடி தலை தூக்கத்தான் செய்தது. அதனால் முன் போல் முழு இன்பம் அவனுக்கு இல்லாது போயிற்று. இருந்தாலும் இருளாலும் ஓரளவு இன்பம் அவனுக்குக் கிட்டத்தான் செய்தது.
ஸ்ரீதருக்கு இப்பொழுது தன்னோடு வாழும் பெண் தன் கல்லூரிக் காதலி பத்மாவல்ல, சுசீலா என்பது நன்கு தெரிந்திருந்தாலும் அவளைப் பத்மா என்றே இன்னும் தொடர்ந்து அழைத்து வந்தான். புண்ணாறிய பிறகு ஒரு நாள் இரவில் படுக்கையில் சுசீலா இதைப் பற்றி அவனிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள்.
“நான் பத்மா அல்ல என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தும், ஏன் என்னைப் பத்மா என்றே இன்னும் அழைத்து வருகிறீர்கள்? சுசீலா என்று அழைத்தாலென்ன?” அதற்கு ஸ்ரீதர் சிறிதும் யோசியாமல் அளித்த பதில் சுசீலாவைத் திடுக்கிட வைத்து விட்டது.
“சுசீலா – அந்தப் பெயரை நான் வெறுக்கிறேன். அது நான் காதலிக்காத பெண்ணின் பெயர். என்னை ஏமாற்றிய மோசக்காரியின் பெயர். அவள் பெயர் நினைவில் வரக் கூடாது. முகம் கண்ணில் தெரியக் கூடாது என்பதற்காகத்தானே என் கண்களை நான் குத்தினேன்? அப்படியிருக்க அந்தப் பெயரை நான் எப்படி ஆசையோடு உச்சரிக்க முடியும்? அந்தப் பெயரைக் கேட்டாலே எனக்கு அருவருப்பேற்படுகிறது.”
“மோசக்காரி. சுசீலாவா மோசக்காரி. யார் மோசக்காரி என்பதை உடனே சொல்லி விடுவோமா?” என்று ஆத்திரம் பொங்கியது சுசீலாவுக்கு. ஆசைக் காட்டி மோசம் செய்த பத்மாதான் மோசக்காரி. உண்மைக் காதலி போல நீண்ட காலம் நடித்துவிட்டுக் கண்ணிழந்ததும் குருடனைக் கட்ட மாட்டேன் என்று கூறிய அந்த நயவஞ்சகி பத்மாவல்லவா மோசக்காரி – இது பற்றிய முழுக் கதையையும் ஸ்ரீதருக்குக் கூறிப் பத்மாவே மோசக்காரி என்று காட்டிவிட்டாலென்ன? என்று துடிதுடித்த அவளை வேறு சில எண்ணங்கள் உடனே கட்டுப்படுத்தின.
“சிவநேசர் மாமா தன் அந்தஸ்து வெறியின் காரணமாகவே பத்மாவைத் தனக்கு மணம் செய்து வைக்கவில்லை என்று ஸ்ரீதர் நம்புகிறார். அதனால்தான் பத்மாவென்று ஏமாற்றி என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்ததாக அவர் எண்ணுகிறார். இந் நிலையில் “இல்லை, இல்லை. பத்மா உங்களைக் கல்யாணம் செய்ய மறுத்தாள்.” என்று நான் கூறினால் அதை அவர் ஒரு போதும் நம்பப் போவதில்லை. மோசடியையும் செய்து விட்டு உத்தமியான பத்மா மீது பொய்ப் பழியையும் போடுகிறீர்களா என்று தான் அவர் சொல்லுவார். ஆகவே அந்தக் கதையைப் பேசிப் பயனில்லை” என்று தீர்மானித்தாள் அவள்.
சுசீலா இவ்வாறு தீர்மானித்துக் கொண்டாளாயினும் தன்னை மோசக்காரி என்று ஸ்ரீதர் நம்புவதை எண்ணியதும் அவள் உள்ளம் வெம்பவே செய்தது. தன்னை ஸ்ரீதர் அன்போடழைப்பதும் முத்தங்கள் சொரிவதும் தன்னைப் பத்மாவாகக் கருதியல்லவா என்றெண்ணியதும், அவள் கண்கள் அவளை அறியாமலே நீரைப் பெருக்கின. சுசீலா வாழவில்லை. அவள் வெறுக்கப்படுகிறாள். அவள் கணவனே அவள் பெயரைக் கேட்டதும் அருவருப்படைகிறான். பத்மாதான் நேசிக்கப்படுகிறான் என்றெண்ணும் போதெல்லாம் அவளுக்கு வாழ்க்கையிலேயே வெறுப்பேற்படும்,. முன்னர் திட்டமிட்ட பிரகாரம் நஞ்சருந்தி மாண்டு விடுவோமா என்ற எண்ணங் கூட அவளுக்கு இடையிடையே ஏற்படும். ஆனால் கண்ணற்ற ஸ்ரீதரைத் தனியே விட்டுச் சாவதற்கு அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. கண் பார்வை பெற்ற ஸ்ரீதரை அவள் தனியே விட்டுச் செல்லத் தயாராயிருந்தாள். ஆனால், கண்ணற்றவனுக்குத் தன் துணை வேண்டும் என்பதை எண்ணியதும் நஞ்சருந்தும் எண்ணத்தைக் கைவிட்டாள் அவள்.
ஒரு நாள் தாய் பாக்கியம் ஸ்ரீதரிடம் பேசும் போது, “நீ எவ்வளவு அபாக்கியசாலி. கிடைத்த கண் பார்வையை மீண்டும் இழந்துவிட்டாயே?” என்றாள். அதற்கு அவன் “அம்மா நீ இவ்வாறு கவலைப்படக் கூடாது. கண்ணில்லாவிட்டாலென்ன? எனக்கு என்ன குறை? நல்ல அம்மா இருக்கிறாள்; அன்புள்ள தந்தை இருக்கிறார். கண்ணுக்குச் சமமான மனைவி இருக்கிறாள்; மழலை பேசும் குழந்தை இருக்கிறான்; வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா வசதிகளும் இருக்கின்றன. இந் நிலையில் கண் பார்வைதானா பெரிது? நான் மிகச் சந்தோஷமாயிருக்கிறேன். எனக்காக யாரும் கவலைப்படக் கூடாது” என்றான். சில சமயங்களில் ஸ்ரீதரின் மனதில் தன் கண்ணைத் தானே அழித்துக் கொண்ட ஈடிப்பஸின் நினைவு வந்தது போல, சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கன்ணைத் தானே குத்திக் கொண்ட வைஷ்ணவ பக்தன் பில்வமங்கனின் நினைவும் வரும். ஊனக் கண்ணை இழந்து ஞானக் கண் பெற்ற பில்வமங்கன் பற்றி எண்ணும்போதும் தன்னைப் பற்றியும் அவனோடு சேர்த்து எண்ணுவான் அவன்.
“நானும் என் ஊனக்கண்ணை இழந்துவிட்டேன். அந்த ஊனக் கண்ணின் முன்னால் மோசக்காரி சுசீலா வந்து நின்றாள். ஆனால் அதை நான் இழந்ததும் பழைமை போல மனக் கண்ணிலே பத்மா காட்சியளிக்கிறாள் – என் அன்புக்குரிய பத்மா, ஆசைக்குரிய பத்மா,” என்று தனக்குள் எதை எதையோ கூறிக் கொண்டான் அவன்.
காலம் இவ்வாறு போகப் போக வாழ்க்கை பழையபடியும் தனது ஆறுதலைப் பெற ஆரம்பித்தது. குருட்டு வாழ்க்கை கூட ஸ்திரமுற்ற வாழ்க்கையாகியதும், அதில் ஓர் அமைதி ஏற்படவே செய்தது. கண்ணைக் குத்திய பயங்கர சம்பவம் கூட மெல்ல நினைவிலிருந்து அகன்று கொண்டிருந்தது.
ஸ்ரீதரின் நண்பன் டாக்டர் சுரேஷ் ‘அமராவதி’ வளவுக்கு எப்போதாவது வருவதுண்டு. முரளி இப்பொழுது தட்டுத் தடுமாறி நடக்கத் தொடங்கிவிட்டான். மோகனா பத்மாவுக்குப் பதிலாக இப்பொழுது அதிகமாக முரளியைக் கூப்பிட்டது. முரளிக்கும் மோகனாவுக்குமிருந்த சிநேகம் தினசரி வளர்ந்து கொண்டேயிருந்தது. மோகனாவுக்குப் பழங்களை உண்ணக் கொடுப்பதில் முரளிக்கு அதிக பிரியம். தாய் சுசீலாவோ, பாட்டியார் பாக்கியமோ ஆயாவோ அவனைக் கூட்டுக்குச் சமீபமாகத் தூக்கிச் சென்று மோகனாவுக்குப் பழங்களை ஊட்ட அவனுகு உதவி செய்வார்கள். மோகனா பழத்தை உண்ணுவதைப் பார்த்து முரளி பெரிய ரகளை பண்ணுவான்; ஆர்ப்பாட்டம் செய்வான்.
இவ்வாறு சலனமற்றுச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர்ச் சலனமேற்படுத்தும் செய்தியொன்றை ஒரு நாள் ‘அமராவதி’க்குக் கொண்டு வந்தான் சுரேஷ்.
ஸ்ரீதர் அன்று சுசீலாவுடனும் முரளியுடனும் தோட்டத்தில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தான். சுசீலா பாட்டுப் பாடிச் சிரிப்புக் கதைகள் கூறிக் கொண்டிருந்தாள்.
அப்போது சுரேஷ் தனது காரில் அங்கே வந்தான். சுசீலா எழுந்து சுரேஷிற்கு வணக்கம் செலுத்தி விட்டு “நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள்” என்று கூறி உள்ளே போய் விட்டாள்.
தனியே இருந்த ஸ்ரீதரிடம் சுரேஷ், “ஸ்ரீதர் நான் உன் பத்மாவைக் கொழும்பில் சந்தித்தேன். நீண்ட நேரம் அவளுடன் பேசவும் செய்தேன்,” என்றான்.
ஸ்ரீதர் அதற்கு “அப்படியா? அவள் கல்யாணம் செய்துவிட்டாளா? இப்பொழுது எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான்.
“கல்யாணம் செய்து ஒரு பிள்ளையும் பெற்றுவிட்டாள். அது போக, நீ உன் பத்மாவை மணக்க முடியாது போனது எதனால்? உண்மைக் காரணம் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் சுரேஷ்.
“இதென்ன புதிய கேள்வி? தெரியாதது போல் பேசுகிறாயே. எல்லாம் அப்பாவின் அந்தஸ்து வெறி. ஏழை வீட்டில் திருமணம் செய்வது எனது அந்தஸ்துக்குப் பொருந்தாதென்று அவர் நினைத்தார்.”
“அதுதான் இல்லை. பத்மாவே எனக்கு உண்மைக் காரணத்தைக் கூறிவிட்டாள்,” என்றான் சுரேஷ்.
“என்ன காரணம்?”
“நீ கண் பார்வையை இழந்த பின்னர் பத்மாவைப் பெண் கேட்க உன் அப்பாவும் அம்மாவும் பரமானந்தர் வீட்டுக்குப் போனார்கள்.”
“உண்மையாகவா? அப்படித்தான் அவர்கள் சொன்னார்கள். அதை நான் நம்பவும் செய்தேன். ஆனால் பின்னால் அது முற்றிலும் பொய் என்பதை நான் கண்டு கொண்டேன். அப்பாவும் அம்மாவும் என்னை ஏமாற்றுவதற்காகக் கொழும்புக்குப் போனது போல் நடித்தார்கள். பின் அங்கிருந்து பத்மாவை அழைத்து வந்து விட்டதாகச் சொல்லிச் சுசீலாவை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.”
“இல்லை, ஸ்ரீதர். உன் அப்பாவும் அம்மாவும் உண்மையிலேயே கொழும்புக்குப் போகத்தான் செய்தார்கள். ஆனால் உன் பத்மாதான் உன்னை மணக்க முடியாதென்று கூறிவிட்டாள்.”
இதைக் கேட்ட ஸ்ரீதர் அதிர்ச்சியடைந்து “சுரேஷ். நீ உண்மையைத்தான் கூறுகிறாயா? அப்படிப் பத்மா என்னை மண முடிக்க மறுத்திருந்தால் அதற்குக் காரணமென்ன சுரேஷ்?” என்றான்.
“ஆம். உண்மையைத்தான் கூறுகிறேன். குருடனைக் கலயாணம் செய்யத் தன்னால் முடியாது என்று கூறிவிட்டாள் பத்மா. இதை அவளே தன் வாயால் எனக்குக் கூறினாள் ஸ்ரீதர் – குருடனைக் கல்யாணம் செய்து என்னால் என்ன சுகத்தைக் கண்டிருக்க முடியும் என்று கேட்டாள் அவள்.”
இதைக் கேட்ட ஸ்ரீதர், தாயார் பாக்கியத்தை “அம்மா, அம்மா இங்கே வா” என்று கூவி அழைத்தான்.
பாக்கியம் வந்ததும் சுரேஷ் சொன்ன கதையை அவளிடம் கூறி, “அம்மா, சுரேஷ் சொல்வது உண்மைதானா? பத்மா என்னைத் திருமணம் செய்ய மறுத்தது உண்மைதானா?” என்று கேட்டான்.
அதற்குப் பாக்கியம், “ஆம் ஸ்ரீதர். அவன் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் நீ அன்றிருந்த நிலையில் நாங்கள் இதனை உனக்கு எப்படிச் சொல்லியிருக்க முடியும்? “கண் பார்வையற்ற ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கை பூராவும் கஷ்டப்பட நான் தயாரில்லை, மன்னிக்கவும்” என்று மிக மரியாதையாகக் கூறி விட்டாள் பத்மா. இதனா உன் அப்பா அடைந்த கோபத்தைச் சொல்ல முடியாது. முதலில் நீ பத்மாவைக் கல்யாணம் செய்வதை அவர் முழு மூச்சாக ஆட்சேபித்த போதிலும், பின்னால் முற்றிலும் மனம் மாறியிருந்த அவர், அவளைப் பலாத்காரமாகத் தூக்கி வந்தேனும் உனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அதற்காக ஒரு பயங்கரத் திட்டமும் தீட்டினார். நான் தான் அதனைத் தடுத்தேன். அது மட்டுமல்ல, சுசீலா இடையில் புகுந்து அதை அநாவசியமாக்கிவிட்டாள். ஆம் ஸ்ரீதர், உண்மை இதுதான். பத்மாவின் மீது முழு ஆசையையும் சொரிந்து அவளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த நீ, அவள் உன்னைக் காதலிக்கவில்லை, உன்னை வேண்டாமென்று சொல்லி விட்டாள் என்ற செய்தியை அறிந்தால், எப்படி வேதனைப்படுவாயோ என்று நாங்கள் அஞ்சினோம். நெஞ்சம் வெடித்து இறந்து விடுவாயோ என்று நடுங்கினோம். ஆகவே அதை உனக்கு ஒரு போதும் சொல்வதில்லை என்று முடிவு செய்து விட்டோம். பொய் சொல்லியேனும் உன்னை இன்பமாக வைத்திருக்க வேண்டும், உன் உள்ளத்தில் துன்பக் காற்று வீச இடமளிக்கக் கூடாது என்பது தான் அப்பாவின் எண்ணம். இந்தச் சூழ்நிலையில் கொழும்பிலிருந்து வரும் வழியில் நன்னித்தம்பி வீட்டில் நாங்கள் சிறிது தங்கினோம். அங்கே எங்கள் கஷ்டத்தை நாங்கள் எங்களிடை பேசிக் கொண்டிருந்தைச் சுசீலா ஒற்றுக் கேட்டு விட்டாள். “பத்மா ஸ்ரீதரின் காதலை மறுத்துவிட்டதை அவனுக்குச் சொல்லக் கூடாது; வேறு பெண் யாராவது இவள் தான் பத்மா என்று சொல்லி ஸ்ரீதருக்குக் கட்டி வைக்க முடியுமானால் எவ்வளவு நல்லது. ஆனால் இது முடியக் கூடிய காரியமா?” என்று அப்பா கவலைப்பட்டார். அவ்வேளையில் நாமெல்லாம் திடுக்கிடும்படியாகச் சுசீலா வெளியே வந்து, “நான் ஸ்ரீதரை மணப்பேன். கண்னில்லாதது ஒன்று தானே அவரது குறை. மற்ற வகைகளில் அவர் மீது என்ன குறையைச் சொல்ல முடியும்” என்றாள். இதுதான் இந்த ஆள் மாறாட்ட நாடகத்தின் வரலாறு. நீ சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக நாங்கள் எடுத்த நடவடிககை இது. உண்மையில் சுசீலா மட்டும் அன்றைக்கு அவ்வாறு முன் வந்திருக்காவிட்டால் உன் நிலை எப்படி முடிந்திருக்குமோ, யார் கண்டது? இன்னும் உன் அப்பா என்னென்ன பயங்கரமான காரியங்களைச் செய்திருப்பாரோ? மேலும் இதோ உன் மடியிலே தவழும் முரளி இந்த ‘அமராவதி’யில் வந்து பிறந்திருப்பானா? இவற்றை யாரால் தான் சொல்ல முடியும்?” என்றாள்.
ஸ்ரீதரின் மடியில் உட்கார்ந்து பாட்டியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முரளி அதை ஆமோதிப்பது போல் மழலைக் கூச்சலிட்டான்.
சுசீலாவின் தியாகத்தைப் பற்றித் தாய் பாக்கியம் சொன்ன விவரங்கள் ஸ்ரீதரின் நெஞ்சை உருக்கிவிட்டன. கண்கள் கலங்கி விட்டன. உண்மை இவ்வாறிருக்க, சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்து விட்டேன் என்று மனம் வருந்தினான் அவன்.
பத்மா தன்னை மணமுடிக்க மறுத்தாள் என்ற செய்தியை ஸ்ரீதரால் முதலில் நம்ப முடியவில்லை என்றாலும், பின்னர் அது உண்மை என்பது அவனுக்குத் தெரியவே செய்தது. அது அவனுக்கு ஓரளவு வேதனையை உண்டு பண்ணியதென்றாலும், பத்மா இல்லாத வாழ்க்கை தான் தனது வாழ்க்கை என்பது இப்பொழுது பழக்கப்பட்டுவிட்டதால் அதைத் தாங்கிக் கொள்வது அவனுக்கு கஷ்டமாயிருக்கவில்லை. ஆனால் பத்மா மீது அவன் முழு மனதையும் பறி கொடுத்திருந்த காலத்தில், பத்மா தன்னை உண்மையாக நேசிக்கிறாள், தனக்காக அவள் எதையும் செய்வாள் என்று அவன் நம்பியிருந்த காலத்தில், யாராவது பத்மா செய்த மோசத்தை அவனுக்குச் சொல்லியிருந்தால் நிச்சயம் அவனால் அதைத் தாங்கியிருக்க முடியாது. அதனால் அவன் தற்கொலை கூடச் செய்து கொண்டிருக்கலாம்..
29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!
சுரேசும் தாயும் சொன்ன விவரங்களால் ஸ்ரீதரின் உள்ளம் இப்பொழுது சுசீலாவைச் சுற்றிப் படர்ந்தது. “என்னே அவள் தியாகம், அவள் அன்பு. முறிந்து சரிந்த என் வாழ்க்கைக்கு அன்று அவள் மட்டும் துணிந்து முட்டுக் கொடுக்க முன் வந்திருக்காவிட்டால், நான் இன்று உயிருடன் இருப்பேனா? அப்பா நினைத்தது போல் பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து எனக்கு மனைவியாக்கியிருந்தால்… சீ அதுவும் ஒரு கல்யாணமா? அதை விட எனக்கு வேறு நரகம் வேண்டியிருந்திருக்குமா?” என்று பல விதமான சிந்தனைகள் சங்கிலித் தொடர் ஒன்றின் பின்னொன்றாக நகர்த்து வந்தன. அன்னையின் பேச்சுகளைக் கேட்ட ஸ்ரீதர் “அம்மா நான் சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்துவிட்டேன். மோசக்காரி – உன்னை நான் வெறுக்கிறேன் என்று அவளைப் பார்த்து நான் எத்தனை தரம் வாய் கூசாது கூறியிருக்கிறேன். பொறுமைக்குப் பூமாதேவியை உதாரணம் சொல்வார்கள். ஆனால் அம்மா சுசீலாவைப் போல் பொறுமைக்காரியை நீ கண்டதுண்டா?” என்றான்.
பாக்கியம், “ஆம், ஸ்ரீதர். சுசீலா சாதாரண பெண்ணல்ல. அன்பின் உருவம். தியாகமே உருவானவள். இந்த ‘அமராவதி’யின் அதிர்ஷ்டத்தினால் இங்கு வந்து சேர்ந்தவள். ஆனாலும் உன்னைப் பொறுத்தவரையில் உனக்குப் பத்மா மீது தானே இன்றும் உண்மை ஆசை? அதனால்தானே இன்னும் சுசீலாவைப் பத்மா என்று அழைக்கிறாய்” என்றாள்.
ஸ்ரீதர் “இல்லை அம்மா, நான் என்ன செய்வேன்? பத்மாவின் மோசடி முன்னரே எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவளைத் தொடர்ந்து நேசித்திருப்பேனா? இனி மேல் பத்மா என்ற பேச்சையே எடுக்க வேண்டாம். அந்தச் சொல்லே என் காதில் விழ வேண்டாம். நான் அவளை வெறுக்கிறேன். இனி மேல் சுசீலாவே எனக்கு எல்லாம். பேராசிரியர் நோர்த்லி எனக்குக் கண்களைத் தந்ததும் என் ஊனக் கண்களுக்கு முன்னால் சுசீலா வந்தாள். அவளை அந்த உருவில் நேசிக்க முடியாததால் என் கண்களை நான் அன்று குத்திக் கொண்டேன். பார்வையை இழந்த என் மனக்கண்ணில் அவள் பத்மாவானாள். ஆனால், அந்தோ, நான் எத்தகைய மடையன்? என்னை ஆசை காட்டி மோசம் செய்தவளுக்கு என் மனக் கண்ணிலே இடம் கிடைத்ததே. ஆனால் அந்த மனக்கண்ணுக்கு அப்பாலும் ஒரு மூன்றாவது கண் இருப்பது போலல்லவா இப்பொழுது தோன்றுகிறது. அந்தக் கண்ணிலே இன்று சுசீலாவை நான் காண்கிறேன். அங்கு அவள் ஓர் ஒளிப்பிழம்பாகக் காட்சியளிக்கிறாள். சீதை, சாவித்திரி, நளாயினி, கண்ணகி போல அவள் அங்கே நடமாடுகிறாள்…”
பாக்கியம் மகனின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாளாயினும், சுசீலாவின் மீது அவள் கொண்ட பச்சாத்தாபத்தினால் அவன் உள்ளம் கவலையுற்றுக் கலங்குவதைக் கண்டு மனம் வருந்தினாள். சுரேஷைப் பார்த்து “வா சுரேஷ். இப்பொழுது ஸ்ரீதருக்கு எல்லாம் தெரிந்து விட்டது. நாங்கள் உள்ளே போய்ச் சுசீலாவை அனுப்புவோம். இருவரும் பேசிக் கொள்ளட்டும்.” என்று கிளப்பினாள். பாக்கியம் முரளியைத் தூக்கிக் கொண்டு முன்னே நடக்க, சுரேஷ் அவளைப் பின் தொடர்ந்தாள்.
சுசீலா ஸ்ரீதருக்குச் சமீபமாக வந்து உட்கார்ந்தாள். “என்ன என்னை அழைத்தீர்களா?” என்றாள் அவள்.
“ஆம், சுசீலா உன்னை அழைத்தேன். உன்னுடன் பேச வேண்டும்.” என்றான் ஸ்ரீதர்.
“என்ன, சுசீலாவா? புதுமையாயிருக்கிறதே. ஏன் என்னை வழக்கம் போல் பத்மா என்றழைக்காமல் சுசீலாவென்றழைக்கிறீர்கள்?” என்றாள் அவள் ஆச்சரியத்துடன்.
“சுசீலா, இனிமேல் நான் உன்னைப் பத்மா என்றழைக்க மாட்டேன். பத்மா என் இதயத்திலிருந்து அஸ்தமித்துவிட்டாள். சுசீலாதான் இனி எனக்கெல்லாம். சுரேசும் அம்மாவும் எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டார்கள். சுசீலா நீ அல்ல மோசக்காரி, பத்மா தான் மோசக்காரி. நீ என் அன்பின் தெய்வம். ஆசைக் கொழுந்து, வாழ்க்கையின் விளக்கு”
அதற்கு மேலும் ஸ்ரீதரின் வார்த்தைகளை அவளால் கேட்டுக் கொண்டு நிற்கமுடியவில்லை. உணர்ச்சிப் பெருக்கிலே அவள் மனம் உடைந்தது. விழிகள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கின. வாழ்க்கையின் பேற்றை அடைந்துவிட்டது போல, பரம ஏழை ஒருவன் பெரும் பொக்கிஷத்தைப் பெற்றுவிட்டது போல இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைந்தாள் அவள்.
“சுசீலா…” அவர் அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது எவ்வளவு இனிமையாயிருக்கிறது. இது போன்ற இன்பம் இவ்வுலகில் வேறு யாருக்குக் கிடைக்கும்” என்று இன்பத் திகைப்பிலே மயங்கி நின்றாள் அவள்.
ஏறக்குறைய இரண்டு நீண்ட வருடங்களாகச் சுசீலா இவ்வுலகில் இறந்து போயிருந்தாள். அப்பெயரே மறக்கப்பட்டுப் போயிருந்தது. உண்மையில் அது தன்னை நிலத்துள் உயிருடன் புதைந்தது போன்ற உணர்ச்சியைச் சுசீலாவுக்கு அளித்து வந்து கொண்டிருந்தது. சகிக்க முடியாத அந்தத் துன்பத்தை அவள் சகித்து வந்தது ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டுத் தான். ஸ்ரீதர் வாழ்க்கைக்கு இன்பம் அளித்து வந்தால் போதும் என்பதே அது. அதற்காகவே எவராலும் செயற்கரிய அந்தத் தியாகத்தைச் செய்து வந்தாள் அவள். அதனால் ஏற்பட்ட வேதனையைத்தான் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்து வந்தாள். ஆனால் இன்று மறுபடியும் அவளது சொந்தப் பெயர் அவளிடம் மீண்ட போது எல்லையற்ற இன்ப உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. நிலத்தில் புதையுண்டு கிடந்த அவள் பழையபடி வெளியே வந்து விட்டாள். வந்ததும் நெஞ்சை அகல விரித்து, பிராண வாயுவை முழு மூச்சாக இழுத்து எல்லையற்ற பூரிப்படைந்தாள் அவள்.
சுசீலா ஸ்ரீதரை நோக்கி “இப்பொழுதாவது உங்களுக்கு உண்மை தெரிந்ததே, அது போதும். எங்கே உங்கள் வாழ்க்கை முழுவதுமே இது தெரியாமலே போய்விடுமோ என்று அஞ்சினேன். ஆனால் நான் அதிர்ஷ்டக்காரி. எந்த அனுபவத்துக்காக நான் ஏங்கித் தவங் கிடைந்தேனோ, அதை நான் பெற்றுவிட்டேன். என்னைச் சுசீலா என்று இன்று உங்கள் வாயால் அழைத்தீர்களே, அதை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். இந்த அனுபவத்தைப் பெற்ற நான் இப்போதே இறந்துவிட்டாற் கூடப் பரவாயில்லை. என் வாழ்க்கை மலர்ந்து விட்டது.” என்றாள்.
ஸ்ரீதர் சுசீலாவைத் தன் கரங்களால் அணைத்துக் கொண்டான். தன் காதலியை அன்று தான் வாழ்க்கையில் முதல் முதலாகச் சந்தித்து அவளது அன்பு மொழியைப் பெற்ற ஒரு காதலன் என்ன நிலையில் இருப்பானோ, அந்த நிலையில் ஸ்ரீதர் இருந்தான் அப்பொழுது. “சுசீலா, நீயே என் உயிர். உன்னை நான் ஒரு போதும் பிரியேன்.” என்று ஆயிரம் தடவை கூறிவிட்டான் அவன்.
சுசீலாவைப் பொறுத்தவரையில் ஸ்ரீதரின் அணைப்பையும் ஆலிங்கனங்களையும் அவள் தினசரி அனுபவித்து வந்தாளாயினும், இது வரை பத்மா என்ற எண்ணத்திலும் பாவனையிலுமே அவை அவளுக்குக் கிடைத்தனவே அல்லாமல், சுசீலா என்பதற்காக ஒரு முத்தம் கூட ஸ்ரீதர் அவளுக்கு அளித்ததில்லை. உண்மையில் இன்று தான் சுசீலா முதன் முதலாக ஸ்ரீதரின் அன்புக்கும் அணைப்புக்கும் ஆளானாள். பார்க்கப் போனால் இன்று தான் அவளது முதலாவது காதலனுபவம் என்று கூடச் சொல்லலாம்.
ஸ்ரீதரும், சுசீலாவும் தம்மை மறந்து இவ்வாறு வீற்றிருந்ததைப் பாக்கியம் முரளியுடன் வீட்டு விறாந்தையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீதர் வாழ்க்கையின் பெரிய புதிரொன்று விடுபட்டுச் சுசீலாவும் ஸ்ரீதரும் முன்னிலும் நெருங்கிய அன்பு கொண்டவர்களாகியதைக் கண்டு அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
ஸ்ரீதர் “சுசீலா, இன்று உலகிலேயே என்னைப் போல் சந்தோஷமானவன் யாரும் கிடைக்கமட்டார்கள். ஆனால் ஒரே ஒரு வேதனை. எந்தச் சுசீலாவைப் பார்க்க மாட்டேன் என்று என் கண்களை நான் அன்று குத்திக் கொண்டேனோ அந்தச் சுசீலாவை மீண்டும் காணத் துடியாய்த் துடிக்கிறேன் நான். ஆனால் அது முடியக் கூடிய காரியமா, என்ன? எனக்குக் கண் வேண்டும். சுசீலா, கண் வேண்டும். உன்னைக் காணக் கண் வேண்டும்” என்று கதறினான்.
சுசீலா சுரேஷிடம் பேசினாள். “சுரேஷ், ஸ்ரீதருக்கு மீண்டும் கண் பார்வை வேண்டுமாம். அவருக்கு மறுபடியும் கண் பார்வையைத் தருவது சாத்தியமா? சாத்தியமானால் அதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்றாள்.
சுரேஷ் “அது விஷயமாக நாளை கண் டாக்டர் நெல்சனுடன் கலந்தாலோசிப்போம்” என்றான்.
ஸ்ரீதரின் வாழ்க்கையனுபவங்களைக் கண்டு அவனுக்காக இரங்கிய உள்ளங்கள் இவ்வுலகில் பலவாயினும், அவற்றில் ஓர் உள்ளம் உண்மையில் அவனுக்காக மற்றெல்லா இதயங்களிலும் பார்க்க அதிகமாகத் துடித்துக் கதறிக் கொண்டிருந்தது. அது தான் அவனது தந்தை சிவநேசரின் இதயம். ஒரே மகன். அதிலும் சகல சிறப்புப் பண்புகளும் வாய்க்கப் பெற்ற உத்தம புத்திரன், எப்படியெல்லாமோ வாழ்க்கையைச் சுவைத்து ஆடம்பரமாக வாழ வேண்டியவன், நாடெல்லாம் போற்றச் சமுதாயத்தின் நடு நாயகமாய் நிற்க வேண்டியவன், இன்று அந்நிலையை எய்தாதது மட்டுமலல், மனிதனின் பஞ்ச புலன்களில் மிகச் சிறந்ததெனக் கருதப்படும் கண் பார்வையை இழந்து, அதன் பயனாக மூலையில் வைக்கப்பட்ட முத்தாகிவிட்டான். சிலம்புள் இடப்பட்ட இரத்தினக் கல் சப்தத்தின் மூலம் உலகத்தால் அறியப்பட்டாலும் அதன் ஒளியை யாரும் அறிய முடிவதில்லையல்லவா? ஸ்ரீதரின் நிலையும் அப்படியே ஆகிவிட்டது. வையத்துக்கு ஒளி வீசி ‘அமராவதி’க்கு அழியாது சிறப்புத் தர வேண்டிய அந்த வைரமணி துணையின்றி வீதியில் நடக்க முடியாத அந்த வாழ்வுக்கு ஆளாகிவிட்டான். இதை நினைத்தால் எவருக்கும் துயர் ஏற்படுமாயினும், சிவநேசருக்கு ஏற்பட்ட துன்பமோ அத்துடன் அமையவில்லை.
ஸ்ரீதரின் துயரம் கண் பார்வை இழப்பு மட்டுமல்ல – காதலின் தோல்வியுமல்லவா? இன்னும் மீண்ட கண் பார்வையைக் கூட அவன் இரண்டாவது தடவையும் அழித்துக் கொண்டான். இச்சம்பவங்கள் யாவற்றிலும் தன் பங்கு மிகப் பெரியது என்று சிவநேசர் நினைத்ததே அவரது துயருக்கு ஓர் எல்லைக் கோடே இல்லாமல் செய்துவிட்டது. அவர் துயரம் எல்லை தெரியும் குளம் போல அமையவில்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு முடிவற்றுத் தெரியும் அலை கடல் போன்ற பெரும் துன்பம் அவர் உள்ளத்தைக் கெளவியிருந்தது.
“ஸ்ரீதர்! அவன் பத்மாவை மணக்க விரும்பிய அந்த நேரத்தில் நான் அதற்கு எதிர்ப்பேச்சுப் பேசாமல் சம்மதித்திருந்தால் நிச்சயம் ஸ்ரீதர் – பத்மா திருமணம் சிறப்பாக நடந்திருக்குமல்லவா? ‘அமராவதி’யிலும் கொழும்பிலுமாக ஊரே வியக்கும்படி எட்டு நாள் திருமண விழா நடத்தியிருக்கலாம். ஆனால் நான் அதை அப்பொழுது எதிர்த்தேன். இதற்கிடையில் அவனும் கண் பார்வையை இழந்தான். பத்மாவும் அவளைக் கை விட்டாள். இதனால் அந்தப் பெண் மீது எனக்கு ஏற்பட்ட சினம் கொஞ்சமல்ல. ஆனால் யோசித்துப் பார்த்தால் அவள் நினைத்ததும் சரி தானே? குருடனுக்கு மனைவியாக யார்தான் விரும்புவார்கள்? இருந்தாலும் நான் மட்டும் ஸ்ரீதர் – பத்மா திருமணத்திற்கு எனது சம்மதத்தைத் தருவதில் தாமதம் செய்திருக்காவிட்டால், அத்திருமணம் நிறைவேறியே இருக்கும். கல்யாணத்துக்குப் பின் அவன் கண்களை இழந்திருந்தால் அந்தப் பெண் நிச்சயம் அதனைப் பொறுத்து வாழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
“எனது தாமதம் அந்தோ, ஸ்ரீதர் வாழ்க்கையைச் சீர்குலைத்தது. அதனால்தான் சுசீலாவின் ஆள் மாறாட்ட நாடகத்தை நாம் நடத்த வேண்டி ஏற்பட்டது. பார்க்கப் போனால் ஸ்ரீதர் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி என்றே கூற வேண்டும். இல்லாவிட்டால் சுசீலா போன்ற அன்பும் பண்பும் அறிவும் அழகும் கொண்ட ஒரு பெண் குருடனான அவனைத் திருமணம் செய்ய முன் வந்திருப்பாளா? ஆனால் இந்த ஆள் மாறாட்டத்தை நாம் நடத்தியதால் அல்லவா அவன் இரண்டாவது தடவையும் குருடனானான்? தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டான்? இதற்கெல்லாம் மூலக் காரணம் பத்மாவைத் திருமணம் செய்ய வேண்டுமென்று அவன் கேட்டபோது நான் அதற்கு இசையாததலல்லவா? இல்லாவிட்டால், நோயினால் அவன் முதலில் கண் பார்வையை இழப்பதை யாராலும் தடுத்திருக்க முடியாவிட்டாலும் இரண்டாவது முறை அவன் கண் பார்வையை இழந்திருக்கும் நிலை ஒரு போதும் ஏற்பட்டிருக்காது. ஆகவே, இன்று அவன் கண் பார்வையற்றுக் கபோதியாய் இருப்பதற்கு நானே பொறுப்பாளி, நானே பொறுப்பாளி”
இவ்வாறு சிந்தித்து வாடிய சிவநேசர் எந்நேரமும் ஸ்ரீதரின் நிலையைப் பற்றியே எண்ணி எண்ணிக் கவலைப்பட்டதில் ஒருவித வியப்புமில்லை. ஆனால் சிவநேசர் இவ்வாறு பெருங்கவலைக்காளாகியிருந்தார் என்பதற்காக மற்றவர்களின் துயரை நாம் குறைவாகக் கருதிவிடக் கூடாது. தாய் பாக்கியம், மனைவி சுசீலா, நண்பன் சுரேஷ் ஆகியோரும் கவலைப்படவே செய்தனர். ஆனால் ஸ்ரீதரின் துயருக்கே காரணமானவர் தான் என்பதால் சிவநேசர் அனுபவித்து வந்த துன்பம் சற்று அதிகமாகத் தானிருந்தது.
புத்திர பாசத்தால் ஏற்பட்ட இத்துயரம் சிவநேசரின் போக்கிலேயே பெரிய மாற்றத்தை ஏற்பட்டுவிட்டது. அவரது அகம்பாவமும் மிடுக்கும் அதி மனித மனோபாவமும் இப்பொழுது தம் வலுவை இழந்துவிட்டன. தன் மகன் இராமச்சந்திரன் காடேகுகிறான் என்று கேள்வியுற்ற அயோத்தி மன்னன் தசரதன் போல் தன் சகல சக்திகளையும் முற்றாக இழந்து நின்றார் சிவநேசர். ஒன்றே ஒன்று தான் அவர் மனதில், இன்று தலை தூக்கி நின்றது. ஸ்ரீதர் மீது அவர் கொண்ட அளப்பறும் அன்புதான் அது. அந்த அன்பிலே உதித்து பச்சாத்தாபம் அவர் உள்ளத்தை ஒரு நிலையில் நிற்கவிடாது அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீதருக்குத் தான் செய்த கொடுமைகளுக்குப் பிராயசித்தம்முண்டா என்று ஆராய்வதிலே அவர் தமது முழு நேரத்தையும் செலவிடலானார்.
இந்த மனோ நிலையில் அவர் இருக்கும்போதுதான் பத்மா செய்த மோசடியை ஸ்ரீதர் உணர்ந்து கொண்டமையையும் அதனால் சுசீலாவின் மகிமையை அவள் முற்றாக உணர்ந்து அவளை அவள் பெயராலே அழைக்கத் தொடங்கி இருந்தமையையும் பாக்கியம் அன்றிரவு அவருக்கு எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட சிவநேசர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் அளவே இல்லை. இதற்குக் காரணம் தம் மருமகள் மீது அவர் கொண்டிருந்த பெரு மதிப்பும் அன்புமேயாகும்.
பத்மா போன்ற பெண்களே அதிகமாக வாழும் இவ்வுலகிலே சுசீலா போன்ற பெண் தோன்றியிருப்பது எவ்வளவு அதிசயம் என்று அவர் அடிக்கடி ஆச்சரியப்படுவதுண்டு. நீண்ட காலமாக ஸ்ரீதரைக் காதலித்த பத்மா அவன் குருடாகிவிட்டதை அறிந்ததும் தன் காதலையே மறந்துவிடத் தயாராயிருக்க, இதோ ஒரு பெண் அவன் குருடனாகிவிட்டான் என்பதற்காகவே அவன்மீது அனுதாபம் கொண்டு அவனைக் கல்யாணம் செய்ய முன் வந்திருக்கிறாள் என்றால், அது வியப்புக்கு உரிய விஷயம் தானே? இந்த வியப்பின் காரணமாகத்தான் வாழ வகையற்றுப் போன தன் அன்பு மகனுக்கு வாழ்க்கைத் துணைவியாக்கி ‘அமராவதி’ வளவுக்கு ஒரு வாரிசையும் பெற்றுத் தந்த சுசீலாவை ஒரு தந்தை தன் சொந்த மகளை நேசிப்பது போல நேசித்து வந்தார். ஆனால் இவ்வளவு அரும் பெரும் குணவதியாகிய சுசீலா, ஐயோ இன்னொருத்தியாக நடித்த அநாமதேயமாக வாழும் நிலை ஏற்பட்டதே. அவளால் தன் கணவனின் அன்புக்குப் பாத்திரமாக முடியவில்லையே என்று அவர் அடிக்கடி கவலைப்படுவதுண்டு. அதனால்தான் பாக்கியம் சொல்லிய செய்தி அவருக்குத் தேனாக இனித்தது. “சுசீலா தன் வாழ்வின் வெற்றியை அடைந்து விட்டாள். பழையபடியும் சுசீலாவாகிக் கணவனின் அன்புக்கும் பாத்திரமாகிவிட்டாள். இது எத்தகைய அற்புதமான செய்தி.” என்று தனக்குள் தானே களித்தார் அவர்.
பாக்கியம் சிவநேசருடன் தன் பேச்சைத் தொடர்கையில் சுசீலாவைக் காண்பதற்குத் தனக்குக் கண்ணில்லையே என்று கவலைக்காளாகி ஸ்ரீதர் வாட்டமடைந்திருப்பதைப் பற்றியும் கூறினாள். இது சிவநேசருக்கும் பெரும் கவலையையே தந்தது. “பாவம், ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதற்கு ஏதாவது வழியில்லையா என்று சுரேசுடனும் டாக்டர் நெல்சனுடனும் நாளையே நாம் பேசிப் பார்க்க வேண்டும்” என்று பாக்கியத்திடம் கூறினார் அவர்.
அடுத்த நாள் சுரேஷ் டாக்டர் நெல்சனுடன் ‘அமராவதி’ வளவுக்கு வந்தான். சிவநேசர் அவர்களை வரவேற்றுபசரித்து, “ஸ்ரீதரின் கண் நிலைமை பற்றிப் பேச வேண்டும். ஸ்ரீதரின் கண்களை நன்கு ஆராய்ந்து உங்களாலானதைச் செய்ய வேண்டும். உங்களால் செய்ய முடியாவிட்டால், நாங்கள் எல்லோருமாகப் பேராசிரியர் நோர்த்லியைக் காண இங்கிலாந்துக்குப் போய் வருவோம். ஸ்ரீதர், நான், பாக்கியம், சுசீலா, நீங்கள், சுரேஷ் எல்லோருமே போய் வரலாம்! எதற்கும் ஸ்ரீதரின் கண்களை நன்கு பரிசீலியுங்கள். சென்ற தடவை அவன் கண் பார்வை பெறுவதை நான் அடியோடு விரும்பவில்லை. அதனால் தீமைகள் தான் விளையுமென்று நான் நினைத்தேன். அது அப்படியே ஆயிற்று. ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. அவன் கண் பார்வை பெறுவதால் யாருக்கும் தீமையில்லை. மேலும் எனக்குப் பின்னால் இந்த ‘அமராவதி’யின் பொறுப்பை ஏற்கப் போகும் அவன் கண் பார்வையற்ற அரை மனிதனாக இல்லாமல் முழு மனிதனாக விளங்க வேண்டும் என்பதே எனது ஆசையும். அவன் தனது பாட்டன் சேர் நமசிவாயம் போல் பெரும் புகழும் பெற்று இலங்க, கண் பார்வை அவனுக்குப் பெரிதும் உதவும். எங்களால் முடிந்தால் அதனை நாம் அவனுக்கு அளித்தே ஆக வேண்டும்” என்றார்.
டாக்டர் நெல்சன் அதை ஆமோதித்தபடியே ஸ்ரீதரின் கண்களை வெகு கவனமாக நீண்ட நேரம் பரிசோதித்து விட்டுப் பின் வரும் தீர்ப்பைக் கூறினார்.
“ஸ்ரீதரின் இரு கண்களில் ஒரு கண் ஒன்றுக்கும் உதவாது. அதை என்ன செய்தும் பார்வை பெறச் செய்ய முடியாது. ஆனால் மற்றதைச் சுகப்படுத்த முடியும். எனினும் அதற்கு இன்னொருவனின் ‘கோர்னியா’ என்னும் கண்ணின் ஒரு பகுதியை எடுத்து அவன் கண்களில் ஒட்ட வைக்க வேண்டும். ஆனால் இது ஒரு சிக்கலான விஷயம். இதற்கு முதலாவதாக இன்னொருவன் தனது கண்ணின் ‘கோர்னியா’வை ஸ்ரீதருக்குத் தருவதற்கு முன் வர வேண்டும். புதிதாக வழக்கத்துக்கு வந்துள்ள இந்தச் சந்திர சிகிச்சை இலங்கையில் இது வரை வேறெவருக்கும் செய்யபட்டதில்லை. ஆறு மாதங்களின் முன்னர் நான் சென்னை சென்றிருந்த போது இச் சத்திர சிகிச்சை சென்னை மோகன் ராவ் கண்ணாஸ்பத்திரியில் ஒரு நோயாளிக்கு நடை பெற்றது. இச் சிகிச்சை முறை மட்டும் தான் ஸ்ரீதருகுப் பலனளிக்கும். வேறெவ்வகையிலும் அவன் கண்ணைத் தெரிய வைக்க முடியாது.” என்றார்.
அதைக் கேட்ட சிவநேசர் “இந்தச் சிகிச்சையை ஸ்ரீதருக்குச் செய்ய நாம் யாது செய்ய வேண்டும்.” என்றார்.
முதலில் இதற்கு இன்னொருவரின் கண் வேண்டும். அது இருந்தால் சந்திர சிகிச்சையை நானே செய்து முடித்துவிடுவேன். சென்னைச் சிகிச்சையை இத்துறையில் அனுபவம் பெறுவதற்காக உண்மையில் நானே தான் செய்து முடித்தேன். மோகன்ராவும் நானும் ஒன்றாகக் கல்கத்தாவில் வைத்தியம் படித்தவர்கள். இது விஷயத்தில் அவன் எனக்கு மிகவும் ஒத்தாசை புரிந்தான்.” என்றார்.
இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சுசீலாவுக்குத் திடீரென ஓர் எண்ணம் உதயமாயிற்று. டாக்டர் சுரேஷைச் சைகை செய்து தனியான ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றாள். “சுரேஷ்! எனக்கு ஓர் ஆலோசனை தோன்றுகிறது. ஸ்ரீதருக்குக் கண் நான் கொடுக்கிறேன். டாக்டர் நெல்சனிடம் சொல்லி இன்றோ நாளையோ ஆப்பரேஷனைச் செய்து விடுங்கள். இந்த உதவியை நீங்கள் தாமதமின்றிச் செய்ய வேண்டும். ஸ்ரீதர் உடனே கண் பார்வை பெற வேண்டும். என்னைப் பார்க்க அவர் ஆசைப்படுகிறார். சில நாட்களுக்கு முன் எந்த சுசீலாவைப் பார்க்க வெறுத்துத் தன் கண்களைத் தாமே குத்திக் கொண்டாரோ, அதே சுசீலாவை அவர் இன்று அன்போடு பார்ப்பதற்குத் துடிதுடிக்கிறார். இது எனக்குப் பெரிய வெற்றியல்லவா? அதற்குப் பதிலாக என் கண்ணைக் கொடுத்தாலென்ன? உடனே இதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள்” என்றாள்.
சுரேஷ் தலையை அசைத்தான். “சுசீலா, நீ ஸ்ரீதருக்காக இது வரை செய்த தியாகங்கள் பெரியன. ஆனால் இப்போது நீ கூறும் ஆலோசனை அவற்றுக்குச் சிகரம் வைத்தது போல் இருக்கிறது. என்றாலும் இது நடவாத காரியம். நாட்டின் சட்டங்கள் அவற்றுக்கு இடம் கொடா” என்றாள்.
“ஏன்? நான் வயது வந்தவள். எனக்கு இப்பொழுது வயது இருபத்தைந்து. என் சுய சம்மதத்தோடு நானே இதைச் செய்கிறேன். வேண்டுமனால் என் சம்மதத்தை என் கையாலேயே ஒரு கடிதமாக எழுதிக் கொடுத்து விடுகிறேன்.” என்றாள் சுசீலா.
அதற்குச் சுரேஷ் “இது விஷயத்தில் சட்டம் வேறுவிதமாக இருக்கிறது. ஒருவர் கண்ணை இன்னொருவருக்குப் பொருத்துவதற்கு முன் அந்த மனிதர் முதலில் இறந்திருக்க வேண்டும். இறந்து மிக சொற்ப வேளைக்குள் கண்ணை எடுத்துச் சீர் கெடாது பாதுகாத்து மற்றவருக்கு ஒட்ட வைக்க வேண்டும். ஆனால் அதற்குக் கூட இறப்பவர் தாம் இறப்பதற்கு முன்னர் தம் கண்ணை எடுத்து இன்னொருவருக்கு உபயோகிக்கலாம் அல்லது இன்னாருக்கு உபயோகிக்கலாமென்று தம் சம்மதத்தை எழுத்தில் கொடுத்திருக்க வேண்டும்” என்றான்.
“சுரேஷ்! அப்படியானால் நான் அவ்வாறு எழுதி வைத்து விட்டு என்னை நானே கொலை செய்து கொள்ளுகிறேன். ஸ்ரீதருக்குக் கண்ணைக் கொடுங்கள்.” என்றாள் சுசீலா.
இதைக் கேட்ட சுரேஷ் திகைத்துவிட்டான். ஒன்றும் பேசாது சுசீலாவை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். தன் முன் நிற்பது ஒரு மானிடப் பெண்ணா, தெய்வமா என்று அவனால் முடிவு செய்ய முடியவில்லை. அதைக் கண்ட சுசீலா, “என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் உண்மையைத் தான் சொல்கிறேன். நீங்கள் விரும்பினாலென்ன? விரும்பாவிட்டாலென்ன? நான் அப்படித்தான் செய்யப் போகிறேன். எப்படியும் என் ஸ்ரீதர் கண் பெற வேண்டும்.” என்றான்.
சுரேஷ், “சுசீலா, நீ என்ன பேசுகிறாய். ஸ்ரீதர் இன்று தன் பார்வையைப் பெற விரும்புவது எதற்காக? சுசீலாவைப் பார்ப்பதற்கு. சுசீலாவின் பிணத்தைப் பார்ப்பதற்கல்ல. ஆனால் சுசீலாவுக்குப் பதில் சுசீலாவின் பிணமே அவனுக்குத் தென்பட்டால் மீண்டும் தன் கண்ணைப் பிய்த்தெறிந்து விடுவான் அவன். அதை நீ யோசிக்கவில்லையே” என்றான்.
சுரேஷின் வார்த்தைகள் சுசீலாவை அதிர வைத்தன. “அது உண்மைதான். ஆனால் நாம் இப்போது என்ன செய்வது? எப்படிக் கண்களைப் பெறுவது” என்றாள் கவலையோடு.
சுரேஷ், “எடுத்த எடுப்பில் இக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்று மட்டும் கூறினான்.
டாக்டர் நெல்சன் சிவநேசரிடம் “இன்று கண் தான இயக்கமொன்று உலகத்தில் தோன்றியிருக்கிறது. சிலர் தாம் சாகுமுன்னர் தம் கண்களைப் பிறருக்குப் பார்வையளிக்க உபயோகிக்கும்படி மரண சாசனம் எழுதி வைத்துச் செல்லுகின்றனர். ஆனால் இது வெகு அபூர்வமாகத்தான் நடைபெறுகிறது. அப்படி எவராவது தானம் செய்யும் கண் எங்காவது கிடைத்தால் தான் ஸ்ரீதருக்கு நம்மால் கண் பார்வையை அளிக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் சிறிது பொறுத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை.” என்றார்.
உயிருள்ளவர்களிடமிருந்து கண்ணைத் தானமாகப் பெற முடியாதிருப்பதற்குரிய சட்டங்களைப் பற்றியும் அவர் விளக்கினார். அத்துடன் உயிருள்ளவர்களிடமிருந்து கண்ணை எடுக்கும் போது அவ்விதம் கண் கொடுப்பவர்களின் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு வேறு பல சிரமங்கள் ஏற்படுதற்கு இடமிருக்கிறதென்றும், அதனால் தான் சட்டம் இவ்வாறு கண்டிப்பாக வகுக்கப்பட்டிருக்கிறதென்றும் குறிப்பிட்டார் அவர்.
முடிவாக, டாக்டர் நெல்சன், “ஸ்ரீதரின் நிலை பற்றி நான் உடனேயே என் சென்னை நண்பர் மோகனராவுக்கும் அறிவிக்கிறேன். எங்காவது கண் கிடைத்தால் உடனே எங்களுக்கு அது பற்றி அறிவிக்கும்படி நான் அவருக்கு எழுதுகிறேன். ஸ்ரீதர் அதிர்ஷ்டசாலியாய் இருந்தால் சீக்கிரமே கண் கிடைத்துவிடும்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.
அன்று பிற்பகல் சுசீலா ஸ்ரீதருடன் தோட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது கண் தானம் சம்பந்தமான சட்டப் பிரச்சினைகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். முடிவில், “நான் என் கண்களை உங்களுக்கு எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து விடுகிறேன். அவ்விதம் நான் செய்தால் நீங்கள் கண் பார்வை பெற முடியுமல்லவா?” என்றாள்.
ஸ்ரீதர் கோபமும் கொதிப்பும் அடைந்தான். “என்ன சொன்னாய் சுசீலா? நீ அவ்விதம் செய்தால் நானும் தற்கொலை செய்து கொள்வேன். இன்னும் நான் பார்வையை விரும்புவதே உன்னைப் பார்த்து மகிழ்வதற்குத் தானே? ஆகவே நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை எதற்கு? நீ இவ்வாறு பேச என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?” என்றான்.
சுசீலாவால் அவ்வார்த்தைகளை எதிர்த்து ஒன்றும் பேச முடியவில்லை. ஆகவே இது விஷயத்தில் டாக்டர் நெல்சனின் முயற்சிகளையே நம்பியிருக்க வேண்டும் வேறு வழி இல்லை என்று முடிவு செய்தாள் அவள்.
‘அமராவதி’யில் வாழ்க்கை மீண்டும் தனது மந்த கதியில் நடக்க ஆரம்பித்தது. ஸ்ரீதரின் கண் பார்வை பற்றிய கவலையைத் தவிர வேறு கவலைகள் எதுவும் அங்கு யாருக்கும் இருக்கவில்லை. வாழ்க்கை பொதுவாக இன்பம் நிறைந்ததாகவே இருந்தது. வேறெந்தக் கவலைகள் இருந்தாலும் அன்பு தோய்ந்த வாழ்க்கை மனதுக்குச் சாந்தியையும் இன்பத்தையும் அளிப்பதற்குக் கேட்கவா வேண்டும்?
இந்தக் காலத்தில் அங்கே நடந்த ஒரே ஒரு முக்கிய சம்பவம். ‘மோகனா’வைப் பற்றியது. அது தனது பழைய வழக்கத்தின் படி வீடதிரக் கூவிக் கொண்டே இருந்தது. இது ஸ்ரீதருக்கு இப்பொழுது சினத்தை மூட்ட ஆரம்பித்தது. “பத்மா” என்ற அந்த மூன்று எழுத்துகள் முன் எவ்வளவு இனிமையாக அவன் காதுகளில் ஒளித்தனவோ அவ்வளவுக்குக் கர்ண கடூரமாக ஒலித்தன இப்போது. பத்மா என்ற அப்பெயர் இன்று அவனுக்குத் தாங்கொணாத அருவருப்பையே ஊட்டியது. அதனால் அவன் பாக்கியத்திடம் ஒரு நாள் “அம்மா மோகனாவை வாயை மூடச் சொல்லு. அந்தப் பெயர் என் காதில் விழுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உடனே அதை எங்காவது அனுப்பி விடு” என்று சப்தமிட்டான். “நீ தானே அதற்கு அந்த வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தாய்” என்று கூறிய அவள் சீக்கிரமே ‘மோகனா’வைக் குடும்ப நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து விட்டாள்.
இது போக, ‘அமராவதி’யில் காணப்பட்ட ஒரு முக்கிய மாற்றம் சிவநேசரின் போக்காகும். முன்னிருந்த கர்வமான படாடோபப் போக்குகளெல்லாம் பெரிதும் மாறப் பெற்ற அவர் இப்பொழுது ஒரு புது மனிதர் போல் நடந்து வந்தார். ஸ்ரீதர் வாழ்க்கையின் துயரத் திருப்பங்களின் பின்னால் அவர் முன் போல் புத்தகங்களைக் கருத்தூன்றிப் படிப்பதையும் மேலை நாட்டுத் தரிசர்களின் நூல்களை ஆராய்வதையும் முற்றாக நிறுத்திக் கொண்டுவிட்டார். அவர் ‘அமராவதி’ வளவில் அங்குமிங்கும் தனிமையாக நடப்பதும், தோட்டத்திலிருந்த செங்கழு நீர்த் தொட்டியின் விளிம்பில், சிந்தனையில் முழ்கி உட்கார்ந்திருப்பதும் இப்பொழுது வழக்கமாகிவிட்டன. தன்னத்தனியாக, சிறகுகள் என்ற மேலைத் தேயச் சிற்பத்தில் காணப்பட்ட உருவத்திற் போல், அவர் சிந்தனையில் இலயித்திருந்த தோற்றத்தைக் கண்டு பாக்கியமும் சுசீலாவும் புதுமையடைந்தார்கள். எதைப் பற்றி அவர் இவ்வளவு ஆழமாக்ச் சிந்திக்கிறார் என்பது எவராலும் விடுவிக்க முடியாத புதிராயிருந்தது. சின்னைய பாரதியும் நன்னித்தம்பியரும் கூட அவரது போக்கைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
ஆனால் சிவநேசரின் மனம் இப்பொழுது ஒன்றே ஒன்றைப் பற்றித் தான் சிந்தித்தது. ஸ்ரீதரைப் பற்றிய பிரச்சினைதான் அது. சில சமயம் அவர் முரளியைத் தனியே விறாந்தையில் கண்டால் அவன் தலையைத் தடவிக் கன்னத்தைக் கிள்ளி விளையாடுவார். “நீ உன் அப்பாவை விட அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் அவன் அப்பா போல் உன் அப்பா முரட்டுப் பேர்வழியல்ல. ஸ்ரீதர் அன்பே உருவானவன்” என்று கூறுவார். ஆனால் இவ்வார்த்தைகளைப் பாக்கியத்துக்கோ சுசீலாவுக்கோ கேட்கும்படி அவர் கூற மாட்டார். இந்த வகையில் எதையும் தன்னுள் தானே வைத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற அவரது பழைய கர்வமென்னவோ இன்னும் அடங்கிவிடவில்லை.
சில சமயம் எவ்வித முன்னறிவிப்புமில்லாமல் திடீரெனத் தமது காரிலேறிக் கிளிநொச்சியிலுள்ள தமது வயலுக்குப் போய்விடும் பழக்கமும் இப்பொழுது அவருக்கு ஏற்பட்டிருந்தது. அங்கே தமது பங்களாவில் கார்ச் சாரதியோடு ஓரிரண்டு நாள் தனியாகத் தங்கியிருந்துவிட்டு மீளுவார். பங்களாவில் நிரந்தரமாக இருக்கும் பணியாட்கள் அப்பொழுது அவருக்கு வேண்டிய உணவு படுக்கை வசதிகளைக் கவனித்துக் கொள்வார்கள்.
இந்தப் புதிய பழக்கங்களைச் சிவநேசர் மேற்கொண்டு ஓரிரண்டு மாதங்களின் பின் அவர் திடீரெனப் பாக்கியத்திடம், “எனது பழைய நண்பர் மாஜி மைசூர் திவான் சேர் சூரியப் பிரசாத் இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். தன் மகளுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம் – கட்டாயம் வர வேண்டுமென்று. நான் தவறாமல் அதற்குப் போக வேண்டும். உண்மையில் சூரியப் பிரசாத் என் கல்யாணத்துக்குக் கூட வந்திருந்தவன். அப்பொழுது அவன் ஒரு வெறும் வக்கீல் மட்டும்தான். உனக்கு அவனை அவ்வளவு ஞாபகமிருக்காது. உண்மையில் இக் கல்யாணத்துக்கு உன்னைக் கூட அழைத்துப் போகலாம். ஆனால் இங்கே பிள்ளைகளுக்கு யார் துணை? ஆகவே நான் மைசூர் போய் விட்டு மூன்று வாரங்களுள் திரும்ப இருக்கிறேன். இன்னொன்று. சூரியப் பிரசாத் இன்னொரு வகையிலும் முக்கியமானவர். நான் சென்ற வருடம் ஆயிரம் பங்குகள் வாங்கிய “சிநேட் இந்தியன் இன்சுரன்ஸ் கம்பெனி”யின் சேர்மனும் அவன் தான்.” என்றார்.
இவ்வாறு சொல்லிய அவர் அந்த வாரமே மைசூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். வழக்கத்தில் இப்படிப்பட்ட பிரயாணங்களிற் செல்லும்போது சிவநேசர் குறைந்தபட்சம் இரண்டு வேலைக்காரர்களையும் நன்னித்தம்பியையும் தம்முடன் அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. ஆனால், இம்முறை அவர் தன்னந்தனியாகவே சென்றார். அது பற்றிப் பாக்கியம் அவரிடம் கேட்டபோது “தனியாகப் போவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் இருக்கிறது. இன்னும் வழியிலே மிக நல்ல ஹோட்டல்களில் தானே தங்கப் போகிறேன்? இன்னும் மைசூர் சேர்ந்ததும் அங்கு சூரியப் பிரசாத் வீட்டில் எனக்கு என்ன குறை இருக்கப் போகிறது?” என்று கூறிவிட்டார்.
சிவநேசர் மைசூர் போய்ச் சேர்ந்தவுடன் ஒரே ஒரு கடிதம் ‘அமராவதி’க்கு அதாவது பாக்கியத்துக்கு எழுதினார். அதில் அவர் தமது சுக சேதியைக் கூறியிருந்ததோடு, தமது நண்பர் சேர் சூரியப் பிரசாதும் தானும் சில காலத்துக்கு இந்தியச் சுற்றுப் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதால் குறிப்பிட்ட ஒரு விலாசத்தில் தானிருக்க மாட்டாரென்று எழுதியிருந்தார். ஏதாவது அவசரமான செய்திகளிருந்தால் சென்னையிலுள்ள இலங்கைக் காரியலயத்துக்குக் கடிதம் எழுதினால், அது தனக்குக் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
‘அமராவதி’ வளவில் அதன் மாமன்னர் போல் விளங்கிய சிவநேசர் இல்லாது போனது அந்த வீட்டின் களையைப் பெரிதும் குறைக்கத்தான் செய்தது. அவர் அவ்வில்லத்தின் பெரிய தோட்டத்தில் மாலை வேளைகளில் தன்னந்தனியாக உலவும் போது அவரது நெடிய கம்பீரமான உருவம் அவருக்கு அந்த இல்லத்தின் காவல் தெய்வம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. அவர் தன் பக்கத்தில் இல்லாது பாக்கியம் மிக வாடிப் போனாள் என்றாலும், பேரன் முரளியின் விளையாட்டுகளில் ஈடுபட்டதால் ஓரளவு தாங்கிக் கொள்ள முடிந்தது. உண்மையில் பாக்கியத்தைப் பொறுத்த வரையில் அவளது முப்பது வருட இல்லற வாழ்வில் சிவநேசரை அவள் பிரிந்திருந்தது மிகச் சொற்ப நாட்களேயாகும். அதனால் எப்பொழுதுமே சிவநேசரைப் பிரிந்திருப்பதென்பது அவளால் தாங்க முடியாத ஒன்றுதான். அத்னால் இரவு படுக்கைக்குப் போகு முன் ஒவ்வொரு நாளும் மேல் மாடிச் சுவரில் ஸ்ரீதரால் எழுதி மாட்டப்பட்டிருந்த சிவநேசரின் படத்தைச் சிறிது நேரமாவது சமீபத்தில் சென்று பார்க்கத் தவறுவதில்லை. அப்பொழுது அவரது பாதங்களைத் தன் கையால் தொட்டுத் தன் கண்ணிலே ஒற்றிக் கொள்ளுவாள் அவள்.
சிவநேசரின் பிரிவை அவ் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருந்தவன் புரளிக்கார முரளிதான். அவன் சிவநேசர் வழக்கமாய் உட்கார்ந்து பத்திரிகை வாசிக்கும் நாற்காலிக்கு ஓடிப் போய் அதன் கைப்பிடியைப் பிடித்து நின்று கொண்டு “தாத்தா” “தாத்தா” என்று கூச்சலிடுவான். இன்னும் மேல் மாடிக்குத் தாயோடோ, ஸ்ரீதரோடோ, பாக்கியத்தோடோ, ஆயாவோடோ போய் விட்டால் போதும், அங்குள்ள படத்தைப் பார்த்து “தாத்தா” “தாத்தா” என்று கும்மாளமடிக்கத் தொடங்கிவிடுவான் அவன்.
இவை ‘அமராவதி’யில் நடந்து கொண்டிருக்க, சிவநேசர் வீட்டை விட்டுச் சென்ற மூன்று வாரங்கள் கழித்து டாக்டர் சுரேசுக்கு அவனது கல்வெட்டித்துறை இல்லத்துக்கு ஒரு கடிதம் வந்தது. தபாலுறையின் வெளிப்பக்கத்தில் சென்னை முத்திரையும் சிவநேசர் பெயருமிருக்கவே அவன் அதைப் பரபரப்போடு பிரித்தான். அதில் சிறிய ஒரு காகிதத்தில் சிவநேசரின் கைஎழுத்தில் ஒரு கடிதமும் ரூபா 2000- திற்கு ஒரு ‘செக்’கும் காணப்பட்டன. சுரேஷ் கடிதத்தை மிக ஆவலோடு வாசித்தான். அதை வாசித்த போது அவன் ஏதோ ஒரு மர்மக் கதையில் மத்திய பாத்திரமாகிவிட்டது போல் தோன்றியது சுரேசுக்கு. அவன் உள்ளத்தில் அந்த உணர்ச்சியை ஊட்டிய அக்கடித்ததின் வாசகம் பின் வருமாறு –
“அன்புள்ள சுரேஷ்! இக்கடிதத்தின் செய்தியை வேறு யாருக்கும் சொல்லக் கூடாது. இதை நீ மிகவும் இரகசியமாகப் பெறுவாய் என்ற துணிவிலும் நம்பிக்கையிலும் நான் இதை எழுதுகிறேன். நிச்சயமாக இதிலுள்ள செய்தி, ஸ்ரீதருக்கோ ‘அமராவதி’யிலுள்ள வேறு யாருக்குமோ தெரியக் கூடாது. இக்கடிதத்தை நீ பெற்றுக் கொண்டதும் சென்னை மோகனராவ் கண்ணாஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் மோகனராவைச் சந்திக்கவும். கைச் செலவுக்கு ரூபா 2000 செக் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. உடனே நீ இதனைச் செய்ய வேண்டும். நீ சென்னை வருவதைப் பற்றிக் கூட யாருமே அறியக் கூடது. நீ செய்யும் இவ்வுதவியை நான் என்றும் மறவேன். இது மிகவும் முக்கியமான விஷயம்.
இப்படிக்கு,
சிவநேசர்
சுரேஷ் இக் கடிதத்தைக் கண்டு அடைந்த குழப்பத்தை வார்த்தைகளில் சொல்லி முடியாது. இருந்தாலும் கடிதத்திலுள்ள செய்தியின் போக்கைப் பார்த்தால் அது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. சிந்தனையல்ல செயலே வேண்டியது என்று எண்ணிய அவன் அடுத்த நாட் காலையே சென்னைக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு அவசரமாகப் பிரயாணத்தை மேற்கொளவதில் அவனுக்கு அதிக சிரமங்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால் உத்தியோக வட்டாரங்களிலும் பெரிய காரியாலயங்களிலும் போதிய செல்வாக்குப் படைத்த அவன் அவற்றை இலகுவில் சமாளித்துக் கொண்டான்.
சுரேஷ் அடுத்த நாள் விமான மூலம் சென்னை சேர்ந்த பொது, அந்த விஷயம் அவன் தாயாருக்குக் கூட தெரியாது. அவர்கள் அவன் கொழும்பு போயிருப்பதாகவே எண்ணினார்கள். இந்த விஷயத்தில் அவன் சிவநேசரின் ஆக்ஞையை வரிக்கு வரி நிறைவேற்றி விட்டான். யாவற்றையும் அவர் கேட்டுக் கொண்டது போல் மூடுமந்திரமாக வைத்திருப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டான் அவன்.
30ம் அத்தியாயம் : தந்தையின் தியாகம்!
சிவநேசர் சுரேஷுக்கு எழுதிய தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த டாக்டர் மோகன்ராவ் கண்ணாஸ்பத்திரி சென்னை நகரில் கீழ்ப்பாக்கம் என்னும் பிரதேசத்திலுள்ள சிம்சன் ஹைரோட்டில் அமைந்திருந்தது. முழு இந்தியாவிலும் பெயர் பெற்ற தனியார் கண்ணாஸ்பத்திரியில் அதுவும் ஒன்று. மோகன்ராவ் என்னும் பிரபல கண் வைத்தியரால் அமைக்கப்பட்ட அவ்வைத்திய நிலையம் இன்று அவரது மகன் டாக்டர் சஞ்சீவிராவால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
டாக்டர் சஞ்சீவிராவ் சாதாரணமாக அதிகாலை எட்டரை மணிக்கே தமது வைத்திய நிலையத்துக்கு வந்து விடுவார். அன்றும் அவர் அவ்வாறே வந்து தமது அறையிலுள்ள சுழல் நாற்காலியில் உட்கார்ந்ததுதான் தாமதம் வைத்திய நிலையத்தின் உதவி டாக்டர்களில் ஒருவரான கணேசன் அவரிடம் வந்தார்.
“சார்! ஒரு முக்கியமான விஷயம். பீர் மேட்டிலுள்ள டாக்டர் குமரப்பா நர்சிங் ஹோமிலிருந்து இரு கண்கள் நமது ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அங்கு இன்று காலை இறந்துபோன ஒரு கோடீஸ்வரர் அவற்றைத் தானமாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறாராம். இது பற்றி அவர் விட்டுப்போன கடிதங்களில் ஒன்று உங்கள் விலாசத்துக்கு எழுதப்பட்டிருக்கிறது. கண்களை நான் குளிர்ப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்துவிட்டேன். கடிதம் இதோ இருக்கிறது” என்று கூறிக்கொண்டே பென்னாம் பெரிய ஒரு கவரை டாக்டர் சஞ்சீவிராவிடம் அவர் சமர்ப்பித்தார்.
டாக்டர் சஞ்சீவிராவ் கவரை எடுத்துப் பிரித்தார். அதில் ஒரு கடிதமும் இன்னும் இரண்டு கவர்களும் இருந்தன. அவற்றில் ஒன்று டாக்டர் சுரேஷுக்கு விலாசமிடப்பட்டிருந்தது. மற்றது “ஶ்ரீதருக்கு” என்று எழுதப்பட்டிருந்தது. டாக்டர் சஞ்சீவிராவுக்கு இப்படிப்பட்ட கடிதங்கள் வந்தமை வாழ்நாளில் இதுவே முதல் தடவை போலும்! ஆகவே அளவுக்கு மீறிய பரபரப்போடு தன் பெயருக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தை அவசரமாக வாசிக்கலானார் அவர். அக்கடிதம் பின் வருமாறு :-
மதிப்புக்குரிய டாக்டர் சஞ்சீவிராவ் அவர்களே!
எனக்கு உம்மைத் தெரியாது. உமக்கும் என்னைத் தெரியாது. இருந்தபோதிலும் உமது சேவை எனக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவதால் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன். எனக்கு உம்முடைய சேவை கண் வைத்தியர் என்ற முறையிலும் ஒரு சக மனிதர் என்ற முறையிலும் தேவைப்படுகிறது. உமது வைத்திய சேவைக்கு இத்துடன் 3000 ரூபாவுக்குச் செக் இணைத்துள்ளேன். ஆனால் சக மனிதர் என்ற முறையில் நீர் செய்ய வேண்டுமென்று நான் கோரும் சேவைக்கு என்னால் என்ன பதில் செய்ய முடியும்? என் மனமார்ந்த நன்றியை மட்டும் தெரிவிக்க முடியும். இறந்து போய்விட்ட நான் வேறெதையும் செய்யக் கூடிய நிலையில் இன்றில்லை.சரி , சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்துக்கு வருகிறேன். இக்கடிதத்துடன் எனது இரு கண்களும் உம்மை வந்தடையும். அவற்றைத் தயவு செய்து நான் சொல்வதுபோல் நீர் உபயோகிக்க வேண்டும். அதுவே கண் வைத்தியர் என்ற முறையில் நீர் எனக்குச் செய்ய வேண்டிய சேவையாகும்.
இக் கண்களில் ஒன்று கண்ணிழந்துபோன என் மகன் ஶ்ரீதருக்குரியது. அதை இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து உம்மைக் காண வரும் டாக்டர் சுரேஷிடம் ஒப்படைக்கவும். அவர் வரும்வரை அதைப் பாதுகாத்து வைத்திருத்தல் உமது கடமை.
மற்றக் கண்ணை உங்கள் ஆஸ்பத்திரிக்கு நான் தானமாக வழங்குகிறேன். கண்ணிழந்து தவிக்கும் யாருக்கும் அதனை நீங்கள் உபயோகிக்கலாம்.
சகமனிதர் என்ற முறையில் நீங்கள் செய்ய வேண்டிய உதவி இத்துடன் இருக்கும் இரு கடிதங்களையும் உங்களைக் காணவரும் டாக்டர் சுரேஷிடம் கொடுப்பதாகும். அதில் எனக்கு உயிருக்கு உயிரான விஷயங்கள் பல அடங்கியிருக்கின்றன. ஆகவே அவற்றை எங்கும் தவறவிடாது கண்ணேபோல் பாதுகாத்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இறந்துபோன நான் இவர்களுடன் பேச வேண்டிய விஷயங்கள் பல. அதற்கு இக்கடிதங்கள் மட்டுமே எனக்குள்ள ஒரே வழி. ஆகவே கடிதங்கள் பத்திரம். – எனது நன்றி உங்களுக்கு என்றும் உரியது.
இப்படிக்கு ,
நமசிவாயம் சிவநேசர்
‘அமராவதி மாளிகை’ –
யாழ்ப்பாணம்
(இலங்கை)
சஞ்சீவிராவ் கடிதத்தை வாசித்ததும் பீர்மேடு குமரப்பா நர்சிங் ஹோமுக்குத் தொலைபேசியில் பேசினார். நர்சிங் ஹோமின் பிரதான டாக்டர் முஸ்தபா கான் பதிலளித்தார்.
” யாரது? டாக்டர் கான் தானே? இங்கே சஞ்சீவி பேசுகிறேன்.”
“என்ன விசேஷம்?”
” என்ன விசேஷமா? காலையில் இரண்டு கண்கள் உங்கள் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திறங்கியிருக்கின்றன. அது விசேஷமில்லையா? அத்துடன் என் பெயருக்கு விலாசமிடப்பட்ட ஒரு கடிதமும் வந்திருக்கிறது. எல்லாம் புதுமையான அனுபவங்கள். யார் இந்த மனிதர்? சிவநேசர் என்று பெயர். சிலோன்காரராம். அவர் இக்கண்களிலொன்றைத் தமது மகனுக்கு அளிக்க வேண்டுமென்றும் மற்றதை என்னிஷ்டம் போல் உபயோகித்துக்கொள்ளலாமென்றும் எழுதியிருக்கிறார். இதற்கு பீஸ்வேறு ரூபா 3000 அனுப்பியிருக்கிறார். ஆள் பெரிய பணக்காரராயிருப்பார் போலிருக்கிறதே!”
“பணக்காரரா, அவர் ஒரு கோடீஸ்வரர். இங்கு நமது ஏ கிரேட் வார்டில் தங்கியிருந்தார். நீரிழிவு- அத்துடன் வயிற்றிலே நோய் என்று சொல்லிச் சிகிச்சைக்கு வந்தார். சிறந்த படிப்பாளி. மிகவும் திறமையாக உரையாடுவார். சிகிச்சைக்கு வந்த அன்றே அவர் தம் கண்களைத் தானம் செய்திருப்பதாகக் கூறித் தமக்கு ஏதாவது நடந்துவிட்டால் கண்களைத் தவறாமல் எடுத்து ஆவனவற்றைச் செய்யவேண்டுமென்று சொல்லி, அதற்குரிய பத்திரங்களையும் காட்டினார். நான் அவற்றை வாசித்து அவரைப்பாராட்டி விட்டு “பயப்பட வேண்டாம். உங்களுக்கொன்றும் நடக்காது.” என்று சொல்லிச் சென்று விட்டேன். இது நடந்து ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்றிரவு 6 மணிக்கு அவர் மேட்ரன் மூலம் எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். சரியாக 8.30 மணிக்குத் தவறாமல் தன்னைப்பார்க்கவேண்டுமென்பதே அது. ஆகட்டும் என்று அப்படியே எட்டரை மணிக்கு வந்தேன். ஆனால் நான் வந்தபோது அவர் ஒரு சவரக் கத்தியால் தன் கழுத்தை வெட்டிக்கொண்டு இறந்து போய்க்கிடந்தார். பக்கத்தில் பெரிய எழுத்துகளில் டாக்டர் கானுக்கு என்று விலாசமிடப்பட்ட ஒரு கடிதம் கிடந்தது. பார்த்தேன். “அன்புள்ள டாக்டரே நன்றி. என் கண்ணை உடனே எடுத்துவிடுங்கள். இப்பொதுதான் நான் செத்தேன். இது முக்கியம். மிக முக்கியம்” என்று எழுதப்பட்டுக்கிடந்தது. நான் திடுக்கிட்டு விட்டேன். என்றாலும் பொலிசாருக்கு அறிவித்துவிட்டு என் கடமையைச் செய்கிறேன்”
“டாக்டர் நான், நீங்கள்: சொல்வது மிகவும் சுவாரஸ்யமாயிருக்கிறது. அப்புறம்?”
“அப்புற்றமென்ன? அவர் கைப்பட பொலிஸ் அதிகாரிகளுக்குக் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தான் தற்கொலை புரிந்தே இறந்து போனதாகவும் யாரையும் யாரையும் சந்தேகிக்க வேண்டாமென்றும் கூற்யிருந்தார். இன்னும் தன் பிணத்தை சிலோனிலிருந்து வரும் டாக்டர் சுரேஷ் என்பவரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமென்றும் எழுதியிருக்கிறார். நாங்கள் இங்கு அவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”
“அப்படியா? சுரேஷைப்பற்றி எனக்கெழுதிய கடிதத்திலும் அவர் பிரஸ்தாபித்திருக்கிறார். நானும் அவரைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..”
“டாக்டர் சஞ்சீவி, இன்னொரு விஷயம். அவர் இங்கே வைத்திருந்த சூட்கேசில் ருபா 10,000 காசாக இருந்தது. அதில் பாதியை ஆஸ்பத்திரிக் கட்டணமாக எடுத்துக்கொள்ளும்படியும் எஞ்சியதைத் தனது தனது அறையில் வேலை செய்த நர்சுமாருக்கும் இதர ஊழியருக்கும் சம பங்காகப் பகிர்ந்துகொடுத்து விடவேண்டுமென்றும் எழுதியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் பார்த்தால் அவர் கோடீஸ்வரர் மட்டுமல்லர்; ஒரு பெரிய கொடையாளி போலவும் தோன்றுகிறது.”
“ஆம் டாக்டர் கான், அவர் ஓர் அதிசயமான மனிதராகத்தான் தெரிகிறது. என்னைப் பொறுத்த வரையில் அவரது வேண்டுகோளைச் சரிவர நிறைவேற்றி வைக்க நான் சகல நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வேன்.”
“ஆம். அது நாம் செய்ய வேண்டிய கடமைதான். சஞ்சீவி. ஆனால் எந்த நடவடிக்கைக்கும் அந்த சுரேஷ் இங்கே வரவேண்டுமல்லவா?”
அதற்கு “ஆம்” என்று டாக்டர் சஞ்சீவி பதிலளிப்பதற்கும் அவருக்கு வேறெங்கோவிடத்திலிருந்து ஒரு ‘ட்ரங் கோல்’வருவதற்கும் சரியாக இருக்கவே டாக்டர் கானோடு நிகழ்த்திய பேச்சை அவர் அத்துடன் நிறுத்தினார்.
இச்சம்பவங்கள் நடந்த அதே தினம் பிற்பகலே சுரேஷ் சென்னையை அடைந்து விட்டான். சென்னை அவனுக்குப் புதிய இடமல்ல. ஏற்கனவே இரண்டு தடவை சென்னைக்கு அவன் வந்திருக்கிறான். ஆகவே எவ்வித சிரமுமில்லாமல் அவன் ஒரு ஹோட்டலுக்குப் போய் ஓர் அறையை ஒழுங்கு செய்து அங்கு தன் பெட்டி படுக்கைகளை வைத்து விட்டு உணவருந்திப் புதிய உடைகளை அணிந்துகொண்டு டாக்சி மூலம் சிம்சன் ஹை ரோட்டுக்கு – மோகன்ராவ் கண்ணாஸ்பத்திரிக்குப் புறப்பட்டான். அங்கே டாக்டர் சஞ்சீவி அவனுக்காகக் காத்திருந்ததால் விஷயங்கள் மிக இலகுவாகிவிட்டன. சுரேஷைக் கண்டதும் “நீங்கள் சிலோனிலிருந்தா வருகிறீர்கள்? அப்படியானால் நீங்கள்தானா டாக்டர் சுரேஷ்?” என்றார்.
‘ஆம்” என்று பதிலளித்த டாக்டர் சுரேஷிடம் டாக்டர் சஞ்சீவி “அப்படியானால் இதோ இரு கடிதங்கள். இறந்துபோன திரு.சிவநேசர் இதை உங்களிடம் ஒப்படைக்கும்படி என்னிடம் அனுப்பியுள்ளார்” என்று சொல்லிக்கொண்டே சுரேஷிற்கும், ஶ்ரீதருக்கும் விலாசமிடப்பட்ட கடிதங்கள் இரண்டையும் சுரேஷிடம் ஒப்படைத்தார்.
டாக்டர் சஞ்சீவியின் வார்த்தைகளைக் கேட்ட சுரேஷ் திடுக்கிட்டு விட்டான். “என்ன சிவநேசர் இறந்துவிட்டாரா?” என்று திகைப்போடு கேட்டான்.
“ஆம், தற்கொலை செய்து கொண்டார்” என்று சஞ்சீவி அதற்குப் பதிலளித்தார். இதற்கிடையில் சுரேஷ் மிகுந்த ஆவலுடன் தனக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தை வாசிக்கலானான். கடிதம் பின்வருமாறு:
குமரப்பா நர்சிங் ஹோம்,
பீர்மேடு சென்னை,
அன்புள்ள சுரேஷ்,
ஶ்ரீதரைப்போல உன்னையும் எனது மகன் போல் நான் மதிப்பதனால்தான் நான் இக்கடிதத்தை உனக்கு எழுதுகின்றேன். இக்கடிதம் உனக்குக் கிடைக்கும்போது நான் இவ்வுலகில் இருக்க மாட்டேன். ஆகவே இனி என் துணை ஶ்ரீதருக்குக் கிடையாது. நீயே அவனுக்குத் துணை. கிஷ்கிந்தாவில் தனியே இருக்கப் பயப்பட்ட அவனுக்கு அவன் தனிமை நீக்கும் துணையாக நீ வந்து சேர்ந்தாய். இனி அமராவதியிலும் நீ அவனுக்குத் துணையாக இருக்க வேண்டும். எனது இவ்வேண்டுகோளை நீ மறுக்க மாட்டாயென்று நான் எண்ணுகிறேன். நீ சென்னை வரும்போது நான் பிணமாக இருப்பேன். இப்பிணத்தைச் சுடும் பொறுப்பு உன்னுடையது. சுட்ட சாம்பலை ‘அமராவதி’யில் புதைக்க வேண்டும். ஆனால் இதை இன்றிலிருந்து இரண்டு மாதம் கழித்தே செய்ய வேண்டும். அதை நீ இரகசியமாக உன் வல்வெட்டித்துறை இல்லத்திலேயே வைத்துக் காப்பாற்று. இன்னொன்று நான் இறந்த விஷயம் ஶ்ரீதருக்கோ, பாக்கியத்துக்கோ வேறெவருக்குமோ தெரியக்கூடாது. இது சம்பந்தமாக இத்துடன் ஶ்ரீதருக்கு ஒரு கடிதம் வைத்திருக்கிறேன். அதை நீ அவனிடம் அதில் குறிப்பிட்ட திகதியிலேயே அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதம் கழித்தே கொடுக்க வேண்டும்.
அது போக, சுரேஷ் நான் எதற்காகத் தற்கொலை செய்து இறந்து போனேன் என்று எண்ணுகிறாயா? ஶ்ரீதர் கண்ணில்லாது கலங்குவதை – சுசீலாவைக் காணத் துடிப்பதை என்னால் பார்க்கச்சகிக்க முடியவில்லை. அவனுக்குக் கண்ணளிப்பதற்காகவே நான் சாகிறேன். இக்கடிதம் கிடைக்கும்போது என் இரு கண்களும் அகற்றப்பட்டிருக்கும். அவை இரண்டும் மோகன்ராவ் கண்ணாஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. டாக்டர் நெல்சன் ஶ்ரீதரனின் ஒரு கண்ணைக் கோர்னியாவை ஒட்டுவதன் மூலம் மீண்டும் பார்வை பெறச்செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார். ஆகவே எனது கண்ணில் ஒன்றை அவனுக்கு உபயோகிக்கவும், மற்றக் கண்ணை மோகன்ராவ் ஆஸ்பத்திரியிலேயே விட்டு விடவும், அவர்கள் இஷ்டம் போல் அதை உபயோகித்துக் கொள்ளட்டும்.
சுரேஷ்! என் மரணத்தை ஶ்ரீதர் இரண்டு மாதங்களுக்கு அறியக் கூடாது என்று நான் குறித்திருப்பது ஏன் என்று நீ ஆச்சரியப்படக் கூடும். அதற்குக் காரணம் நான் தற்கொலை செய்து என் கண்ணே தனக்குத் தரப்படுகிறது என்று தெரிந்தால் ஶ்ரீதர் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பது எனக்குத் தெரிந்திருப்பதுதான்.
கடைசியாக ஒரு வார்த்தை. நான் இறந்து போனேன் என்று நீயோ மற்றவர்களோ கலங்கக் கூடாது. மரணம் ஒரு துன்ப அனுபவமென்று யார்தான் அறுதியிட்டுக் கூற முடியும்? இறந்து மீண்டவர் எவரையும் நாம் இதுவரை கண்டதில்லையல்லவா? ஆனால் மனிதர்கள் தகுந்த நிரூபணமில்லாமலே இறப்பென்றால் துன்பமென்று தீர்மானித்துவிட்டார்கள். இவ்வித அவசரத் தீர்மானங்களுக்கு வருவது ஏனோ மனித ஜாதிக்கு வழக்கமாகிவிட்டது. உனக்குத் தெரியுமா , மரணத்தறுவாயில் கிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் என்ன சொன்னாரென்று? ‘மரணம் என்பது ஓர் இனிமையான அனுபவமாகக்கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஆகவே நான் மரணமடைகிறேன் என்று நானோ நீங்களோ கவலைப்படுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?’ என்று சாக்ரட்டீஸ் சொன்னதாக நான் வாசித்திருக்கிறேன். ஆகவே மரணம் துன்பமாகத்தானிருக்கும் என்று எண்ணி நாம் கவலைப்படுவது வீண்.
சுரேஷ்! உனக்கு நான் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியும். என்னிடமுள்ள பணம் ஶ்ரீதருக்கு மிக அதிகம். ஆகவே அதில் சரி பாதியை நான் உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன். இது சம்பந்தமுள்ள என மரணசாசனம் என் நியாயதுரத்தார் குமாரசூரியரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இம் மரணசாசனத்தில் எல்லா வகையிலும் ஶ்ரீதருக்குச் சமமான உரிமைகள் என் சொத்தில் உனக்கும் உண்டு என்று நான் எழுதியுள்ளேன். ஶ்ரீதர் நான் பெற்ற மகனானாலும் எனக்கு இன்று கொள்ளி வைக்கும் மகன் நீயல்லவா?
இக்கடிதத்தை இன்னும் நீளமாக எழுத எனக்கு ஆசைதான். ஆனால் என் கை அதற்கிடம் கொடுக்கவில்லை. ஆகவே இத்துடன் நிறுத்துகிறேன். எனக்கு இவ்வுலகை விட்டுப்போவதில் துயரில்லை. ஆனால் ஶ்ரீதரை, பாக்கியத்தை, முரளியை, சுசீலாவை, உன்னை, நன்னித்தம்பியை, சின்னைய பாரதியை, ‘அமராவதி’யின் மான்களை, மயில்களை விட்டுப்பிரிவதென்பது எனக்குக் கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆனால் ஶ்ரீதருக்குக் கண்ணளிப்பதற்காக நான் இதைச் செய்தேயாக வேண்டும். வேறு வழியில்லை. ஆகவே விடைபெறுகிறேன். எல்லாவற்றையும் நான் சொன்னபடியே செய்துவிடு.
என் மரணசாசனத்தில் உன்னை என் மகன் போலவே சொத்துரிமையுள்ளவனாக்கியிருப்பது என்னை விட ஶ்ரீதருக்கே அதிக இன்பத்தைக் கொடுக்கும். அவன் உன்னை எவ்வளவு விரும்புகிறான் என்பதை நான் நன்கு அறிந்திருப்பதனாலேயே இந்த ஏற்பாட்டை எவ்விதத் தயக்கமுமின்றிச் செய்திருக்கிறேன். மரண சாசனத்தில் நன்னித் தம்பியர், சின்னைய பாரதி தொடக்கம் வேலைக்காரர்கள் அவரை எல்லோருக்கும் என் நன்கொடைகள் இருக்கின்றன. எனக்காக உண்மையாக உழைத்த அவர்கள் எல்லோருக்கும் என் நன்றியை நான் இந்த அன்பளிப்புகள் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நிற்க, சுரேஷ்! என் அன்புக்குரிய சுரேஷ்! கடிதத்தை இத்துடன் நிறுத்துகிறேன். நீ உடனே போய் நான் சொல்லியுள்ள யாவற்றையும் நிறைவேற்று.
இப்படிக்கு
நமச்சிவாயம் சிவநேசர்
கடிதத்தை வாசித்த அவன் பல இடங்களில் தன்னை அறியாமலேயே குமுறிவிட்டான். சாதாரணமாக அறிவுக்கு முதன்மை கொடுத்து உணர்ச்சிகளை அடக்கியே பழக்கப்பட்டு வந்தவனானாலும் சிவநேசரின் சொற்களின் சக்தியை அவனால் அன்று தாங்க முடியவில்லை. அவனை அறியாமலே கண்ணீர் விட்டுக் கலங்கிய அவனது நிலையைக் கண்ட டாக்டர் சஞ்சீவிராவ் அவனை ஒரு நாற்காலியில் உட்காரும்படி செய்து தேறுதல் கூறினார். ஆனால் என்ன தேறுதல் கூறியும் அவனது துயரம் சிறிதும் அடங்குவதாயில்லை. ‘சிவநேசர் எத்தகைய ஆச்சரியமான் மனிதர்! பார்ப்பதற்கு எவ்வளவு கண்டிப்பான கரடு முரடான தோற்றம் உடையவராயிருந்தார். ஆனால் அந்தக் கரடுமுரடான தோற்றத்தின் பின்னே எத்தகைய அன்புள்ளம் அவருக்கிருந்திருக்கிறது. சாதாரணமாக கிஷ்கிந்தாவிலோ , அமராவதியிலோ என்னைக் காணும் போது என்னுடன் அவர் அதிகமாகப்பேசுவது கூட இல்லையே. வெறுமனே தலையை ஆட்டுவதுதானே அவரது வழக்கம்… ஆனால் இவற்றுக்குப் பின்னால் , பழக்கப்பட்டுப்போன அந்தஸ்து பரம்பரைப் பெருமை என்னும் இவற்றுக்குப் பின்னால் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்த அவரது கருணை உணர்வை இன்றல்லவோ உணர்கிறேன். பலாப்பழத்தின் வெளிப்புறம் கையை உறுத்தும் முட்களுடன் பார்ப்பதற்குக் கரடு முரடாகத்தானிருக்கிறது. ஆனால் உள்ளே தேன் ச்ட்டும் கனிச் சுளைகளை அது தனித்து வைத்திருக்கிறது. சிவநேசரும் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு அவரது உலக வாழ்வின் கடைசி நேரத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒத்தாசை புரியக் கூடியதாயிருப்பது உண்மையில் எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்புத்தான். தன்னுடைய அந்திய காலத்தில் அவரது மனக் குகையில் உலாவிய இரகசியங்களை அவர் இவ்வுலகில் என்னொருவருடன் தானே பகிர்ந்துகொண்டிருக்கிறார்’ என்று பல எண்ணங்கள் அவன் சிந்தனையோட்டத்தில் மிதந்து வந்தன.
அதன் பின் சுரேஷ் டாகடர் சஞ்சீவிராவின் உதவியுடன் பீர்மேடு டாக்ட குமரப்பா நர்சிங் ஹோமுக்குப் போய், சிவநேசரின் பிணத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டான். இது சம்பந்தமாகப் பொலிஸாரிடமும் போய்ப் பல சட்ட சம்பந்தமான பத்திரங்களை அவன் பெறவேண்டியிருந்தது. எல்லாவற்றுக்கும் சென்னை டாக்டர்கள் அவனுக்குப் பேருதவி செய்தார்கள். இவ் விஷயங்களில் எவ்வித சிரமமும் இவனுக்கு ஏற்படாமல் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். இன்னும் இக் காரியங்களில் சட்டரீதியான பிழைகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கவனித்துக்கொள்வதற்கு டாக்டர் சஞ்சீவிராவ் சென்னையின் சிறந்த வக்கீல் ஒருவரையும் சுரேஷிற்கு அமர்த்திக்கொடுத்தார்.
இச் சம்பவங்கள் நடந்த அடுத்த தினம் சிவநேசரின் பிணம் சென்னையில் ஒரு மயான பூமியில் தகனஞ் செய்யப்பட்டது. இக்கிரியைகளில் பீர்மேடு ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் தாதிமார்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் கலந்துகொண்டனர். ஆஸ்பத்திரியின் பெரிய டாக்டர் முஸ்தபாகானும் சஞ்சீவ்ராவும் அங்கே பிரசன்னமாகவிருந்தார்கள்.
சுரேஷ் சிவநேசரின் பிணத்துக்குக் கொள்ளி வைத்தான். தனது பதினான்கு வயதில் தன்னைப்பெற்ற தந்தைக்குக் கொள்ளி வைத்திருந்த அவன் இன்று தனது முப்பத்திநான்காவது வயதில் இன்னொரு தந்தைக்குக் கொள்ளி வைத்தான். தானறியாமலே. தன்னை இரகசியமாக நேசித்து வந்த அந்தப்புதிய தந்தையின் பிரிவை அவனால் சிறிதும் தாங்க முடியவில்லை.
“எத்தகைய அபூர்வமான சம்பவம் இது. ஶ்ரீதர் செய்ய வேண்டிய வேலையை நான் இங்கே செய்ய வேண்டியிருக்கிறது. ” என்று சிந்தித்த அவனது உள்ளம் சிவநேசருக்கும் தனக்கும் கொள்கைகளாலும் போக்குகளாலும் கூட எவ்வளவு வித்தியாசம் என்பதைப் பற்றியும் எண்ணியது. “அவரோ சமுதாய அமைப்புப்பற்றியும், அந்தஸ்து முதலிய விஷயங்கள் பற்றியும் பழைய கொள்கைகள் பூண்டவர். அவற்றைக் கட்டிக் காப்பதில் அக்கறை கொண்டவர். நானோ அதற்கு மாறான சமதர்மக் கருத்துக்ள் பூண்டவன். மனித சமுத்துவத்தை ஏற்பவன். இருந்தாலும் இக்கொள்கை வேறுபாடுகளெல்லாம் அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்த அன்பு வெள்ளத்தில் அடிபட்டுப் போயின்வே” என்ற நினைவுகளுடன் வானை நோக்கித் தீக்கொழுந்தாக எரிந்துகொண்டிருந்த சிவநேசரின் பூதவுடலை நோக்கினான் அவன்.
அப்பொழுது அவன் தன் சிறுவயதில் கற்ற பட்டினத்தார் பாடல் ஒன்று அவன் நினைவிலே மிதந்து வந்தது.
முன்னையிட்ட தீ
முப்புரத்திலே
பின்னையிட்ட தீ
தென்னிலங்கையில்
அன்னையிட்ட தீ
அடிவயிற்றிலே
யானுமிட்ட தீ
மூழ்க மூழகவே
தீ சுழன்று சுழன்றெரிந்தது. சுரேஷும் அவனது புதிய சென்னை நண்பர்களும் அதற்குப்புறமுதுகு காட்டி நடந்தார்கள். சாவைப் பின்னே விட்டு வாழ்வை நோக்கி நடந்தான் சுரேஷ். சிவநேசரை விட்டு ஶ்ரீதரை நோக்கி நடந்தான் அவன். வருங்காலத்தின் வாரிசான முரளியை நோக்கி நடந்தான் அவன்.
ஶ்ரீதருக்குப் பார்வை வேண்டும். அதுவே அவனது அடுத்த வேலை என்று தனக்குள் கூறிய அவனுக்குச் சிவநேசரின் உயிர்த்தியாகம் வள்ளுவரின் குறள் ஒன்றை ஞாபகமூட்டியது.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர். அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
(அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கேயெனக் கொண்டிருப்பவர். ஆனால் அன்புடையவர்களோ எலும்பைக் கூடப்பிறருக்கு வழங்கிவிடுவார்கள்)
__________________ ___________________
அடுத்த நாள் அவன் இலங்கைக்குச் சிவநேசரின் கண்ணோடு புறப்பட்ட போது விமான நிலையத்தில் புதிய டாக்டர் நண்பர்கள் எல்லோரும் கூடலவனை வழியனுப்பி வைத்தார்கள். சிவநேசரின் கண்களைத்தவிர அவனிடம் வேறு ஒரு முக்கியமான பொருள்களுமிருந்தன. ஒன்று ஶ்ரீதருக்கு சிவநேசர் எழுதிய கடிதம். மற்றது சிவநேசரின் அஸ்திக் கலசம். கெட்டி வெள்ளியினால் செய்யப்பட்ட அவ்வஸ்திக் கலசம் புனிதப் பொருள் பஓம் அவனுக்குத் தோன்றியது. அதனால் பல தடவைகள் அதனைப்பல தடவைகள் மார்பொடு இறுக அணைத்துக்கொண்டான் அவன்.
31-ம் அத்தியாயம்: சுரேஷின் சங்கட நிலை!
யாழ்ப்பாணம் சேர்ந்ததும் சுரேஷ் டாக்டர் நெல்சனைச் சந்தித்து, சிவநேசரின் கண்ணை அங்கு தகுந்த பாதுகாப்போடு வைக்க ஏற்பாடு செய்துவிட்டு, ‘அமராவதி’க்கு ஸ்ரீதரைச் சந்திக்கச் சென்றான். கண் எவ்வாறு கிடைத்தது என்ற டாக்டர் நெல்சனின் கேள்விக்கு பம்பாயில் புதிதாக ஒரு கண் வங்கி ஆரம்பித்திருப்பதாகவும் அங்குள்ள தனது நண்பன் ஒருவனின் உதவியால் ஸ்ரீதருக்குத் தன்னால் அக் கண்களைப் பெற முடிந்ததென்றும் கூறினான் அவன். அடுத்து இரண்டு மாதங்களுக்கும் இந்தப் பொய்யையே எல்லோருக்கும் திரும்பத் திரும்பச் சொல்லுவதென்று முடிவு கட்டி விட்டான் அவன். ‘அமராவதி’ வளவில் ஸ்ரீதர் குரல் கண்டதும் சுரேஷ், “ஸ்ரீதர் நீ அதிர்ஷ்டசாலி. பம்பாயிலுள்ள ஒரு கண் வங்கியிலிருந்து உனக்கு ஒரு கண் கிடைத்திருக்கிறது. சீக்கிரமே உனக்கு சந்திர சிகிச்சை நடைபெறும். டாக்டர் நெல்சன் எல்லாவற்றையும் கவனித்து கொள்வார். உன் சுசீலாவை, நீ இப்பொழுது உன் கண்களால் பார்க்கலாம்” என்றான்.
இச் செய்தியைக் கேட்ட ஸ்ரீதரும் சுசீலாவும் அடைந்த இன்பத்துக்கு அளவேயில்லை. பாக்கியமும் மெருமகிழ்வெய்தினாள். ஆனால் சந்திர சிகிச்சையின் போது தந்தை சிவநேசர் பக்கத்தில் இல்லையே என்ற கவலை ஸ்ரீதரைப் பிடுங்கித் தின்னவே செய்தது.
இது நடந்த மூன்று தினங்களில் டாக்டர் நெல்சன் சந்திர சிகிச்சையை நடத்திவிட்டார். சுசீலா இரவும் பகலும் ஸ்ரீதருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பணிவிடைகள் செய்து வந்தாள்.
“இந்த முறை கட்டவிழ்த்ததும் என்னைக் காண்பீர்கள். ஆனால், என்னைக் கண்டதும் சென்ற முறை செய்தது போல் பழையபடி கண்ணைப் பிய்த்துக் கொள்ள மாட்டீர்களல்லவா” என்று சந்திரசிகிச்சை முடிந்ததும் சுசீலா ஸ்ரீதரிடம் கேட்டான்.
“சீ, சீ நீ என்ன பேசுகிறாய்? எனக்கேன் இக் கண்? உன்னைப் பார்ப்பதற்காகத் தானே சந்திர சிகிச்சை என்றும் இச்சித்திரவதையை நான் மேற் கொண்டிருக்கிறேன்.” என்றான் ஸ்ரீதர்.
ஸ்ரீதர் சுரேஷிடம் பேசும் போது “சுரேஷ், என் கண்ணின் கட்டவிழ்த்ததும் நான் சுசீலாவைப் பார்ப்பேன். முரளியைப் பார்ப்பேன், உன்னையும் பார்ப்பேன். ஆனால் அப்பாவைப் பார்க்க முடியாதே. அப்பாவும் பக்கத்திலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். அவர் இந்த நேரம் பார்த்து இந்தியச் சுற்றுப் பிரயணத்துக்குப் போயிருக்கிறாரே. என்னுடைய துரதிர்ஷ்டந்தான் அது. அப்பா எப்போது வருவார்?” என்று
கேட்டான்.
இக் கேள்விக்கு என்ன பதிலளிப்பதென்று சுரேசுக்குத் தெரியவில்லை. “அப்பா வந்து விட்டார். இதோ உன் கண்களில் வீற்றிருக்கிறார். சீக்கிரமே அவர் உன் பார்வையாக கலந்து விடுவார்” என்று சொல்ல வேண்டும் போயிருந்தது அவனுக்கு. ஆனால் அந்த ஆசையை அடக்கிக் கொண்டு முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டான் அவன். “அப்பா கல்வெட்டித் துறையில் என் வீட்டில் இருக்கிறார். தன் புதிய மைந்தன் வீட்டில் இருக்கிறார். வெள்ளி கலசத்துள் அஸ்தியாக வீற்றிருக்கிறார். இன்னும் ஸ்ரீதர், அவர் இப்போது அப்பா மட்டுமல்ல, சிறு வயதிலேயே தந்தையை இழந்த எனக்கும் அப்பாவாகிவிட்டார் அவர். என் முதல் தந்தையை அவரது சாவின் மூலம் நானிழந்தேன். ஆனால் எனது இரண்டாவது தந்தையை அவர் செத்த பிறகு நான் பெற்றேன். ஆம் சிவநேசருக்குக் கொள்ளி போட்ட மகன் நான்” என்றும் சொல்ல விரும்பினான் அவன். ஆனால் சொல்வதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்பதை நினைத்ததும் அவ்வாறு சொல்லாமல் தன் நாவை அடக்கிக் கொண்டான் அவன்.
ஸ்ரீதரின் கேள்விக்குத் தாய் பாக்கியம் பதிலளித்தாள். “அப்பா கடைசியாக எழுதிய கடிதத்தில் தான் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்யப் போவதாக எழுதியிருந்தார். அடிக்கடி கடிதங்களை எதிர்பார்க்க வேண்டாமென்றும் எழுதியிருக்கிறார்.” என்றாள்.
டாக்டர் நெல்சனின் சந்திரசிகிச்சை நல்ல பலனையளித்தது. சீக்கிரமே பார்வையை பெற்று உலகைப் பரவசத்தோடு நோக்கினான் ஸ்ரீதர். அவனது காதற் கண்ணுக்கு இப்பொழுது சுசீலா அப்சரஸ் போல தோன்றினாள். முரளியோ, அவன் மனதை முற்றாகக் கவர்ந்துவிட்டான். முழு உலகமும் அழகின் கோவிலாக, வண்ணக் காவியமாகக் காட்சியளித்தது அவனுக்கு. கண் பார்வை தெரியத் தொடங்கிய அடுத்த நாளே அவன் ஓவியன் தீட்டும் தன் பொழுது போக்கை மீண்டும் ஆரம்பித்துவிட்டான். அவன் தீட்ட ஆரம்பித்த முதலாவது படம் சுசீலாவும் முரளியுமாகும். ஆனால் முரளியை ஓவியம் தீட்டுவதற்கும் போதும் போதுமென்றாகிவிட்டது. அவன் ஓரிடத்தில் அமைதியாக இருந்து ஓவியனுடன் ஒத்துழைத்தால் தானே.
கண் தெரிய ஆரம்பித்த ஸ்ரீதருக்கு இப்பொழுது ‘அமராவதி’யில் ஒதுங்கிக் கிடக்க முடியவில்லை. முதலில் ‘அமராவதி’ முழுவதையும் பல தடவை சுற்றிப் பார்த்தான். மானையும் மயிலையும் காடுகளையும், தோட்டத்துப் பூக்களையும் தடாகத்தில் பூத்த தாமரைகளையும் நீலோற்பலத்தையும் கண்டு களித்தான். குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடுவதையும் ஆமைகள் தண்ணீருள் மெல்ல ஊர்வதையும் கண்டு குதூகலித்தான். தாயையும் மனைவியையும் முரளியையும் காரில் கூட்டிக் கொண்டு கோவில்களுக்குச் சென்றான். அடிக்கடி கீரிமலைக்குப் போய் நீராடினான். அங்கே கதிரின் மறைவையும் மதியின் குளிர்ச்சியையும் பார்த்து மகிழ்வதற்காக இருட்டும் நேரம் எல்லோருமாக மேல் மாடியில் வீற்றிருப்பார்கள். ஓரிரவு மழை கொட்டுவதையும், மின்னல் வெட்டுவதையும் பார்த்தபோது அவன் அந்தப் புதுமையைச் சொல்லி முடியாது. “சுசீலா, மழையைப் பார், மழையைப் பார்” என்று குழந்தை போல் கூச்சலிட்டான். அதைக் கண்ட பாக்கியம் சிரித்துக் கொண்டு “இந்த வீட்டின் குழந்தை முரளியல்ல, ஸ்ரீதர் தான்.” என்று கூறினாள். அதற்கு “போ அம்மா,” என்று கோவித்துக் கொண்டான் ஸ்ரீதர். ஸ்ரீதரை வியப்பிலாழ்த்திய இன்னொரு பொருள் நிலைக் கண்ணாடி. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகப் பார்க்காத தன் முகத்தை நிலைக் கண்ணாடியில் அவன் பார்த்த போது அவனடைந்த அதிசயத்தைச் சொல்ல முடியாது. “நான் அப்பா போலல்லவா இருக்கிறேன்” என்று கூறினான் அவன். இன்னும் அடிக்கடி குடும்பத்துடன் சினிமா, நாடகம், நாட்டியம் முதலியவற்றைப் பார்க்கப் போவதும் அவனது வழக்கமாயிற்று. பழையபடி அழகழகான உடைகளைத் தெரிந்தெடுத்து உடுத்திக் கொள்ளும் பழக்கத்தையும் அவள் மீண்டும் மேற்கொண்டான். தனக்கும், சுசீலாவுக்கும், முரளிக்கும் துணி வாங்க அடிக்கடி துணிக் கடைகளுக்கும் போக ஆரம்பித்தாள்.
ஆனால் இந்த இன்ப அனுபவங்களிடையேயும் தன் நண்பன் சுரேசும் அவள் ஒரு நிமிஷமும் பிறக்கவில்லை. அடிக்கடி சுசீலாவிடமும் தாயாரிடமும் “அம்மா சுரேஷின் ஊக்கத்தாலல்லவா நான் மீண்டும் கண் பார்வையைப் பெற்றேன். அவன் செய்த நன்றிக்குப் பதிலாக நான் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறதே.” என்று கவலையோடு கூறுவான். அவன் பேச்சை அவர்கள் எல்லோரும் ஆமோதிப்பார்கள். உண்மையில் சுரேஷ் ‘அமராவதி’ வளவிலுள்ள எல்லோராலும் ஒரு தெய்வம் போலவே கொண்டாடப்படலானான். சுசீலா அவனை இப்பொழுது சுரேஷ் அண்ணா என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். பாக்கியம் அவனைத் தனது மற்றொரு மகனாகக் கருதத் தொடங்கிவிட்டாள்.
ஒரு நாள் சுரேஷ் ‘அமராவதி’க்கு வந்திருந்த பொழுது ஸ்ரீதர் அவனது கல்யாணத்தைப் பற்றி விசாரித்தான். அதற்கு அவன் “அதுதான் உனக்குத் தெரியுமே. என் மாமன் மகளை நான் கட்டவிருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்களின் பின்னால் கல்யாணம் நடைபெறவிருக்கிறது. நீயும் சுசீலாவும் தவறாது வர வேண்டும்.” என்றான்.
“வருவதா? நானும் சுசீலாவும் அம்மாவும் தான் உனது கல்யாணத்தை முன்னின்று நடத்துவோம்.” என்று கூறினான்.
அதன் பின் நண்பர்கள் இருவரும் கிஷ்கிந்தா நினைவுகள் பற்றிப் பேசினார்கள். “நீ கிஷ்கிந்தாவில் இருக்கும் போது சமுதாய விஷயங்கள் பற்றி அடிக்கடி பேசுவாயல்லவா? ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தால் உலகில் எத்தனையோ இன்னல்கள் விளைகின்றனவென்று சொல்வாயே. அதன் உண்மை எனக்குப் போகப் போகத்தான் தெரிந்தது. என் வாழ்க்கையையே எடுத்துப் பார். சிறு
வயதில் என்னால் எல்லாருடனும் கலந்து சாதாரணமான பிள்ளையாக வளர முடியவில்லை. பல்கலைக்கழகத்தில் கூட நான் பணக்காரனென்பதனால் மாணவர்கள் என்னுடன் நெருங்கிப் பழகக் கூசினார்கள். இதனால் ஏற்பட்ட தனிமை தான் எடுத்த எடுப்பிலேயே பத்மா மீது எனக்கு மோகம் ஏற்படும்படி செய்திருக்க வேண்டும். இன்றைக்கு யோசித்துப் பார்த்தால், பத்மா என்னை நிராகரிப்பாள் என்பதற்கான பண்புகள் அப்பொழுதே அவளிடம் இருந்தன என்பது எனக்குத் தெரியவே செய்கிறது. இருந்தும் நான் அவள் காதலைப் பெரிதாக மதித்தேன். இதற்கெல்லாம் காரணம், பணக்காரனென்பதால் பலருடனும் பழகி மனித இயல்புகளை அளவிட நான் அறிந்திராததல்லவா? அப்பா என்னை அந்தஸ்து என்றும் கூட்டுள் அடைந்து வைத்து விட்டார்.”
சுரேஷ் புன்னகையுடன், “என்ன என்ன, நீ கண்களை மூடிக் கொண்டிருந்த காலத்தில் சும்மா இருக்கவில்லை போல்தெரிகிறதே, அந்தக் காலம் முழுவதும் நீ ஆழ்ந்த சிந்தனையில் அல்லவா ஈடுபட்டிருக்கிறாய் போலிருக்கிறது. இது விஷயங்களில் இப்பொழுது நீ எனக்கே பாடம் படிப்பிப்பாய் போலிருக்கிறதே” என்றான்.
ஸ்ரீதர் சுரேஷிடம், “ஏன் நானும் உன் போல ஒரு பெரியவன் மாதிரிப் பேசுவது உனக்குப் பிடிக்கவில்லையா? இன்னும் நான் பணக்காரனாதலால், எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பதற்கு வழியில்லாமல் எவ்வாறு திண்டாடினேன்? நீ இன்று எனக்கு உயிருக்குயிரான நண்பன். உன்னைக் கூட அப்பா தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தல்லவா பிடித்துக் கொடுத்தார். என்னைப் பொறுத்தவரையில் அப்பா என் மீது அளவற்ற அன்பு கொண்டவர் என்பது உண்மைதான் என்றாலும் நிச்சயம் கொள்கை அளவில் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. பணத்தின் சக்தி மீது, பரம்பரை அந்தஸ்து நாமே ஆளப் பிறந்தோம் போன்ற கொள்கைகள் மீதும் அவருக்கு நம்பிக்கை. அதன் பயனாகப் பெரும் திறமையும் அறிவும் படைத்த அவர் சமுதாயத்துக்கு உதவாதவராகிவிட்டார். அவரைக் கண்ட எல்லோரும் அவரைக் கும்பிடுகிறார். ஆனால் எவரும் அவரிடம் மனம் விட்டு பேசுவதை நான் இதுவரை கண்டதில்லை. இதனால் சமுதாயத் தொடர்பினால் ஏற்படும் மனித உறவுகளின் இனிமை அவருக்குக் கிடைக்கவில்லை. இன்னும் பணம் என்ன அவ்வளவு சிறந்ததா? நான் பணக்காரனாயிருந்தும் காதலிழப்பாலும் கண்ணிழப்பாலும் பட்ட இன்னல் எவ்வளவு? பணத்தை விட மனித உறவுதான் பெரிது. என் கண்கள் மீளக் கிடைப்பதற்குப் பணம் ஓரளவு உதவியிருந்தாலும் உன் நட்புத்தானே பெரிதும் உதவியது? நான் பணக்காரனாயிருந்ததோடு பணக்கார மிடுக்குக் காட்டியிருந்தால் நிச்சயம் நீ என் நண்பனாகி இவ்வளவு உதவி செய்திருக்க மாட்டாய். உன்மையில் சிறு விஷயங்களில் நான் சற்றுப் மிடுக்காக நடந்து கொண்டிருந்தாலும் கூட “ஆ, பணக்காரனல்லவா? அது தான் இப்படி என்னைத் துச்சமாக நடத்துகிறான்” என்று கூட நீ எண்ணியிருப்பாய். ஆம், சுரேஷ். பணக்காரனை மற்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் பார்ப்பார்கள். பணம் மனிதர்களின் உறவைக் கெடுக்கிறது. ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை இல்லாவிட்டால், இவ்விதப் பிரச்சினைகளுக்கே இவ்வுலகில் இடமில்லையல்லவா? அப்பொழுது மனிதனும் மனிதனும் நம் உண்மை இயல்புகளோடு பழகி வாழ்க்கையின் மென்மையான இனிமைகளைச் சுவைக்க முடியும்” என்றான்.
ஸ்ரீதரின் பிரசங்கத்தை வியப்போடு கேட்ட சுரேஷ் – அவன் எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டான் என்று ஆச்சரியப்பட்டான்.
ஸ்ரீதர் மேலும் தொடர்ந்தான்: “நிச்சயம் இந்த வேலியடைத்த வாழ்க்கையை நான் விரும்பவில்லை. அப்பா என்னை வளர்த்தது போல் என் முரளியை நான் வளர்க்கப் போவதில்லை. ‘அமராவதி’யைக் கண்டு மக்கள் அஞ்சக் கூடாது. அன்பு செலுத்த வேண்டும். முரளியை மூலையில் நின்று விளையாடு என்று நான் வற்புறுத்த மாட்டேன். முற்றத்தில் விளையாட இடமளிக்கப் போகிறேன். இன்னும்
இப்பொழுது என் கண்கள் சுகமாகிவிட்டதால் என் பட்டப்படிப்பை விரைவில் முடித்துக் கொண்டு சமுதாய பணிகளில் ஈடுபடப் போகிறேன். அதற்கு முதற் படியாக என்ன செய்ய எண்ணியிருக்கிறேன் தெரியுமா?” என்றான்.
அதற்குப் பதிலாக சுரேஷ் ஒரு கேள்வியைத் தனது முகத்தில் படர விட்டான்.
ஸ்ரீதர் “முதலில் இந்த ‘அமராவதி’யைச் சுற்றியிருக்கும் கண்ணாடித் துண்டுகள் குத்திய பெரிய மதிலை இடித்துவிட்டுச் சிறு கைப்பிடிச் சுவராக அதை அமைக்கப் போகிறேன்.” என்றான்.
அதைக் கேட்ட சுரேஷ் சிரித்தான். “பெரிய மதிலை சிறிய சுவராக்கிவிட்டால் போதுமா? நிலையல்லவா மாற வேண்டும்.” என்றான்.
“அதுதான் மாறி விட்டதே. இது அக்கால நிலையின் வெளியுருவம்” என்றான் ஸ்ரீதர்.
சுரேஷ், “ஆனால் இது பற்றி உன் அப்பா என்ன நினைப்பார் என்று நீ யோசிக்கவில்லையே” என்றான்.
அதற்கு ஸ்ரீதர் “அப்பா இப்பொழுது பெரிதும் மாறிவிட்ட மனிதர். இல்லாவிட்டால் பத்மாவை எனக்குக் கட்டி வைப்பதற்கு இவ்வளவு முயன்றிருப்பாரா என்ன? இன்னும் நான் கண்ணிழந்த பிறகு அவருக்கு என் மீதுள்ள அன்பு மிக மிக அதிகரித்து விட்டது. இப்போது நான் செய்வது எதையுமே அவர் ஆட்சேபிக்க மாட்டார். இன்னும் நான் என்ன கெடுதியா செய்ய எண்ணுகிறேன்” என்றான்
ஸ்ரீதர்.
அதன் பின் ஸ்ரீதர் சிவநேசர் இந்தியாவிலிருந்து வந்ததும் நான் கண் பெற்று விளங்குவதைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சியடைவார் என்பது பற்றி விவரித்தான்.
“எல்லாம் நீ செய்த செயல் என்று தெரிந்ததும் அவர் ஆனந்தப் பரவசமடைவார். தன் சொத்து முழுவதையும் உனக்குத் தந்தாலும் தந்து விடுவார்” என்றான்.
“சிவநேசர் தன் சொத்தை எனக்களிப்பார். கண்களையோ அவர் உனக்களித்துவிட்டாரே” என்று இரகசியம் பேசியது சுரேஷின் உள்ளம். ஆனால் அதை வெளியே சொல்ல இது தருணமல்ல. அவர் இறந்த திகதியிலிருந்து இரண்டு மாதம் கழிய வேண்டும். ஆனால் இரண்டு மாதம் கழிய, அவன் சொல்லவிருந்த விஷயம். அதைச் சொல்வது மட்டுமல்ல அந்தச் சிவநேசரைச் சிமிழில் அடைந்த பிடி
சாம்பலாக ஸ்ரீதர் கையில் நான் ஒப்படைக்க வேண்டியிருந்ததை நினைத்தும், சுரேஷின் உள்ளம் நடுங்கியது. ‘அமராவதி’ இச் செய்தியை எப்படி ஏற்கப் போகிறது என்றெண்ணியதும் எத்தனை பெரிய பொறுப்பைச் செத்துப் போன சிவநேசர் தன் தோளிலே வைத்துவிட்டுச் சென்று விட்டார் என்பது அவனுக்கு விளங்கியது.
“அன்போடு எதிர்பார்க்கப்படும் அப்பாவுக்குப் பதில் இதோ அவரது எலும்புத் துண்டுகள்.” என்று ஸ்ரீதரிடம் சிவநேசரின் அஸ்திக் கலசத்தை ஒப்படைக்க வேண்டும். அது இலேசான காரியமல்ல.” என்று எண்ணிய சுரேஷ் மேலும் அங்கே நிற்காது விடை பெற்றுக் கொண்டு வல்வெட்டித் துறையிலிருந்த தன்னில்லத்தை நோக்கி காரை ஓட்டினான்.
கடைசி அத்தியாயம்! 32-ம் அத்தியாயம்: புயலுக்குப் பின் அமைதி!
சிவநேசரிடமிருந்து கடிதம் எதுவும் வராதது பற்றி ‘அமராவதி’யில் அடிக்கடி பேச்சடிப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் தாய் பாக்கியத்துடன் செங்கழுநீர்த் தொட்டியின் கரையிலே உட்கார்ந்து சிவநேசரின் புள்ளி மானுக்கு உண்பதற்குப் புல் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீதர், “அம்மா, எனக்குக் கண் கிடைத்து எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்ட போதிலும் மனதிலே பெரிய குறை ஒன்றிருக்கவே செய்கிறது. எனது கண்ணின் சந்திர சிகிச்சைக்கு அப்பா பக்கத்திலே இல்லாததொன்று. என் கண்களால் அப்பா இப்பொழுது எப்படி இருக்கிறார் என்று இது வரை பார்க்க முடியவில்லையே என்பது மற்றொன்று” என்றான். பாக்கியம் அவன் வார்த்தைகளை ஆமோதித்தபடியே “எனக்கும் பெரும் கவலையாய்த் தானிருக்கிறது. உனக்குச் சந்திர சிகிச்சை செய்து இப்பொழுது என் பார்வை திரும்பிவிட்டது என்று நான் சென்ற வாரம் சென்னைக்கு விமானக் கடிதமொன்று அனுப்பினேன். நன்னித்தம்பியும் அது பற்றி ஒரு விவரமான கடிதம் எழுதினார். ஆனால் எதற்குமே அவர் பதிலெழுதவில்லை. இது எனக்குப் பயத்தை உண்டாக்குகிறது. ஏனென்றால் அவரால் எப்பொழுதுமே என்னையும் உன்னையும் பிரிந்திருக்க முடியாது. அவர் கடிதம் எழுதாதற்கு என்ன காரணமோ தெரியவில்லை” என்று பெருமூச்சுவிட்டாள்.
சிவநேசர் கடிதம் எழுதாது ஸ்ரீதருக்கும் பாக்கியத்துக்கும் மட்டுமல்ல சுசீலா, நன்னித்தம்பியர், சுசீலாவின் தாய் செல்லம்மா எல்லோருக்குமே கவலையாகத்தானிருந்தது. சின்னைய பாரதி கூடப் பாக்கியத்தைக் காணும் போதெல்லாம், “ஐயா எப்பொழுது வருகிறார்?” என்று கேட்கத் தவறுவதில்லை. ஆனால் இந்தக் கவலையுள்ளும் ஒரு பெரிய இன்பமும் ‘அமராவதி’யில் நிலவியது. அது ஸ்ரீதர் கண் பார்வை பெற்றதாகும். நேற்று வரை கல்லுப் பிள்ளையார் போல அங்குமிங்கும் ஆசனங்களில் வீற்றிருப்பதும், தட்டுத் தடுமாறி நடப்பதுமாகப் பரிதாபக் கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீதர் இன்று முரளியோடு தோட்டத்தில் விளையாடுவதும் அவன் ஓட அவனைத் துரத்திப் பிடிப்பதும் அவனோடு பந்தாடுவதுமாகப் பலவித புதுக் கோலங்களில் காணப்பட்டான். இவ்வித விளையாட்டு நேரங்களில் முரளி தனது முரளி தனது கீச்சுக் குரலில் சப்தம் செய்து மழலைச் சிரிப்பொலி உதிர்ப்பது அந்த மளிகைக்கே ஒரு பொலிவைக் கொடுத்தது.
ஸ்ரீதர் இப்பொழுது தன் எதிர்காலத்தைப் பற்றி மனக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்திருந்தான். தன் மேற்படிப்பை விரைவில் முடித்துக் கொண்டு சித்திரம், சிற்பம், நாடகம் என்று தனது பொழுதுபோக்குக் கலைகளில் மும்முரமாக ஈடுபட வேண்டுமென்பதும், அத்துறைகளில் பெரிய வெற்றிகளை நிலை நாட்ட வேண்டுமென்பதும் அவனது பேராசையாக விளங்கின. ஆனால் அவற்றிற்கு அவன் முதலில் கொழும்பு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் தந்தை சிவநேசரை ‘அமராவதி’யில் சந்தித்துச் சில நாட்களேனும் அவரோடு காலம் கழித்து பின்னர் தான் வீட்டை விட்டுப் புறப்பட வேண்டுமென்பது அவனது திட்டம். ஆனால் அவர் தான் இப்படி எங்கோ போய் ஒளிந்து கொண்டு வர மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சலுற்றான் அவன். பொதுவாக ஒரு காலமுமே வீட்டையும் குடும்பத்தையும் வீட்டு நீண்ட பயணம் போக விரும்பாத அவர் இந்த நேரத்தில் இப்படிப் போயிருக்கலாமா?” என்று அவன் குறைப்பட்டான்.
சில சமயங்களில் ஸ்ரீதர், பாக்கியம், சுசீலா எல்லோருமே சுரேஷிடம் சிவநேசரைப் பற்றிப் பேசுவார்கள். அந்த நேரங்களில் அவன் நிலைமை மிக எக்கச்சக்கமாயிருக்கும். அவர்களது வார்த்தைகளுக்குச் சரியான பதில் கூற முடியாது திண்டாடுவான். இவ்விஷயத்தில் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் அவன் இருந்தான். இதன் காரணமாகத் தனக்கும் கையிலே அதிக வேலைகள் இருப்பதாகக் கூறி ‘அமராவதி’க்கு வருவதையே அவன் குறைத்துக் கொண்டான். அவன் இவ்வாறு நடந்து கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. சிவநேசரைப் பற்றி அவர்கள் பேசும் போது அவரது மரணமும் அவருக்குத் தான் கொள்ளியிட்ட சம்பவமும் அவனுக்கு ஞாபகம் வரும். அந்த ஞாபகம் அவனது நெஞ்சையும் கண்ணையும் ஒரே சமயத்தில் கலங்க வைக்கும். நெஞ்சின் கலக்கத்தை மறைக்கலாம். கண்ணின் கலக்கத்தை எப்படி மறைப்பது? இதற்காக அவன் பல தடவைகளில் பெரும்பாடுபட வேண்டியதாகிவிட்டது. இவற்றின் காரணமாக, ஸ்ரீதரின் கடிதத்துக்கும், அஸ்திகளை ‘அமராவதி’க்குக் கொடுப்பதற்கும் சிவநேசர் விதித்திருந்த இரண்டு மாத கெடு அணுகும் வரை ஸ்ரீதரையும் பாக்கியத்தையும் அடிக்கடி பார்க்காமலிருப்பதே நன்று என்று முடிவு செய்தான்
அவன்.
ஓரோர் நேரத்தில் வல்வெட்டித்துறையில் வீட்டு விறாந்தையில் தனியே இருக்கும் போது சிவநேசரின் நினைவு அவனுக்கு வரும். சிவநேசர் உயிரோடிருக்கும் போது அவருக்கு முன் அவன் நேரிலே நின்று பேசியது வெகு சில தருணங்களில் மட்டும்தான், அவையும் பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதருக்கு வைத்தியம் செய்ய ‘அமராவதி’க்கு வந்திருந்த போதாகும். ஆனால் அப்போது கூட அவர் முகத்தை நன்கு அவதானித்துப் பார்த்து, அவன் பேசியது மிக மிகக் குறைவேயாகும். உண்மையில், சிவநேசருடைய முகத்தின் முழு விலாசத்தையும் அவன் அவதானித்தது ஸ்ரீதரால் வரையப்பட்ட அவரது சித்திரத்திலும் ‘அமராவதி’ மாளிகையில் அங்குமிங்கும் காணப்பட்ட சில புகைப்படங்களிலும் தான். இவை தவிர அவன் சிவநேசர் முகத்தை நன்கு அவதானித்தது சென்னையில் அவர் மருந்தூட்டிப் பிணமாக வைக்கப்பட்டிருந்தபோது தான், பீர்மேடு குமரப்பா நர்சிங் ஹோமில் அவர் அவரது அந்தஸ்துக்கேற்ற விலை உயர்ந்த சவப் பெட்டியில் வெண்பட்டுத் துணியின் மத்தியில் நிம்மதியாகப் பள்ளிக் கொண்டிருந்த காட்சி அவன் மனதில் இடையிடையே தோன்றிய போது அவர் முகமும் அவனோடு சேர்ந்து அவன் மனதில் தோன்றியது. பிணம் பழுதாகி விடாமல் மருந்தூட்டியவர்கள் அவர் முகத்தை மிகவும் சீரான முறையில் தயார் செய்திருந்ததோடு அவரது தலைமயிரையும் மாப்பிள்ளை போல் ஒழுங்காகச் சீவி விட்டிருந்தார்கள். இவற்றின் காரணமாகச் சிவநேசரின் முகத்தில் பிரேதக் களையே காணப்படவில்லை. எவ்விதக் கவலையுமற்ற ஒருவர் தூங்குவது போன்ற் ஒரு பாவனை மட்டுமே அவர் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. சிவநேசர் அத்தோற்றத்திலேயே அவன்
முன்னே வந்து கொண்டிருந்தார்.
சில சமயங்களில் சென்னை மயானக் காட்சியும் அவன் நினைவுத் திரையில் வந்தது. ஆஜானுபாகுவான அவர் நீண்டு நிமிர்ந்து சிதையில் படுத்திருந்த தோற்றத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. மரணத்தில் கூட என்ன கம்பீரம் என்று பாராட்டும்படி அல்லவா அவர் அன்று விளங்கினார்?
இப்படிச் சிவநேசரின் நினைவு வரும்போதெல்லாம் சுரேஷ அவர் தனக்குக் கடித மூலம் பணிந்த கடமைகள் யாவற்றையும் தான் திறமையாக நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலையால் பீடிக்கப்பட்டான். அத்துடன் அவர் குறித்த இரண்டு மாதத் தவணை முடித்து ‘அமராவதி’யின் தலைவரது மரணத்தைத் தான் பிரகடனம் செய்வதைக் கேட்டு, பாக்கியமும் ஸ்ரீதரும் அதிர்ந்து விடக் கூடாதே என்றும் கலங்கலானான் அவன்.
“இந்தப் பயங்கரமான செய்தியைக் கேட்டு அவர்கள் இடிந்து விடாதிருப்பதற்கு அவர்கள் மனதை முன் கூட்டியே ஓரளவு தயார் செய்ய முடியாதா?” என்றெண்ணிய அவனுக்கு அதற்குரிய சந்தர்ப்பம் எதுவுமே கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் கெடுவுக்கு முதல் நாள் அவன் ‘அமராவதி’க்குச் சென்ற போது இதைப் பற்றிக் குறிப்பாக உணர்த்துவதற்கு ஒரு சிறிய சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவே செய்தது.
அன்று அவன் ‘அமராவதி’க்குப் போயிருந்தபோது ஸ்ரீதரும் பாக்கியமும் அவனோடு சிவநேசரைப் பற்றிப் பேசினார்கள்.
“சுரேஷ், சென்னை விலாசத்துக்கு எத்தனையோ கடிதம் எழுதியும் பதில் கிடைக்காததால் சென்ற வாரம் ஸ்ரீதரைக் கொண்டு நான் மைசூர் மாஜி திவான் சூரியப் பிரசாத்துக்கு அவர் சுகமாயிருக்கிறாரா என்று விசாரித்துக் கடிதம் எழுதும்படி சொன்னேன். ஸ்ரீதரும் அவ்வாறே எழுதினான். ஆனால் அதற்கு அவர் எழுதிய பதிலோ ஆச்சரியமாயிருக்கிறது. அவர் பெங்களுருக்கே வர வில்லை என்று சூரியப் பிரசாத் எழுதியிருக்கிறார். இன்னும் அவர் மகள் கல்யாணத்தைப் பற்றி நாங்கள் எழுதியதற்கும் அவர் தமது மகளின் கல்யாணம் அடுத்த வருஷம்தான் நடக்கும் என்று எழுதியிருக்கிறார். எல்லாம் விசித்திரமாயல்லவா இருக்கிறது? நான் குழம்பிப் போயிருக்கிறேன்.” என்றாள் பாக்கியம்.
ஸ்ரீதரும் “அப்பா கொழும்புக்குப் போனால் கூட நாளொன்றுக்கு இரண்டு தடவை ட்ரங்கோல் போட்டுப் பேசுவார். அப்படிப்பட்டவர் இந்தியாவுக்குப் போய் இப்படி மெளனமாயிருப்பது எனக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருக்கிறது” என்றான்.
சுரேஷ் சந்தர்ப்பத்தை உபயோகித்து “ஸ்ரீதர், நான் ஒன்றை உனக்குச் சொல்ல மறந்துவிட்டேன். உன் அப்பா உன்னிடம் கொடுக்கும்படி எனக்கொரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அக் கடிதத்தை நாளை இங்கு வரும்போது நான் உன்னிடம் கொண்டு வந்து தருகிறேன்.” என்றான்.
“என்ன, எனக்கெழுதிய கடிதத்தை உனக்கனுப்பியிருக்கிறாரா? இன்னும் அக் கடிதத்தைப் பார்க்க நாம் ஏன் நாளை வரை பொறுக்க வேண்டும்? இப்பொழுதே நாங்களிருவரும் வல்வெட்டித்துறைக்குப் போய் வருவோமே?” என்றான் ஸ்ரீதர்.
“போய் வரலாம். ஆனால் கடிதத்தை நாளைக்குத்தான் உன்னிடம் கொடுக்க வேண்டுமென்று எனக்கு ஆணையிட்டிருக்கிறார் அவர். ஆகவே அதை வாசிக்க நாளை வரை பொறுக்கத்தான் வேண்டும்.” என்றான் சுரேஷ்.
சுரேஷின் இம்மொழிகளைக் கேட்டு, ஸ்ரீதரும் பாக்கியமும் கலவரமடைந்தார்கள். “இதென்ன விநோதமான நிபந்தனைகள். இந்நிபந்தனைகளைப் பார்த்தால் இதில் ஏதோ மர்மம் இருப்பது போல்
தோன்றுகிறது. சுரேஷ், ஸ்ரீதருக்கு எழுதிய கடிதத்துடன் அவர் உனக்கும் ஏதாவது எழுதியிருப்பாரல்லவா? அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார்? அவர் உடற் சுகம் எப்படி? அவர் எப்பொழுது இலங்கை வருகிறார்?” என்று கேட்டாள் பாக்கியம்.
இக் கேள்விகளுக்குச் சுரேஷால் என்ன பதில் சொல்ல முடியும்? முதலில் இக் கேள்விகளுக்கு எவ்வித விடையுமளிக்காமலே தட்டிக் கழிக்கப் பார்த்தான். ஆனால், பாக்கியமும் ஸ்ரீதரும் அதற்கு இடம் அளிப்பவர்களாயில்லை. ஆகவே அவன் வேறு வழியின்றி “இந்தக் கேள்விகள் எதற்குமே என்னால் பதிலளிக்க முடியாது. ஸ்ரீதரின் அப்பா இவ்விஷயங்கள் எல்லாவற்றிலும் எனக்கு வாய்ப் பூட்டுப் போட்டிருக்கிறார். நாளைக்கு ஸ்ரீதரின் கடிதத்தைத் தரும் போது தான் இவ்விஷயங்களில் என் வாய்ப் பூட்டு அவிழும். அப்பொழுது தான் பல விஷயங்களை உங்களுக்குச் சொல்லுவேன். இன்னும் கடிதத்தை மட்டுமல்ல, கடிதத்தை விட முக்கியமான பொருளொன்றையும் என்னிடம் அவர் ஒப்படைத்துள்ளார். அதையும் நாளைக்கு நான் எடுத்து வருவேன். தயவு செய்து அதுவரை நீங்கள் இவ்விஷயமாகப் பொறுத்திருக்கவே வேண்டும்,” என்றான்.
அடுத்த நாட் காலை பத்து மணிக்கு ‘அமராவதி’ மாளிகையில் இடி இடித்தது; மின்னல் மின்னியது; புயல் வீசியது. சுரேஷ் ஸ்ரீதர் கையில் சிவநேசரின் கடிதத்தை, ஒப்படைத்தான். ஒப்படைக்கு முன் பாக்கியம், ஸ்ரீதர் சுசீலா ஆகியவர்களை நோக்கி “கடந்த இரண்டு மாதங்களாக என் மனதுள் வைத்துக் காத்த துக்ககரமான இரகசியங்களை இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.” என்று கூறித் தனக்குச் சென்னையிலிருந்து சிவநேசர் எழுதிய கடிதத்திலிருந்து தான் தனது வீட்டிலுள் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியாது இந்தியாவுக்குப் போனதையும் அங்கு நடந்த சம்பவங்களையும் ஒன்றொன்றாய் எடுத்து விவரித்தான். தனக்கு சிவநேசர் எழுதிய கடிதத்தையும் அவன் அவர்களிடம் காட்டினான். பின்னர் சென்னை மயானமொன்றில் தான் அவருக்குக் கொள்ளி வைத்த வரலாற்றையும் கண்ணீர் வரக் கூறினான் அவன்.
சிவநேசரின் தற்கொலையைப் பற்றிக் கேள்வியுற்றதும் ஸ்ரீதர் ‘ஓ’வென்று அலறிவிட்டான். பாக்கியம் தாலி களைந்து “ஐயோ” என்று எழுப்பிய கூக்குரல் அந்த ‘அமராவதி’ மாளிகையின் அஸ்திவாரத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது. சுசீலாவோ தன்னிலை இழந்து தவித்து ஸ்ரீதரின் தோள்களைத் தன் கைகளால் கட்டிக் கொண்டு “ஐயோ நாம் என்ன செய்வோம்” எனக் கதறினாள்.
அவர்களின் பரிதாப நிலையைக் கண்ட சுரேஷ் தன்னாலியன்ற வரை ஆறுதல் மொழிகள் கூறினான். “அழுது கூக்குரலிடுவதால் என்ன பயனுமில்லை. கடிதத்தை வாசி” என்று அவன் ஸ்ரீதரை வற்புறுத்தினான்.
இறந்து போன சிவநேசர் கடிதத்தின் மூலம் தன் மகனோடும், மனைவியோடும் ஆசை மருமகளோடும் பேசினார்.
‘என் அன்புள்ள மகன் ஸ்ரீதருக்கும், பிரிய மனைவி பாக்கியத்துக்கும் ஆசை மருமகள் சுசீலாவுக்கும் சிவநேசர் எழுதும் கடிதம். இக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் போது நான் இறந்து இரண்டு மாதம் பூர்த்தியாயிருக்கும். சுசீலாவைப் பார்க்கத் தனக்குக் கண்ணில்லையே என்று ஸ்ரீதர் கவலைப்பட்டான். அக் கவலையைப் போக்க அவனுக்குக் கண்ணளிக்க நான் சாகிறேன். நான் வயதானவன். இன்றில்லாவிட்டால், என்றோ நான் சாகத் தானே வேண்டும்? இன்று இவ்வாறு இறப்பதில் எனக்கென்னவோ திருப்தி. ஆகவே ஸ்ரீதர், பாக்கியம், சுசீலா – நீங்கள் யாருமே என் மரணத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. உங்கள் அலுவல்களை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியோடிருக்க வேண்டும்.
ஸ்ரீதர், நீ இக் கடிதத்தை உன் கண்ணாலே தானே வாசிக்கிறாய்? அது எனக்கு மிகவும் இன்பளிக்கும் செய்தி. ஆனால் உண்மையில் அக்கண் என்னுடையது – இது எனக்கு அதிக பெருமையளிக்கும் விஷயமாகும். இன்னொன்று, தற்கொலை செய்து கொண்ட பின்னும் கூட நான் முற்றிலும் செத்துவிடவில்லை. என் கண் இன்னும் வாழ்கிறது. அது இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே என் ஆசை. தற்கொலை செய்வது பெரிய துன்பமாயிருந்திருக்கும் என்று நீங்கள் எண்ணக் கூடும். அது தான் இல்லை, தற்கொலைக்கும் எத்தனையோ மார்க்கங்களுண்டு. அதில் மிகவும் சுலபமான ஒன்றைத்தான் நான் தெரிவு செய்திருக்கிறேன். உரோமர் இம்முறையை அனுஷ்டித்ததாக நான் சில நூல்களில் படித்திருக்கிறேன். இரத்த நாளமொன்றைத் தெரிந்தெடுத்து ஒரு கூரிய சவரக் கத்தியால் வெட்டி விடுவதே அது. இதனால் உண்டாகும் நோவு மிகவும் குறைவாம். எதுவும் இன்னும் சில நேரத்தில் எனக்குத் தெரிந்துவிடும்.
ஸ்ரீதர், உன் நண்பன் சுரேஷைத் தான் எனக்குக் கொள்ளி வைக்க நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். அதன் மூலம் அவன் எனது மகனாகிவிட்டான். அவனை இனிமேல் உன் அண்ணனாக நீ நடத்த வேண்டும். எனது சொத்துகள் பற்றி நீ எவ்வித கவலையும் பட வேண்டாம். நியாயதுரந்தார் குமாரகுரியரும் ஹரிசன் கம்பெனியாரும் அவற்றை கவனித்து கொள்வார்கள். ஒழுங்கான மரண சாதனம் முடித்திருக்கிறேன். பாக்கியம், சுசீலா, ஸ்ரீதர், உங்களையும் சின்ன முரளியையும் விட்டுப்பிரிவது எனக்கு மிகவும் கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆனால் என்ன செய்வது? இதை விட நல்ல வழி
வேறில்லை. உங்கள் எல்லோருக்கும் என் அன்பு.
‘அமராவதி’ வாழ்க!
சிவநேசர்
டாக்டர் குமரப்பா நர்சிங்
ஹோம், சென்னை.’
சிவநேசரின் அஸ்திக் கலசமும் அன்று பிற்பகல் சுரேஷால் ஸ்ரீதரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று மாதங்களின் முன்னர் ‘அமராவதி’ வளவிலிருந்து தனது இந்திய நண்பர் சூரியப்பிரசாதின் மகளின் திருமணத்துக்குச் செல்வதாகப் பொய் கூறிப் புறப்பட்ட சிவநேசர் இந்தியாவில் தாம் வாங்கிய பரிசுப் பொருள்களுடன் தம் மாளிகைக்கு வந்திறங்குவதற்குப் பதிலாகப் பிடி சாம்பலாக வெள்ளிக் கலசமொன்றில் வந்திறங்கியதைக் கண்ட பாக்கியம் தன்னை மீறிக் கதற, ஸ்ரீதர் கலசத்தைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, அதனைத் தன் கண்ணீரால் கழுவினான்.
“அப்பா, நீ உன் கம்பீர உருவத்தில் மீளவும் வருவாய், நீ இப்போ எப்படி இருக்கிறாய் என்பதை என் புதிய கண்ணால் பார்க்க வேண்டுமென்று ஆசையோடு எதிர்பார்த்திருந்த என் முன் நீ இந்த உருவிலா வரவேண்டும்? இலங்கையை விட்டுப் புறப்பட்டு மூன்று மாதங்களின் பின் பிடி சாம்பலாக உன் மாளிகைக்கு வரும் நீ இரண்டு மாதங்களின் முன் என் கண்ணின் ஒளியாக இங்கு வந்தாயே – இது போன்ற ஓர் அற்புதமான தியாகக் கதையை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லையே. அப்பா, நீ இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்? முரளி “தாத்தா எங்கே?” என்று என்னைக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?” என்றழுதான் அவன்.
பாக்கியம் அன்றே வெள்ளை உடுத்து விதவைக் கோலம் பூண்டுவிட்டாள். தகவல் தெரிந்ததும் நன்னித்தம்பியர், அவர் மனைவி செல்லம்மா, சின்னைய பாரதி ஆகிய யாவருமே கவலையால் பீடிக்கப்பட்டார்கள். இரக்கமே உருவான சுசீலா, எவர் என்ன சொல்லியும் இரண்டு நாட்கள் அன்னாகாரம் அருந்த மறுத்துவிட்டாள். பெரியவரின் ஈமக் கடன்கள் கீரிமலையில் அன்றிலிருந்து மூன்றாம் நாள் செய்யப்பட்டன. அவர் மரணச் செய்தி பத்திரிகைகளிலும் சுருக்கமாக வெளியிடப்பட்டது. ஆனால் எந்தக் கவலையும் இவ்வுலகில் ஒரு சில நாட்களுக்குத்தானே? அதன் பின் சீக்கிரமே சிவநேசரின் பிரிவால் ஏற்பட்ட வேதனை மனதை விட்டகல வாழ்க்கை பழைமை போல் ஓட ஆரம்பித்தது. ‘அமராவதி’யில் மீண்டும் பழைய அமைதி குடி கொண்டது.
இருந்தாலும் பழைய ‘அமராவதி’யில் இப்பொழுது பல புதுமைகள், சிவநேசரின் மரண சாதனத்தில் கூறப்பட்ட பிரகாரம் சுரேஷ் ஸ்ரீதருடன் சம பங்காளியாகிவிட்டான். அத்துடன், சிவநேசர் அவனிடம் கேட்டுக் கொண்ட பிரகாரம் ஸ்ரீதருக்குத் துணையாக அவன் ‘அமராவதி’யில் வந்து குடியேறினான். பாக்கியம் ஸ்ரீதர், சுசீலா எல்லாருக்குமே இது மிகவும் திருப்தியைத் தந்தது. சிவநேசர் வீட்டில் இல்லாத குறையை அது ஓரளவு ஈடு செய்தது.
இவை நடந்து சில மாதங்களின் பின்னர், சுரேஷின் திருமணமும் நடை பெற்றது. அவன் கிஷ்கிந்தாவில் ஒரு நாள் கூறியபடி, பல ஆயிரம் வருடங்களின் முன் தமிழ்ச் சமுதாயம் செய்த முடிவின்படி தன் மாமன் மகள் செல்வமலரை அவன் திருமணம் செய்து, அதன் மூலம் மேற்படிப்புக்காகத் தன் மாமனாரிடம் அவன் பட்ட பணக் கடனையும் தீர்த்துக் கொண்டான் அவன். செல்வமலரும் சுசீலாவும் சீக்கிரமே உயிருக்குயிரான தோழிகளாகி விட்டார்கள்.
‘அமராவதி’யில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் அதன் பெரிய மதில்கள் சிறிய கைப்பிடிச் சுவர்களாகிவிட்டதாகும். வீதியில், செல்லும் பாதசாரிகளுக்குக் கூட ‘அமராவதி’யின் அகன்ற விறாந்தைகள் இப்பொழுது நன்கு தெரிந்தன. வாசலின் பெரிய இரும்பு ‘கேட்டு’களுகுப் பதிலாக சிறிய மர ‘கேட்டு’கள் போடப்பட்டன. மாறி வரும் சமுதாயத்தின் புதிய எண்ணங்களின் சின்னமாக அவை காட்சியளித்தன. இன்னும் வாசலிலே காக்கி உடையோடு காணப்பட்ட அந்த வாசல் காவலாளியையும் இப்பொழுது அங்கே காணோம்.
ஸ்ரீதர் தன் படிப்பை முடிக்க, சுசீலாவோடும், முரளியோடும் சீக்கிரமே கொழும்பு போனான். சுரேஷோ பாக்கியத்துக்குத் துணையாக ‘அமராவதி’யில் தங்கி வைத்தியத்தோடு சமுதாய சேவையையும் மேற்கொண்டான். ஸ்ரீதரும் தன் படிப்பை முடித்துக் கொண்டதும் சமுதாய அரசியல் சேவைகளில் ஈடுபடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறான். இதை எல்லோரும் வரவேற்றார்களென்றாலும் சுரேஷே மிக அதிகமாக வரவேற்றான் என்பதைக் கூறவேண்டியதில்லையவா?
முற்றும்.
தொடர் நவீனம் ‘மனக்கண்’ முடிவுரை!
1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாதம் ‘மனக்கண்’ தொடர் நவீனம் மூலம் வாசகர்களுக்கும் எனக்கும் உண்டான தொடர்புகள் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்தன. அதாவது, எட்டு மாதங்களாக வாரந் தவறாது நிலவிய ஓர் இனிய தொடர்பு சென்ற பெளர்ணமித் தினத்தன்று தன் கடைசிக் கட்டத்தை அடைந்தது. கதை என்ற முறையிற் பார்த்தால் மனக்கண் சற்று நீளமான நாவல்தான் என்றலும் உலக நாவல்களோடு ஒப்பிடும்போது அதனை அவ்வளவு நீளம் என்று சொல்லிவிட முடியாது. கிரேக்க கவிஞனான களீமாச்சன் (Callimachun) “ஒரு பெரிய புஸ்தகம், ஒரு பெரிய பீடை” என்று கூறியிருக்கிறான். அவன் கூற்றுபடி பார்த்தால் என்னுடைய நாவல் ஒரு நடுத்தரமான பீடையே. ஏனென்றால், நாவல் என்பது ஒரு சீரிய இலக்கியத் துறையாக வளர்ச்சியடைந்துள்ள மேல் நாடுகளில் பொதுவாக நாவல்கள் 20,000 வார்த்தைகளில் இருந்து 20 இலட்சம் வார்த்தைகள் வரை நீண்டவையாக வெளி வந்திருக்கின்றன. யார் அந்த 20 இலட்சம் வார்த்தை நாவலை எழுதியவர் என்று அதிசயிக்கிறீர்களா? பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற நாவலாசிரியரான மார்சேல் புரூஸ்ட் (Marcel Proost) என்பவரே அந்த எழுத்தாளர். நாவலின் பெயர் “நடந்ததின் நினைவு” (Remembrance of the past). ஆனால் புரூஸ்ட் மட்டும் தான் இவ்வாறு நீண்ட நாவல்களை எழுதினார் என்று எண்ணி விட வேண்டாம். உலகத்தின் மிகச் சிறந்த நாவல் என்று கருதப்படும் (War and peace) “யுத்தமும் சமாதானமும்” லியோ டால்ஸ்டாய் எழுதியது. விக்டர் ஹியூகோவின் (Les miserables) “ஏழை படும் பாடு” என்பனவும் குறைந்தது ஏழெட்டு இலட்சம் வார்த்தைகள் கொண்ட பெரிய நாவல்கள் தான். இவர்களில் முன்னவர் ருஷ்யாக்காரர். மற்றவர் பிரான்சைச் சேர்ந்தவர். இவர்களைப் போலவே ஆங்கிலத்தில் ஹோன்றி பீல்டிங் (Henry Fielding) நீண்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரது “டொம் ஜோன்ஸ்” (Tom Jones) பதினெட்டு பாகங்களைக் கொண்டது. இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால் இந்தப் பதினெட்டுப் பாகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ முன்னுரையும் அவரால் எழுதப்பட்டது. தமிழில் இவ்வாறு நீண்ட நாவலெழுதியவர் “கல்கி”.
நான் இங்கே எடுத்துக் காட்டிய நாவலாசிரியர் எவருமே சாதாரணமானவரல்லர். உலக இலக்கிய மண்டபத்திலே தம் சிலையை நிலையாக நிறுவிச் சென்றிருக்கும் பேனா உலகின் பெரியவர்கள் இவர்கள். இவர்கள் எவருமே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. தாம் சொல்ல விரும்பிய பொருளை விரிவாக எடுத்துரைப்பதிலேயே இவர்கள் தம் புலனைச் செலுத்தினார்கள். பாரதம் பாடிய வியாசர் ஓர் இலட்சத்து இருபதினாயிரம் சுலோகங்களில் தம் கதையை விரித்துரைத்தது போல இவர்களும் தாம் கூற வந்த கதைகளை அமைதியாகவும், ஆறுதலாகவும் சாங்கோபாங்கமாகவும் எடுத்துச் சொல்லிச் செல்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன் – ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத் தவிர, பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது – பாண்டவர் வென்றனர் – கெளரவர் தோற்றனர் என்று மிகச் சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதாநிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணர்ச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும் வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாக சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப் பண்பு இருக்க வேண்டும்.
நாவலும் சிறுகதையும்
இந்த இடத்தில் நாவலுக்கும் சிறு கதைக்கும் இருக்கும் வேற்றுமையைப் பற்றிச் சில வார்த்தைகள் நான் கூறவிருக்கிறேன். இந்த இரு இலக்கிய உருவங்களுக்கும் உள்ள வேற்றுமை கதை அமைப்பிலே மட்டுமல்ல, சொல்லும் முறையிலுமிருக்கிறது. சிறுகதை வேகமாக ஒரே மூச்சில் நிலத்தை நோக்கிக் குதிக்கும் நீர் வீழ்ச்சியைப் போன்றது. மின்னலின் வேகம் அதிலிருக்கும். ஆனால் நாவலோ ஓடுகிறதா, ஓடாமல் நிற்கிறதா என்று எடுத்த எடுப்பில் கூற முடியாத படி பெரு நதியின் மந்தமான அசைவில் செல்ல வேண்டும். கங்கை, கழனி, காவேரி போல் அசைய வேண்டும். குதிரை வண்டி போல் வேகமாகச் செல்லாது கோவிற்தண்டிகை போல் ஆடி அசைந்து வர வேண்டும்.
நாவல் இவ்வாறு வர வேண்டியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நாவலின் முக்கிய நேரங்களில் ஒன்று பாத்திரப் படைப்பாக இருப்பது. இரண்டு, கதை நிகழும் சூழலை வர்ணனைகள் மூலம் மனக் கண்ணின் முன்னர் கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருப்பது. சிறுகதைக்கு இந்நோக்கங்களில்லை – ஒரு சிலர் தமது சிறுகதைகளில் இவற்றைச் செய்ய முயன்றாலும் கூட நானிங்கே நாவலின் இரண்டு முக்கிய நோக்கங்களையே சொன்னேனாயினும், டால்ஸ்டாய் போன்ற பெரு நாவலாசிரியர்களில் சிலர் அறிவூட்டலும் நாவலின் பணி என்று கருதினார்கள். அதனால் தான் யுத்த விவரங்களையும், சரித்திர விவரங்களையும் மிகவும் அதிகமாக விளக்கும் அத்தியாயங்களை “யுத்தமும் சமாதானமும்” என்னும் நூலில் டால்ஸ்டாய் சேர்த்திருக்கிறார். விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாட்டி”ல் பாரிஸ் சாக்கடை பற்றிய செய்திகள் விரிவாகச் சேர்க்கப்பட்டுப்பதும் இக் காரணத்தினாலே தான். சுருங்கச் சொன்னால் பார காவியம் செய்யும் கவிஞனும் காத்திரமான நாவலை எழுதும் நாவலாசிரியனும் கதை சொல்லிச் செல்கையில் வழியில் தென்படும் எந்த விஷயத்தையும் பற்றிப் பூரணமான விளக்கம் கொடுக்காமல் மேலே செல்வதில்லை. ஆனால் இவ்வித விளக்கம் கொடுக்க ஒருவன் கதை கட்டும் ஆற்றல் பெற்றவனாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. பல விஷயங்களையும் தெரிந்து ஓர் அறிஞனாகவும் விளங்க வேண்டியிருக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நூலறிவும், அனுபவ அறிவும் சமுதாய அறிவும், இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த விளக்கங்களை அவன் திறம்படச் செய்து கொண்டு போகலாம். சிறு கதாசிரியனுக்கோ இத் தொல்லை இல்லை. ஆனால் இங்கே நாம் மறக்கவொண்னாத ஒரு விஷயமென்னவென்றால், என்ன தான் அழகான விளக்கம் கொடுத்தாலும் அவ்விளக்கம் கதைக்கும் குறுக்கே வந்து விழக் கூடாது என்பதாகும். இதற்கு மிகவும் நுட்பமான ஓர் அளவுணர்ச்சி நாவலாசிரியனுக்குத் தேவை. கதை தன் வழக்கமான ஓட்டத்தில் போய்க் கொண்டிருக்க, அதனோடு கை கோத்துக் கதாசிரியனின் விளக்கங்களும் போய்க் கொண்டிருக்க வேண்டும். இது விஷயமாக சாதாரணமாக உரையாடும்போது நாம் நம் நண்பர்களுக்குப் பிரெஞ்சு புரட்சி போன்ற ஒரு பொருள் பற்றிக் கொடுக்கும் ஒரு விளக்கத்துக்கும், ஒருமேடையில் அது பற்றிச் செய்யும் சொற்பொழிவுக்கும் உள்ள வித்தியாசத்தை நினைவு கூர்வது நன்று. நாவல்களில் வரும் விளக்கம் நண்பரோடு பேசும் போது நாம் கொடுக்கும் விளக்கம் போல் அமைய வேண்டும். இல்லாவிட்டால் அவை சரித்திர நூல்களாகவோ, சமூக இயற் பனுவல்களாகவோ, பொருளாதாரக் கட்டட நிர்மாண விவாத நூல்களாகவோ மாறிவிடும். உலகப் பெரும் நாவலாசிரியர்கள் பலரும் தம் விளக்கங்களை அளவறிந்து கையாண்டிருப்பதே அவர்களது படைப்புகளின் கலையழகு சிதைவுறாதிருப்பதற்குக் காரணம். உதாரணமாக விக்டர் ஹியூகோவின் பாரிஸ் நகரத்தின் சாக்கடை வர்ணனைகள் நீண்டவையாயிருந்தாலும் பரபரப்பான சம்பவங்களை மிகுதியாகக் கொண்ட அக்கதையின் ஓட்டத்தை அவை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. இந்தத் தன்மை இருப்பதால்தான் இன்றும் உலகெங்கும் விரும்பி வாசிக்கும் கதையாக இது இருந்து வருகிறது.
நாவலியக்கத்தின் தன்மைகள் பற்றி நான் இங்கு இவ்வாறு விவரித்ததன் காரணம் நாவல் தமிழுக்குப் புதியதோர் இலக்கிய உருவமாயிருப்பதுனாலேயேயாகும். புதிய இலக்கிய உருவமொன்று உருப்பெற்று வரும்போது அதை எவ்வாறு சுவைப்பது – எவ்வாறு விமர்சிப்பது என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றுதானே? இது வாசகர்களின் சுவைக்கும் திறனை உயர்த்துவதோடு, எழுத்தாளர்களுக்கும் கூட அவர்களின் எழுத்துக்கு வழிகாட்டியாக அமையும். என்னைப் பொறுத்த வரையில் ஆரம்பத்திலிருந்தே நான் ஆக்க எழுத்தாளனாக மட்டுமல்ல, கலை இலக்கிய விமர்சகனாகவும் பயின்று விட்டதால் இவ்வித பிரச்சினைகளை என்னால் தட்டிக் கழிக்க முடியாமலிருக்கிறது.
நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவனை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது.
“மனக்கண்”ணைப் பொறுத்த வரையில் நாவல் பற்றிய மேற்கூறிய பிரக்ஞையுடனேயே நான் அதனை எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்குச் சுவையான ஒரு கதையைச் சொல்ல வேண்டும்; அது அவர்கள் அனுதாபத்தையும் இரக்க உணர்ச்சியையும் தூண்ட வேண்டும்; அதே நேரத்தில் முடிந்த இடங்களில் வாழ்க்கையில் பிடிப்பைத் தரும் நகைச்சுவை, வேடிக்கை போன்ற உணர்ச்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; சூழ்நிலை வர்ணனையையும் பாத்திர அமைப்பும் சிறந்து விளங்க வேண்டும்; கதைக்கு இடக்கரில்லாது வரும் அறிவுக்கு விருந்தான விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் இந்நாவலை எழுதும்போது என்னை உந்திக் கொண்டேயிருந்தன. இன்னும் உலகப் பெரும் நாவலாசிரியர்களான டிக்கென்ஸ், டால்ஸ்டாய், சோலா, டொஸ்டோவ்ஸ்கி, கல்கி, தாகூர், விகடர் ஹியூகோ போலத் தெட்டத் தெளிந்து ஒரு வசன நடையில் அதைக் கூற வேண்டுமென்றும் நான் ஆசைப்பட்டேன். இன்று தமிழில் ஒரு சிலர் – முக்கியமாகக் கதாசிரியர் சிலர் இயற்கைக்கு மாறான சிக்கலான ஒரு தமிழ் நடையை வலிந்து மேற்கொண்டு எழுதுவதை நாம் பார்க்கிறோம். இப்படி யாராவது எழுத முயலும்போது அவர்கள் வசன நடை முன்னுக்கு வந்து பொருள் பின்னுக்குப் போய்விடுகிறது.
நடை என்பது ஒருவனின் உடையைப் போல. சாமுவேல் பட்லர் என்ற ஆங்கில எழுத்தாளர் எந்தக் கலையிலுமே “ஸ்டைல்” (Style) அல்லது “நடை” என்பது நாகரிகமான உடையைப் போல இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். அது பார்ப்பவர்களின் கவனத்தை மிக மிகக் குறைவாக ஈர்க்க வேண்டுமென்பது அவரது கருத்து. அநாவசியமான “ஜிகினா” வேலைப்பாடுகள் உள்ள உடை கூத்து மேடைக்கோ, வீதியில் வெற்றிலை விற்பனை செய்பவனுக்கோ தான் பொருத்தம். ஸ்டீபன் ஸ்பெண்டர் இதனை இன்னும் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். ஆகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு நடையே இல்லையாம். எடுத்த இவ்விஷயத்தை எவ்விதம் சொன்னால் தெளிவும் விளக்கமும் ஏற்படுகிறதோ அவ்விதம் சொல்லிச் செல்வதை விட்டு செயற்கையான மேனிமினுக்கு வேலைகளை மேற்கொள்வதைப் பண்பும் முதிர்ச்சியும் பெற்ற எழுத்தாளர்கள் இன்று முற்றாக ஒதுக்கி வருகிறார்கள்.
இயற்கைக்கு மாறான செயற்கை நடைகளை வருவித்துக் கொண்டு எழுதுபவர்கள் சொந்த மயிருக்குப் பதிலாக டோப்பா கட்டிக் கொண்டவர்களை ஞாபகமூட்டுகிறார்கள். சிரில் சொனோலி (Cyril Chonolly) என்ற ஆங்கில விமர்சகர் இயற்கையான நடையில் எழுதுபவர்களை “அவர்கள் சொந்த மயிருடன் விளங்குபவர்” என்று பாராட்டுகிறார். வீதியில் யாராவது இயற்கைக்கு மாறாக ராஜ நடை போட்டு நடந்தால் நாம் அதைப் பார்த்துச் சிரிக்கிறோமல்லவா? இலக்கியத்திலும் இதே நிலைதான்.
“மனக்கண்”ணை நேரிய ஒரு நடையிலேயே நான் எழுதியிருக்கிறேன். நான் வாசகர்களுக்குக் கூற வந்த பொருளின் தெளிவே என் குறிக்கோள். அதனால் தான் பாத்திரங்களின் பேச்சிற் கூட ஒவ்வொரு பிரதேசத்தினருக்கே விளங்கக் கூடிய பிரதேச வழக்குகளை மிகவும் குறைத்து பொதுவாகத் தமிழர் எல்லோருக்குமே விளங்கக் கூடிய சரளமான ஒரு செந்தமிழ் நடையை நான் கையாள முயன்றிருக்கிறேன். இதனால் தான் இக்கதை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மலை நாட்டிலும் ஏக காலத்தில் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது. ஆனால் நடையில் மட்டுமல்ல. “மனக்கண்” வேறு பல எழுத்தாளர்களின் நாவல்களுடன் மாறுபடுவது கதை அமைப்பிலும் தான். நாவலில் பாத்திர அமைப்பும் சூழ்நிலையும் மிக முக்கியமானவை என்றாலும் கூட இறுக்கமான நாடகத்தன்மை கொண்ட கதை அமைப்பும் அவசியமாகும். இவ்வித கதை அமைப்பில்லாத பாத்திர சிருஷ்டி நாவலாகாது. வெறும் வியாசமாகத்தான் விளங்கும். அடிசன் என்ற ஆங்கில எழுத்தாளர் இப்படிப்பட்ட பாத்திர சிருஷ்டியில் வல்லவர். சர் ரோஜர் டிகவுர்லி, கறுப்புடை மனிதன் போன்ற பாத்திரங்களை அவர் சிருஷ்டித்தார். ஆனால் அவர் தம் எழுத்தை நாவல் என்று கூறவில்லை. வியாசங்கள் என்றே வர்ணித்தார். இன்று நாவலைப் பற்றிய ஒரு புதிய கருத்தைச் சில விமர்சகர்கள் உலகின் பல பகுதிகலிலும் பரப்ப முயன்று வருகிறார்கள். நாவலில் கதை பின்னல் அவ்வளவு முக்கியமல்ல என்பது இவர்களின் கருத்து. இவர்களைப் பற்றி சோமர்சேட் மோம், “இந்த அளவுகோவலின்படி பார்த்தால் வியாசமெழுதுபவர்களே சிறந்த நாவலாசிரியர்கள். சார்லஸ் லாம்பும், ஹல்லீட்டுமே நல்ல நாவலாசிரியர்கள்” என்று கேலி செய்திருக்கிறார்.
கதை அமைப்பற்ற சப்பட்டை நாவல்களை எழுதுபவர்களைப் பற்றி அவர் இன்னோரிடத்தில் பின் வருமாறு கூறுகிறார்: “உயிருள்ள மனிதர்களைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் படைத்த கெட்டிக்கார எழுத்தாளர் பலர், அவ்வாறு அவர்களைச் சிருஷ்டித்த பின்னர் அவர்களை வைத்து என்ன செய்வதென்றறியாது மயங்குகின்றார்கள். அவர்களை வைத்து பொருத்தமான கதையை உண்டாக்கும் ஆற்றல் இவர்களிடம் இல்லை. ஆகவே எல்லா எழுத்தாளர்களையும் போல (எல்லா எழுத்தாளரிடமும் ஓரளவு பொய்மை (Humburg) இருக்கிறது) இவர்களும் தமது குறைபாட்டை ஒரு நிறைபாடாகக் காட்ட முயல்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை வாசகர்களே யூகித்துக் கொள்ளட்டுமென்றோ, வாசகர்கள் இந்த விஷயத்தை அறிய முயல்வதே தவறென்றோ கூறி விடுகின்றனர். வாழ்க்கைக் கதைக்கு முடிவு இல்லையென்றும், சம்பவங்கள் செதுக்கப்பட்ட ஒரு முடிவை அடைவதில்லை என்றும், நிகழ்ச்சிகள் தொங்கிக்கொண்டுதான் கிடக்கும் என்றும் கூறி விடுகின்றனர். அவர்களின் இக்கூற்று எப்பொழுதும் உண்மையல்ல. ஏனென்றால் எல்லோர் கதைக்கும் சாவென்ற முடிவாவது இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்வது உண்மையாயிருந்தாலும் கூட அது நல்ல வாதமாகாது. ஒரு சிறந்த கதையைப் படைப்பது கஷ்டமான ஒரு வேலைதான். ஆனால் அதற்காக அதை வெறுப்பது நல்ல நியாயமல்ல. துன்பியல் நாடகங்கள் பற்றி அரிஸ்டாட்டில் கூறியது போல் ஒரு கதைக்கு ஒரு தொடக்கமும் நடுவும் முடிவும் இருக்கவே வேண்டும்.
கதை அமைப்புப் பற்றி இக் கருத்தைக் கொண்ட சோமர்செட் மோம் நடையைப் பற்றி, “தெளிவும் இனிமையும் எளிமையும் கொண்டதே நல்ல நடை” என்ற கருத்தைப் பல இடங்களில் வெளியிட்டிருக்கிறார். கதை, நடை என்ற இரண்டிலும் மோமுடன் எனக்கு உடன்பாடு. ஏன், இவற்றில் டிக்கென்ஸ் தொடக்கம் தாகூர் வரைக்கும் உலகின் நல்ல நாவலாசிரியர்கள் எல்லோருமே இவ்வப்பிப்பிராயத்தையே கொண்டிருந்திருக்கின்றனர். “மனக்கண்”ணில் நான் பின்பற்றியிருப்பதும் இக்கொள்கைகளைத்தான்.
நாவலே இன்று வழக்கிலுள்ள இலக்கிய உருவங்களில் மிகவும் பிந்தியது. இருந்த போதிலும் அது மிகவும் வலிமை கொண்டதாக வளர்ந்து விட்டது. இன்னும் உலகின் எதிர்கால இலக்கியம் பெரிதும் நாவலாகவே இருக்கப் போகிறதென்பதிலும் சந்தேகமில்லை. நாவல் இவ்வாறு வெற்றி கட்டி வருவதற்குக் காரணம் மனிதரில் பெரும்பாலோருக்கு நாவல்தான் வாழ்க்கை அனுபவத்துக்கே வாயிலாவது இருக்கிறது என்பதாகும். தன்னந்தனியாகத் தூரக் கிராமத்தில் வாழ்பவன் நகரத்து அனுபவங்களை நேரடியாக அனுபவிக்காமலே தான் அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்களின் மூலம்தான். காதலை, நேரில் அனுபவியாதவள் காதலையும், தாய்மையின் அன்பை அறியாதவள் தாய்மையையும், பிள்ளைப் பாசத்தை நேரில் காணாதவள் பிள்ளைப் பாசத்தையும் , யுத்தத்தை நேரில் காணாதவன் யுத்தத்தையும், தான் நேரில் துய்த்தது போல் இன்று அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்கள் மூலமேயாகும். நாவல்கள் முழு உலக அனுபவத்தையுமே நமக்குத் திறந்து காட்டி நம் உளப்பண்பை விருத்தி செய்கின்றன. ஆனால் நாவலென்பது புற நிகழ்ச்சிகளை மட்டும் கூறும் ஓர் இலக்கிய உருவமல்ல. அது மனதின் உட்புற நிகழ்ச்சிகளையும் காட்டுகிறது. அதனால்தான் சர் ஐவர் எவன்சன்ஸ் என்ற இலக்கிய விமர்சகர் “நாவல் இன்று ஓர் உட்புறத் தனி மொழியாகவும் வளர்ச்சியடைந்து வருகிறது” என்று கூறியுள்ளளார். “மனக்கண்”ணில் பல இடங்களில் சிந்தனையோட்டங்கள் நீள வர்ணிக்கப்படுவதைக் காணலாம். பாத்திரங்களின் குணா குணங்களை விளக்கிக் கொண்டு அவர்களின் அக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அவை நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
கதாசிரியனாகிய என்னைப் பொறுத்தவரையில் “மனக்கண்”ணை எழுதியது எனக்கு ஒரு பெரிய அனுபவம். இதற்கு முன் சிறுகதைகளையும் , கவிதைகளையும், சிறுவர் நெடுங் கதை ஒன்றையும், நாடகங்களையும் எழுதியுள்ள நான் எமிலி சோலாவின் “நானா” என்ற நாவலைத் தமிழ்ப்படுத்தியிருந்த போதிலும் “மனக்கண்”ணை எழுதிய போது புதியதோர் உலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. பாத்திரங்களைச் சிருஷ்டித்து அவர்களைச் சமுதாயப் பின்னணியிலே உலவ விடும்போது அவர்கள் முன்னில்லாத ஒரு சக்தியையும் வலிவையும் பெற்று ஆசிரியனையே மலைக்க வைத்து விடக் கூடும் என்பதை நான் அனுபவத்தில் கண்டேன். நாவலை வாசிப்பவர்கள் மட்டுமல்ல அதை எழுதும் ஆசிரியனும் உணர்ச்சிப் பொங்கலில் அகப்பட்டுக் கொள்ளவே செய்கிறான். இந்தக் கதையை உருவாக்கிய கடந்த ஒரு வருட காலமும் நான் “அமராவதி வளவில்” ஓர் அங்கத்தினனாகவே ஆகிவிட்டேன். ஸ்ரீதர், சிவநேசர், பாக்கியம், சுசீலா, சுரேஷ், முரளி ஆகிய யாவரும் இரவும் பகலும் என்னோடிருந்தார்கள். அவர்களின் இன்பத் துன்பங்களை நானும் அனுபவித்தேன். இப்படிப்பட்ட அனுபவமேற்பட்டு அதனை எழுத்தில் வடிப்பதற்கு எழுத்தாளன் தன் உடல் சக்தி, மனச் சக்தி, நரம்பின் சக்தி ஆகியவற்றை மிகவும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. அதனாற்றான் ஆர்னால்ட் பெனட் என்ற ஆங்கில நாவலாசிரியர் “நாவல் எழுதுவதற்கு நாடகம் எழுதுவதிலும் பார்க்க அதிக நரம்புச் சக்தி தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.
“மனக்கண்”ணின் பாத்திரங்களைப் பற்றிப் பேசுகையிலே, என்னைப் பெரிதும் மலைக்க வைத்தவர் சிவநேசரே. அவர் எவ்விதம் நடந்து கொள்வார் என்பது எனக்கு முன் கூட்டியே தெரியாது. பெரிய மனிதரான அவர் தன்னிஷ்டம் போல் நடந்து கொள்வார். அவரை நினைத்தால் வாசகர்களுக்கு எப்படியோ. என்னைப் பொறுத்தவரையில் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் போன்ற உணர்ச்சி அவர் முன்னால் எனக்கு ஏற்படுகிறது.
முன்னர் கூறிய பாத்திரங்களைத் தவிர பத்மா தொடக்கம் வேலாயுதக் கிழவன் வரை, அதிகார் அம்பலவாணர் தொடக்கம் அடுத்த வீட்டு அன்னம்மாக்கா, அவளது மகன் திராவிடதாசன், வாத்தியார் பரமானந்தர், கமலநாதன், தங்கமணி, அவள் தோழி ரெஜீனா, சின்னைய பாரதி, நன்னித்தம்பி, பேராசிரியர் நோர்த்லி போல் ஏராளமான பாத்திரங்கள் மனக்கண்ணில் வந்து சென்ற போதிலும்’மோகனா’ என்னும் கிளியும் ‘ஸ்ரீதர்’ ‘சுரேஷ்’ என்ற மீன்களும் என் மனதை விட்டு ஒரு போதும் அகலா. இதில் ‘மோகனா’ என்னும் கிளி மனிதரால் மாற்ற முடியாத சிவநேசரின் உள்ளத்தைத் தன் கிளிப் பேச்சால் மாற்றித் தனிப் பெருமை கொண்டதல்லவா? கருங்கல்லில் ஈரத்தைப் பெய்த கல்லுருக்கு வேலையை அது செய்திருக்கிறது.
‘மனக்கண்’ முடிவோடு நாம் ஸ்ரீதர் தொடக்கம் ‘மோகனா’ வரை எல்லாப் பாத்திரங்களிடமிருந்தும் விடை பெறுகிறோம். அத்துடன் பல்கலைகழகத்து நாடக மேடை தொடக்கம், தேர்ஸ்டன் வீதி, கொட்டாஞ்சேனை, மவுண்ட் வவீனியாக் கடற்கரை, நொச்சிக்கடை சுந்தரேஸ்வரர் கோவில், ‘அமராவதி வளவு, ‘கிஷ்கிந்தா’ இல்லம்,, பம்பலப்பிட்டி ‘எஸ்கிமோ’ ஐஸ்கிறீம் பார்லர் ஆகிய இடங்களில் நாம் ஸ்ரீதருடன் சுற்றித் திரிந்ததற்கும் முடிவு வந்துவிட்டது. ஸ்ரீதரின் செயல்களில் என்னால் மறக்க முடியாத ஒன்று அவன் கால்பேஸ் கடற்கரையில் பத்மாவுடன் மழை நீராடியமை. காவிய நாயகர்கள் கடல் நீராடியமையையும் புனல் நீராடியமையையும் நாம் முன்னர் பல நூல்களில் படித்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீதர் தான் முதன் முதலாக மழை நீராடிய கதாநாயகனென்று நான் நினைக்கிறேன். “மனக்கண்” ஒரு விரிந்த நாவல். அதில் ஓர் இதிகாசத் தன்மை இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். அதில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை நான் அறியேன். பெரிய படாங்கில் எழுதப்பட்ட பரந்த சித்திரம் அது. ஆனால் சித்திரம் குறைவற்றதா? கலை இலக்கியத் துறைகளைப் பொறுத்தவரையில் குறைவற்ற படைப்பு எதுவுமே இவ்வுலகில் எவராலும் படைக்கப்பட்டு விடவில்லை. விக்டர் ஹியூகோ பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் கூட அப்படித்தான் சொல்கிறார்கள்.
இலக்கிய விமர்சனப் பிரச்சினையான இது பற்றி இங்கே விரிவாக எழுத இடமில்லை. இன்னும் நூலாசிரியரே தந்து நூலின் சிறப்புகளையும் குறைகளையும் பற்றி எழுதலாமா என்ற இன்னொரு கேள்வியும் பிறக்கிறது. அவ்வாறு அவன் எழுத முற்படும்போது, பொய்யான அடக்கமும், தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற மனப்பாங்கும் சரியான விமர்சனத்துக்குப் பாதகமாக அமையலாம். ஆகவே “மனக்கண்”ணை எவ்விதத்திலும் இங்கே விமர்சிப்பது என் நோக்கமல்ல.
நான் இத்தொடர்கதையை எழுத ஆரம்பித்ததும் எனது சக எழுத்தாளரும் நாவலாசிரியருமான செ.கணேசலிங்கனின் இந்திய விஜயத்தின் பயனாக, சென்னை இலக்கிய வட்டாரங்களில் எழுந்த ஒரு கேள்வியைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தொடர் நவீனம் நல்ல இலக்கியமாக அமைய முடியுமா என்பதே அது. பத்திரிகையின் கொள்கை நாவலின் போக்கை அமுக்கலாமென்பதும், வாராந்த வாசகனின் ஆவலைத் தூண்டுவதற்காக ஓர் எழுத்தாளன் நாடகத் தன்மையற்ற இடங்களையும் நாடகமாகக் காட்ட முயலாமென்றும், இவ்விதம் விட்டுக் கொடுப்பது அவனது பண்பாகிவிட்டால் அவன் கலையில் பொய்மை புகுந்து விடுமென்றும் கனேசலிங்கன் சுட்டிக்காட்டினார். இதில் ஓரளவு உண்மை அடங்கியிருக்கிறது என்பதை நான் மறுக்க வில்லையாயினும், முழு உண்மையின் சொரூபமும் அதில் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் இன்று உலகப் பேரிலக்கியங்களாகக் கொண்டாடப்படும் பல நாவல்கள் தொடர் கதைகளாக எழுதப்பட்டனவே. டொஸ்டோவ்ஸ்கியின் “காம்சோவ் சகோதரர்கள்” நெக்ரசோவ் ரிவ்யூ என்னும் சஞ்சிகையில் வெளிவந்த தொடர் கதைதான். எமினி சோலாவின் ‘ நானா’வும் முதலில் தொடர்கதையாகவே வெளியிடப்படது. டிக்கென்ஸின் ‘ஒலிவர் டுவிஸ்ட்,’ ‘நிக்கலஸ் நிக்கல்பி,’ ‘இரு நகரக் கதைகள்’ என்பனவும் ‘பென்ட்லீஸ் வீக்லி’ போன்ற சஞ்சிகைகளில் தொடர்கதைகளாக வெளியிடப்பட்டவை தாம். ஏன், தமிழகத்தின் சிறந்த நாவலாசிரியர் என்று கருதப்படும் ‘கல்கி’யின் எல்லா நாவல்களுமே ‘ஆனந்த விகடனி’லும் ‘கல்கி’யிலும் தொடர் கதைகளாக வெளிவந்தவை தாமே? ஆகவே ஒரு நாவல் நல்ல இலக்கியமாக அமைகிறதா அல்லவா என்பதை, அது தொடர்கதையாக எழுதப்படுகிறதா அல்லது நேரடியாகவே புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பது ஒருபோதும் நிர்ணயித்து விடாது என்பதே எனது கருத்து. சிறந்த இலக்கியப் புலன்வாய்ந்த எழுத்தாளனால் சிரமமான சூழலிலும் நல்ல இலக்கியத்தைப் படைக்க முடியும்.
இவை போக முடிவுரையின் ஓர் அம்சம் நன்றி நவிலலாகும். ‘மனக்கண்’ நாவலை நான் உருவாக்கித் தொடர் கதையாக வெளியிடுவதற்குத் ‘தினகரன்’ வார மஞ்சரி எனக்களித்த வாய்ப்பை நான் ஒரு போதும் மறக்க முடியாது. இதற்காக எனது மனப்பூர்வமான நன்றியைத் ‘தினகரன்’ வார மஞ்சரிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
[நன்றி: தினகரன்]
மனக்கண் நாவலுக்கான இணைய இணைப்புகள் வருமாறு.
அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’ (1 -11) http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4758;2018-10-30-22-42-07&catid=25;2011-03-05-22-32-53&Itemid=47
அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’ (12 – 22) http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4764;-12-22&catid=25;2011-03-05-22-32-53&Itemid=47
அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’ (23 – 32 & முடிவுரை) http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4765;-23-32&catid=25;2011-03-05-22-32-53&Itemid=47