வாசிப்பும், யோசிப்பும் 231: தமிழ்க்கவியின் கட்டுரையும் அது தொடர்பான சர்ச்சையும் பற்றி…

தமிழ்க்கவிதமிழ்க்கவியின் கிளிநொச்சியும், மலையகத்தமிழரும் -தமிழ்க்கவி’ என்ற கட்டுரை வாசித்தேன். நல்லதோர், ,அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. நல்லதோர் ஆய்வுக்கட்டுரையாக வந்திருக்க வேண்டிய கட்டுரை மேலும் பல தகவல்களை உள்ளடக்காமல் போனதால் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளிலொன்றாக வரமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக வட, கிழக்கில் பெருமளவு மலையகத்தமிழர்களை எழுபதுகளில் குடியேற்றிய காந்திய அமைப்பு பற்றி எந்தவிதத்தகவல்களுமில்லை.
அது தவிர கட்டுரை சிறப்பானதொரு கட்டுரை.

கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழுள்ள விடயங்களுக்காக இணையத்தில் பலர் தமிழ்க்கவியைத் தாக்கி வருகின்றார்கள்.

1. “மலையகத்தில் இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறோம். என்ன அங்கை குளிர் இங்கை வெயில். அவ்வளவுதான் என்றார் ஒரு முதியவர். இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங் கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும் பத்தில் பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத் தாட்சி இல்லை என்றபோது அப்பிள்ளை களின் தாய், தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.

2. எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குடும் பங்களிலிருந்து போராடப் போனவர்களும் அதிகம். காரணம் தேசப்பற்றல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்து தேவைப்பட்டது தான்

முதலாவது கூற்றில் தமிழ்க்கவி முதிய மலையகத்தமிழர் ஒருவரின் கூற்றினைக் குறிப்பிடுகின்றார். தொடர்ந்து இவர்களது பெண்கள் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். என்கின்றனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர் என்கின்றார்.

இதிலென்ன வெகுண்டெழும்படியான சொற்களுள்ளன? மலையகத்தமிழர் ஒருவரின் கூற்றினை அடுத்து இவர்களின் பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றார். இதில் தமிழ்க்கவி ‘இவர்கள் பெண்கள்’ என்று கூறி ஏனைய வடக்குத்தமிழர்களிடமிருந்து பிரித்து விட்டார் என்று கவிஞர் ஜெயபாலன் தனது எதிர்வினையொன்றில் குமுறியிருந்ததை அறிய முடிந்தது. அவர் கூறுகின்றார் ‘இவர்கள் பெண்கள் என்று பிரித்துக்கூறாமல் அனைத்துப் பெண்களையும் பொதுவாகக் கூறியிருக்க வேண்டு’மென்று. என்னைப்பொறுத்தவரையில் இது முட்டையில் மயிர் பிடுங்குவது போன்றது. முழுக்கட்டுரையும் அரிய பல தகவல்களையுள்ளடக்கி, வடகிழக்கில் மலையகத்தமிழர்களின் நிலையினை எடுத்துரைக்கின்றது. அதுதான் கட்டுரையின் முக்கிய அம்சமே. அதையெல்லாம் விட்டு விட்டு ‘இவர்கள்’ என்ற ஒரு சொல்லைத் தூக்கிப்பிடித்துக் கவிஞர் கூறியிருப்பது வியப்பினை அளிக்கிறது. மேலும் தமிழ்க்கவி அவர்கள் மலையகப்பெண்கள் , வடக்குப் பெண்கள் என்று பிரித்துக்கூறுவதற்காக அந்த ‘இவர்கள்’ என்னும் சொல்லினைப் பாவித்திருப்பதாக நான் கருதவில்லை. அவர் மலையகத்தமிழ் முதியவர் ஒருவரின் கூற்றினைக் குறிப்பிட்டு விட்டு, இவர்களின் பெண்கள் என்று குறிப்பிடுகின்றார். அதாவது அந்த முதியவரின் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்னும் பொதுவான அர்த்தத்தில் என்றுதான் நான் கருதுகின்றேன். அந்த முதியவர் ஒருவேளை வடக்குத்தமிழராக இருந்திருந்தால் அந்த ‘இவர்கள்’ என்ற சொல் வடக்குத்தமிழர்களைக் குறிப்பிட்டிருக்கும். அந்த முழு விடயத்தையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளாமல், ‘இவர்கள்’ என்னும் சொல்லொன்றினை மட்டும் எதற்காகக் கவிஞர் தூக்கிப் பிடிக்க வேண்டும்?

அடுத்தது வடக்கிற்குக் குடிபுகுந்த மலையகத்தமிழர்களின் வறுமை காரணமாக அவர்கள் பலராலும் சுரண்டப்பட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்ததே. குழந்தைகள் வடக்குத்தமிழர்கள் உட்பட இலங்கையின் பல பகுதி மக்களாலும் வீட்டு வேலைக்காகப் பயன்படுத்தப்பட்டார்கள். குறைந்த ஊதியம், நிறைய வேலை என்று அவர்கள் சுரண்டப்பட்டார்கள். பெண்கள் பாலியல்ரீதியிலும் அவர்களது நிலை காரணமாக வன்முறைக்குள்ளானார்கள். எழுபதுகளில் காந்தியம் அமைப்பினால் வன்னியில் குடியேற்றப்பட்ட மலையகத்தமிழர்கள் பலர் உள்ளூர்த்தமிழர்களால் கூலிக்கு அமர்த்தப்பட்டுச் சுரண்டப்பட்டதை என் சொந்த அனுபவத்தில் அறிந்துள்ளேன். பொதுவாகவே குடியேற்றத்திட்டங்களில் வாழ்ந்த பெண்கள் சிலர் அப்பகுதிகளில் ஆதிக்கத்திலிருக்கும் சங்கக்கடை மனேஜர், போஸ்ட் ஓபிஸ் மானேஜர், முதலாளிகள் என்று பலரால் தம் ஆதிக்கம் காரணமாகப் பாலியல்ரீதியில் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். அறிந்திருக்கின்றேன். அவர்களெல்லாரும் அப்பகுதியில் வடக்கிலிருந்து குடியேறிய பெண்கள் அல்லது அப்பகுதியிலேயே காலம் காலமாக வாழ்ந்த பெண்கள். இந்நிலையில் புதிதாக அப்பகுதிகளுக்குக் குடியேறிய மலையகத்தமிழ் இனத்தைச்சேர்ந்த பெண்களிலும் சிலர் அவர்களது வறிய நிலை காரணமாகப் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கலாம். அதனைத்தான் தமிழ்க்கவி கூறியிருக்கின்றார். உண்மையில் தோட்டப்பகுதிகளில் மலையகப்பெண்கள் பாலியல்ரீதியில் துன்புறுத்தல்குள்ளாகியதை வைத்துப் பல புனைகதைகள் மலையகத்தமிழ் எழுத்தாளர்களினால் எழுதப்பட்டுள்ளா. வடக்கிலும் அவர்களின் நிலை காரணமாக, குடியேற்றத்திட்டங்களில் மலையகப்பெண்களில் சிலர் பல்வேறு வகையிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கலாம். சாத்தியங்கள் நிறையவேயுள்ளன. உண்மையில் வடக்குக்கு குடிபெயர்ந்த மலையக்த்தமிழர்களின் நிலை பற்றிய விரிவான ஆய்வுகள் இதுவரையில் வெளிவரவில்லையென்று நினைக்கின்றேன். வந்திருந்தால் நான் அவற்றைப்பற்றி அறிந்திருக்கவில்லையென்று கூறுகின்றேன். தமிழ்க்கவியின் இக்கட்டுரை அவ்வகையான விரிவான ஆய்வுக்கு வழி வகுத்திருக்கின்றது. அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். பாராட்டுகின்றேன்.

அடுத்துப் பலரின் கண்டனங்களுக்கும் காரணமான கூற்று ‘எம்மிடையே வாழ்ந்து கொண்டி ருக்கும் இந்தக் குடும்பங்களிலிருந்து போராடப் போனவர்களும் அதிகம். காரணம் தேசப்பற்றல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்து தேவைப்பட்டது தான்’. இது ஆய்வுரீதியிலான கூற்றா என்றால் இல்லையென்றே கூறியிருக்கலாம். இதனை நிரூபிக்க முடியாது. ஏனெனில் அவ்விதம் போராடப்போனவர்கள் இவ்விதம் கூறினால்தான் இக்கூற்று நிரூபிக்கப்பட முடியும். அவ்விதம் அவர்கள் கூறும்வரை இக்கூற்றினை நிரூபிக்க முடியாது. ஆனால் தமிழ்க்கவி அவர்கள் ‘எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குடும்பங்களிலிருந்து போராடப் போனவர்களும் அதிகம். காரணம் தேசப்பற்றல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்து தேவைப்பட்டது தான். இது என் சொந்தக் கருத்து’ என்று கூறியிருக்கலாம்.

ஆனால் உண்மையில் ‘இது என் சொந்தக் கருத்தென்று’ கூறாவிட்டாலும் கூட இது தமிழ்க்கவி எழுதியதுதான். அவ்வகையில் அவரது கருத்துத்தான். எனவே அவரது சொந்தக் கருத்துத்தான். அவரது சொந்தக்கருத்து எவ்விதமுமிருக்கலாம். அதற்கான உரிமை அவருக்குள்ளது. அதற்காக அவரது சொந்தக்கருத்தை முடிவானதொரு கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை. அக்கருத்து ஆய்வுரீதியாக நிரூபிக்கப்பட்டிருந்தாலொழிய அக்கருத்தை ஏற்கவேண்டியதில்லை. ஆனால் இதில் ஆத்திரப்பட வேண்டியதேவை எதுவுமேயில்லை. தம் நாட்டுக்காக, தம் மக்களுக்காக எல்லாவற்றையும் துறந்து போராடப் புறப்பட்ட போராளிகளையே நாம் ஒவ்வொர் அமைப்பு சார்பாக நின்று துரோகிகள் என்று எள்ளி நகையாடவில்லையா? மண்டையில் போடவில்லையா? அதற்கெல்லாம் வராத ஆத்திரம் தமிழ்க்கவியின் சொந்தக் கருத்துக்கு அதுவும் மிகவும் அவரது அனுபவத்தின் விளைவாக அவர் அடைந்திருக்கக்கூடிய கருத்துக்காக வர வேண்டும். மேலும் அவ்விதம் சமூக அந்தஸ்து வேண்டிக்கூட யாராவது சென்றிருக்க சாத்தியமுண்டா என்றால்.. உண்டு என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் போராட்ட காலத்தில் அமைப்புகளில் சேர்ந்த சிலர் தம் சுயசரிதைகளில் அல்லது அனுபவங்கள் பலவற்றில் தம்மை அமைப்புகளில் சேரத்தூண்டியதற்கு முக்கிய காரணங்களிலொன்றாக அடிக்கடி உந்துருளிகளில் வந்து விலாசம் காட்டித்திரியும் போராளிகளை மக்கள் மதிப்புடன் பார்த்தது பற்றியும் குறிப்பிடுவார்கள். ஆனால் எல்லோரும் அவ்விதம் சென்றிருப்பார்கள் என்று பொதுவாகக் கூற முடியாது. பெரும்பாலானவர்கள் இலங்கைப் படையினரின் அடக்குமுறைகள் காரணமாக, இனவாதச்சிங்களக்குண்டர்களினால் புரியப்பட்ட இனக்கலவரக்காலக் கொடுமைகள் காரணமாகத்தான் சென்றிருப்பார்கள். தமிழ்த்தேசிய உணர்வு காரணமாகத்தான் சென்றிருப்பார்கள்.

இக்கட்டுரை விமர்சிக்கும் இன்னுமொரு விடயம் மேற்படி வன்னிக்குடியேற்றத்திட்டங்களுக்குச் சென்று விவசாயம் செய்யத் தயங்கிய யாழ்ப்பாணத்தமிழரைப்பற்றியதாகும். 61இல் சிறிமா அம்மையார் காலத்தில் பல குடியேற்றத்திட்டங்களில் குடியேறி விவசாயம் செய்ய ஊக்குவிக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை. இதற்காகவே ‘வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’ போன்ற நாடகங்கள் மூலம் மக்களை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் மேற்படி கட்டுரை விபரிக்கின்றது. எழுபதுகளின் ஆரம்பக்காலகட்டத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர்கள் எல்லைகளில் சென்று குடியேறும்படி தமிழர்களை வலியுறுத்தினார்கள். எத்தனைபேர் சென்றார்கள்? சென்றவர்களில் சிலரும் நுளம்புக்கடி தாங்க முடியாமல் திரும்பி விட்டார்கள். அதன் காரணமாகத்தாம் அமைப்புகள் மலையகத்தமிழர்களைப் பின்னர் வன்னிக் குடியேற்றத்திட்டங்களில் குடியேற்றினர். அதுவும் பின்னர் மலையகத்தமிழர்களுக்கு எதிராகவே அமைந்துபோனது. அப்பொழுது மலயகத்தமிழர்கள் ஈழத்தமிழர்களினால பலிக்கடாக்களாக்கப்பட்டு விட்டனென்ற விமர்சனமும் எழுந்தது. புனைவுகளும் புனையப்பட்டன. ஞாபகத்துக்கு வருகின்றது.

இன்னுமொரு விடயம் மலையகத்தமிழர்கள் பலருக்குப் பிறப்புச்சான்றிதழ் இல்லையென்பது. அக்கூற்றும் பலரது ஆத்திரத்தை எழுப்பியிருக்கிறது. ஆனால் பிரஜா உரிமை அற்று , பொலிஸாரின் கெடுபிடிகளிலிருந்து வடக்கு நோக்கிப் பல மலையக மக்கள் வந்ததாகக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விதம் வருபவர்களில் பலர் எவ்விதம் அரச அலுவலகங்களுக்குச் சென்று தம்மை இனங்காட்டிக்கொள்வார்கள். எனவே அதற்கான காரணமும் இருந்திருக்கலாம் என்றே படுகிறது. மேலும் இதனைத் தமிழ்க்கவி அவரது அம்மக்களுடனான நேரடிச்சந்திப்புகளின் வாயிலாக அடைந்திருப்பதாக கட்டுரையின் வாயிலாக அறிகின்றோம். இக்கூற்று தவறா அல்லது பிழையா என்பதை அம்மக்களுடன் நேரில் சென்று உரையாடுவதன் மூலமே அறிய முடியும். அவ்விதம் செய்யாமல் அக்கூற்று மலையகத்தமிழரை இழிவு படுத்துவதாகக் கூறுவது சரியல்ல.

மிகச்சாதாரணமாக எடுத்து விமர்சித்திருக்க வேண்டிய கூற்றுகளை மட்டும் தூக்கிப்பிடித்து விமர்சிப்போர் கட்டுரையின் தொண்ணூறு வீதமான உள்ளடக்கம் கூறும் அரிய தகவல்களை, வரலாற்றினைக் கருத்தில் கொண்டு கட்டுரையினை விமர்சித்திருந்தால் அது மிகவும் ஆக்கபூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் தமிழ்க்கவியின் இக்கட்டுரை வடக்கில் மலையகத்தமிழர்கள் நிலை பற்றிய விரிவான ஆய்வுகளுக்கு வழிவகுத்திருக்கின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் மிக்கது.

தமிழ்க்கவியின் கட்டுரையினைப்பின்வரும் இணைப்பினில் வாசிக்க முடியும்: http://www.namathumalayagam.com/2017/04/blog-post_23.html…