வாசிப்பும், யோசிப்பும் 234 : அறிஞர் அண்ணா மற்றும் கவிஞர் கண்ணதாசன் சர்ச்சை பற்றி…; மார்க்சை நினைவு கூர்வோம்!; சற்சொரூபவதி நாதன் மறைவு!

கவிஞ்ர கண்ணதாசன்அறிஞர் அண்ணாபேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களை அவமானப்படுத்தும் அவரது எதிரிகள் அவரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்போது ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார்கள். சட்டசபையில் ஒருமுறை அவருக்கும் ஒரு நடிகைக்குமிடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் குற்றஞ்சாட்டியதாகவும் அப்பொழுது அவர் \அண்ணாவின் பதில்:
‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை’ என்று குறிப்பிட்டதாகவும் குறிப்பிடுவார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் அடுக்கு மொழிகளைக்கொண்டு வசனங்களை உருவாக்கிப் பதிலளிப்பதில் பெயர் போனவர். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்’ என்று ‘ம’வில் வரும் அடுக்கு மொழிகளைக் கொண்டு ஒரு முறை அவர் கூறியிருக்கின்றார். அதுபோல் யாரோ ஒருவர் சினிமாக்காரர்களைப்பற்றி வரும் கிசுகிசுக்களின் அடிப்படையில் அவ்விதம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு அவர் அண்ணாவும் வேடிக்கையாக ‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல’ என்று கூறியிருக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அவர் ‘அவள் ஒன்றும் படி தாண்டாப் பத்தினியும் இல்லை’ என்று கூறியிருந்தால் தவறு. ஆனால் அப்படி அவர் கூறியிருப்பாரா அல்லது இதுவும் அவரைப்பற்றி உலாவிய கிசுகிசுக்களிலொன்றா என்பது தெரியவில்லை.

யாராவது அறிஞர் அண்ணாவைப்பற்றிக் குற்றஞ் சாட்டுவதாகவிருந்தால் ஆதாரம் இல்லாமல் கிசுகிசுக்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டாதீர்கள். சட்டசபையில் இவ்விதம் விவாதம் நடந்திருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் முன் வையுங்கள். அறிஞர் அண்ணா உட்படப் பல திமுகவினர் தமிழ் சினிமாவில் இயங்கியவர்கள். சினிமாக்காரர்களைப்பற்றி கிசுகிசுக்கள் எழுதுவதற்கென்றேயொரு கூட்டம் இருக்கிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தி அவற்றின் மூலம் ஒருவரைக் களங்கப்படுத்துவதென்பது கீழ்த்தரமானது. அதைவிட இன்னும் கீழ்த்தரம் என்னவென்றால் .. மேற்படி சம்பவத்துடன் சம்பந்தப்படுத்திப் பலர் தமிழ்த்திரையுலகில் கால் பதித்த, கலை உலகுக்குக் காத்திரமான பங்களிப்பு அளித்த, போற்றத்தக்க நடிகைகள் பலரையும் நா கூசாமல் இணைத்து வம்பளப்பதுதான். அவ்விதமாகக் குறிப்பிடப்பட்டவர்கள் நான் அறிந்தவரை பானுமதி, சாவித்திரி , பத்மினி போன்றோர். இவர்களது வாழ்க்கையப்பற்றி நாடே அறியும். இவர்களையும் மேற்படி கீழ்த்தரமான கிசுகிசுவையும் இணைத்துக் களங்கப்படுத்துவதை நாம் மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர்கள் நிச்சயம் செய்வது நிச்சயம் வருந்தத்தக்கது.

நடிகை பானுதியை அவரது காலகட்டத்தில் யாருமே நெருங்க முடியாது. எம்ஜிஆரைக் கூட ‘மிஸ்ட்டர்’ போட்டு அழைப்பவர். அவ்வளவு கண்டிப்பானவர் என்பதை அனைவரும் அறிவர். ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் கூட அவரைததூக்கும் காட்சியில் நடிக்க முடியாதென்பதற்காக விலகியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். மேலும் அறிஞர் அண்ணா திரையுலகுக்கு வந்த காலகட்டத்தில் பானுமதி புகழ் மிக்க நடிகையாக விளங்கியவர்.

இன்னுமொருவர் ‘படி தாண்டாப் பத்தினி’யில் வரும் ‘பத்தினி’யைப் ‘பத்மினி’ ஆக்கி விட்டார்போலும். இதுபோல் அண்மையில் முதிர்ந்த எழுத்தாளர் ஒருவரின் முகநூல் பதிவொன்றில் சாவித்திரியை அந்நடிகையாகக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனேன். நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டியப்பேரொளி பத்மினி, சகலகலா வல்லி ‘பானுமதி’ ஆகியோரின் பெயரையும், அறிஞர் அண்ணா அவர்களின் பெயர்களையும் இவ்விதம் களங்கப்படுத்தும் செயல்களை இனியாவது செய்யாதீர்கள்.

ஆதாரமில்லாத கிசுகிசுக்களை உண்மையாகக் கருதிக் கருத்துக்கூறும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குத் தமிழகத்தில் ஒன்றரைக்கோடி மக்கள் கூடியது சாதனையென்று கின்னஸ் புத்தகம் கூறுகின்றது. ( https://groups.google.com/forum/… ) அவரது புகழைக் களங்கப்படுத்துவதற்காக இவ்விதம் ஆதாரங்களைக் காட்டாமல் களங்கப்படுத்துவது அவரது அரசியல் எதிரிகளின் வழக்கம். அதற்குள் சிக்கி விடாதீர்கள் நண்பர்களே.

அண்மையில் முகநூலில் எழுத்தாளர் ஒருவரின் பதிவில் இது பற்றி நான் வாசித்ததை அப்படியே கீழே தருகின்றேன்:

// எழுத்தாளர்: நான் அண்ணாத்துரை, சாவித்திரி உறவுகளுடன் பேச்சைத் தொடங்கினேன்.

கருத்துக்கூறிய ஒருவர்: அண்ணாத்துரைக்கும் பத்மினிக்குமான உறவுபற்றி அண்ணாத்துரையே கூறியது ”அண்ணாத்துரை முற்றும் துறந்த முனிவனும் அல்ல, பத்மினி படிதாண்டா பத்தினியும் அல்ல”.

எழுத்தாளர்: அப்ப சாவித்திரி இல்லையா அது பத்மினியா பொறாமையா இருக்கு !அண்ணா அண்ணா!

கருத்துக்கூறியவர்: அதனால் தான் பத்மினிக்கு ”நாட்டியப் பேரொளி” பட்டம் வழங்கினார் அண்ணாத்துரை. வைஜந்திமலா வசப்படவில்லை. பரகசியமாக்கியது ”ஒரு கோப்பையில் குடியிருந்து கோல மயில் துணை இருந்த” கவிஞர் கண்ணதாசன். பாம்பின் கால பாம்பறியும் அல்லவா?. //

மேற்படி உரையாடலில் கருத்துக்கூறிய ஒருவர் என்று குறிப்பிடப்படுபவர் பத்மினியை தன் இஷ்ட்டத்துக்கு சேர்த்து விட்டிருக்கின்றார். கண்ணதாசன் கூறியதாகக் கூறுகின்றார். ஆதாரங்களை முன் வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளார். கிசுகிசுக்களுடன் தன்னிஷ்ட்டத்துக்குச் சிறிது கற்பனையையும் சேர்த்து விளாசியிருக்கின்றார். 🙂

கிசுகிசுக்களை ஆதாரமாகக் கொண்ட, உண்மைக்குப் புறம்பான இவ்விதமான எழுத்துகளைப் பொது வெளியில் தவிர்ப்போம் நண்பர்களே


2. இன்று மே 5 கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்

மார்க்ஸ்

-வ.ந.கிரிதரன் –

மார்க்ஸ்

சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்.
ஏழ்மை இவன் எண்ணங்களைச்
சிதைத்திட என்றுமே இவன்
அனுமதித்ததில்லை.
முயற்சி , ஊக்கத்தை மூலதனமாக்கி
மூலதனம் படைத்தவன்.
நேற்றைய மாற்றங்களை எதிர்வு கூறிய
இவன் ஏன்
இன்றைய மாற்றங்களைக்கூட
எச்சரிககை செய்தவன் தான்.
உண்மைகளை மண்ணுலகின்
நீண்ட பாதையிலே
மக்கள் மீண்டுமொருமுறை
அறிந்து கொள்வர்.

தமிழ் மின்னூலகமான தமிழகம் இணைய நூலகத்தில் பல மார்க்சிய நூல்களை (கார்ல் மார்க்ஸின் முலதனம் நூலின் அனைத்துப் பாகங்ளுட்பட) வாசிக்கலாம்; பதிவிறக்கிக் கொள்ளலாம். கார்ல்மார்க்ஸின் பிறந்த தின நாளில் இவ்விணைய இணைப்பினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்: http://www.thamizhagam.net/…/elibrary/tamil/Karl%20Marx.html

மூலதனம் (பாகம் ஒன்று) : http://www.thamizhagam.net/…/Moolathanam%20Vol%20I%20Book%2…
மூலதனம் (பாகம் இரண்டு) : http://www.thamizhagam.net/…/Moolathanam%20Vol%20I%20Book%2…
மூலதனம் (பாகம் இரண்டு) : http://www.thamizhagam.net/…/Kar…/Moolathanam%20Vol%20II.pdf
மூலதனம் (பாகம் மூன்று ; புத்தகம் இரண்டு): http://www.thamizhagam.net/…/Moolathanam%20Vol%20III%20Book…


3. சற்சொரூபவதி நாதன் மறைவு!

 சற்சொரூபவதி நாதன்

நான் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. வாழ்க்கைக் கடலுக்குள் எதிர்நீச்சல் போடுவதில் காலம் கழிந்துவிட்டதும் இன்னுமொரு காரணம். ஆனால் இலங்கையிலிருந்த காலகட்டத்தில், என் பதின்மவயதுகளில் என் தோழமைகளிலொன்றாக அது இருந்தது . அப்பொழுது எம் பிரதான பொழுதுபோக்குகளிலொன்று வானொலி கேட்பதுதான். தொலைக்காட்சி கூட எண்பதுகளின் ஆரம்பத்தில் அல்லது எழுபதுகளின் இறுதியில் வந்ததொன்றுதான்.

இலங்கை வானொலியென்றால் உடனடியாக ஞாபகத்துக்கு வரும் பெயர்கள்: கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீட், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், சில்லையூர் செல்வராசன், இராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி நாதன், கமலினி செல்வராசன் ஆகியோரின் பெயர்களே. இவர்களில் சற்சொருபவதி நாதன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி அறிக்கைகள் மூலம் எனக்கு அறிமுகமானவர்.

சற்சொருபவதி நாதன் அவர்கள் மே 4, 2017 அன்று (நேற்று) அமரரானதாக முகநூலில் செய்திகள் வெளிவந்திருந்தன. என் வாழ்வின் ஒரு காலகட்டத்தில், ஏன் உங்களில் பலரின் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் பிரிக்க முடியாத ஒருவராக இருந்தவர்களில் ஒருவரான சற்சொருபவதி நாதன் அவர்கள் இனி என்றும் அனைவரினதும் நினைவுகளில் அவர் அன்று ஆற்றிய ஒலிபரப்புச்சேவையின் வாயிலாக நிலைத்திருப்பார்.

ngiri2704@rogers.com