தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (24 , 25, 26, 27 &28)

அசோகனின் வைத்தியசாலை-24

நோயல் நடேசன்வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்க வேண்டியது இல்லைத்தானே. ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமைகள் சுகங்கள் துக்கங்கள் என மாறிமாறி வருவது இயற்கை. அதற்கேற்க ஷரனது வாழ்க்கையில் விரும்பத்தக்க ஒரு மாற்றம் வந்ததது. அவளது குடும்பம் சார்ந்த சகலருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக அது இருந்தது. பல காலமாக தாய் வீட்டில் கணவன் கிறிஸ்ரியனை பிரிந்து இருந்த போதும் அவள் தனது விவாகரத்தை கோட்டுக்குப் எடுத்து போகவில்லை. கோட்டுக்குச் சென்று வழக்குப் பேசி தனக்குச் சொந்தமாக வரக்கூடிய பல மில்லியன் டாலர்களை இழப்பதற்கு தயாரில்லை. அவசரத்திலும், ஆத்திரத்திலும் சாதாரண பெண்களைப்போல் உணர்வு வயப்பட்டாலும் சிறிது நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவளது மூளையின் சிந்திக்கும் மூளையின் முன் பகுதிகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அவளை அமைதியாக்கும். ‘கமோன் ஷரன், நீ மற்றவர்கள்போல் அல்ல. இதற்காகவா உனது இளமைக் காலத்தை வயதான ஒருவனோடு வீணடித்தாய். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் உன்னை கீழே தள்ளி வீழ்த்திவிடும். கணவனைப் பிரிந்த மற்றய பெண்களைப்போல் அரசாங்கத்தின் பிச்சைப் பணத்திலும் மற்றவர்களின் அனுதாபத்திலும் வாழ்நாளை கடத்துவதற்கு பிறந்தவள் அல்ல. உனது அழகும், அறிவும் உன்னை ஒரு மகாராணி போல் வாழ்வதற்கு வழிகாட்டும்’ எனச் சொல்லி அவளிடம் சிந்தனையை தூண்டிவிடும். தன்னில் உள்ள நம்பிக்கை உசுப்பி விடப்படுவதால் விவாகரத்து என்ற விடயத்தை முற்றாக தள்ளிப் போட்டிருந்தாள்

அவுஸ்திரேலியாவில் விவாகரத்து என வரும்போது சட்டம் பெண்கள் சார்ந்து அவர்களுக்கு அதிக சொத்தையும் பணத்தையும் தருவதாக ஆண்களால் குறை கூறப்பட்டாலும் கிறிஸ்ரியனிடம் இருக்கும் சொத்துகள் தந்தை வழியாக அவனுக்கு பாரம்பரியமாக வந்தவை. ஷரனோடு இருந்த காலத்தில் சம்பாதித்தவை அல்ல என்பது மட்டுமல்ல, இவர்கள் திருமணமாக இருந்த நாட்கள் குறைவானவை என்பதால் பெரும்பகுதியான பணம் அவனிடமே இருந்துவிடும் என்பது ஷரனுக்கு தெரியும்.

சொத்து விடயமாக இப்படியான மன ஓட்டம் ஷரனிடம் இருப்பதை கிறிஸ்ரியன் புரிந்து கொண்டதால் மீண்டும் தன்னுடன் வந்து வாழும்படி வற்புறுத்தினான். இருவருக்கும் தெரிந்த நண்பர்கள் மூலம் தூதுவிட்டான். ஆரம்பத்தில் ஷரன் மறுத்தாலும், பின்பு சிந்தித்து பார்த்த போது மகனுக்காகவாவது கடைசித் தடவையாக ஒன்றாக வாழ்ந்து பார்ப்போம். தொடர்ச்சியாக மறுத்தால் கிறிஸ்ரியன் விவாகரத்துக் கேட்டு கோட்டுக்கு போவான். இதுவரையிலும் தனது தவறு என்பதால் பொறுத்துக் கொண்டு இருக்கிறான். இதைவிட சில காரணங்கள் ஷரனது மனமாற்றத்தற்கு காரணமாக இருந்ததை மறுக்க முடியாது.

வேறு எந்த ஆணும் தனியாக அவள் இருந்த காலத்தில் அவளது வாழ்க்கையில் நண்பனாகவேனும் தற்காலிகமாக வராதது அவளுக்கு நீண்ட உறங்காத இரவுகளைத் தந்தது. தனிமை கொடுமையானது. அதிலும் சிறுவயதிலே காதல் இன்பங்களை அனுபவித்த அவளுக்கு ஆண் துணை இல்லாமல் இருப்பது கொடிய வேதனையைத் தந்தது. சாதாரண இருபத்து எட்டு வயதான பெண்ணாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் மேல்பேனின் நைட் கிளப்புகளில் ஆண் துணை தேடி அலைய முடியாது. மூன்று வயது மகனுக்கு தாயாகவும் முழுநேர வைத்தியராகவும் இருக்க வேண்டிய பொறுப்பும் அவளால் உதறித் தள்ள முடியாத சுமையாக இருந்தது. கிறிஸ்ரியனுக்கு கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போம் என நினைத்தபடி அவனது அழைப்பை ஏற்றுக்கொண்டது ஒரு விதத்தில் அவளுக்கு அமைதியை தந்தது. கிறிஸ்ரியன் மகனோடும் அதிக நேரத்தை செலவிட்டாள். இந்தக்காலத்திலே சிட்னியில் நடக்கவிருந்த தொழிலோடு சம்பந்தமான மகாநாட்டுக்கு செல்ல விடுமுறை கேட்டு வைத்தியசாலைக்கு விண்ணப்பித்தது மட்டுமல்ல அவளால் வேலையிலும் அதிக கவனத்தை செலுத்த முடிந்தது. இந்தக்கால கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து நண்பர்கள் போல் நடந்தார்கள். ஒருவர் மீது ஒருவர் மனத்தளவில் ஆக்கிரமிப்பு நடக்காத நட்புரீதியான ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் வாழ்க்கை நடத்தியதால் ஷரனது வேலைகள் எதுவும் கிறிஸ்ரியனால் பாதிப்படையவில்லை. சந்தோசமாக வாழ்க்கை நடத்தினார்கள் என சொல்ல முடியாது என்றாலும் கணவன் மனைவியின் தாம்பத்தியம் அமைதியாக இருந்தது. ஷரனுக்கு தான்தான் தாம்பத்திய போரில் வென்றவள் என்ற நினைப்பு இருந்தது. இதனால் கிறிஸ்ரியனுடன் உடலுறவில் பாரபட்சமில்லாமல் அள்ளி வழங்கினாள். ஆண் உடலுறவில் துய்ந்து அமைதி கொள்ளும் போது மனைவியின் மற்றக் குறைகளை மறந்து விடுகிறான் என்பது அவளுக்கு தெரிந்திருந்தது. இந்தக் காலத்தில் மாக்கஸ் மிகவும் சந்தோசமாக இருந்தான். அவனுக்காக கிறிஸ்ரியன் நீண்ட விடுமுறை எடுத்து அவனுக்கு விருப்பமான பல இடங்களுக்கு கூட்டி சென்றான். தவறான பாதையில் சென்ற தனது வாழ்க்கைப் பயணம் மீண்டும் சரியான பாதையில் செல்வதாக இருவரும் எண்ணியதால் அது மனநிம்மதியை கொடுத்தது.

அவுஸ்திரேலியாவில் ஒரு வருடம் தொடர்ந்து வேலை செய்தால் நாலு கிழமைகள் விடுமுறை கொடுப்பார்கள் அப்பொழுது விடுமுறையை சம்பாதித்து கொள்வதாக கூறுவார்கள். அது வருடந்த விடுமுறை என சொல்லப்படும். வேலையில் சேர்ந்த விதம், பின்பு அந்த வேலையில் இருந்து ரிமதி பாத்தோலியசால் நீக்கப்பட்டது, பின்பு அதைத் தக்க வைத்துக் கொள்ள போராடியது என்பதோடு மெல்பேனில் சொந்தமாக வீடு வேண்டியபின் ஒரு உண்மையான ஆவுஸ்திரேலிய குடியேற்றவாசியாகியது என்பன ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலித் தொடராக நடந்தாலும் ஒரு தனிப்பட்ட ஒலிம்பிக் சாதனையாக தெரிந்தது. சாதாரணமான வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறுபவர்கள் எல்லாம் இப்படி பல தடைகளை கடக்க வேண்டுமென்றாலும் சுந்தரம்பிள்ளைக்கு தான் ஓடும் கார்ச் சக்கரத்தில் ஒட்டுப்பட்ட சுவிங்கம் போன்ற உணர்வு இக்காலத்தில் இருந்தது. சிறிது ஆசுவாசமாக குடும்பத்தை எங்காவது அழைத்து செல்ல முடியாது இருந்தது. இதனால் சில வருடங்கள் தனது வருட விடுமுறையை எடுக்காது தொடர்ந்து வேலை செய்தபோது ஒரு இடத்தில் இருந்து திரும்பி கடந்த காலத்தை அசைபோட பசுமாட்டுக்கு மரநிழல்போல விடுமுறை தேவையாக இருந்தது.

வாழ்க்கையில் எவரும் தனித்து நின்று சாதிப்பதில்லை. சுற்றி இருக்கும் பலரது அர்ப்பணிப்புகள் மீது தான் சாதனைகள்,வெற்றிகள் எங்கும் உருவாக்கப்படுகின்றன. சாம்ராச்சியங்கள் முதல் தனிமனிதரின் சிறு வெற்றிகள் சாதனைகள் என எதைச் சொன்னாலும் தனியாக நின்று ஒருவரால் சமூகத்தில் செய்யவில்லை. நண்பர்களான காலோஸ் போன்றவர்களது உதவியால் வேலையை திரும்பப் பெற்றதும் வீட்டை வேண்டுவதற்கு உதவிய ரியல் எஸ்ரேட் ஏஜன்ட் போன்றவர்கள் நன்றியுடன் அந்த விடுமுறைகால நினைவில் வந்து போனார்கள். சாருலதா நங்கூரம் போல் சுந்தரம்பிள்ளை தளும்பிய நாட்களில் வாழ்கையை ஓட துணை செய்தது போன்ற நினைவுகளை மனத்தில் நினைத்து அசைபோட அந்த விடுமுறை இடைவெளியை தந்தது.

விடுமுறையில் சுந்தரம்பிள்ளை நின்ற போது வீட்டில் பல விடயங்களை செய்ய வேண்டி இருந்தது. இந்தக் காலத்தில் வீட்டில் வளர்த்த பொன்னியின் பிரச்சனை மேலும் அதிகமாகியது. நாய்களுக்கு கொடுக்கப்படும் விசேட ரெயினிங் பொன்னிக்கு எதிர்பார்த்தது போல் பயனளித்தாக இருக்கவில்லை. வீட்டைச் சுற்றி உள்ள வேலி ஐந்து அடி உயரமானது. வேலியின் மேலும் அத்துடன் கேட்மீதும் இன்னும் ஒரு அடி உயரத்தில் தடுப்பு வேலியை வைத்து உயரத்தை கூட்டிய போது வீடு கிட்ட தட்ட அதிபாதுகாப்பான சிறைச்சாலை போல் தோற்றமளித்தது.. சிறைச்சாலையில் இருப்பது போன்ற தோற்றத்தையும் மன நிலையையும் பொன்னி என்ற இந்த பத்து கிலோ நாய் வீட்டில் உள்ளவர்களுக்கு உருவாக்கிவிட்டது.

அவுஸ்திரேலியாவின் வட பகுதியான குயின்ஸலண்ட் போன்ற இடங்களுக்கு கோடைகாலத்தில் மழை பெய்யும். ஆனால் விக்டோரியா மற்றும் நியு சவுத் வேல்ஸ் மாநிலங்களில் குளிர் காலத்தில் மழை பெய்யும். மெல்பேனின் மழைகாலம் தென்துருவ குளிர் காற்றையும் தோழமையோடு அழைத்து வீட்டின் வெளிப்பகுதிகளில் விளையாடும். குளிரும் மழையும் சேர்ந்து நடமாடும் இந்த நாட்களில் நகரத்தவர் சோம்பேறியாகி விடுவார்கள். வீட்டுத்தோட்ட வேலைகள், வெளிவேலைகள் நின்று விடும். பெரும்பாலான மெல்பேன் மக்கள் வீட்டுக் கண்ணாடி ஜன்னலால் எட்டிப் பார்பதுடன் நின்றுவிடுவார்கள். நாய்களுடன் வெளியே நடப்பது குறைவதால் அவைகளில் கொழுப்பு உடலில் சேகரிக்கப்பட்டு நிறை கூறிவிடும். அக்காலத்தில் நடக்கும் அவுஸ்திரேலிய உதைப்பந்தாட்டம் ஒரு சிலரை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்தாலும் மற்றவர்கள் தொலைக்காட்சியில் தங்கள் கண்களை ஒட்டி வைத்துக் கொள்வார்கள். குளிர்பிரதேசங்களான விக்டோரியாவில் வாழ்பவர்கள் வாழ்வின் ஓட்டத்தை குறைத்துக் கொண்டு வீடுகளின் உள்ளே குளிர்கால நெடும்பயணத்தை செய்யும் நத்தைகள் போல் வாழ்வார்கள். இதற்கு சுந்தரம்பிள்ளை குடும்பமும் விதிவிலக்கல்ல. வேலை நேரங்களைத் தவிர மற்றைய நேரங்களில் வீட்டினுள் கதகதவென இருக்கும் ஹீட்டர்களின் வெப்பத்தை அனுபவித்தபடி உள்ளே தஞ்சமாகினார்கள்.

விடுமுறை நாளில் சுந்தரம்பிள்ளை சமையலில் ஈடுபடுவதால் மற்றவற்றை மறந்து விடுவது வழக்கம். சமயலை ஒரு கலையாகவும், பொழுது போக்காகவும் எடுத்து அதில் தன்னை மறந்து விட்ட சுந்தரம்பிள்ளை அன்று சமையலை முடிந்த பின்பு வீட்டின் பின்பகுதியில் பொன்னியைத் தேடிய போது அங்கு அதைக் காணவில்லை. ஆயிரம் டாலர் பெறுமதியான மேலதிக காவலரணை துச்சமாக நினைத்து வெளியேறிவிட்டது. ஞயிற்றுக்கிழமை பாடசாலை விடுமுறையாதலால் எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். ஓடிய நாயை எங்கே தேடுவது என்று புரியவில்லை. வார நாட்களில் பாடசாலைக்குப் போயிருக்கலாம் என நினைக்கலாம். இன்று எவரும் அங்கிருக்கமாட்டார்கள் என்பதை விட பாடசாலை மணி ஒலிக்காத போது அங்கு நிச்சயமாக போகாது என்பதால் சுந்தரம்பிள்ளையும் காரை எடுத்துக்கொண்டு சகனுடன் பல இடங்களுக்குச் சுற்றினார்கள். சுற்று வட்டாரத்தில் உள்ள தெருக்கள், பூங்காக்கள் எனத் தேடி விட்டு வெறுங்கையோடு மீண்டும் வீடு வந்தான். சகனது ஆலோசனையின்படி எப்போதோ எடுத்த பொன்னியின் படத்துடன் காணவில்லை என எழுதி அவற்றில் பல பிரதிகளை சுற்றி இருந்த கடைகளிலும், மின்சாரக்கம்பங்களிலும் ஒட்டி விட்டு திரும்பி வீட்டுக்கு வந்தனர். பொன்னியைக் காணாததால் மனத்தில் ஏற்றபட்ட கிலேசம் இந்த முயற்சியின் பின்னால் சிறிது தணிந்து இருந்தது. விடுமுறை நாளானதால் சுற்றியுள்ள மிருக வைத்திய சாலைகளிலோ அல்லது நகரசபையினர் அடைத்து வைக்கும் இடங்களிலோ தேட முடியாது. வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற உணர்வில் வீட்டில் தொலைக்காட்சி முன்னால் இருந்த போது கதவு தட்டப்பட்டது. திறந்த போது இரண்டு வீடுகளுக்கு அப்பால் இருக்கு டோரத்தி வாசலில் நின்றார்.

‘உங்களது நாயை நான் அடுத்த தெருவில் கண்டேன்.’

சுந்தரம்பிள்ளையின் குடும்பம் அங்கு சென்று அவர்களது வீட்டின் கதவை தட்டிய போது ஒரு வயதான பெண் வந்தார். அவரை தொடர்ந்து பொன்னி வந்தது.

‘இது எங்கள் நாய்’

‘தெருவில் எங்களது காரில் அடிபட இருந்தது. நாங்கள் காரை நிறுத்தியதும் எங்கள் காரில் ஏறிவிட்டது நாளை திங்கள் கிழமையானதால் நகரசபையில் செய்தியை கொடுக்க இருந்தோம்.

‘இந்த பொன்னி வீட்டை விட்டு ஓடுவதே அதனது வேலையாகிவிட்டது. பலமுறை நடந்து விட்டது. என்றான் சகன்.

‘உங்களுக்கு நன்றிகள்.’அந்தப் பெண்ணுடன் அமைதியாக பேசி விடைபெற்றாலும் சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் இனிமேல் எதுவும் செய்து பிரயோசனம் இல்லை. பொன்னியென்று பெயர் வைத்ததும் பொருத்தமாகி விட்டது. பொன்னி ஆற்றைப் போல் தனது கடலில் தனது முடிவு வரும்வரைக்கும் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. பொன்னி காரில் அடிபட்டு கண்காணாத இடத்தில் துன்பப்பட்டு இறப்பதற்கு முன்பு நானே கருணைக்கொலை செய்து விட்டால் உத்தமம். ஆனால் இப்பொழுது இதைச் செய்ய வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இப்பொழுது சொல்லத் தேவையில்லை என நினைத்துக் கொண்டான்.
அன்று இரவு முழுவதும் பொன்னி வீட்டின் உள்ளே நின்றது.

‘இனிமேல் நாங்கள் பொன்னியை வைத்திருக்க முடியாது. எங்காவது காரில் அடிபட்டு தெருவில் இறப்பதற்கான சாத்தியம் உள்ளது. நான் திரும்பவும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்போகிறேன்.

‘அங்கு கருணைக்கொலை செய்வார்கள்.’ என்றாள் சாருலதா

‘அது பரவாயில்லை. அமைதியாக மரணம் சம்பவிக்கும். அடிபட்டு தெருவிலும் பாதி வாகன சக்கரத்தில் மிகுதியாக பாதையிலுமாக அலங்கோலமாக இறப்பதிலும் பார்க்க இது மேலானது.’

‘அதுக்கு அப்படி விதியென்றால் நாங்கள் என்ன செய்வது. எங்களது ஊர்களில் எல்லாம் இப்படி கருணைக்கொலை செய்வில்லைத்தானே. நாய்கள் இயற்கையாக இறக்கும் வரையும் உயிர் வாழ்ந்தன.’

‘நாங்கள் மட்டும் விதியை நம்பி மருந்து செய்யாது இருக்கிறோமா? எத்தனை விதமான மருந்து வகைகளை எடுத்துக்கொண்டு உனது அம்மா உயிர் வாழுகிறார். எங்களின் உயிரை நீடிப்பதற்கு முனையும் போது விதியை பற்றி நாங்கள் யோசிப்பது இல்லை. நீங்கள் சொல்லும் விதி நூறு வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் வாழும் மனிதரை சராசரியாக இருவது வருடங்களுக்கு முன்பாக கொண்டு சென்றது. இப்பொழுது சராசரரியாகஆண்கள் எழுபத்தைந்து வருடங்களும் பெண்கள் எண்பது வருடம் சீவிகிறார்கள். இதே போல்தான் நமது ஊரிலும் விதி மாற்றி எழுதப்படுகிறது. அக்காலத்தில் அறுபது வயது வாழ்வது சாதனையாக கொண்டாடப்பட்டது. இப்பொழுது நம்மவர்களே எழுபத்தைந்து வயதில் இரண்டாம் தீருமணம் முடிக்கிறார்கள்.’

‘இதற்கு மேல் நான் பேசி நீங்கள் கேட்கப் போவது இல்லை நீங்கள்தான் நாய் ஒன்று வேணும் என வீட்டுக்கு கொண்டு வந்தது. இப்பொழுது அற்ப ஆயுளில் அதை கொலை செய்ய முயற்சிப்பதும்’ என நறுக்கென வார்த்தைகளால் கொட்டி விட்டு அந்த இடத்தை விட்டு சாருலதா நகர்ந்தாள்.

அடுத்த நாள் திங்கள்கிழமை வேலைக்குச் சென்ற போது பொன்னியைக் கூப்பிட்டதுவும் காரின் உள்ளே வந்து முன்பக்க சீட்டில் இருந்து கொண்டு சுந்தரம்பிள்ளையின் கைகளை நக்கிக் கொண்டது.

இந்த நாய்க்குத் தன்னை கொலை செய்வதற்காக கொண்டு போகிறார்கள் என்பது தெரியாது. தனது நன்றியையும், அன்பையும் நக்கி காட்டுகிறது. இந்தப் பூமியில் மனிதன் இயற்கையையும் மற்ற உயிரினங்களினது பராமரிப்பையும் தனது அறிவின் வளர்ச்சியால் குத்தகைக்கு எடுத்துள்ளபோது அந்தக் கடமையை அவன் எவ்வளவு சரியாக செய்கிறான்? இயற்கையில் வனங்களை அழித்து வனவிலங்குகளை கொன்று தள்ளியிருக்கிறான். கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதனால் ஏற்பட்ட அழிவு மிகவும் பாரதுரமானது. திருத்தப்பட முடியாதாக இருப்பதை உணரந்துள்ளானா? அவன் செய்யும் முடிவுகள் இதுவரையும் சரியானவையா? மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறதா என்ற கேள்விகள் மனத்தில் எழுந்தன. இப்படியாக மனிதகுலத்தைப் பற்றியும் தன்னைப்பற்றியும் சுயவிசாரணையுடன் வேலைக்குச் சென்ற போது வைத்தியசாலையில் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

சில நாட்களின் முன்பு வித்தியாசமான பூனைக் காய்ச்சல் பல பூனைகளுக்கு ஒரேகாலத்தில் வந்ததால் அவைகளின் தொண்டையில் இருந்து எடுத்த சாம்பிள்கள்கள் பிரத்தியேகமான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த முடிவுகளின்படி ஒரு புதுவகையான வைரஸ், பூனைகளை தாக்கியுள்ளது என முடிவாகியதால் வைத்திசாலையில் பூனைகளுக்கு வைத்திய வசதிகள் ஒரு கிழமை நிறுத்தப்பட்டது. பூனைப்பகுதிகளும், அங்குள்ள கூண்டுகளும் விசேட இரசாயனத்தால் சுத்திகரிக்கப்பட்டு சிலநாட்கள் வெறுமையாக வைக்கப்பட்டன. வைத்தியசாலையில் வதியும் கொலிங்வுட் நாய்களின் பகுதியில் கடந்த இரு நாட்களாக அடைக்ப்பட்டடிருந்தது. அங்கிருந்த நாய்கள் கொலிங்வுட்டை பார்த்து இரவு பகலாக உறுமின. பொன்னியைக் கருணைக் கொலை செய்வதற்கு முன்பாக சிலமணி நேரம் நாய்க்கூட்டில் விடப்போன சுந்தரம்பிள்ளை கொலிங்வுட்டை பார்த்து ‘என்ன உனக்கு வந்தது’?

‘இந்த விசர் நாய்களுக்கு மத்தியில் இருக்கிறேன் நீயும் போதாதற்கு ஒரு குட்டி நாயைக் கொண்டு இங்கெ கொண்டு வந்திருக்கிறாய்’ என அலுத்துக்கொண்டது.

நேர் எதிராக இருந்த கூண்டில் அடைக்கப்பட்ட பொன்னி குலைக்கவில்லை. தலையைத் திருப்பி கொலிவுட்டை சினேகமாக பார்த்தது.

‘ ஏது இந்த நாய்? கொலிங்வுட் விடவில்லை

‘இது எனது நாய். தொடர்சியாக வேலி பாய்ந்து வீட்டை வீட்டு ஓடுகிறது. இதைத் தடுக்க சகல முயற்சிகளிலும் தோல்வி கண்டுவிட்டேன். இன்று கருணைக் கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டேன.;

‘நான் நினைக்கிறேன் நீ அவசரப்படுகிறாய்’ என தனது வழக்கமான பாணியில் கூறியது.
தனது முடிவில் சந்தோசம் அற்று, அதே வேளையில் வேறு வழி இல்லாமல் தள்ளப்பட்டதாக நினைத்துக்கொண்டிருந்த சுந்தரம்பிள்ளைக்கு இது எரிச்சலைக் கொடுத்தது.

‘இப்ப யார் உனது நினைப்பை கேட்டது. நீயே பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறாய். இந்த வைத்தியசாலையை கட்டி மேய்ப்பது போல நினைப்புடன் இருந்தாயே. உன்னிலையே கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த பூனைக்காய்ச்சலில் இருந்து எப்படி உயிர் தப்பினாய்? அது சரி எவ்வளவுகாலம் இந்த சிறைவாசம்?

‘ஐந்து நாட்களுக்கு

‘உன்னைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. முழு வைத்தியசாலையின் பூராயங்களை துருவிக்கொண்டு திரிந்த உனக்கு இது கஸ்டமாக இருக்குமே?

‘என் விதி உனக்கு நக்கலாக இருக்கிறது.’

‘என் வீட்டுக்கு வருகிறாயா?’

‘மகிழ்சியுடன் வருகிறேன். என்னேடு பொன்னியும் இருக்கட்டும். அந்த காலத்தில் வேலி பாயாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.’

பொன்னிக்கு மரணதண்டனை ஐந்து நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது.

சுந்தரம்பிள்ளை தியேட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும் ஷரன் வந்து அவசரமாக ‘இந்த நாய்க்கு அவசரமாக தொண்டைக்குள் ஏதாவது சிக்கி இருக்கிறதா என பார்க்க முடியுமா?’
அவளது வெண்ணிற மேல் அங்கி மேல் மார்போடு அணைக்கப்பட்டு சிறிய சிவப்பு நிற பொமரேனியன் நாய் இருந்தது. கொஞ்சலுடன் சிரிப்பு கலந்தபடி அவளது குரல் இருந்தது.
நிச்சயமாக இக்கால கட்டத்தில் சந்தோசமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

‘நாங்கள் மிகவும் பிசியாக இருக்கிறோம். அவசரமானது என்றால் மட்டும் செய்யமுடியும்.; . என்ன விடயம்?’ சாம் கேட்டது ஷரனுக்கு பிடிக்கவில்லை.

அவனை அலட்சியமாக ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து விட்டுச் சுந்தரம்பிள்ளையிடம் ‘ஏதாவது எலும்பு சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறேன். தொடர்ச்சியாக இருமியபடி இருக்கிறது’ எனச் சொல்லக் கொண்டு அந்த தியேடட்ரில் இருந்த பூனைக் கூடொன்றினுள் அந்தச்சிறிய நாயை வைத்தாள்.

‘தொற்று நோய் இருக்கலாமல்லவா’ எனச் சுந்தரம்பிள்ளை சொல்லிக் கொண்டிருந்த போது வெளியேறி விட்டாள்.

அவளது பின்னசைவுகளை பார்த்துக் கொண்டிருந்த சாம் ‘இவள் ஒரு விடயத்திற்கு மட்டும்தான் இலாயக்கு. நல்ல வேளை ஷரன் ஒருத்தியை மட்டும்தான் இந்த வைத்தியசாலை, ஏன் உலகமே தாங்கும். அப்பப்பா ஒரு நாள் கூட இவளோடு என்னால் சீவிக்க முடியாது. எப்படி கிறிஸ்ரியனால் சமாளிக்க முடிகிறது?’

‘கமோன் சாம் நீ ஆரம்பத்தில் இருந்தே ஷரனிடம் மதிப்பு வைத்தது இல்லை. அவளது நல்ல பகுதியை பார்த்தது கிடையாது. நான் நினைக்கிறேன் அவளது சிறுவயதில் வளர்க்கப்பட்ட விதத்தால் கொஞ்சம் இப்படி இருக்கிறாள்.’

‘அவளது நல்ல பகுதிகளை இரசித்துதான் சொல்கிறேன்’

‘உனக்கும் காலோசுக்கும் வேறுபாடில்லை சாம்’

‘ஆண்களை தனது தேவைக்கு பாவிக்க வேண்டுமானால் தேனொழுக பேசுவாள். தனது காலால், கைகளால் உராய்ந்தோ இல்லை கன்னத்தில் முத்தமிட்டோ அவர்களுக்கு உசுப்பேற்றுவாள். தனது வேலை முடிந்ததும் அப்படியே கழற்றி விட்டு போய் விடுவது இவையெல்லாம் அவளது நல்ல பகுதிகள் என நான் பார்த்திருக்கிறேன்’என ஏளனம் கலந்து கூறினான்.

‘இதை நீ பெரிதாக பார்க்கிறாய். சாம், இந்த மாதிரியாக எல்லா பெண்களும் ஏதோ ஒரு அளவு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உங்களைப் போன்ற ஆண்களும் காரணம். பெண்களை அவர்களின் மார்பின் அளவாலும் பின்னசைவையும் வைத்து மதிப்பிடும்போது அவர்களும் அதை உபயோகிப்பதில் தவறு இல்லைத்தானே?’

‘கமோன் சிவா, அவர்கள் உபயோகிப்பதை தவறு என நான் சொல்லவில்லை. அப்படியான பெண்களின் உபாசகன். அவர்கள் காலடிகளில் தவம் கிடக்கும் பக்தன் நான். ஆனால் இவள் தனக்கு தேவையான போது உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறிகிறாள். சில நேரத்தில் தன் அழகை, பாவனைப் பொருளாக்கிவிட்டு மற்றய நேரத்தில் புனித பொருளாக்கிறாள். இன்னும் தெளிவாக சொன்னைால் சில நேரத்தில் வாசித்துவிட்டு துாக்கிப்போடும் அன்றய பத்திரிகையாகிவிட்டு மறுநாள் வணக்கத்துக்குரிய வேதப்புத்தகமாகிறாள். தனக்கு தேவையாகினால் மார்லின் மன்றோ போலவும் தேவையற்ற போது மதர் திரேசாவாகவும் போடும் இரட்டை வேடம்தான் எனக்கு கண்ணில் காட்ட ஏலாது’

‘நீ மிகவும் கடுமையாக அவளை விமர்சிக்கிறாய்’

‘நான் ஒரு சம்பவத்தை கூறுகிறேன். நீ விடுமுறையில் இருந்த காலத்தில் நடந்தது. காலேசின் இத்தாலிய நண்பன் சேர்ஜியோவை உனக்குத் தெரியும்தானே’

‘நமது வைத்தியசாலைக்கு வந்து சிறிய ரிப்பேர் வேலை செய்பவரைப் பற்றித்தானே சொல்கிறாய்.?’

‘ஆமாம் அந்த சேர்ஜியோவுக்கு அறுபத்தைந்து வயது இருக்கும் இல்லையா?

‘ஆமாம்’

ஒரு நாள் மிகவும் இறுக்கமான துணியில் பாண்ட் போட்டுக்கு கொண்டு காரில் ஷரன் வந்து இறங்கிய போது அந்த கார் நிறுத்தும் இடங்களை வர்ணமடித்துக் கொண்டிருந்த சேர்ஜியோ வர்ணமடிப்பதை நிறுத்தி விட்டு ‘இன்று டின்னருக்கு நான் தயார்’ என ஒரு நகைச்சுவையாக கூறியிருக்கிறார். அப்பொழுது சிரித்து விட்டு பின்பு டாக்டர் ஆதரிடம் சேர்ஜியோவைப் பற்றி முறையிட்டிருக்கிறாள். இதனால் டாக்டர் ஆதர் சேர்ஜியோவை கண்டிக்க அந்த மனுசன் இப்பொழுது வேலைக்கு வருவதில்லை’

‘நான் சேர்ஜியோவை தவறு என்பேன்’

‘அப்படியானால் என் முதுகில் தடவியபடி சில மாதங்களுக்கு முன்பு ஷரன் உன் மனைவி அலுத்துவிட்டவில்லையா என கூறிவிட்டு வீக்கெண்ட் என்ன செய்கிறாய் என்று கேட்டாளே’

‘நீ அதிஸ்டசாலி’ என சிரித்துவிட்டு சுந்தரம்பிள்ளை அந்த பொமரேனியனை பெட்டிக்குள் வெளியே எடுத்து அதன் தொண்டையை மெதுவாக அழுத்திய போது அந்த நாய் மெதுவாக இருமியது. தேமாமீட்டரை எடுத்து குதத்தினுள் வைத்து பார்த்த போது நாற்பது பாகை சென்ரிகிரேட்டில் வெப்பம் இருந்தது.

‘சாம் இந்த நாய்க்கு சுவாச தொற்று நோய் உள்ளது. சரியாக சோதிக்காமல் எம்மிடம் ஷரன் தள்ளியிருக்கிறாள். போய் மூன்றாவது வைத்திய ஆலோசனை அறையில் உள்ள தேமாமீட்டரரை எடுத்துக்கொண்டு வா’

சாம் எடுத்துவந்த அந்த தேமாமீட்டரும் நாற்பது பாகை சென்டிகிரேட்டைக் காட்டியது.
நாய்க்குத் தொண்டைக்குள் எதுவும் அடைக்கவில்லை. சுவாசக்குழலில் தொற்று நோய் வந்துள்ளது என்பது உறுதியாகியது.

அந்த வழியால் மீண்டும் வந்த ஷரன் ‘ஏய் போய்ஸ், எனது நாயை மயக்கமருந்து கொடுத்து பரிசோதித்தீர்களா’?

‘அதற்கு மயக்கமருந்து தேவையில்லை. தேமாமீட்டர் தேவை’

‘என்ன சொல்கிறீர்கள்?’

‘நாற்பது டிகிரியில் வெப்பம் காட்டுகிறது. சுவாசத் தொற்று நோய் வந்துள்ளது.

‘நான் செக் பண்ணினேன். அந்த மூன்றாவது அறையில் உள்ள தேமாமீட்டரில் ஏதோ தவறு உள்ளது.

‘இதோ அந்த தேமாமீட்டர். அதால்தான் நாங்கள் வெப்பத்தை அளந்தோம்’

அந்த அழகிய முகம் சிவந்து சுருங்கியது, காற்றுப் போன பலுனைப் போல் ஆனால்
சில கணத்தில் மத்தாப்பு போன்ற அழகிய சிரிப்பால் அந்த ஆபரேசன் தியேட்ரை நிறைத்துவிட்டு ‘ஓகே போய்ஸ் இந்த முறை நீங்கள் வென்றுவிட்டீர்கள். எனது தவறை ஏற்றுக் கொள்கிறேன்’ பொதுவாக சொல்லி விட்டு சுந்தரம்பிள்ளையின் கைகளில் கிள்ளிவிட்டு சென்றாள்.

‘சிவா எந்தப் பெண்ணிடமும் நான் பயந்ததில்லை. ஆனால் ஷரனை கண்டால் நான் விலகிப் போவதன் காரணம் எந்த நேரத்தில் எப்படி மாறுவாள் என கணிக்கமுடியாது. மேல்பேனில் நாலு பருவகாலமும் ஒரே நாளில் வருவது போன்று அவளது குணங்கள் மாறக்கூடியது. அவளுக்கு உன்னில் ஒரு மென்மையான இடம் உள்ளது. கவனமாக நடந்து கொள். எப்பவாவது ஒரு நாள் உன்னை மாட்டுவதற்கு திட்டம் வைத்திருப்பாள். அவள் மீது எந்த காலத்திலும் இரக்கமோ, மோகமோ ஏற்படுத்திக் கொள்ளாதே. உன்னைப் பொறுத்தவரை அவளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.’

‘இந்த விடயத்தில் தங்களை நான் குருவாக ஏற்றுக்கொண்டு வருடங்களாகி விட்டது. உங்கள் உபதேசங்களை முழு மனத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். ஷரனை பொறுத்தவரையில் கணவனோடு சந்தோசமாக சேர்ந்து இருக்கிறாள் போல் தெரிகிறது. நமக்கெல்லாம் வலை வீசமாட்டாள் என நினைக்கிறேன். ஆனாலும் என்னால் முடிந்தவரை சகவைத்தியர் என்ற உறவுக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்’என சிறிது நகைச்சுவை கலந்த குரலில் பதில் சொன்னான் சுந்தரம்பிள்ளை.

‘நான் சொல்லிய விடயங்கள் நகைச்சுவையில்லை என்பதை நீ உணரும் காலம் வரக்கூடாது என நான் அல்லாவை பிரார்த்திக்கிறேன்’ என சிறிது கோபத்துடன் தனது கடவுளின் பெயரை முதல் முறையாக பாவித்து பதில் கூறினான்.


அசோகனின் வைத்தியசாலை 25

நோயல் நடேசன்வைத்தியசாலையில் சுந்தரம்பிள்ளைக்கு ஓய்வு நாளானதால் மெல்பேனின் வடபகுதியில் வசிக்கும் நண்பனிடம் சென்றுவிட்டு திரும்பி வரும்போது வைத்தியசாலையுள்ளே சென்றான். எப்பொழுதும் வேலை செய்யும் நாளிலும் பார்க்க வேலை செய்யாத நாளில் சென்று , நண்பர்கள் வேலை செய்வதைப் பார்ப்பது திருப்தியைத் தரக்கூடியது. மனிதர்களுக்கு வேலை செய்வது உடலோடு அல்லது மூளையோடு மட்டும் சம்பந்தபட்டது அல்ல. வேலை தொழிலாக மாறி ஆன்மாவோடு சேர்ந்து விடுகிறது. வேதனம் இரண்டாம் பட்சமாகிறது. வேலை இல்லாமல் இருப்பதை நாகரீகமான மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியாது. மனித வேலையை உடலுழைப்பு என்ற சிறிய வரைவிலக்ணம் கொடுத்து இலகுவாக வரைவு செய்ய முயற்சித்த பொதுஉடமைவாதிகள் தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள்.

அதேவேளையில் வேலையின் பொறுப்பு என்ற சுமை மனிதனின் தலையில் ஏற்றி விடப்படுகிறது. இந்தக் சுமை நிறைமாதப் பெண்ணின் வயிற்றுப் பாரம் போன்றது. இதனால்தான் வேலை முடிந்தபின் பிரசவம் முடிந்தது போன்ற திருப்தி மனத்திலும் உடலிலும் ஏற்படுகிறது.

சுந்தரம்பிள்ளை வேலை இல்லாமல் இருந்த அந்த சுதந்திரமான விடுமுறை நாளில் நண்பர்கள் வேலை செய்வதைப் பார்ப்பது அவனுக்கு திருப்தியை கொடுத்தது. சிலரது முகங்களில் வேலையின் அழுத்தம் தெரியும். சிலர் சிரித்தபடியே வேலை செய்வார்கள். ஒரு சிலருக்கு வேலையின் அழுத்தத்தோடு வீட்டில் உள்ள பிரச்சனை மேலதிகமாகத் அவர்கள் முகங்களில் தெரிவதுடன் வேலையில் தவறுகளை இழைத்து விடுவார்கள். சில தவறுகள் பிற்காலத்தில் நினைத்து இரைமீட்டி பார்க்கும் போது நகைச்சுவையாக இருக்கும்.

ஷாலற் என்ற பெண் வைத்தியர் பற்றிய சில கதைகள் அவர் வைத்தியசாலையை விட்டு போன பின்பும் ஆவி போல் வைத்தியவாலையில் உலாவிக் கொண்டிருக்கும். தேநீர் இடைவேளைகள், மற்றும் மதிய உணவு இடைவேளைகளில் அவை உணவுடன் கலந்து கலந்து பரிமாறப்படும். இதில் வேடிக்கையான ஒன்று பூனை சம்மந்தப்பட்டது. ஒரு நாள் பிரேத அறையில் ஒரு பூனையின் சடலம் எரிப்பதற்காக காத்திருந்தது. அந்தப் பகுதிக்கு பொறுப்பான மேவிஸ் , அதை எடுத்து வழக்கம் போல் செங்கல் மேடையில் போட்டு எரிக்க முற்பட்ட போது அந்த பூனையின் குதவாசலில் உயிரோடு இருந்த போது உடல் வெப்பத்தை கணிப்பதற்காக செருகப்பட்ட தேமாமீட்டர் இன்னமும் அங்குகிருந்தது. இதை பார்த்தும் இவ்வளவு பொறுப்புணர்வு அற்று இந்தப் பூனையை கடைசியாக வைத்தியம் பார்த்த வைத்தியர் யார் என துருவி துப்பறிந்து பார்த்தபோது வைத்தியர் சாலற் என அறிந்ததும் அதை தேனீர் அறையில் சோகத்தோடு இருந்த சாலட்டிடம் சொன்ன போது அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பி தோளை அலட்சியமாக அசைத்துவிட்டு ‘ மேவிஸ் நேற்று இரவு என்னை படுக்கை அறையில் நிர்வாணமாக பார்த்த பின் கூட எனது காதலன் என்னை விட்டு விலகி தனது புதுக்காதலியுடன் போய்விட்டான் என சோகத்தில் இருக்கிறேன். இந்த நேரத்தில் இறந்து போன பூனையின் குதவாசலில் எதை வைத்தேன் என எனக்கு சிந்திக்க நேரமில்லை’ என்றாள். அவளது அலட்சியத்தால் ஆத்திரமடைந்த மேவிஸ் ‘அவனிடமும் எதையாவது இப்படித்தான் மறந்திருப்பாய். அவன் அதை தாங்க முடியாது விலகி சென்றுவிட்டான்’ என சொல்லியபடி சென்றார்.

நல்லவேளை ஷாலட் இப்பொழுது இந்த வைத்தியசாலையில் வேலை செய்யவில்லை.
இதைப் போல மேலும் ஒரு ஆண் வைத்தியர் அடிக்கடி நினைவு கூரப்படுவார். அவரது செயலில் முக்கியமானது ஒரு நாள் ஆபிரேசன் செய்யும்போது தற்செயலாகத் தட்டுப்பட்டு கீழே விழுந்த ஆபிரேசனுக்கான உபகரணத்தை மீண்டும் எடுத்து பாவித்தார். இதனால் அந்த நாயில் அவர் செய்த ஆபரேசன் புரையோடி புண் வந்தது. ஆபிரேசன் செய்த போது கூட இருந்து உதவிய நேர்ஸ் புரையேறிய காரணத்தை வெளியே சொல்லியதால் அந்த மிருக வைத்தியரை மிருக வைத்தியசபை விசாரணை செய்து தற்காலிகமாக அவரது வைத்திய லைசன்ஸ் நிறுத்தப்பட்டது. இக்காலத்தில் கணவன் – மனைவி பிளவால் விவாகரத்து நெருக்கடியில் அவர் மனமுடைந்திருந்தார்.

சுந்தரம்பிள்ளையின் காலத்தில் சில மாதங்கள் மட்டுமே வேலை செய்த அண்டனியின் கதை புது மாதிரியானது. அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலையில் வேலை செய்யும் பாட்டாளி ஆண்களினது வாய்களில் தூசண வார்த்தைகள் சாதாரண வார்த்தைகளுடன் அதிக அளவில் கலந்துவரும். வெத்திலை பாக்கு சுண்ணாம்பு போல் கலந்து சிவப்பு துப்பல் போல் வெளிவரும். சாதாரண வார்த்தையும் தூசணவார்த்தையும் தங்க ஆபரணத்தில் செப்பு சேர்க்கப்பட்டது போன்றில்லாமல் இரண்டும் சம அளவில் இருக்கும். இதைச் சிலகாலம் ஒரு பெயின்ட் பக்டரியில் வேலை செய்த போது சுந்தரம்பிள்ளை அனுபவித்திருந்தான். இந்த வைத்தியசாலையில் முக்கியமாக வைத்தியர்களினது வாயில் அப்படி வருவது குறைவு. புதிதாகச் சேர்ந்த அண்டனி அதில் வித்தியாசமாக இருந்தான். நீலக்கண்களும் பிளட்டின் கலரான தலைமயிரும் கொண்டு ஸ்கண்டிநேவியர்கள் போன்ற தோற்றமுள்ள அண்டனி மெல்பேனில் வசதி படைத்தவர்கள் உள்ள கிழக்குப் பக்கத்தில் பிறந்து வளர்ந்தவன். எப்படி இப்படியான ஆங்கிலம் வந்தது என காலோசிடம் கேட்டபோது பெற்றோர்கள் இருவரும் இராஜதந்திகரிளாக ஐரோப்பாவில் வாழ்ந்த போது அண்டனி மெல்பேனில் பாட்டா, பாட்டியுடன் தங்கிப் படித்தான். அப்போது நண்பர்களின் சேர்க்கையால் இப்படிப் பேச்சு வந்தது என்றான் காலோஸ்.

அண்டனிக்கு தூசணமான வார்தைகள் ஆத்திரத்தில் மடடும் வருவதில்லை. சந்தோசம், துக்கம், சோர்வு என எல்லா மன நிலைகளிலும் வரும். வஞ்சகமில்லாமல் அன்னியோன்னியமாக தூசணவார்த்தைகளினால் மனம் திறந்து உரையாடும் போது கேட்பதற்கும் நல்லாகத்தான் இருக்கும். மேலும் அந்த துஷணவார்த்தைகளை கரடு முரடாக இல்லாமல், சீவி செதுக்கி கூராக்கி சிற்பி போல் வித்தியாசமாக உச்சரிப்பான். கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அப்படியான வார்த்தைகள் ஒரு நாள் அண்டனியின் வேலைக்கு உலை வைத்தது. ஒரு நாயைக் கொண்டு வந்த முதிய பெண் ஒருவரிடம் மருந்து கொடுக்கும் முறையை பல முறை கூறியபோதும் அவருக்குப் புரியவில்லை. தூசணவார்த்தையுடன் செகிடு போல் இருக்கிறது என மெதுவாக பக்கத்தில் நின்ற நேர்சுக்கு கூறினாலும் அந்த வார்த்தையைக் கேட்ட பெண் அதிர்ச்சியடைந்து நிர்வாகத்தில் முறைப்பாடு செய்ததால் அண்டனியின் வேலை போனது. அண்டனியின் வார்த்தைப் பிரயோகங்கள் மாறும் வரையும்; நிரந்தரமாக வேலையில் இருப்பது கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் சுந்தரம்பிள்ளை, காலோஸ் போன்றவர்களுக்கு அவன் மேல் அனுதாப உணர்வு இருந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் அதிகம் வாழும் குடியிருப்புகள் உள்ள வட அவுஸ்திரேலிய பகுதியில் மிருக வைத்தியராக வேலை கிடைத்துப் போன போது அண்டனி இனி பிழைத்துக் கொள்வான் என ஆறுதல் அடைந்தார்கள். ஆதிவாசிகள் தூசண வார்தைகளையிட்டு கவலைப்பட்டாலும் வைத்தியர்கள் அங்கு செல்வது குறைவனதால் எப்படியும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம்.

வைத்தியசாலைக்கு உள்ளே சென்றதும் சுந்தரம்பிள்ளை முதலில் கண்ட காட்சி கொலிங்வூட். குறுக்காக அடித்துவிட்ட சாம்பல் நிறப் பந்து மாதிரி கொரிடோரில் ஓடியது.

‘என்ன கொலிங்வூட் குறுக்கால போகிறாய்?’

‘டீராமா குயினை பார்க்க வந்தாயா? இல்லை உனது பிளட்டோனிக் காதலி போலினை கண்ணில் தொட்டு பொட்டு வைக்க வந்தாயா?’

‘உனக்கு நல்ல விடயங்களைப் பேசத் தெரியாது’

ஒரு விதத்தில் கொலிங்வூட் சொன்னதில் உண்மையிருந்தது. இந்த இரண்டு பெண்களும் ஏதோ விதத்தில் சுந்தரம்பிள்ளையின் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த இருவரும் இன்று ஒன்றாக வேலை செய்கிறார்கள் என்பது சுந்தரம்பிள்ளைக்குத் தெரிந்திருந்தது.

‘நான் சொன்னதில் பொய்யில்லைதானே? உண்மையைச் சொல்லு’ என மீண்டும் கொலிங்வூட்

‘உனக்குப் பதில் தரவேண்டியது இல்லை’ என நகர முயன்ற போது இரண்டு பெண்களும் எதிரில் ஒன்றாக வந்தார்கள். இருவரில் யார் முகத்தைப் பார்ப்பது என்பது சுந்தரம்பிள்ளைக்குக் கடினமாக இருந்தது.

‘என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது சிவாவுக்கு’ எனக் கூறி கழுத்தில் ஷரன் கையை வைத்ததும் போலின் விலகி நின்று கண்ணைச் சிமிட்டினாள்.

‘பார்க்காவிட்டாலும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்’நகைச்சுவையாக சொன்னபோது அந்த கொரிடோரில் ஒருவர் பூனையுடன் வந்தார்.விலத்தி வழி விட்ட போது இரண்டு பெண்களும் தங்கள் பங்குக்கு முதுகில் தட்டி விட்டு வேலைக்கு போய்விட்டார்கள்

இரண்டு பெண்களினதும் கேளிக்கையான சீண்டலால் பாதிக்கப்பட்டாலும் தன்னைத் சுதாரித்துக்கொண்டு நேரடியாக நாய்கள் பகுதிக்கு சென்றான் சுந்தரம்பிள்ளை. நேற்று சுந்தரம்பிள்ளை செய்த ஆபிரேசனில் ஒரு ஜெர்மன் செப்பேட் நாயின் மண்ணீரல் அகற்றப்பட்டது அதில் ஏராளமான இரத்தம் செலவாகி இருந்தது. இதனால் வேறு நாயின் இரத்தம் ஆபரேசன் செய்த நாய்க்கு ஏற்ற வேண்டி இருந்தது.

பல தப்பியோடிய நாய்கள் இந்த வைத்தியசாலைக்கு மெல்பேன் நகரத்தின் நாலாபக்கங்களிலும் இருந்து கொண்டு வரப்பட்டு அவற்றில் புதிய சொந்தக்காரர்களை சுவீகரிக்க முடியாத நாய்கள் கருணைக்கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவற்றில் இருந்து இரத்தத்தை எடுத்து சேமித்து வைக்கப்படும். இந்த நாய்களில் மனிதர்கள் போல் பல வகையான குறுப்புகள் இருந்தாலும் முதல் முறையாக இரத்தத்தை ஏற்றுக்கொள்வதால் எந்த எதிர் விளைவுகளும் ஏற்படாது.

ஆபிரேசன் செய்யப்பட்ட ஜெர்மன் செப்பேட் நாயைப் பார்க்கச் சென்ற போது அந்த நாய் ஆச்சரியப்படத்தக்க வகையில் எழுந்து நின்று உணவு உண்டு கொண்டு நின்றது. அந்த நாய்க்கு உணவு கொடுத்துக் கொண்டு ஜோன் நின்றான். குனிந்து உணவு கொடுத்தவனது கால்கள் வழக்கத்திலும் மாறாக அதிகம் பிரிந்து நிலத்தில் பாவியபடி இருந்தது. இடுப்புவலி உள்ளவர்கள் கால்களை பிரித்து தங்களை பாலனஸ் செய்வது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

சுந்தரம்பிள்ளை வந்த சந்தடியைக் கேட்டு திரும்பிய ஜோன் ‘என்ன வீடுமுறை நாளில் வீட்டில் இருக்க முடியவில்லையா?’

‘அதை விடு. இரவு மிஷேலால் அதிக தொந்தரவா? ஏன் இப்படி காலை விரித்துக்கொண்டு நிற்கிறாய்?

ஜோனிடம் சிரிப்பு மெதுவாக உதடு பிரிந்து பதிலாக வந்தது.

அந்தச் சிரிப்பில் வழமையான ஜோனைக் தெரியவில்லை. வழமையாகச் சிரிக்கும் போது பல்லுடன் அவனது சிவந்த முரசுகள் தெரியும். அத்துடன் சிறிது சத்தமும் சேர்ந்தே வரும்.

‘உங்களுக்குத் தெரியாதா?’

‘என்ன தெரியாது?

‘எனக்கு எம். எஸ்’

‘அது என்ன எம் எஸ்?’

‘மல்ரிப்பிள் கிளிரோசிஸ்’

அதைக் கேட்டதும் சுந்தரம்பிள்ளையின் சப்த நாடிகளும் அடங்கிவிட்டன. இந்தக் கொடிய வியாதி முப்பது வயதான ஜோனுக்கு எப்படி வந்தது? முட்டாள்தனமாக அவனுடன் மிசேலை இழுத்து நகைச்சுவையாக பேசியது எவ்வளவு அநாகரிகமானது? ஆறுதல் வார்த்தைகளோ அனுதாப வார்த்தைகளோ அவனுக்குப் பிரயோசனம் தராது. எனவே அவற்றைச் சொல்லி அவனது உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை. ஜோன் யதார்த்தவாதி. தனது எஞ்சிய காலத்தில் நன்றாக இருக்கும் காலத்தை வேலையில் கழிப்பதற்காக வந்து வேலை செய்கிறான்.

‘எப்ப நடந்தது?’

‘நீங்கள் வருட விடுமுறையில் நின்ற போது’

‘எனக்கு ஒருவரும் சொல்லவில்லை.

‘எல்லோருக்கும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டதால் பேசமுடியாமல் இருந்திருக்கும்’

அதிர்ச்சி என்பது ஒரு புறம். மற்றது தனிப்பட்ட விடயம் என நினைத்து இருக்கலாம். ஜோனுக்கு திருமணம் நடந்து சில வருடங்கள்தான் ஆகியுள்ளது. இளமையின் விளிம்பில் இன்பங்களை அனுபவிக்க நினைக்கும் வயதில் இப்படியான நிலை இவனுக்கு ஏற்பட்டிருக்க கூடாது. இங்கே இவனுக்கு ஏற்பட்ட வியாதிக்கு காரணமாக எதை நம்புவது ? இவனது விதி என இலகுவாகச் சொல்வதா? சாதாரண மனிதரின் மனத்தில் தோன்றும் பதில் இலகுவாக விடையைத் தேடும். ஆனால் வைத்தியம் அறிந்த சுந்தரம்பிள்ளையால் அப்படி இலகுவான சமாதானம் தேடமுடியவில்லை.

மல்ரிப்பிள் கிளிரோஸ் பற்றிய மருத்துவ விபரம் மனத்தில் ஓடியது. நண்பனது நிலையையிட்டு அனுதாபத்துடன் இந்த கொலைக்கார நோய் எப்படி ஜோனுக்கு வந்தது என்பது புதிராக இருந்தது.
மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் தொடர்ச்சியாக பல அவயவங்களின் தொழில்கள் பாதிக்கப்படும். அதிலும் இளைய வயதில் உள்ளவர்களுக்கே இந்த நோய்வரும். பலன்ஸ் பண்ணி நிற்பது, வேலைகளைச் செய்வது, அதை விட பேச்சு என்பன தொடர்ச்சியாக பாதிப்படையும். தற்போதய மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது. சில வேளைகளில் சில மருந்துகள் நோயின் தாக்கத்தின் வேகத்தை குறைக்கலாம். இதைவிட இந்த நோயால் ஏற்படும் மன அழுத்தம் மிகவும் பாதிப்பானது.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாக செயல்படும் சக்தியை இழந்து மற்றவர்களின் பரமரிப்பில் தங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் போது என்ன நடக்கப் போகிறது என்பது அடுத்த கேள்வியாக எழுகிறது. மிஷேல் எப்படி ஜோனை பராமரிக்கப்போகிறாள்? சில வருடங்கள் மட்டுமே பிணைத்த அவர்களது கல்யாண பந்தம் எவ்வளவு பலமானது? இவனைத் ஒதுக்கித் தள்ளிவிட்டு வேறு துணையைத் தேடிப் போவாளா? பலகாலமாக கரடு முரடான மோட்டார் சைக்கிள் குழுவில் அங்கத்துவமாக இருந்தவள் என்பதால் எப்படி இருப்பளோ. இப்பொழுதும் ஜோனிடம் சிலவேளையில் வேடிக்கையாக முரட்டுத் தன்மையாக நடந்திருப்பதை சுந்தரம்பிள்ளை பார்த்திருக்கிறான்.

இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களில் வைத்தியசாலையில் ஜோனுக்குப் பிரியாவிடை வைத்திருந்தார்கள். வந்தவர்கள் எல்லோரும் சோகத்துடன் இருந்தார்கள். ஆனால் ஜோன் மட்டும் சிவந்த முரசு தெரிய சிரித்துக் கொண்டு பழைய ஜோனாக சக்கர நாற்காலியில் வலம் வந்தான். நோய் அவனை அசுர வேகத்தில் சுனாமி போல் தாக்கி அவனைச் சக்கர நாற்காலிக்குத் தள்ளிவிட்டது. அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு ஜோன் வந்துவிட்டான்.

இப்படி மாறாத உயிர்க்கொல்லி நோய் ஒன்று தாக்கும்போது அதிர்ச்சி, ஆத்திரம், மனஅழுத்தம், பின்பு புரிந்துணர்வாக வாழ்த்தல் என்ற படிமுறைகளை மனிதமனம் கடந்து செல்கிறது என்பார்கள். அதில் கடைசியாக புரிந்துணர்வு நிலைக்கு துரிதமாக ஜோன் வந்தது சுந்தரம்பிள்ளையின் மனத்திற்கு ஆறுதல் அளித்தது.

—–

மனக்கவலை தரும் விடயங்கள் தனித்தனியாக வருவதில்லை. அவை இரட்டையாக அல்லது மூன்றாக வருவதைச் சுந்தரம்பிள்ளை தனது அனுபவத்தில் கண்டிருக்கிறார்ன். அந்தக் கவலையான விடயமும் விடுமுறையில் இருக்கும் போது நடந்தது. கொலிங்வுட்டுக்கு சிறுநீரகத்தில் நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது தீவிர வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சாமிடம் இருந்து தொலைபேசி வந்ததும் உடனே வைத்தியசாலைக்கு வந்தான்.

குழாயின் வழியே சேலையின் ஏற்றப்பட்டு அதோடு இணைக்கப்பட்ட மெசின் பீப் பீப் செய்து கொண்டிருந்தது. ‘என்ன கொலிங்வுட் நல்லாகத்தனே இருந்தாய். நான் லீவு போடுகிறேன் என்றதும் உனக்கு, ஜோனுக்கு எல்லாம் பெரிய நோயாக வந்து விட்டது. உங்களுக்கெல்லாம் காய்ச்சல், தடிமல் என சிறு நோய்கள் வராதா? என்ன நடந்து?’

‘எல்லாம் காலோசால் வந்தது. அந்த மனிதனைக் கொரிடோரில் கடந்து போகும் போது எனக்கு வாந்தி வந்தது. அந்த மனிதர் அதைப் பார்த்து விட்டு அப்படியே என்னை பிடித்து வைத்து இரத்தத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியபின் பின் எல்லோரும் எனக்குச் சிறீரகம் போய்விட்டது எனச் சொல்லி, இப்படி ஒரு கூட்டில் அடைத்து விட்டு இந்த மிசினைக் கொழுவி விட்டார்கள். அதை விட எல்லோரும் வந்து நான் மரணமடைய சிலகாலம் இருப்பதாக என்மேல் பரிதாபமாக நலம் விசாரிக்கிறார்கள். என்னைச் சமீபமாக இதுவரை நெருங்காதவர்கள் எல்லாம் ஆரத்தழுவி தழுவி முத்தம் கொடுக்கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் வாசனைத்திரவியங்கள் எனக்குத் தும்மலைத் தருகின்றன. பலரது லிப்ஸ்ரிக் என்னில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நான் நாக்கால் துடைத்துச் சுத்தப் படுத்த வேண்டியது ஒரு சுமையாக இருக்கிறது. முன்போல் வளைந்து நெளிந்து சுத்தப்படுத்த உடம்பு இப்பொழுது இடம் கொடுக்கவில்லை. இந்தமாதிரியான கவனிப்புகள் நோயை விட மோசமாக இருக்கிறதால் என்னால் தாங்க முடியவில்லை. எனக்குப் பிடித்காதது மற்றவர்கள் என்னில் காட்டும் பரிதாப உணர்வு’

‘உன்பாடு அதிஸ்டம்தான். உன் மேல் பெண்களின் முத்தமழை பொழிகிறது என்று சொல்லு’

‘நக்கலா? என்னுடைய நிலமையை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.’

‘நக்கல் இல்லை. உண்மையில் உனக்கு இப்பொழுது பதினைந்து வயது. இது மனிதர்களில் எண்பத்தைந்து வயதுக்கு சமமானது. இந்த வயதான முதியவரை எத்தினை பெண்கள் முத்தமிடுவார்கள். விதையில்லாமல் போனாலும் பெண்களிடம் செல்வாக்கு உனக்கிருக்கிறது.’

‘உனது பிளட்டோனிக் காதலி போலின்தான் அடிக்கடி உதட்டால் முத்தமிட்டது.’

‘பார்த்தாதையா எனக்கு இல்லாத அதிஸ்டம் உனக்கு கிடைத்திருக்கிறது. அதையிட்டு மகிழ்ச்சியடைவதையிட்டு ஏன் கவலைப்படுகிறாய்?’

‘எனது இரத்தப் பரிசோதனை அறிக்கையை பார்த்தாயா? என்ன நினைக்கிறாய்?

‘உனக்கு மட்டுமல்ல எல்லா பூனைகளுக்கும் இந்தச் சிறுநீரக பாதிப்பு வருவதற்கு காரணம் அதிக புரதம் உள்ள சாப்பாட்டைத் தின்பதால் அதிக அளவு யூரியா உருவாக்கப்பட்டு சிறுநீரகத்திற்கு அதிக வேலை வாழ்நாள் முழுவதும் கொடுக்கப்படுகிறது. தற்போதய நிலையில் உடன் மரணம் இல்லை என்பதால் பயப்படவேண்யது இல்லை. இது குளிர்காலமானதால் நீ இன்னும் உயிர் வாழ்வாய்’

‘எத்தனை மாதம் கணக்குப் போடுகிறாய்?’

‘என்ன மனிதர்கள் மாதிரி மரணத்தை வெல்ல முயற்சிக்கிறாயா?

மரணத்துக்கான காலத்தை எதிர்பார்ப்பதும் அதைப் புரிந்து கொள்ள முயல்வதும் மரணத்திற்காக பயப்படுவதும் மனித இயல்வு. ஆனால் மிருகங்கள், மனிதனில் இருந்து இந்த மூன்றால் வேறுபடுகின்றன. மரணம் என்பது எதிர்பாராதது. ஆனால், எங்கோ காத்திருக்கும் என்பது மனிதர்களுக்கு ஆதிகாலத்திலே புரிந்திருக்கிறது. எப்பொழுது சம்பவிக்கும் என்று புரியாத போதும் வாழ்வுக்கு மரணமே இறுதிப்புள்ளி என்பதால் அதைத் தள்ளி வைப்பதற்காக ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் மருந்து வகைகளை தான் வாழும் சூழலில் தேடிக் கொண்டு இருக்கிறான். இதன் தொடர்ச்சியே இக்காலத்தில் முன்னேறிய வைத்தியம். ஒரு நூறு வருடத்தில் மனிதனின் வாழ்வை இருபது வருடத்துக்கு மேல் தள்ளி வைத்துள்ளது. இந்த மரணத்துக்கான பயம் மனித நாகரீகத்தை மேம்படுத்த முக்கிய காரணமாக இருந்தது. மரணம் அடைவதற்கு முன்பு வசதியாகவும் வாழ்க்கையின் இன்ப உணர்வுகளையெல்லாம் அடைந்து விடவேண்டும் என்ற வேகம் செவிப்புலனுக்கும் கண் பார்வைக்காகவும் கலைகளையும் வாழ்வின் வசதிக்காக வீடுகள் பொதுக் கட்டிடங்கள் என எல்லாவற்றையும் கட்டினான். நாவின் ருசிக்காக உணவுகள் என உருவாக்கியதும் ஆதிமனிதன் ஓரு இலட்சம் வருடங்களின் முன்பு தொடங்கிய முயற்சிகளின் நீட்சியே, தற்போது நாம் பார்க்கும் நாகரீகம். மனிதர்கள் ஆதியில் இருந்து தனது மரணத்தைப் புரிந்து கொள்ளுவதனால் மரணம் ஒரு சடங்காக மாறி அது கலாச்சாரத்தின் ஒரு கூறாக மனித நாகரீகத்தின் தொடர் கதையாகியுள்ளது. ஆதிகால மனிதனில் இருந்து இக்கால மனிதன் வரை மரணத்தைப் புறக்கணிக்கவோ ,வெல்லவோ முடியவில்லை. சமயங்கள் மனிதனின் இருப்பையும் அவனது அகத்தையும் ஒறுத்து மரணத்தை புறக்கணிக்க முனைந்தன. அதற்கு மாறாக மரணத்தை வெல்ல மக்கள் சமயத்தை துணைக்கு அழைக்கிறர்கள். கௌதம புத்தர் தன்னிடம் மகனை இழந்து வந்த பெண்ணிடம் மரணம் நடக்காத வீடு ஒன்றில் இருந்து கடுகைக் கொண்டு வரும்படி கூறியதின் மூலம் இறப்பு நிதர்சனமானது என்று சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் மரணத்தைத் தடுக்க அந்த சாக்கிய புத்தரிடம் மன்றாடும் மனிதர்கள் ஏராளம். கோயில்களுக்கு செல்பவர்களும் மரணத்தை வெல்ல சாமியார்களைத் தேடுபவர்களும்தான் இரண்டாயிரம் வருடங்கள் கடந்தும் அதிகமாகிறார்கள்.

‘எவ்வளவு காலம் உயிர் வாழ்வேன்’ மீண்டும்

‘இரண்டில் இருந்து ஆறுமாதம். அது உனது அதிஸ்டத்தைப் பொறுத்தது’

‘அவ்வளவுதானா?’

‘என்ன அவ்வளவுதானே’

‘என்ன அப்படி கேட்கிறாய்? மனிதர்களின் வாழ்வோடு ஒப்பிடும் போது உனது ஆறுமாத வாழ்வு மூன்று வருடத்திற்குச் சமமானது தெரியுமா?’

‘உனது கணக்குத் திறமையை என்னிடம் காட்டாதே. நான் உயிர் வாழும் காலத்தைப் பற்றி பேசும் போது நீ உனது பேசும் திறமையைக் காட்டுகிறாய்.’

‘கொலிங்வுட் நான் வழக்கமாக நோயாளிகளோடு பேசுவதில்லை. அவற்றின் உரிமையாளர்களோடு பேசும் போது அவர்களுக்கு ஆறுதலாக பேசுவது இப்படித்தான். எந்த உயிருக்கும் முதுமை கடினமானது. உடலில் பலம் குறைந்து போவதோடு நோய்களையும் சுமந்து கொண்டு மனிதர்கள் நலிவடையும் போது சமூகத்தால், உறவினர்களால் சுமையாக கருதப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்படியாக உடல் வலியோடு மனத்தில் வலியையும் சுமந்து கொண்டுதான் ஒவ்வொரு முதியவர்களும் நடமாடுகிறார்கள். அவர்கள் உடல் கூனடைவது இப்படியான மனச்சுவை காரணமாக இருக்கலாம் என நான் சந்தேகிப்பது உண்டு. அவர்களோடு ஒப்பிடும்போது உனக்கு மிகவும் சிறப்பான கவனிப்புடன் வைத்தியவசதியும் கிடைக்கிறது. அழகிய பெண்களின் முத்தங்கள் அரவணைப்புகள் எல்லாம் கிடைக்கிறது. அதற்கு மேல் நீ உணவு அருந்தாமல் மூன்று நாட்கள் இருக்கும்படி நேர்ந்தால் நானே உன்னை கருணைக்கொலை செய்து விடுகிறேன்.’

‘கொஞ்சம் ஆறுதலாக இருக்கு. அப்படியானால் நீ மட்டுமே கருணைக்கொலை செய்ய வேண்டும் என எழுதிவிடு. நான் மற்றவர்கள் கையால் இறக்க விரும்பவில்லை.

‘அது ஏன் என்கையால் இறப்பதில் ஒரு சந்தோசம்?

‘என்னைப்புரிந்து கொண்ட ஒரே வைத்தியர நீதானே?

‘நீ பயந்து விட்டாய். உனக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. பழைய நிலைக்கு நீ மாறவேண்டும். இல்லாவிடில் நீ மேலும் நோயாளியாகி விடுவாய்.’

‘நான் கேட்ட விடயத்துக்கு பதில் சொல்லு’

‘அப்படியே செய்கிறேன். நீ எனது நண்பனாகி விட்டாய். உனக்காக இதைச் செய்ய மாட்டேனா? கொலிங்வுட்’

‘அது சரி. மேலும் ஒரு விடயம் சொல்ல வேண்டும்.’

‘அந்த சிவப்புத் தலைக்காரியும் உனது எதிரி ஸ்ரிவனும் காதலிக்கிறார்கள்’

‘அது எப்படி உனக்கு தெரியும்?’

‘அந்தப் பெண் என்னை இரவு பரிசோதித்துக்கொண்டு இருக்கும் போது ஸ்ரிவனின் கரங்கள் அவளது அந்தரங்களை பரிசோதித்தது. அவர்களுக்கு நான் பார்க்கிறேன் என்ற விவஸ்தை இல்லாமல் சரசமாடினார்கள். வைத்தியசாலையை என்ன என்று நினைத்தார்கள்?

‘கொலிங்வுட் உணர்ச்சி வசப்படாதே. இருவரும் திருமணமாகதவர்கள். கொஞ்சம் சந்தோசமாக இருக்க நினைத்தால் உனக்கு என்ன வந்தது?. நல்ல சினிமாவைப் பார்க்கிறாய் என நினைத்து விடு.’

‘அவர்கள் வெளியாலே எந்த மாதிரி நடந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. . வைத்தியசாலையை சரசமாடுவதற்கு பாவிக்க கூடாது. வேலை பார்க்கும் இடம் புனிதமானது. காலோசைப்பற்றி நான் ஏதாவது சொல்லியிருக்கிறனா? அந்த மனுசன் ஸ்திரிலோலனாக இருந்தாலும் வைத்தியசாலைக்கு வெளியே தனது சரச சல்லாப விளையாட்டுகளை வைத்திருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.

‘கொலிங்வுட் உன்னிடம் இந்த மாதிரியான கருத்துகள் இருப்பது எனக்குத் தெரியாது. இது எப்படி உன்னுடைய மனத்தில் பதிந்தது?

‘இதென்ன பெரிய விடயம்? நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி. சிறு குட்டியாக இந்த வைத்தியசாலையில் வளரும்போது இவைதான் சரியான உணர்வுகள் என என்னுடைய அறிவில் பதிந்தது. அந்தப் பதிவுகள் இந்தப் பதினைந்து வருட காலத்தில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. நீங்கள் அதைத்தான் மனச்சாட்சி என்கிறீர்கள். மனச்சாட்சி என்பதும் உங்களது புறச்சூழலில் இருந்து நீங்கள் புரிந்து கொண்டதை உங்கள் அடுத்த பரம்பரைக்கு கடத்துகிறீர்கள். புதிய சூழ்நிலைக்கு மாறியதும உங்கள் மனச்சாட்சி மாறுகிறதே. நானும் இந்த வைத்தியசாவையில் புரிந்த விடயங்களை எனது அளவுகோலாகப் பாவித்து இங்கே நடக்கும் விடயங்களைப் பார்க்கிறேன். இங்கே வளர்ந்தபோது இந்த வைத்தியசாலை சுமுகமாக நடக்கவேண்டும் என்பது எனது நோக்கமாகிறது.

‘உன்னோடு பேசுவது அறிஞரோடு தத்துவ விசாரத்தில் ஈடுபடுவது போல் இருக்கிறது. அதற்கு விசேட நேரம் ஒதுக்க வேண்டும் ஆனால் எனக்கு அதற்கு நேரமில்லை. இங்கு வேலை செய்வதற்காக மட்டுமே வேதனம் வாங்குகிறேன்’ எனச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சுந்தரம்பிள்ளை அந்த இடத்தை விட்டு விலகினான்.


அசோகனின் வைத்தியசாலை 26

நோயல் நடேசன்ஜோனின் பிரியாவிடை வைத்தியசாலையில் நடந்த சில மாதங்களின் பின் அவனது வீட்டுக்கு ஒரு காலை நேரத்தில் அவனது உடல் நலத்தை விசாரிப்போம் என நினைத்து சுந்தரம்பிள்ளை சாருலதாவுடன் சென்றான். ஈரலிப்பாக இருந்த காலைப்பொழுது பனிபுகாரின் போர்வையில் இருந்து வெளியேவரத் தாயின் வயிற்றி இருந்து வரத்துடிக்கும் குதிரைக் குட்டிபோல் திமிறியது. கண்ணுக்கெட்டியவரை டன்னினேங் மலையடிவாரத்தில் உள்ள அந்தப் புறநகரின் புறச்சூழலில் எதுவித மாற்றமும் தெரியவில்லை.மலைச்சாரலில் உயர்ந்து வளர்ந்த யூகலிகப்ரஸ் மரங்கள் பச்சைப் பசேலன கண்களையும், அந்த மரங்களில் இருந்து வந்த மணம் காற்றில் கலந்து கற்பூரவெள்ளி வாசனையையாக வந்து சுவாசப்பையை நிறைத்தது. வாகனத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையால் அமைக்கப்பட்ட வீதியால் காரில் சென்றபோது கண்ணுக்கு தெரியும் காட்சி இராட்சத ஓவியமாக விரிந்தது. அந்தப் புறநகரின் மூன்று பக்கத்தில் உள்ள மலைகளை வெள்ளி நிறமுகில்கள் ஆரத்தழுவி நாளையென எதுவும் இல்லை என்பதுபோல் சரசமாடின. அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் அரசிளங்குமாரியின் தோழிகள் போல் இந்தக் காதல் விளையாட்டுக்குப் பாதுகாப்புப் போர்வையாக மறைத்தன. அவைகளது சரசத்தை ஆதவன் கூட கலைக்க விரும்பாது மெதுவாக தனது ஒளிக்கரங்களை மெல்பேனின் கிழக்குப் பகுதியில் தவழவிட்டான். அந்த ஒளிக்கற்றைகள் பொற்கரங்களாக மரங்களின் இடைவெளியில் மெதுவாக நுளைந்து வெளிவந்தன. இயற்கையின் இந்த உல்லாச சல்லாபத்தால் பொழிந்த மழையில் அந்த மலை சார்ந்த காட்டுப் பிரதேசம் அடர்ந்து வளர்ந்து இருந்ததுடன் பல நீரோடைகள் கிளைபரப்பி அடிவாரத்தை நோக்கி ஓடி சிறிய சலசத்துக் கொண்டு ஓடையாக பாய்ந்து கொண்டிருந்தன. இந்தப்பகுதி தேசிய வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு சிறிய பகுதி மட்டும் மக்கள் குடியிருப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றப்பகுதிகளில் அமைந்துள்ள வழித்தடங்கள் மலையேறுபவர்கள், காடு வழிநடப்பவர்கள் தேவையைக் கருதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மெல்பேனின் பலபகுதியில் இருந்து மக்கள் இந்தப் பிரதேசத்திற்கு வந்து இயற்கை எழிலை அனுபவிப்பார்கள்.

தான் வாழும் இடத்தை இயற்கை வளம் கொழிக்கும் இடமாக அழகுணர்வுடன் தெரிந்து எடுத்து வாழ நினைத்தவன் ஜோன். அப்படிப்பட்ட அவனது வாழ்வு மட்டும் நிலத்தில் இருந்து குறுகிய காலத்தில் புடுங்கப்பட்டு அழிக்கப்படும் இளம்செடியாக இருப்பது எவ்வளவு கொடுமை என நினைத்தபடி அவனது வீட்டுக்கு சென்றனர் சுந்தரம்பிள்ளையும் சாருலதாவும்.

வீட்டெதிரே காரை நிறுத்திவிட்டு இறங்கியவர்கள் எதிரே மிஷேல் வாசலில் சிரித்தபடி அந்தக் குளிர்காலை நேரத்தில் கொக்கோ கோலா பருகியபடி நின்றிருந்தாள்.

பார்வைக்கு சிறிது பருத்து இருந்தது போல் தெரிந்தது. அவளது கன்னப்பகுதி உப்பியிருந்தது. தடிப்பான உதடுகளுக்கு உதட்டுச் சாயம் மெல்லிய இளம் சிவப்பு நிறத்தில் தீட்டியிருந்தாள். அவள் சிரிப்பில் சந்தோசத்தைக் காட்டுகிறாளா இல்லை உள்ளத்தில் உள்ள கவலைக்குத் திரை போடுகிறாளா என்பதும் புதிராக இருந்தது. சிலர் கவலையுடன் இருக்கும் போது உணவைக் கவனிக்காததால் மெலிந்து உருக்குலைந்து விடுவார்கள். அதே நேரத்தில் சிலர் அதுவும் பெண்கள் முக்கியமாக கவலையை மறப்பதற்காக உணவைத் தேடுவார்கள். சொக்கிலேட் போன்ற இனிப்பான உணவுகள் ஒருவித போதையைக் கொடுப்பதால் மேலும் மேலும் உண்பதற்கான விருப்பத்தை உருவாக்கும். இந்த வகையான தன்மை இளம் பெண்களை மேற்கு நாடுகளில் தாக்குகிறது. இப்படியாக எடை கூடி விட்டால் பின்பு அதைக் குறைக்க என சைகோலஜிஸ்ட், வைத்தியர்கள், உணவு தயாரிப்பவர்கள் என அவர்கள் நாடுவதால் இந்த எடைகுறைப்பு பெரிய வியாபாரமாகிவிட்டது.

மிஷேலை நலம் விசாரித்த போது தனது வேலையை விட்டு ஜோனுடன் முழு நேரமும் இருப்பதாகக் கூறினாள் .

ஜோன் மீது கொடிய நோய் தாக்கிய போதிலும் ஏதோ ஒருவிதத்தில் அதிஸ்டசாலியாக இருந்திருக்கிறான். மனைவி முழு நேரத் தாதியாக மாறி அவனைப் பராமரிப்பது எவ்வளவு சிறந்தவிடயம் என்பதை வியந்தபடி வீட்டினுள்ளே சென்ற போது பழைய நினைவுகள் நினைவில் வந்தது அலைமோதியது சுந்தரம்பிள்ளைக்கு. சில வருடங்கள் முன்பாக அவர்களது திருமணத்தின் முன்பு நடந்த விருந்தில் உடைகளை கழட்டும் நடனமும், அதற்கு விருந்தினராக சாமுடன் அழைக்கப்பட்ட விடயமும் ஞாபகத்துக்கு வநதாலும் அதை அன்று சாருலதாவிடம் சொல்லாமல் மறைத்ததால் இன்றும் அதைக் கூறமுடியாமல் அந்த நினைவுகளின் உதைப்பை ,மனத்தில் தனியாக அனுபவித்தான். சில நினைவுகள் நிறைமாதக் குழந்தை போல் கால்களை உதைத்துக்கொண்டு வெளிவர துடிக்கும்போது, அதை அடக்குவது கடினமாகிவிடும். எப்படியும் பிரசவம் மாதிரி ஏதோ ஒருகாலத்தில் வெளி வந்துவிடும். வேறு சில நினைவுகள் கிணற்றில் விழுந்த கல்லாக, காலங்களின் தொடர்ச்சியால், பாசியால் மூடப்பட்டு மறைந்து கிடந்துவிடும்.

ஹோலில் இருந்த தொலைக்காட்சியில் ஜோன் தனது அபிமான உதைபந்தாட்ட கழகமான எசண்டன் கழகத்துடன் ஜீலோங் அணி விளையாடும் உதைபந்தாட்டத்தின் பதிவு செய்த பழய விளையாட்டை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே சென்றதும் சாருலதாவையும் சுந்தரம்பிள்ளையும் ஜோன் அடையாளம் கண்டு சிரித்தான் . அவனது முகச்சிரிப்பை பார்த்து விட்டு சுந்தரம்பிள்ளை அவனது கையை நோக்கிய போது அவனது கையில் வைத்திருந்த தொலைக்காட்சியின் ரிமோட் மெதுவாக நடுங்கியது. நாற்காலியில் இருந்து எழுந்திருக்காத போதும் அவனது முழு உடலின் உருக்குலைவு தெரிந்தது. முப்பது வயதில் இளமையின் பூரிப்பில் ஒளிராமல் எரிந்து உயிர்விடும் மெழுகுவர்த்தியாக தெரிந்தான். அவனைப் பார்க்க மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது

‘என்னைப் பார்க்க வந்தது சந்தோசம், சிவா, சாருலதா. வைத்தியசாலையில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?

‘நாங்கள் நன்றாக இருக்கிறோம். உன்பாடு எப்படி’

‘சில மருந்துகள் எடுக்கிறேன். பெரிதாக முன்னேற்றம் இல்லை.’ என சிறு வசனங்களாக பொறுக்கி எடுத்துப் பேசினான்

ஜோனோடு பேசும் போது சமயல் அறையில் மிஷேலுடன் இருந்த இளைஞன் ஹோலுக்கு வந்ததும் அந்த இளைஞனை ஜோனின் நண்பன் என அறிமுகப்படுத்தினாள் மிஷேல்.
மிஷேல் மருந்துகள் சம்பந்தமாக சாருலதா பேசினாள்

சிறிது நேரத்தில் ஜோனின் நண்பனான அந்த இளைஞனும் மிஷேலும், ஜோனை அவனது அறைக்குக் கூட்டிக் கொண்டு சென்றார்கள்.

‘இது மிஷேலின் புதிய நண்பன் என நான் நினைக்கிறேன்’ என சாருலதா மெதுவாக சுந்தரம்பிள்ளையிடம் கூறியபடி அவர்கள் வீட்டில் இருந்து வெளிவந்தாள்
—-

ஹோலிங்வுட், சுந்தரம்பிள்ளையுடன் இருந்த காலத்தில் பொன்னி ஒழுங்காக வீட்டில் இருந்தது. பொன்னி, கொலின்வுட்டுடன் நட்புறவு கொண்டுவிட்டதால் இருவரும் ஒன்றாக விளையாடுவதும் இரவில் படுப்பதாக நாய்-பூனை உறவு எனத் தெரியாமல் இரண்டு நட்பான நாய்களாக தெரிந்தது. அந்த ஒரு கிழமையில் எப்படி அவைகளுக்கிடையே பலமான உறவு உருவாகியது என்பது அதிசயமாக இருந்தது.

மாமிசம் உண்ணும் விலங்குகள் தங்களது இடங்களை வகுத்துக்கொண்டு மற்றய மிருகங்களை அந்த வெளியில் உட்புகுவதைத் தடுக்கும் இயற்கையான குணமுடையவை. மனிதர்கள் வளர்ப்பினால் இந்த குணத்தை நாய் பூனைகளில் இருந்து இல்லாமல் செய்ய முடியாத போதிலும் பயிற்சியாலும் ஒன்றாக சிறுவயதில் இருந்து வளர்ப்பதாலும் அவை நட்புடன் வளர்கின்றன. இதற்குச் சிலகாலம் செல்லும். ஆனால் இங்கு அந்த நட்புறவு மிக இலகுவாக ஏற்பட்டுவிட்டதற்கு கொலிங்வுட்டின் சாதுரியம் காரணமாக இருக்கும்.

அந்த நட்புறவு அதிக நாள் தொடரவில்லை. ஒரு கிழமையாகியதும் வைத்தியசாலையில் நிலவரம் சீராகி பூனை வாட் திறக்கப்பட்டது. இதனால் கொலிங்வுட்டை அங்கே மீண்டும் அங்கு கொண்டு செல்ல வேண்டியதாகி விட்டது

கொலிவுட் வைத்தியசாலைக்கு எடுத்து வந்த ஒரு மாதகாலத்தில் அந்தக் கவலையான விடயம் நடந்தது.

பாடசாலை முடிந்து வந்த வந்த சகன் ‘அப்பா பாடசாலையின் முன்பு சிறிய நாய் அடி பட்டதாகவும் அதை எமேஜன்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள் என்று எனது நண்பர்கள் கூறினார்கள்’ எனக் கவலையோடு சொன்னான்.

அவனது முகத்தின் கலக்கத்தையும் கவலையையும் பார்த்தபோது சுந்தரம்பிள்ளைக்கு சோகம் பற்றிக்கொண்டது.

உடனே வீட்டின் பின்வளவில் தேடியபோது பொன்னியைக் காணவில்லை. அடிபட்ட நாய் பொன்னியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எல்லோரும் குடும்பமாக சமீபத்தில் உள்ள எமேஜென்சி வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ள ரிசப்சனில் தங்கள் நாயைத் தேடி வந்ததாகவும் மேலும் மிருக வைத்தியர் என்றதும் உள்ளே அழைத்து சென்றார்கள். மயக்கநிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பொன்னி இருந்தது. தலையில் அடிபட்டதால் மூளையில் பலமான காயம். அத்துடன் வலிப்பு இருந்ததால் அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

பொன்னி உயிர் பிழைத்தாலும் நடமாடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளது என பொன்னியைப் பார்த்த அங்குள்ள வைத்தியர் கூறியதால் கனத்த மனத்துடன் கருணைக்கொலைக்கான கையெழுத்தை சுந்தரம்பிள்ளை ரிசப்சனில் இருந்த பெண் நீட்டிய கடுதாசியில் வைத்தான். மற்றவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கருணைக் கொலை செய்யும் வழக்கத்திற்கு மாறாக இன்று தனது கையெழுத்தை பொன்னியின் கருணைக்கொலைக்கான அனுமதிப்பத்திரத்தில் வைத்து மற்றவர்களுக்கு கொடுத்தான் சுந்தரம்பிள்ளை.

மயக்கத்தில் இருக்கும் பொன்னியின் நாளத்துக்குள் ஏற்கனவே சேலையின் திரவம் சென்று கொண்டிருந்தது. அந்த வைத்தியர், பீனோபாபிரோன் அல்லது பச்சைக்கனவு என செல்லப்பேருடன் அழைக்கப்படும் அந்த பச்சை மருந்தை அந்த சேலையின் குழாயின் உள்ளே செலுத்தியபோது பொன்னியின் சுவாசம் நின்று ஒரு சில கணத்தில் இதயத்துடிப்பு அடங்கியது. அதன் பின்னால் கண்கள் குத்திட்டு மூளையின் இறப்பை உறுதிப்படுத்தியது. மயக்கமாக இருக்கும் போது கருணைக் கொலை செய்வது சிறிது இலகுவானது.

மனிதன் நித்திரையிலும் மயக்கத்திலும் இருக்கும்போது தனது ஆத்மா உடலைவிட்டு வெளியே செல்வதான கருத்தாக்கம் கனவுகளால் உருவானது. நித்திரை கொள்ளும் போதும் மயக்கமாகும் போதும் தற்காலிகமாக உயிராவி வெளியேறிவிட்டது என்ற கருத்தாக்கத்தால் மயக்கமாக இருக்கும் மிருகங்களை கருணைக் கொலை செய்வது செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கட்கும், மிருக வைத்தியர்களுக்கும் இலகுவாக இருப்பது ஆச்சரியமில்லை. இதே முறையைத்தான் அமரிக்காவில் மனிதனைத் தண்டனை என்ற பேரில் கொலை செய்வதற்கும். ஆரம்பத்தில் மயக்கமருந்து செலுத்திய பின்பு உடல் தசைகளை ரிலாக்ஸ் பண்ணும் மருந்து கொடுக்கப்படுகிறது. அதன் பின்பு கடைசியாக சுவாச மற்றும் இதயத்துடிப்பிற்கான மூளையின் பகுதிகளை நிறுத்தும் மருந்தும் செலுத்தப்படுகிறது.

இறப்புக்கு முன்பாக அதை உணர்ந்து கொள்ளும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மிருகங்களால், பறவைகளால் அதை உணர்ந்து கொள்ள முடியாது. காட்டில் மேயும் மானால் அம்புடன் காத்திருக்கும் வேடனை நினைத்துப் பார்க்க முடிவதில்லை. நீரில் மிதக்கும் மீனால் அருகில் தொங்கும் தூண்டலினால் மரணம் வருவதை உணரமுடியாது. அதே போல் வளர்ப்பு மிருகங்களையும் கருணைக் கொலை செய்வதற்கு மிருக வைத்தியரிடம் கொண்டு வரும் போது அவைகளுக்கு தங்களுக்கு வரவிருக்கும் மரணத்தை புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் மனிதர்கள் மரணத்தைப் புரிந்து கொண்டு அச்சமடைவதுடன் அதைத் தடுக்க நினைப்பார்கள். மரணத்தை நினைத்து பயந்து மனிதன் அதை புரிந்து கொள்ள முயல்வதே மனித நாகரீக வரலாற்றில் சமயங்களின் தோற்றத்திற்கு காரணமாகிறது. ஆங்காங்கு தோன்றிய ஞானிகள் இறப்பை புறக்கணிக்க முயற்சித்து உபதேசித்த போது ஒரு சிலர் மட்டும் இறப்பை மட்டுமல்லாது மனித வாழ்கையையும் அதன் உறவுகளையும் அதனால் ஏற்படும் உணர்வுகளையும் புறக்கணிக்கிறார்கள்.இவர்கள் மனித கலாச்சாரத்தின் விளிப்பு நிலை மாந்தர்களாக மட்டு்ம் இருந்திருக்கிறார்கள். இறப்புக்கு பயப்படாமல் இருந்தால் மனிதகுலம் டைனோசர்கள் போல் அழிந்து விட்டிருக்கும். இதனால்த்தான் சாதாரண மனிதன் இறப்பை புறக்கணிக்க முடியாமல் அதை வாழ்வின் முக்கிய சடங்காகாக்கிறான். உலகத்தின் சகல பிரதேசத்திலும் வாழும் மக்கள் இறப்பை பிரபலப்படுத்தி அதை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக முக்கியத்துவப்படுத்துகிறார்கள் . இதனை எண்ணும் போது இறப்பை உதாசீனப்படுத்த எண்ணியவர்கள் ஆரம்பத்திலே தோற்கடிக்கப்பட்டதையே கலாச்சாரங்களின் வரலாறு சொல்கிறது.

காயமே இது பொய்யடடா அது காற்றடைத்த பையடா என இருநூறு வருடத்தின் முன்பு கூறிய சித்தர்களும் இறப்பு இல்லா வீடே இல்லை என மகனது உயிரைக் காப்பாற்ற தன்னைத்தேடி வந்த பெண்ணைப் பார்த்து புத்தர் கூறியதும் பண்டைய எகிப்தியர்களில் இருந்து இன்று வாழும் மக்கள்வரை , வாழ்க்கை நிலையாது என தெரிந்து கொண்டாலும் இறப்பைப் புறக்கணிக்க முடியவில்லை.

முன்பு ஒரு நாள் பொன்னியை கருணைக் கொலைக்கு வைத்தியசாலைக்கு காரில் கொண்டு சென்ற போது பொன்னி எந்த அச்சமுமற்றுப் பக்கத்துச் சீட்டில் இருந்தபடி தனது நீளமான சிவந்த நாக்கால் தொடர்ச்சியாக சுந்தரம்பிள்ளையின் இடது கையை நக்கியபடி காரில் வந்ததது. இடைக்கிடை தனது கருமையான ஈரமான மூக்கை அந்தக் கையில் வைத்து அழுத்தும். அன்று அதனது முகத்தில் கோடைகாலத்தில் பிக்னிக்கு குடும்பத்துடன் செல்லும் சிறுவனின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி தெரிந்தது. இந்த மகிழ்ச்சியான நிலை சுந்தரம்பிள்ளையைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. மரணத்தைப் புரிந்து கொள்ளாத பொன்னிக்கு அதை வளர்த்தவனாகிய தானே அந்த மரணத்தை பொன்னிக்கு கொடுக்க விருப்பது என்பதே அந்தச் சங்கடத்திற்குக் காரணம். நண்பன் கலோஸைக் கொண்டு கருணைக்கொலையைச் செய்தால் என்ன என யோசித்தாலும் அப்படிக் கோழைத்தனமாக தனது பொறுப்பில் இருந்து நழுவ விட முடியாது என்பதால் பொன்னிக்குத் தனது கையாலே மயக்க ஊசியையும் மரணத்துக்கான ஊசியையும் போடவேண்டும் என நினைத்தான். நல்ல வேளையாக கொலிங்வுட்டால் பொன்னியின் உயிர் அன்று காப்பாற்றப்பட்டு சில கிழமையின் பின்பாக வேறு ஒருவரின் கையால் இறந்தது.

உயிர்ப்பயம் என்பதை அறியாது வீதியெங்கும் தனக்கு சொந்தமானது என்று நினைத்தபடி ஓடிய பொன்னி போல் இல்லாமல் கொலிங்வுட்டுக்கு மனிதர்கள் போல் இறப்பை பற்றிய சிந்தனையும் மரணத்தில் மேல் பயமும் வந்து பற்றிக்கொண்டுவிட்டது. அதைவிட மரணத்தை இப்படித்தான் அடையவேண்டும் என்ற மன எண்ணமும் வந்து விட்டது. இந்த மாதிரியான எண்ணங்கள் மனிதர்களைத் தவிர எந்த உயிரினத்திற்கும் இல்லாத உணர்வுகள், ஆனால் எப்படி ஹொலிங்வுட்டுக்கு மட்டும் சிந்திக்க முடிந்தது?

இந்த வைத்தியசாலையில் தொடர்ந்து மனிதர்களுடன் வாழ்வதால் பேசும் திறமையை பெற்றது போல் மரணத்திற்கு அஞ்சும் நிலையையும் பெற்றதா? கொலிங்வுட்டின் மூளையின் சில பாகங்கள் இதற்கு ஏற்ப மாற்றமடைந்தனவா? இப்படியாக நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளனவாக என தெரிந்து கொள்ள மனிதர்களின் மனநிலை சம்பந்தமான விடயங்களையும் மிருகங்களின் நடத்தைகள் பற்றிய புத்தகங்களையும் சுந்தரம்பிள்ளை படிக்கத் தொடங்கினான்.

சிறுநீரகம் உடலின் கழிவுப்பொருட்களை வெளியேற்றும் உறுப்பு. இந்த உறுப்பு மாமிசத்தை உண்ணும் பிராணிகளில் சீக்கிரமாக பழுதடைந்ததால் அங்கு கழிவுப்பொருட்கள் தேங்கி அவை வாந்தியை உருவாக்கும். அத்துடன் உடலின் தசைகளின் செயலாக்கத்திற்கு உதவும் கனிப்பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்தி களைப்பை உருவாக்கும். இந்த மாதிரியான குணங்குறிகள் தெரிந்ததால் கொலிங்வுட் கூட்டில் அடைக்கப்பட்டுச் சேலையின் திரவத்தால் இரத்தத்தில் உள்ள இந்த அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, மீண்டும் புது இரத்தம் பெற்றது போன்ற நிலையை அடைந்த போது மீண்டும் வெளியே நடமாடத்தொடங்கியது.

நடமாடத் தொடங்கினாலும் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் கொலிங்வுட்டைப் பாதித்தது. அதனால், முன்போல பல இடங்களுக்குத் நடமாடித் திரிவதில்லை. முக்கியமாக மற்ற மிருகங்கள் இருக்கும் இடங்களைத் தவிர்த்தது. பகலில் கணக்காளர் ஜோனின் அருகிலும் இரவில் வைத்தியசாலையின் மேற்தளத்தில் இருக்கும் வைத்தியசாலையைச் சுத்தம் செய்வர்கள் வீட்டிலும் இருந்தது. அதிக அளவு நேரத்தை தூங்குவதில் கழித்தது. மதிய வேளையில் மட்டும் சுந்தரம்பிள்ளையிடம் வந்து மடியில் இருந்து பேசுவது வழக்கமாகி விட்டது. பழைய எகத்தாளமான பேச்சு, அலட்சியமான பார்வை என்பன இல்லாமல்போய்விட்டது. சுந்தரம்பிள்ளைக்கும் கொலிங்வுட்டுக்கும் இடையில் குரு- சிஷ்யன் போன்ற உறவு ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் நடந்தது. இந்த பேச்சுகள் மற்றவர்களுக்குக் கேட்காவிட்டாலும் இந்த இருவருக்கும் இடையில் ஏற்றபட்ட உறவு புதுமையாக மற்றவர்களுக்குத் தெரிந்தது. வெளியே மதிய உணவுக்குப் போவதைத் தவிர்த்து கொலிங்வுட்டோடு அந்த நேரத்தை கழிப்பது என சுந்தரம்பிள்ளை முடிவு செய்திருந்தான்..

முதியவர்கள் இளமைக்கால நினைவுகளை இரைமீட்டுப் பார்ப்பது போல் கொலிங்வுட், சுந்தரம்பிள்ளையிடம் வைத்தியசாலைக்கு வரமுன்பு நடந்த விடயங்களைப் பேசியது.
கொலிங்வுட்டுக்கு மரணபயத்தை உருவாக்க கூடிய ஒரு நிகழ்ச்சி வைத்தியசாலையில் நடந்தது. புதிதாக சேர்ந்த ஜேன் வைத்தியசாலையில் அனாதரவாக வந்து சேர்ந்த ஒரு

ஆறுமாதமான ஜெர்மன் செப்பேட் கலப்பு நாயை கருத்தடைக்காக ஆபரேசன் செய்து கொண்டிருந்த போது அந்த நாய் தனது சுவாசத்தை நிறுத்தி விட்டது. ஆனால் ஜேனோடு வேலை செய்த நேர்சான மார்வின் அதைக் கவனித்த போது ஏற்கனவே சில நிமிடங்கள் கடந்து விட்டது . காலோசும் மற்றவர்களுமாக ஓடி வந்து முதல் உதவி கொடுத்து உடலை விட்டு வெளியே சென்ற உயிரைக் மீண்டும் பிடித்துக்கொண்டு வந்தபோது அந்த நாய் பிழைத்துக்கொண்டது. ஆபரேசன் முடிந்து மயக்கத்திலிருந்து எழும்பியது வைத்தியசாலையில் உள்ள நாயானபடியால் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டது. அடுத்த நாள்காலை நாய்ப் பகுதி மேற்பார்வையாளரான மேவிஸ் அவதானித்தபோது அந்த இரும்புக் கூட்டில் தலையை மோதிக் கொண்டு நின்றது. இதை மேவிஸ் கூறியதும் சுந்தரம்பிள்ளை அங்கு போய் பார்த்தான். அப்போது அந்த நாய்க்கு கண் தெரியவில்லை என சுந்தரம்பிள்ளைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருட்டில் வைத்துக் கண்ணைப் பரிசோதித்த போது கண்களில் எந்த குறையும் தெரியவில்லை.. இந்த நேரத்தில் அங்கு வந்த ஆர்தர் இந்த நாயின் மூளையின் பார்வைப் பகுதி செயலிழந்துவிட்டது. மூளைக்கு ஒட்சிசன் இல்லாமல் போகும்போது முதலாவதாக விசுவல் கோட்டெக்ஸ் என்ற மூளைப்பகுதி செயலிழக்கிறது. இந்த நாயை கருணைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

இந்த விடயங்கள் நடப்பதை ஹொலிங்வுட் பார்த்துக்கொண்டிருந்தது. தனக்கு இப்படியான நிலை விரைவில் வரவிருப்பதாக நினைத்து அச்சத்தில் நகர மறுத்து தனது செயல்பாட்டை குறைத்து கொள்ளுகிறது. முதிர்ந்த காலத்தில் படிப்படியாக தன்னிலையை இழக்கும் வயதான மனிதர்களின் இயல்பை அப்படியே ஹொலிங்வுட்டும் பிரதிபலிப்பதாக சுந்தரம்பிள்ளை நினைத்தான்.

மனிதர்களுக்கு அவர்களை சுற்றி இறப்பு தொடர்சியாக நடக்கிறது. உறவினர்கள்,சுற்றார்கள் மரணமடைகிறார்கள். இறப்புகளை இளவயதில் பொருட்படுத்தாத போதிலும் ஒருவன் தனது இறுதிக்காலத்தில் தனது வயதை ஒத்தவர்கள் ஒவ்வொருராக மரணமடையும் போது அந்த மரணங்களை எண்ணியபடி வாழ்கிறான். இறப்பின் சிந்தனை அவனை நிலை குலைய வைக்கிறது. தனது இறப்புக்கும் திகதி குறிக்கப்பட்டதாக எண்ணி மனவேதனையை அடைகிறான். அந்த வேதனையில் ஏற்படும் மனஅழுத்தம் அவனுடைய உடலையும் இயங்காமல் பண்ணுவதால் மேலும் பலவீனம் அடைகிறான். மருத்துவரீதியல் பார்க்கும்போது தசைகள் எலும்புகள் வலுவையும் பரிமாணத்தையும் இழக்கின்றன.


அசோகனின் வைத்தியசாலை 27

நோயல் நடேசன்சுந்தரம்பிள்ளை சிட்னியில் நடக்கவிருக்கும் எலும்பு முறிவு சம்பந்தமான கொன்பரன்ஸ்க்கு செல்வதற்கு விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தான். பதினைந்து மிருக வைத்தியர்கள் வேலை செய்யும் வைத்தியசாலையில் ஒருவர், இருவருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் விடுமுறை கிடைக்கலாம். விண்ணப்பித்த போது விடுமுறை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால் எதுவித நட்டமும் இல்லை என்ற அலட்சியமான மனநிலை விண்ணப்பிக்கும் போதிருந்தது. வியப்புக்களும் ஆச்சரியங்களும், திருப்பங்களிலும் முடுக்குகளிலும் காத்திருப்பது போல் சுந்தரம்பிள்ளைக்கும் அந்த விடுமுறை கிடைத்தது. கடந்த நான்கு வருடத்தில் இப்பொழுதுதான் முதல் தடவையாக வெளியூருக்கு கொன்பரன்ஸ் எனப் போகச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் சாருலதா, பிள்ளைகளுடன் ஒன்றாகச் செல்ல நினைத்தாலும் குழந்தைகளுக்குப் பாடசாலை நாட்கள் என்பதால் தனியே போவது என்று முடிவாகியது. ஷரனுக்கும் அந்தக் கொன்பரன்சுக்கு செல்ல அனுமதி கிடைத்திருந்தது. ஒரு கிழமை சம்பளத்துடன் கல்வி கற்கக் கிடைத்த அந்தச் சந்தர்ப்பத்தை நல்ல விடுமுறையாக சிட்னியில் செலவிட இருப்பதாகவும் மாக்கஸ்சை அம்மாவிடம் விட்டு விட்டு கிறிஸ்ரியனுடன் செல்ல இருப்பதாக வைத்தியசாலையில் போலினுக்குக் கூறி இருந்தாள்.

ஷரனுடன் ஒரே இடத்திற்குச் செல்வது மனத்திற்கு நெருடலாக இருந்தது. வைத்தியசாலையில் அவளை ஒதுக்கி நடந்த சுந்தரம்பிள்ளைக்கு ஒரே கொன்பரன்ஸவுக்கு இருவரும் சிட்னி செல்வது மனத்திற்கு திருப்தியாக இருக்கவில்லை. அவளின் மேல் ஏற்பட்ட சலனங்கள் சருகாகிய ரோஜாவின் இதழ்களில் இருந்து வரும் இலேசான வாசனை போன்றது. முற்றாக மறைந்து போகவில்லை. ஆனால் அவளுக்காக கிடைத்த சந்தர்ப்பத்தை விடமுடியாது. அவள் கணவனோடு வருவது ஒரு விதத்தில் நல்ல விடயம். குறைந்த பட்சம் ஷரனுக்கு இது இரண்டாவது தேன்நிலவாக அமைந்தால் அவளுக்கு நல்லது என நினைத்து மனத்தால் சமாதானம் அடைய முடிந்தது.

——–

ஒரு வார விடுமுறை நாளன்று திடுதிப்பென சுந்தரம்பிள்ளை வீட்டுக்கு வந்த காலோஸ் ‘எனக்கு ஜோனைப் பார்க்கவேண்டும். அவனது நிலமை சீரியஸாகிக் கொண்டு வருவதாக மெல்வின் சொன்னான். என்னோடு வரமுடியுமா?’

‘நான் சில வாரங்களுக்கு முன்பாகத்தான் என் மனைவியுடன் சென்றேன். நான் வரவில்லை.’

‘என்னால் இப்படியான இடங்களுக்கு தனியாகப் போக முடியாது. ஜோன் துன்பப்படுவதை பார்ப்பது கடினமானது. தயவு செய்து வா.’

இந்த விடயத்தில் சுந்தரம்பிள்ளைக்கும் ஒரே மனப்பான்மை இருந்தாலும் காலோசின் வேண்டுதலை தவிர்க்க முடியவில்லை

காலோசுடன் சுந்தரம்பிள்ளை ஜோன் வீட்டுக்குச் சென்ற போது ஜோனால் ஒழுங்காகப் பேச முடியவில்லை. வசனத்தை மிகக் கஸ்டப்பட்டு தொடக்கினால் அதை முடிக்க முடியாதிருந்தது. அந்த பிரச்சனையை சமாளிக்க அவன் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான். அவனால் அந்தச் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. அவனோடு பேச முனைவதோ, அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதோ அவனுக்கு அளிக்கும் தண்டனையானக இருந்தது. சுந்தரம்பிள்ளையும், காலோசும் இனிமேல் இருப்பது சரியல்ல என முடிவு செய்து அந்த இடத்தில் இருந்து விரைவாக வெளியேறும் தருணத்தில் வாசலில் மிஷேலின் காரைக் கழுவி கொண்டிருந்த இயன் உள்ளே வந்தான். அவன் காலோசிடம் கை குலுக்கி விட்டு மிஷேலை நோக்கிச் சென்றான்.

ஜோனின் நண்பனாக அறிமுகப்படுத்தப்பட்ட இயன்,உள்வீட்டுப் பி்ள்ளைபோல் அங்கு வலம்வந்தது அவனை அந்த வீட்டில் வசிப்பவனாகக் காட்டியது. மிஷேலேடு பழகும் பாவனையில் இருந்து இப்பொழுது மிஷேலின் நண்பனாக இருப்பது அவனது புரிந்தது. ஹோலுக்கு எதிரே இருந்த ஜோனின் படுக்கையறையில் பல உபகரணங்கள் இருந்தன.. படுக்கையில் இருந்து பிடித்துக் கொண்டு எழும்புவதற்காகப் அவனால் பாவிக்கப்படுவது தெரிந்தது. அந்த உபகரணங்கள், சக்கர நாற்காலி என்பன பல அந்த அறையின் இடத்தை அடைத்துக்கொண்டிருந்து. அவனது படுக்கையறை இவற்றால் ஒரு ஜிம்னாசியம் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

ஜோனின் படுக்கை அறைக்குப் பக்கத்து அறையின் கதவு திறந்திருந்தது. அதனூடாகப் பார்த்த போது அங்கே, புதிதாக டபிள் பெட் போடப்பட்டு, இரண்டு தலைகணிகளுடன் ஒரு மெல்லிய மஞ்சள் கம்பளிப் போர்வையால் அந்த பெட் மூடப்பட்டு இருந்தது.

அந்த அறையைப் பார்த்து மெதுவாக சிரித்தான் கலோஸ். அவனது சிரிப்பின் அர்த்தத்தைப் பரிந்து கொண்டதால் வேறு பக்கத்துக்கு முகத்தை திருப்பிக் கொண்டான் சுந்தரம்பிள்ளை.
ஆனாலும் காலோஸ் விடவில்லை

‘மிஷேல் கணவனைப் பக்கத்து அறையில் வைத்துக் கொண்டு வேறு ஒருவனுடன் இந்த வீட்டின் கூரைக்குள், அதுவும் அடுத்த அறையுள் படுக்கிறாள்’ என காதோடு அஙகேயே கூறினான் காலோஸ்.

இதைக் குறைந்த பட்சம் அந்த வீட்டின் வெளியே வந்து கூறினால் நாகரிகமாக இருக்கும் என பதிலுக்குச் சொல்ல நினைத்தாலும் மவுனமாக அந்தக் கூற்றைப் புறக்கணிப்பதுதான் தற்போதைக்கு நல்லது என நினைத்தான் சுந்தரம்பிளளை.

வெளியே வந்து காரில் ஏறியதும் ‘மிஷேல் இரண்டு வருடமாக ஜோனைப் பராமரிக்கிறாள் அவள் நினைத்திருந்தால் பெற்றோரின் வீட்டில் விட்டு விட்டு தான் நினைத்தவனுடன் வாழ்திருக்க முடியும். இவர்களுக்குஇடையில் தொடர்பு இருந்தாலும் இருவரும் சேர்ந்து முழு மனத்துடன் ஜோனைப் பராமரிப்பது என்னைப் பொறுத்தவரை உன்னதமான விடயம். கணவன் மனைவி என்ற உறவு அவர்களிடையே அறுந்து போய் விட்டாலும் தனது கடமையாக ஜோனைப் பாராமரிக்கும் போது அவளது மனஉணர்வுகள், தனிமை, களைப்பு எனப் பல வெற்றிடங்களைப் புறக்கணிக்கமுடியாது. அதை அவள் புறக்கணித்தால் இயங்க முடியாது போய்விடும். அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ள அவளது இடத்தில் இருக்கவேண்டும்.’

‘நீ என்னத்தைச் சொன்னாலும் கணவனைப் பக்கத்து அறையில் வைத்துவிட்டுக் காதலனுடன்
உடலுறவு கொள்வதை என் மனத்தால் ஏற்க முடியாது.’

‘அதற்காக உடலுறவு கொள்ள வீட்டுக்குப் பின்னால் போகமுடியுமா? என்ன பேசுகிறாய்?
நீ எல்லா உறவுகளையும் பாலுணர்வை அடிப்படையாக வைத்துப் பார்க்கிறாய். தற்பொழுது ஜோனுடன் பேசமுடியாது. குறைந்தபட்சம் பேசி மகிழ்வதற்கு ஒருவர் தேவை. அவர்களுக்கிடையில் பிள்ளைகள் இருந்தாலும் பரவாயில்லை. என்னைப் பொறுத்தவரையில் அவளது தனிமை கொடியது. அவள் தனது கடமையை தவறாது செய்கிறாள். தற்காலத்தில் மிஷேலை ஒரு உன்னதமான பெண்ணாக நான நினைக்கிறேன்’ விட்டுக் கொடுக்காமல் சிறிது ஆத்திரத்துடன்.

‘நாம் சண்டை போடவேண்டாம்.ஆனால் நீ என்னத்தைச் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்மாட்டேன்’

‘இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் வேறுபடுவோம்.’

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலோசின் அழைப்புக்கிணங்க மதுச்சாலைக்குச் சென்று மது அருந்திவிட்டு அதன் கீழ்ப் பகுதியில் உள்ள கபேக்கு சென்றபோது அங்கு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஜோன் நடுங்கும் கைகளால் பிங்கோ விளையாடிக்கொண்டிருந்தான் அவனுக்குப் பக்கத்தில் மிஷேல் அடுத்த மிசினில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

‘என்ன மிஷேல் எங்கள் இடத்துக்கு வந்திருக்கிறாய்’என்றான் சுந்தரம்பிள்ளை

ஜோன் பிங்கோ விளையாட ஆசைப்பட்டதால் இங்கு வந்தோம். தனியாக ஜோனைக் கொண்டு வருவது எனக்கு கடினமானதால் இயனையும் கூட்டிவந்தேன்

சிறிது தூரத்தில் இயன் மதுக்கிளாசுடன் பிங்கோ விளையாடிக்கொண்டிருந்தான்

——-

சிட்னியின் தென் கிழக்குப் பிரதேசம் கடற்கரையை அண்டியது. அங்குதான் சிட்னியின் விமான நிலையமும் உள்ளது. விமான நிலயத்துக்கு அருகே உள்ளது உல்லாசப் பிரயாணிகளுக்கு பிரசித்தமான போண்டாய் கடற்கரை அந்தக் கடற்கரையருகே உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் அந்த எலும்பு முறிவு கொன்பரன்ஸ் நடந்தது. அந்த ஹோட்டலிலே தங்குவதற்கு அறையை ஒழுங்கு செய்திருந்தான் சுந்தரம்பிள்ளை..

கொன்பரன்ஸ் ஐந்து நாட்கள் நடந்தது. இருநூற்றுக்கு மேற்பட்டவர்கள் வந்திருந்ததால் அதிக நேரம் ஷரனுடன் பேச வாய்ப்புக் கிடைக்காத போதிலும் கணவர் கிறிஸ்ரியன் உடன் வந்து அதே ஹோட்டலில் தங்கிருப்பதாக சொன்னாள். சுந்தரம்பிள்ளை அவளுக்கு இந்த விடுமுறை மகிழ்ச்சியைக் கொடுக்குமென நினைத்த போதும் எதிர்பார்த்த அளவு மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரியவில்லை

வெள்ளிக்கிழமை கடைசி நாளானதால் மதிய உணவு இடைவெளியில் உணவுகள் பரிமாறப்பட்ட இடத்தில் இருவரும் உணவுக் கோப்பைகளுடன் சந்தித்த போது வழமைபோல் கையை தோளில் ‘சிவா வீடு செல்லும் போது என்னிடம் சொல்லிவிட்டு போ. நாங்கள் நாளைதான் மெல்பேன் வருவோம்’ என்று விட்டு உணவுடன் மறைந்துவிட்டாள்

கொன்பரன்ஸ் முடிவதற்கு இரண்டு மணித்தியாலத்துக்கு முன்பாக அவள் இருக்கையை விட்டு எழுந்து சென்றதை சுந்தரம்பிள்ளை பார்த்தான்.ஏதாவது அவசரமோ இல்லை சிட்னியில் சொப்பிங் செய்யப் போகிறாளோ?

ஐந்து மணிக்கு கொன்பரன்ஸ் முடிந்ததும் அறைக்குச் சென்று தனது உடைகளை அடுக்கிப் பெட்டிகளைத் தயார் செய்து கொண்டு எட்டு மணியளவில் விமானநிலயம் செல்வதற்காக அறையில் இருந்து வெளியே வந்தபோது ஷரன் கேட்டுக்கொண்ட விடயம் மனத்தில் தட்டியது. பேச்சுக்காக சொல்லியிருப்பாள். இவளைப் பார்க்கப் போய் இதுவரையும் அறிமுகமாகாத அவளது கணவனையும் தேவை இல்லாமல சந்திக்க வேண்டியிருக்கும். நல்லவன் இல்லை என்று பலராலும் சொல்லப்பட்ட அவனைப் பார்த்து அறிமுகமாவது இப்பொழுது அவசியமா என்ன கேள்வி எழுந்தது.

ஷரன் ஐந்து நாளும் பேசாமல் இன்று மட்டும் ஏன் வலிய வந்து சொன்னாள்? நாளையோ மறுநாளோ மீண்டும் வைத்தியசாலையில் சந்தித்தால் ஏன் வரவில்லை என்பாள் . எதற்கும் தலையை காட்டி விட்டு போவோம். அவள் இருப்பது வேறு ஓரு புளோரில் என்பதால் அப்படியே பெட்டிகளுடன் சென்று அவளது அறையை இரண்டு தடைவை தட்டிய போது கதவு திறக்கவில்லை.

இப்ப என்ன செய்வது? திரும்பிப்போவோம் என நினைத்தாலும் சிறிது தாமதித்து விட்டு மூன்றாவது முறையாகத் தட்டுவிட்டு திரும்புவோம் என நினைத்துபோது கதவு மெதுவாகத் திறந்தது. அறையுள்ளே இருந்த இருள் தள்ளிக் கொண்டு வெளியே வந்தது.ஆரம்பத்தில் உள்ளே எதுவும் தெரியாத போதிலும் சில கணநேரத்தில் கொரிடோரின் வெளிச்சம் உள்ளே ஊடுருவிய போது கதவின் மறு புறத்தில் பார்த்த காட்சி சுந்தரம்பிள்ளையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக அவனது கண்களை நிறைத்தது எந்த துண்டுத்துணியும் அற்ற அவளது உடல்தான்.

ஷரன் முழு நிர்வாணமாக நின்றாள்.

இல்லை அவளது உடலின் இடது தோள்பகுதியை அவளது கூந்தல் மறைத்தது.
பூர்ண நிலவை உருக்கி வார்த்த அவளது உடலிலின் பல இடங்களில் அவசரத்தில் சிவப்பு வர்ணத்தால் ஆங்காங்கு தீட்டியது போல் இரத்தம் கண்டலாக உறைந்தது போல் தெரிந்தது. காட்டு மிருகத்தால் பலமாக தாக்கப்பட்டு உயிர்காக்க அவள் போராடியதால் காயம்பட்டு இருக்கலாம் என நினைக்க வைக்கும்படி இருந்தது.

சிட்னியில் ஐந்து நட்சத்திர ஹோட்டேலுக்கு எந்தக் காட்டு மிருகம் வரும்?

உள்ளே வந்து கதவை மூடிய சுந்தரம்பிள்ளையால் என்ன நடந்திருக்கலாம் என்பதை ஓரளவு ஊகிக்க முடிந்தாலும் அதை அவள் சொல்லும்வரை மவுனமாக இருந்தான். வலது கன்னம் சிவந்தும் வலது கண்ணை சுற்றியுள்ள பகுதி கண்டி வீங்கிப் பெரும்பகுதியான கண்ணை மறைத்தது. நல்ல வேளையாக முகத்தில் தளும்பு வரக்கூடிய எந்தக் காயமும் இருக்கவில்லை. அந்த அடி இடது கையால் அடிக்கப்படிட்டிருக்கிறது. அடித்தவனது வலதுகையை ஷரன் தடுத்ததால் இடது கை பேசி இருகிறது. அவளது முகத்தில் நிரந்தரமான தளும்பு ஒன்றை நினைத்துப்பார்க்கக் கூட அவனால் முடியவில்லை. இடது விலாப்பகுதியில் உலக வரைபடத்தில் அந்தக்கால சோவியத் இரஸ்சியா இரண்டு கண்டங்களில் இருப்பதுபோல் வயிற்றில் இருந்து முதுகுவரை இரத்தம் கண்டியிருந்தது. அதுமட்டுமல் இரத்தம் கசிந்திருப்பது போல் தெரிந்தது. வாசலருகே சில நிமிட நேரம் தாமதித்து விட்டு,அவள் மீண்டும் எதுவும் பேசாமல் படுக்கையை நோக்கித் திரும்பிய போது கண்டிப்போன மேல் முதுகும் தெரிந்தது. அடிவாங்கும் போது முன்பகுதியை கைகளால் மறைத்து விமான விபத்து நடந்தால் எப்படியாக உடலை வைத்திருக்கவேண்டும் என்ற நிலையில் முகத்தை பாதுகாத்திருக்கவேண்டும். சிறுவயதில் இருந்து பயின்ற கராட்டி பயிற்சியும் உதவியிருக்கும். அவளது பெண்மையின் பிரத்தியேக அங்கங்களை தவிர மற்ற இடங்கள் கண்டிப் போய்விட்டதாக சுந்தரம்பிள்ளைக்கு தெரிந்தது. இப்படி ஒரு பெண்ணை அடிப்பதற்கு ஒரு மனிதனால் எப்படி முடிந்தது? அதுவும் அவளோடு பல வருடம் தாம்பத்தியம் செய்து அவளது உடலோடும், உள்ளத்தோடும் உறவாடிய ஆண் மகனால் தனது ஜன்ம விரோதியை அடிப்பது போல் அடித்து துவைத்துப் போடப்பட்டிருக்கிறாள். இப்படியான வன்முறை அந்த அறையில் நடந்திருப்பதை நினைக்க முடியாமல் இருந்தது.

ஷரன் போய் கட்டிலில் விழுந்து போர்வைக்குள் தனது நிர்வாணத்தையும் காயங்களையும் மறைந்துக்கொண்டு படுத்தாள்.

சுந்தரம்பிள்ளைக்கு அதன் பின்புதான் நாக்கில் ஈரம் கசிந்து பேச்சை துவக்க முடிந்து. அது கூட சரளமாக வரவில்லை. விட்டு விட்டுத்தான் வந்தது.

‘என்ன நடந்தது ஷரன்? இவ்வளவு மோசமாக யாரால் தாக்கப்பட்டாய்?

அவளது போர்வைக்குள் இருந்தபடி ‘ எனக்கு யார் வில்லன் இருக்கிறான் கிரிஸ்ரியனைத் தவிர?

‘இவ்வளவு மோசமாகவா?’

உனக்கு உட்காயங்கள் தெரியவில்லை. அவனால் வெளிக்காயம் தெரியாமல் அடிக்கமுடியும்.

‘ம்’’

உனது கமராவால் என்னை இப்படியே போட்டோ பிடித்துக்கொள்வாயா?

‘முதல் ஏன் இது நடந்தது எனச் சொல். அதன்பின்பு போட்டோ பிடிப்பதை பற்றிப் பேசுவோம்.’;

‘நான் சிறிது முன்னால் சொப்பிங் செய்ய விரும்பி வந்தபோது இந்தப் படுக்கையில் ஒரு எஸ்கோட் பெண்ணுடன் உடல் உறவில் இருந்தான். அவனுக்கும் எனக்கும் நடந்த கைகலப்பில் எனக்கு வந்த காயங்கள் இவை’

‘உன்னை மிகவும் மிருகத்தனமாக தாக்கி இருக்கிறான். நீ பொலிசுக்கும் டாக்டரிடம் செல்ல வேண்டியது இப்பொழுது அவசியம். நான் எனது விமானப்பயணத்தை இரத்து செய்து விட்டு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். இந்த மாதிரி அரக்கத்தனத்தை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை.

‘முதல் என்னை போட்டோ எடு’ எனச் சொல்லி விட்டுப் படுக்கையில் இருந்தபடி அந்த ஹோட்டேல் அறையின் சகல விளக்குகளையும் போட்டு விட்டு போர்வையை விலக்கி படுக்கையில் அமர்ந்தாள்.

‘நான் எடுக்கிறேன். உனது அண்டவெயரையும் பிராவையும் போடுகிறாயா. பார்பதற்கு கஸ்டமாக இருக்கிறது’

‘நான் அண்டவெயரை போட்டால் இடுப்பில் உள்ள காயத்தை முழுவதாக எடுக்க முடியாது. அதேபோல் பிராவை போட்டால் முதுகுக் காயம் மறைந்து விடும். எனது காயங்களை எடுத்து பாதுகாப்பாக வைக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் அவன் மீது ஏதாவது செய்வதற்கு எனக்குச் சாட்சியம் தேவை. என்னை இந்த நிலையில் பார்க்கும் போது உனக்கு பரிதாபம்தான் வரும். காம உணர்வு வராது என்பது எனக்குத் தெரியும்.’

வேறு வழியில்லாமல் தனது பெட்டிக்குள் இருந்த கமராவை எடுத்து தயக்கத்துடன் பல கோணங்களில் படம் எடுத்தான் சுந்தரம்பிள்ளை.

இரண்டு கைகளை உயர்த்தி முதுகுக் காயங்களை கட்டியபடி ‘கிறிஸ்ரியனுக்கு எதிராக நான் இங்கே வழக்குப் போடப் போவதில்லை. நான் அவனைக் கொலை செய்யப் போகிறேன்’
அவளது ஆத்திரமும் காயத்தின் வலியும் அப்படிப் பேச வைக்கிறது. அவளது வார்த்தைகளுக்கு எப்படியாக அர்த்தம் கர்ப்பிப்பது என்பதும் புரியவில்லை. ஆனால் இவளால் இந்த வலியில் அழாமல் இருக்க முடிகிறது. அது பெரிய விடயம். சாதாரண பெண்களாக இருந்தால் கதறிய படி இந்த ஹோட்டேலை விட்டே ஓடிப்போயிருப்பார்கள். அல்லது அம்புலன்சுக்கு அழைப்பு விடுத்து ஆர்ப்பாட்டம் பண்ணியிருப்பார்கள். அவளது மன நிலையை நினைத்து பார்க்கவோ ஆறுதல் சொல்வதோ மிகக் கடினமான காரியமாகப்பட்டது. ஏதாவது சிறு உதவி மட்டும் மனிதாபிமானமாகவோ நட்பு முறையிலோ இப்பொழுது செய்ய முடியும். இது கணவன் மனைவி விவகாரமானதால் சிக்லானது மட்டுமல்ல. இருவரது எதிர்காலத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

‘இப்பொழுது எங்கே கிறிஸ்ரியன்;?’

‘என்னை அடித்துவிட்டு அந்த வேசையை கூட்டிக் கொண்டு வெளியே சென்றவன்தான் இன்னும் திரும்பி வரவில்லை.’

சுந்தரம்பிள்ளையின் வற்புறுத்தலின் பின்பு பிஜாமாவை அணிந்து கொண்டாள். அவள் உடுத்தியதும் அறைக்கு உணவு கொண்டு வரும்படி தொலைபேசியில் சுந்தரம்பிள்ளை வரவேற்புப் பகுதியில் சொன்னதும் சிறிது நேரத்தில் உணவு வந்தது.

உணவு கொண்டு வந்த பரிசாரகன் தன்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக பாத்ரூமுக்குள் மறைந்தாள். அவன் வெளியேறியதும் முகத்தைக் கழுவித் தலைமயிரை ஒதுக்கிக் கொண்டு வெளியே வந்து அந்தக் கட்டிலில் அமர்ந்தாள்.

தனது அழகான உடலையும் அறிவையும் தனது தேவைகளை நிறைவேற்றும் துருப்பு சீட்டாக வைத்திருந்தவள். இந்த மாதிரியான அலங்கோலத்தில் அன்னியன் ஒருவன் பார்ப்பதை விரும்பாதது புரிந்து கொள்ள முடிந்தது.

‘ஏதாவது ஒயின்மன்ற்றாவது வாங்கி வரவா. உன்னை இப்படிப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் நிற்பதற்கு எனக்கு அந்தரமாக இருக்கிறது. ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால் தயங்காமல் கேள்’

‘எனது உடல் வலியில் அந்த வேசைமகனில் மேல் உள்ள கோபம் தங்கியிருக்கிறது . அவனை கொலை செய்யும் எண்ணத்தில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த வலிக்கு நான் மருந்து எடுக்க விரும்பவில்லை. இப்பொழுது நீ இந்த அறையில் இருப்பதை விட எனக்கு பெரிய உதவி ஒன்றுமில்லை. மூன்று மணியில் இருந்து எட்டு மணிக்கு நீ வரும் வரையில் நான் வாயால் முனகிக் கொண்டும் மனத்தில் குமுறிக் கொண்டும் படுத்திருந்தேன். நீ வராமல் இருந்தால் இரவு முழுவதும் இப்படியேதான் பசியோடு இருந்திருப்பேன்.’

அவளது வேதனைக்கோ கோபத்திற்கோ ஆறுதல் சொல்லமுடியாது. குறைந்த பட்சம் அதை வளர்காமல் இருப்பது நல்லது என சுந்தரம்பிள்ளை மவுனமாகினான்.

மீண்டும் மனம் கேட்கவில்லை

‘இவ்வளவு காயத்துடன் நீ டொக்டரைப் பார்க்காதது நல்லதல்ல’

எந்தப் பதிலும் சொல்லாமல் உணவில் சிறுபகுதியை அவள் உண்ணத் தொடங்கிய போது அவளோடு அந்த உணவை பகிர்ந்தான் சுந்தரம்பிள்ளை.

இப்பொழுது நிலமை சங்கடத்தை அளித்தது. சுந்தரம்பிள்ளைக்கு அந்த ஹோட்டலில் அறையில்லை. ஷரனது அறையில்தான் இரவைக் கழிக்க வேண்டும். இந்த நிலையில் அவளைத் தனியே விட்டு விட்டு போவதும் இயலாத காரியம். அவளது அறையில் இருந்த சோபாவில் சுந்தரம்பிள்ளை சாப்பிட்டு விட்டுப் படுத்தபோது நித்திரை வரமறுத்தது. கிறிஸ்றியனின் பெயரில்தான் இந்த அறையுள்ளது. அவன் வந்து கதவு தட்டினால் இந்த அறையில் இருக்கும் என்னையும் அடிப்பதற்கு முயல்வான். கராத்தேயில் கறுப்பு பெல்ட் பெற்று காரத்தே ஆசிரியராக இருக்கும் அவனுடன் கைகலப்பில் எதிர்ப்பது முடியாத காரியம். ஷரன் மாதிரி காயங்கள் ஏற்படலாம் என்பதும் அதன் பின்பு இப்படியான விடயங்களை எப்படி மற்றவர்களுக்கு சொல்லமுடியும்? அதிலும் சாருலதாவுக்கு புரியவைத்து நிரபராதி எப்படி நம்ப வைக்க முடியும்? அந்த நேரத்தில் ஷரன் என்ன சொல்லுவாள் என்பதும் நம்ப முடியாது. ஒவ்வொரு நேரத்திலும் மாறுவதும் தேவையில்லாமல் பொய் சொல்லுவதுமாக இவளது இயல்பு. சாதாரண காலங்களிலேயே மெல்பேன் காலநிலையாக மாறுபவள். இப்பொழுது இவள் பொலிசுக்கு போவதானல், நாம் உதவி செய்வது மனிதாபிமானமாக இருக்கும். அதைவிட்டு தனக்கு காவலாக படுத்திரு எனக் கேட்கிறாள். எக்காலத்திலும் புதிராக இருக்கிறளே?.

சாம் , ஷரனைப் பற்றிய கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது. “ மர்லின் மன்றோவாகவும் பின்பு மதர் திரேசாவாகவும் மாறுவாள். எக்காலத்திலும் இரக்கமோ மோகமோ கொளளாதே”

எங்வளவு கடுமையான வார்த்தைகள்?

இப்படிப் பல நினைவுகள் மனத்தைக் குடைந்தன.

இடைக்கிடை ஷரனின் முனகல் கேட்டது. ஆரம்பத்தில் அதைப் பொருட்படுத்தவில்லை. முனகல் பெரிதாகியதும் அவற்றின் இடைவெளிகள் குறைந்து வந்த போது வேறு வழியில்லை.

‘ஷரன், என்ன செய்கிறது?’

‘உடல் முழுவதும் வலியாக இருக்கிது. மூச்சு விடுவது கஷ்டமாக இருக்கிறது. வேசைமகன் விலா எலும்பை உடைத்துவிட்டானா தெரியவில்லை.’

அருகில் சென்றதும் ‘அம்புலன்ஸை அழைக்கட்டுமா’

‘இந்த கட்டிலில் வந்து இரு’

மெதுவாக ஓரத்தில் இருந்தவனிடம்,

‘முதுகின் கீழ் கையை கீழே வைத்து என்னை சிறிது நகர்த்தி விடு. நகரவோ திரும்ப முடியாமலோ இருக்கிறது’

முதுகில் கீழ் கையை வைத்துத் தூக்கிவிட்டதும் ‘ நீ முதுகைத் திருப்பினால் விலாவைப் பார்க்கிறேன்’

‘நீ பார்க்கத் தேவையில்லை. எனக்கு பக்கத்தில் படுத்துக் கொள். கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

இவளுக்கு என்ன நடந்தது. அடித்ததில் மூளையில் ஏதாவது பிசகிவிட்டதா? இல்லை.என்னை பரிசோதித்துப்பார்க்க விரும்புகிறாளா?

‘ நீ இருக்கும் இந்த நிலையிலா? நீ என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறாய்’

‘உனக்குத் தெரியும்தானே சிவா. காதல் செய்தால் உடலில் இருந்து ஒக்சிரோசின் வலி போக்கும் இரசாயனங்கள் உருவாகும் என்று. அதனால் எனது வலி நிவாரணத்துக்கான மருந்தை உன்னிடம் இருந்து யாசிக்கிறேன்’ என இளநகையுடன் கையை நீட்டினாள்.
சுந்தரம்பிள்ளை பரிதாபமான அவளது கண்களைப் பார்த்தபடி கண்ணருகே இருந்த காயத்தில் உதட்டால் மெதுவாக முத்தமிட்டபோது அவள் தலையின் மயிரை கோதிப் பிடித்தபடி ‘நீ எத்தனை நாள் என்னை காமத்துடன் பார்திருக்கிறாய். ஒவ்வொரு நாளும் என்னைக் காணும்போது உனது கண் அசைவுகள் என்னைத் தொடர்வதை எனக்கு தெரியாது என நினைத்தாயா’? எதற்காக தைரியமில்லாத ஹிப்போக்கிரசியான ஆண்மகனாக இருக்கிறாய்?

‘உன்னைக் காமத்துடன் பார்க்வில்லை. அல்லது உன்னில் ஆசையில்லை என நான் எக்காலத்திலும் சொல்லமாட்டேன். உன்னழகின் கவர்ச்சி உனக்குத் தெரியும். நான் உன்னைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உன்னைப் போன்ற அழகியைப் பார்த்து எந்த ஆண்மகனால் அப்படி இல்லை என எப்படி சொல்ல முடியும்? இன்றைக்கு விடயம் வேறு. இப்படி புலியால் வேட்டையாடப்பட்ட மானாக அடிபட்டு உடல் புண்ணாகி இருக்கும் நிலையில் எனக்கு உன்னில் காம உணர்வு எப்படி வரும்? நீயே அதை ஆரம்பத்தில் சொன்னாயே?

‘உன் உதாரணம் கவித்துவமாக இருக்கிறது. ஆனாலும் உண்மையில் நீ பொய் சொல்கிறாய். கிறிஸ்ரியனுக்கு பயப்படுகிறாய். உண்மையா இல்லையா?’ எனசிரித்தபடி தலையை உயர்த்திவிட்டு மீண்டும் முனங்கினாள்.

‘அதுவும் உண்மைதானே. எந்த நேரத்தில் உனது கணவன் வந்து கதவை தட்டினால் என்பாடும் உன் கதிதான். ஒரு வித்தியாசம் நான் எஸ்கோட் இல்லை’

‘அவனை நான் எதிர்பார்க்கிறேன். அந்த வேசைமகன் நான் பார்க்கும்படி விபசாரியை பணம் கொடுத்து அறைக்கு கூட்டி வந்து புணர்நதான். அவன் உன்னோடு நான் ஒன்றாக இருப்பதை இந்த அறைக்கு வந்து பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்.’
‘அப்ப இருவரும் ஒன்றாக வைத்தியசாலைக்குப் போக வேண்டிவரும்.;’

படுக்கைக்கு அருகில் இருந்த விளக்கை அணைக்க முயன்ற சுந்தரம்பிள்ளையிடம் எனக்கு ‘இந்த நேரத்தில் வெளிச்சம் வேண்டும்’ என்றாள்.

தயக்கத்துடன் கட்டிலின் அருகில் அமர்ந்தும் ‘சிவா நான் சில மணி நேரமாவது வலியை மறந்து உன்னோடு சந்தோசமாக இருக்கு விரும்புகிறேன்’ என கைகளால் தலைமயிரை பலமாக இழுத்தாள்

‘ரிலாக்ஸ் நான் உன்னை விட்டு ஓடமாட்டேன்.’

தனது கையை எடுத்துவிட்டு தனது கழுத்தை தலைகணியில் அழுத்தியபடி ‘என் உடல் காயம் மனக்காயத்தின் வலி உனக்கு தெரியாது’

‘ம் உண்மைதான் ஆனால் விருந்தாக சாப்பிடுவதா இல்லை அவசரமாக தட்டிப் பறித்து சாப்பிடுவதா என்பதை நீயே முடிவு செய்துகொள். ’

‘அப்படியானால் விருந்தாக பரிமாறுவோம்’
—-
ஒரு மணிநேரத்தில் எழுந்து குளியலறைக்கு சென்று திரும்பியவள் மீண்டும் தனது பிஜாமாவை போட்டுக் கொண்டு ‘ ஹா ஹா உனது வார்ததைகளை பொய்யாக்கி விட்டேன்’ எனக்கூறியபடி சிவாவின் தலையைத் தடவினாள்.

படுக்கையில் இருந்து எழுந்தபடி ‘’நீ கிறிஸ்ரியனில் மேல் இருந்த ஆத்திரத்தை இதன் மூலம் தணித்துக்கொண்டாய். இதனால் இருவருக்கும் என்ன கிடைக்கும்?

‘நான் உன்னில் ஆசைப்பட்டதில்லை. ஆனால் மரியாதை வைத்திருந்தேன். நீ நான் பார்க்காத போதெல்லாம் என்னைப் பார்ப்பதை நான் அறிவேன். இதைத் தெரிந்ததால்தான் நான் உன்னை பக்கத்தில் படுக்க அழைத்தேன். விருப்பமில்லாமல் எனக்காக வந்தாய் என்று வைத்துக் கொண்டாலும் என்னில் ஆசை இல்லாமலா இப்படிக் காதல் புரிந்தாய்? நான் சுயநலமாகத்தான் உன்னை அழைத்தேன் என ஒப்புக்கொள்கிறேன். கிறிஸ்ரியனைத் தவிர்ந்து நான் காதல் புரிந்த ஒரே ஆண் நீதான். அது எனது உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி வலிகளை குறைத்தது. நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். இதைத் தவிர உன்னிடம் ஒரு கடன் தீர்க்கவிருந்தது.

‘அது என்ன கடன்?

‘நினைவில்லையா ஒரு நாயை நான் ரெம்பரேச்சர் பார்க்கவில்லை என்று நீயும் சாமும் என்னை அவமானப்படுத்திய போது இந்த முறை நீங்கள் வென்றீர்கள் என சொன்னேன். உன்னை கொஞ்சம் மாட்ட வேண்டும் என்று என்னிடம் ஒரு திட்டம் மனத்தில் இருந்தது’ என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

‘நான் எத்தினை அழகான பெண்களை காமத்துடன் பார்த்திருந்தாலும் என் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணிடமும் உடலுறவு கொண்டதில்லை. நீ என்னைத் திட்டம் போட்டுக் கவிழ்த்து விட்டாய்.’ பொய்யான கோபத்துடன்.

‘கவலைப்படாதே. என்னில் எந்த நோயும் இல்லை. கீழைத்தேச மனச்சாட்சிக்கு, குற்ற மனப்பான்மை கொஞ்ச நாள்தான் மனச்சாட்சிக்கு உறுத்தும். எனக்கு கிறிஸ்ரியன் அடித்திருக்காமல் இருந்து ஏதாவது சந்தர்ப்பவசமாக உண்னோடு இப்படி நடந்திருந்தால் எனக்கும் இப்படி அந்த உணர்வு இருக்கும். எனக்கு இரண்டு விதமான உதவிகளைச் செய்திருக்கிறாய். கிறிஸ்ரியன் என்னை அடித்து அதன் மூலம் நீ ஒரு பெண்ணில்லை என்று கூறி எனக்கு முன்பாக வேறு பெண்ணுடன் உறவு கொள்வதற்கு முடியும் என்பதை தெரிவிக்க நினைத்தான். எனக்கு அதே போல் நான் அடி வேண்டிய பின்பும் உன்னோடு உறவு கொண்டது எனது அகஉணர்வை எனது காம உணர்வுடன் தொடர்புபடுத்தி என் இருத்தலை உணர்ந்து கொள்ள முடிந்ததால் நான் சந்தோசமடைந்தேன். இல்லாவிடில் எனக்கே என்னில் சந்தேகம் வந்து என்னை என் தேகத்தில் என் பெண்மையை தேடியிருப்பேன். கிறிஸ்ரியன்; மேல் உள்ள ஆத்திரத்தால் பழிவாங்கும் உணர்வுடன் என்னால் உன்னோடு உடல் உறவை சந்தோசமாக அனுபவிக்க முடிந்தது. இதனால் எனது உடல் வலி கூட தொலைந்து விட்டது. நித்திய காமத்தில் இருக்கும் ஆண் வர்க்கத்தால் என் தேடலைப் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆணும் தனது மனைவியை விட்டு வேறு பெண்ணுடன் உடல் உறவு கொள்ளும் போது தன் மனைவின் அகத்தை, பெண்மையை அவமானப்படுத்தி அலையவைக்கிறான். இது பெண்களுக்கும் பொருந்தும் என்றாலும் பெண்கள் இதை இலகுவாக செய்வதில்லை. ஆணோ மலசலம் கழிப்பது போல் இலகுவாக செய்கிறான். நான் இந்த நிலைக்குத் கிரிஸ்றியனால் தள்ளப்பட்டேன். சிவா என்னால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது. உனது நட்பையும் உனது உதவியையும் நான் மறக்கமாட்டேன்.’ சுந்தரம்பிள்ளையின் உச்சில் முத்தமிட்டாள்.

அவுஸ்திரேலியப் பாலைவனத்தில் வாழும் காலா என்ற கிளி போன்ற பறவை நூறு கிலோ மீட்டரில் சூறாவளி அடிக்கும்போது அந்த சூறாவெளியின் மத்தியில் பறந்து அடிபட்டு கீழே காயத்துடன் விழுமாம். அந்தகாயத்தால் ஏற்படும் வலியின் மூலம் தான் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்தும் என எங்கோ ஒரு புத்தகத்தில் படித்த சம்பவத்தை உறுதிப்படுத்துவது போல் இருந்தது அவளது வார்த்தைகள். இவள் தனது காயத்திற்கு புதுவிதமாக மருந்து தேடுகிறாள் என்பது மட்டும் புரிந்தது.

அவள் கூறியது போல் மனச்சாட்சி என்பது நாம் எமது சூழலுக்கு ஏற்ப வாழ்வதற்காக மனத்தில் உருவாக்கி கொள்ளும் பதிவு. அதுவும் காலம் இடம் என வேறுபடுகிறது ஒவ்வொருவரது மனசாட்சியும் வித்தியாசமானது மட்டுமல்ல ஒன்றிற்கு ஒன்று தொடர்பு இல்லாத இருண்ட குகைகள் போன்றது. இவளது மன உணர்வு அவள் வாழ்ந்து வளர்ந்த கலாச்சாரத்துக்கும் வாழ்ந்த சூழலுக்கும் ஏற்ப அவளிடம் உருவாகியுள்ளது. கிரிஸடியனோடு அவள் வாழ்ந்த குடும்ப வாழ்வில் தன் இருத்தலை அடிக்கடி தொலைத்து விட்டு விளையாட்டு பொருளை தேடும் குழந்தை போல் தேடுகிறாள். ஓவ்வொரு பெண்ணும் திருமணத்திற்காக தன்னைத் தொலைப்பதை வழக்கமாக செய்து வரும்போது ஷரனுக்கு இயல்பாக அதை செய்ய முடியாதவளாக இருப்பதால் வெளியுலகில் சிறு காரியங்களுடாக, அவைமற்றவர்களுக்கு சிரிப்புக்கிடமாக இருந்தபோதிலும், அவை மூலம் தன்னை வெளிக்காட்டுகிறள். அவளது அந்தரங்க உணர்வுகளை தன்னால் எட்டியும் பார்க்க இயலாத நிலையில் எது சரியானது எது தவறானது என்பதைத் தீர்மானிப்பது கடினமானது. நடந்த விடயத்தை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் சுந்தரம்பிள்ளையின் மிகுதி இரவு கழிந்தது.

காலையில் சிட்னியில் இருந்து விமானமேறி மெல்பனில் அவளது வீட்டிற்கு வாடகைக்காரில் அவளைக் கொண்டு சென்று விட்டபோது ‘இதை எவரிடத்திலும் சொல்லாதே’ எனச் சொல்லி காமராவில் தனது படங்கள் இருந்த சிப்ஸ்யை வாங்கிக் கொண்டாள்.


அசோகனின் வைத்தியசாலை 28- இறுதி அத்தியாயம்

நோயல் நடேசன்பத்து மில்லியன் டாலர் சொத்துக்கு உரிமையாளராகிய பின், இலண்டனில் ஒரு மிருக வைத்தியசாலையில் நியமனம் பெற்றுக்கொண்டு செல்லும்போது ‘எப்பொழுதாவது இங்கிலாந்துக்கு வந்தால் என்னைப் பார்’ எனச் சொல்லி விட்டுத் ஷரன் தனது இண்டனில் வதியும் சிறிய தாயாரின் விலாசம் கொண்ட காகிதத்தை மெல்பேன் விமான நிலயத்தில் வைத்து சுந்தரம்பிள்ளையிடம் கொடுத்தாள். எங்கோ கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரம் கிலோமீட்டரில் உள்ளவர்களைத் தாக்கும் சுனாமி போல் இவள் செய்த காரியம் வேறு எந்த சராசரி பெண்ணாலும் செய்து முடித்திருக்கமுடியாது. அப்படி செய்து முடித்திருந்தாலும் இப்படி வெளிநாடு போக முடியாது. இவள் குற்றத்தின் தண்டனையில் இருந்து தப்பியதற்கு சிட்னி ஹோட்டலில் அவளோடு தான் தங்கியதுதான் காரணம் என்பது இன்னமும் சுந்தரம்பிள்ளையால் நம்ப முடியவில்லை.

அன்று நடந்த விடயங்கள் தற்செயலானவையா? இல்லை இவளால் திட்டமிடப்பட்டதா? அல்லது சந்தரப்பத்திற்கு ஏற்றபடி சமயோசிதமாக நடந்து கொண்டு தன்னைப் பாதுகாத்தாளா?

பலமுறை கேட்டாலும் விடைதெரியாத விடுகதையாக அவள் இருந்தாள்

ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை அவிழ்க்க முடியாத புதிராக மட்டும் அல்லாது தான் அவளுடன் சேர்ந்து பிணைந்து விடப்பட்டதாக சுந்தரம்பிள்ளை நம்பினான். அவளில் விருப்பம் இல்லை என விலகிவிட முடியாது. அதேவேளையில் விரும்பியும் உண்மையான நட்புடன் இருக்க முடியாத தன்மை இவளுடன் தொடர்ந்து வருகிறது. வைத்தியசாலையில் மற்ற எவரும் ஷரனுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாத நிலையில் தான் ஒருவனாக அவள் நாட்டை விட்டுச் செல்லும் வரையும் அவளுக்கு உதவியாக இருந்தது மனிதாபிமானமான நட்பா இல்லை காமம் கலந்த உணர்வின் வெளிப்படுத்தலா என அகத்தில் அடிக்கடி வினாவிக்கொண்டு விடையற்றவனாக சுந்தரம்பிள்ளை இருந்தான்

அவள் விமானத்தளத்தின் கஸ்டம் பகுதியில் சென்று ஒரு கையில் பெட்டியும் மறுகையில் கையில் மாக்கசை பிடித்தபடியும் செல்லும் அவளது உருவம் விமானநிலயத்தின் கதவுகளுக்கு அப்பால் மறையும்வரை அங்கு நின்றான். உருவம் மறைந்தபின் அந்தக் காட்சி, நிழலாக அழுத்தமாக அவனது நெஞ்சில் செதுக்கப்பட்டது. உடனே விமான நிலயத்தை விட்டு போக விரும்பினாலும் முடியவில்லை. சில நிமிடத்தில் அருகே உள்ள கபேயில் இருந்து காப்பியை அருந்தியபடி கடந்த சில மாதங்களில் நடந்த விடயங்களை அசை போட்டபோது அவை சினிமாவில் அல்லது ஒரு சீரியலில் வருவது போன்ற சம்பவங்களாக அவை இருந்தது.

சிட்னியில் இருந்து வந்தபின் வைத்தியசாலைக்கு வராமல் தனது இராஜினாமாக் கடிதத்தை அனுப்பியிருந்தாள் என்ற விடயம் வைத்தியசாலையில் பேசப்பட்டது. அது சம்பந்தமாக ஷரனைத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என நினைத்தாலும்,அது நடக்கவில்லை. சுந்தரம்பிள்ளையின் தயக்கத்துக்குப் பல காரணங்கள் அவற்றில் முக்கியமானது கணவன் மனைவி சண்டையில் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் அவளுடன் உடலுறவு கொண்டு இன்னும் விடயத்தை சிக்கலாக்கியது. ஷரனுக்கு கிறிஸ்ரியன் அடித்த விடயத்தைச் சொல்லி அவளுக்கு உதவிய விடயத்தை சாருலதாவுக்கு சொல்லியபடியால் மேற் கொண்டு விடயங்கள் சிக்கலாகுவது தவிர்க்கப்பட்டது. சாருலதாவுக்கு தன் கணவன் இரவில் அடிபட்ட பெண்ணுடன் தங்கியிருந்த விடயம் தெரிந்தாலும் வித்தியாசமாக கேட்கவோ,சந்தேகப்பட்டு நினைக்கவோ இல்லை என்பது அவளது நடத்தையில் தெரிந்தது. அதேவேளையில் சுந்தரம்பிள்ளைக்கு ஷரனோடு இருந்த அந்த இரவு பல நாட்களாக மனத்திரையில் அடிக்கடி சினிமாவாக ஓடியது.

இரண்டு கிழமையில் ஒரு நாள் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்தத் தொலைபேசியில் பேசியவர் மெல்பேனில் ஒரு பெரிய லோயர்களின் கம்பனியின் பெயரைச் சொல்லி அங்கு வேலைசெய்வதாகவும்,தனது பெயர் நிக் லோசன் என அறிமுகப்படுத்தி விட்டு தான டொக்டர் ஷரன் பேட்டின் வழக்கறிஞர் எனக்கூறினார்.

ஷரனுக்கு மணவிலக்கு ஏற்பாடு செய்யும் வழக்கறிஞராக இருக்கவேண்டும். சிட்னியில் அவளை ஒரு கொடிய மிருகத்தை அடிப்பதிலும் பார்க்கக் குருரமாக அடித்தவனுடன் தொடர்ந்து ஒன்றாக குடும்பம் நடத்த விரும்பாமல் மணப்பிரிவிற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதில் சிட்னியில் அடித்ததற்கு சாட்சி சொல்ல அழைக்கக் கூடும் என நினைத்த சுந்தரம்பிள்ளைக்கு அந்த வழக்கறிஞரின் அடுத்த வசனம் உடலை வியர்க்கப் பண்ணியது. கற்பனைக்கப்பாற்பட்ட அதிர்ச்சியைக் கொடுத்து உயிரை உடலில் இருந்து வெளியே இழுத்து மயக்க நிலைக்கு அழைத்து செல்வதுபோல் இருந்தது.

‘ஷரன் தனது கணவனைக் கொன்றதாக கூறும் வழக்கில் ஆஜராகும் பரிஸ்டருக்கு நான் உதவி செய்கிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை அந்த வழக்கை மெல்பேன் நீதிமன்றத்தில் எடுக்கிறார்கள். உங்களைச் சாட்சிக்கு வரும்படி அழைக்க விரும்புகிறோம்.’

வார்த்தைகள் வெளி வரமறுத்ததால் சிறிது நேர மவுனத்தின் பின்பு சுதாரித்துக் கொண்டான்.

‘மன்னிக்கவும்’

‘பரவாயில்லை. இப்பொழுதுதான் கேள்விப்படுகிறீர்கள் என நினைக்கிறேன்’

‘உண்மைதான்’

‘எல்லா பத்திரிகை, தொலைக்காட்சியிலும் வந்தது. உங்களுக்குத் தெரியும் என்பதால்
நேரடியாக விடயத்திற்கு வந்தேன்’

‘எனக்கு இந்தக் கொலையை பற்றி எதுவும் தெரியாதே. என்னால் என்ன சொல்லமுடியும்?’

‘சிட்னியில் ஹோட்டலில் அடித்தது சம்பந்தமாக மட்டும்தான் உங்களிடம் கேட்கப்படும்.’.

‘நான் வந்து அதைக் கூறமுடியும்’

‘வெள்ளிக்கிழமை பத்துமணிக்கு வழக்கு மெல்பேன் நீதிமன்றத்தில் தொடங்குகிறது. அதைபற்றிப் பேசுவதற்கு ஒன்பது மணியளவில் உங்களைச் சந்திக்க விரும்புகிறோம்.’

அவரது தகவலின்படி சிட்னியில் இருந்துவந்த சில நாட்களில் தகப்பனின் வேட்டைத் துப்பக்கியால் கிறிஸ்ரியனை சுட்டுவிட்டு பொலிசில் சரணடைகிறாள். அந்த வழக்கில் சிட்னி ஹோட்டலில் எடுத்த படங்கள் முக்கிய சாட்சியாகின்றன.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வேலைக்குப் போகவில்லை என்பதால் நடந்த விடயங்கள் சுந்தரம்பிள்ளைக்குத் தெரியாமல் போய்விட்டது. இப்படியான விடயங்களை மணிக்கு நான்கு தடவை சொல்லும் வானொலி, தொலைக்காட்சி,பத்திரிகையில் இருந்தும் எப்படி தவறவிட்டிருக்க முடியும் என எண்ணியபடி வைத்தியசாலக்குத் தொலைபேசி எடுத்த போது எல்லோரும் பிசியாக இருப்பதால் நேரே டொக்டர் ஆதருக்கு தொடர்பு கிடைத்தது.

‘சிவா மிகவும் பாரதூரமான விடயம் ஒன்று மூன்று நாட்களுக்கு முன்பு நடந்து விட்டது. ஷரன் துப்பாக்கியால் கணவனைக் கொலை செய்து விட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.தற்பொழுது பொலிஸ் ரிமாண்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது’ என மிக மனவருத்தத்துடன கூறினார்.

அந்த வழக்கில் சாட்சியாக அழைக்கப்பட்டதையும் அத்துடன் சிட்னி ஹோட்டலில் நடந்ததையும் சுந்தரம்பிள்ளை சொன்னான்.

‘அப்பொழுது பொலிசுக்குப் போய் இருந்தால் இந்த கொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்’

‘பலமுறை வற்புறுத்தியும் ஷரன் கேட்கவில்லை. காயங்களுக்கு டாக்டரை பார்க்கும்படி கேட்டபோது மறுத்துவிட்டாள். அந்த விடயத்தை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்பதால் நான் அதைப் பற்றி எவரிடமும் கூறவில்லை. அன்று இரவு முழுவதும் அவனைக் கொலை செய்வேன் எனப் பல முறை கூறினாள். அது அவன் மிருகத்தனமாக அடித்ததில் ஏற்பட்ட வலியால் சொல்லும் வார்த்தைகள் என நினைத்தேன்.’

‘வைத்தியசாலைக்கு ஏற்கனவே இராஜினாமா கடிதத்தை அனுப்பியதால் எங்களுக்கும் எதுவும் தொடர்பு இருக்கவில்லை,அதிலும் தனிப்பட்ட காரணம் என கடிதத்தில் எழுதி இருந்ததால் எதையும் அனுமானிக்கவும் முடியவில்லை.’

‘நான் கேள்விப்பட்டது மற்றும் புரிந்து கொண்டதன்படியும் கடந்த மூன்று வருடங்கள் அவளது திருமண வாழ்க்கை சீராக அமையவில்லை என்பது தெரிந்தது. அவளிடமிருந்து விவாகரத்துக்கான நடவடிக்கையைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த முடிவை நான் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை’ எனக்கூறிவிட்டு சுந்தரம்பிள்ளை தொலைபேசியை வைத்தான்.

இந்தக் காலத்தில் கொலிங்வுட் உணவு அருந்த மறுத்து வாந்தி எடுத்ததால் மீண்டும் தீவிர வைத்தியப் பிரிவில் சேர்க்கப்பட்டது. இரத்தப் பரிசோதனையில் சிறுநீரகம் முற்றாகப் பழுதாகி விட்டது என்பதைக் இரத்த பரிசோதனை அறிக்கை காட்டியது. பட்டினியாக இருப்பதிலும் பார்க்கப் மரண பயம் பெரிதாக அலைக்கழித்தது. ஒவ்வொரு முறையும் சுந்தரம்பிள்ளை தீவிர சிகிச்சைப் பிரிவின் பக்கம் போன போது நடுங்கியபடி இருந்தது.

‘எனது இறப்பை எப்பொழுது செய்யப் போகிறாய்? நான் ஒவ்வொரு கணமும் இறப்பதைப்போல் கனவு காணுகிறேன். அதில் பெரிய நாய்களெல்லாம் வந்து என்னைக் குதறுவதாகவும், எனது குடல் வெளியே வந்து இழுபடுவதாகவும் தெரிகிறது. ஒரு கருப்பு டொபமான் நாய் எனது கனவில் அடிக்கடி வருகிறது. அது என்னைப் பார்த்தபடி குலைத்துக் கொண்டிருக்கிறது. அதனது கருமையான கண்கள் இருளைத் துளைத்தபடி என்னை ஊடுருவி செல்கிறது. காதுகள் என்னைப் பார்க்கும் போது நேராக விறைத்தபடி நிற்கின்றன. அதனது உதடுகள் விலகும்போது கோரைப்பற்கள் சொல்லமுடியாத அளவு விகாரமாக இருக்கிறது’ என நடுங்கியது.

‘கொலிங்வுட் நீ அதிக நேரம் தூக்கத்தில் கழிப்பதால் மனிதரைப்போல் கனவுகள் காணுகிறாய். உனது வாழ்நாளில் இந்த வைத்தியசாலையில் பார்த்த விடயங்கள் இப்பொழுது ஆழ் மனத்தில் வந்து போகிறது. இவையெல்லாம் தொலைக்காட்சியில் வரும் விம்பங்கள் போன்றவையே. இவைகள் உண்மையல்ல. உன்னைக் கருணைக் கொலை செய்வதைப் பற்றி எல்லோரிடமும் நான் கலந்து ஆலோசிக்க வேண்டும். நீ இந்த வைத்தியசாலையில் வளர்ந்ததால் எல்லோருக்கும் உன்னைப் பற்றிய கரிசனம் உள்ளது. மற்றவர்கள் உனக்கு விடை கொடுப்பதற்கு இரண்டு நாள் அவகாசம் கொடுக்க விரும்புகிறேன்.

‘டிராமாக்குயின் கணவனைக் கொலை செய்து விட்டாளா? . அவளுக்கு என்ன நடக்கும்?

‘மரணத்திற்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருக்கும் நிலையில் உனக்கு இப்படியான ஊர்வம்பு தேவையாக இருக்கிறது. மனிதரில் இருந்து ஒரே ஒரு வித்தியாசம்,பயத்தில் நீ கடவுளை நோக்கி பிரார்த்திக்கவில்லை. அந்த கடவுள் என்ற கருத்தாக்கம் இந்த வைத்தியசாலையில் இல்லாததால் உனக்குப் புரியவில்லை. அதாவது கடவுளை அறியாத ஆதிகால மனிதர்களின் நிலையில் இருக்கிறாய். உனக்குக் கறுப்பு டோபமானில் ஏற்பட்ட மனப்பிராந்தியை இலகுவாக மனிதர்கள் கடவுளாக்கி வடிவம் கொடுத்திருப்பார்கள். நீ பேசுவது போல எழுதவும் முடிந்திருந்தால் டோபமானை கடவுளாக்காது விட்டாலும் காலனாக்கி விட்டிருப்பாய். அது சரி எல்லா நாய்களையும் விட்டு விட்டு டோபமானில் உனது கனவு ஏன் வந்தது?’

‘இந்த வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னால் குட்டியாக இருந்த காலத்தில் நான் இருந்த வீட்டில் கறுத்த டோபமான் இருந்தது. என்னால் அந்த வீட்டின் பின்வளவிற்கு போய்வர முடியாது. வீட்டின் முன்பகுதியில்தான் எனது காலத்தை கடத்த வேண்டி இருந்தது. வீட்டின் வெளிவாசலில்தான் எனது சீவியம் நடந்தது. இந்த நிலையைச் சகிக்கமல் சில மாதங்களில் நான் அந்த வீட்டை விட்டு வெளியேறியதால் தெருவில் கண்டெடுத்த சிலரால் இங்கு கொண்டுவரப்பட்டேன்’

‘உனது சிறு பருவத்துப் பயம் ஆழ்மனத்தில் பதிந்து இப்பொழுது கனவில் வருகிறது. பதினைந்து வருடங்கள் டொபமான் வாழ்ந்த சரித்திரம் இல்லை. நீ பார்த்த அந்த டோபமான் ஏற்கனவே இறந்திருக்கலாம்’ எனச் சொல்லிவிட்டு சுந்தரம்பிள்ளை கொலிங்வுட்டை கையில் எடுத்துக் கொண்டு வைத்தியசாலையின் கொரிடோர் வழியாகச் சென்றபோது ஆதர் எதிரே வந்தார்.

‘எப்படி இப்ப கொலிங்வுட் பாடு’எனக் கேட்டபடி தோலை இழுத்து உடலின் நீர்த்தன்மையை பரிசோதித்தார்.

‘ம் பரவாயில்லை’. பசி எப்படி ? உணவு ஏதாவது —–’ கவலையுடன் ஆதர்

‘இரண்டு நாட்களாக சாப்பாடு இல்லை. சேலையின் ஏற்றுவதால் உயிர் வாழ்கிறது. இதற்கு மேல் சாப்பிடாத கொலிங்வுட்டை வைத்திருப்பது காருண்ணியமானதாக எனக்குப் படவில்லை. நான் கருணைக்கொலை செய்வதற்கு உத்தேசித்துள்ளேன். மற்றவர்களிடம் அது பற்றிப் பேச நினைக்கிறேன்’

‘வைத்தியசாலையில் செல்லப்பிராணியாக விளையாடித் திரிந்த கொலிங்வுட் துன்பப்படக்கூடாது. என்னைப் பொறுத்தவரை அது சரிதான்’ என சொல்லிவிட்டு ஆதர் தன்னுடைய அறைக்குச் சென்றார்.

கொலிங்வுட் அப்பொழுது கண்ணை மூடியபடி தனக்குக் கேட்கவில்லை என்பது போல் பாவனையில் இருந்தது.

சுந்தரம்பிள்ளை தேநீர் அறைக்கு கொண்டுக் சென்றார். அங்கு எவரும் இருக்கவில்லை.

நீ அந்த டிராமா குயினது விடயத்தைச் சொல்லவில்லை?

‘உனது கேள்வி அமரிக்காவில் கொலைத்தண்டனையில் இறக்க இருப்பவர்களினது கடைசி ஆசை போன்று இருக்கிறது. இறப்பை மூன்று விதமாக மனிதர்கள் எதிர் கொள்ளவார்கள் என படித்திருக்கிறேன். மரணத்திற்கு முன் வாழ்கையின் சகல சுகங்களையும் அனுபவித்து விட்டு போக நினைப்பார்கள். அழகிய பெண்கள் ,மதுவகைகள்,நறுமணம்மணந்தரும் ரோஜாக்கள்,
காதுக்கு இனியகானங்கள் என புலன்களின் தேவைகளை சுகிக்க வேண்டுமென நினைத்து,
அதன் அடிப்படையில் இறக்கவிருப்பவனது கடைசி ஆசையை நிறைவேற்றுவது என்ற கருத்தாக்கம் வந்தது. இந்த ஆசை நிறைவேறாவிட்டால் ஆவியாக அலைவார்கள் என் உபகதைகளை சிருஷ்டித்தார்கள். இது ஆதிமனிதனிலிருந்த,தற்போது நவீன விஞ்ஞான காலம்வரை மாறாமல் இருக்கிறது. இதற்கப்பால் முதிர்ந்த வயதில் ஆசைகளைக் குறைத்து மெதுவாக அடங்கி உயிர்விடுவது ,துள்ளிக் குதித்து பாய்ந்து கரைபுரண்டு ஓடும் நதி ஒன்றாகி, சலனமின்றிக் கடல் எது, நதி எது என அடையாளம் தெரியாமல் அமைதியாக ஒன்றாவது போன்றது. இதைத்தான் காடு செல்லுதல் துறவறம் பூணுதல்,உணவை ஒறுத்து உபவாசம் மேற்கொள்ளல். வடக்கிருத்தல் என கிழக்கத்தய ஞானிகளும் துறவிகளும் வலியுறுத்தினார்கள். இதற்கு அப்பால் மூன்றாவதாக தாங்கள் வாழும்போது செய்த அறங்கள், செயல்பாடுகள் என்பன தாங்கள் விட்டுச் சென்றவை தங்களது எச்சங்களாக வாழுகிறது என்ற நினப்பில் அரசர்களும் அறிஞர்களும் இறந்தார்கள்.மொசப்பத்தேமிய இதிகாசத்தில் கிலாகமெஸ் என்ற மன்னன் உயிர்காக்கும் செடி பறிபோனபின்பு தனது கோட்டை உறுதியான சுவர்கள் காலத்தை வெல்லும் என்று ஆறுதலடைந்தானாம். உன்னைப் பொறுத்தவரை உனது ஆசை இலகுவான முதல் வகையில் சேர்ந்தது போலத் தெரிகிறது. அதை நிறைவேற்றுவது எனது கடமை. ஷரனுக்கு மெல்பேன் நீதிமன்றத்தில் வழக்கு நாளைக்கு நடக்கிறது. அதில் நான் அவளது சார்பாக வழக்கில் சாட்சி சொல்கிறேன்.அதனால்தான் நாளை மறுதினம் உனது கருணைக்கொலைக்கு திகதி வைத்திருக்கிறேன்.’

‘அதென்ன உனக்கு அவளில் அவ்வளவு ஈடுபாடு? அது எப்போது வந்தது?“

‘மற்ற செல்லப்பிராணிகள் போலவா உன்னோடு பழகிறேன்.? உனது அறிவும் உனது அகங்காரமும் எனக்கு ஆரம்பத்திலே பிடித்துவிட்டது. அதனால் உன்னோடு இவ்வளவு ஈடுபாடாக இருக்கிறேன். அது போலத்தான் அவளது அழகும் அறிவும். அத்துடன் கர்வத்துடன் தன்னை மட்டுமே முக்கியமானவளாக நினைப்பதும் அளவு கடந்து நேசிப்பதும் அதற்காக எதையும் செய்வதும் போன்ற அவளது செயல்கள் அவளை மற்றவர்களில் இருந்து பிரித்துக் காட்டுகிறது. அது அவளின் சிறப்பாக நினைப்பதால் அவளில் எனக்கு ஒரு ஈடுபாடு என வைத்துக்கொள்.’

அப்பொழுது போலினும் பூனைப் பகுதியில் வேலை பார்க்கும் மோரினும் வந்தார்கள்.
போலின் முகத்தில் சந்தோசம் தெரிந்தது.

‘என்ன இவ்வளவு புன்னகை உன் முகத்தில் ?’

‘விடயம் தெரியாதோ. போலினுக்குப் புதிய போய்பிரண்ட் உடன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது’ என்றார் மோரின்.

‘காட்டு’ என போலினது விரல்களை பிடித்த போது அந்தப் பழைய மோதிர அடையாளம் முற்றாக மறைந்து விட்டது. இப்பொழுது அந்த விரலை அழகிய வைர மோதிரம் அலங்கரித்தது.

‘இந்த மோதிரத்திற்கு சொந்தக்கார அதிஸ்டசாலியான மனிதன் யார்?

‘பிரான்சிஸ். கம்பியுட்டர் புரோகிராமர்’ என்றாள்.

‘எனக்கு பிரான்சிசை நினைத்துப் பொறாமையாக இருந்தாலும் உன்னை நினைக்கச் சந்தோசமாக இருக்கிறது’ என்றபோது சுந்தரம்பிள்ளையின் தலையில் செல்லமாக அடித்தாள்.

‘மோரின், போலின், சனிக்கிழமை கொலிங்வுட் கருணைக் கொலை செய்யப்படுகிறது. உங்களது முத்தங்களையும், கட்டியணைப்புகளையும் கொடுப்பதற்கு அவகாசம் நாற்பத்தெட்டு மணிநேரங்கள் மட்டும்தான். அதற்கு மேல் தாங்காது’ என்றபோது கண்ணீருடன் கொலிங்வுட்டை தன்கையில் வாங்கி அதன் தலையில் உதட்டை பதித்து முத்தம் கொடுத்தபடி ‘எனது அன்புக்குரிய முதியவரே’ என மார்போடு அணைத்தாள்.

‘போலின் நான் நாளைக்கு ஷரனது வழக்கு விடயமாக மெல்பேன் நீதிமன்றத்தில் இருப்பேன். நாளை கொலிங்வுட்டை கவனிப்பதுடன் இந்தக் கருணைக்கொலை விடயத்தை எல்லோருக்கும் அறிவித்துவிடு. விளம்பரப்பலகையில் ஒரு அறிவித்தலைப் போட்டு கடைசி மரியாதையை உயிரோடு இருக்கும்போது தெரிவிக்கச் சொல்லு. சாதாரண பூனை போல் அல்ல. கொலிங்வுட்டால் எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.’

‘ஷரனது வழக்கைப் பற்றி என்ன அறிந்தாய்? என மோரின்.

‘அந்த ஹோட்டலில் நடந்த விடயத்தை தவிர எனக்கு எதுவும் தெரியாது. அவளது வழக்கறிஞர் என்னைச் சாட்சியாக வரும்படி சொன்னது மட்டும்தான் இப்பொழுது தெரிந்த விடயம்’என அந்த விடயத்துக்கு சுந்தரம்பிள்ளையால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மோரின் ஊர்வம்புகள் பேசுவதில் கெட்டிக்காரி. வாய் கொடுத்தால் பலவிடயங்களைத் தெரிந்து கொள்வதில் சாமர்த்தியசாலி. இதுவரையும் சிவா நல்ல மனிதர். நல்ல வைத்தியர் என அவள் வைத்திருந்த அபிப்பிராயத்தைக் கெடுக்க விருப்பமில்லை.

வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த அன்று சுந்தரம்பிள்ளை மெல்பேன் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள கபேக்கு ஏற்கனவே கூறியபடி சென்றபோது அங்கு நான்கு பேர் ஒன்றாக ஒரு மேசையில் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஷரனது பெண் பரிஸ்ரர்.; அவருக்கு உதவியாக நிக் லோசன் இருந்தார். இவர்களை விட மேலும் இரண்டு பெண்கள் மத்திய வயதினர். அவர்களை நிக் லோசன் அறிமுகப்படுத்திய போது ஒருவர் அவுஸ்திரேலியாவின் திருமணமான பெண்கள் குடும்பங்களில் கணவர்களால் அடித்து துன்புறத்தப்படுதலிலும், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதிலும் ஆராய்ச்சி செய்து டொக்டர் பட்டம் பெற்று, இங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேரமாக வேலை செய்பவர். மற்றப் பெண்மணி மனோவியாதி நிபுணர். இவர் விக்டோரிய சிறைகளில் வைக்கப்பட்ட பெண்கள் எதற்காக இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பதில் ஆராய்ச்சி செய்து டொக்டர் பட்டம் பெற்றவர். தற்போது சிறையில் உள்ளவர்கள் விடயமாக விக்ரோரிய அரசாங்கத்திற்கு ஆலோசனையாளர். இப்படியான மிகவும் பெரும்புள்ளிகள் ஷரனுக்கு சார்பாக வேலை செய்கிறார்கள். அந்தக் கபேயில் எப்படி ஷரனை விடுதலை செய்வது என்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுந்தரம்பிள்ளை, பெரிய சுறாக்கள் நடுவே சிறிய மீனாகத் தான் இருப்பதாக உணர்ந்தான். அவர்களது திட்டமிடப்பட்ட சட்டவாதம் – குடும்பத்தில் கணவனால் தொடர்ச்சியாக ஷரன்மீது நடந்த வன்முறையால் அவள் மனம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பாதுகாப்புக்காக பாவிக்க நினைத்த துப்பாக்கி அவர்களுக்கு இடையில் நடந்த கைகலப்பில் வெடித்து விட்டது. சம்பவத்திற்கு நேரடியான சாட்சியம் எதுவும் இல்லை. வழக்கின் முடிவு சந்தர்ப்ப சாட்சியங்களில் மட்டுமே தங்கியுள்ளது. தொடர்ந்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வன்முறைக்கு உ்டபட்டிருப்பதாதால் நடந்த கைமோசக் கொலையாக இதை எடுத்துக் கொள்வதோடு இப்படியாகப் பாதிக்கப்படும் பெண்களின் நிலையில் ஷரனுக்கு வேறு பாதுகாப்பு இருக்கவில்லை என்பதாக இருந்தது.

பேசிக்கொண்டிருந்தபோது மத்திய வயதான பெண் கவலை தோய்ந்த முகத்துடன் அங்கு வந்தார். அவரை எல்லோருக்கும் நிக் லோசன்,ஷரனின் தாயார் நிக்கோலா பேட் என அறிமுகப்படுத்தினார். ஷரனிலும் பார்க்கச் சிறிது உயரம் குறைந்து, பருமனாக இருந்தார்.
பரிஸ்டர் தனது விளக்கத்தைத் தொடர்ந்தார்.

‘ஏற்கனவே அடித்துத் துன்புறுத்தியதாக பொலிசில் கொடுத்த புகாரும் எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இன்றைக்கு நாங்கள் கொடுக்கும் ஆவணங்களைப் பார்ப்பதற்கு மட்டும் நேரம் நீதிபதிக்குச் சரியாக இருக்கும். விசாரணைகளை மேற்கொள்ள நேரம் இருக்காது’

பரிஸ்டர் பேசி முடிந்ததும் நிக் லோசன் ‘நீங்கள் அந்த ஹோட்டேலில் ஷரனை எடுத்த படங்கள் எங்களுக்கு இந்த வாதத்திற்கு பலமான சாட்சியமாகிறது.’ எனச் சொன்னபோது எல்லோரும் சுந்தரம்பிள்ளையை நோக்கித் திரும்பினார்கள். அதுவரையும் சுந்தரம்பிள்ளையின் இருப்பு அங்கு முக்கியமாகக் கருதப்படவில்லை.

இந்தப் படங்களை எடுத்ததற்கு ஷரனே காரணம் .அவள் என்னை வற்புறுத்தி எடுக்க பண்ணினாள் என அத்தனை பேருக்கும் உடனே சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்ல முடியாவில்லை.

இப்படி ஒரு வழக்கை அன்று அவள் எதிர்பார்த்து சாட்சியங்களைத் தயார் செய்தாளா? அவள் விரித்த வலையில் கிறிஸ்ரியன் மட்டுமல்ல நானும் விழுந்தேனா?

கேள்விகள்… ஆனால் பதில் இல்லாத கேள்விகள்.

மீண்டும் பரிஸ்டர் ‘சிட்னியில் நடந்த விடயத்தை டொக்டரிடம் இருந்து ஒரு அறிக்கையாக எழுதினால் அதை நீதிபதிக்குக் கொடுக்கலாம். இதன் மூலம் டொக்டரை குறுக்கு விசாரணைக்கு வரவழைப்பது அவசியமற்றதாக்கலாம். மேலும் எங்கள் அதிஸ்டத்திற்கு பெண் நீதிபதியொருவர் வழக்கை எடுப்பதாக இருக்கிறது.’

உடனடியாக நிக் லோசன் தனது மடிக்கணணியை எடுத்துக் கொண்டு தூரத்தில் இருந்த மேசையை நோக்கிச் சென்றபோது அவரைச் சுந்தரம்பிள்ளை பின் தொடர்ந்தார்.

‘ஒரு மணித்தியாலத்தியாலம்தான் நமக்கு இருக்கிறது. எனவே வேகமாக இதை எழுதி முடிக்க வேண்டும். நீங்கள் நடந்த விடயத்தைக் கூறுங்கள்’ என்றார்.

சுந்தரம்பிள்ளை ஐந்து மணியில் இருந்து இரவு பத்து மணிவரையும் நடந்த விடயங்களை ஆதியோடந்தமாகக் கூறியபோது உடனுக்குடன் அதைத் தனது மடிக்கணணியில் பதிவு செய்தார். ஒரு விதத்தில் சுந்தரம்பிள்ளைக்கும் அது சரியாக இருந்தது. எழுதிய விடயத்தைச் சொல்லும்போது இலகுவாக இருக்கும். அதைவிடச் சினிமாவில் வந்த நீதிமன்றக் காட்சிகள் குறுக்கு விசாரணையை, கொலைக்களமாக நினைக்கவைத்தது.

கணணியில் டைப் அடித்து முடித்து விட்டு அதைப் படித்துப் பார்க்கும்படி நிக் லோசன் கூறினார்.

பத்து மணிக்குச் சரியாக நீதிமன்றம் தொடங்கியது. பெண் நீதிபதி உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தார். எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

சில நிமிடத்தின் பின்பு ஷரன் இரண்டு பெண்காவலர்களால் உள்ளே கொண்டுவரப்பட்டாள். சிறிது மெலிந்திருந்தாலும் முகத்தில் கடந்த காலங்களில் இருந்ததிலும் பார்க்கப் பிரகாசமாக இருந்தது. முகத்தில் எந்த ஒரு மேக்கப்பும் இன்றி இருக்கும் போது சில வருடங்கள் குறைந்தது போல் தோன்றினாள். கண்ணில் மட்டும் கர்வமான எள்ளல் வழமைபோல் தெரிந்தது.
குற்றவாளி என ஒத்துக் கொண்டதும் தன்னைத் தாக்க வந்தவேளை, தற்பாதுகாப்பிற்காக அந்தத் துப்பாக்கியை எடுத்தபோது அதைத் தன்னிடமிருந்து கிறிஸ்ரியன் பறிக்க முயன்றபோது வெடித்த ஒரே குண்டு தலையில் பாய்ந்து விட்டது என ஷரனால் கூறப்பட்டது.

கிறிஸ்ரியன் கருப்பு பெல்ட் கராட்டி வீரர் என்பதால் அவரது கைகள் ஒவ்வொன்றும் ஆயுதம் ஒன்றிற்கு சமமானது என பரிஸ்டரால் நீதிமன்றத்திற்கு நினைவுறுத்தப்பட்டது.

ஷரனது பரிஸ்டரால் பல பத்திரங்களுடன் சிட்னி ஹோட்டலில் சுந்தரம்பிள்ளையால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அன்று வழக்கு மீண்டும் ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

—–

காலை பத்து மணியளவில் ஐம்பது பேர் வேலை செய்யும் வைத்தியசாலை வழக்கத்திற்கு மாறாக அமைதியாகிவிட்டது. இப்படியான அமைதி இந்த வைத்தியசாலையில் இருப்பது வழக்கமானதல்ல. மனிதர்களும் அவர்களது செல்லப்பிராணிகளும் வேறு திசைகளில் நடமாடும் போது செல்லப்பிராணிகள் குரைத்தோ சீறியோ தங்களது இருப்பை வெளிப்படுத்தும். அவற்றைத் தவிர்த்து வைத்தியர்கள், நேர்சுகள் என்போர் அங்கும் இங்கும் அமைதியைத் தொலைத்து விட்டு அலையும் இடமான வைத்தியசாலையின் கொரிடோர், இன்று நடப்பவர்களின் காலடியோசையை தெளிவாக கேட்கும் மயானத்தின் அமைதியை தன்வயப்படுத்தியதாக இருந்தது.

சுந்தரம்பிள்ளைக்கு இது புதுமையாகவிருந்தது. காரணம் புரியவில்லை.

நாய்களின் கூடுகளில் வாட் ரவுண்டை முடித்துவிட்டு பூனைப்பகுதியில் கொலிங்வுட்டின் இறுதி அத்தியாயத்தை ஏற்கனவே தீர்மானித்தபடி முடித்து வைப்போமெனச் சென்ற போது அங்கு வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் கொலிங்வுட்டைச் சுற்றி கூடி நின்றனர். கொலிங்வுட் அங்கிருந்த பெரிய மேசையில் வெள்ளைத்துணியில் படுத்திருந்தது. தலை கீழே தொங்கிக் கொண்டிருந்ததால் கொலிங்வுட்டின் மூக்கு, மேசைத் துணியை தொட்டுக் கொண்டிருந்தது. மிருதுவான சாம்பல் நிறமான உரோமங்கள் மென்மையற்கு இன்று முட்கள் போல் கண்ணுக்குத் தெரிந்தன. சிறுநீரக வியாதியால் இரத்தத்தில் உள்ள உப்புச் சக்தி வெளியேறி விடுவதால் தசைநார்களின் இயக்கத்துக்கு உப்பின் பற்றாக்குறை ஏற்பட்டு தசைகளின் வலிமை குறைந்து விடுகிறது. கழுத்தை நிமிர்த்தி வைப்பதற்குக் கழுத்துத் தசைகள் ஒத்துழைக்க மறுத்துவிடுவதால் பலமற்று விடுகிறது. உடலின் நீர்த்தன்மை இழப்பதால் தோலின் மிருவான தன்மை குறைந்து விடுகிறது.

மொத்த வைத்தியசாலையே ஒன்றாக வந்து இறுதியாக விடை கொடுத்து அனுப்பக் காத்து நிற்பது கொலிங்வுட்டைப் பொறுத்த வரையில் பதவியில் இருக்கும் போது இறந்த அமரிக்க ஜனாதிபதிக்குக் கொடுக்கும் ராஜாங்க மரியாதை போன்றது. ஏற்கனவே ஒரு செப்புத்தட்டு செய்யப்பட்டு அதில் கொலிங்வுட்டின் பெயரும் பிறந்த திகதி ஒரு குத்து மதிப்பாக எழுதப்பட்டிருந்தது. அந்தத் தட்டும் மேசையில் வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி கொலிங்வுட்டுக்குப் பதினைந்து வயதாகிறது.

எல்லோரும் கருணைக்கொலையை செய்வதற்கு சுந்தரம்பிள்ளையை எதிர்பார்த்துக் கொண்டு நின்றனர்.

சுந்தரம்பிள்ளையின் மனநிலை வேறு ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்க்க வைத்தது. அவுஸ்திரேலியாவில் கடைசியாகத் தூக்குத்தண்டனைக் கைதியின் கழுத்தில் சுருக்கு மாட்டிய பென்றிஜ் சிறை ஊழியரின் நிலையைப் போன்ற நிலைக்குத் தான் தள்ளப்பட்டதாக நினைக்க வைத்தது. அவுஸ்திரேலியாவில் கடைசியாக நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை 1967 ம் ஆண்டுதான் நடந்தது. தப்பி ஓடும் போது சிறைக்காவலர் ஒருவரைக் கொலை செய்ததற்காக தூக்குக் கயிற்றில் தொங்கி இறக்கும் மரணதண்டனை டொனால்ட் றயனுக்கு விதிக்கப்பட்டது. அந்த தூக்குத் தண்டனை நடந்த பென்றிஜ் சிறைச்சாலைக்கு குடும்பத்துடன் ஒரு நாள் உல்லாசப்பயணம் சென்ற போது அங்கு அந்த தூக்குகயிற்றின் நீளம் கூடினால் கழுத்தெலும்பு உடனே உடையாது. மரணம் மெதுவாகவாகத்தான் நடைபெறும். அதேபோல் நீளம் குறைந்தால் கழுத்தெலும்பு உடைவதற்குப் பதிலாக சுவாசக்குளாய் நசிந்து மூச்சுத் திணறி அதன் மூலம் இறப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். மூச்சு திணறும்போது மலம் சலம் வெளியேறி அசுத்தமாகும் என அந்தப்பகுதியில் நின்ற ஒரு இளைஞன் தெரிவித்தான்.
தனது மரணத்தை விரைவாக முடித்துவிடு என ஹொலிங்வுட்டும் கேட்டிருந்ததால் அந்தத் தூக்குக் கயிற்றின் நீளம் பற்றிய விளக்கம் மனத்தில் நிழலாடியது. இங்கேயும் ஒரு கொலைகாரராக பச்சைத்திரவத்தை இரத்தக் குளாயில் ஏற்றும்போது கொலிங்வுட்டின் இரத்த நாளத்தின் விட்டத்திற்கு ஏற்ப ஊசியின் நீளம் உள்விட்டம் இருக்கவேண்டும். வயது கூடி முதுமை அடைந்ததால் இரத்த ஓட்டம் வேகம் குறைந்துவிடுவதால் ஏற்றிய திரவம் மூளைக்கு செல்ல சிறிது நேரம் எடுக்கும். அந்த இடைவெளியில் சிறிதளவு திரவத்தால் வலிப்பு வந்தால் மலம் சலம் வெளியேறிவிடும்;. ஒரே நேரத்தில் மரணத்தை ஏற்படுத்தும் அளவு பச்சைத்திரவம் உள்ளே செல்லவேண்டும். வேலையைச் செய்யும் போது அதை முடிந்தவரை சரியாகச் செய்யவேண்டும் என்பதால் சுந்தரம்பிள்ளை அந்த ஊசியொடு அருகில் சென்றபோது இதுவரையில் மயக்கத்தில் இருந்தது போல் படுத்திருந்த கொலிங்வுட்டை மோறின் கையில் எடுத்தாள்..

சுந்தரம்பிள்ளை கொலிங்வுட்டின் முகக்தருகே சென்று கேட்டான்.

கொலிங்வுட், உனது கடைசி ஆசை என்ன?

சுந்தரம்பிள்ளையைக் கூடி இருந்தவர்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

‘டிராமா குயினுக்கும் உனக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா?

‘இருந்தது. அது வைத்தியர் போன்ற தொடர்பு’

‘எனக்குப் புரிந்து விட்டது. ஒழுங்காக என்னைக் கருணைக்கொலை செய்’

ஏற்கனவே முன்காலில் மயிர்கள் வழிக்கப்பட்டு சேலையின் குழாய் பொருத்தி இருந்ததால் ஆரம்பத்தில் நினைத்தது போல் நேரடியாக ஊசியை ஏற்றவேண்டி இருக்கவில்லை. இலகுவாக அந்த குழாயூடாக பச்சைத்திரவம் சென்றதும். கோலிங்வுட் கண நேரத்தில் மோறினின் கையில் சடலமாகியது.

ஷரனது வழக்கு மேலும் சிலதினங்கள் நடந்த போதும் சுந்தரம்பிள்ளை நீதிமன்றத்திற்கு செல்லவேண்டி இருக்கவில்லை. எழுதிய அறிக்கை மட்டும் போதுமானதாக இருந்தது என நிக் லோசன் கூறி இருந்தார். அதன் பின்பு ஷரனைப் பற்றிய விடயங்கள் பத்திரிகை, தொலைக்காட்சி வாயிலாக மட்டும் தெரிந்து கொண்டார். அவள் விடுதலையாகி ஆறுமாதத்தில் தொலைபேசியில் வீட்டுக்கு அழைத்து சுந்தரம்பிள்ளைக்கு நன்றி சொல்லி விட்டு இங்கிலாந்து போவதாகவும் விமான நிலயத்திற்கு வரமுடியுமா எனவும் கேட்டாள்.

அதே குரல். அதே ஏற்ற இறக்கம். காந்தமாக இருந்தது. மறுக்க முடியவில்லை.

ஒருவிதத்தில் இந்த வைத்தியசாலையில் வேலை தொடங்கிய ஆரம்பகாலத்தில் ஆரம்பத்தில் ரிமதி பாத்தோலியசை வில்லனாக அடையாளம் காணமுடிந்தது.அப்பொழுது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போராட்டம் போன்று இருந்தது. இப்போது நடந்த கதையில் ஷரனது பாத்திரம் என்ன? தனது பாத்திரம் என்ன என்ற சுந்தரம்பிள்ளை கேள்வியுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது ஏதோ ஒரு விமானம் மேலெழும் இரைச்சல் கேட்டது.

முற்றும்!