மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்திலிருந்து புறப்படத்தயாரானபோது ஒரு அன்பர் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாம் வெளியிடும் விருந்து கலை, இலக்கிய இதழைத் தந்தார். எதிர்மன்னசிங்கத்தின் நூல் வெளியீடு அன்றையதினம் அவரது பவளவிழாவையும் முன்னிட்டு நடந்திருந்தமையால் அந்த நிகழ்ச்சியும் கலை, இலக்கிய விருந்தாகவே அமைந்திருந்தது. அதன் சுவையை ரசித்துவிட்டு கிளம்புகையில் எனது கைக்கு வந்தது கிழக்கிலங்கை பாண்டிருப்பிலிருந்து இருமாதங்களுக்கொருமுறை வெளியாகும் விருந்து. வெல்லும் தமிழ் – எங்கள் வெல்லத்தமிழ் என்ற கவித்துவ மகுடத்துடன் இதனை வெளியிட்டுவரும் அதன் ஆசிரியர் அகரம். செ. துஜியந்தன் இதழையும் தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டார். எனக்குத்தரப்பட்டது அதன் மூன்றாவது இதழ். இவ்விதழ் வெளியாகும் ஊரில் பிறந்து வளர்ந்து, இலக்கியப்பணியும் ஆசிரியப்பணியும் புரிந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களை நினைவுகூரும் வகையில் குறிப்பிட்ட விருந்து வெளியாகியிருக்கிறது.
1939 ஆம் ஆண்டில் பிறந்து 2012 ஆம் ஆண்டில் திடீரென மறைந்துவிட்ட சண்முகம் சிவலிங்கம் எனதும் இனிய நண்பர். அவரது மறைவும் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. முதல் நாள் இரவு உறங்கச்சென்றவரை மறுநாள் காலையில் அவரது மனைவி தட்டி எழுப்பியபோது துயில் எழாமல் மரணித்திருந்தவர். அந்தத்துயிலே அவரது நிரந்தரத்துயிலானது. அதனால்தான் அவரது மரணம் எமக்கெல்லாம் பேராதிர்ச்சி. ஆனால், அவருக்கோ எவரும் பெரிதும் விரும்புகின்ற நிம்மதியான மரணம். 2005 இல் கிழக்கிலங்கை சென்றிருந்தபோது, அவரது இல்லத்தில் நடுஇரவும் கடந்த நிலையில் பேசிக்கொண்டிருந்திருக்கின்றோம். அதன் பின்னர் தொலைபேசி வாயிலாகவும் நீடித்த தொடர்பாடல் எமக்கிடையே இருந்தது. அவரது மறைவு அறிந்ததும் அவரது வீட்டுக்குத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்ததுடன், மீண்டும் ஒரு தடவை அங்கு சென்றபோது அவரது மனைவி மற்றும் மருமகளிடம் நேரில் எனது அனுதாபங்களையும் தெரிவித்திருக்கின்றேன்.
1972 முதல் எனக்கு நண்பராக விளங்கியிருக்கும் சண்முகம் சிவலிங்கம் பற்றியும் விரைவில் வெளியாகவுள்ள எனது காலமும் கணங்களும் நூலில் விரிவாக பதிவுசெய்துள்ளேன். எனக்குக் கிடைத்த விருந்து இதழில் கவிஞர் சடாட்சரன், ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோரும் அவரைப்பற்றி எழுதியிருக்கின்றனர். அத்துடன் அவரது சிறுகதையொன்றும் (காற்றில் தேய்ந்த காலடிகள்) சில கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. “எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறியல்ல, தன்னால் முடிந்ததைச்செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே!” என்ற சோக்கிரட்டீஸின் பொன்மொழியையும் இந்த இதழில் கண்டு குறித்துக்கொண்டேன். அத்துடன் மறைந்த அசோகமித்திரன் நினைவாக, அவர் 1994 ஆம் ஆண்டில் எழுதியிருக்கும் பதிவொன்றையும் விருந்து மறுபிரசுரம் செய்திருந்தது. அந்தப்பதிவின் தொடக்கமும் எழுத்தாளர்களாகிய நாம் கவனிக்கவேண்டிய விடயம்தான். அசோகமித்திரன் சொல்கிறார்: ” எழுத்தாளனை தரம் பிரிப்பது அந்த நபருடைய எழுத்துத்தான். எழுத்தாளனுக்கு நன்றாக எழுதவேண்டும், இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்ற உந்துதல்தான் விடாது இருக்கவேண்டும். அரசியல், சமூக மற்றும் பதவிச்செல்வாக்கு கொண்டு பிறரை இடித்துத்தள்ளிக்கொண்டு, மிக முக்கியமான நபர்போல மேடையிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தோன்றிவிடலாம். அப்படித்தோன்றவும் செய்கின்றார்கள். ஆனால், அந்த நபரின் இலக்கியத்தகுதியைக் கணிக்க அவர் படைப்பு ஒன்றுதான் உதவும். இந்த நிலை நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாக நான், ரசிகர் குழுக்கள், சீடர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் ஸ்தாபனங்களின் ஆதரவைத் தேடிப்போனதில்லை.”
சுமார் 63 வருடங்களுக்கு முன்னர் அசோகமித்திரன் ஏற்றுக்கொண்டிருக்கும் இந்த நிலைப்பாடானது சமகாலத்திலும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியதொன்றாகவே அமைந்திருக்கிறது. அதில் பொதிந்துள்ள தீர்க்கதரிசனம் வியப்பளிக்கிறது. அர்த்தமுள்ளது.
கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து முன்னரும் பத்திரிகைகள், கலை, இலக்கிய இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. கிழக்குத்தபால் (புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை) உதயம் ( எஸ்.டி. சிவநாயகம்) லங்கா முரசு ( செ. இராசதுரை – பித்தன் கே. எம். ஷா) பாடும்மீன் (நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், சடாட்சரன்) கவிஞன் (நுஃமான்) மண்டூரிலிருந்து பாரதி உட்பட பல கலை இலக்கிய இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. இவை தவிர இந்தப்பிரதேசங்களிலிருந்து கையெழுத்து சஞ்சிகைகளும் மலர்ந்திருக்கின்றன. வழக்கமாக சிற்றிதழ்களுக்கு நேரந்துவிடும் அபாயம் அவற்றையும் சந்தித்திருக்கின்றது. எனினும் காலத்துக்காலம் கலை, இலக்கிய சிற்றிதழ்கள் தோன்றுவதும் மறைவதும் பின்னர் இலக்கிய ஆவணங்களில் அவற்றின் பெயர்கள் பதிவாவதும் காலம்தோறும் தவிர்க்கமுடியாததே.
தற்பொழுது மட்டக்களப்பிலிருந்து மகுடம் ( ஆசிரியர் மைக்கல் கொலின்) செங்கதிர் ( ஆசிரியர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன்) பாண்டிருப்பிலிருந்து விருந்து ( ஆசிரியர் அகரம். செ. துஜியந்தன்) வெளிவருகின்றன. இவற்றின் ஆயுள், இவற்றை வெளியிடுபவர்களின் ஆர்வத்தின் வீதத்திலும், வாசகர்களின் ஆதரவிலும்தான் பெரிதும் தங்கியிருக்கிறது.
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் அம்மன் கிளி முருகதாஸ் உட்பட மற்றும் சில இலக்கியவாதிகளையும் சந்தித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு, அன்று இரவு மட்டக்களப்பு Hotel east Lagoon சென்றோம். அன்றைய தினம் இரவு கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடக்கவிருக்கும் விழாவில் இடம்பெறும் கவியரங்கிற்கும் வருமாறு சில அன்பர்கள் அழைத்திருந்தமையால், அவர்களை எங்கு எவ்விடத்தில் சந்திப்பது குறித்து நண்பர் கோபாலகிருஷ்ணன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதில் எனது உடல்நலம் குறித்த அக்கறையும் இருந்தது. அவுஸ்திரேலியா – இலங்கை நேர வித்தியாசம் ! அத்துடன் இன்சுலின் எடுக்கும் இனிமையான மனிதனுடன் இரவுப்பயணம் ! அதனால் எங்கு இராப்போசனம் ? முதலான ஆச்சரியமும் கேள்விகளும் பொதிந்த தொடர்பாடலாக அவர்களின் உரையாடல் அமைந்திருந்தது.
நாம், Hotel east Lagoon இற்குள் பிரவேசிக்கும்போது மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கணேசராஜாவும் சங்கத்தின் உறுப்பினர்களும் ஏற்கனவே அங்கு வந்து சிற்றுண்டி விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதற்குப்பின்னர்தான் கூட்டம் என்பதனால் நண்பர் கோபாலகிருஷ்ணன், என்பொருட்டு ஆறுதலும் அமைதியும் அடைந்தார். அங்கிருந்த நண்பர் பேராசிரியர் மெளனகுரு, என்னை அருகே அழைத்து ஏனைய அன்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் விருந்திலும் இணைத்துக்கொண்டார். சங்கத்தின் தலைவர் கணேசராஜா தலைமையில் கூட்டம் நடந்த மகாநாட்டு மண்டபம் அந்த ஹோட்டலில் அழகாக அமைந்திருக்கிறது. சங்கத்தின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக ஆராயவிருந்த அக்கூட்டத்தில் என்னையும் வரவேற்கவேண்டும் என்று நண்பர் கோபாலகிருஷ்ணன் தலைவரிடத்தில் ஏற்கனவே சொல்லியிருப்பார் போலும். தலைவர் என்னை வரவேற்று அங்கிருந்த உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கோபாலகிருஷ்ணன், எனது இலங்கை வருகை பற்றியும் கிழக்குமாகாணத்திற்கு வந்துள்ள நோக்கம் பற்றியும் எடுத்துரைத்து, எனது கலை, இலக்கிய மற்றும் ஊடகத்துறை பணிகளையும் கல்வி நிதிய வேலைத்திட்டங்களையும் விபரித்தார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நண்பர்கள் மெளனகுரு, கோபாலகிருஷ்ணன், ஓ.கே. குணநாதன் ஆகியோரைத்தவிர வேறு எவரையும் எனக்குத் தெரியாது. எனினும் எம்மை இணைத்திருப்பது மொழியும் நாம் நேசிக்கும் கலை ,இலக்கியமும்தான் என்று எனது உரையை ஆரம்பித்து சுருக்கமாகவே முடித்துக்கொண்டேன். அன்று நடக்கவிருந்தது அவர்களின் கூட்டம். அதில் சில நிமிடங்களை எனக்காக அவர்கள் ஒதுக்கியிருந்தார்கள்.
அமைப்புகளிலும் அவற்றின் நிகழ்ச்சிகளிலும் இளம்தலைமுறையினரை இணைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து அவையினரிடத்தில் பேசினேன். முக்கியமாக நூல் வெளியீடுகள், விழாக்களில் இளம் தலைமுறையினருக்கும் குறிப்பாக, உயர்வகுப்புகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழ் சார்ந்த எத்தகைய பணிகளிலும் அவை அரசியலாகட்டும், கலை, இலக்கியமாகட்டும், பொதுச்சேவைகளாகட்டும், முடிந்தவரையில் இளம் தலைமுறையினரையும் இணைத்துக்கொண்டு இயங்கவேண்டும் என்பதற்கு அஞ்சல் ஓட்டத்தையே உதாரணமாக்கிப் பேசினேன். மூத்தவர்கள் விட்டுச்செல்லும் நற்பணிகளை இளையோரிடத்தில் சேர்ப்பிக்கவேண்டுமானால், அவர்களையும் தம்மோடு இணைத்து அழைத்துவரல் வேண்டும்” என்றேன். எனது உரையை வரவேற்றுப்பேசிய தலைவர் கணேசராஜா அவர்கள், தங்கள் சங்கத்திடமும் அத்தகைய நோக்கங்கள்தான் இருக்கின்றன எனச்சொன்னார். அந்தச்சந்திப்பிலிருந்து விடைபெற்று கன்னன் குடா நோக்கிச்செல்லத்தயாரானோம். அப்பொழுது நேரம் இரவு 8 மணியும் கடந்துவிட்டது.
( பயணங்கள் தொடரும்)
letchumananm@gmail.com