மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (24 & 25)

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (24)

- வெங்கட் சாமிநாதன் -பன்றியாக மாறி வாழ்ந்து அந்த வாழ்க்கையில் சுகம் காணும் இன்றைய பன்றி முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்த  கதையைச் சொன்ன போது அதை மறுத்தவர் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. அல்லது மறுத்தவர்களின் வாதங்களையும் பெயர்களையும் அருண் தணிக்கை செய்துவிட்டாரோ?. அப்படி இராது என்று தான் நினைக்கிறேன். பன்றிக்கு பன்றியாக சுகமே வாழ்வதில் மறுப்பிராது .ஆனால் அதைப் பன்றி என்று நாம் அழைத்தால் அது கட்டாயம் அதன் வழியில் சீறும். ஏனெனில் அதற்கு தான் முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்தது நினைவில் இருக்கக் கூடும். . சுகம் கண்டாயிற்று. இதுதான்  சுகம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாயிற்று. அது ஆழமாகப் பதிந்தும் போய்விட்டது. பில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து, அவ்வப்போது உலகத் திரைப்பட விழாவுக்கெல்லாம் தவறாமல் போய் வந்தும், தமிழ்த் திரைப்படங்களை தராசில் எடை போட வரும்போது ஹாசினிக்கு தமிழ் சினிமாக் கலாசாரமும் அதில் தான் வாழ்வேண்டிய நிர்ப்பந்தங்களும் தான் அழுத்துகின்றன. அழுத்துகின்றன என்று சொல்வது கூட தவறு என்று நினைக்கிறேன்.

அதில் அவர் வாழ, நியாயம்  காணத் தொடங்கிவிடுகிறார். யதார்த்தம் என்று பேசிக்கொண்டே தான் தராசில் எடை போடும் படத்தின் அபத்த சங்கீதத்தையும், நடனங்களையும் சண்டைக் காட்சிகளையும் மறந்து விடுகிறார். மதுரைத் தமிழும் மதுரைத் தெருக்களும் தான் படத்தை யதார்த்தத்தில் சேர்த்து அதற்கு விமோசனம் தந்து விட போதுமானதாக இருக்கிறது. மற்றபடி வெற்றிப் பட மசாலாக்களான் வழக்கம் போன்ற அபத்தங்களையும் குரூரங்களையும் சௌகரியமாக மறந்து விடுகிறார். எதற்கு இந்த கண்றாவிகள் எல்லாம்? என்று ஒரு இயக்குனரையோ தயாரிப்பாளரையோ கூட அவர் கேட்டதில்லை. இது சுஹாசினியைப் பற்றி மட்டுமான அவலம் இல்லை. தமிழ்ப் பட பிதற்றல்களையும் அவலங்களையும் நியாயப் படுத்தும், அதில் கலையும், தரமும் காணும் சினிமாவால் வாழும் எல்லோரையும் பற்றிய அவலம் தான். அதற்கு வெளியே சினிமா, அரசியல் உலகைச் சார்ந்து வாழும் புத்திஜீவிகளின் அவலமும் தான்.  

கொஞ்ச நாள் முன் என்னைப் பற்றி எழுதியோர் பேசியோர் கூட்டத்தில் கடைசியில் நன்றி சொல்லும்போது நான் சொன்னேன். ’ நான் ஏதும் அசகாய புத்திக் கூர்மை கொண்டவனோ, அறிவுச் சிகரத்தை அடைந்தவனோ, கலைகளை, இலக்கியத்தை துல்லியமாக எடை போட்டு புதிய உலகைக் காட்ட வந்தவனோ இல்லை. என்னிடம் இருப்பது சாதாரண பொதுப் புத்தி தான். அது எல்லோருக்குமே கடவுள் கொடுத்தது போன்ற சர்க்கு தான். கடவுள் எனக்கு ஏதும் இதில் எக்ஸ்ட்ரா ரேஷன் கொடுத்து விடவில்லை. ஸ்பெஷல் ப்ராண்ட் லேபிள் ஒட்டியும் தந்து விடவில்லை. ஆனால் எனக்கு என் பொதுப் புத்திக்குப் படுவது தான் மற்ற எல்லோருக்கும் படுகிறதுதான்.. இருந்த போதிலும் அவர்கள் தம் மனத்தில் பட்டதை ஏன் சொல்வதில்லை?. நான் ஏன் இதில் தனித்துக் கருத்து சொல்லும் தனிப் பிறவியாகிப் போகிறேன்? “ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஒடினாள்” என்று கோர்ட்டில் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு பதினைந்து நிமிடம் வயிற்றை எக்கிகொண்டு, முகத்தை விளக்கெண்ணை குடித்தவன் மாதிரி அல்லது கழிப்பறைக்கு ஓட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானவன் மாதிரி கோணிக்கொண்டு கூச்சல் போடுவது நடக்காத விஷயம். அது பிதற்றல். மூளைக் கோளாறு பிடித்த விஷயம் என்று சொல்ல ஏதும் எனக்கு ஐன்ஸ்டைனின் மூளையை கடவுள் கடாட்சிக்கத் தேவையில்லை. படித்திருக்கக் கூட வேண்டாம். சாதாரண, படு சாதாரண பொதுப் புத்தி போதும் கடவுள் அந்தப் பொதுப் புத்தியை எல்லாருக்கும் கொடுத்திருந்த போதிலும்,  அதை யாரும் சொல்லவில்லை. அந்த கூச்சல் வரலாற்றுத் திருப்பத்தை தந்துவிட்டது. கூச்சலிட்டவர் போட்டவர் நடிகர் திலகம் ஆகிவிட்டார். அடுத்த ஐம்பது வருடங்களுக்கு அந்தக்கூச்சலை அவர் நிறுத்தவில்லை. “கொஞ்சம் அமைதியாக பேசினாப் போதும். . அமைதியாக இயல்பாக நடக்கணும்” என்று சொன்ன பாரதி ராஜா “அந்த ஆளுக்கு எங்கிட்ட வேலை வாங்கவே தெரியலைய்யா” ஆகிவிட்டார்.

”கட்ட மரத் துடுப்பு போல இடுப்பை ஆட்டறா” என்று திடீரென ஒரு குத்தாட்டம் நமக்கு முன்னால் வருகி/றது என்றால், இதென்ன அசிங்கம் என்று என் பொதுப் புத்திக்கு படுகிறது. நிச்சயம் இதே மாதிரி தான் எல்லா பொதுப் புத்திகளும் உணர்ந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதை நான் சொல்கிறேன். ஆனால் வேறு யாரும் சொல்வதில்லை. ஏன்? இது ரசிக்க வேண்டிய குத்தாட்டம். இது தான் சிலப்பதிகார காலத்திலிருந்து தமிழர் வளர்த்த நடனக் கலை. அதைத் தான் நம் சினிமாக்கள் எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் முகமாக குத்தாட்டங்களை சினிமாககளில் கட்டாயமாக சேர்க்கிறார்கள் என்று சொல்லி, என் “கலையுணர்வை, தமிழ்ப் பற்றை, தமிழ் சினிமாவுக்கான என் பங்களிப்பை, மக்களுக்கு ஆற்றும் என் கலைத் தொண்டை” பறை சாற்ற வேண்டுமா? இதைத் தான் கலைஞரிடமிருந்து தான் தான் தமிழ் கற்றதாகச் சொல்லும் உலக நாயகனும், ” நடிகர் திலகம் ஒரு என்சைக்ளோபீடியா மாதிரி, எந்த இடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகம்” என்று
பிரபு தன் தந்தையிடம் தான் கொண்டுள்ள வாஞ்சையை வெளிப்ப்படுத்தியது மாத்திரமல்ல,, அத்தோடு எல்லோரும் போற்றிப் புகழ் மாலை சாற்றும் தெய்வச் சிலைக்கு தானும் ஒரு மாலை சார்த்திய மாதிரி தமிழ் நாட்டின் ஏழு கோடிப் பேரும் அதை எதிரொலிக்க, இது என்ன? எப்படி இந்த தமிழ் நாடு இப்படி ஒரு பைத்தியக் கார உலகமாயிற்று? என்று திகைப்பாக இருக்கிறது. பொதுப் புத்தி உள்ளவன் இங்கு தன் பொதுப் புத்தியோடு வாழ முடியாது தமிழ் நாட்டில் என்று தோன்று கிறது.. இத்தகைய ஊரில்  கோவணம் கட்டியவன் பைத்தியக்காரனாகத் தானே ஆவான்?

வைகை அணையின் படிக்கட்டுகளில்  இருவர் மாத்திரம்  ஏறி இறங்கி பாடிக் காதல் பண்ணிய காலம் போய் இப்போதைய தமிழ் சினிமாவின் டெக்னிக் ஹாலிவுட் படம் மாதிரி ஆகிவிட்ட நிலையில், கலை வளர்சியில்  55 வயசு காதலனும் 28 வயசு காதலியும் இன்னும் நாற்பது பேரைக் கூட்டிக் கொண்டு ஆடவேண்டியதாகி விட்டது, அதுவும் மச்சு பிச்சுவில் இல்லாவிட்டால் ப்ராங்க் பர்ட் தெருக்களில். ஆடுகிறவர்களுக்கும் வெட்கம் என்ற சமாசாரமே இருப்பது இல்லை. இது பைத்தியக் காரத்தனம் என்று தெரியவில்லை. இயக்குனருக்கும் இல்லை. 100 கோடி 200 கோடி என்று செலவழிக்கும் தயாரிப்பாளருக்கும் தெரியவில்லை. முதல் நாள் முதல் ஷோ பார்க்க 500 ரூபாய் ப்ளாக்கில் டிக்கட் வாங்கிப் பார்க்கும் ரசிகப் பெருமக்களுக்கும் இல்லை  ஆனால் சிலசமயம் கொஞ்சம் அசந்த வேளைகளில் ரிஷியாக இருந்த முன் ஜன்ம நினைவு வந்து அலைக்கழிக்கத் தொடங்கிவிடுகிறது. யாரென்று எனக்கு இப்போது சட்டென நினைவில் இல்லை. அமீரோ இல்லை சீமானோ தெரியவில்லை. அனேகமாக அமீராகத் தான் இருக்க வேண்டும். “ ஆமாம். ஒருத்தனைப் போட்டு சாத்தனும்னா பத்துப் பேர் இருக்காங்க. ஒவ்வொத்தனாவா முறை வச்சு ஹீரோ கிட்டே உதை வாங்கிட்டு போய் விழுவான்?. அந்தப் பத்துப் பேர்லெ நாலு பேர் சேந்து இரண்டு மொத்து மொத்தினா காரியம் தீந்து போகாது?.” என்று அவர் தன் படத்தில் நடந்த சண்டைக் காட்சியையே அவர் இப்படித் தான் கிண்டல் பேசினார். ஆக, சினிமா என்று வந்து விட்டால், பொது மேடை என்று வந்து விட்டால், மேடையில், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், கலைஞர் என்று யாரும் இருந்து விட்டால், பத்திரிகைக்குப் பேட்டி என்று வந்து விட்டால் போச்சு. பொதுப் புத்தியை ஏதோ கசங்கிய சட்டையை அவிழ்த்து வைப்பது போல், வைத்து விட்டு தயாராக இதுக்கு என்று வைத்திருக்கும் புது உடையும் தலைப் பாகையும் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து உளற ஆரம்பித்து விடுகிறார்கள். நேட்டிவிட்டி, செண்டிமெண்ட் மாதிரி நம் தமிழ் சினிமாவுக்கென்றே உள்ள அகராதியில் புதிதாக ஒரு வார்த்தையைக் கேட்டேன். ”பட்ஜெட் பில்ம்”.. கோடி கோடியா செலவழிக்கிற அதுவும் தினப்படி ஏறும் வட்டிக்கு வாங்கின பணத்தை செலவழிக்கிற காரியத்தில், அட எதில் தான் பட்ஜெட் பற்றிய சிந்தனை நம்க்கோ அல்லது யாருக்குமே இல்லாமல்.இருக்கு.ம்?. இப்படித் தான் நம் சாதாரண பொதுப் புத்தி நமக்குச் சொல்லும். ஆனால் நம் இன்றைய தமிழ்  சினிமா உலகில் பட்ஜெட் பில்ம் என்றால் அதற்கு அர்த்தம் ,நடனக் காட்சிக்கு  வெளிநாடு ஷூட்டிங் இல்லை. கார்கள் மோதி ஆகாயத்தில் பறக்காது. 25 கோடி கொடுக்க வேண்டிய 50 60 வயசு ஹீரோ இல்லை. இந்த மாதிரி சிக்கன சமாசாரங்கள். ஒரு சினிமா டைரக்டரோ தயாரிப்பாளரோ, சொல்றார் “ பட்ஜெட் பில்முங்க இது. கார்கள் மோதி பறக்கற சீன்னெல்லாம் கட்டுபடியாகாதுங்க” என்கிறார். . தான் படம் எடுக்கும் கதைக்கு இது தேவை. அது தேவை இல்லை என்று அவர் சிந்தனையும் பேச்சும் செல்லவில்லை. பட்ஜெட் பில்ம் கட்டுபடியாகாது. ஆகையால் முடியாது என்கிறார். இது தான் நம் தமிழ் சினிமா உலக சிந்தனை; பட்டி வீரன் பட்டியில் நடக்கும் கதையானாலும், வீராசாமியும், பொன்னம்மாளும் காதல் பண்ணுகிறார்கள் என்றால் அவர்கள் அந்தக் காதலைச் சொல்ல, நம் மக்கள் கலைத் தாகத்தைத் தீர்க்க ,சிலபபதிகார காலம் தொட்டு வளர்ந்துள்ள தமிழ் நாட்டுக்கேயான நடனச் சிறப்பைச் சொல்ல  இன்னும் நாற்பது பேருடன் கூத்தாடவேண்டும். அதற்கு ரியோ டி ஜெனீரோவுக்குப் போகவேண்டும். அங்கே ஒரு தெருவை செலெக்ட் பண்ணனும். அது இதுவரை வேறு யாரும் சினிமாக காரர் டான்ஸ் ஷூட்டிங்க்குக்குப் போகாத தெருவாப் பார்த்து சர்வே பண்ணி வந்து சொல்ல வேண்டும்.  தமிழ் நாட்டில் கலை வளர்ப்பதென்றால், அதுவும் மக்களுக்குக் கலைச் சேவை செய்வதென்றால் அது சாதாரணமாக முடிவதில்லை.

,இது காறும் நான் சொன்னதில் என்ன நான் ஸ்டீபன் ஹாகின் மாதிரி உலகத்திலே யாருக்கும் புலப்படாத அதிசயத்தைச் சொல்லிவிட்டேன். இது என் பொதுப் புத்தி சொல்கிறது. ரொம்ப சாதாரண பொதுப்புத்தி. பில்ம் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போய் படிக்காத, சினிமாத் துறை பற்றி ஒன்ற மே தெரியாத, ஒரு ஷோட்டிங்குக்கும் போய் அறியாத சாதாரண கிராமத்தான் சொல்லியிருக்கக் கூடிய பொதுப் புத்தி சொல்கிறதைத் தான் சொல்லியிருக்கிறேன்.  நான் ஏன் கூட்டத்தோடு சேர்ந்து உளறவில்லை? எல்லோரும் உதிர்க்கும் புகழாரங்களை, தயார்ப் படுத்தி வைத்திருக்கும் வார்த்தைகளைச் சொரியவில்லை?.  நான் வாழ்வது இந்த சினிமா, அரசியல், பத்திரிகை, வியாபாரம், சம்பந்தப் பட்ட உலகில் இல்லை. என்ன சொன்னால், என் பட வினியோகம் தடைப் படுமோ, என் படத்துக்கு சான்ஸ் போய்விடுமோ, எந்த நக்ஷத்திரத்தின் ரசிக பட்டாளம் என் வீட்டு முன்னால் வந்து கல்லெறியுமோ, அல்லது போஸ்டரைக் கிழிக்குமோ, சாணி எறியுமோ, இந்த ஆளை உள்ளே விடாதே என்று பில்ம் சேம்பருக்கு ரகசிய தாக்கீது போகுமோ, இன்கம் டாக்ஸ் ரெய்டு பண்ணுய்யா அந்த ஆள் விட்டுக்குப் போய் என்றொ, தாக்கீது பறக்குமோ, இல்லை என் வீட்டில் தான் திடீரென்று கஞ்சாப் பொட்டலமாகக் கொட்டிக் கிடக்குமோ என்றெல்லாம் கவலை இல்லை. எனக்கு. ”பாலசந்தர் என்னிக்கு நாடகத்தை சினிமா எடுப்பதை விட்டு சினிமாவை சினிமாவா எடுக்கப் போகிறார்?” என்று கேட்டவர் பாடு அவ்வளவாக நல்லதாக இல்லை. சுஜாதாவானால் என்ன?, உலக நாயகனேயாகத் தான் இருக்கட்டும், அதனால் என்ன.? குமுதம் பத்திரமாக இருக்கவேண்டுமானால் அதுவும் அதில் எழுதுகிறவர்களும் ஊரோடு ஒத்து வாழவேண்டும்.

அதெல்லாம் சரி. ஊரில் திருட்டுப் பயம் என்றால், இங்கு ஊரே திருடர்களால் ஆனதாக இருக்கிறது மட்டுமல்லாமல் அதுவே கலையாகவும் ஆகிறது. மடியில் கனம் இருக்கிறதென்றால் பயப்படத்தானே வேண்டியிருக்கிறது.

ஒரு நிமிஷம் யோசித்துப் பார்க்கலாம். மர்றவர்க்காக உளற வேண்டிய நிர்ப்பந்தத்தை உதறி விட்டு, நம் பொதுப்புத்திக்குப் படுவதை நாம் எல்லோருமே சொல்ல, அதன் படி நடக்க ஆரம்பித்தால், என்ன ஆகும்? நான் ஒன்றும் ஒரு கிலோ மிளகாயைத் தின்னும் கின்னஸ் சாதனை செய்யச் சொல்ல வில்லை. எல்.ஐ.சி. கட்டிட மாடியிலிருந்து குதிக்கச் சொல்லவில்லை. 28 மணி நேரம் விடாது டான்ஸ் பன்ணச் சொல்லவில்லை. கடவுள் நம் எல்லோருக்கும் கொடுத்திருக்கும் பொதுப் புத்திக்கு ஏற்றதைத் தான் பேசவும் எழுதவும், அதன் படி நடக்கவும் சொல்கிறேன். இதுவே அசாத்தியமாகி விட்டதென்றால், நாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம். எத்தகைய வாழ்க்கையை நமக்கு உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்?


(25) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -நாம் தள்ளப்பட்டுள்ள எந்த நிலையிலும், வேறு வழி இல்லாது சுற்றிக் காணும் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எந்த சூழலிலும் வாழ, பின் அதை ரசிக்க, விரும்பக் கற்றுக் கொண்டுவிடுகிறோம் என்று தோன்றுகிறது. ஒரு பழ மொழி உண்டு. ”பாம்பு திங்கிற ஊரிலே நடுக்கண்டம் எனக்கு” என்று. அது நிர்பந்தம். என்ன செய்வது? வாழவேண்டுமே. சின்ன வயசில், உலகப் போர் முடிந்த இர்ண்டு மூன்று வருடங்கள் வாழ்க்கை மிகச் சிரமப் படுத்துவதாய் இருந்தது. முதன் முதலாக கோதுமையும், பன்னும், மக்காச் சோளமும் தின்று வாழக் கற்றுக் கொண்டோம். இதையெல்லாம் விட பரிதாபம், ஏழை மக்கள் புளியங்கொட்டையை வேகவைத்து சாப்பிடுவதாகவும் செய்திகள் வந்தன. இவையும் நிர்ப்பந்தங்கள் தான். நிலைமை மாற, முன்னர் கம்பும் கேழ்வரகும் சோளமும் சாப்பிட்டு வந்தவர்கள் இப்போது அரிசிக்குத் தாவி விட்டார்கள். இது வசதிப் பெருக்கத்தால் விளையும் மாற்றம். உணவுப் பழக்க மாற்றத்தால் சமூகத்தில் மேல்தட்டிற்குச் என்று விட்டதான பிரமைகள். இப்போது கேழ்வரகும் மக்காச் சோளமும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பொருள்களாகிவிட்டன. கார்களில் வருபவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். சிறு வயதில் நிலக்கோட்டையைச் சுற்றி இருந்த வானம் பார்த்த பூமியில் கண்ட சோளக் கொல்லைகளை இப்போது பார்ப்பதற்கில்லை. 200 அடி 300 அடி ஆழத்துக்கு மோட்டர் போட்டு நீர் இறைத்து நெல் அல்லது கரும்பு பயிரிடுகிறார்கள். இன்னமும் அது வானம் பார்த்த பூமி தான். ஆகையால் நிலத்தடி நீர் இனி எவ்வளவு நாளைக்குத் தாங்குமோ தெரியாது. முப்பாட்டன் வழி வந்த சொத்து பேராண்டியால் ஊதாரித்தனமாகவே செலவிடப்படும். 

ஆரம்ப காலத்திலிருந்து பார்த்து வந்தவர்களுக்கு  சினிமா. நம் மண்ணுக்கு வருவதற்குச் சற்று முன் வரை நாடகங்கள் தான் மகிழ்வூட்டும் சாதனமாக இருந்தது. அதிலும் இசையே மேலோங்கியிருந்தது. பாடத் தெரிந்தவர் சூப்பர் ஸ்டார் ஆனார். நிறைய பாட்டுக்கள். பாடினால், புராணக் கதைகள். சொன்னால் போதும். மக்கள் ரசித்தனர். தாமும் திரும்பத் திரும்பக் கேட்க விரும்பினர். இன்று போல் அன்றும் ஹோட்டல்களில், சாயாக்கடைகளில், தெருவில், அந்தப் பாட்டுக்கள் கேட்டன. பின்னர் பாட்டுக்கள் குறைந்தன. சமூகக் கதைகள் வரலாற்றுக் கதைகள் இடம்பிடிக்கத் தொடங்கின. வசனம் மக்கள் ரசனையை ஈர்க்கத் தொடங்கியது. இளங்கோவன் வசனம் என்றாலே அதற்கு பெருமதிப்பு இருந்தது. ஆனால் சினிமா தான் மகிழ்வூட்டும் நாடகமாகவே இருந்தது. திரையில் ஓடிய நாடகம். ஒரே வித்தியாச்சம், “ஒன்ஸ் மோர்” என்று திரையைக் கேட்க முடியாது. வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

 சினிமா என்ற புதிய சமாசாரம் கைவரவில்லை. அதைப் பற்றிய நினைப் பில்லை. முன்னாலேயே மார்க்கெட்டைக் கைப்பற்றியிருந்த  நாடகத் திலிருந்து கதையை எடுத்துக்கொண்டார்கள். பாட்டுக்களை எடுத்துக்கொண்டார்கள். பாடியவர்களை நடிகர் நடிகைகளாக எடுத்துக்கொண்டார்கள். காமிரா இருந்தது புகைப்படம் எடுத்தார்கள். செலவு செய்ய பணம் இருந்தவர்கள் முதலீடு செய்ய சினிமா தயாரித்தார்கள். இன்னொரு வியாபாரம். சினிமா தொழில் என்றே அன்று அறியப்பட்டது. பேசப்பட்டது. திராவிட கழகம் சினிமாவில் நுழைந்த பிறகே சினிமா அன்று வரை தொழிலாக இருந்ததை கலை என்றார்கள். நடிப்பு என்ற தொழில் செய்தவர்கள் கலைஞர்கள் ஆனார்கள். எப்படி யாரும் சிந்தனைச் சிற்பிகள், பேரறிஞர்கள், கலைஞர்கள். ஆனார்களோ அப்படியே சினிமாவும் கலை ஆயிற்று. ஆறுபக்கம் வசனம் மூச்சிறைக்காமல் பேசினாலும் அது சினிமாவாயிற்று.

 இதில் யாரும் ஒருவரை மாத்திரம் சொல்லிப் பயனில்லை. இது ஒரு வியாபாரக் கேலிக் கூத்தாட்டம் ஆயிற்று. பணபலம், அரசியல் பலம் மக்களிடையே பிராபல்யாம் என ஒன்றை ஒன்று பிறப்பித்து அசுர வடிவம் பெற்றது. அரசியலும் பிரசார வசன மழையும் பிராபல்யம் பெறும் காலம் மற்றவற்றைப் போல ஒரு கட்டம் வரையில் தான். சின்ன சின்ன வசனங்கள், அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு, “நான் என்ன சொல்றேன்னா, வாட் ஐயாம் டெல்லிங் யு இஸ் என்று சேர்த்துச் சேர்த்து வசனம் பேசுவது கலைஞராக மெத்தப் படித்த மேதைக்கு அழகாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அவர் படித்தவர். உலக சினிமாவெல்லாம் பார்க்கிறவர். அல்லது பார்க்கிறவர் ஒருத்தர் அவருடைய நண்பர் அவருக்குச் சொல்வார். என்ன கதை எந்த சீன் நல்ல வந்திருக்கு என்று. நம் மேதையும் புதுமைகளைப் புகுத்துவார். உடனே அவரும் ஒரு சிகரமானார். கண்றாவி என்னவென்றால் அவரும் மற்றவர்களைப் போல சினிமாவோடு எந்த உறவும் அற்றவர் தான். அது நாடகம். அதிலும் அபத்தமான நாடகம். என்னிக்கயயா நீ நாடகத்தைத் திரையில் காட்டறதி நிறுத்தி சினிமா எடுக்கப் போறே என்று கேட்டுவிட்டார். நம்மூர் சிகரத்தையெல்லாம் இப்படி கேட்கலாம? உடனே ஒரு படை விரைந்தது பத்திரிகை அலுவலகத்துக்கு கேள்வி கேட்ட மனிதர் வாய் மூடப்பட்டது.

ஆனால் அரசியலிலிருந்தும் மேடைச் சொற்பொழிவிலிருந்து மெதுவாக விடுதலை கிடைத்தது. அவரிடமிருந்தும் விடுதலை கிடைத்தது தான். அது தொலைக் காட்சிப் பெட்டியில் ஹாலிவுட் சினிமாவின் சண்டைப் படங்களும் தந்திரக் காட்சிகளும் பார்த்து அதுவே நமக்கு சினிமாவாகியது. ஹிந்தி சினிமாவிலிருந்து ஐடம் டான்ஸ், நினைத்த இடத்தில் 40 பேர் ஆடுவது எல்லாம் வந்து சேர்ந்தது. நடிகர் என்றால் அவருக்கு டான்ஸ் ஆடத்தெரியவேண்டும் என்ற நியதி வந்தது. முன்னால் பாடத் தெரிந்தால் தான் சினிமாவில் சான்ஸ் என்பது போல.

அதோடு அவர் ஜிம்முக்குப் போய் உடம்பை சிக்ஸ் பாக் உடம்பாக்கிக் கொள்ள வேண்டும். அது சல்மானுக்கும் ஷாருக்குக்கும் அமீருக்கும் தான் சாத்தியம் என்றாகவே நம்மூர் தொப்பைகளுக்கு அது சரி வரவில்லை. இருப்பினும் டான்ஸ் மாஸ்டர் எப்படி அத்தியாவசியமானாரோ அப்படி ஸ்டண்ட் மாஸ்டரும் அத்தியாவசியத் தேவையானார். டான்ஸ் கிட்டத்தட்ட ட்ரில் மாதிரி ஆயிற்று. ஐடம் கேர்லுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குத்துப் பாட்டு எல்லாரிடமும் எதிர்பார்க்கப் பட்டது.

தனுஷ் கூட பத்து குண்டர்களை ஒரு குத்து விட்டால் ஆகாயத்தில் மிக அழகாக சுருண்டு விழச் செய்தார் கார் சேசிங் இல்லாது சண்டைக் காட்சிகள் இல்லாது, டான்ஸ் பண்ண வெளிநாடு போகாது ஒரு சினிமா இருக்கக் கூடும், என்று மணிரத்னம் கூட கற்பனை செய்ய முடியாது என்ற பைத்தியக்கார நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டு விட்டது. ஒரு பாக்கிய ராஜ் ஒரு நடிகைக்கு சேலையை உடுத்தி, நடிகருக்கு வேட்டியைக் கொடுத்து கட்டச் சொன்னால் உடனே கிராமத்துக் கதைகள் பெருகும். இப்போது அனேகமாக எல்லாப் படங்களும் மதுரைக்கும் உசிலம்பட்டிக்கும் வாடிப்பட்டிக்கும் போவதைப் போல. பேச்சும் மதுரைப் பேச்சென அடையாளப் படுத்தப் படுகிறது. மதுரைப் பேச்சனாலும் உசிலம்பட்டியானாலும் விருது நகரானாலும் அதில் சண்டைக்காட்சியும் டான்ஸும் கட்டாயம் மசாலா சேர்த்தாகணும்.

இந்த சினிமா தான் தொலைகாட்சியிலும், பத்திரிகைகளிலும் அரசியல் தலைவர்கள் பாராட்டு விழாககளிலும் பூதாகாரமாக கவிகின்றது.  இந்த சினிமா தான் நம் வாழ்க்கையும், கற்பனையும் சிந்தனையும், ஆயிற்றே ஒழிய, உண்மையான ரத்தமும் சதையுமான உயிர்ப்புள்ள தமிழ் வாழ்க்கை, தமிழ் மனிதர்கள், தமிழனின் அன்றாட நடப்பு எங்காவது தமிழ் சினிமாவுக்கான பொருளாயிருக்கிறதா என்றால் இல்லை.. இந்த 70-80 வருட தமிழ் சினிமா வரலாறு ஒரு குப்பை மேடாகத் தான் குவிந்து கிடக்கிறது. தமிழ் சினிமாவுக்கான பொருள் இல்லையென்றால், தமிழ் சினிமா, அதன் அர்த்தத்தில் சினிமா என்ற ஊடகத்தை, கலைச் சாதனத்தை அறிந்திருப்பது பிறகு தான்.

இது நமக்குப் பழக்க மாகிவிட்டது. வேறு எதையும் நம்மால் சிந்தித்துக் கூட பார்க்க முடிவதில்லை. இந்த பிதற்றலும் அபத்தமும் தான்  நாள் தோறும், 24 மணி நேரமும்  நம்மைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன. நாம் இதிலிருந்து பிரிந்திருக்கும் கணங்கள் ஏதும் உண்டா தெரியவில்லை. அரசியல் மேடையாகட்டும், 24 மணி நேர தொலைக்காட்சியாகட்டும், பத்திரிகைகளாகட்டும், வேட்டி, சேலை, மசாலாப் பொடி, புதிதாக ஒரு ஷோ ரூம், கடை திறப்பு, எல்.ஐ.சி விளம்பரம், என எந்தக்  கண்றாவியானாலும் அதில் ஒரு சினிமா பிரதிநிதி, ஒரு க்ரூப் டான்ஸ் இல்லாமல் விளம்பரம் கூட வருவது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

தமிழினத் தலைவர் கூட தன் கால பராசக்தி சமாசாரங்கள் காலம் கழிந்து இப்போது புதிய சமாசாரங்கள் சினிமாவில் புகுந்துவிட்டது தெரியாது, 1950 கால சினிமாவை விட்டு வர முடியாமல் தவிக்கிறார் என்றால், அவர் கலைப்படைப்பு ஒவ்வொன்றையும் என்ன பலவந்தமாகத் திணீத்தாலும் ஒரு வாரம் கூட திரையில் தங்குவதில்லை பெட்டிக்குள் போய் அடைந்து கொள்கிறது. “திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதுத் திரைப்படம்” என ஒரு தனீ ஸ்டைலில் தமிழ் பேசி சத்தமிட்டு விளம்பரம் செய்யும் அவர் குடும்ப தொலைக்காட்சி கூட தொடுவதில்லை. ஆக, தமிழினத் தலைவர் சிந்தனையே கூட 1952 பராசக்தி காலத்தை விட்டு  நகர மறுக்கிறது என்றால், குத்தாட்டமும், கார் துரத்தலும், ஆகாயத்தில் சுருண்டு விழும் ஸ்டண்ட் காட்சிகளும் பார்த்துப் பார்த்து வாய் பிளக்கும் மக்கள் என்ன சுலபத்திலா மாறுவார்கள். அடிக்கடி மாறும் மசாலாக்கள் புதிது புதிதாக அவர்களுக்கு மசாலாக்கள் வேண்டியிருக்கிறது. ஆனால் தேவை மசாலாக்கள் தான். சினிமா அல்ல.

இங்கு தான் இவ்வளவு காலமாக இந்தப் பேத்தல்களை எவ்வளவு தான்  எழுதிவந்த பிறகும் ஒரு அன்பர் கேட்கிறார், ஆமாய்யா, பின்னே வாழ்க்கை என்றால் அடுத்த வீட்டுக்குப் போய் அங்கு என்ன நடக்கிறது என்றா பார்க்க முடியும்? என்று கேட்டார்.

vswaminathan.venkat@gmail.com