காலமும் கணங்களும் தோழர் வி.பொன்னம்பலம் 25 ஆவது நினைவு தினம் மார்ச் 05 (1930-1994)

அமரர் வி.பொன்னம்பலம்

” பனைமரத்துப்பாளை எல்லாம் நில மட்டத்தில் வெளியாகியிருந்தால், சாதி பேசும் உயர்குடிமக்களும் கள்ளுச்சீவியிருப்பார்கள்”  இவ்வாறு சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும் பேசவல்ல ஒருவர் எம்மத்தியிலிருந்தார். சிறந்த பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர். கல்வித்துறையில் பலருக்கும் கலங்கரைவிளக்கமாக ஒளிதந்த ஆசான். கொள்கைப்பற்றாளர். பதவிகளுக்காக சோரம்போகாதவர். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே மரணிக்கும்வரையில் குரல் கொடுத்தவர். மாற்றுக்கருத்துள்ளவர்களையும் அரவணைத்தவர்.  இவ்வாறு பல சிறப்பியல்புகளையும் கொண்டிருந்த ஆளுமையுள்ள தலைவர் தோழர் வி. பொன்னம்பலம் பற்றி தெரிந்திருப்பவர்கள் இன்றும் எம்மிடையே இருக்கிறார்கள். வடபுலத்தில் அளவெட்டி கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி வல்லிபுரம் – பொன்னம்மா தம்பதியரின் புதல்வராகப்பிறந்து, அனைவராலும் வி. பி. என அழைக்கப்பட்ட தோழர் வி. பொன்னம்பலம் அவர்கள்,  1985 ஆம் ஆண்டின் பிற்கூறில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். தனது அரசியல் ஆசானும் அதிபருமான ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் நினைவரங்க நிகழ்வில்  (1994 – மார்ச் 05 ஆம் திகதி) உரையாற்றும்வேளையில், “அனைவரிடமிருந்தும் விடைபெறுகின்றேன்” எனச்சொல்லி நிரந்தரமாக விடைபெற்றார்.

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் நள்ளிரவு. உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். தொலைபேசி அழைப்பு வந்து திடுக்கிட்டு விழித்தேன். மறுமுனையில் கனடாவிலிருந்து மறைந்த தோழர் வி.பொன்னம்பலத்தின் மகன் நமுனகுலன். தோழர் வி.பி. யின் மறைவுச்செய்தி அறிந்து யார் மூலம் அனுதாபம் சொல்வது எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த எனக்கு, நமுனகுலனின் அழைப்பு சிலிர்ப்பைத்தந்தது. “அப்பாவின் நினைவாக ஒரு மலரைத்தயாரிக்கின்றோம். நீங்களும் ஒரு கட்டுரை தரவேண்டும்.” என்றார்.

தெணியானின் தம்பி நவம் எனது தொலைபேசி இலக்கம் தந்ததாகவும் சொன்னார். எனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்து கட்டுரை அனுப்புவதாகச் சொன்னேன். எங்கள் வீட்டுக்கு கணினி உறவினராகாத காலம். அதனால் மின்னஞ்சலும் இல்லை. மறுநாளே கட்டுரையை தபாலில் அனுப்பிவிட்டேன். மற்றுமொரு நாள் மாலைவேளையில் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தேன். தபால்சேவகர் ஒரு பெரிய பார்சலை தந்துவிட்டுப்போனார். திறந்து பார்த்தேன். பொன் மலர் பிரதிகள். சுமார் ஐம்பது இருக்கும். புலம்பெயர் வாழ்வில் என்னை விந்தையில் ஆழ்த்திய சம்பவமாக அந்தப் பிரதிகள் தாமதமின்றி எனக்குக்கிட்டியதைக்குறிப்பிடலாம். பொதுவாக என்ன நடக்குமென்றால்!? என்னிடம் ஆக்கம் கேட்பார்கள். எழுதி அனுப்புவேன். கேட்டவர்களுக்குக் கிடைக்கும். பயன்படுத்துவார்கள். அதன் பிறகு பிரதி அனுப்ப மறந்துவிடுவார்கள். அல்லது பலதடவை தொடர்புகொண்டபின்னர் அனுப்புவார்கள். இதுவிடயத்தில் யாரும் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. காரணம் தபால்கட்டணம்தான். ஆனால், நமுனகுலன் இந்த விடயத்தில் என்னை ஏமாறச்செய்து ஒரு பிரதி அல்ல 50 பிரதிகள் அனுப்பி ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.

அவுஸ்திரேலியாவில் வதியும் வி.பி.யின் ஆதரவாளர்கள் , அவரது முன்னாள் மாணவர்கள் , அவரை நன்கு தெரிந்தவர்கள் சிலருக்கு அந்தப்பிரதிகளை விநியோகித்தேன். தோழருடன் நன்கு பழகிய அரசியல் தலைவர்கள் , கல்விமான்கள் , இலக்கியவாதிகள் பத்திரிகையாளர்கள் சமூகப்பணியாளர்கள் பலர் பொன்மலரில் எழுதியிருந்தனர். எண்பது கட்டுரைகள் அம்மலரில் வெளியாகியிருந்தன. தோழர் பொன்னம்பலத்தின் வாழ்வும் பணியும் ஊடாக வெளிப்பட்ட முன்னுதாரணமான அருங்குணங்கள் அவற்றில் பதிவாகியிருந்தன. மலருக்கு நயப்புரை எழுதி மெல்பன் தமிழ் வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு பொன்மலர் பிரதியுடன் அனுப்பிவைத்தேன். ஆனால்,  அந்த நயப்புரையை அந்த வானொலி ஒலிபரப்பிற்கு ஏற்கவில்லை. சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்துக்கேட்டபொழுது, அரசியல் சார்ந்த நூல்,  மலர் விமர்சனங்களை தங்கள் வானொலி ஒலிபரப்பாது என்று சொன்னார். எனக்கு அவரது பதில் திருப்தியளிக்கவில்லை. அவர் அன்றைய சூழ்நிலையின் கைதி என்பது மாத்திரம் புலனாகியது.

தோழர் வி. பொன்னம்பலம் அவர்களின் வாழ்வை நினைவுபடுத்தும் பொன்மலரில் எழுதியிருந்த சில முக்கியமானவர்களின் பெயர்களை இங்கு சொல்வது பொருத்தமானது. அதனால் மற்றவர்கள் முக்கியமானவர்கள் அல்ல என்பது பொருளல்ல. எழுதியிருப்பவர்களின் பட்டியல் நீளமானது. விரிவஞ்சி தவிர்க்கின்றேன். முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பி. சில்வா , லங்கா சமமாஜக்கட்சியின் செயலாளர் பட்டி வீரக்கோன், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர்கெனமன்,  நவசமசமாஜக்எ கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, த. வி. கூட்டணித்தலைவர் மு. சிவசிதம்பரம் , மாவை சேனதிராஜா , ஆனந்தசங்கரி , சிவா சுப்பிரமணியம் , மங்கையற்கரசி அமிர்தலிங்கம் , கிருஷ்ணா வைகுந்தவாசன் , கு. விநோதன் , பார்வதி கந்தசாமி , கனக மனோகரன் , பொ. கனகசபாபதி , கரிகாலன் , ஈ.கே. ராஜகோபால் நடனசிகாமணி ,பிரேம்ஜி இப்படிப்பலர்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் அவர் இறப்பதற்கு முன்னர் ” உங்களுடைய ஆசை என்ன?” என்று யாரோ கேட்டார்களாம். அதற்கு அவர் “நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடவேண்டும் ” என்றாராம். அவர்  இறக்கும்போது மரணத்தை நெருங்கும் தறுவாயில்தான் இருந்தார். வி.பி. சிறந்த பேச்சாளர். “எச்சந்தர்ப்பத்திலும் தான் பேசிக்கொண்டிருக்கும்போது மரணிக்கவேண்டும்” எனச்சொன்னவரில்லை. தமது ஆசான் ஒரேற்றர் சுப்பிரமணியம் நினைவுக்கூட்டத்தில் பேசி முடித்த மறுகணம்தான் வி.பி.யின் உயிர் பிரிந்தது. அதிர்ச்சி தந்த மரணம். தோழரின் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிய ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். நான் சந்தித்த மனிதர்களில் அவரும் மிகவும் வித்தியாசமானவர். எளிமையானவர். ஒருவரை ஒருவர் மனங்கவர்வதற்கு இயல்புகள்தான் காரணம். ஒருவரின் அடிப்படை அழகே அவரது இயல்புகளில்தான் தங்கியிருக்கிறது. சிலரது எழுத்துக்கள் பிடிக்கும். ஆனால்,  பேச்சு பிடிக்காது. பேச்சு பிடித்திருந்தால் அவரது எழுத்து பிடிக்காது. கருத்துக்கள் எவ்வாறிருந்தாலும் குண இயல்புகள் போற்றத்தக்கதாக இருக்கும். எனினும், என்னை முழுமையாக ஆகர்ஷித்த தமிழ் அரசியல் தலைவர் வி. பொன்னம்பலம்தான்.

1975 மே மாதம் 31 ஆம் திகதி கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில்தான் அவரை முதல் முதலில் சந்தித்தேன். மாநாட்டு மண்டபம் எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் , தொழிற்ங்கவாதிகள் , அரசியல் தலைவர்கள் , மற்றும் அறிவுஜீவிகள்  பொதுமக்களினால் நிரம்பியிருக்கிறது. எழுத்தாளர்சங்கம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டுதலாகவும் சமர்ப்பித்த யோசனைகளை முன்வைத்து பலரும் பேசுகிறார்கள். அறிக்கைகள் சமர்ப்பிக்கின்றனர். மதிய உணவுவேளைக்கு முன்பதாக காலை அமர்வில் இறுதி உரை தோழர் வி.பி.யுடையது. முதல் முதலில் அந்த கம்பீரமான தோற்றத்தையும் கணீரென்ற குரல்வளத்தையும் தரிசிக்கின்றேன். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடு ,  மொழிகளுக்குரிய சம அந்தஸ்து , பேச்சுரிமை ,  கருத்துச்சுதந்திரம் , இன ஐக்கியம் , முதலான பல்வேறு விவகாரங்களையும் சுமார் அரைமணிநேர பேச்சில் கருத்தாழமுடன் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவிக்கின்றார் தோழர். மண்டபத்தில் திரண்டிருந்தவர்கள் அமைதியாக அவரது உரையை செவிமடுத்து,  முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பி அவரது கருத்துக்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றனர்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அதுநாள்வரையில் குழம்பிய மனநிலையில் தெளிவின்மையுடன் இலக்கிய உலகில் நடைபயின்றுகொண்டிருந்த எனக்கு அன்று புதிய வெளிச்சம் தென்பட்டது. அன்று அதே மேடையில் வி.பி. அவர்களுக்கு முன்பு பலரும் பேசினார்கள். அவை காற்றுடன் கலந்தன. ஆனால்,  மிகவும் எளிமையாக இனப்பிரச்சினை விவகாரத்துக்கு தெளிவாக தீர்க்கமான தீர்வினை மனதில் ஆழப்பதியும் விதமாக அந்த அமர்வில் பேசியவர் வி.பி. மாத்திரம்தான் என்பது எனது மட்டுமல்ல இன்னும் பலரதும் அபிப்பிராயம். இந்த அபிப்பிராயத்தை மதிய உணவுவேளையில் ஏனையோரிடமிருந்து இனம்காண முடிந்தது. எனக்கு வி.பி.யுடன் முன்னர் அறிமுகம் இல்லை. அன்றுதான் பார்க்கின்றேன். அவரது கருத்துச்செறிவான உரையைக்கேட்டது முதல் அவருடன் பேசவேண்டும் என்ற ஆவலில் துடித்துக்கொண்டிருக்கின்றேன். அன்று மாநாட்டுக்கு வந்திருந்த எனது குடும்பநண்பரும் வடமராட்சியில் வதிரியைச்சேர்ந்தவருமான சதாசிவம் ( இவரும் மறைந்துவிட்டார்) அவர்களிடம் எனது விருப்பத்தைச்சொல்கிறேன். அவரே என்னை உடன் அழைத்துச்சென்று வி.பி.யிடம் அறிமுகப்படுத்துகிறார். “ ஓ…முருகபூபதியா…? மல்லிகையில் படித்திருக்கிறேன்.” என்றார் வி.பி. எனக்குள் திகைப்பு. கால்களில் செருப்பும் இல்லாமல் வடபகுதி மண்ணில் குக்கிராமங்கள் தோறும் அலைந்து திரிந்து அரசியல் வகுப்புகளும் நடத்திக்கொண்டு சமுதாயப்பணியும் மேற்கொண்டு மக்கள் தொண்டே முழுநேர ஊழியமாக வாழும் இவருக்கு மல்லிகை படிக்க நேரம் உண்டா?

என் சந்தேகத்தை நேரில் கேட்கவும் தைரியம் இல்லை. அவர் சிறந்த வாசகர் , சிந்தனையாளர் , கல்விமான் , பெரிய தமிழ் இளைஞர் கூட்டத்தினை ஆகர்ஷித்த சக்தி என்ற தகவல்கள் யாவும் எனக்கு கேள்விஞானமே. இரண்டாம் நாள் மாநாட்டில் இரவுநேர இறுதி அமர்வில் கவிஞர் முருகையன் தலைமையில் நடந்த கவியரங்கு முடிந்து அனைவரும் மண்டப வாயிலைவிட்டு வெளியேறும் வரையும் அமைதியாக இருந்து கவிஞர்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்த அவரது உளப்பாங்கு என்னைப்பெரிதும் கவர்ந்தது. அந்த கம்பீரமான மனிதரின் அப்பழுக்கற்ற உள்ளம்தான்  அவரிடம் கருத்துரீதியாக மாறுபட்டிருந்தவர்களையும் ஆகர்ஷிக்கும் இரகசியம் என்பதையும் புரிந்துகொள்ளமுடிந்தது. பின்னாளில்,  கொழும்பில் ஆசிரியப்பணிபுரிந்த நண்பர்கள் சிவராசா ‘பூரணி’ மகாலிங்கம் , சந்திரசேகரம் மாஸ்டர்   உட்பட பலராலும் மாதாந்தம் ‘ஹல்ஸ்டோர்பில்’ வழக்கறிஞர் துரைசிங்கம் வீட்டில் நடத்தப்பட்ட அரசியல் கருத்துரை – கலந்துரையாடல்களுக்கு நான் செல்வது வழக்கமாகிவிட்டிருந்தது.

ஒரு மாதம் தோழர் வி.பி. ‘தேசியஇனப்பிரச்சினை’ என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சினையடுத்து கேள்வி-பதில் கலந்துரையாடலைத்தொடர்ந்து,  அன்றைய சந்திப்பு முடிந்தது. வி.பி. ஐ அழைத்துக்கொண்டு சிலர் புறப்பட்டுவிட்டனர். நான் துரைசிங்கம் வீட்டிலிருந்து புறப்பட சில நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. நீர்கொழும்பு செல்வதற்காக கொழும்பு பஸ் நிலையத்தை நோக்கி இரவு 10 மணிக்குமேல் நடக்கின்றேன்.  ‘ஹல்ஸ்டோர்ப்’ நீதிமன்றங்களுக்கு முன்பாக படிக்கட்டுக்களில் அமர்ந்து வெள்ளவத்தை செல்வதற்காக பஸ்ஸிற்காக காத்திருக்கிறார் வி.பி. இந்தக்காட்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எந்தவிதமான பகட்டு  ஆரவாரமோ இன்றி அமைதியாக எளிமையாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டவர் என்பதற்கு என்னை வியப்பில் ஆழ்த்திய இந்தக்காட்சியும் ஒரு சான்று.

இலங்கையின் வடபிராந்தியம் பல முற்போக்கு இடதுசாரி சிந்தனையாளர்களைத்தந்திருக்கிறது. பொன். கந்தையா , கார்த்திகேசன் மாஸ்டர் , சண்முகதாசன் , அ. வைத்திலிங்கம் ,  பி. குமாரசாமி , ஐ. ஆர். அரியரத்தினம் , ஸி.குமாரசாமி , எம்.ஸி. சுப்பிரமணியம் , செந்திவேல் , வி. பொன்னம்பலம் , விஜயானந்தன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இந்தவரிசையில் படைப்பிலக்கியவாதிகள் பலரும் இருக்கிறார்கள். இவர்களில் பொன். கந்தையா மற்றும் கார்த்திகேசன் மாஸ்டர் ஆகியோரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால்,  மற்றவர்களை சந்தித்து உரையாடியிருக்கின்றேன். தோழர் விஜயானந்தனும் நவசமாஜக்கட்சியைச்சேர்ந்த அண்ணாமலையும் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். வி.பி.க்கு கம்யூனிஸ்ட் கட்சியுடன் அபிப்பிராய பேதமேற்பட்டபொழுது மனம் கலங்கியவர்களில் நானும் ஒருவன். அவர் கொள்கைக்காக முரண்பட்டார். அன்றைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலிருந்த அரசில் சில சிங்கள- தமிழ் சாத்தான்களும் அங்கம்வகித்தன. அதனால்தான் வி.பி.யும் தாம் நீண்டகாலம் நேசித்த கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி செந்தமிழர் இயக்கத்தை தொடங்கினார். பொதுவுடைமை இயக்கத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் பலவற்றை பட்டியலிடலாம். தமிழகத்தில் மணலி கந்தசாமி ,  தா. பாண்டியன் ,  எம். கல்யாணசுந்தரம் ,  வட இந்தியாவில் டாங்கே போன்றவர்களும் ‘அமைப்பு’களிலிருந்து வெளியேறினர் – வெளியேற்றப்பட்டனர் – மீண்டும் இணைந்தனர். பொதுவுடைமை இயக்கங்களுக்கு நேர்ந்த சாபம் இது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம். கல்யாணசுந்தரம் இலங்கைவந்தபொழுது வி.பி. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த காலமாகும். அதனால் கல்யாணசுந்தரத்தை கொழும்பில் வி. பி. சந்தித்துவிடக்கூடாது என்பதில் சிலர் மிகவும் அவதானமாக இருந்தனர். வி.பி. யின் அரசியல் எதிரிகள் வெளியே இருக்கவில்லை. கட்சியின் உள்ளேயே இருந்தனர். அவர்கள் அவரது முன்னாள் தோழர்கள்.

வி.பி. இலங்கையில் இடதுசாரி அரசியலுக்குள் பிரவேசித்த காலம் முதல் தமிழரசுக்கட்சியுடன் கருத்தியல் ரீதியாக முரண்பட்டிருந்தாலும் பெரியவர் செல்வநாயகம் , அமிர்தலிங்கம் , வி. தருமலிங்கம் உட்பட பல தமிழரசுக்கட்சிப்பிரமுகர்களுடன் தனிப்பட்ட முறையில் நேசம் பாராட்டியவர். அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி பதிவுத்திருமணம் முடிந்து சில மணிநேரங்களிலேயே அமிர்தலிங்கம் வி.பி.யுடன் ஒரு அரசியல் மேடையில் விவாத மோதலில் ஈடுபட்டார். உடுவிலில் வி. தருமலிங்கத்தை எதிர்த்தும் காங்கேசன்துறையில் செல்வநாயகத்தை எதிர்த்தும் தேர்தலில் போட்டியிட்டவர் வி.பி. உடுவிலில் தேர்தல் நடந்தபொழுது தருமலிங்கம்,  கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்திற்கு அனுப்பிய உணவுப்பார்சல்களை வி.பி.யும் இதர தோழர்களும் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். செல்வநாயகத்தை எதிர்த்துப்போட்டியிட்டபோதிலும், தேர்தல் முடிவுகள் வெளியானதும் பெரியார் செல்வாவை கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்துவந்து வாக்காள பெருமக்கள் முன்னிலையில் தோன்றி அவரது வெற்றியை ஏற்பதாகவும் தொடர்ந்தும் அவருடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றும் சொன்னவர் தோழர் வி.பி. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தபோதிலும் ஒருவரை ஒருவர் கனம்பண்ணும் நாகரீகம் ஒரு காலத்தில் வடபகுதியிலிருந்தது. இன்று நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளிடையே உட்கட்சிப்பூசல்கள் மோதல்கள் புறங்கூறுதல் கோள்மூட்டுதல் அதிகரித்துவிட்ட காலத்தில் நாம் தற்பொழுது வாழ்கின்றோம்.

வி.பி. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த காலத்திலும் அதன் பின்னர் செந்தமிழர் இயக்கத்தை ஆரம்பித்தபொழுதும் அதற்குப்பிறகு தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் இணைந்தபொழுதும் தமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவந்த போராளி. மார்க்சீயத்திற்கும்  தமிழ்த்தேசியத்திற்கும் இணைப்பு பாலமாகவே விளங்கினார். வி.பி. , கல்வித்துறையில் சிறந்த ஆசானாக அரசியலில் கொள்கைப்பிடிப்புள்ளவராக கூட்டுறவுத்துறையில் அப்பழுக்கற்ற நேர்மையாளனாக மேடைகளில் மொழிபெயர்க்கும்பொழுது தெளிவாக கருத்துக்களை மக்களின் மனங்களில் பதியவைக்கும் பேச்சாளனாக விளங்கியவர்.

இந்தியாவிலிருந்து விஜயலட்சுமி பண்டிட் யாழ்ப்பாணம் வந்தபொழுது அவரது ஆங்கில உரையை தமிழ்ப்படுத்திப்பேசினார். சோவியத்தின் விண்வெளிவீரர் யூரிககாரின் வடபகுதிக்கு விஜயம்செய்தபொழுது அவரது ருஷ்ய மொழிப்பேச்சை தமிழில் தந்தார். கண்டியில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிங்கள உரையை தமிழில் மொழிபெயர்த்தார். வி.பி.க்கு இலங்கையின் மும்மொழிகள் மட்டுமல்ல ருஷ்யமொழியும் தெரிந்திருக்கிறது. இதுபற்றி வி.பி.யை எனக்கு அறிமுகப்படுத்திய அன்பர் சதாசிவம் கேட்டபொழுது, யூரிககாரினின் உணர்வுகளை அவருடன் உரையாடியபொழுதே தெரிந்துகொண்டேன். அதனால் அவரது பேச்சுமொழியை மொழிபெயர்ப்பது சுலபமாக இருந்தது என்றாராம். Feeling இலிருந்து Meaning என்றும் நாம் பொருள்கொள்ளலாம்.
மொழிபெயர்ப்பிலும் அவர் சாமர்த்தியசாலி என்பதற்கு இச்சம்பவங்கள் உதாரணங்கள்.

நண்பர் ராஜ ஸ்ரீகாந்தன் வி.பி. தொடர்பாக ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். ஸ்கந்தவரோதயா கல்லூரியில் வி. பி. ஆசிரியராகவிருந்தபொழுது அவரிடம் கல்வி கற்றவர்தான் ராஜஸ்ரீகாந்தன். 1983 முற்பகுதியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் பாரதி நூற்றாண்டு விழாவினை ஒழுங்குசெய்திருந்தமை பற்றி முன்னைய பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். மாலைநேர விழாநிகழ்ச்சியொன்று கதிரேசன் மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்தது. அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர் அமிர்தலிங்கம். இலங்கை வந்திருந்த தமிழக பேச்சாளர்கள் மண்டபத்திற்கு வருவதற்கு சற்று தாமதமானது.  அமிர்தலிங்கம் உரியநேரத்தில் வந்துவிட்டார். சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி,  அவரை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற எழுத்தாளர் ஒளிப்படக்கண்காட்சி பாரதி நூல் கண்காட்சிகளை பார்த்துவிட்டு வருமாறு அனுப்பிவைத்தார். அந்தக்கண்காட்சிக்கு பொறுப்பாகவிருந்த நானும் நண்பர் வேல் அமுதனும் மாலை 5 மணியாகிவிட்டதனால் கதிரேசன் மண்டபத்திற்கு புறப்படுவதற்கு தயரானோம். அவ்வேளையில் திடுதிப்பென்று அமிருடன் வந்தவர் தோழர் வி.பி. ! இருவரும் கண்காட்சியை கண்டுகளித்து தமது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் சொன்னார்கள். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்படி ஒன்றாக ஒரே காரில் வந்திறங்கியது அங்கு நின்ற பலரையும் ஆச்சரியப்படவைத்தது.

பாரதி நூற்றாண்டு விழாவில்,  தமிழக இலக்கியவாதிகளினதும் அமிர்தலிங்கத்தினதும் உரைகளுக்கு ஈடாக வி.பி. நிகழ்த்திய உரைதான் நான் இறுதியாக கேட்ட அவரது மேடைப்பேச்சாகும். அங்கும் வி.பி. தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைபற்றியே உரத்துக்குரல் கொடுத்தார். விடைபெறும்பொழுது ” தம்பி பிறகு சந்திப்போம் ” என்றார். ஆனால், அதன் பின்னர் அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டவேயில்லை. 1983 இனக்கலவரத்தைத்தான் சந்தித்தோம். அந்தவருடம் ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் அரியாலையில் இருந்தபொழுது கொழும்புத்துறையில் அவர் தங்கியிருக்கிறார் எனக்கேள்விப்பட்டு ஆனந்தன்வடலி வீதியில் அவர் இருந்த வீட்டைத் தேடிக்கொண்டு சென்றேன்.  அவரைச்சந்திக்க முடியவில்லை. அவர் தமிழகம் சென்றுவிட்டதாக அயலவர்கள் சொன்னார்கள். காலவெள்ளம் அவரையும் தாயகத்தைவிட்டு புலம்பெயர வைத்தது. எனினும்,  தான் ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து புலம்பெயராதவர்.

1994 ஆம் ஆண்டு கனடாவில் ஸ்காபரோவில் நடந்த ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டமே வி.பி. கலந்துகொண்டு உரைநிகழ்த்திய இறுதி வைபவம். தனது கல்வி ஆசானுக்கு அஞ்சலி செலுத்தி பேசி முடித்து சில நிமிடங்களில் ஆசானிடமே போய்ச்சேர்ந்துவிட்டார் என்றுதான் நாம் ஆறுதலடையமுடியும். குறிப்பிட்ட கூட்டத்திற்கு செல்லும் முன்னர் வீட்டிலிருந்து அவர் இறுதியாக எழுதிய கட்டுரை அமிர்தலிங்கத்தைப்பற்றியதுதான்.

வி.பி.யின் வாழ்வும் பணியும் முன்னுதாரணமானவை என்பதற்கு அவர் நினைவாக வெளியான பொன்மலர் பல சான்றுகளைத்தருகின்றது. அவரது பன்முக ஆளுமை அவரது அருகாமையைத்தான் உணர்த்துகிறது.

எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பராமரிப்பிலிருக்கும் மாணவர்களை நேரில் சந்திப்பதற்காக போருக்குப்பின்னர் அவ்வப்போது இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களுக்கு நான் செல்வது வழக்கம். முல்லைத்தீவு முள்ளியாவளை வித்தியானந்தாக்கல்லூரிக்கும் செல்வதுண்டு. அங்கே பாடசாலை அலுவலகத்திற்கு முன்பாக வி. பொன்னம்பலம் அவர்களின் உருவப்படமும் காட்சி தருகிறது. அவர் அங்கு அதிபராக கடமையாற்றியவர். வன்னி மக்களின் பிள்ளைகள் கல்வித்தரத்தில் உயரவேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டுள்ளார். அங்கே க.பொ.த. உயர்தர வகுப்பினை தொடங்குவதற்காக வீடுவீடாகச்சென்று மாணவர்களை திரட்டியிருக்கிறார். அவரது சிறப்பான பணிகளை வித்தியானந்தாவில் வி.பி. என்ற தலைப்பில் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் இ.விசுவலிங்கமும்  வன்னி மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த வி.பி. என்ற தலைப்பில் கலாநிதி பார்வதி கந்தசாமியும் பொன்மலரில் தோழர் பொன்னம்பலம் அவர்களின் கல்விச்சேவைபற்றி விதந்து குறிப்பிட்டுள்ளனர்.

எனது இந்த ஆக்கத்தை நிறைவுசெய்யும் முன்னர் குறிப்பிட்ட பொன்மலரில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான தகவலையும் சொல்லிவிடுகின்றேன்.

1975 இன் பின் பல்வேறு ஆயுதக்குழுக்களால் வடபகுதியைச்சேர்ந்த அரசு சார்பு அரசியல் தலைவர்கள் கொலைசெய்யப்படத்தொடங்கிய வேளையில், ஐக்கிய முன்னணி அரசு, அரசு சார்பு வடபகுதி அரசியல் பிரமுகர்களுக்கு கைத்தூப்பாக்கிகளைத் தற்பாதுகாப்புக்கு வழங்கியது. அச்சமயம் இனப்பிரச்சினை சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தெளிவான கருத்தைக்கோரி வி. பி. , கட்சியின் பொதுச்செயலாளர் பீற்றர் கெனமனைச் சந்திக்கின்றார். இந்தப்பேச்சுவார்த்தையின்போது பீற்றர் கெனமன்,  வி.பி.யைப்பார்த்து , “அவசியமாயின் நல்ல துப்பாக்கி ஒன்றை அரசாங்கத்திடம் பாதுகாப்புக்காக பெறுவது நல்லது ”  என்று ஆலோசனை கூறினார். அதற்கு,  வி.பி. பீற்றரைப்பார்த்து,  ” தெளிவான கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தால் அதுவே வடபகுதி இடதுசாரிகளுக்கு வழங்கும் தற்காப்பு ஆயுதமாக இருக்கும். அதைவிட நவீன ஆயுதம் எனக்கும் தோழர்களுக்கும் தேவைப்படாது ”  என்று கூறினார். சு. இராசரத்தினம் என்பவர் இந்தத் தகவலை பொன்மலரில் பதிவுசெய்துள்ளார்.
பின்தங்கிய ஏழ்மை நிலையினால் கல்வி வாசனையே அற்றிருந்த ஒருவரை படிக்குமாறு ஊக்குவித்து பின்னாளில் ஆசிரியராக்கியிருக்கும் வி.பி. அவர்களைப்பற்றி,  ஒரு சோவியத் ஒன்றிய (மாஸ்கோ) மாணவச்சிறுவன் ஒரு போட்டியில் கட்டுரை எழுதி பரிசும் பெற்றுள்ளான். இதுபோன்ற பல அரிய முன்னுதாரணமான தகவல்கள் அடங்கிய மலர்தான் பொன்மலர். தமிழர் இல்லங்களில் இடம்பெறவேண்டிய ஆவணம்தான் பொன்மலர் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. நாம் வாழும் காலத்தில் இப்படியும் ஒரு எளிமையான தமிழ் அரசியல் தலைவர் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் பொன்மலர்.  சமதர்மம் பேசிய தோழர் வி. பொன்னம்பலம் கனடாவில் இயற்கை மரணத்தை தழுவினார். ஆனால்,  தமிழ்த்தேசியம் பேசிய சில தமிழ்த்தலைவர்கள் தாய்நாட்டின் தலைநகரிலும் தமிழ்ப்பிரதேசங்களிலும் எவ்வாறு மடிந்தனர்? என்ற கேள்விக்கு என்னிடமும் வாசகர்களிடமும் பதில் இருக்கிறது.

letchumananm@gmail.com