பிரான்சில் இம்மாதம் 25-ம் திகதி தாய்த் திருநாள்: தாயைப் போற்றுவோம்..!

பத்மா இளங்கோவன‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே..”

உலக சுகங்கள் யாவற்றையும் மிஞ்சிய, வானுலகச் சொர்க்கமெனச் சொல்லப்படுவதையும்விட உயர்ந்தது தாயன்பு. எம் கண் முன்னே நடமாடும் சுயநலமற்ற ஓர் ஆத்மா தான் தாய். ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்த நம் முன்னோர், தாயைத் தெய்வமாகப் போற்றினர். தெய்வம் பூமிக்கு இறங்கி வருவது தாயில் வடிவில் என்று நம்பினார்கள்.

‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” –

தாய் தந்தையரை எம் மூதாதையர் எவ்வாறு மதித்துப் போற்றி மகிழ்ந்துள்ளனர் என்பது இதிலிருந்து புலனாகின்றது. பெற்றவர்களின் ஆசியும் ஆதரவும் எம்மை நன்கு வழிநடத்தும் என்பதை இன்றைய இளம் சந்ததியினர் அறவே மறந்துவிட்டனர்.

‘கண்டதே வாழ்க்கை
கொண்டதே கோலம்”
– என ஒழுங்கு முறையற்ற, கலாசாரப் பண்பாடு மறந்த, கண்மூடி வாழ்க்கையைப் பலர் வாழத்தலைப்படுகின்றனர். இது பிழையெனத் தட்டிக்கேட்கும் பெரியவர்களை மதிக்கும் பழக்கம் அருகிவிட்டது.  இது எங்கேபோய் முடியும் எனச் சிந்திக்கும் சக்தியற்றவர்களாக உள்ளனர்.

இளம் சந்ததியினரின் இந்நிலை மிகவும் வருந்தத்தக்கது. இதை மாற்ற வேண்டிய பொறுப்பு யார் கையில்..?

எம்மைப் பத்து மாதம் சுமந்து, எவ்வளவு கனவுகளோடு பெற்றிருப்பாள் எம் தாய். தன் இரத்தத்தையே பாலாகத் தந்து வளர்த்து, எமது ஒவ்வொரு வளர்ச்சிப் படிகளிலும் எவ்வளவு ஆனந்தம் கொண்டிருப்பாள்.

மெல்லத் தவழ்;ந்து, எழுந்து, நடந்து ஓடி ஆடி, விளையாடி, கதைபேசி வரும்போது எவ்வளவு மகிழ்ந்திருப்பாள்.

நாளை என்பிள்ளை எப்படி எப்படியெல்லாம் வருவான் என்றுதானே ஒவ்வொரு தாயும் கற்பனை செய்திருப்பாள்.

இதையெல்லாம் வளர்ந்தபின் எந்தப் பிள்ளை நினைத்துப் பார்க்கிறது..?

ஒரு சின்ன வருத்தம் என்றால்கூட எப்படித் துடித்துப் போகிறாள் ஒரு தாய். இரவும் பகலும் தன்னை மறந்து, தன் பசி தாகங்களை மறந்து, எப்படிப் பிள்ளையைக் கண்போலக் காக்கிறாள்.

ஒவ்வொரு தாயும் தன் சுகங்களைத் தியாகம் செய்துதான், தன் குழந்தையை வளர்த்தெடுத்துப் பெரியவனாக்குகிறாள். தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக எத்தனை விரதம் காக்கிறாள்.

இந்தத் தாய்ப் பாசத்தை நாம் எதனோடும் ஒப்பிட முடியாது. இதற்கு நிகரேயில்லை. இதனை ஒவ்வொரு பிள்ளையும் நன்கு உணர வேண்டும்.

குழந்தையைப் பெற்றதிலிருந்து, அதனைக் குளிப்பாட்டி, பாலூட்டி, உணவூட்டி, உறங்கவைத்து, வளரும்போது எத்தனை எத்தனை ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து வளர்த்துப் புத்திபுகட்டிக் கல்வி கற்பித்து உத்தியோகமாக்கி, திருமணம் செய்துவைத்து, பேரப்பிள்ளைகளைப் பராமரித்து எனத் தாயின் சேவைக்கு ஓய்வும் உண்டோ..?

தன் பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சிக்காகவும், ஒவ்வொரு சுகத்திற்காகவும் தாய் விழித்தே காத்திருக்கிறாள்.

பிள்ளையை என்று தன் வயிற்றில் சுமந்தாளோ, அன்றே அவள் உறக்கம் போய்விடுகிறது. அன்றிலிருந்து அவள் தனக்காக வாழ்வதில்லை. குழந்தைக்காகத் தன் வாழ்வையே மெழுகுவர்த்தியாக உருக்குகிறாள்.

இரண்டு, மூன்று குழந்தைகளைப் பெற்ற தாய் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பாள் என்பதைப் பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதை உணர்ந்தே வளர்ச்சியடைந்த பல நாடுகள், தாய்க்குப் பிள்ளைகளின் பராமரிப்புக்கான லீவுகள், அவர்களுக்கு உதவிப் பணம் என்பன கொடுத்துத் தாய்மாருக்கான தினத்தையும் வைத்து, தாயைக் கௌரவிக்கிறார்கள். இந்த மகத்துவத்தை நம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருபோதும் பெற்றவர்கள் மனம் நோகப் பிள்ளைகள் நடக்கக்கூடாது. அவர்கள் மனம் மகிழ நன்றாகப் படித்து நல்லொழுக்கமுள்ளவர்களாக வாழ வேண்டும். பெற்றவர் கனவுகளை நனவாக்க வேண்டும். இது ஒவ்வொரு பிள்ளைகளினதம் கடமையல்லவா..?

‘மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.”

இந்தப் பிள்ளையைப் பெற்றவர்கள் என்ன தவம் செய்தார்களோ என்று ஊர் சொல்ல வேண்டும். பெற்றோரின் வயதான காலத்தில், எவ்வளவு தான்  சுமைகள், துன்பங்கள் எமக்கிருந்தாலும், பொறுமையுடன் அன்பாக அவர்களைப் பராமரிக்க வேண்டும். எமக்காக எவ்வளவு சுமைகளை அவர்கள் சுமர்ந்தவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. தற்காலத்தில் பெற்றோரை, முதியவர் காப்பகத்தில் விடுவது ஒரு நாகரீகமாகப் போய்விட்டது. பார்ப்பதற்கு யாருமில்லாத முதியவர்கள் பராமரிப்பு இல்லத்திற்குப் போகலாம்;. ஆனால் பிள்ளைகள் இருக்கும்போது, முடிந்தவரை அவர்களை வைத்துப் பராமரிப்பதுதான் பெற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். சில முதியவர்கள் முதுமைக் காலத்தில் பிடிவாதம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்களை அவர்களின் விருப்பத்திற்கே தான் விடவேண்டும். அவர்கள் உணவு, உடை, பராமரிப்புக்குத் தேவையான சகல வசதிகளையும் பிள்ளைகள் தவறாது செய்ய வேண்டும். முதுமைக் காலத்தில் பெற்றோரை மனம் நொந்து வருந்த விடவே கூடாது. நாம் எமது பெற்றோருக்குச் செய்வதைப் பார்த்துத் தானே நாளை நமது பிள்ளைகள் நமக்குச் செய்வார்கள். இது தொடர்கதை என்பதை மறக்கவே கூடாது.

‘காவோலை விழும்போது குருத்தோலை நகைக்குமா..?” நாளை தனக்கும் இக்கதி தான் என்பதை உணர வேண்டும். ஒரு தாய், பிள்ளை தன்னுடன் இருக்கும்போது, தான் சமைத்த உணவை முதலில் பிள்ளைக்குக் கொடுத்து, அவன் பசியாறிய பின்பே மீதியைத் தான் உண்பாள். பிள்ளை அருகில் இல்லாதபோது, பிள்ளை இப்போது சாப்பிட்டானோ, என்ன சாப்பிட்டானோ, எப்படி இருக்கிறானோ என்ற கலக்கத்துடனே தான் உண்பாள். பிள்ளைக்குக் கொடுத்து உண்ணும் திருப்தியைப் போன்று வேறு அவளுக்கு கிடையாது. இதை ஒவ்வொரு தாயிடமும் நாம் காணலாம். அது தான் தாய்மை..!

‘காலைத் தூக்கி கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டு
பருகத் தந்த அம்மா
பள்ளிக்கூடம் விட்டநேரம் பாதிவழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளில் போடும் அம்மா… ..”

இந்தப் பாடல் வரிகளை எந்தப் பிள்ளையால் மறக்க முடியும்.

இந்த தியாகச் சுடரான தாயின் அன்பை மறப்பது நன்றோ..? கூடவே கூடாது.

தன் உயிர் பிரியும்போதும் தன் பிள்ளைகளை எண்ணிக் கண்ணீர் வடிப்பவள் தான் தாய்… அது தான் தாய்மை..!

தன் சுகம் மறந்து, பிள்ளைகளின் நலத்திற்காகவே வாழ்ந்து மடியும் ஒவ்வொரு தாயையும், இருக்கும்போதே அவள் மனம் குளிர நடந்து, அவளை மகிழ்விப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். நாம் கற்ற கல்வியின் பயன் இது தான்.

‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”

தெய்வத்திற்குச் சமமான, கண்கண்ட தெய்வம் தாயைப் போற்றுவோம்.. மகிழ்வோம்..!!

vtelangovan@yahoo.fr