வாசிப்பும், யோசிப்பும் 260 : ஆங் சான் சூகியே விழித்தெழு! ஆகஸ்ட் 30: சர்வதேசக் காணாமற் போனோர் நாள்! – வ.ந.கிரிதரன் –

ஆங் சான் சூகியே விழித்தெழு!

உனக்கு ராஃப்டோ விருது தந்தார்கள்
உனக்கு சாக்கரோவ் விருது தந்தார்கள்.
அமைதிக்கான நோபல் விருதும் தந்தார்கள்.
இந்திய அரசினரும் தம் பங்குக்கு
சவர்கலால் நேரு விருது தந்தார்கள்.
உன்னை மனித உரிமைகளின்
நாயகி என்றார்கள்.
உன் மண்ணில், உன் காலுக்குக் கீழ்
மதத்தின் பெயரால்,
இனத்தின் பெயரால்,
ஓரினத்து மக்கள் ,
ரொகின்யா இன மக்கள்,
உரிமைகளிழந்து
உடல்ரீதியாக, உளரீதியாக
வாதைகள் அடைகின்றார்களே!
உயிரிழக்கின்றார்களே!
மனித உரிமைகளின் செயல் வீராங்கனையே!
ஜனநாயகமும், விடுதலையும்
ஒருபோதும் கைவிடப்படாத கனவுகள் என்றாயே!
எங்கே உன் உரிமைக்குரல்?

ஆங் சான் சூகியே! நீ தூக்கத்தில்
ஆழ்ந்தது போதும்! விழித்தெழு!
உன் கடைக்கண் பார்வையை
உன் மண்ணில் வாதைகளுக்குள்ளாகும்
ரொகின்யாக்கள் பாலும் செலுத்து!
உன் குரல், உரத்துக்கேட்கும் உன் குரல்
உன்னை விருதுகளால் நிரப்பியிருக்கும்
உலகத்தவர்களை உசுப்பி விடும் வல்லமை மிக்கது.
உன் குரல் உன் நாட்டின் இரும்புக்கரங்களை
இளகிட வைத்த குரல்.
அசைத்திட்ட குரல்.
இன்னுமேன் மெளனம்; தயக்கம்.
ஆங் சான் சூகியே விழித்தெழு!
குரல் கொடு.
ரொகின்யாக்களின் விடுதலைக் கனவுகளுக்காக,
ரொகின்யாக்களின் ஜனநாயகக் கனவுகளுக்காக,
எக்கனவுகளை நீ மானுடர்கள் ஒரு போதும் கைவிடக்கூடாது என்று
வலியுறுத்தினாயோ,
அம்மக்களின் இன்னும் கைவிடப்படாத அக்கனவுகளுக்காக,
ஆவேசத்துடன் கிளர்ந்தெழு! உன் இனத்து மக்களுக்காக
எவ்விதம் கிளர்ந்தெழுந்தாயோ அவ்விதம். ஆம்!
அவ்விதமேதான்! அவ்விதமேதான்.


ஆகஸ்ட் 30: சர்வதேசக் காணாமற் போனோர் நாள்!

 ஆகஸ்ட் 30: சர்வதேசக் காணாமற் போனோர் நாள்!

இன்று சர்வதேசக் காணாமல் போனோர் தினம்!
உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள்,
உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு
உதவிக்கரம் நீட்டியவர்கள்,
அடக்கு, ஒடுக்கு முறைகளுக்கு எதிராக
ஆயுதம் தாங்கியவர்கள்,
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்,
அபாயத்திலுதவியவர்கள்,
வேறு மதம், வேறு மொழி, வேறினம்,
வேறு வர்க்கம் என்பதால்,
சந்தேகத்துக்குள்ளனாவர்கள்,
அதனாலேயே காணாமல் போனவர்கள்,
இவர்களை நினைவு கூரும் நாள் இன்று.
அரசுகளின், ஆயுதக்குழுக்களின் தடுப்பு முகாம்களில்,
சிறைகளில், சித்திரவதைக்கூடங்களில்,
சர்வதேசமெங்கும் இலட்சக்கணக்கில் மானுடர்
உறவிழந்து, உயிரிழந்து, அடிப்படை உரிமையிழந்து
மடிந்திருக்கின்றார்கள்; சிறைகளில் வாடுகின்றார்கள்.
இவர்கள் தம் மானுட அடிப்படை உரிமை இழந்தவர்கள்.
அதற்காகவே மறைந்து போனவர்கள்.
அவர்களை நினைவு கூரும் நாள்.
நினைவு கூர்வோம். அவர்களுக்காகத்
தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.
ஆண்டுக்கணக்காய் இன்னும் கம்பிகளுக்குப் பின்னால்
உருக்குலையும் அவர்கள்தம் வாழ்வினைச் சீராக்குவதற்காக
நாம் அவர்களை நினைவு கூர்வோம். எம் குரலைப் பதிவு செய்வோம்.

ngiri2704@rogers.com