வாசிப்பும், யோசிப்பும் 266: ‘டொராண்டோவில்’ நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டு விழா! ஆ.சிவநேசச்செல்வனின் ஆவணப்படுத்தற் சேவை பற்றி..

‘டொராண்டோவில்’ நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

திரு. ஆ.சிவநேசச்செல்வன் (22.10.2017) அன்று ‘டொராண்டோவில்’ நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன். சிறப்பாக நடைபெற்றது. இது பற்றிப்பின்னர் விரிவானதொரு பதிவிடுவேன். எழுத்தாளர் அருண்மொழிவர்மன் வரவேற்புரையினையும், நிகழ்வின் முடிவில் நன்றியுரையும் வழங்கினார். கவிஞரும், பேராசிரியருமான சேரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பாக நிகழ்வினை நிர்வகித்து நடாத்தினார். நிகழ்வில் பேராசிரியர் நா.சுப்பிரமணியன், க.சண்முகலிங்கன், கலாநிதி மைதிலி தயாநிதி, ஆ.சிவநேசச்செல்வன், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் மற்றும் எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் நூலகம் நிறுவனம் ஆகிவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்வின் வெற்றிக்கு பிறேமச்சந்திரா, அருண்மொழிவர்மன், தயாநிதி, மற்றும் புவனேந்திரன் திருநாவுக்கரசு ஆகியோர் உறுதுணையாக விளங்கியதை நிகழ்வில் காணக்கூடியதாகவிருந்தது.

நிகழ்வில் யாழ் இந்துக்கல்லூரியின் கலையரசி 2017 நிகழ்வில் எஞ்சிய பணத்தை (2000 கனடிய டாலர்களுக்கும் அதிகமான தொகை) யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சார்பில் புவனேந்திரன் திருநாவுக்கரசு நூலகம் நிறுவனத்துக்கு வழங்கினார். நூலகம் சார்பில் அருண்மொழிவர்மன் மற்றும் நக்கீரன் ஆகியோர் அப்பணத்தினைப் பெற்றுக்கொண்டனர். உண்மையில் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தைப்பாராட்டத்தான் வேண்டும். இவ்விதமானதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டதற்கும், நூலக அமைப்புக்கு நிதி வழங்கியதற்கும்.

நூலின் பதிப்பாசிரியராகவிருப்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் ஆவார். பழைய பிரதிகளை வாசித்துத் தொகுப்பதில் அவர் எவ்வளவு சிரமங்களை அடைந்திருப்பார் என்பதை அறிய முடிகின்றது. அவரது பணியும் பாராட்டுதற்குரியது.

இத்தொகுப்பு நூலுக்குப் பலர் நிதி உதவி வழங்கியுள்ளதை அறிய முடிகின்றது. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

மேற்படி நிகழ்வினைத்தொடர்ந்து கலாநிதி தேனுகாவுடன் ‘சுற்றாடல் பாதுகாப்பு – அண்டார்ட்டிகா கண்ணோட்டம்’ என்னும் தலைப்பில் ஒரு கருத்துரையாடலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அக்கருத்தரங்கில் கலாநிதி தேனுகா அண்டார்ட்டிகாவில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கலை, இலக்கிய ஆளுமைகள்,அரசியற் செயற்பாட்டாளர்கள், யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் எனப்பலரைக் காண முடிந்தது.


ஆ.சிவநேசச்செல்வனின் ஆவணப்படுத்தற் சேவை பற்றி..

திரு. ஆ.சிவநேசச்செல்வன் அக்காலகட்டத்தில் இவரை ஒருமுறை சந்தித்துமுள்ளேன். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகையினை அவருக்குக் கொடுப்பதற்காக. அதன் பிறகு ‘டொராண்டோ’விலேயே அவரை ‘டொராண்டோ’ தமிழ்ச்சங்க மாதாந்த நிகழ்வுகளில் கண்டிருக்கின்றேன். அமைதியான சுபாவம் மிக்கவராக அப்பொழுது இவர் எனக்குத் தென்பட்டார். இவருடன் நான் அதிகம் பழகாவிட்டாலும், இவரை ஒரு விடயத்துக்காக எப்பொழுதும் நினைவு கூர்வேன். தொண்ணூறுகளில் எனது வானியற்பியல் பற்றிய அறிவியல் கட்டுரைகள் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியாகின. அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து, உரிய புகைப்படங்களுடன் பிரசுரிக்கவும், கட்டுரைகள் பற்றி கிடைத்த வாசகர் கடிதங்களை வெளியிடவும் இவர் காரணமாகவிருந்தார். அக்கட்டுரைகள் பற்றிய என் முகநூற் பதிவொன்றில் அக்கட்டுரைகள் பற்றிய தன் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டிருந்தார்.

யாழ் பல்கலைக்கழக நூலகராகப் பணியாற்றியபோது நூல்கள், பத்திரிகைகள் என்பவற்றைச் சேகரித்து ஆவணப்படுத்திய இவரது பணியானது எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரப்படும். ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அப்பணி மிகவும் முக்கியமானது. இவர் வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகை ஆசிரியராகவிருந்தபோது சிறப்பாகச் செயலாற்றினார். அதற்காகவும் இவர் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார்.

‘ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள் ஓர் ஆய்வு’ என்னும் தனது நூலை எனக்கு வழங்கியதற்காக மீண்டுமொருமுறை என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

ngiri2704@rogers.com