மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது!

மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது!முருகபூபதிஇலங்கையின் மூத்த எழுத்தாளரும் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த டொமினிக்ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியத்துறையில் பிரவேசித்தவர். இலங்கை கம்யூனீஸ்ட் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தமக்கு நாளாந்தம் வருவாய்தரும் தொழிலையும் கைவிட்டு முழுநேர எழுத்தாளராக பல தசாப்தகாலமாக அயராமல் உழைத்தார். இலங்கையில் கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலம் உருவானதும் தனது தண்ணீரும் கண்ணீரும் முதலாவது சிறுகதைத்தொகுதிக்காக சாகித்திய விருதும் பெற்றார். இலங்கையில் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைக்காக முதல் முதலில் சாகித்திய விருதுபெற்றவரும் டொமினிக் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் முதலில் கஸ்தூரியார் வீதியிலிருந்தும் பின்னர் காங்கேசன்துறை வீதியில் ஒரு ஒழுங்கைக்குள்ளும் இருந்து பல வருடங்களாக வெளியான மல்லிகை மாத இதழ் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியிருக்கிறது. இலங்கையில் நாடுபூராகவும் தெருத்தெருவாக அலைந்து மல்லிகையை விநியோகித்து தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர் அதன் ஊடாக ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் ஜீவாவையே சாரும். அதனால் மல்லிகைஜீவா என்றே அழைக்கப்பட்டார். வடக்கில் போர்மூண்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுக்காகிதாதிகளுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய காலத்திலும் பாடசாலை அப்பியாசக் கொப்பித்தாள்களில் மல்லிகையை அச்சிட்டு வெளியிட்ட சாதனையாளர் மல்லிகை ஜீவா பல   நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்புக்கு இடம்பெயர்ந்து புறக்கோட்டை ஸ்ரீகதிரேசன் வீதியில் தொடர்ந்தும் பல வருடகாலமாக மல்லிகை இதழை வெளியிட்டுவந்தார்.

தமிழ்நாட்டிலும் தனது இலக்கியப்பணிகளை விரிவுபடுத்திய மல்லிகை ஜீவா தமிழக படைப்பாளிகளையும் கௌரவிக்கும் நோக்கத்தில் பலரது படங்களை மல்லிகையின் முகப்பில் பதிவுசெய்து தமிழக – இலக்கிய உறவுப்பாலத்தை உருவாக்கினார். அதற்காக பல தடவைகள் தமிழ்நாட்டிற்கு பயணித்திருக்கும் ஜீவா – சோவியத்தின் அழைப்பினை ஏற்று மாஸ்கோவுக்கும் ஐரோப்பாவில் இயங்கும் இலக்கியச்சந்திப்பின் அழைப்பை ஏற்று பிரான்ஸ், இங்கிலாந்து முதலான நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார்.

ஜீவாவின் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது சுயசரிதையை Undrawn Portrait For Unwritten Poetry என்னும் பெயரில் அவுஸ்திரேலியாவில் வதியும் மொழிபெயர்ப்பாளர் நல்லைக்குமரன் குமராசாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்துள்ளார்.

மல்லிகையில் ஏராளமான சிங்களச்சிறுகதைகள் மற்றும் பிறமொழிக்கதைகள் கட்டுரைகளின் தமிழ்மொழி பெயர்ப்புகளுக்கு களம் வழங்கியிருக்கும் மல்லிகை ஜீவா தேசிய இனங்களின் நல்லிணக்கத்திற்கும் சர்வதேச சகோதரத்துவத்துவப்பண்புகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கியவர்.

இலங்கையில் பல இளம் எழுத்தாளர்களை மல்லிகை ஊடாக இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். நீர்கொழும்பு, திக்குவல்லை, அநுராதபுரம், முல்லைத்தீவு, மலையக மல்லிகை சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ள ஜீவா அவுஸ்திரேலியா சிறப்பு மலரையும் வெளியிட்டவர். இலங்கையில் சாகித்திய விருது மற்றும் சாகித்திய ரத்தினா, தேசத்தின் கண் ஆகிய சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ள ஜீவாவின் வாழ்வும் பணியும் பற்றி ஏற்கனவே திக்குவல்லை கமால் மற்றும் முருகபூபதி ஆகியோர் நூல்களும் எழுதியுள்ளனர்.

சமீபத்தில் இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஜீவாவின் அபிமானியுமான தெணியான் தினக்குரல் வார இதழில் எழுதிய மனசோடு பழகும் மல்லிகை என்னும் கட்டுரைத்தொடர் தற்பொழுது முழுமையான நூலக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு அரங்கும் எழுத்தாளர் ஒன்று கூடலும் மல்லிகை ஜீவா பிறந்ததினத்தை கொண்டாடு முகமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27 ஆம் திகதி கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண சிறிய மண்டபத்தில் நடைபெறுகிறது. பேராசிரியர் சபா ஜெயராசாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் புரவலர் ஹாஸிம் உமர் நூலின் முதல்பிரதியை பெற்றுக்கொள்வார். ஜீவாவின் மகன் திலீபன் டொமினிக்ஜீவா நன்றியுரையாற்றுவார்.

மல்லிகையினால் 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட கவிஞர் மேமன்கவி இந்நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பார். தமது 88 வயதில் காலடி எடுத்துவைக்கும் மல்லிகை ஜீவா நல்லாரோக்கியத்துடன் இலக்கிய அரங்கில் தொடர்ந்து இயங்கிவரவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

letchumananm@gmail.com