வாசிப்பும், யோசிப்பும் 273: முகநூற் குறிப்புகள் சில!

கவலையளிக்கும் இலங்கை நிலை!

இலங்கை பல்லினங்கள் வாழும் நாடுகளிலிலொன்று. அண்மையில் கண்டியிலேற்பட்ட கலவரம் துரதிருஷ்ட்டமானது. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் சமயங்களில் பாதித்தவரும், பாதிக்கப்பட்டவரும் வேறு வேறான இனத்தைச் சார்ந்தவராகவிருக்கும் பட்சத்தில் இனவாதிகளால் இச்சம்பவங்கள் ஊதிப்பெருப்பிக்கப்பட்டு இனக்கலவரங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்களுள்ளன. கடந்த காலங்களில் வதந்திகள், சம்பவங்கள் இனக்கலவரங்களை உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்தின. இவ்விதமான கலவரங்கள் ஏற்படும் சமயங்களில் நாட்டில் நிலவும் சட்டதிட்டங்கள் இவ்விடயங்களைப் பொறுப்பேற்று, கலவரங்கள் ஏற்படாத வகையில் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் நாட்டில் அடிக்கடி இனக்கலவரங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இவ்விதமான சம்பவங்கள் ஏற்படும் சமயங்களிலெல்லாம் இன, மத, மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று, சட்டம் தன் கடமையைத் துரிதமாகச் செய்யும் சூழலை நடைமுறைப்படுத்த வேண்டும். குற்றமிழைத்தவர்கள் முறையான நீதி விசாரணைகளின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விதமான நடைமுறை பழக்கத்துக்கு வருமானால் இவ்விதமான சம்பவங்கள் நடைபெறும் சமயங்களில் சட்டம் தன் கடமையை ஒழுங்காகச் செய்யும் என்னும் மனநிலையில் அனைத்து நாட்டினருமிருப்பார்கள். அதனால் உணர்வுகளுக்கு ஆட்பட்டு இனக்கலவரங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. ஆனால் சட்டம் தன் கடமையைச் செய்வது பாரபட்சமற்று இருப்பது அவசியம். அவ்விதமிருந்தால்தான் அனைத்து இன மக்களும் அச்சட்டத்தின் மேல் மதிப்பு வைப்பதுடன், காவல் துறையினருக்கும் ஒத்துழைப்பினை நல்குவர்.

கடந்த காலங்களில் இனக்கலவரங்கள், யுத்தங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்த நாட்டில் தற்போதுதான் சிறிது காலமாக அமைதி ஓரளவென்றாலும் நிலவுகின்றது. இந்த அமைதி நீடிக்க வேண்டுமென்றால் நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் சமமாகப் பிரயோகிக்கப்படுவது அவசியமாகும்.


எம்ஜிஆர் சிலை சிறப்பு விழாவில் ரஜனிகாந்தின் உரை பற்றி….

எம்ஜிஆர் சிலை சிறப்பு விழாவில் ரஜனிகாந்தின் இந்த உரையைக் கேட்டேன். விமர்சனங்களுக்கு அப்பால், என் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், இந்த உரையிலிருந்து நான் வந்தடைந்த முடிவு : தமிழ் நாட்டு அரசியலையே மாற்றப்போகின்ற பேச்சு.

இதற்கு முக்கிய காரணங்கள்:
1. தன் மேல் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் உள்வாங்கி அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கின்ற பாங்கு.
2. தமிழ் நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்குணர்ந்து எம்ஜிஆருடன் தன் உறவு, எம்ஜிஆர் பற்றிய தன் சிந்தனைகள் ஆகியவற்றை மக்களை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்திய பாங்கு.
3. மக்களை ஈர்க்கும் வகையிலான அவ்வப்போது ‘பஞ்ச்’ வைத்துப் பேசப்பட்ட உரை.
4. ஏன் நடிகனொருவன் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்கான காரணங்களைத் தர்க்கரீதியாக முன் வைத்தது. எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த சமயம் அவரைக் கூத்தாடி என்று இகழ்ந்தார்கள். அப்பொழுது தேர்தலுக்கு முன் அனைத்துக் கட்சியினருக்கும் இந்திய வானொலியில் உரையாற்ற சந்தர்ப்பம் கொடுத்தார்கள். அச்சந்தர்ப்பத்தை நன்கு பாவித்த எம்ஜிஆர் ‘நான் கூத்தாடிதான்’ என்று ஆரம்பித்துத் தன்னைக் கூத்தாடி என்றவர்களின் வாயை அடைத்து வெற்றியைத் தரும் வகையிலான உரையினை ஆற்றியிருந்தது நினைவுக்கு வருகின்றது. அதனை நினைவு படுத்துகின்றது ரஜனியின் தான் நடிகனே. நடிகன் அரசியலுக்கு வரக்கூடாதா என்ற பேச்சு.
5. ஆன்மிக அரசியலென்றால் தூய்மை அரசியல் என்ற விளக்கம்.
6. அரசியல் தலைவருக்கான வெற்றிடமுள்ளதை ஆணித்தரமாக வலியுறுத்தும் பாங்கு.
7. நடிப்பு என்னும் தொழிலை ஒழுங்காகச் செய்த நடிகனால், தம் அரசியல் வேலைகளை ஒழுங்காகச் செய்யாத அரசியல்வதியை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமென்று வாதிட்ட தர்க்கச்சிறப்பு.

நானும் இதுவரை தமிழக அரசியலில் ரஜனிகாந்துக்கான சாத்தியங்கள் அதிகமில்லையென்றே எண்ணி வந்துள்ளேன். ஆனால் இந்த உரை மூலம் அந்த முடிவை மாற்றிக்கொள்கின்றேன். இதே வேகத்தில், இதே மாதிரியான சாதுரியத்துடன் சென்றால் , ரஜனியும் அடுத்த எம்ஜிஆராக. அடுத்த என்.டி.ஆராகக் கட்சியை ஆரம்பித்துக் குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர்களின் பட்டியலில் சேர்வதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்க மாட்டேன். எம்ஜிஆர் பற்றிய தன் உயரிய எண்ணங்களைச் சாதுரியமாக வைத்ததன் மூலம் தமிழக மக்கள் ஒருபோதுமே எம்ஜிஆருக்கு எதிரான ஒருவராக எண்ணப்போவதில்லை. அதனை நன்கு உணர்ந்த ,தமிழக மக்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்த பேச்சு ரஜனியின் அரசியல் வெற்றிக்கு அடி போடுகின்ற பேச்சு இது. தற்போதுள்ள களத்திலுள்ள அரசியலிலுள்ள தலைவர்களில் மக்களைக் கட்டிப்போட வைக்கும் வகையில் உரையாற்றும் வல்லமை ரஜனிக்கு உள்ளதை வெளிப்படுத்தும் பேச்சு. இந்தப் பேச்சு தமிழக அரசியலை மாற்றப்போகின்றது. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். ரஜனியின் அரசியல் வெற்றிக்கு இந்த உரை பதம்.


காலத்தால் அழியாத கானங்கள்: “இது ஒரு பொன்மாலை பொழுது…”

எனக்குப் பிடித்த எஸ்.பி.பி / இளையராஜா / வைரமுத்து கூட்டணியிலுருவான மிகச்சிறந்த பாடலாக இதனையே கருதலாமென்று தோன்றுகின்றது. காரணம் பாடலிலுள்ள கவித்துவம், தத்துவம், மற்றும் இயற்கை பற்றிய படிமங்கள் ஆகியவையே. அந்தி வானம் சிவந்து கிடக்கின்றது. இன்னும் சிறிது நேரத்தில் இரவு கவியப்போகின்றது. கவிஞரின் கற்பனையோ சிறகடிக்கின்றது. எப்படி? அந்தி வானத்தின் சிவப்பானது நாணும் வானப்பெண்ணின் வதனத்தில் படியும் சிவப்பாம். இரவு என்னும் கரிய ஆடையை இன்னும் சிறிது நேரத்தில் அணியப்போகும் வானப்பெண்ணின் நாணச்சிவப்பு. கவிஞரின் கவித்துவத்தில் மனம் சிறகடிக்கத்தொடங்குகின்றது.

“இது ஒரு பொன்மாலை பொழுது…
வானமகள், நாணுகிறாள்…
வேறு உடை, பூணுகிறாள்…”

கவிஞரின் கற்பனையோ மேலும் மேலும் சிறகடிக்கத்தொடங்குகின்றது. இரவினை கரிய ஆடையாக, வான மகள் அணியப்போகின்ற ஆடையாகப் பார்த்த கவிஞர் அதனை இரவு வாசலாகக் காண்கின்றார். ராத்திரி வாசல் அற்புதமான படிமம். பல்வகை வர்ணங்கள் மலிந்த வானத்தைக் கொண்ட பொன்மாலைப்பொழுது. அவ்வர்ணங்களை இராத்திரி வாசலில் இடப்படும் கோலங்களாகக் கவிஞர் காண்கின்றார். வானத்தை வானமகளாகப் பார்த்த கவிஞரின் கற்பனை இன்னுமொரு கோணத்துக்குத் திரும்புகின்றது. வரப்போகும் இரவுடன் இணைக்கும் பாலமாக அதனைக் காண்கின்றார். வானப்பாலம். இன்னுமொரு கவித்துவம் மிக்க படிமம். பொதுவாகக் கோலமிடுவது காலைப்பொழுதுகளில். ஆக இரவினைக் கவிஞர் காலைப்பொழுதாகவும் கவிஞர் காண்கின்றார். நேரடியாகக் கூறாவிட்டாலும், அவ்விதமே கருத வேண்டும். அக்காலைப் பொழுதுக்குச் செல்வதற்குப் பாலமாக அந்தி வான் விளங்குகின்றது. இரவுக்காலை என்பது அற்புதமான படிமம். இதனைக் கவிஞர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் எம்மை ஊகிக்க வைத்து விடுகின்றார். இரவுக்காலையை, இரவுப்பூபாளத்தை வரவேற்றுப் பட்சிகள் தாளமிடுகின்றன; பூமரங்கள் சாமரங்களாகி வீசுகின்றன. என்னே கற்பனை! கவிப்பேரரசுவின் கவித்துவத்துக்கு எடுத்துக்காட்டான வரிகள்.

அடுத்து வரும் வரிகளே இப்பாடலில் எனக்கு மிகவும் , மிகவும் பிடித்த வரிகள். அவை:

“வானம் எனக்கொரு போதி மரம்…
நாளும் எனக்கது சேதி தரும்…
ஒரு நாள் உலகம் நீதி பெறும்…
திருநாள் நிகழும் தேதி வரும்…
கேள்விகளால், வேள்விகளை… நான் செய்தேன்…”

விரிந்திருக்கும் வானம், குறிப்பாகச் சுடர்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானம் போதிப்பவை பல. பிரபஞ்சத்தின் ஒளிவருடக் காலவெளி நாட்டியத்தை எமக்குப் புரிய வைக்கின்றன. இதன் மூலம் மானுட இருப்பைப்பற்றிப் போதிக்கும், ஞானத்தைத் தரும் போதி மரங்களாகி, அப்போதி மரங்களின் கீழ் ஞானம் பெறும் நவீன புத்தர்களாக மானுடரெம்மை ஆக்கி விடுகின்றன. இந்த ஞானத்தை மட்டும் மானுடராகிய நாம் அனைவரும் அடைந்து விட்டால் பிறகு இப்புவியில்தான் பிரிவுகள் ஏது? மோதல்கள் ஏது? இரத்தக்களரிகள், யுத்தங்கள்தாம் ஏது? உலகம் நீதி பெறும் அந்நாள் , அத்திருநாள் நிகழும் தேதி நிச்சயம் வரும் அதற்கு வானம் போதிமரமாகிப் போதிக்கும் ஞானம் எமக்கு நிச்சயம் உதவும். இவ்விதமாகப் பல கேள்விகள் கவிஞரின் கற்பனையில் தோன்றுகின்றன. அக்கேள்விகளால் அவர் வேள்விகள் செய்கின்றார். அவ்வேள்விகளால் எம் சிந்தையிலும் இன்பம் மட்டுமல்ல ஞானமும் சுடர்கின்றது.

படம்: நிழல்கள்
பாடகர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: கவிஞர் வைரமுத்து

முழுமையான பாடல் வரிகள்:

இது ஒரு பொன்மாலை பொழுது…
வானமகள், நாணுகிறாள்…
வேறு உடை, பூணுகிறாள்…
இது ஒரு பொன்மாலை பொழுது…

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்…
ராத்திரி வாசலில் கோலமிடும்… (2)
வானம் இரவுக்கு பாலமிடும்…
பாடும் பறவைகள் தாளமிடும்…
பூமரங்கள், சாமரங்கள்… வீசாதோ…

வானம் எனக்கொரு போதி மரம்…
நாளும் எனக்கது சேதி தரும்… (2)
ஒரு நாள் உலகம் நீதி பெறும்…
திருநாள் நிகழும் தேதி வரும்…
கேள்விகளால், வேள்விகளை… நான் செய்தேன்…


கவிதை: பரிமாணச் சிறைக்கைதி நான்.
– வ.ந.கிரிதரன் –

பிரமிக்க வைக்கும் பிரபஞ்சம்!
இருப்பின் புதிருக்கு விளக்கம்
பதில், பரந்து விரிந்து கிடக்குமிதன்
ஆழத்தில் எங்கோதான் இருக்க வேண்டும்?

வியக்க வைக்கும்
விசும்புடன் கூடியதிந்தப் பிரபஞ்சம்
வியக்க வைத்துக்கொண்டேயிருக்கும் என்
வாழ்நாள் முழுவதும் எவ்வித
விடையுமற்று; ஏனெனில்
விடை புரிதற்கு இயலாத பரிமாணச் சிறைக்குள்
வதங்குமொரு சிறைக்கைதி நான்.
விடுதலையற்ற சிறைக்குள்
வாடுமொரு கைதி நான்


ஆதிவாசி இளைஞர் மதுவின் மரணம்!

அண்மையில் கேரளாவில் ஆதிவாசி இளைஞரான மது என்பவர் வயிற்றுப்பசிக்காகத் திருடியதாகவும், ஊர்வாசிகளால் தாக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அம்மனிதன் மரணம் அடைந்ததாகவும் இணையச்செய்திகள் மூலம் அறிந்துகொண்டேன். அண்மைக்காலத்தில் மனதைப்பாதித்த மானுட அவலங்களில் இச்செய்தியுமடங்கும். மானுட அழிவுகள் சிரியாவில் தொடர்கின்றன. ஆறறிவு படைத்த மனிதரின் கீழறிவின் வெளிப்பாடுதான் இவை. சமுதாய அமைப்பின் காரணமாக பலியாகிய ஆதிவாசி மதுவின் நிலை ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டக் காலத்தின் ஆரம்பகாலத்தில் நடைபெற்ற இது போன்ற மானுட உரிமை மீறல்களை நினைவு படுத்தின. அக்காலகட்டத்தில் (தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்) கனடாவிலிருந்து வெளியாகிய ‘தாயகம்’ சஞ்சிகையில் ஒரு தொடர்கதை எழுதியிருந்தேன். அதன் பெயர் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’. அதில் இது போன்று நிகழ்ந்த மானுட அவலங்களைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்நாவல் தமிழகத்திலிருந்து குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியான ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலுமுள்ளது. அண்மையில் ‘புதிய பாதை’ என்னும் பெயர் மாற்றத்துடன் ‘பதிவுகள்’ இணைய இதழிலும் வெளியாகியுள்ளது. அதில் எமது ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் சமூக விரோதிகளென்று உணவிற்காகக் கோழி திருடியவனையெல்லாம் சுட்டுக்கொன்றதை விமர்சித்திருந்தேன். மது போன்ற மனிதர்களின் இவ்விதமான செயல்கள் சமூக அமைப்பின் குறைபாடுகளினால் உருவானவை. கருணையுடன் நோக்கப்பட வேண்டியவை. இவ்விதமான சமூகப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் குரல் கொடுப்பதற்குப் பதில், காரணமான மூலவேர்களை அழிப்பதற்குப் பதில் விளைவுகளான அப்பாவிகளை நடத்தைப் படுகொலை செய்து தண்டிப்பது மானுட குலமே நாணப்பட வேண்டியதொன்று. அதுவும் இந்தியாவில் படித்தவர்களின் மாநிலங்களிலொன்றான கேரளாவில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வெட்கப்பட வேண்டியதொன்று.

இந்நிலையில் இச்சம்பவம் பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்த மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, ‘அவர் ஆதிவாசி. பசிக்காகத் திருடியிருக்கின்றார். தவறில்லை. அது சமூகச்சீர்கேடு. எங்களை மன்னித்து விடு மது’ என்று குரல் கொடுத்திருக்கின்றார். அதற்காக அவரைப் பாராட்டுகின்றேன்.

‘புதிய பாதை’  நாவலிலிருந்து சில பகுதிகளை இத்தருணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:

“இவனுக்கு மனம் உறுதியாக தெளிவாக ஒருவித நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதாகப் பட்டது. சிலவேளைகளில் இப்படித்தான் மனம் உற்சாகத்தால் பொங்கிவழிந்துவிடுகிறது. இச்சமயங்களில் நித்திரை தான் வரமாட்டேன் என்கிறது. எழுந்து குறிப்பேட்டை எடுத்து பக்கங்களை புரட்டினான். தன் கடந்த காலப் பாதிப்புகளின் விளைவாக இருந்த குறிப்பேட்டின் பக்கங்களை மீண்டும் வாசிப்பது நெஞ்சுக்கு இதமாக இருந்தது. ஒருவிதமான சந்தோசகரமான உணர்வுகளையும் தந்தது. அதில் ஒரு பக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

“எங்கே போகிறோம்?” நாங்கள் எங்கே போகின்றோம்? எதை நோக்கி எதை அடைய இந்த ஆவேசம் எங்களால் எங்களுக்குள்ளேயே ஒன்றாக, ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை. தொலைநோக்கில் எமது சமுதாய நலன்களை சிந்திக்க முடியவில்லை ஏன்? சமுதாயப் பிரச்சனைகளைச் சரியாக இனம் கண்டு ஆராய முடியவில்லை. ஆனால் பிரச்சனைகளின் அடியை ஆராயாமல் தண்டனை கொடுப்பதில் மட்டும் நாங்கள் மகாசமர்த்தர்கள். சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சூழல்கள் காரணமாக கொள்ளையடித்தவனுக்கு, விபசாரம் செய்தவளுக்கு நாங்கள் கொடுத்த தண்டனைகள். அவர்களை இந்நிலைக்கு தள்ளிவிட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் தானே நாங்கள்.சமூகத்தை குற்றம் சொல்லத்தான் மனம் வருமா? அவனது ஞாபகம்தான் எழுகிறது. அவன் இறுதியாக கூறிய வசனங்கள் இன்னமும் பசுமையாக பதிந்திருக்கின்றன. ‘அண்ணை மாரே, என்னைக் கொள்ளையன் என்றீங்கள். சமூக விரோதி என்றீங்கள். போராட்டச் சூழலில் களையெடுக்கப்பட வேண்டியவன் என்றீங்கள். ஆனா ஒன்றை மட்டும் மறந்திட்டீங்கள். நீங்கள் ஒருத்தருமே என்னை இந்த நிலைக்கு தள்ளிவிட்ட இந்த சமூகத்தை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்க மறந்துவிட்டீங்களே. இதே இந்த வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்ற சமூகத்தாலை ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகமொன்றில் தான் நான் பிறந்தவன். படிக்க வசதியில்லை. கூலி வேலை செய்து காலம் பாழாய் போச்சு, ஆமிக்காரன் சுட்டு அப்பாவும் செத்துப்போனார். அம்மாட வருத்தம் ஆதரவற்ற தங்கை மார், வாழ முடியவில்லை. வேலையில்லை. வயிற்றுப் பசிக்காக களவெடுத்தன். இப்படிப் பசிக்காக களவெடுத்து வாழுறதை விட சாகிறதே மேல்.ஆனால் அம்மா தங்கச்சிமாரை நினைச்சாத்தான் கவலையாயிருக்கு. படைச்ச ஆண்டவனே வழியைக் காட்டட்டும். ஆனால் அண்ணைமாரே, நான் களவெடுத்ததற்கு காரணமே இந்த சமூகம் தானே. அந்த சமூக அமைப்பை மாற்றத்தானே நீங்களெல்லாம் போராடிறீங்க. அப்படியென்றா, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய இந்த சமுதாயமல்லவா முதலாவது குற்றவாளி.

அந்த இளைஞனின் சொற்கள் இப்பொழுதுதான் கேட்பது போல் காதில் கேட்கின்றன. அவன் கூறியதில் தான் எவ்வளவு உண்மை இருக்கின்றது. வேடிக்கை பார்த்து நின்ற கூட்டமோ ஆர்ப்பரித்து வரவேற்றது. நானோ.மனிதத்துவம் வெகு அற்பமாக, இலகுவாக சிதைக்கப்படுவதை வேடிக்கை பார்த்தபடி நின்றுவிட்டேன். அந்தச் சமயத்தில் அந்தத் தண்டனை சரியென்பதுபோல் வேடிக்கை பார்த்துவிட்டேன். ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” எதற்கும் இருக்கவே இருக்கிறது பகவத் கீதை, அநீதிக்கெதிரான போருக்கு ஆதரவளிக்கிறதென்று தான் பேர். ஆனால் நடக்கிற ஒவ்வொரு அநீதிக்கும் அதை நடத்துவதற்கு ஆதரவாய் இருப்பதும் இந்த கீதையல்லவா? எதற்கெடுத்தாலும் கடமையைச் செய். பலனை எதிர்பாராதே”

சமுதாய அமைப்பையே மாற்றிவிடப்போவதாக, வறுமை ஏற்றத் தாழ்வுகளை அழித்தொழிக்கப் போவதாக சூளுரைத்த அதே சமயம் எங்கள் நன்மைக்காக, எங்கள் வளர்ச்சிக்காக, வட்டிப்பணத்தில் லஞ்சப்பணத்தில் வெளிநாட்டுப் பணத்தில் ஊர்நிலைமை புரியாது வாழ்ந்தவனுக்கு வக்காலத்து வாங்கினோம். வறுமையால் திருடியவனை கம்பத் திலேத்தினோம். அவன் மனிதனில்லையா? அவனுக்கு வாழ உரிமையில்லையா? அவனது அடிப்படை உரிமைகளை மறுதலிக்கின்ற எம்மால் எவ்விதம் அவற்றுக்காகப் போராட முடியும்? எங்களுக்கு எங்கள் மேலேயே நம்பிக்கை வைக்க முடியவில்லை. எங்களை நம்ப முடியாத எம்மால் எவ்விதம் மற்றவர்களை நம்ப முடியும்? முதலில் நாங்கள் எங்களைச் சுத்திகரிக்க வேண்டும். தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும். எமக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும். மக்களின் பிரச்சனைகளை அவர்கள் எந்தப் பிரிவினைச் சேர்ந்தவர்களாயினும் எந்த நிலையிலிருந்தாலும் புரிந்துகொள்ள முயலவேண்டும். புரிந்து செயற்படவேண்டும்.”

[நாவல்- புதிய பாதை (7-9) – http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4117:-7-9&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54]


அ.ந.க.வின் ‘மனக்கண்’ – வ.ந.கிரிதரன் –

‘ழகரம்’ (கனடா) சிறப்பிதழ் மற்றும் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரை. அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவல் பற்றி விரிவாக ஆராய்கிறது. தினகரனில் தொடராக வெளியானபோது மிகுந்த வரவேற்பினைப் பெற்ற நாவல். வானொலி நாடகமாகச் சில்லையூர் செல்வராசனால் வடிவமைக்கப்பட்டுத் தொடராக ஒலிபரப்பானதும் குறிப்பிடத்தக்கது.

அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் முப்பது இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. அதனை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன். இந்நாவல் தொடராகத் தினகரனில் வெளியாகியபோது மே 31, 1967 தினகரன் பத்திரிகையில் ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் 29 வெளியாகியுள்ளது. ஜூன் 13, 1967 தினகரன் பத்திரிகையில் அத்தியாயம் 31 வெளியாகியுள்ளது. ஆக, அத்தியாயம் 30 மே 31 , 1967 – ஜூன் 13, 1967 காலகட்டத்தில் வெளியான தினகரன் பத்திரிகையில் வெளியாகியிருக்க வேண்டும். இந்த அத்தியாயத்தை எற்கனவே இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் தேடிப்பார்த்திருக்கின்றோம். ஏனைய அத்தியாயங்களையெல்லாம் அங்கிருந்து பெற முடிந்தது. இதனை மட்டும் பெற முடியவில்லை. மனக்கண் நாவலை உங்களுக்குத் தெரியந்த யாராவது வைத்திருந்தால் அது பற்றிய விபரங்கள் உங்களிடமிருந்தால் அறியத்தாருங்கள். என் மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com.


கமலின் ‘மய்யம்’!

மையம் ம்+ஐ யம் = ம்+அய்+யம் = (ம்+அ) ய் யம் = மய்யம் . இதிலென்ன குழப்பம்? எல்லோரும் கமலகாசன் தொடங்கிய ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் மையத்தைப் பிடித்துத் தொங்குகின்றார்கள்.:-) இவர்களுக்குத் தமிழ் இலக்கணத்தின் அடிப்படையே தெரியாது. மய்யம் என்னும் சொல்லின் ஏனைய அர்த்தங்களைத் தூக்கிப்பிடித்து ஆனந்த இல்லை அரசியல் கூத்தாடுகின்றார்கள். முதலில் தமிழ் இலக்கணம் படியுங்கள். பிறகு சரி, பிழை கூறுங்கள். என்னைப்பொறுத்த வரையில் தமிழகத்தில் அரசியல் வெற்றியடைய வேண்டுமானால் திராவிட என்னும் சொல் கட்டாயம் இருக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்துக்குப் பதில் மக்கள் திராவிடக் கழகம் என்று பெயர் வைத்திருந்தால் நிச்சயம் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு வளரவாய்ப்பிருந்திருக்கும். ஆனால் ‘மக்கள் நீதி மய்யம்’ ஏதோ இலாப நோக்கற்று இயங்கும் இன்னுமொரு இயக்கம் கமலின் ‘நற்பணி மன்றம்’ என்பது போலவே மக்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழக அரசியலில் அவ்வளவு தூரம் ‘திராவிடம்’ என்னும் சொல்லுக்கு வசியமுண்டு. வலிமையுமுண்டு. இந்த விடயத்தில் எம்ஜிஆருக்கு, விஜயகாந்துக்கு இருந்த சொந்தப்புத்தி , பொதுப்புத்தி கமலிடமில்லை.

ngiri2704@rogers.com