மார்ச் 29, 2012: சின்மயியிடம் சில கேள்விகள்!

ராஜன் பாடகி சின்மயி[அண்மையில் திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில் புகழ்பெற்ற வலைப்பதிவர்களில் ஒருவரான ராஜன் லீக்ஸ் கைது செய்யப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. ஒழுங்காக விசாரணை முடியவில்லை. வழக்கு முடியவில்லை. அதற்குள் தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ‘பிரபல’ எழுத்தாளர்களெனப் பலரும் பாடகிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கி விட்டார்கள். இந்நிலையில் இணையத்தில் தேடியபோது ராஜன் லீக்ஸ் தனது வலைப்பதிவில் மார்ச் 29, 2012 அன்று எழுதிய பதிவொன்று கிடைத்தது. இதற்கெல்லாம் முதற் காரணம் பாடகி சின்மயி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டது சம்பந்தமாகத் தெரிவித்த கருத்துகளே எனத்தெரியவருகிறது. ராஜன் லீக்ஸின் அந்தப் பதிவினை ஒரு பதிவுக்காக ‘பதிவுகள்’ மீள்பிரசுரம் செய்கின்றது. சின்மயியின் புகார் சம்பந்தமாகச் சட்டம் தன் கடமையினைப் பாரபட்சமில்லாது செய்வது அவசியம். ஆனால் அது அவ்விதம் செய்யுமா என்பது தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது சந்தேகமாகவிருக்கிறது. வழக்கு முடிவதற்கு முன்னரே ராஜன் தண்டிக்கப்பட்டுவிட்டார். அவரது பதவி பறி போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடகிக்குப் பின்னால் அதிகாரமும், பணபலமும் இருப்பதாகத் தெரிகின்றது. இவ்விதமானதொரு சூழலில் ராஜனின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படுமா என்பதுவும் சந்தேகமே. மார்ச் 29, 2012இல் எழுதப்பட்ட ராஜனின் பதிவினை வாசிக்கும்போது ராஜனில் கேள்விகள் நியாயமானவையாகவே தெரிகின்றன. இக்கேள்விகளுக்குப் பாடகி பதிலளித்தாரா என்பதும் தெரியவில்லை. இவ்விதமானதொரு சூழலில் , ராஜனுக்கு எதிராகத் தமிழகக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களும் சரி, தனிப்பட்ட மனிதர்களும் சரி ராஜனைக் குற்றவாளியாக முடிவு செய்து தமது கருத்துகளை அள்ளி வீசுவது தவறு, ராஜன் நீதியான விசாரணைகளை எதிர்கொள்வதற்கு அவை இடையூறாக இருக்கும். கைது செய்யப்பட்ட ராஜன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, தனது பக்க நியாயங்களை எடுத்துரைப்பதற்கு நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படுவது மிகவும் அவசியம். – பதிவுகள்]

எழுதிய  பெண்கள் குறித்து வக்கிரமாக எழுதுவதையே பிழைப்பாக் கொண்ட ஒருவனால் ஒரு வருடமாக உளைச்சல் அடைந்து வருகிறேன்’ எனத்துவங்கி பகுதி ஒன்று இரண்டு மூன்று என ட்விட் லாங்கர்களில் நீண்டுகொண்டே சென்றது ஒரு குற்றப்பத்திரிக்கை. இதனை வாசித்தவர் பிரபல சினிமா பின்னணிப்பாடகி சின்மயி. இங்கு முதலிரண்டு வரிகள் தான் முக்கியமானவை! பெண்கள் குறித்து வக்கிரமாக எழுதுவது! – போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக அடித்து விடுவது என்பது இதுதான். பெண்களை Abuse செய்வதென்றால் அதற்குரிய ஆதாரங்களைக் காட்டவேண்டுமல்லவா? இவரிடம் நான் எதாகிலும் தகாத முறையில் பேசினேனா? அல்லது வேறு யாரும் இவரிடம் அவ்வாறாக புகார் வாசித்தார்களா? சரி இவர் அங்கனம் கருதுமாறு நான் சொன்ன விசயம் தான் என்ன? எதாவது வேண்டுமல்லவா? ஒன்றுமில்லை மொட்டையாக அடித்து விட்டு விட்டார்.

அடுத்து ஒரு வருட மன உளைச்சல்.  இவரை ஓராண்டாக மன உளைச்சலுக்கு உள்ளாக்குமாறு செய்த எனது நடவடிக்கைகள் தான் என்ன? இவரை நான் மென்சன் செய்து எதாவது தவறாகப் பேசியதுண்டா? இருப்பின் அதையாவது சொல்லலாம். அதுவுமில்லை.

2011ம் ஆண்டு ஜனவரி வாக்கில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது இவருடன் தமிழ் டுவிட்டர்கள் நடத்திய கருத்து மோதலில் நானும் சில பகடி டுவீட்டுகளைப் போட்டுத்தொலைத்ததுதான் இதற்கான ஆரம்பம். அவற்றிலும் இவர் கூறுமளவு தூக்கில் போடத்தக்க எதையும் நான் சொல்லி விடவில்லை.அதற்கான லின்க் இதோ http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

இந்தப் பிரச்சனை எல்லாம் காலப்போக்கில் மறக்கப்பட்டு, ஓராண்டுக்குப்பின்னர் கடந்த மாதம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் -இல் மஹேஷ் மூர்த்தி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் The badshahs of entertainment என்ற வகைமையில் 5 பேரை அறிமுகப் படுத்தினார். அதில் ஷ்ரேயா கோசல், சின்மயி, சேகர் கபூர் உள்ளிட்ட நல்லோரும் வல்லோரும் நிறை பட்டியலில் நாயிற்கடையான நச்சுப் பாம்பாம் ராஜனின் பெயரையும் சேர்த்துவிட்டார் கட்டுரையாளர். தமிழ் சினிமா விமர்சகர் என்பதாக எழுதப்பட்டிருந்த அந்த பத்தி எனக்கே இன்னமும் புரிபடாததுதான். ஆறு அல்லது ஏழு சினிமா விமர்சனம் எழுதியிருக்கும் என்னைப்போய் ஏன் இவர் குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை. ஆனால் இந்த விசயத்தை ஸ்வீட் எடு கொண்டாடு என்றிருக்கலாம் என்று பார்த்தால் இதில் இன்னொருவருக்கு ஆற்றொணாக் கோபம் பீறிட்டு விட்டது. வேறுயாருமல்ல நம் சின்மயிதான்!  அவருக்கு வந்த கோபத்தில் கட்டுரையாளரிடமே போய் சண்டை போட்டுப்பார்த்தார் துணைக்கு சிலரையும் அழைத்தார் ஆனால் மஹேஷ் மூர்த்தி இறுதியில் அவரது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவே இல்லை.

பின்பு முழுமையாக மென்சன் செய்யாமல் RLeaks என்று குறிப்பிட்டு எனக்குப் புரியாத ஆங்கிலத்தில் ட்ரோல் குரோல் என என்னென்னவோ வசை பாடிக் கொண்டிருந்தார். நான் உட்பட பல தமிழில் டுவீட்டும் பிளாக்கர்கள் அவரால் பிளாக் செய்யப்பட்டுள்ளபடியால் அப்போது அவரிடம் விவாதமோ சண்டையோ எதுவும் போடவில்லை. அதுவும் முடிந்து நீர்த்துப் போனபின்பு நேற்று எவனோ Chimnayi என போலி ஐடி துவங்கி அதில் சின்மயியின் படத்தையே வைத்துக்கொண்டு அவரிடம் சேட்டை செய்திருப்பான் போல. மீண்டும் அறச்சீற்றம்! அதில் தான் டுவிட்லாங்கரில் சின்மயி போட்டுத் தாளித்துவிட்டார் என்னை! அதன் முதலிரு வரிகள் தான் இப்பதிவின் தொடக்கத்தில் உள்ளவை. இது போகவும் சிலர் அவரிடம் தகாத வார்த்தைகளால் வம்பிழுத்ததாகத் தெரிகிறது. அவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் என்னைத்தான் சின்மயி முன்னிலைப்படுத்துகிறார். அவரை வம்பிழுத்ததற்கு சற்றும் குறைவில்லாத நியாயமற்ற செயல் இது. இவ்விடயத்தில் எனக்கு சின்மயியிடம் சில கேள்விகள் உள்ளன அவை பின்வருமாறு:

* உங்களை ஓராண்டுக்கும் மேலாக ராஜன் உளைச்சலுக்கு உள்ளாக்கியிருப்பின் அதற்கான ஆதாரங்கள் என்ன?

* நானாக உங்களிடம்(சார்ந்தோரிடம்) வந்து தரக்குறைவாகவோ வக்கிரமாகவோ எதுவும் பேசியதுண்டா?*இப்போது வந்திருக்கும் போலி ஐடி நான் உருவாக்கியதென எதை வைத்துச் சொன்னீர்கள்? நிரூபிக்கத்தயாரா?

*நாளை உங்களை வம்பிழுக்கும் எவனையும் என் பினாமியாகத்தான் பார்ப்பீர்களா? எனக்கு வேறு வேலை இல்லை என்று கருதுகிறீர்களா?

*உங்களைக்குறித்து நான் எதுவுமே சொல்லாத நிலையில் ஏன் என்னை மீண்டும் மீண்டும் சீண்டுகிறீர்கள்? இதனால் ஆகக் கூடியதென்ன? நான் எழுதுவது பிடிக்காவிடில் பிளாக் செய்யலாம், உமது ரசிகர்களையும் அவ்வாறே கோரலாம் அதை விடுத்து ஏன் புரளி கிளப்புகிறீர்கள்?

* நான் எழுதுவது என்ன தானாகவே உங்கள் கண் முன் வந்து தோன்றி விடுகிறதா?

* அரசியல் வாதிகள் குறித்த எனது பகடிகள் வெகுஜன ஊடகங்களான விகடன்,குமுதம் என பிரசுரமாகும் நிலையில் இது குறித்து நீங்கள் கண்ட வன்மமென்ன?

*வரையறைகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடக்கூடியது. எனது பதிவுகள் உமக்கு ஆபாசமாகப் படின் அனைவருக்கும் அவ்விதமே தோன்றுவது அல்ல.

* உங்கள் அம்மாவிடம் நான் எந்த விவாதமும் இதுவரை செய்ததில்லை இன்னிலையில் அதுகுறித்தும் நீங்கள் வைத்த விமர்சனம் நியாயமானதுதானா?

* உங்களிடம் டுவிட்டரில் வம்பிழுக்கும் ஒவ்வொருவனுமே ராஜனாகிவிடுகிறானா? எல்லாவற்றையும் என்னுடன் தொடர்பு படுத்துவதன் காரணமென்ன?

* உம்மை பெயர் குறிப்பிடாமல் கிண்டல் செய்வதாகச் சொல்கிறீர்கள்! நான் அவ்வாறு செய்ததில்லை. அது தவறு எனில் நீங்கள் ஆங்கில வசைகளாக என்னைக் குறித்து டுவிட்டியதெல்லாம் எந்தக் கணக்கில் சேரும்?

 * உங்களைக்குறித்து யாதும் நான் தவறாக எழுதியிருந்தால் அதைப்பற்றி என்னிடம் கேட்பதை விடுத்து தொட்ட தொண்ணூறுக்கும் என் பெயரை இழுத்து விட்டு பொதுவில் வைப்பது எதற்கு?முதலில் அந்த போலி ஐடி குறித்து சைபர் கிரைமில் புகார் செய்து தண்டனை பெற்றுத்தருவதில் கவனம் செலுத்துங்கள்; ஆதாரமின்றி என்னைக் குற்றம் சுமத்தாதீர்கள்.

பொதுவில் நான் எழுதும் நிலைத்தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலம் பலரிடம் சேர்கையில், நீங்கள் மட்டுமே இவ்விமர்சனங்களை என்மீது வைக்கிறீர்கள். பல பெண்களை நட்பு வட்டத்தில் வைத்திருக்கும் நிலையில் அவ்வாறு வக்கிரமாக எழுதிக்கொண்டு நான் வியாக்யானங்கள் பேச முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தவறென்று படுவதால் ஊருக்கே தவறு என்பது உண்மையல்ல. நீங்கள் இங்கு சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இட ஒதுக்கீடு குறித்தும், மீனவர் படுகொலை குறித்தும் ஒரு பிரபல நபராக தாங்கள் வைத்த கருத்துக்களில் தொனித்த ஆபாசத்தையெல்லாம் ஒப்பிடுகையில் நான் உபயோகிக்கும் வட்டாரச் சொற்களெல்லாம் ஆபாசம் அல்லவே! அது உங்கள் தனிப்பட்ட கருத்து என்று விவாதத்தோடு விட்டோமல்லவா? தமிழக தலித் அமைப்புகளை உங்கள் வீட்டின் முன்பா அணிவக்குக்கச் செய்தோம்?

பொதுவெளியில் சமூகக் கருத்துகளை முன்வைக்கையில் விவாதத்துக்கு தயாராக இருக்க வேண்டும். நான் சொல்வதைச் சொல்வேன் நீங்கள் எதிர்க்கக் கூடாது என்பது என்ன மாதிரியான அட்டிட்யூட்.பிரபலமான பணபலம் வாய்ந்த நீங்கள் கருத்து முரண்படும் என்னை ஆள் வைத்தும் அடிக்கலாம், காவல் துறையிலும் பொய்ப்புகார் செய்யலாம்! ஆனால் கோயம்புத்தூர் வந்த போது மிரட்டல்கள் வந்தது; அதற்குக் காரணமும் ராஜன் தான் என்று சொல்வதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.உங்களை தரக்குறைவாக பேசிய ஆட்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கக் கோருவது உங்கள் உரிமை. ஆனால், அவையனைத்துக்கும் நானே காரணம் என நீங்கள் புரிந்து கொண்டிருப்பின் அது உண்மையல்ல என நிறுவவதே என் நோக்கம். இதற்குமேலும் இதனை என்னை முன்னிட்டே இட்டுச் செல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்.

இப்படிக்கு,

எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாத ராஜன்.

http://www.rajanleaks.com/2012/03/blog-post.html