கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்கள். கலையுலக, அரசியலுலக வாழ்வினுள் காலடி வைத்தவர்கள். வரலாற்றில் இவர்கள்தம் வாழ்க்கையானது அரசியலில் மட்டுமல்ல கலையுலகிலும் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்று.
அரசியலைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றிய விமர்சனங்கள் பல இருப்பினும் ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியவர். ஒரு காலத்தில் பாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச்சினிமா உலகை இளங்கோவனின் வசனங்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் பின்னர் கலைஞரின் வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்ப காலகட்டங்களில் கோலோச்சின. பராசக்தி, மருத நாட்டு இளவரசி, மனோஹரா , பூம்புகார், ராஜா ராணியென்று கலைஞரின் வசனங்களின் சிறப்பினை, தாக்கத்தை வெளிப்படுத்த பட்டியலொன்று உண்டு. கலைஞரின் திரைப்படப்பாடல்கள் குறைவாக இருப்பினும் அவற்றுக்கும் முக்கியத்துவமுண்டு. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புண்டு,
தமிழ் இலக்கியத்துறையிலும் கலைஞர் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையென்று அவரது இலக்கியத்துறைக்கான பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் அடுக்கு மொழி நடைக்கும் ஒரு காலகட்டப்பங்களிப்புண்டு. சமூகச் சீர்கேடுகளை, மூட நம்பிக்கைகளைக்கடுமையாகச் சாடி மக்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை அவை ஐம்பதுகளில், அறுபதுகளில் ஏற்படுத்தின. அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது வரலாறு.
கலைஞரின் குறளோவியம், சங்கத்தமிழ் போன்ற தொகுதிகள் முக்கியமானவை.
என்னைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றி முதன் முதலில் அறிந்துகொண்டது 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்த் மகாநாட்டு மலர் மூலமேதான். அப்பா திமுகவினர் மேல் மதிப்பு மைத்திருப்பவர். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர் மீது மதிப்பு வைத்திருந்தவர். அதன் காரணமாகவே அம்மாநாட்டு மலரையும் வாங்கியிருந்தார். மிகவும் சிறப்பாக வடிவமைக்கட்டிருந்த மலர் அது. இதுவரை நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மலர்களில் மிகவும் சிறப்பான மலராக அம்மலரே கணிப்பிடப்படும் என்று கருதுகின்றேன். அம்மலரில் கலைஞரின் ‘பூம்புகார்’ நாடகமிருந்தது. அதன் மூலமே அவரைப்பற்றி முதலில் அறிந்து கொண்டதாக நினைவு. அதன் பின் அறிஞர் அண்ணாவின் மறைவினையடுத்து அவர் பாடிய இரங்கற்பா மூலம் என்னை அவர் மீண்டும் கவனிக்க வைத்தார். கேட்பவர் நெஞ்சங்களை உருக்கும் இரங்கற்பா அது. அவ்வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரங்கற்பாவாக அவ்விரங்கற்பா அமைந்து விட்டது.
அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது குமுதம் சஞ்சிகையில் ஆரம்பமான அவரது ‘ரோமாபுரிப்பாண்டியன்’ தொடர் நாவல். வரலாற்று நாவல். அத்தொடரை அக்காலகட்டத்தில் முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் வெளியான ஆரம்ப அத்தியாயங்கள் என்னை அவ்வயதில் கவர்ந்தன. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான தொடர் அது. அக்காலகட்டத்தில் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான அவரது நாவலான ‘வெள்ளிக்கிழமை’யும் என் கவனத்தைச் சற்றே அவர்பால் ஈர்த்த படைப்புகளிலொன்றே.
அவரது கலை, இலக்கியப்படைப்புகளுடன் அவர் என்னை இன்னுமொரு விடயத்துக்காகவும் ஈர்த்தார். அவரது அந்தக் குரலும், அழகான உருவமும்தாம் அவை. மீசையும், புன்னகையும் நிறைந்த அம்முகம் மக்களைக் காந்தம் போல் வசீகரிக்கும் வல்லமை பெற்றிருந்தது. அவரது அரசியல் வெற்றிக்கு அவ்வசீகர முகமும் ஒரு காரணம்.
கலைஞர்மேல் ஈழத்தமிழர்கள் பலருக்கு இறுதி யுத்தக்காலச் செயற்பாடுகளுக்காக மனத்தாங்கலுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் .. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. கலைஞர் தன் சக்திக்குகந்த அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
இறுதி வரை யுத்தத்தில் வெற்றியின் அருகில் நின்ற இலங்கை அரசாங்கம் ஒருபோதுமே யுத்தத்தை நிறுத்தியிருக்கப்போவதில்லை. இலங்கையைப்பொறுத்த வரையில் சீனாவின் ஆதிக்கம் நிறையவே இருந்தது. ,இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்தையே துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி இந்தியாவைத் தன் நலன்களுக்காகப் பணிய வைத்துக்கொண்டிருந்த காலகட்டம் அக்காலகட்டம். இந்தியாவில் யார் அரசாண்டாலும் இலங்கை அரசு இறுதி யுத்தத்தை நிறுத்தியிருக்கப் போவதில்லை.
அமெரிக்காவே எவ்வளவோ தடவை தன் கப்பலை அனுப்பிக் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுவதாகக் கூறியுமே இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்கா விடுதலைப்புலிகளைக் காப்பாற்றி விடுமென்று. வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்களையே (உலக நாடுகளின் அனுசரணையுடன்) எதையும் பொருட்படுத்தாது கொன்று குவித்தது இலங்கை அரசு. இந்நிலையில் இந்திய வெளியுறவுக்கொள்கையில் கலைஞரின் கட்சியினரின் ராஜினாமா எதனையுமே சாதித்திருக்கப் போவதில்லை.
மேலும் கலைஞரை நம்பி இலங்கைத்தமிழர்களின் போராட்டம் இருந்திருக்கவில்லை. ஆனால் போராட்டம் தோற்றதுக்கு முக்கிய காரணங்களாக நான் கருதுவது:
1. ஒன்றுபட்டுப் போராடியிருக்க வேண்டிய போராட்ட அமைப்புகளுக்கிடையிலான பகை முரண்பாடுகள்.
2. உதவிக்கு வந்த இந்திய அமைதிப்படையினருடான மோதல்.
3. பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை.
4. ஆயுதரீதியிலான போராட்டத்தில் கவனமெடுத்த அளவு , அரசியல்ரீதீயில் அதனை முன்னெடுக்காத நிலை.
5. யுத்த நிறுத்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு வரவேண்டிய ஆயுதக்கப்பல்களை அழித்தமை.
6. விடுதலைப்புலிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் தளப்பிரதேசமாக்கி, கொரில்லாப்போர் முறையினைத் தொடர்ந்து மரபு இராணுவமாகப் போராடிய போர்த்தந்திரம். யுத்தத்தில் விடுதலைப்புலிகளால் ஆயிரக்கணக்கில் இலங்கைப் படையினர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களும் அழிந்திருக்கின்றார்கள். இருந்தாலும் இலங்கை இராணுவத்தின் படையினரின் எண்ணிக்கை, வான்படை வசதி, இவை போன்றவையே இலங்கைப்படையினரின் வெற்றியைத் தீர்மானித்தவை. மேலும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தாலும் சரி, பா.ஜ.க ஆட்சியிலிருந்தாலும் சரி இந்திய வெளியுறவுக்கொள்கையில் பெரும்பாலும் மாற்றமிருப்பதில்லை. அதனைத்தீர்மானிப்பது உபகண்ட அரசியலும், சர்வதேச அரசியலுமே. ஒரு காலத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை இந்திய நலன்களுக்கு உரியதாகப்பயன்பட்டது. அந்நிலை இன்று மாறி விட்டது. ராஜிவ் படுகொலையுடன் இந்திய மத்திய அரசு இலங்கைத்தமிழர்களைக் கை கழுவி விட்டது. தற்போது அதன் நலன்களுக்கு இலங்கைத் தமிழர்களை விட சீனாவின் நகர்வுகளே முக்கிய விடயம். அதனடிப்படையிலேயே அது தன் காய்களை நகர்த்தும்.
இந்நிலையில் கலைஞரின் அரசியற் செயற்பாடுகளை மட்டுமே யுத்தத்தின் இறுதித்தோல்விக்குக் காரணமாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இந்திய வெளியுறவுக் கொள்கையைப்பொறுத்த அளவில் அதிகாரமற்ற மாநில அரசொன்றின் முதல்வரான அவரை இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளுக்காகக் குற்றஞ்சாட்டுவது கேலிக்குரியது. அவர் தன்னால் முடிந்ததைச்செய்தார். அவற்றைக் கேலி செய்வது சரியான செயற்பாடல்ல.
இப்போதும் கலைஞர் தமிழக மக்களின் ஆதரவுமிக்க முக்கியமான தலைவர். அவர் தன் இறுதிக்காலத்தில் படுக்கையில் கிடக்கும் இந்நிலையில் அவர் மேல் கீழ்த்தரமாக வசை பாடுவதன் மூலம் மீண்டும் இலங்கைத்தமிழர்களில் சிலர் தவறு செய்கின்றார்கள். அதனால் மீண்டும் தமிழக மக்களுக்கும் , இலங்கைத் தமிழர்களுக்குமிடையில் பலமாகத் தொடர வேண்டிய உறவினைச் சீர்குலைக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் அவரை எதிர்ப்பவர்கள் எதையாவது கூறிச் செல்லட்டும். அது அவர்களது உள் வீட்டுப் பிரச்சினை. அது அவர்களது அரசியல்.
கலைஞரைப்பொறுத்தவரையில் அவரது குறை, நிறைகளுடன் அவரது வரலாற்றுப் பங்களிப்புகளுக்காக எப்பொழுதும் நினைவு கூரப்படுவார். என்னைப்பொறுத்தவரையில் திமுகவின் ஆரம்பகால வரலாற்றுக்காலகட்டத்தில் அவரது பங்களிப்பு, தமிழ்ச்சினிமாவின் வசனங்கள் கோலோச்சிய காலகட்டப்பங்களிப்பு, கலை, இலக்கியங்கள் மூலம் சமூகத்தில் நிலவிய சமூகச்சீர்கேடுகள், மத ஆதிக்கம் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கெதிராகக் குரலெழுப்பிய மற்றும் சுவையான மொழியில் பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மக்கள் மத்தியிலும் எடுத்துச்சென்றஅவரது எழுத்துப் பங்களிப்பு இவற்றை யாராலும் மறைத்துவிட முடியாது. தமிழ் மக்கள் எப்பொழுதும் இவற்றுக்காக அவரை நினைவு கூர்வார்கள்.
ngiri2704@rogers.com