வாசிப்பும், யோசிப்பும் 299 : பாட்டைசாரியின் ”பாதை ஓரத்தில்”! ‘பாட்டைசாரி’ யார்?

பாட்டைசாரியின் பாதை ஒரத்தில்

ஈழகேசரி பத்திரிகையின் பழைய பிரதிகளின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது பத்தி எழுத்தாளர் ஓருவரின் பத்திகள் என் கவனத்தை ஈர்த்தன. அவர் வேறு யாருமல்லர் ‘பாட்டைசாரி’யே அவர் அவரது ‘பாதை ஓரத்தில்’ என்னும் பத்தி ஈழகேசரியில் நாற்பதுகளின் ஆரம்பத்திலிருந்து  அதன் இறுதிவரை , பத்து வருடங்களுக்கும் அதிகமாக ஈழகேசரியில் வெளியாகியிருந்தது. அப்பத்திகளினூடு அக்காலச் சமுக, அரசியல் (உள்நாட்டு & வெளிநாட்டு) நிலைமைகளை அறிய முடிந்தது. அவற்றை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அவை. அவை பற்றிய பாட்டைசாரியின் விமர்சனக் குறிப்புகள் அவை. உதாரணத்துக்கு அவரது பத்தியொன்றினைப்பார்ப்போம்:

ஈழகேசரி ஞாயிறு 29.8.48:
“இலங்கைப் பல்கலைக்கழகத்து உப அத்தியட்சகர் சமீபத்திற் சீமைக்குச் சென்றிருந்தார். அங்கு அவரை ஒரு பல்கலைக்கழகம் கெளரவப்பட்டமளித்துக் கண்ணியப்படுத்திற்று. அப்பட்டத்தைப் பிற்போக்கு அரசியல்வாதியான சேர்ச்சில் வழங்கிய்யிருந்தார். சேர்.ஜென்னிங்ஸ் இருக்கின்றாரே, அவர் ஏகாதிபத்தியத்துக்கு மிண்டு கொடுக்கும் ஒரு டாக்குத்தர். இப்பெரியாருக்கு ஏகாதிபத்தியப் பெருச்சாளியாய் சேர்ச்சில் பட்டம் வழங்கியது மிகவும் பொருத்தமானதாகும். இனி சேர் ஜென்னிங்ஸ் அவர்கள் இலங்கையிலும், மலாயாவிலும் பல்கலைக்கழகங்கள் மூலம் தாய்ப்பாஷைக்குக் குழி தோண்டலாம்.”

காடைத்தனம்
சேர் ஜென்னிங்ஸ் பிறந்தநாட்டை நோக்கிச் சென்ற காலத்தில் அவருக்குப் பதிலாகப்  பேராசிரியர் ஏ.டபிள்யு மயில்வாகனம் கடமையாற்றினார். அந்தக் காலத்திற் பல்கலைக்கழகக்த்து மாணவர்கள் சிலர் காடைத்தனமாக நடந்துகொண்டதுமன்றி அங்கு முதன் முறையாகச் சேர்ந்துகொண்ட மாணவிகளைத் துன்புறுத்தினரெனவும் பத்திரிகைகளிற் படித்தோம்.  முஸ்பாத்திக்காகச் சில வேடிக்கைகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? பண்பாடு, சீர்சிருத்தம் என்ற பெயராற் காடைத்தனங்கள் நடைபெறுவதை யார்தான் சகிக்க முடியும்? ஆகவே, சேர் ஜென்னிங்ஸ் இலங்கை திரும்பியதும் குறித்த மாணவர்களின் சேட்டைகள் அவருக்கு எடுத்தோதப்பட்டன. கூட்டங்கூடி ஆலோசித்த பின்னர் ஏழு மாணவர்கள் சரியாகக் கண்டிக்கப்பட்டனர். இது ஏனையோருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்குமல்லவா?

அரசியற் சாஸ்திரம்
அரசியல் என்றால் அது கிள்ளுக்கீரையாகி விட்டது. இது காரணமாகத் தெரிவிற் போவோர் வருவோர் பலர் அரசியலைப்பற்றிப் புகைப்பறக்கப்பேசுகின்றனர். அரசியல் சாமனியமான கலையல்லவென்பதைத் தமிழ்க் காங்கிரஸ் அடைந்த பெரிய வெற்றியிலிருந்தும், அது கெளரவமற்ற முறையிற் சரணடைந்த  தோல்வியிருந்தும் நன்கு அறிந்துகொள்ளலாம். ‘அரசியற் சாஸ்திரத்துக்கு இரண்டு முகங்களுண்டு. ஒன்று உண்மை. மற்றொன்று கற்பனை’ என ஓர் அறிஞர் கூறுகிறார். 🙂

அவர் மேலுங் கூறுவதாவது :- “அதாவது நிகழ்காலத்தில் நம் கண்முன்னே காணப்படுகின்ற அரசியல் அமைப்புகள், அவற்றின் அசைவுகள், அந்த அசைவுகளினால் உண்டாகின்ற விளைவுகள், இவைகளை உதாரணமாகக வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் அரசியல் அமைப்பு எப்படியிருக்க வேண்டும், எப்படியிருந்தால் அதிகமான நன்மைகள் உண்டாகும் என்பனவ்வற்றைக் கற்பனை செய்து காட்டவேண்டியது அரசியற் சாஸ்திரத்தின் கடமையாகக் கருதப்படுகின்றது.”

தமிழ்க் காங்கிரஸுக்கு அரசியல் தூரதிருஷ்டியுமிருக்கவில்லை. கற்பனையூற்றும் சுரக்கவில்லை. ஆகவேதான் அது நிலை நிற்க முடியவில்லை.

ஒரு நல்ல சூடு!
இதிலிருந்து பொது மக்கள் ஒரு  நல்ல பாடம் படித்திருக்கின்றனர். சிறப்பாக ஒரு சில அரசாங்க ஊழியர்களும், சில பிறக்கிறாசிமாரும் சரியான சூடு பெற்றிருக்கின்றனர். ‘இன்று விட்டேன் கொண்டலடி’ என்ற வாக்கியம் இவர்கள் விஷயத்திலும் நன்கு பொருந்தும். இவர்களுக்கு இன்னுமோர் உண்மையைக் கூறவேண்டும். அது வருமாறு: ” எந்த நாட்டில் மனிதர்களை விடத்தலைவர்கள் அதிகமாகவிருக்கின்றார்களோ, எந்த நாட்டிலே தலைவர்களைப் பின்பற்றுவோர்களைக் காட்டிலும் அவர்களைப்போற்றுவோர் பெரும்பான்மையோராய்ருக்கிறார்களோ அந்த நாட்டுக்கும் அடிமைத்தனத்துக்கும் அதிக தூரமில்லை”.

பாட்டைசாரியின் பாதை ஒரத்தில்

‘பாட்டைசாரியின் பத்திகளில் பரவிக்கிடக்கும் நகைச்சுவையும், அங்கதமும் வாசிப்போர் முகங்களில் புன்னகையை வரவழைப்பன. ‘பாட்டைசாரி’யின் பத்திகளை அனைத்தையும் தொகுத்து நூலாக்கினால் அவை குறிப்பிட்ட காலகண்ணாடியாக விளங்குவதை அறியமுடியும். ‘பாட்டைசாரி’யின் பத்திகளை வாசித்தது முதல் அவற்றை எழுதிய பாட்டைசாரி யார் என்று அறிய ஆவலாகவிருந்தேன். முதல் என் சிந்தனையில் வந்தவர் அ.செ.முருகானந்தன். அவர்தான் ஈழகேசரியின் ஆசிரியராக விளங்கியவர். ஈழகேசரியில் கட்டுரை, நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு நாவல்கள் எனப் பலவற்றைப் பல்வேறு புனைபெயர்களில் எழுதியவர். அவர் பாவித்த புனைபெயர்களைப்பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சொக்கன் பின்வருமாறு “அ.செ.மு அவர்கள் பாவித்த புனைபெயர்களாக பீஷ்மர், யாழ்ப்பாடி, யாழ்தேவி, முருகு, நீலாம்பரி, காங்கேயன், கதிரவன், மயிற்புறவம், சோபனா, இளவேனில், பூராடன், தனுசு, மேகலை, கத்தரிக்குறளி, போர்வீரன், வள்ளிதாசன்” என்று அவர் அ.செ.மு.,வின் ‘மனிதமாடு’ சிறுகதைத்தொகுதிக்கு எழுதிய அணிந்துரையில் கூறியிருப்பார்.  ஆனால் அவர் குறிப்பிடும் புனைபெயர்களில் பாட்டைசாரி என்னும் புனைபெயரைக் காணவில்லை. பின் யார்தான் இப்பாட்டைசாரி என்று சிந்தனையோடிக்கொண்டேயிருந்தது. அகப்படுபவற்றை வாசிக்கையில் அங்கு எங்காவது பாட்டைசாரி என்னும் பெயர் தென்படுகின்றதாவென்று பார்ப்பேன். முயற்சி இறுதியில் வெற்றியளித்தது. அதற்கான விடை அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் காணப்பட்டது. பஞ்சாட்சரசர்மாவின் எழுபதாண்டு நிறைவு வெளியீடான ‘பஞ்சாஷரம்’ தொகுப்பிலுள்ள கடிதங்களிலொன்று அக்கடிதம். அக்கடிதத்தில் அ.ந.க அவர்கள் பாட்டைசாரி பற்றிக் குறிப்பிடும் பகுதி இது:

“.. .. சென்ற சில ‘ஈழகேசரி’ இதழ்களில் ‘பாட்டைசாரி’யின் குறிப்புகளில் ஒரு மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப்பற்றி வற்புறுத்தியிருந்தார் திரு.முருகானந்தன் அவர்கள்.  அம்முயற்சியில் எனது நண்பர்களான தி.ச.வரதராசன், அ.செ.முருகானந்தன் முதலியிஓர் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுடன் ஒத்துழைத்துச் சங்கத்தை  ஒரு வெற்றியாக்க வேண்டுமென்பது என் அவா. மறுமலர்ச்சிச் சங்கம் மறுமலர்ச்சி இலக்கிய ஆர்வமுள்ள உத்தம ரஸிகர் திருக்கூட்டமாக இருக்க வேண்டும். தாங்கள் அத்தகையார் ஒருவர். எனவே தங்கள் ஒத்துழைப்பை நான் அதிகம் விரும்புகிறேன்.” (10.06.1943)

அ.ந.கவின் கடிதம்

கலை, இலக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் இது. ஏனெனில் இது மறுமலர்ச்சிச் சங்க ஆரம்பம் பற்றிய முக்கிய தகவலை, புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் பாட்டைசாரி யார் என்னும் தகவலை அறியத்தருகின்றதல்லவா. பாட்டைசாரி வேறு யாருமல்லர் , நான் ஆரம்பத்திலேயே யாராகவிருக்குமென்று ஊகித்த எழுத்தாளர் அ.செ.முருகானந்தனே அவர். சிறுகதை, குறுநாவல், நாடகம், கட்டுரை, நாடகம் , மொழிபெயர்ப்பு , பத்திரிகை ஆசிரியர், சஞ்சிகை ஆசிரியர் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு புனைபெயர்களில் அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அ.செ.முவுக்கு நிகர் அவரே!

ngiri2704@rogers.com