நியமனக் கடிதத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறிய சுந்தரம்பிள்ளை கணக்காளரிடம் ‘உங்களது கழிப்பறையை பாவிக்க முடியுமா’ எனக்கேட்டான். ‘இந்த கொரிடேரின் வலது பக்கத்தில் உள்ள முதலாவது கதவு என்று அவர் சொல்லியபோது, அங்கு சென்ற சுந்தரம்பிள்ளையை தொடர்ந்து கொலிங்வூட் வந்தது. ‘என்ன இங்கேயும் வருகிறாய்? எனக் கூறி கழிப்பறைக் கதவை மூட முனைந்ததையும் மீறி கொலிங் வூட் மிக உரிமையுடன் உள்ளே வந்துவிட்டது. அது குளிக்கும் அறையும் கழிப்பறையும் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்து.கொலிங்வூட் குளிக்கும் அறையில் தங்கிவிட்டது. சுந்ததரம்பிள்ளை கழிப்பறைக்கு சென்று பூனைதானே என கதவை சாத்தாமல் கழிப்பாசனத்தில் இருந்து கொண்டு கீழே கிடந்த சஞ்சிகைகளை பார்த்த போது, அவை ஆறு மாதம் கடந்த பிளே போய் மகசீன்கள் . பக்கங்களை புரட்டி பார்த்த போது அதில் உள்ள அழகிகளின் அவயவங்களின் காட்சி, உடலில் உள்ள இரத்தம் வேகமாக கீழ் நோக்கி ஓடி மனதை மேலே ஒரு கற்பனை உலகத்திற்கு தள்ளிச் செல்ல உந்தியது. சில பக்கங்களை புரட்டவைத்தது. இப்படியான அழகிகளை எங்குதான் தேடிப்பிடிக்கிறார்களோ? இப்படிப் போனால் சரி வராது என மனதின் ஓட்டத்திற்கு சிவப்பு விளக்கை காட்டிவிட்டு, அந்த மகசீன்களை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு எழுந்து கையை கழுவிய சுந்தரம்பிள்ளை, கொலிங்வூட்டை பார்த்தான். அந்த குளிப்பறையின் ஒரு மூலையில் பிளாஸ்ரிக் தட்டில் சிறிய கல்லுகள் போடப்பட்டிருந்த தட்டில் குந்தி இருந்து விட்டு தனது கழிவுகளை மூடியது.
மனிதர்களை விட மிக நாகரீகமாக நடந்துகொண்டது. எத்தனை மனிதர்கள் இன்னும் இந்தப் பிராணிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?
‘கொலிங், இங்கே யார் பிளேபோய் வாசகர்கள்? அதுவும் இந்த கழிப்பறையில்?’
‘எங்கள் கணக்காளர் ஜோன்தான். அவருக்கு மலச்சிக்கல் வரும்போது இந்த சஞ்சிகைதான் உதவி செய்யும்’
‘அது எப்படி பிளே போய் ……?
‘கொஞ்சமும் புரியாத ஆளாக இருக்கிறாய். இந்த மனிதன் கணக்காளர். இவர் கூட்டல் கழித்தல் பார்ப்பதில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது இவருக்கு மலச்சிக்கல் வந்துவிடும். அப்பொழுது இந்தக் கழிப்பறையில்தானே காலம் கடத்த வேண்டும். அப்போதுதான் இந்த சஞ்சிகைகள் அந்த ஆளுக்குத் தேவைப்படும்.’
இந்தப் பூனைக்கு நக்கலும் நளினமும் சேர்ந்து இரத்தத்தில் உள்ளது. நானும் கவனமாக இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டே மாடிப்படிகளில் இறங்கி காலோஸ் சேரத்தினது அறைக்குச் சென்றான் சுந்தரம்பிள்ளை. அந்த அறை மூன்று அறைகளின் மத்தியில் உள்ள இரண்டாவது அறை. முன்பக்கத்து வாசலால் செல்லப்பிராணிகளை வைத்தியரிடம் கொண்டு வருபவர்கள், அந்த அறையின் பின் கதவைத் திறந்தால் மருந்துகளின் பார்மசிக்கு செல்ல முடியும். பின்பகுதியால் உள்ளே சென்றதும் சுந்தரம்பிள்ளையை அடுத்து கொண்டு வரப்படும் செல்லப் பிராணியை பரிசோதிக்கும்படி காலோஸ் சேரம் பணித்தான்.
இது தனது நேர்முகப் பரிசோதனையின் ஒரு பகுதியாக சுந்தரம்பிள்ளை நினைத்துக் கொண்டான்.
பலர் வெளியே செல்லப்பிராணிகளோடு காத்திருக்கும்போது வரிசைக்கிரமத்தில் அவர்களை அழைப்பதற்கு சுவரில் பொருத்தியுள்ள ஒலிபெருக்கியூடாக செல்லப்பிராணியின் பெயரையும் அதனது சொந்தக்காரனதும் பெயரைச் சொல்ல வேண்டும் எனப் பணிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் ஆஸ்(Ash) என்ற உரிமையாளரையும் மைலோ (Milo) என்ற பூனையையும் இரண்டாம் இலக்கத்து அறையின் உள்ளே வரும்படி ஆங்கிலத்தில் ஒலிவாங்கியில் சிறிது தயக்கத்துடன் சுந்தரம்பிள்ளை கூறினார். இப்படி கூவியளைத்து வைத்தியம் செய்வது இதுதான் முதன்முறையாகும்.
சொல்லி விட்டு திரும்பி பார்த்தபோது அறைக்குள் இருந்த டொக்டர் காலோஸ் சேரம் முகத்திலும், அப்போதுதான் பார்மசி கதவின் வழியே உள்ளே வந்த பெண்கள் போல் இடுப்புவரை கூந்தலைக் கொண்ட முப்பது வயது மதிக்கக் கூடிடிய ஒருவர் முகத்திலும் சிரிப்பு பொங்கி வழிந்தது.அந்த சிரிப்பில் ஏளனம் நகைச்சுவை கலந்து தெரிந்தது.
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஒரு இளைஞன் மைலோவை பூனையைக் கொண்டு உள்ளே வந்தார்.வந்தவரினது முகத்தில் தெரிந்த இனம் புரியாத சங்கடம் கலந்த சிரிப்பு தெரிந்தது. இப்படி பலவாறான சிரிப்புகள் குழப்பத்தை உருவாக்கிய போதிலும் வேலை கிடைத்திருக்கு. அதை கருத்தாக செய்வது இப்பொழுது முக்கியம் என்று சிரிப்புகளை ஒதுக்கி விட்டு சாம்பல் நிறமான மைலோவை பரிசோதனை மேசையில் வைக்கும்படி கூறினான். ஒரு விதத்தில் மைலோ மட்டும் சுந்தரம்பிள்ளையை அந்த அறையில் சஙங்கடத்தில் ஆழ்த்தவில்லை. அதனது இதயம், சுவாசம், கண்கள், மூக்கு என ஒழுங்காக பரிசோதித்துவிட்டு வருடாந்த தடுப்பூசி செலுத்தியதால் வேலை இலகுவாக முடிந்தது.
‘மேலும் ஏதாவது தேவையா?’ அந்த இளைஞனிடம்
‘இல்லை. இல்லை………’ வார்த்தைகள் முடியவில்லை
‘தயங்க வேண்டாம்’
‘நீங்கள் எனது பெயர் கூறி அழைத்தபோது வரவேற்பு அறையில் இருந்தவர்கள் எல்லாம் சிரித்தனர்’
சுந்தரம்பிள்ளைக்கு புரியவில்லை
பக்கத்தில் நின்ற காலோஸ் சேரம் பெரிதாக சிரித்தபடி,
‘இன்றைக்குத்தான் புதிய வைத்தியர் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
சேர்ந்ததும் வாயில் தூசண வார்த்தை வந்துவிட்டது. இனி மேல் எங்கள் பாடு கஷ்டம்தான்’ என தோளை குலுக்கி இடுங்கிய கண்களை இன்னும் பிதுக்கியபடி சிறிதாக சிரித்ததும் சுந்தரம்பிள்ளைக்கு புரிந்தது. ‘Ash என்ற வார்த்தை Arse ஆகிவிட்டது.
‘என்னை மன்னிக்கவேண்டும். முதல் தடவையாக ஒலிபெருக்கியில் கூப்பிட்டேன்.
அதனால் உச்சரிப்பில் தவறிவிட்டது.’
சாதாரணமாக சொல்லி விட்டாலும் வெட்கமும் அவமானமும் சேர்ந்து பாறை போல் அழுத்தியது. பக்கத்தில் காலோஸ் சேரத்தின் சிரிப்பு சுந்தரம்பிள்ளை முதுகுக்குப் பின்னால் தொட்டு தொட்டு கேலி செய்தது.
வந்த இளைஞன் மைலோவுடன் வெளியே சென்ற பின்புதான் சுந்தரம்பிள்ளை சுமுகமான நிலைக்கு வந்தான். சங்கடமமான நிலை உடலை சுற்றி இறுக்கி வலை போன்று இறுக்கமாக இருந்தது. அதை அறுத்துக் கொண்டு உடனடியாக வர முடியவில்லை.
ஐந்து நிமிடங்கள் மட்டும் நீடித்த மருத்துவ ஆலோசனை அரைமணி நேரம் நீடித்த உணர்வுதான் இருந்தது.
‘ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இப்படித்தான் காலோஸ் வந்த ஆரம்பத்தில்.
போகப் போக சரி வரும். ”
தேனாக ஒழுகும் அந்த வார்த்தைகள் இங்கிலாந்து பேச்சுத் தொனி பின்னால் இருந்து கேட்டது. அந்தக் குரல் மனதுக்கு இதமாக இருந்தது. ஆறுதலான வார்த்தைகள் மருந்தை விட வலிமையானது. மயிலிறகைவிட மென்மையானது.கூரான கத்திபோல் உடலை இறுக்கிய சங்கட வலையை அறுத்தெறிந்தது.
திரும்பிப் பார்த்த போது நீண்ட கூந்தல் இடுப்புவரை தொங்க முப்பது வயது மதிக்கதக்கவன் தன் பெயர் அன்ரு என அறிமுகப்படுத்தினான். மேலும் தான் காலோஸின் உதவியாளர் என்றான்.
அப்பொழுது காலோஸ் ‘அன்ரு, இவருக்கு ஹொஸ்பிட்டலை சுற்றிக் காண்பிக்கவும்.
இவர் எங்களது புதிய மிருக வைத்தியர்’ என்றான்.
அன்ருவை பின் தொடர்ந்து மருந்துகள் வைக்கப்படும் பார்மசியூடாகச் சென்ற போது இன்னும் இரண்டு வைத்தியர்கள் நாய் பூனைகளை பக்கத்து அறையில் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். அந்த அறையை கடந்து பூனைகளுக்கான
பகுதிக்கு செல்லவேண்டும். பூனைகளுக்கான இடம் பல பகுதியாக கண்ணாடியால்
பிரித்து கதவுகள் போட்டு அடைக்கப்பட்டிருந்தது. வாசல் பாதுகாப்பாக இரும்பு வலை கொண்ட இரண்டு கதவுகள் ஒன்றன்பின ஒன்றாக இருந்தன. நாய்கள் தப்பி ஓடுவது குறைவு. அப்படி நடந்தாலும் அவற்றை பிடிப்பது சுலபம் ஆனால் பூனைகளைப் பொறுத்தவரை மிகவும் கடினமான காரியம்.
உள்ளே உள்ள பூனைகளில் நோய் பீடித்தவை, ஆரோக்கியமானவை ,மற்றும் தத்தெடுக்க தயாராக இருக்கும் பூனைக் குட்டிகள் என தரவாரியாக பிரிக்கப்பட்டு சிறிய கூடுகளில் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு இரண்டு பெண்கள் நீல நிற யுனிபோர்ம் அணிந்தபடி வேலை செய்தார்கள். முப்பது வயதில் ஒருத்தி உடலில் எது வித சதைப்பிடிப்பும் அற்று பஞ்சத்தில் உணவற்று பலகாலம் இருந்தவள் போன்ற ஒல்லியான தோற்றத்துடன் பரட்டை தலையுடன் கெதர் என அறிமுகமானாள். கெதருக்கு நேர் எதிர்மாறாக அமோக விளைச்சலுடன் அங்கங்களை பிரிந்து செல்ல நினைக்கும் உடலுடன் இருந்த மொரினின் மடியில் இப்பொழுது சிம்மாசனம் போட்டு கொலிங்வூட் இருந்தது.
இரு பெண்களையும் அறிமுகப்படுத்திய பின்பு ‘இதுதான் கொலிங்வூட்’ என அன்ரூ அறிமுகப்படுத்திய போது மெதுவாக தலையை திருப்பி இவரைத் தெரியும் என்ற பாவனையில் கண்ணை சுழற்றிவிட்டு தலையை உயர்த்திவிட்டு இப்பொழுது மொரினது விசாலமான மார்பகத்தின் இடைவெளியில் தலையை புதைத்து வசதியாக படுத்தது.
‘அதிஸ்டசாலிப் பூனை’ என கூறி மோரினுக்கு கண் சிமிட்டினான், அன்ரு
‘சட் அப், அன்ரு’ என சிரித்தாலும் அன்ருவின் அந்த வார்த்தைகள் அந்த ஐம்பது வயதான மோரினின் முகத்தை சிவக்க வைத்தன. அந்த நேரத்தில் எழுபது வயதைத் தாண்டிய மெலிந்த உடலுடய பெண்மணி, பூனைகள் வைத்திருக்கும் பகுதிக்குள்ளே உள்ளே வந்தாள். அவளது உடையலங்காரம் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தது. உடை வயதிற்கு பொருத்தமாக இருக்கவில்லை.
இருபத்திரண்டு வயது பெண்கள் உடல் தோற்றம் காட்டும் கவுணை அணிந்திருந்தாள். அந்த உடையை இளம் பெண் அணிந்திருந்தால் அவளது திரண்ட மார்பகங்கள் பாதியை மட்டும் மறைத்து மீதியை உயர்த்தி வெளிக்காட்டி ஆண்களின் தலையை சுற்ற வைத்திருக்கும். ஆனால் இந்தப் பெண்ணின் சட்டையின் மேல்பகுதி அவளது வாடி வதங்கிய மார்பகங்களின் முலைக்காம்புகளை மட்டுமே மறைத்தது. வெயில் உலரப்போட்ட கவுண்போல் அவளது தோளில் தொங்கியது. வாடி வதங்கிய முகத்தில் கூர்மையான மூக்கு ,கண்ணுக்கு மையும் உதட்டு சாயமும் சிறு குழந்தைகளின் சுவரில் வரையப்பட்ட சித்திர வேலைப்பாடு போல் அவசர கோலத்திலிருந்தன. மொத்தத்தில் பாடசாலை நாடகத்திற்கு வேடம் போட்ட ஒரு சூனியக்காரி போல் அவளது உருவம் இருந்தது.
இந்தப் பெண்மணியின் உடல் வளைவுகளை சுந்தரம்பிள்ளை இரசித்துக்கொண்டிருக்கும் போது கெதரையும் மொரினையும் காணவில்லை, அவர்கள் எங்கே என தேடியபோது ஒரு சிறிய அறையொன்றுக்குள் பூனைகளுக்கு உணவு எடுப்பதுபோல குனிந்தபடி பாவனை செய்து கொண்டு நின்றனர். அவர்கள் தங்களை மறைத்துக்கொள்ள முயல்வது அப்பட்டமாகத் தெரிந்தது. அதிலும் மோரின் தனது உடலை மறைக்க முயன்றது நாடகத்தில் வரும் நகைச்சுவைக்காட்சியாகத் தோன்றியது. இப்பொழுது அன்ரு கதவு அருகே சென்று சுந்தரம்பிள்ளையை அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி கண்களை அசைத்து, விரல்ளையும் காட்டி பரபரப்பாக தீப் பற்றிய கட்டிடம் ஒன்றின் உள்ளிருந்து வெளியேறுவதற்கான அபாய சமிக்ஞை போல் காட்டினான்.
அன்ருவின் சமிக்ஞையின்படி சுந்தரம்பிள்ளை வெளியேறும் போது அந்தப் பெண்ணை வாசலில் நேர் எதிராக சந்திக்க நேர்ந்தது. அவள் சுந்தரம்பிள்ளையின் கையைப் பிடித்தபடி ‘எனது கைலிக்கு எப்படி இருக்கிறது?’ என்றாள் அதிகாரம் கலந்த குரலில்.
திரு திரு என விழித்த சுந்தரம்பிள்ளையின் மறுகையை பிடித்து அன்ரூ அந்த இடத்தில் இருந்து இழுத்தபடி வெளியே அழைத்து வந்தான்.
‘ஏன் எல்லோரும் ஒளித்து ஓடுகிறார்கள்? அந்தப் பெண்மணிக்கு என்ன பிரச்சினை?’
‘அது ஒரு நட் கேஸ். ஒரு பெரிய கதை’
இப்படி பேசியபடியே அந்த வைத்தியசாலையின் உணவு அருந்தும் பகுதியை அடைந்தார்கள்.
இருவரும் ஆளுக்கொரு கப்பில் கோப்பியை எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் வரந்தா போன்ற பகுதியில் போடப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்ததும் ‘அந்தப் பெண்ணின் பெயர் ஜீன். மெல்பனில் ஓரு வசதியான குடும்பத்தில் சேர்ந்தவள்.
திருமணமாகி சிலகாலத்திலே கணவனை போரில் இழந்ததால் அவளது மனநிலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். வளர்க்கும் பூனைகளே அவளது உலகமாக வாழத் தொடங்கினாள். ஜீனின் பூனைகள் பல்கிப் பெருகின. இதனால் பக்கத்து வீட்டினர் நகரசபையினருக்கு புகார் கூறினார்கள். நகரசபையினர் இதில் பிராணிகளின் நலன் சம்பந்தப்பட்டிருப்பதாக எங்களுக்கு அறிவித்தார்கள். நாங்கள் சென்று பார்த்த போது வீட்டுக்குள் போக முடியவில்லை. மூச்சுத் திணறியது. அவ்வளவு நாற்றம். பூனைகளின் மலம், சலம் என வீட்டின் தரை எங்கும் காணக் கூடியதாக இருந்தது. பூனைகளை எங்களிடம் கையளிக்க மறுத்தது மட்டுமல்லாது காய்கறி நறுக்கும் கத்தியைக் காட்டி ஜீன் பயமுறுத்தினாள். நாங்கள் பின்வாங்கி வந்து விட்டோம்.
இரண்டாவது முறையாக பொலிஸாரை அழைத்துக் கொண்டு இருபது பூனைகளை அங்கிருந்து கொண்டு வந்தோம். இதன் பின் ஜீன் தனது லோயர் மூலமாக வைத்தியசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு ,தனது வீட்டை தான் இறந்த பின்பு வைத்தியசாலைக்கு உறுதி எழுதி வைப்பதாகவும் அதற்கு பிரதி உபகாரமாக வைத்தியசாலை தனது பூனைகளை இறக்கும் வரை பாதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இறதற்கு வைத்தியசாலை நிர்வாகம் சம்மதித்தது. இதன் பின் அடிக்கடி தனது பூனைகளை பார்க்க அடிக்கடி வருவார். வந்தால் தொல்லை தாங்க முடியாது. எல்லோரும் ஏதோ விதத்தில் ஜீன் வரும்போது மறைந்து விடுவார்கள். இந்த நாடககம் வருடக்கணக்காக தினமும் அரங்கேறுகிறது.
இந்தக்காட்சிதான் தற்போது நீங்கள் பார்த்தது.’
‘வைத்தியசாலைக்கு தனது வீட்டை எழுதிக் கொடுத்தது பெரிய விடயம் தானே?’
‘நான் இந்த வைத்தியசாலைக்கு பொறுப்பாக இருந்தால் அந்த வீட்டை திருப்பி எழுதிக் கொடுத்திருப்பன்.’ கடுமையாக
‘எனக்கு நீங்கள் எல்லோரும் அந்தப் பெண்ணிடம் கடுமையாக நடப்பது போல் படுகிறது.’
‘இன்றைக்குத்தானே புதிதாக வந்திருக்கிறீர்கள். போகப் போக ஜீனைப் பற்றி உங்களுக்குப்புரியும்
உரையாடலும் கோப்பியும் ஒன்றாக முடிந்தது.
டொக்டர் காலோஸ் சேரம் அறையில் நாய் பூனைகளுக்கு சுந்தரம்பிள்ளை தொடர்ச்சியாக மருத்துவம் பார்த்தான். மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்ததும் அன்ருவும் டொக்டர் காலோஸ் சேரமும் சுந்தரம்பிள்ளையுடன் அந்த வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள மதுபான சாலைக்குச் சென்றனர். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே மதுபானச்சாலைக்கு மேலாளரால் அழைத்து வரப்படுவேன் என சுந்தரம்பிள்ளை நினைக்கவில்லை.
மாலையானதால் அந்த இடம் மதுப்பிரியர்களால் நிரம்பி வழிந்தது. மெல்பன் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் இருப்பதால் இளம் வயதினரே பெரும்பாலும் அங்கு தாகம் தீர்க்க வந்தார்கள். அவுஸ்திரேலிய கலாசாரத்தின் இன்றியமையாத கூறாக இந்த தாகசாந்தி உள்ளது. இலங்கை இந்தியாவில் கோயில் அருகாமையில் திருவிழாக்காலத்தில் தண்ணீர் பந்தல்களில் மோர், ஊறுகாய் தண்ணி அருந்தி பக்தர்கள் தாகசாந்தி பெறுவது போன்றது இந்த விடயம். இங்கு பக்திக்கு பதிலாக வேலைத்தல விடயங்களின் அழுத்தங்களைக் குறைத்து வேலை செய்பவர்களிடத்தில் தகவல் பரிமாற்றத்தை மட்டுமல்ல ,நட்பையும் உறுதி செய்ய இந்த தாகசாந்தி விடயம் உதவுகிறது. காதல், நட்பு, காமம் என்ற உணர்வுகள் தடையின்றி பரிமாற இந்த மதுசாலைகள் ஊடகமாகிறது. வேலையின் பின் மதுச்சாலையில் சந்தித்து மது அருந்துவது மேற்கத்திய நாகரீகத்தின் சடங்காகும். இந்தச் சடங்கில் கலந்து கொள்ளாதவர்கள் அன்னியப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது சமகால கருத்தாகிவிட்டது.
ஜன்னலுக்கு அருகில் உள்ள மேசையில் அமர்ந்துகொண்டதும் மூவருக்கும் சேர்த்து டோக் போல்ரர் எனப்படும் தேனின் நிறம் கொண்ட ஸ்ரவுட்டை டாக்டர் காலோஸ் சேரம் அங்குள்ள பரிசாரக பெண்ணிடம் கொண்டுவரச் சொல்விவிட்டான்
அந்த ஜன்னலின் அருகில் வெளியே பார்த்தபோது இளம் வயது ஆண்- பெண் ஜோடிகள் கைகளை பிடித்தபடியும், முத்தமிட்டவாறும் சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக வகுப்பை முடித்து விட்டும், சிலர் வேலைத்தலங்களில் இருந்தும் நேரடியாக அங்கே வருகிறார்கள்.
கோடைகாலத்தில் ஆபிரிக்க மிருகங்கள் பற்றிய விவரணப்படத்தில் அவை தண்ணீருக்காக வரிசையாக இடம் பெயரும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்த ஜன்னலுக்கு அப்பால் எலிசபெத் பரேட் என்ற அந்த பெரிய வீதி செல்கிறது. இந்த வீதியின் இரு பக்கத்திலும் வாகனங்களும் நடுபகுதியில் மெல்பனுக்குகே பிரத்தியேகமான ட்ராம் ரோடு செல்கிறது. வேலை முடியும் நேரமானதால் மின்சாரத்தில் இயங்கும் ராம் ஒன்று நிறைமாத கற்பிணிப் பெண்போல் மெதுவான ஒலியோடு செல்வது தெரிந்தது. இந்த மதுபான விடுதிக்கு எதிராக எலிசெபத் வீதியின் அடுத்த பக்கத்தில் ரோயல் பெண்கள் வைத்தியசாலை அமைந்துள்ளது.
வீதியின் இருமருங்கும் நிற்கும் மரங்கள் மாலையின் மங்கிய வெளிச்சத்தில் மெல்பனுக்கே உரிய பூங்கா நகரம் என்ற பெயரை உறுதி செய்தது. மாலை சூரியனது ஒளிகதிர்கள் அடந்த பச்சை இலைகொண்ட மரங்களை திரைச்சீலையாக்கி அற்புதமான ஓவியத்தை வரைந்து கொண்டிருப்பது பொறுக்காத சில பறவைகள் அந்த வண்ணக்கலவையில் தாங்களும் குளித்தபடி அங்கும் இங்கும் பறந்து திரிவது அந்த மதுசாலையின் கண்ணாடி யன்னல்கள் வழியாக தெரிந்து.
காலோஸ் சேரம், அன்ருவிடம் ‘இன்றைக்கு மெலிண்டா முலையில் இருந்து என்னால் கண்களை எடுக்க முடியவில்லை. ஆனால் அவள் என்னை ஒரு முறைகூட கண் எடுத்தும் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இனறைய நாள் இந்த வருடத்தில் விடியாத நாள்.’ என்றான்
சுந்தரம்பிள்ளைக்கு ஒன்றும் புரியவில்லை. இது ஏதோ ஓரு காதல் விடயம். இதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம் என அவன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தபோது டோக் போல்டர் மது நுரைத்தபடி பெரிய கிளாசில் வந்தது.
அன்ரு சிவா பக்கம் திரும்பி ‘சிவா, இந்த வைத்தியசாலையில் பெரிய அரசியல் போராட்டம் நடைபெறுகிறது. இது இரஸ்சிய புரட்சியாக வெடிக்குமா இல்லை புஸவாணமாகுமா என்று தெரியாது. இதில் நீங்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது’.- என்றார் சேரம்.
‘நான் அப்படியே செய்கிறேன்’ என்று சொன்னாலும் யார் இந்த புரட்சியாளர்கள்?
யார் இந்த மெலிண்டா என்பதை அறிவதில் ஒரு ஆர்வம் சுந்தரம்பிள்ளை மனத்தில் சிறிய செடிபோல் துளிர்த்தது. தலையிடாது சொன்னவர்களே அந்த விதையை மனத்தில் ஊன்றி விட்டவர்கள்
நாற்பது வயதாவது இருக்கும் டொக்டர் காலோஸ் சேரம், நிட்சயமாக திருமணம் செய்து குடும்பஸ்தராக இருக்கவேண்டும். இந்த மனிதருக்கு என்ன நடந்துவிட்டது? காதல் வியாதி பிடித்து அலைக்கிறதா? இந்த வயதில் உண்மையில் காதல் ஏற்படுமா?. இல்லை நிறைவேறாத காமமா? இல்லையேல் மத்திம வயதில் ஆண்களுக்கு ஏற்படும் மன நெருக்கடியா? எதுவென்றாலும் சுவாரசியமாக இருக்கும் என டோக் போல்டரை நுனி நாக்கால ருசித்துகொண்டு இருவரின் உரையாடலையும் செவிமடுத்தான் சுந்தரம்பிள்ளை.
‘இவர்கள் ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கிறார்கள். இதற்கு ஸ்ரிவன்தான் தலைமை ஏற்றிருக்கிறான். பெரும்பாலும் அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்கும் போட் மீற்றிங்கில் உங்களுக்கெதிரான குற்றச்சாட்டு பத்திரம் வைக்கப்படலாம்.’ அன்ரு மிகவும் உறுதியாக சொன்னான்.
அன்ரு காலோஸ் சேரத்தின் மருத்துவ உதவியாளர் மட்டும் அல்ல. சேரத்தின் காதல் விடயங்களுக்கும் அன்ரூவின் உதவி கிடைக்கிறது. அத்துடன் வைத்திய சாலையில் நடப்பதைக் உடனுக்குடன் தெரிவிக்கும் ஒற்றனாகவும் செயற்படுகின்றான்.
‘நான் பலவந்தமாக எதனையும் செய்யவில்லை. அவளாகத்தான் வந்தாள். இந்த பப்புக்கு எத்தனை தரம் வந்துள்ளாள்! போன மாதம் கூட என்னுடன் குயின்ஸ்லாண்டுக்கு வந்திருந்தாள். கடந்த ஆறுமாதம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. யாரோ இவள் மனதை கெடுத்துவிட்டார்கள்’.
டொக்டர் சேரத்தின் வார்த்தைகளில் சுயபச்சாத்தாபம் மட்டுமல்ல ஆத்திரமும் அவமானமும் பொதிந்திருந்தது. முகம் சிவந்து விட்டது. பேசும்போது கண்களில் போது ஒருவிதமான கடுமை தெரிந்தது.
“ஸ்ரிவனுக்கு இந்த விடயத்தில் சில வைத்தியர்களினது அனுதாபம் இருக்கிறது.
அவர்கள் இந்த விடயத்தை துருப்புச் சீட்டாக வைத்து உம்மை தலைமைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு நினைக்கிறார்கள். நீர் இதில் கவனமாக இருக்கவேண்டும்.” என்றான் அன்ரு.
‘மெலிண்டாவுக்கு முன்பு இந்தத் தலைமை பதவி முக்கியமில்லை’ எனக் கூறியபடி, அடுத்த டோக் போல்டருக்கு பரிசாரப் பெண்ணிடம் கூறிவிட்டு சுந்தரம்பிள்ளையை பார்த்தான் டாக்டர் சேரம்.
இவர்கள் பெண்ணால் ஏற்பட்ட ஏமாற்றத்தாலும் அடைய முடியாத காமத்தை மறைக்கவும் குடிக்கிறார்கள். ஏமாற்றம், தோல்வி, வலி இப்படி எத்தனையோ காரணங்களை மறைக்க போதை போர்வையாக இருக்கிறது. அதிகாரத்தில் இருந்த போது பெண்ணின் நிராகரிப்பு பலமான உளத் தாக்கத்தை கொடுத்திருக்கிறது. அந்தக் காயத்தை சுரண்டி மேலும் காயப்படுத்துவதில் அன்ரு தெரிந்தோ தெரியாமலோ குறியாக இருப்பது புரிகிறது. காமம், பெண்களின் நிராகரிப்பு, அதிகாரம் இந்த மூன்றும் ஒன்று சேரும் போது ஏற்பட்ட போர்கள் உலக சரித்திரத்தின் பல பக்கங்களை நிரப்பியுள்ளன.
வெளியே இருள் கவிந்து விட்டது. ஆனாலும் மின்விளக்குகள், பல இடங்களில் இருளை விரட்டி தங்கள் இருப்பை வெளிப்படுத்தின. மதுபானவிடுதி குடிமக்களால் நிறைந்துவிட்டது. இருக்கைகள் அற்ற நிலையில் பலர் நின்றபடியே குடிக்கத் தொடங்கி விட்டார்கள். கெவி மெற்றல் இசை ஒரு மூலையில் இருந்து சூறாவளிபோல வந்து அமைதியாக இருந்த அழகான சூழலை வெளியே தள்ளிவிட்டது.
இவர்கள் எவ்வளவு நேரம் இருந்து குடிக்கப் போகிறார்கள்?
போதைக்காக குடிப்பவர்களைக்கொண்ட நாட்டில் இருந்து வந்த சுந்தரம்பிள்ளைக்கு இங்கே மாலை நேர சடங்காகவும் பொழுது போக்காகவும் குடிப்பவர்களை பார்த்த போது சற்று வித்தியாசமாக இருந்தது.
எதிர்பாராதவிதத்தில் வேலை கிடைத்ததால் ஏற்பட்ட சந்தோசத்தில் அன்று மனம் நிறைந்திருந்தது. இரண்டாவது டோக்போல்டருக்குப் பின்னால் வீடு செல்லும் நினைவு வந்தபோது மனதில் சிறிது உப்பைக் கரைத்தது போன்ற உணர்வு. மீண்டும் ட்ராம் , இரயில் என ஏறி வீடு செல்ல வேண்டியதால் நேர அட்டவணையை பொக்கட்டில் இருந்து எடுத்துப் பார்த்தான் சுந்தரம்பிள்ளை.
மெலிண்டாவின் அங்க லாவண்ணியங்களை வாய்மொழியாக டோக்போல்டரோடு சேர்த்து உறிஞ்சிக்கொண்டிருந்த டொக்டர் சேரம் ‘கவலைப்படவேண்டாம் மிஸ்டர். நான் உம்மை வீட்டில் கொண்டுபோய் பத்திரமாக இறக்கி விடுகிறேன்’ என்றார்
அந்தப் பிரச்சினை தீர்ந்து விட்டது என நிம்மதியாக இருந்த போது, இன்னும் ஒரு டோக் போல்டர் வந்தது. அதையும் குடித்து முடித்து எழுந்த போது போதை தலையில் ஏறியிருந்தது . இரவு எட்டரை மணிக்கு மேல் ஆகி விட்டது . இருள் கவிந்து, அந்த இரவு மெல்பனின் நகரப்பகுதியை மூடிவிட்டது. ஆங்காங்கு நகரத்து சாலை விளக்குகள் சீராக ஒளிர் பரப்பிகொண்டிருந்தன.அன்ரு விடைபெற்றுக்கொண்டு சென்றதும் சுந்தரம்பிள்ளை டொக்டர் சேரத்தின் சிவப்பு நிற ஃபல்கன் காரில் ஏறியமர்ந்தான். மெல்பன் நகரத்தின் பிரதான நகரத்தை ஊடறுத்துக்கொண்டு அந்தக்கார் சுந்தரம்பிள்ளை வசிக்கும் கிழக்குப் பகுதி புறநகரமான பொக்சிலுக்குச் சென்றது