நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும் (3)

(3)  பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!- வெங்கட் சாமிநாதன் -கர்நாடக சங்கீத உலகில், பக்தி உணர்வும் செல்வாக்கும் நிறைந்தோர் உலகில் வேறு யாரும் செய்யாத, செய்யத் தோன்றாத ஒரு மகத்தான சேவையை, தியாகராஜ தாசி என்று தன்னைச் சொல்லிக்கொண்ட, எந்தக் கோவிலுக்கும் பொட்டுக் கட்டாதே தேவதாசியாகிவிட்ட நாகரத்தினம்மாளுக்கு அவர் தியாக ராஜருக்கு கோவில் எழுப்பிய பிறகு பாராட்டுக்கள் குவிந்தன தான். அதற்கெல்லாம் சிகரமாக, எனக்குத் தோன்றுவது, கீர்த்தனாச்சார்யார் சி.ஆர். சீனுவாச அய்யங்கார் எழுதிய கடிதம். தங்களது சூழலையும், தாங்கள் கற்பிக்கப்பட்ட ஆசாரங்கள், நியமங்களையெல்லாம் மீறி, எழச் செய்து விடுகிறது, ஆத்மார்த்தமாக உள்ளோடும் அர்ப்பணிக்கப்பட்ட சங்கீதமும், தார்மீகமும்.. அவர் எழுதுகிறார்:

”தென்னிந்தியாவின் லட்சக்கணக்கான் சங்கீத ஆர்வலர்களிடையே நீங்கள் தான் உண்மையான தியாகராஜருடைய சிஷ்யை என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களுக்கு அமைந்த வாய்ப்பை உபயோகித்து நீங்கள் தியாகராஜருக்கு நினைவுச் சின்னத்தை எழுப்பி விட்டீர்கள். ஒரு அரசனும், ஜமீந்தாரும், பாடகரும் செய்யாத ஒன்றை நீங்கள் செய்துவிட்டீர்கள். அதற்காக நாங்கள் எல்லோரும் உங்களை வாழ்த்துகிறோம்.”

என்னதான் செய்தாலும், தியாகராஜ ஆராதனையை தம்முள் பங்கு போட்டுக்கொண்ட இரு கட்சிகளின் ஆழப்பதிந்த ஆசாரங்களையும் நியமங்களையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் தமக்குள் சண்டை போட்டுக்கொண்டுதான் இருந்தார்கள்.அவர்களை ஒன்று சேர்க்க நாகரத்தினம்மா முயன்றார்தான். ஆனால் அவர்கள் விட்டுக் கொடுப்பதா யில்லை. அவர்கள் ஒன்று சேர்ந்தது, நாகரத்தினம்மாவுக்கு தியாகராஜ ஆராதனையில் இடமில்லை என்ற முடிவுக்குத் தான். பெண்களுக்கு இடமில்லை என்று அவர்கள் சொன்னதன் தாத்பர்யம் தேவதாசிகளுக்கு என்பதாகும். நாகரத்தினம்மா என்ன, பெரிய கட்சியின் தலைவரான மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை தாம் ஆத்மார்த்தமாக மிகவும் கௌரவிக்கும் மரியாதை செலுத்தும் வீணை தனம்மாளூக்கே அவர் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பதாயில்லை. ஆராதனை எல்லாம் முடிந்த பின் கடைசி நாளன்று தியாகராஜர் படத்தை வைத்து ஒரு ஊர்வலம் வரும் அது கல்யாண மஹலுக்கு வந்து சேரும். அதன் பிறகு அங்கு தனம்மாள் அவர் வீணை வாசித்துக் கொள்ளட்டும் என்று ஒரு சலுகை தந்திருந்தார். அவரது அத்தையோ என்னவோ ஒரு மூத்த உறவான, தனக்கோட்டிக்கும் அதே சட்டம் தான்.
தன் சொத்தையெல்லாம் விற்றுக் கட்டிய தியாகராஜசமாதிக்கு மேல் எழுப்பிய கோவிலில் நுழைய நாகரத்தினம்மாளுக்கு அனுமதி இல்லை.

ஒரு கட்சி காலை ஒன்பது மணிக்கு வந்து ஆராதனையும் பூஜையும் செய்து கொள்ளும். இன்னொரு கட்சி அவர்கள் சென்ற பிறகு வந்து, தம் பங்குக்கு ஆராதனையோ பஜனையோ என்னவோ செய்து கொள்ளட்டும் என ஏற்பாடு.

சின்ன கட்சி தலைவரான, சூலமங்களம் வைத்திய நாத பாகவதர் வேதங்கள் புராணங்கள் எல்லாம் கரைத்துக் குடித்த சிறந்த பேச்சாளர். பெரிய கட்சிக்கு எதிராகப் பேசும் தீர்மானம் கொண்டு சமாதிகளும் கோவில்களும் எல்லோருக்கும் உரிய இடம் யாருக்கும் அனுமதி மறுக்கக் கூடாது என மேற்கோள்கள் காட்டி விளாசித் தள்ளி விட்டார். அதன் பிறகு தான் பெரிய கட்சி ஆராதனை 9 மணி வரை என்றும், சின்ன கட்சிக்கு 9 லிருந்து 12 மணி வரை என்றும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அதெல்லாம் நாகரத்தினம்மாளுக்கு பொருந்தாது.

நாகரத்தினம்மா விடுவதாயில்லை. கட்சிகளோடு மோதுவதாகவும் இல்லை. எல்லோரும் சமாதானமாக ஒன்று சேர்ந்து ஆராதனை விழா நடத்தவே விரும்பினார். சுற்று வட்டாரத்திலிருந்த தேவதாசிகள் எல்லோரையும் அழைத்தார். ஊரிலிருந்த அனைத்து  மாட்டு வண்டிகளையும் அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தார். இரவுக்கு இரவே தியாகராஜ சமாதிக்குப் பின் இருந்த இடத்தை சுத்தப்படுத்தி பெரிய பந்தல் எழுப்பி ஆராதனைக்கும் சங்கீதத்திற்குமான ஏற்பாடு செய்தார். முழுவதும் பெண்களே நடத்தும் ஆராதனை விழா நடக்குமென்றும் அதற்கு பெண்கள் மாத்திரமில்லை, பெண்களும் தேவதாசிகளும் பங்கேற்பதற்கு ஆக்ஷேபணை இல்லாத ஆண்களும் தடையின்றி பங்கு கொள்ளலாம் என்று அறிக்கை ஒன்று தயாரித்து எல்லோருக்கும் வழங்கினார். ஆராதனைக்கு 40 மாட்டு வண்டிகளில் தேவதாசிகள் கூட்டம் வந்திருப்பது ஊராருக்குத் தெரிந்து அனைவரும் செவ்வாய்ப் படித்துறைக்கு வந்து குவிந்துவிட்டார்கள், இக்கண்கொள்ளாக் காட்சியைக் காண  வசதியான இடம் தேடிப் பிடிப்பதற்கு.

தமக்கு இடம் கொடாமல் இரண்டு கட்சிகளும் பிடிவாதம் பிடிக்கும்  போது மூன்றாவது அணி ஒன்றினை உருவாக்கி அதை சிறப்பாக, எல்லா ஆச்சார நியமங்கள் எதையும் கைவிடாது இன்னும் சிறப்பாக நடத்திவிட முடியும் என்பதை நாகரத்தினம்மாள் நிரூபித்தார். முதல் கட்சி காலை ஒன்பது மணிக்கு வரும் என்றால் அதற்கும் முன்னதாக, காலை நான்கு மணிக்கே தன் ஆராதனை விழாவை ஆரம்பித்தார். ஒரு சிறிய சொற்பொழிவு, பின் கலைஞர் ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகமும் பாராட்டும். அவரது வளர்ப்புப் பெண் பன்னி பாய் ராமதாஸ் சரித்திரம் கதா காலட்சேபம் நாகரத்தினம்மாள். கச்சேரிகளிலும் ஒன்றும் குறைவில்லை. நாகரத்தினம்மாள் தானே இயற்றிய நாமாவளியும் ஆராதனையில் சேர்ந்தது.  நாகரத்தினம்மாள் சாப்பாட்டுக்குத் தான் செலவு செய்யவில்லை. இரண்டு கட்சிக்காரர்களும் வைக்கும் விருந்தில் ஊரே கலந்துகொள்ளும் போது நாகரத்தினம்மாள் நடத்தும் விழாவிற்கு வருபவருக்கா அது கிடைக்காமல் போய்விடும்? இவர்களூக்கு அனுமதி மறுத்த பெரிய சிறிய கட்சிக்காரர்களுக்கோ  அவர்கள் கண் எதிரே நடப்பதைப் பார்த்து திகைத்து நிற்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

இது நடந்தது 1927-ல். இன்று தெரியாத வழி ஒன்றை காலம், தன் போக்கில் பின்னர்  அமைத்துக் கொடுக்கும். பெரிய கட்சி சிறிய கட்சிக்கு பொறுப்பேற்ற பெரிய தலைகள் அடுத்து வந்த வருடங்களில் ஒவ்வொருவராக மறையத் தொடங்கினர். அவர்கள் காலத்திலேயே ஆராதனைக்கு வந்த சங்கீத கலைஞர்கள் எந்தக் கட்சியையும் பகைத்துக்கொள்ளாது இரண்டிலும் மாறி மாறி இடம் பெற்றனர். ஆராதனைக்கு வெளியே அவர்களிடையே சினேகபாவம் இருந்தது. மலைக்கோட்டை கோவிந்த சாமிப் பிள்ளை தன் காலம் முடியத் தொடங்கிவிட்டதை உணர்ந்து தனக்குக் கிடைத்த, நரசிம்ம பாகவதர் 1911-ல் தந்து, ஆராதனைக்கு பயன்படுத்திய  தியாகராஜ ஸ்வாமிகள் படத்தை திருவீழிமிழலை சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு  அளித்தார். இது ஆராதனைக்கு படம் தந்த காரியம் மட்டுமல்ல, தான் இதுகாறும் மறுத்து வந்த நாதஸ்வர கலைஞர்களுக்கு ஆராதனையில் பங்கு பெற அனுமதி தந்த காரியமுமாயிற்று. ஆக, இப்படி ஒவ்வொரு தடையாக, காலம் செல்லச் செல்ல அகன்று வந்தது. ஒரு கட்சியினர் அனுமதி மறுக்கும்  கலைஞருக்கு நாகரத்தினம்மாள் தன் மேடையில் முழுக் கச்சேரிக்கே அனுமதி கொடுத்தார். தன்னை மதிக்காதவரையும் மேடைக்கு அழைத்து கச்சேரி செய்யச் சொல்லி பாராட்டி மனம் மாறச் செய்தார் பாராட்டு என்றால் என்ன பாராட்டு! “உயிருடன் வாழும் தியாகராஜரின் பிம்பம். தள்ளாத வயதிலும் கூட”. என்று மனதார புகழ்ந்தார்.

கடைசியில் நாகரத்தினம்மா பெற்ற வெற்றி, சின்ன கட்சியின் தலைவரான சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரே ஆராதனை விழாவின் முக்கிய அங்கமாக பெண்கள் ஆகிவிட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால் மிகவும் தயங்கித் தயங்கி என்றாலும், பாதை மாறல் தானே. ஒரே ஒரு விஷயத்தில் மாத்திரம் அவர் விட்டுக் கொடுப்பதாயில்லை. தியாகராஜ ஆராதனையில் முக்கிய அங்கமான 16 பிராமணர்களைக்கொண்டு நடத்தப்படும் முன்னோர் களுக்கான சிராத்த சடங்கு, அதற்கான விசேஷ உணவு, பின் உஞ்ச விருத்தி, இவற்றில் பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது. நாகரத்தினம்மாளுக்கு இதில் ஏதும் மனவருத்தம் இல்லை. அவருக்கே பழம் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதில் பெரும் நம்பிக்கை.. சிராத்தம் முதலியன நடக்கும் இடத்தில் அவர் வருவதே இல்லை. அதற்கான ;பொருட்செலவை அவர் ஏற்றுக் கொண்டாலும். கடைசியில் எல்லாம் முடிந்த பிறகு அவர் வேண்டுவது அவர்களது ஆசீர்வாதமே.

தேவதாசிகள் விலைமாதர் என்று கேவலப்படுத்தப்படுவதையும் அவர்கள் உரிமைகள் மறுக்கப்படுவதையும் அவர் எதிர்த்தாலும், குடும்பப் பெண்கள் தங்களைக் காப்பாற்றும், தங்களுக்கு கௌரவம் தரும், ஆதரவாக இருக்கும் கணவன் மாரிடம் எவ்வளவு அன்புடனும் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அவர் கருத்துக்களை விரிவாக எழுதவே செய்திருக்கிறார். குடும்ப சூழலில் பெண்கள் குரல் மேலெழுவதை அவர் விரும்பியவரில்லை. 

கொஞ்சம் கொஞ்சமாக, சமாதியைச் சுற்றியிருந்த நிலங்களையும் நாகரத்தினம்மாள் வாங்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனக்கு நிலமும் ஆதரவும் அளித்தவர் மறைந்த போதிலும் மரணத்தின் முன், அவர் தன் வாரிசுக்கு தந்த அறிவுரை ”நாகரத்தினம்மாள் வேண்டும் உதவியைச் செய்,” என்பதே. நாகரத்தினம்மாவுக்கு உதவ பத்திரம் எழுத, நன்கொடை எழுத,, வேறு இடத்தில் இருந்த தன் நிலங்களை விற்க, இங்கு நிலம் வாங்க வேண்டிய பணத்திற்கு அவர் நகைகளை விற்க, என இப்படி எத்தனையோ விதங்களில் இப்படி அவர் வேண்டும் உதவி ஒவ்வொன்றுக்கும் உதவ ஆட்கள் இருந்தார்கள். நகைகள் விஷயத்தில் ஒரு சூரஜ்மல் லல்லுபாய், பத்திரம் எழுத, வழிகாட்ட ஒரு சி.வி ராஜகோபாலாச்சாரியார், என அவரது சங்கீத அர்ப்பண உணர்வு, தியாகராஜ பக்தி, தன்னலம் வேண்டாத தாராள மனம் எல்லாம் அவருக்கு நிறைய நட்புக்களை சம்பாதித்துத் தந்திருந்தன.

இவற்றுக்கிடையே தியாராஜருக்கான கோவில் கர்ப்பக்கிருஹத்தைக் கட்டவும், சமாதியைச் சுற்றியிருந்த நிலங்களை வாங்கி சீர்படுத்தி பிரகாரங்கள் அமைக்கவும் அதற்கான பணத்திற்கு தன் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்பதிலும் கிடைத்த கச்சேரிகள் அனைத்துக்கும் போவதற்குமாக முப்பதுக்களின் பின் பாதி கழிந்தது. திருவையாறுக்கே போய்த் தங்கும் அவரது ஆசையைத் தடுத்தது சென்னையில் வீணை தனம்மாளுடன் தான் கழிக்கும் நேரங்களை இழப்பதா? என்ற கவலைதான். அந்தக் கவலை வெகுகாலம் நீடிக்கவில்லை. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த வீணை தனம்மாள், 1938 –அக்டோபர் மாதக் கடைசியில் மரணம் அடைந்தார். அது சென்னை சங்கீத உலகில் ஒரு பெரும் இழப்பை உணர்த்தியது. அவருக்கான இரங்கற் கூட்டம் சென்னையிலும் மற்ற இடங்களிலும் சங்கீத உலகின் பெரிய தலைகளைப் பார்த்தது. நாகரத்தினம்மாளும் தன் சென்னை வீட்டை விற்று தியாகராஜருக்கான கோவிலுக்கும் தியாக ராஜ ஆசிரமம் என்று பெயர் சூட்டப்பட்ட சமாதிக்குமான கட்டிட வேலைகள் முடியவே கீழ்க்கண்டவாறு ஒரு நினைவுக்கல் பதிக்கப்பட்டது.

ஸ்ரீ ராம ஜெயம்
இந்தக் கோவிலும் ஆசிரமமும்
சிறந்த சங்கீத வித்வானும் மஹானுமான
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு
அவருடைய எளிய பக்தையும்
மைசூர் புட்டலக்ஷ்மி அம்மாளின் மகளுமான
வித்யா சுந்தரி பெங்களூரு நாகரத்தினம்மாவின்
காணிக்கை
கும்பாபிஷேகம்
7.1.1925
கட்டிடம் கட்டி முடிக்கப் பெற்றது
நவம்பர் 1938
திருவையாறு குடிபெயர்ந்த நாகரத்தினம்மாவுக்கு கிடைத்தது ஒரு வாடகை வீடு தான். அவர் பொழுது தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடுவதிலும் தம்மை மறந்து பாடல்களுக்கு அபிநயிப்பதிலும் கழிந்தது. சுற்றியிருந்தோர் நட்பும், மாலை நேரங்களில் தியாகராஜ சமாதிக்குச்சென்று அமைதியான தியானத்தில் ஈடுபடுவாராம். சில சமயங்களில் அவர் தன்னை மறந்து தெலுங்கில் யாரோடோ உரையாடத் தொடங்குவாராம். யாரும் கேட்டால் தியாகராஜரே தன்னுடன் உரையாடிக்கொண்டிருந்ததாகச் சொல்வாராம். உண்மையிலேயே அவர் தனக்குப்பெயர் சூட்டிக்கொள்ள ஆசைப்பட்டபடியே தியாகராஜ தாசிதான்.

இவற்றிற்கிடையே நாகரத்தினம்மாவுக்கு இன்னொரு சவாலும் எழுந்தது. அது அவரைப்போலவே தன் முயற்சியில் தனக்கு இழைக்கப்பட்ட இழுக்கைத் துடைத்தெறிந்து எழுந்த தெலுங்கு தேசத்திலிருந்து வந்து புதுக்கோட்டையில் வாழ்ந்து மருத்துவக் கல்வி பெற்று சென்னை மேல்சபையின் அங்கத்தினராக ஆன டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி. அவரும்  தேவதாசி குலத்தில் பிறந்தவர் தான். அவர் தேவதாசி முறைக்கு எதிராக எழுப்பிய பிரசாரமும், அதை ஒழிக்க கொணர முயன்ற தேவதாசி ஒழிப்புச் சட்டமும். மறுபடியும் தனக்கு ஆதரவான தேவதாசிகள், மைலாப்பூர் கௌரி, வீணை தனம்மாள் எல்லோரையும் நாகரத்தினம்மா ஒன்று கூட்டி சங்கம் அமைக்க, மனுக்களும் பிரசாரங்களும் கிளம்பின. ”தேவதாசிகள் விலை மாதர்கள் அல்லர். அவர்களால் தான் சங்கீதமும் நாட்டியமும் வளர்ந்தன” என்று பதில், இரண்டு தரப்பும் பிரசாரம் வலுத்து வந்தது. ஆனால் அரசோ, சட்டம் இயற்றுவதில் தாமதமும் தயக்கமும் கொண்டது. காரணம் எந்த மரபு சார்ந்த விஷயங்களிலும் அரசு தலை யிடுவதில் காட்டும் தயக்கம் தான். கலைகள் காப்பாற்றப்படவேண்டும். தேவதாசிகளுக்கு கோவில்களிலிருந்து வரும் வருமானம் காப்பாற்றப் பட வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்படும் நில மான்யங்கள் தொடர வேண்டும் என இப்படி. பல கோரிக்கைகள்.i இடையில் உப்பு சத்யாக்கிரஹம் தொடங்கிய காந்தி கைதுசெய்யப்படவே, அதை எதிர்த்து டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி தன் மேல்சபை அங்கத்தினர் பதவியைத் துறக்க, அவரது தேவதாசி தடுப்புச் சட்ட மசோதா கைவிடப்படுகிறது. தேவரடியாள் தன் அர்த்தத்தை இழந்து பொது வழக்கில் தேவடியாள் ஆகத் தொடங்கியதை யார் தடுக்கமுடியும்?

ஆனால் ஈ க்ருஷ்ணய்யர் போன்றோர் சென்னை ம்யூசிக் அகாடமியில் நாட்டியத்தையும் நிகழ்ச்சி நிரலில் சேர்த்தார். அவரே பரதம் பயின்றவர். முத்து லக்ஷ்மி ரெட்டியுடன் தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர். ருக்மிணி அருண்டேல் பரதம் பயின்று அதைப் பயில்விக்க கலாக்ஷேத்திரம் தொடங்குகிறார். பாலசரஸ்வதி பரத நாட்டிய கலைஞராக, உலகம் சுற்றி வருகிறார். தாகூரால் அழைக்கப்பட்டு சாந்தினிகேதனில் பரதம் ஆடுகிறார். நிறைய குடும்பப் பெண்கள் பரதம் கற்கத் தொடங்குகின்றனர். இது ஒரு கோடி. மறு கோடியில் தேவதாசிகளுக்கு அளிக்கப்பட்ட மான்யங்கள் பறிக்கப்படுகின்றன. ஆனந்த குமாரசுவாமியே அபிநயதர்ப்பணத்தைப் புரிந்து கொள்ள Mirror of Gestures எழுத அண்டிய மைலாப்பூர் கௌரி அம்மாளின் வீடு பறிக்கப்படுகிறது. அந்நாட்களில் வீணை தனமோ அல்லது கௌரி அம்மாளோ தம் கலையின் உச்சத்தில் இருந்த போதிலும் செல்வத்தில் மிதப்பவர்கள் இல்லை. கௌரி அம்மாள் தன் பத்து குழந்தைகளுடன் வீட்டை விட்டு துறத்தப்பட்டதும் நாட்டியம் சங்கீதம் சொல்லிக்கொடுத்து காப்பாற்ற வேண்டி வருகிறது.  இடையில் எவ்வளவோ நேர்கின்றன. உலக மகா யுத்தம் திரும்பவும் தேவதாசி ஒழிப்பு மசோதாவைப் பற்றி யாருக்கு கவலை. இருப்பினும் சமூகம் மாறிவந்து விட்டது. தேவதாசிகளின் நிலைக்கு சட்ட பூர்வமான எதிர்ப்பு இல்லையென்ற போதிலும் எதிர்ப்பு ஆதரவு இரண்டுமே மந்தித்துப் போகின்றன. கோவிலில் இல்லை யென்றாலும், செல்வந்தர்கள் ஆதரவு கிடைக்கிறது. நாட்டியமும் சங்கீதமும் பொது நிகழ்வுகளாகின்றன.

கலைக்கும் கோவிலுக்கும் அர்ப்பணிக்கப்படும் தேவதாசி முறை மறையலாயிற்று.  கலைகள் பொதுவிடத்திற்கு வந்து கலைஞர்களோடும் ரசிகர்களோடும் ஐக்கியம் கொண்டன. இதன் ஒரு பக்கம். மறு பக்கத்தில் சமூகத்தின் முன் வந்ததும் ஆரவாரமும் மலினப் படுத்தலும் நேரும். அதுவும் நேரத் தொடங்கியது.

1939-ல் சங்கீத ரசிகர், உபாசகர் எஸ் ஒய் கிருஷ்ணஸவாமி தஞ்சைக்கு வருகிறார். ஒர் அதிகாரி வந்தடைந்தால் அவர் ரசனைக்கேற்ப தியாக ராஜ ஆராதனை மாறும் தானே. அவருக்கு சங்கீத உலகில் நெருக்கமான பலர் முசிறி சுப்பிரமணிய அய்யர் சங்கீத வித்வான் மாத்திரமல்ல, ஆங்கிலம் அறிந்தவர். நல்ல பேச்சாளர். அரச பதவியில் பலர் அவருக்கு நண்பர்கள். அவர் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மனைவி ஒரு தேவதாசி. பெண்களுக்கு தடை சொல்லும் குரல் மழுங்க இது ஒரு காரணம். பிணங்கி நிற்கும்  கட்சிகளை இணைக்கும் முயற்சி தொடர்ந்தது.  38 சங்கீத வித்வான்கள் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப் பட்டது. பல கட்சிகளைச் சேர்ந்த வித்வான்கள் இதில் அடக்கம். அதிசயத்தில் அதிசயம் நிர்வாகக் குழுவில் ஐந்து பெண்கள். நாகரத்தினம்மாவைச் சேர்த்து.

திருவீழிமிழலை சகோதரர்கள் மேடையேறி வாசிக்கத் தடுக்கப்பட்டதை மௌனமாக ஏற்றுக் கொண்டதைக்  கண்டித்து அவர் ராஜினாமா செய்வதற் கென்ன என்று, டி என் ராஜரத்தினம்பிள்ளை குரல் எழுப்ப, அது நிர்வாகக் குழுவின் விவாதப் பொருளாகி முசிறி சுப்பிரமணிய அய்யர்  தலையீட்டில்  மேடையில் நாதஸ்வர கச்சேரிக்கும் வழிவகுக்கப்பட்டது. ஆராதனை தினத்தன்று, நாகரத்தினம்மாவுக்கு கிடைத்த மகிழ்ச்சி இன்னதென்று சொல்ல முடியாது. “என் ஆசையெல்லாம் நிறைவேறிவிட்டது. இரண்டு கட்சிகளும் ஒன்றாகி விட்டன. யாரை வைத்து சங்கீதம் வாழ்வாகியதோ அவருக்கு மரியாதை செலுத்த கட்சி பேதமின்றி எல்லோரும் ஒன்று கூடியது, அதுவும் ஏதும் பிரசினை இன்றை அந்த மகானின் சமாதி முன்னேயே விழா சிறப்பாக நடக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?” என்று தன் மகிழ்ச்சியைச் சொன்னார். அன்று நாகரத்தினம்மாவின் கச்சேரி 6.00 லிருந்து 8.30 வரை. அவருக்குப் பின் அரியக்குடி 10.30 மணி வரை.

அதை அடுத்து சூலமங்கலம் வைத்திய நாத பாகவதரின் ஹரி கதை. பாகவதர் மேடையேறி ஹரிகதை ஆரம்பிக்கவிருந்த சமயம், நாகரத்தினம்மா மெதுவாக தானும் மேடையேற, கூட்டம் பலமாகக் கைதட்டி இந்தக் காட்சியை வரவேற்றதாம். மேடையேறிய நாகரத்தினம்மா பாகவதர் அருகில் உட்கார்ந்து, தான் பாகவதரின் ஹரிகதையைக் கேட்க வெகு காலமாக ஆசை கொண்டுள்ளதாகவும் அவரது ஆசை இன்று பூர்த்தி அடைய பாகவதர் அனுமதி தரவேண்டும் என்று ஒலிபெருக்கியில் கேட்டுக் கொண்டாராம். மறுபடியும் கூட்டத்தில் கரகோஷம். பாகவதர் தன் தலையாட்டலில் சம்மதம் தெரிவித்தார் என்று ஸ்ரீராம் எழுதுகிறார். என்ன திடமனது? தான் நினைத்த எல்லாக் காரியங்களையும் ஆரம்பத் தடைகளையெல்லாம் மீறி, மிகுந்த பவ்யத்துடன் நிறைவேற்றிக்கொள்கிறார் நாகரத்தினம்மா.  இவ்வளவு காலமாக தான் ஒரு தேவதாசி, பெண் என்ற காரணத்திற்காக தனக்கான உரிமையை மறுத்துவந்த, தான் மதிக்கும் ஒரு பெரிய கலைஞரிடமிருந்தே தன் காரியத்தை திடசித்தத்தினாலும் அன்பாலும் தன் வழிக்குக் கொணர்ந்த மாண்பு  ஒரு உண்மையிலேயே ஒரு தெய்வத்தின் தாசிக்குத் தான் இருக்கும்.

தனக்கு வழக்கமாக நன்கொடை வழங்கும் நண்பர் டாக்டர் டி.என். கேசரி மூலம் மைசூர் மகாராஜ ஜயசாமராஜ உடையார் அறிமுகம் கிடைத்தது. அரண்மனைக்கு கச்சேரி செய்ய அழைக்கப்படுகிறார். ஜயசாமராஜ உடையார் பாரம்பரியப் பதவி பெற்ற பவிஷு ஒன்றே பெற்றவர் அல்ல. கலை  இலக்கியங்களில் பாண்டித்யமும் ரசனையும் உள்ளவர். அவரது கச்சேரி முடிவில் உடையார் நாகரத்தினம்மாவுக்கு பொற்கங்கணங்கள் இரண்டை பரிசாக அளித்தார். (இது சொல்லப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. நாகரத்தினம்மாவின் தாய் புட்டலக்ஷ்மி தன் காலத்தில் பெற்ற அவமதிப்பை துடைத்தெறிய தன் மகளை அரசவையின் அழைப்பைப் பெற வைப்பேன் என்று சபதம் செய்தது நினைவிலிருக்கும். மகள் தாயின் சபதத்தை நிறைவேற்றிவிட்டாள் தான். நாகரத்தினம்மா அந்த கங்கணங்கள் இரண்டையும் தியாகராஜ ஆராதனை விழாவிற்கு அளித்துவிட்டார்.
1941-ல் தியாகராஜ ஆராதனை முற்றிலும் வேறாக பிரம்மாண்ட உருக்கொண்டது. 5 நாட்கள் விழாவில் சுமார் 100 கலைஞர்கள் பங்கு கொண்டனர். ஆர். கே ஷண்முகம் செட்டியார் வரவேற்பு உரை. நிகழ்ச்சிகள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.  நாகரத்தினம்மா தன் கச்சேரியைத் தொடங்கும் முன்,  “தான் ஒரு தேவர் அடியாள்” என்று சொல்லிக்கொண்ட பின் தான் கச்சேரியைத் தொடங்குகிறார். அந்த பணிவான எதிர்ப்புக்குரல் நாடெங்கும் காற்றில் கலந்து பிரவாஹித்திருக்கும்.

1942 ஆராதனை விழாவை ஆரம்பித்து வைத்தது நாகரத்தினம்மா. தியாக ராஜ சமாதியில் தியாகய்யரைப் போற்றி ஒரு பிரார்த்தனை கீதம் பாடி ஆராதனை விழா தொடங்கியது.

1949-ம் ஆண்டிலிருந்து தான் தியாகராஜரின் சமாதி முன் அனைவரும் அமர்ந்து பஞ்சரத்தின கீர்த்தனைகள் ஐந்தையும் கூட்டாகப் பாடிவிழா தொடங்குவது என்பது ஆரம்பித்தது. அது தான் இன்றும் தொடர்கிறது.

தன் உடல் நிலை மோசமாகி வருவது கண்டு நாகரத்தினம்மா 1949 ஜனவரி மாதம் தன் உயில் ஒன்றை சென்னை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். அது தாம் “ ஹக்கட  தேவன்ன கொத்த புட்ட லக்ஷ்மி அம்மாள் வைஷ்ணவியின் மகள்” என்று தான் தன் அறிமுகத்துடன் தொடங்குகிறது. அதில் தன் வரலாறு, பின் தியாகராஜ சமாதிக்கும் ஆராதனை விழாவிற்கும் தன் பங்கை விவரித்து தன் சொத்துக்களை வித்யாசுந்தரி பெங்களூரு நாகரத்தினம்மா அறக்கட்டளை” க்குச் சொந்தமாக்குவதாகவும் என்றும் இந்த அறக்கட்டளையே அதன் நிர்வாகத்திற்கும் தியாக ராஜ ஆராதனைக்கும் பொறுப்பு என்றும், தன் ஊரிலும் கர்நாடகத்திலும் சென்னை மாகாணத்திலும் உள்ள கோவில்கள் தர்மஸ்தாபனங்களுக்கும் பூஜைகளுக்கும் என்னென்ன நிதி உதவிகள் செய்து வந்தாரோ அவை தடையில்லாமல் தொடரப்பட வேண்டும். அதோடு தன் தாயார் சிராத்ததுக்கான உதவிகளும், தியாகராஜ ஸ்வாமிகளுக்கு செய்து வரும் சிரத்தத்துக்கு ராமுடு பாகவதருக்கு (தியாகராஜரின் குடும்பத்து வாரிசு) அவர்களுக்கு செய்துவரும் உதவிகளும் எதுவும் தடையின்றி தொடர தான் அளிக்கும் நிதி உதவிகள் தன் அறக்கட்டளையிலிருந்து தொடரவேண்டும்” போன்ற விதிகள் அந்த உயிலில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதற்கு உதவியாக தன் சேமிப்புகள், நிலங்கள், நகைகள் இன்ன பிற சொத்துக்கள் அனைத்தும் அந்த உயிலில் பட்டியலிடப் பட்டிருந்தன.

முன்னர் 1921-ல் அவருக்கு கனவில் தியாகராஜ ஸ்வாமிகளைப் பற்றியு அழைப்பு வந்தது போல், இப்போது அவரது முதிய வயதில், வேங்கடகிரியில் இருந்த சாயி பாபாவின் அழைப்பு கனவில் வந்தது. தமது புரவலரான வேங்கடகிரி அரசருக்கு இது பற்றி எழுத, அரச குடும்பத்தினரும் சாய்பாபா பக்தர்களானதால் சாயி பாபா வின் தரிசனம் அவருக்கு கிடைக்கிறது. சாயி பாபா அவரை தியாகராஜ கீர்த்தனை பாடச் சொல்லி, நாகரத்தினம்மா பாடும்போது சாயிபாபாவும் அவருடன் சேர்ந்து பாடுகிறார். கடைசியில் உனக்கு என்ன வேண்டும்? என்று சாயி பாபா கேட்க, தனக்கு எதுவும் வேண்டாம், ராம நாமம் பஜித்துக்கொண்டே உயிர் போய்விட வேண்டும் என்று தான் கேட்கிறார். சாயி பாபா அப்படியே நடக்கும் என்று அனுக்கிரஹிக்கிறார். ராம நாமம் பஜித்துக்கொண்டிருக்கும் போதே நாகரத்தின்ம்மா தன் நினைவிழக்கிறார். சாயி பாபா எல்லோரையும் வெளியே போகச்சொல்லி தானும் வெளியேறுகிறார். 24 மணி நேரம் கழித்துத் தான் அவர் சுய நினைவு பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

1952-, வருஷம் ஒரு கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருக்க தன் நாற்காலியில் சாய்ந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது ராமுடு பாகவதரின் மகனின் சவ ஊர்வலம் கடந்து போவைதைப் பார்க்கிறார்.  அவன் நாகரத்தினம்மாவுக்கு மிகவும் பிரியமானவன். நாகரத்தினம்மாவுக்கு திடீரென மார்பு வலி வந்து அவர் உயிரைப் பறித்துச் செல்கிறது.

நாகரத்தினம்மாவின் உடல் ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டது. அவருக்குப் பிடித்த சிகப்புக் கலர் புடைவை அணிவித்து. பக்கத்தில் இரண்டு சிமிழ்களில் குங்குமமும் விபூதியும். அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் குங்குமம் வாங்குவதே ஒரு ஆசீர்வாதமாக எண்ணி கிராம மக்கள் குங்குமமும் விபூதியும் பெற்றுச் செல்வது வழக்கம். இன்று ஒரு பெரிய கூட்டம் வரிசையாக வந்தவண்ணம் இருந்தனர், விபூதியும் குங்குமமும் பெற்றுச் செல்ல. சாயி பாபா என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, எதிலும் ஆசையில்லை. அமைதியாக ராம நாமம் பஜித்துக்கொண்டே இறந்துவிட வேண்டும் என்று தான் கேட்டார். பாபாவும் அது கிடைக்கும் என்று ஆசீர்வதித்தார். ஆனால் இறந்த பிறகு அமைதி வேண்டும் என்று கேட்கவும் இல்லை. சாயி பாபா அருளவுமில்லை.

தன் உடல் காவிரிக்கரையில் சமாதியைப் பார்த்தவாறு இருக்கும் இடத்தில் அடக்கம் செய்யப்படவேண்டும் என்று தன் கடைசி விருப்பத்தை எழுதியிருந்தார் ஆனால் அது கிடைப்பதாயில்லை. வாக்கு வாதங்கள் பிரசினைகள் எழுந்தன. சமாதி அருகில் ஒரு தேவதாசிக்கு அடக்கமா? என்று பிரசினை. சமாதியைத் தவிர வேறு எங்கும் எடுத்துச் செல்லப்படக்கூடாது என்று வியாபாரிகள் கடைக்காரர்கள் கடை அடைப்பு செய்து எதிர்த்தார்கள். கடைசியில் காவிரிக்கரையிலேயே ஒர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடக்கம் நடந்தது.

தன் மொழி தாண்டி, தன் பிறந்த நாடு தாண்டி, சங்கீதமும் பக்தி உணர்வும் இழுத்துச் சென்ற இடத்தில், தன் பிறப்பின் சமூக இழிவை மீறி மற்ற உயர்குலத்தோர், அதிகாரம் மிக்கோர் நினைத்திராத செய்திராத சாதனைகளை விடாப்பிடியான சாதனை வெறியில் எதிர்வந்த எல்லாத் தடைகளையும் மீறி சாதித்த பெருமிதம் அவர் கடைசி நினைவு வரை இருந்தது. உலகம் கடைசியில் அதை அங்கீகரித்தது. ஆனால் வருங்காலம் அதை மெல்ல மெல்ல மறந்து கொண்டிருந்தது. இப்போது மறந்தும் விட்டது. தியாகராஜ ஆராதனை இன்றும் நடந்து வருகிறது தான். ஆனால் அது ஒரு ஆர்ப்பரிக்கும் விழாவாக ஆகியுள்ளது. அங்கு ஆராதனை அன்று சமாதி முன் கூடும் பெண் பாடகிகளின் கூட்டத்தையும் சேர்த்து, அவர்கள் அங்கு அமர்ந்திருக்கக் காரணமான, அந்த தியாகராஜ சமாதிக்கும் தியாகராஜ மூர்த்திக்கும் காரணமான நாகரத்தினம்மா என்னும் தேவதாசியின் நினைவு யாருக்கும் வருகிறதா என்பது சந்தேகமே. விழாவின் பக்திபூர்வம் என்றோ மறையத் தொடங்கியதை 1940 களிலேயே பலர் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

இன்று நாகரத்தினம்மா ஸ்தாபித்த அறக்கட்டளை என்று ஒன்று இல்லை. அவர் பட்டியலிட்ட சொத்துக்கள் எதுவும் எங்கு போயிற்று எனத் தெரியாது. நாகரத்தினம்மா திருவையாற்றில் வசித்த வீடும், பெங்களூரில் வசித்த வீடும் இருந்த இடம் தெரியாது போய்விட்டன. தியாக பிரம்மத்தின் வீடு இடிக்கப் பட்டு, ”அவரது தகுதிக்கேற்ற, நம் காலத்திய சிந்தனைக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற” ஒரு க்ரானைட், மொசைக், மார்பில் மஹல் ஒன்று பெரிதாக எழுப்பப் படலாம். நாகரத்தினம்மா தியாகராஜருக்கு சமாதி எழுப்பிய போது சுற்றியிருந்த சமாதிகள் எல்லாம் அவ்வப்படியே காக்கப்படவேண்டும் எதுவும் இடிக்கப்படக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். இந்த க்ரானைட் மொஸைக் தியாகராஜ நினைவு இல்லம் என்ற சிந்தனையை அவர் காலத்தில் எழுந்திருந்தால் கட்டாயம் அவர் எதிர்த்திருப்பார்.

காலம் மாறிவிட்டது. கலாசாரமும் சிந்தனைப் போக்கும் மாறிவிட்டன. இன்று அந்த மஹான் யாரென்று, ”நாகரத்தினம்மாவா? பெங்களூரிலேர்ந்து வந்த ஒரு தேவடியா” என்று ஒரு சிலருக்கு விவரம் தெரியக்கூடும்.  1921-ல் நாகரத்தினம்மா தன் குரு பிடாரம் கிருஷ்ணப்பா கனவில் வந்து சொன்னதைக் கட்டளையாகக் கொண்டு பார்த்த திருவையாறு தியாகராஜ சமாதிக்கும் இன்று காணும் தியாகராஜ சமாதிக்கும் அதிக வேற்றுமை இல்லை, அப்படி ஏதும் இருந்தாலும் அந்நிலையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஆராதனை மாத்திரம் காலத்துக்கேற்ப ஒரு விழாவாக சில நாட்கள் நடந்து முடிந்ததும் தியாகராஜ சமாதி மறுபடியும் தன் வெறிச்சோடும் காட்சியை மேற்கொள்கிறது. ஐந்து நாள் வாழ்வு. இன்று எத்தனை பேருக்கு நாகரத்தினம்மா தன் கீழ்நிலையிலிருந்து மேல் எழுந்து எல்லா எதிர்ப்புக்களையும் அவமானங்களையும் தன் வழியில் எதிர்கொண்டு பெரிய சாதனைகளை சாதித்தவர், அவரது வாழ்வு எதிர்ப்புக்களும் சாதனைகளும் நிறைந்த வாழ்வு  என்று தெரியும்? வாழ்வின் அத்தகைய கணங்களை நான் படிக்கும் போது மனம் நெகிழ்ந்து போகிறது.

அத்தகைய ஒருவரின் வாழ்க்கையை வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம் மிகுந்த காலம் தன் தேடலிலும் அர்ப்பணிப்பிலும் செலவழித்து இப்புத்தகம் எழுதியிராவிடில் இன்னும் எத்தனை காலத்துக்கு வெறும் பெயராகக் கூட நாகரத்தினம்மா ஒரு சிலர் நினைவில் நீடித்திருப்பாரோ தெரியாது. இதைத் தமிழில் மொழிபெயர்த்த பத்மா நாராயணனுக்கும் பிரசுரித்த காலச்சுவடுக்கு நம் நன்றி நாகரத்தினம்மாவின் வாழ்க்கை பற்றி இவ்வளவு விவரமாக ஒரு புத்தக மதிப்புரை எழுதப்படுவதில்லை.தான். தெரியும். நான் எழுதக் காரணம், முடிந்தவரை எல்லோரையும் புத்தகத்தைப் படிக்கத் தூண்டவேண்டும் என்பதும், அது இயலாதவரை குறைந்த பட்சம் இந்த மதிப்புரை படித்தாவது நாம் மறக்கத் தக்க ஒரு வியக்தி அல்ல நாகரத்தினம்மா என்றாவது உணர்த்தத்தான்.


தேவதாசியும் மஹானும் – பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும் காலமும்:
ஆங்கிலம்: வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம். தமிழில்: பத்மா நாராயணன். காலச்சுவடு பதிப்பகம் ப. 216 விலை ரூ 175

vswaminathan.venkat@gmail.com