நினைவேற்றம்: முனை 3

 -தேவகாந்தன்-   பனி  புகட்டினால், மழையிலே நனைந்தால், வெய்யில் பட்டால், தூசிக்குள் நின்றால் என எதற்குமே தும்மல் வந்து, தடிமனாக்கி, காய்ச்சலும் இருமலும் பிடித்துவிடுகிற ஒரு நோஞ்சான் பிள்ளையாகவே என் சின்ன வயது இருந்திருக்கிறது. இது காரணமாகவே அண்டை அயல் வீடுகளிலே போய் விளையாட நான் அனுமதிக்கப்படவில்லை என் பெற்றோரால். சாதிபற்றிய காரணம் பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் தரத்ததாகவே இருந்தது. பாடசாலை மெய்வல்லுநர்ப் போட்டிகளில் பங்குகொள்வது அது தேடிச் சென்று பங்குபற்றுகிற சூழ்நிலையில் அமையாததில் அதற்கு நான் அனுமதிக்கப்பட்டேன். இருந்தும் பத்து வயதுவரை என்னால் பெரிதாக எதனையும் செய்யமுடியவில்லை, இந்த வருத்தக்கார உடம்பு இருந்த காரணத்தால்.

இந்தா, இந்தமுறை விளையாட்டுப் போட்டியில் யூனியர் பிரிவில் சம்பியன் ஆகாவிட்டாலும், இவனுக்கு எப்படியும் நூறு யார் ஓட்டத்திலோ, நீளம் பாய்தலிலோ முதலாம் அல்லது இரண்டாம் பரிசுகள் கிடைத்துவிடும் என்றிருக்கிற நிலையில், விளையாட்டுப் போட்டியிலன்று நான் சுகவீனமாகி எழும்பமுடியாது கிடந்த சம்பவங்கள்தான் என் வாழ்வில் அதிகமும் நேர்ந்திருக்கின்றன.

இவ்வாறு அடிக்கடி நோய் பிடித்துவிடும் உடம்பைக்கொண்ட எனக்கு படிப்புக்கூட அவ்வளவாக வரவில்லை. பள்ளிக்கு ஒழுங்கு குறைவாய் இருந்த காரணத்தோடு, எட்டு பாடங்களில் சராசரி ஐந்து ஆறு பாடங்களுக்கு மேல் என்னால் பரீட்சைக்குத் தோற்ற முடியாதே இருந்து வந்தது. இதனால் இருபத்தைந்து மாணவர்களைக் கொண்டிருந்த எனது வகுப்பில் என்னால் பத்துக்குக் கீழே இறங்கவே முடியவில்லை.

தவணைப் பரீட்சைகள் முடிந்ததும் பெரும்பாலும் லீவு வரும் எங்களுக்கு. இந்தக் காலத்தில் வீட்டுக்கு வரும் தெரிந்த மனிதர்கள் கேட்கிற கேள்வி பெரும்பாலும் ‘உங்கட மோன் இந்தமுறை எத்தினையாம் பிள்ளை?’ என்பதாக இருக்க, மிகவும் மனச் சங்கடத்தோடேயே என் தாய் பத்தோ, பதினொன்றோ, பன்னிரண்டோ என்பதைச் சொல்வாள். ஆயினும் என்மீது எந்த மனக்குறையையும் அவள் காட்டாத அளவுக்கு அவளுக்கு விளக்கம் இருந்தது. வருத்தக்காரப் பிள்ளையை பெற்று வைத்துக்கொண்டு அது நன்றாகப் படிக்குதில்லையே என்று எப்படி கடிந்து  கொள்ளமுடியும்?
இந்தளவில் அந்தப் பகுதியிலே மூன்றாவது வீடாக எங்கள் வீட்டுக்கு வானொலி வந்தது. சிமென்ற் என்ற பெயருடைய ஒரு ஜேர்மன் வானொலி. பெரிதாகவும், கம்பீரமாகவும் இருந்தது. அதன் ஒலித் திறனும் அதிகம், துல்லியமாய் இசையை இழுக்கும் வலிமையும் அதிகம். பாதிப் பனை உயரத்தில் கட்டிய ஏரியலிலிருந்து காற்று வளம்மாறி வீசினாலும் ஒலியலைகளை வல்லபமாய் உள்ளிழுக்கக்கூடிய வானொலி அது. அப்போது அதன் விலை முந்நூற்று அறுபது ரூபா. ஆயிரம் ரூபாவுக்கு ஒரு பாதிப் பழைய கார் அந்தக் காலத்தில் வாங்கமுடியும்.

காலையில் பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரையும், மாலையில் மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரையும் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பின் நேரம் முழுக்க சினிமாப் பாடல்களும், இசையும் கதையும், வானொலி நாடகங்களும்தான் இடம்பெறும். காலையிலிருந்து இரவு பத்தரை மணிவரை இடம்பெறும் இலங்கை வானொலியின் தேசிய சேவை ஒலிபரப்பில்தான் செய்திகளும், கர்நாடக இசையும், வீணை வயலின் போன்றவற்றின் இசை நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின.

நாளுக்கு ஆறு மணிநேரமாவது வீட்;டில் வானொலி அலறாத நாளில்லை. சதா அதையே வைத்து முறுக்கிக்கொண்டிருக்கும் என்னை ஆதரவோடுதான் அம்மா, ‘போய்க் கொஞ்சநேரமெண்டாலும் படி ராசா’ என்பாள். எப்படிப் படித்தென்ன? பத்துக்கு கீழே என்னால் இறங்க முடியாமலேதான் இருந்தது.
படிப்பும் அப்படி, விளையாட்டும் அப்படி என இருந்த பிள்ளையாயினும் அடிக்கடி நோய்வாய்ப்படுகிற பிள்ளையை யார்தான் மிகவும் கண்டிப்பாக நடத்திவிடுவார்கள்? நான் என் பாட்டிNலுயே நேரத்தைப் போக்காட்டினேன். ஆனாலும், விளையாட்டுமில்லாமல், படிப்பும் இல்லாமல் நேரத்தை எப்படித்தான் போக்காட்டிவிட முடியும்?

அவரவர்க்குமான சந்தர்ப்பங்கள் அமைந்துவரும் என்று சொல்வார்கள். எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. அதை அவரவரும் பயன்படுத்திக்கொள்கிற விதத்திலேதான் எதிர்காலம் பெரும்பாலும் அமைவதாக நான் கருதுகிறேன்.

பத்து வயதுவரை விளையாட்டிலும் ஈடு படாமல், படிப்பிலும் திறமையைக் காட்ட முடியாமல் சதா நோய் பிடித்த பிள்ளையாக இருந்த நான், என் எதிர்காலத்தை சீரமமைப்பதற்காய் எனக்கு அமைந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன் என்றே நினைக்க இப்போது தோன்றுகிறது.
எங்கள் கடை முன்பகுதியிலே ஒரு பெரிய நீண்ட ‘வார் மேசை’ போடப்பட்டிருந்தது. சாமான் கட்டுவதற்காக ஊரிலிருந்து  வாங்கப்பட்ட பழைய சஞ்சிகைகள், பத்திரிகைகளெல்லாம் இந்த வார் மேசைக்குக் கீழேதான் சாக்குகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அவையெல்லாவற்றையும் வாசிப்தற்கானவர்கள் அப்போது அங்கே இருந்திருக்கிறார்கள் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாக வரும்.

இதை அதிகமும் வாசித்தவர்கள் பெண்களாகவே இருந்திருப்பர் என்றும் அவர்கள் அக்காலத்தில் பேசிய பேச்சுக்களிலிருந்து ஒரு அனுமானத்துக்கு வரமுடிந்திருந்தது. வானொலி இல்லை, குடும்பங்களில் பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டுமென்ற பண்பாட்டுத் தளை, படலைகளில் நின்று பேசுவது, வேலிகளில் நின்று பேசுவது அநாகரிகமென்ற குடும்பக் கட்டுப்பாடுகள் யாவும் அவர்களுக்கான அந்த வாசிப்பு நிலையை உருவாக்கி வைத்திருக்கலாமென்று இன்று என்னால் நினைக்க முடிகிறது.

ஆனால் அன்று இவைபற்றி நான் யோசிக்க தேவையிருக்கவில்லை. என் பொழுதுபோக்கிற்காக ஒருநாள் எதிர்பாராதவிதத்தில் நான் ஒடுங்கிய இடம் இந்த பழைய சஞ்சிகைகள்தான். கல்கி, கலைமகள், குமுதம், ஆனந்தவிகடன், குண்டூசி, பேசும்படம், கல்கண்டு, அம்புலிமாமா என படங்களும், கதைகளும், நகைச்சுவைத் துணுக்குகளும் மெல்ல மெல்லமாய் என் ஆதர்~மாகின. நான் வாசிக்க ஆரம்பித்துக்கொண்டிருந்தேன். இந்த நிலையிலேதான் வார் மேசையின் கீழ்க் கிடந்த பழைய சஞ்சிகைச் சாக்குகளை அவிழ்த்து தேடலில் இருந்த எனக்கு ஒரு பழைய மொத்தப் புத்தகம் கையில் கிடைத்தது. அதன் முன்பகுதி பக்கங்கள் சில இல்;லாமலிருந்தன. எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் அதில் ஆறு அத்தியாயங்கள் இருந்திருக்கவில்லை. அது என்ன நூல் என்பதோ, பெயர் என்ன என்பதோ தானும் தெரியாமல்,  அதெ நான் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஏறக்குறைய இருநூறு பக்கங்கள் அந்த நூலிலே இருந்திருக்கலாம், அந்தப புத்தகத்தை பெரும்பாலும் நான் வாசித்து முடித்தேன் என்றே இன்று ஞாபகம் கொள்ள முடிகிறது. அது மகாபாரதக் கதையைச் சுருக்கிச் சொன்ன ‘வியாசர் பாரதம்’ என்று மிகப் பின்னாலேதான் நான் இனங்கண்டேன். மீண்டும் வாசிக்க எனக்கு பழைய நூல்கூட கிடைக்கவில்லை. பழையபடி சினிமாவுக்குள்ளும், நகைச்சுவை பகுதிகளுக்குள்ளும் நான் புகுந்துவிட்டேன்.
இந்தநேரத்திலேதான் என் பத்து வயதளவில் ஒரு குடும்பத் தகராறு காரணமாக என் தந்தையில் கொலை நிகழ்கிறது. மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் கொலை வழக்கு விசாரணையாகிறது. இம்மாதிரி வழக்குகளில் பெரும்பெயர் பெற்றிருந்த அப்புக்காத்து ஜீ.ஜீ.பொன்னம்பலம் எதிரிகளுக்காக வழக்காடவிருந்தார்.

நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால் வீட்டுக்கு வரும் தெரிந்தவர்களும், உறவினர்களும் பேசுகிற பேச்சில் ஜீ.ஜீ. என்ற அந்தப் பெயர் எனக்கு மனப்பதிவாகிப் போகிறது. அவர்பற்றிய பிரஸ்தாபங்கள், அவரது முந்தைய வழக்குகளில் சாட்சிகள் எவ்வாறு உழறிக்கொட்டினார்கள், சில சாட்சிகள் எவ்வாறு சாட்சிக் கூண்டுக்குள்ளேயே மயங்கி விழுந்தார்கள் என்றெல்லாம் அவர்கள் பேசுகிறபோது என்னையறியாமலே ஒரு பயம் என் மனத்துள் வந்து விழுந்துவிடுகிறது.

கீழ்க் கோர்ட்டில் வழக்கு விசாரணையாகவிருந்த அன்று நாங்கள் சாவகச்சேரி நகர் சென்று நீதிமன்றத்தில் காத்திருக்கிறோம். அதன் மஞ்சள் நிறச் சுவர்களோடுள்ள பிரமாண்டமான கட்டிடமே வியப்புத் தரக்கூடியது. முதல் முறையாக நீதிமன்றத்தின் உள்ளரங்கைப் பார்க்கும் எனக்கு பதற்றம் பிடிக்கிறது. எல்லோரும் வியந்துகொண்டிருந்த அந்த ஜீ,ஜீ. யாரென எனக்குத் தெரிந்திராவிட்டாலும், அவரது உருவ வர்ணிப்பில் கறுப்பு உருவமும், பெரிய கண்களும், அகன்ற நெற்றியுமுள்ள ஒரு ஆகிருதியை கற்பிதம்கொண்டு, அந்தளவு அப்புக்காத்துகள், பிரக்கிராசிமாருக்குள் அவரைக் கண்டுகொள்ள முடியும் என்பதுபோல நான் அங்குமிங்கும் பார்வையால் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நீதிமன்றம் கொள்ளாத கூட்டம். அந்த வழக்கையல்ல, ஜீஜீயைப் பார்க்க வந்த கூட்டம்தான் அது. என் தாத்தா முறையான ஒருவர் என்னருகே வந்து, ‘உன்னை ஆர் கேள்விகேட்டாலும் அந்த ஆளின்ர முகத்தைப் பாராதை, நீதவானைப் பாத்து பதில் சொல்லு. பயப்பிடாத. நாங்கள் உனக்குப் பின்னாலதான் இருப்பம்’ என்றுவிட்டு போகிறார். ஜீஜீயைப் பார்க்கவேண்டாமென்பதே ஒரு அச்சுறுத்தல்போல் என் மனத்தில் மேலும் பயம் வந்து கவிகிறது. நீதிமன்றத்தில் குசுகுசு இரைச்சல்களை அடக்கிக்கொண்டு நீதிபதி பிரசன்னமாகிறார். முதல் வழக்கு எங்களது. முதல் சாட்சி நான்.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நீதிபதியைப் பார்த்துக்கொண்டே நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஜீஜீ ஒருபோது என்னிடம் சொல்கிறார், கேள்வி கேட்பது தானென்றும், தன்னைப் பார்த்துப் பதில்சொல்லும்படியும். நான் தவிக்கிறேன். நீதிபதியிலிருந்து பார்வையை மீட்கப் பயமாக இருக்கிறது. ஜீஜீயின் வற்புறுத்துதலில் எனக்கு தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறது. அவ்வப்போது அவ்வப்போது அவரைப் பார்ப்பதோடு ஒருவாறு சமாளித்து விசாரணையை முடிக்கிறேன்.  இரண்டாவது சாட்சிகள், மூன்றாவது சாட்சி விசாரிக்கப்படுகின்றன. மூன்றாவது சாட்சி ஜீ;ஜீயின் கேள்வியில் மயங்கி சாட்சிக் கூண்டுக்குள்ளேயே விழுகிறான். ஆயினும், இறுதியில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு பாரப்படுத்தப்படுகிறது.  ஜீ.ஜீ. வந்தால் கீழ்க் கோர்ட்டிலேயே வழக்கு தள்ளுபடியாகிவிடுமென்று அவருக்கு பெரிய பேர். அவ்வாறு அவர் ஆஜராகிய வழக்குகள் அந்தக் கோர்ட்டிலேயே தள்ளுபடியான கதைகள் நிறைய.

நான் எங்கள் உற்றம் சுற்றத்தார்  மத்தியில் ஹீரோவாகிவிடுகிறேன்.  வீடுசென்ற பின்னால் ஜீஜீயின் முகத்தைப் பார்த்து பதில்சொல்ல வேண்டாமென எனக்குச் சொன்ன பெரியவர், தான் சொன்னது பெரிய நன்மை விளைத்ததான எண்ணத்தோடு வந்து, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்க எவ்வளவு காலமாகுமென்று தெரியாது, ஒரு வரு~மாகலாம், இரண்டு வரு~ங்களும் ஆகலாம், அந்த கால இடைவெளியில் நான் பல வி~யங்களை மறந்துவிடக்கூடுமென்றும், அதனால் விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு நான் சொன்ன பதில்களையும் ஒரு கொப்பியில் எழுதி வைக்கும்படி கூறுகிறார்.

கணவனை இழந்த துக்கமிருந்தாலும், எதிரிகளுக்கு தண்டனை கிடைக்கக்கூடிய சாத்தியத்தினால் ஓரளவு மனவமைதி கொண்டிருந்த அம்மாவும், ராசா, அப்பு சொல்லுறதுதான் சரி, நீ எல்லாத்தையும் ஒரு புதுக்கொப்பி எடுத்து எழுதிவை என்கிறாள். ஒரு வாரமாக அந்த விசாரணையை யோசித்து யோசித்து நான் எழுதுகிறேன். ஏறக்குறைய நாற்பது பக்க அந்தக் கொப்பியில் இருபத்தைந்து இருபத்தாறு பக்கங்களை எழுதி முடிக்கப்;பட்டிருக்கின்றன.

நான் விசாரணையை எழுதி வைத்திருக்கிற வி~யம் ஊரில் பரவுகிறது. ‘பொடியன் கெட்டிக்காறன். விசாரணையை எழுதி வைச்சிருக்கிறான். எப்பிடியும் பத்துப் பத்து வரு~ம் எதிரியளுக்கு கிடைக்கும்’ என்று சுற்றத்திடையே நம்பிக்கை வலுக்கிறது. நான் எழுதிவைத்த விசாரணையைப் பார்க்கவே சிலர் வருகிறார்கள். இருண்டு வருடங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில் வழக்கு தள்ளுபடியே ஆகிறது. அம்மா மற்றும் உறவினர் எல்லோருக்குமே அது பெரிய துக்கம். எனக்கும்தான். ஆனாலும், எனக்கு அந்த வழக்கு பெரிய ஆதாயத்தைச் செய்ததென்பதை பின்னாலேதான் நான் உணர்ந்தேன்.  பத்து வயதில் நான் எழுதிவைத்த அந்த ‘விசாரணை’. முதலில் வாசிப்பு வந்தது. இப்போது எழுத்து வந்திருக்கிறது.

பகலில் மட்டுமாயே இருந்தது என் வாசிப்பு. நீண்டகாலம் மின்சாரமிருக்காததால் இரவு வாசிப்பு மண்ணெண்ணெய் விளக்கு வைத்துக்கொண்டே நடக்கச் சாத்தியமிருந்தது. பள்ளிக்கூட பாடங்களே இரவுக்கானவை என எனக்கு கண்டிப்பாய்ச் சொல்லப்பட்டிருந்தன. அதனால் என் வாசிப்புகளை தினசரியின் மாலைகளும், சனி ஞாயிறுகளும் அடைத்துக்கொண்டன.

இந்த பள்ளி சாரா திறமைகள் மேலும் மேலுமாய் என்னுள் எவ்வாறு விருத்தியாயின என்பதும், வயதுக்கதிகமான அனுபவங்களின் தாரியாய் நான் எவ்வாறு ஆனேன் என்பதும், இவ்வனுபவங்களில் என் குணாதிசயத்தை விரிவாக்கியதும் சேதப்படுத்தியதுமானவை இருந்திருந்தும், ஒரு சமூக மனிதனாய் நான் நிலைபெற்ற அதிசயமும் எப்படி நேர்ந்தன என்பதும் இனிமேலேதான் பார்க்கப்பட வேண்டியன. மனிதர்களை சம்பவங்கள் கட்டமைக்கும், இந்த விதி, ஆண்டவன் கட்டளை எனப்படுவதல்ல, அது சமூகம் விதிக்கிற

bdevakanthan@yahoo.com