மெய்யியல் கற்றல் கற்பித்தல் -3

டையோஜனிஸ் என்பவர் மகா அலெக்சாண்டரின் குருவாய் இருந்தவர். - ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -உண்மை- என ஒன்று இருப்பதாகவும் அதனைப் பாதுகாப்பதாயும் மெய்யியல் விளங்குகிறது எனச் சொல்லிக்கொண்டு அக்காலத்தில் கிரேக்கர்கள் சிலர் திரிந்தனர். மெய்யியலாளர் என்போர் உண்மையின் காவல் நாய்கள் என்றும், எப்பொழுது உண்மைக்குப் பங்கம் வருகிறதோ அப்பொழுது அவர்கள் விழிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. மிகத் தலைக்கனம் பிடித்தவர்களாயும் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

1.)
டையோஜனிஸ் என்பவர் மகா அலெக்சாண்டரின் குருவாய் இருந்தவர். அவரைப் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்புண்டு. ஒரு முறை டையோஜனிஸ், சிறு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டும் உடலெங்கும் ஒலிவ் எண்ணெயைப் பூசிக்கொண்டும் ஏதன்ஸ் கடற்கரையில் சூரியக் குளியல் செய்து கொண்டுமிருந்தார்.

பல நாடுகளைப் போரில் வென்று…சக்ரவர்த்தியாகித் தன் பரிவாரங்களுடன் ஏதன்ஸ் வந்தான் அலெக்ஸ்சாந்தர். வந்தவுடன் எங்கே என் குருநாதர் டையோசனிஸ் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கவேண்டுமெனக் கேட்டான். அவர் கடற்கரையில் சூரியக்குளியல் செய்கிறார் எனச் சொல்லப்பட்டது அவனுக்கு. அரண்மனைக்குச் செல்லாது கடற்கரை நோக்கிச் சென்றான் பாரிய பட்டாளத்துடன் அலெக்சாண்டர்.

-குருவே டையோஜனிஸ், உலகம் முழுவதும் வென்று வந்தேன். எல்லாவுலகும் என் காலடிக்கீழ். நீங்கள் என் குரு. உங்களுக்கு என்ன வேண்டும்..? கேளுங்கள்.- என்றான். -சற்றுத் தள்ளி நில். அந்தச் சூரியஒளி என்மேற் படட்டும் முதலில், அப்புறம் பேசலாம்.- என்றார் டையோஜனிஸ்.

இவர்தான் பகலிலும் கையில் விளக்குடன் மனிதனைத் தேடித் திரிந்தார்.

சோக்கிரட்டீசுக்குப் பைத்தியம் பிடித்தால் எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டுமாயின், டையோஜனிசைப் பாருங்கள் என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார். மிக எளிமையாய் சில விடயங்களை முதன்முதலாக டையோஜனிஸ் சொன்னார்.

அவர் சொன்னது என்ன தெரியுமா..?

-மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு- என்பதுதான்.

(தொடர்வேன்)