பத்து நாட்கள் – பத்து திரைப்படங்கள் திரைப்படம் -3 – சத்யஜித் ரேயின் ‘அபுர் சன்சர்’ , 1959, (The World of Apu – அபுவின் உலகம்)

இயக்குநர் சத்யஜித் ராய்திரைப்படம் – 3- சத்யஜித் ரேயின் ‘அபுர் சன்சர்’ , 1959, (The World of Apu – அபுவின் உலகம்)

வங்கநாவலாசிரியர் விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் நாவலை வைத்து மூன்று திரைப்படங்கள் எடுத்துள்ளார் இயக்குநர் சத்யஜித் ராய். முன்றுமே அபு என்னும் சிறுவனின் வாழ்க்கையை வளர்ந்து பெரியவனாகி அவன் எதிர்கொள்ளும் மானுட வாழ்வுச் சவால்களை விபரிப்பது. முதலாவது பதேர் பாஞ்சாலி. மிகுந்த புகழை அவருக்குப் பெற்றுத்தந்தது. அடுத்தது அபராஜிதா. மூன்றாவது அபுர் சன்சர் ( அப்புவின் உலகம் – The World of Apu ). இத்திரைப்படம் இந்திய மத்திய அரசின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதினைப்பெற்றுள்ளதுடன், சர்வதேச நாடுகளின் விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. தி டைம்ஸ் சஞ்சிகை அபுவின் வாழ்வை விபரிக்கும் இம்மூன்று திரைப்படங்களையும் உலகளாவிய மிகச்சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் சேர்த்துள்ளதும் மேலும் பல ஊடகங்களும் இவ்வாறே இப்படத்துக்குக் புகழ்மாலை சூடியுள்ளதும் குறிப்பிடத்தக்கவை. தவிர பல மேலைத்தேயத்திரைப்படங்கள் சிலவற்றில் இதன் தாக்கமிருப்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான் பார்த்த சத்யஜித் ராயின் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது எதுவென்றால் (அனைத்துமே பிடித்தவை என்றாலும்) இதனையே குறிப்பிடுவேன். .வேலையில்லாப்பட்டதாரியான இளைஞன் அபுவின் கல்கத்தா நகர வாழ்க்கையை படத்தின் ஆரம்பம் மிகவும் தத்ரூபமாக விபரிக்கின்றது. எனக்கு கொழும்பு, நியூயார்க் என்று மாநகர்களில் வாழ்ந்த இளம்பருவத்து நகர் வாழ்வினை நினைவூட்டியது. ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய புகழ்பெற்ற நாவலான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் நாயகனின் மாஸ்கோ நகர வாழ்க்கையை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எனக்கு இப்படத்தைப் பார்க்கும்போது அந்நாவலின் நினைவுகள் தோன்றின.

திரைப்படம் - 3- சத்யஜித் ரேயின் 'அபுர் சன்சர்' , 1959, (The World of Apu - அபுவின் உலகம்)

அவ்வப்போது டியூசன் கொடுத்து வாழ்க்கையினையோட்டிக் கொண்டிருக்கும் இளைஞன் அபு தன் அனுபவங்களை மையமாக வைத்து நாவலொன்றினையும் எழுதிக் கொண்டிருக்கின்றான். ஒரு காலத்தில் அதனைத் தன் நண்பன் மூலம் வெளியிடும் எண்ணம் அவனுக்கிருந்தது. நண்பனுக்கும் அந்த நாவல் மிகவும் பிடித்திருந்தது.

ஒருமுறை நண்பனுடன் அவனது கிராமத்துக்குச் செல்கின்றான். இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்கள் அபுவுக்குப் பிடித்தமான சூழல். அதனை அவன் நண்பனும் உணர்ந்திருக்கின்றான். அங்கு நண்பனின் உறவுக்காரப் பெண்ணொருத்திக்குத் திருமணம் நடக்கவுள்ளது. மாப்பிள்ளை ஊர்வலமாக பல்லாக்கில் அழைத்து வரப்படுகின்றார். மணமகள் அபர்ணா அவருக்காகக் மணப்பெண்ணுக்குரிய அலங்காரங்களுடன் காத்து நிற்கின்றார். மணமகளின் வீட்டு வாசலுக்கு முன்பு பல்லக்கு வந்து நின்றதும் மாப்பிள்ளை இறங்க அடம் பிடிக்கின்றார். அப்பொழுதுதான் மாப்பிள்ளை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்னும் விடயமே தெரிய வருகின்றது, மணமகளின் தாயார் திருமணத்தை நிறுத்தி விடுகின்றார். அவர்களது பாரம்பரியத்தின்படி மணமகள் குறிப்பிட்ட முகூர்த்தத்துக்குள் திருமணம் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் வாழ்க்கை முழுவதும் கன்னியாகவே வாழ வேண்டும். நண்பனின், மற்றும் ஊரவர்களின் ஆலோசனையின் படி அபுவை அபர்ணாவைத்திருமணம் செய்ய வறுபுறுத்துகின்றார்கள். ஆரம்பத்தில் வேலையெதுவுமில்லாத தன் நிலையைக் கூறி மறுக்கும் அபு இறுதியில் மணக்கச் சம்மதிக்கின்றான். மணமகள் அபர்ணாவாக வருபவர் நடிகை சர்மிளா தாகூர். அபுவாக நடித்திருப்பவர் செளமித்ரா சட்டர்ஜி. இருவருமே சிறந்த நடிகர்கள். பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பார்கள்.

பத்து திரைப்படங்கள் திரைப்படம் -3  - சத்யஜித் ரேயின் 'அபுர் சன்சர்' , 1959, (The World of Apu - அபுவின் உலகம்)

திருமணம் முடிந்து மனைவியை நகரத்துக்கு அழைத்துவரும் அபு தான் வாழ்ந்த சிறு அபார்ட்மென்டிலேயே வாழ்க்கையைத் தொடங்குகின்றான். ஆரம்பத்தில் சிறிது சோகத்துடனிருந்தாலும் அபர்ணா விரைவிலேயே தன்னைச் சுதாகரித்துக்கொண்டு மணவாழ்க்கைக்குத் தயார்படுத்திக்கொண்டுவிடுகின்றாள். இருவருக்கும் நிலவிய காதல் அதனை இலகுவாக்கி விடுகின்றது. கருத்தரித்து ஊர் செல்லும் அபர்ணாவை அனுப்பி விட்டுச் சோகத்துடன் காத்து நிற்கின்றான் அபு. அதன் பின் அவர்கள் வாழ்க்கை எவ்விதம் இருப்புப் புயலுக்குள் தாக்குப்பிடிக்கின்றது என்பதை விபரிப்பதுதான் மீதிக்கதை. அதனை நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்.

திரைப்படத்தின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் திரைக்கதை ஆகியவற்றை சத்யஜித் ராயே பொறுப்பேற்றிருக்கின்றார். இசையை புகழ்பெற்ற சிதார் வாத்தியக் கலைஞரனான ரவிசங்கர் ஏற்றிருக்கின்றார். ஒளிப்பதிவை சுப்ரடா மித்ரா செய்திருக்கின்றார். ராயின் திரைப் படங்களென்றால் இசை, இயக்கம் , ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு அனைத்துமே செம்மையாகவிருக்கும். இத்திரைப்படத்திலும் அவ்வாறேயிருக்கும். படமும் பாராட்டுகளுடன் இலாபத்தையும் வசூலில் ஈட்டிக்கொடுத்தது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இயக்கம், திரைக்கதை & தயாரிப்பு: சத்யஜித் ராய்
இசை: ரவிசங்கர்
ஒளிப்பதிவு: சுப்ரத மித்ர
மூலக்கதை: விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் நாவல் – அபராஜிதோ
நடிகர்கள்: Soumitra Chatterjee,Sharmila Tagore, Alok Chakravarty, Swapan Mukherjee

இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=QsUvGVMaV38

ngiri2704@rogers.com