அண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தப்பெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான ‘சுப்பர் சிங்கர் 3’ இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி ‘சுப்பர் சிங்கர் 3’ நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதே.
கட்டடக் கலைஞர் ஒருவர் கட்டடமொன்றினைவ வடிவமைக்கும்போது அதன் பாவனை, வடிவம், சூழல், நில அமைப்பு / தன்மை, அழகியல் அம்சங்கள், ஆகும் செலவு, கட்டிடப் பொருட்கள் .. எனப் பல்வேறு விடயங்களைக் கவனத்திலெடுத்துத்தான் அதனை வடிவமைப்பார். அவ்விதம் வடிவமைக்கப்பட்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் அதன் உண்மையான வெற்றி அதனைப் பாவிக்கும் மக்களின் திருப்தியிலேயே தங்கியுள்ளது. அவ்விதம் வெற்றியடைந்த கட்டடங்களைப் பாவிக்கும் மக்கள் அதனை கட்டடக்கலைஞரைப்போல் அல்லது கட்டடக்கலை விமர்சகரைப்போல் சிந்தித்து, அதன் கட்டடக்கலை அம்சங்களையெல்லாம் ஆராய்ந்து அதனைப் பாவிப்பதில்லை; இரசிப்பதில்லை. அந்தக் கட்டடம் எவ்விதம் அவர்களது பாவனைக்குத் திருப்தியினைத்தருகிறது, அதன் தோற்றம் போன்ற ஒரு சில விடயங்களை மையமாக வைத்தே அவர்களது கட்டடம் பற்றிய இரசனை இருக்கிறது. அதுபோல்தான் மேற்படி நிகழ்வில் பாடிய பாடகர்கள் பற்றிய மக்களின் மதிப்பீடுகளும். அவர்களைக் கவரும் அம்சங்கள் எல்லாம் சங்கீத விமர்சகர்களைக் கவருமென்பதில்லை. பின்னணிப் பாடகர்களைக் கவருமென்பதுமில்லை.
மேற்படி நிகழ்வில் பாடிய சத்தியப்பிரகாஷ் மிகவும் நன்றாகப் பாடியிருந்தார். ‘ஒரு நாள் போதுமா?’: மாண்டு இராகத்தில் பல்லவி தொடங்கும்; தொடர்ந்து பல்வேறு இராகங்களை வைத்து அற்புதமாகப் பாடியிருப்பார் ‘டாக்டர்’ பாலமுரளிகிருஷ்ணா. அப்பாடலை எடுத்து அழகாகப் பாடியிருப்பார் சத்தியப்பிரகாஷ். ‘கெளரி மனோகரி’ இராகத்தில் டி.எம்.எஸ் ஆல் திரையில் அற்புதமாகப் பாடப்பட்ட ‘பாட்டும் நானே! பாவமும் நானே!’ என்னும் பாடலை ஏற்கனவே சகபோட்டியாளாரான சாய்சரண் பாடியிருந்ததற்குப் பதிலடியாகவே சத்தியப்பிரகாஷ் ‘ஒரு நாள் போதுமா’வை பாடியிருந்தார். ‘பாட்டும் நானே! பாவமும் நானே!’ பாடலின் இறுதியில் ஆவர்த்தனங்களைக் குறைத்துக் கொண்டு டி.எம்.எஸ். பாடுவதும், அதற்கு ஈடுகொடுத்துச் சக வாத்தியக் கலைஞர்கள் வாசிப்பதும் நல்லதொரு அனுபவம். முடிவில் நடந்ததென்ன? திருவிளையாடல் திரைப்படத்தில் நடந்ததுதான் இங்கும் நடந்தது. கர்நாடக சங்கீத மேதையான சங்கீத கலாநிதியான பாலமுரளிகிருஷ்ணாவின் பாடலைத் திரையில் பாடிய வட நாட்டுச் சங்கீத வித்துவானான பாலையா ‘பாட்டும் நானே! பாடிய டி.எம்.எஸ்ஸிற்காகத் திரையில் குரல் அசைத்த சிவாஜி கணேசனிடம் போட்டி போட முடியாமல் ஓடி விடுவார். இன்னுமொன்றையும் பார்க்க வேண்டும். கர்நாடக சங்கீத மேதையான பாலமுரளிகிருஷ்ணாவால் டி.எம்.எஸ்ஸைப் போல் திரையில் பெரிதாக கோலோச்ச முடியவில்லை. அதுபோல் டி.எம்,எஸ்ஸால் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளை பாலமுரளிகிருஷ்ணாவைப் போல் செய்து கால் பதிக்க முடியவில்லை. ஏனென்றால் திரைபடத்துறையினைப் பொறுத்தவரையில் வெற்றி தோல்வியினை நிர்ணயிப்பவர்கள் இரசிகர்கள்; சங்கீத நுணுக்கங்களைப் புரிந்த மேதைகளல்லர். இதனால்தான் ‘யு டியுப்’பில் 400,000ற்கும் மேல் ‘ஹிட்ஸ்’களைப் ‘பாட்டும் நானே! பாவமும் நானே!’ பெற்றிருக்க பாலமுரளிகிருஷ்ணாவின் ‘ஒரு நாள் போதுமா?’வை 100,000ற்கும் அதிகமானவர்களே கேட்டிருக்கின்றார்கள்.
ஆக, வெற்றி தோல்வியினை நிர்ணியித்தவர்கள் தொலைக்காட்சி வழியாக, நேரில் கேட்டுக் கொண்டிருந்த சாதாரண இரசிகர்களே. அதனைப் புரிந்ந்து கொண்டு, இரசிகர்களின் விருப்பு, வெறுப்புகளைப் புரிந்துகொண்டு பாடியதன்மூலம்தான் சாயிசரணால் அதிகளவு வாக்குகளைப் பெற்று வெற்றி கொள்ள முடிந்திருக்கிறது. இரசிகர்களைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அடிப்படையிலேயே வாக்குகளைப் பதிந்திருப்பார்கள்; சபையிலிருந்த நீதிபதிகளைப்போல் அன்று நடந்த நிகழ்ச்சியினை மையமாகவைத்து மட்டும் அவர்கள் வாக்குகளைப் பதிந்திருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.
அரையிறுதியில் தோற்றதன்பின்னர் மீண்டும் கிடைத்த சந்தர்ப்பத்தை சாய்சரணும், சந்தோஷும் மிகவும் நன்றாகப் பயன்படுத்தியதன் விளைவுதான் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி. குறிப்பாக “பலே பாண்டியா” படப் பாடலான “நீயே உனக்கு நிகரானவன்” என்னும் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடலை இரு குரலில் பாடி அசத்தியிருந்த சாய்சரணை நினைத்துக் கொண்டிருப்பார்கள் இரசிகர்கள் வாக்குப் பதிவுகளின்போது. அது தவறா? போட்டியே அதற்காகத்தானே. சினிமாத்துறையில் பின்னணிப் பாடகர்களாகும் கனவுகளைத்தாங்கித்தானே எல்லோருமே இப்போட்டியில் கலந்து கொண்டிருந்தார்கள். மேற்படி போட்டி நிகழ்வானது கர்நாடக சங்கீதத்தை மையமாக வைத்து மட்டுமே நடத்தப்பட்டிருக்கவில்லை. ‘திருவிளையாடல்’ திரைப்படமும் அவ்வாறே உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தனது சங்கீத ஞானத்துடன், இரசிகர்களையும் மனதில்கொண்டு பாடல்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் சாய்சரண் , சந்தோஷ் போன்றவர்கள் வென்றிருக்கின்றார்கள். நிகழ்ச்சியின் நோக்கத்தை வைத்துப் பார்க்கையில் இத்தகைய வெற்றிகள் தவிர்க்க முடியாதவை. அதற்காக சாய்சரணின் திறனையினைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
– ஊர்க்குருவி –