தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (3 & 4)

அத்தியாயம் மூன்று: சிறிய குடும்பம்
     
வே.ம.அருச்சுணன் – மலேசியாமூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே பார்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும்  அமைதியில் மூழ்கியிருந்தன. வேலைக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் சாலையில் நிதானமுடன் சென்று கொண்டிருந்தன.பண வசதி படைத்தவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் வாழும் குடியிருப்பு என்ற ஒரு மதிப்பீட்டுக்கு உள்ளடங்கிப்போன இடம் என்பதால் அனாவசியப் பேர்வளிகளும் அரட்டை மன்னர்களும் அங்கு வெறுமனமே சுற்றித்திரியும் கோலங்களைக் காண முடியாது. காவல் துறையினரின் கண்காணிப்பினால் மட்டுமல்லாமல் குடியிருப்பைச் சுற்றி நவீன பாதுகாப்பு வேலிகள் பொறுத்தப்பட்ட அம்சங்கள் நிறைந்த அப்பகுதி யாதொரு பதற்றமும் இன்றி அமைதிப் பூங்காவாக மிளிர்ந்து கொண்டிருந்தது.  தனி நிலம் கொண்ட பங்களா வீடு என்பதால் வீட்டைச் சுற்றித் தாராளமாக இடம் இருந்தது. அந்தக் காலி இடத்தை அம்மா முழுமையாகப் பயன் படுத்தியிருந்தார். தம் ஓய்வு நேரத்தில் வீட்டைச் சுற்றி மரங்களையும் பூச்செடிகளையும் நட்டுவைத்திருந்தார். நடப்பட்டிருந்த அழகிய மரங்கள்,பல்வேறு பூச்செடிகள் அதிலும் குறிப்பாகச் செம்பரத்தைப் பூச்செடிகளில் பூத்திருந்த மஞ்சள், சிவப்பு, வெள்ளை,ஊதா வண்ணங்களில் பெரிய வகை மலர்கள்  இலேசான பனியில் நனைந்து காணப்படுகின்றன.

பூஞ்சோலையாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அங்கே மஞ்சள் கறுப்பு வர்ணம் கலந்த தேன்சிட்டுகள் கீச்சிட்டவாறு மலருக்கு மலர் பறந்து சென்று தேனை உறிஞ்சி சுவைத்துக் கொண்டிருந்தன. பல வண்ணத்துப் பூச்சிகளும் ஆங்காங்கே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களுக்குப் பறந்து சென்று தன் நுண்ணிய அலகுளால் தேனை உறிஞ்சிக் கொண்டிருந்தன.
 
தன் அறை சன்னல்வழி  வெளிப்புறக் காட்சிகளைத் தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறான். அம்மா ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கிறார். எந்த வேலையானாலும் அவருக்குச் சரியாக இருக்க வேண்டும். சிறிய குறை என்றாலும் எளிதில் அவர் விட்டுக்கொடுக்க மாட்டார். பிழையென்றால் கணவர் என்றாலும் சமரசத்துக்கு உடன்படமாட்டார்.
 
எல்லாவற்றிலும் நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும். ஒழுங்கு வாழ்க்கையில் அவசியம் இருக்க வேண்டும். அது  உயிர்  என்பார்.  குடும்பத்தில்  யாரும்  சோம்பல் படுவதை அவர் ஒருபோதும் ஏற்க மாட்டார். எறும்பைப் போன்று எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். இரவில் ஆறுமணி நேரம் தூங்கும் நேரத்தைத் தவிர அவர் ஓய்ந்திருக்கும் நேரத்தைப் பார்க்க முடியாது. 
         
“பார்த்திபா……!  இரவு நன்றாகத் தூங்கத் தெரிகிறது. படுத்த படுக்கை ஒழுங்கா எடுத்து வைக்க முடியாதா? கழுத வயசு ஆயுடுச்சினுதான் பேரு ஒழுங்கு உன்னிடம்  மருந்துக்குக் கூட ஒழுங்கு இல்லை. உன் வேலையை நீதானே செய்யனும்? பிறர் கையை எதிர்ப்பார்ப்பது சுத்தச் சோம்பேறித்தனம்!” என்று அம்மா மற்றொருநாள் படுத்தப் படுக்கையைச் சீர்செய்யாமல் போன அன்று பத்திரக்காளியாகக் காட்சியளித்த நாள் கொண்டு தனது வேலைகளைச் சுயமாகச் செய்து பழகிக் கொண்டான்.
 
அம்மா சொல்லும் போது மனம் வருந்தினான். ஆனால், பின்னாளில் பல்கைக்கழகத்தில் அவன் மூன்றாண்டுகள் கல்வி பயின்ற வேளை யாருடைய உதவியையும் எதிர்ப்பார்க்காமல் சுயமாகத் தன்   தேவைகளைப் பூர்த்திச் செய்துக் கொண்டபோது அம்மாவின்  தொலை நோக்கப் பார்வையை எண்ணி மனதுக்குள் பாராட்டினான்.சுயகாலில் நிற்க வேண்டியதன் அவசியத்தை அன்றே அவர் வலியுறுத்தியதால் விளைந்த பயன்களைப் பார்த்திபன் நடைமுறையில் உணர்ந்து கொண்டான். 
 
பெரியதாக வாயைப் பிளந்து கோட்டுவாய் விடுகிறான். இடது வலமுமாக தனது உடலை முறுக்கி சோம்பல் முறிக்கிறான். அம்மா மாலையில் வந்து பார்க்கும் போது படுத்த படுக்கை ஒழுங்காக எடுத்து வைக்காமல் இருந்தால் அவர் திட்டத் தொடங்கி விடுவார். எதற்கு வீண் வம்பு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவனாகப் படுக்கையைச் சீர்செய்கிறான்.   காலைக்கடனை முடிப்பதற்காகக் குளியல் அறையை நோக்கிச் செல்கிறான்.
          
அருகிலிருந்த சாப்பாட்டு அறையில் இருந்த மேசையைப் பார்க்கிறான்.அம்மா பசியாறிவிட்டு அவரது உணவு தட்டுகளைக் கழுவி ஒழுங்காகப் பாத்திரங்கள் வைக்க வேண்டிய இடத்தில் அடுக்கி வைத்துவிட்டு அலுவலகத்திற்குப்  புறப்பட்டிருந்தார். அப்போது  மணி ஆறேமுக்காலைத் தாண்டிக் கொண்டிருந்தது! வழக்கமாக அப்பா தினகரன் ஆறு மணிக்கே அவரது அலுவலகத்திற்குப் புறப்பட்டிருந்தார்!
             
கிள்ளான் பட்டணத்திலிருந்து நாட்டின் தலைநகர் கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் காலை ஏழு மணி தொடங்கி ஒன்பது மணி வரையில் ஏற்படும்  வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டால்  அரைமணி நேரத்தில் அமைய வேண்டிய விரைவுப் பயணம் இரண்டு மணி நேர ஆமைப் பயணத்திற்குள்ளாகி,வாகனத்தை இயக்குவதையே விட்டுவிடலாம் என்று எண்ணத்தோன்றும். வீணான  மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கவே பெற்றோர் இருவரும் நேரத்திலேயே அலுவலகத்திற்குப் புறப்பட்டு விட்டனர்.
 
எட்டு  மணிக்குப்  பார்த்திபனுக்கு  வேலை  தொடங்கிவிடும். சுவர்க்கடிகாரத்தைப்  பார்க்கிறான் மணி ஏழரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அலுவலகம் செல்ல இன்னும் அரை மணி நேரமிருந்தது. ஏன்தான்   இன்றையப்  பொழுது  இவ்வளவு  சீக்கிரத்தில் விடிந்ததே என்று   எண்ணிக் கொள்கிறான்! உற்சாகத்தைத் தொலைத்தவன் போல் அலுத்துக் கொள்கிறான்.
 
குளித்து உடை  மாற்றம் செய்துக்  கொண்டு சாப்பாட்டு மேசைக்கு   வருகிறான். மேசை மீது அம்மா கலக்கி மூடி வைத்திருந்த நெஸ்க்காப்பி சில்லிட்டியிருந்தது. ரொட்டி,அதோடு,ஜேம்,காயா,பட்டர் என்று பசியாறிக் கொள்ள பலவித  இனிப்புகள்  வைத்திருந்தார். தவறாமல் சாப்பிடப் பழங்களும் இருந்தன. மகன் வெறும் வயிற்றோடு வேலைக்குச் சென்றால் தெம்போடு வேலை செய்ய முடியாது என்று எண்ணம் அவருக்கு.
                       
ஒரே மாதிரியான உணவு. உண்டு சலித்துப் போன உணவு வகைகளை மீண்டும் அன்றையக் காலைப் பொழுதில் பார்த்ததும் சலித்துக் கொள்கிறான்.இருந்த பசிக்கூட எங்கோ ஓடி மறைகிறது!  

 


 

 அத்தியாயம் நான்கு: காலையில் வெற்றி
 
குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து உள்ளே  இருந்த  போத்தலிலுள்ள  குளிர்ந்த  நீரை எடுத்து  வாயில்  ஊற்றிக்  கொள்கிறான்! வயிற்றில் சில்லென்று  இறங்கிய நீர் அவனுக்குச்  சிறிதளவு  இதமான உணர்வைக் கொடுத்திருக்க  வேண்டும்.தன்னுள்  எதையோ  நினைத்துக் கொண்டவனாகத் தலையை ஆட்டிக்கொள்கிறான் .
 
ஆரோக்கிமான  காலை உணவு  அன்றையப்  பணிகளைத்  தொடங்க எவ்வளவு  முக்கியம்  என்பதை  உணர்ந்து கொண்டவனாக இருந்தும் எந்தவொரு  சத்துமில்லா உணவு  எதனையும்  உண்ணாமல்  காலியான  வயிற்ரோடு அலுவலகம் செல்வதை  எண்ணி நொந்து கொள்கிறான்! நேற்று இரவு பத்து மணிக்கு படுக்கச் செல்லும் போது ஒரு கிளாஸ் பால் அம்மா வற்புறுத்திக் குடிக்கக் கொடுத்ததுதான்!
                    
ஆறிப்போன நெஸ்க்காப்பியைக் கீழே ஊற்றிவிட்டு கிளாசைச் சுத்தமாகக் கழுவிப் பாத்திரங்கள் வைக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக  வைத்தான்.மேசை மீது இருந்த மற்ற பொருட்கள் எதனையும் விட்டுவைக்காமல் அப்புறப்படுத்திவிட்டு மேசையைச் சுத்தமாக துடைத்தான்.அம்மா பார்த்தால் சந்தோசப்படும்  சூழல் தெரிந்த பின்னரே,  மனதுக்குள் சிரித்தபடி அறையை விட்டு அகலுகிறான்.             
வாசல் கதவைக் பூட்டிச் சாவியைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்  கொள்கிறான் . வாசலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  காரின்  கதவைத் திறந்து  உள்ளே  உட்கார்ந்து காரை இயங்குகின்றான்.
                
அண்மையில் வாங்கியப் புத்தம் புதியக் கார்    தயார் நிலையில் இருப்பதைப்  போல், எந்தவொருப்  பிரச்னையும் இல்லாமல்  காரின்  இயந்திரம்  இயங்கத்  தொடங்குகிறது. சிறிது நேரம்  இயந்திரம் நிதானமாக  இயங்கிக்  கொண்டிருக்கிறது. பார்த்திபன்  அந்தக் காரின்  இயந்திரத்தின் ஓசையை மிகக் கவனமுடன் செவிமடுக்கிறான்.

கார் சரியான நிலையில் இருப்பதை உறுதிச் செய்வதற்குக் காலையில் காரின் ஓசை சரியான முறையில் இயங்குவது முக்கியம் என்பதை அறிந்து எஞ்சினைச் சிறிது நேரம் ஓடவிடுகிறான்.அது சீராக ஓடுகிறது. முகத்தில் சிறு புன்னகை தவல்கிறது. அவன் அதிகம் விரும்பும் கார் சரியாக இயங்கியது என்றால் அவனைப் பொறுத்தமட்டில்  காலையில் கிடைக்கப் பெற்ற முதல் வெற்றியாகும்!     தன் வயிற்றுப் பசியைப் பற்றிக்  கூடப்  பெரிதுப்  படுத்திக்  கொள்ளாதவன்   காரின்  இயந்திரத்தில் எந்தவொரு  கோளாறும்  ஏற்பட்டுவிடக்கூடாது  என்பதில்  மிகவும்  அக்கறையுடன்  செயல்படுகிறான்.எந்தப் பிரச்னையும் காரில்  இல்லாததை  உறுதிப்படுத்திக்  கொண்டவன்  கையிலுள்ள   கருவியின்  விசையை அழுத்துகிறான். வீட்டின் நுழைவாயிலிருந்த கேட் ஒலியின்றி  தானாகத் திறந்து  கொள்கிறது.
         
அடுத்த  சில வினாடிகளில்  பார்த்திபன்  கார் கேட்டை நோக்கி   மெதுவாக  நகர்கிறது! கார் கேட்டைத் தாண்டியவுடன்  மீண்டும். கேட்  தானாக  மூடிக் கொள்கிறது ! நவீன  வாழ்க்கை மனிதனைச்  சொகுசாக வாழ தடம் பதித்துள்ளது! நவீனக் கண்டுபிடிப்புகள் இன்று மனிதர்களைச் சோம்பேறிகளாக  வாழவும் துணைப் போய்க் கொண்டிருக்கின்றன என்றால் அது மிகை இல்லைதானே !
 
அவன், ஒரு கட்டிளங்காளை இருபத்தைந்து வயதைக் கடந்து கொண்டிருந்தான்.குடும்பப் பொறுப்பு ஏதுமின்றி காலத்தை வெறுமனமே ஓட்டிக் கொண்டிருக்கிறான்! பல்கலைக்கழகப் படிப்பு முடிந்தவுடன்  தனியார்   நிறுவனம்   ஒன்றில்   சுலபமாக   வேலையில்  சேர்ந்துவிட்டான். ஆரம்பச் சம்பளமே மூவாயிரம் ரிங்கிட்டை நெருங்கியது!
 
பெற்றோர்  இருவரும்  பொறுப்பான  வேலைகளில்  தனியார்  நிறுவனங்களில் தத்தம் பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். காலையில்   கடைசியாகப் பார்த்திபன் வீட்டைப் பூட்டிவிட்டு தன் பணிமனைக்குச் செல்கிறான். மீண்டும் அம்மூவரும்   வழக்கமாக மாலையில்  இருட்டும் வேலையில்தான்  இல்லம் திரும்புவார்கள்!
        
அலுவலகத்தில்  பணியுனூடே  உணவு உண்டுவிட்டால், அவர்களுக்கு வீட்டில் உணவு  உண்ணும்  நிலை இருக்காது.பெரும்பாலும் பெற்றோர் நேரம் கடந்தே  இரவில் வீடு திரும்புவார்கள். சமயத்தில்  மாலையில்  நேரத்திலேயே  இல்லம் திரும்பிவிட்டால்,  மிக எளிமையான  சமையல் மட்டுமே வீட்டில் நடக்கும்.பார்த்திபன் தினம் மாலை வேளைகளில் நேரத்திலேயே வேலை முடிந்து வீடு திரும்பிவிடுவான்.பெற்றோர் வீடு திரும்பும் வரும் வரையில் வீட்டில் தனியாகவே இருப்பான்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது மூலமே அவன் தனது பொழுதைப் போக்குவான்.

[ தொடரும்]

arunveloo@yahoo.com