வாசிப்பும்,யோசிப்பும் 301: நினைவில் நிற்கும் எஸ்.பொ!

எழுத்தாளர் எஸ்.பொ

எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் ஒருமுறை (2000) கனடா வருகை தந்திருந்தார். வருவதற்கு முன்னர் எனது முகவரிக்கு எனக்குக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதிலவர் தன் கனடா விஜயம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தொடர்ந்து செய்யவுள்ள உலகப்பயணம் பற்றியும் கூறியிருந்தார். அதிலவர் கூறியிருந்தவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:

“படைப்பிலக்கியத்திலே நீங்கள் அடைந்துவரும் முன்னேற்றமும் வெற்றியும் மனசுக்குக் குளிர்வினைத்தருகின்றது. நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமென நம்புகின்றேன். நான் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் பிற்பகுதியிலே கனடா வரத்திட்டமிட்டுள்ளேன். பத்து நாள்கள் Toronto வில் தங்கலாம் என்பது திட்டம். அங்கு வாழும் தமிழ் நேசங்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும் நேரிலே சந்தித்து அளவளாவதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். இது தமிழ்ப்பயணம்.

இலக்கியப்பயணம். குழு நலன்களை பேசுவதற்கப்பாற்பட்ட முதிர்ச்சி அடைந்து விட்டேன். இந்நிலையில் படைப்பிலக்கியத்திற்குச் செழுமை சேர்க்கும் இளவல்கள் கூட்டத்தினைச் சந்திப்பதற்கே அதிகம் விரும்புகின்றேன். …. கனடாவிலிருந்து லண்டன் போய், அங்கிருந்து சில மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று , சென்னையை அடைவது திட்டம். தற்பொழுது நான் அதிக காலத்தினைச் சென்னையிலேயே செலவு செய்கின்றேன். உலகப்படைப்பிலக்கிய மையம் ஒன்றினை இங்கு நிறுவியுள்ளேன். புத்தாயிரத்திலே புலம் பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளே இலக்கிய வீரியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்கிற சுவிஷேசத்தின் பிரசாரகனாயும் சென்னையில் வாழ்கின்றேன்.”

இவ்விதம் கூறியிருக்கும் எஸ்.பொ அவர்கள் கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு கூறியிருப்பார்: “இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றினைத் தக்கபடி ஆவணப்படுத்தும் பாரிய நூலொன்றினையும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதிலே குறிப்பிடும் தகவல்களைச் செப்பம் பார்ப்பதற்கும் இந்தப்பயணத்தினைப் பயன்படுத்துதல் நோக்கம்”

எஸ்.பொ அவர்களின் இக்கடிதம் அவர்பால் உண்மையில் பெருமதிப்பினையே ஏற்படுத்தியது. அவர் ‘டொராண்டோ’ வந்திருந்தபொழுது அவர் பங்குபற்றிய நிகழ்வுகளுக்குச் சென்றுள்ள அதே சமயம், அவரை அவரது உறவினர் வீட்டில் சென்று சந்தித்து , மனந்திறந்து உரையாடியுமுள்ளேன். அப்போது அவர் தனது ஆரம்ப நாட்களைப்பற்றி நினைவு கூர்ந்துமிருக்கின்றார். இக்கடிதத்தை 13.7.2000 அன்று எழுதியிருக்கின்றார். இதற்கு முன்னர் இன்னுமொரு கடிதத்தினையும் (19.8.1995 என்று திகதியிடப்பட்ட) கண்டெடுத்தேன். அதிலவர் ” தாங்கள் ஈழத்தமிழர்தம் தமிழ் இலக்கியப் பணிகளிலே ஊன்றியுள்ள அக்கறை என் நெஞ்சைக் குளிர்வித்தது. ……உங்கள் தொடர்பினையும், அன்பினையும் மிகவும் மதிக்கின்றேன்” என்று கூறியிருப்பார்.

சக தோழன் ஒருவனுடன் உரையாடியதுபோல் என்னுடன் அவர் உரையாடிய தருணங்களையும், இம்மடல்களையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

எஸ்.பொ. அவர்கள்ன் கடிதம்.

முகநூலில் இதற்கான எதிர்வினைகள்:

தியாகராசா ராஜராஜன்:  எஸ் பொ இலக்கிய வெளியில் கலகக்காரராகவே அறியப்பட் டவர். முருகபூபதி ஐயா எனக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். அப்படிப்பட்டவர்களை நேசதிற்குள் வைத்திருப்பதும் ஒரு கலை தான் கிரிதரன்.

கிரிதரன்: தியாகராசா ராஜ ராஜன் , உண்மையில் அவருடன் நேரடித்தொடர்பு எதுவுமிருந்ததில்லை. என் நூலொன்றினை அனுப்பியிருந்தேன். அதிலுள்ள முகவரியைப்பார்த்து எஸ்.பொ எனக்கு எழுதிய கடிதமிது. மேலும் தாயகம் சஞ்சிகை, பத்திரிக்கையில் வெளியான என் படைப்புகள் வாயிலாக அவர் என்னை அறிந்திருப்பார் என எண்ணுகின்றேன். மேலும் அவரும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தொகுத்த ‘பனியும் பனையும்’ தொகுப்பிலும் என் ‘ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை’ அடங்கியிருந்தது. இன்று மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் காரணமாக அரிதாகி விட்டன இவ்வகையான கடிதங்கள். இந்நிலையில் எஸ்.பொ அவர்களின் கையெழுத்திலுள்ள இக்கடிதம் ஒரு பொக்கிசமே.

கிரிதரன்: தியாகராசா ராஜராஜன், ஆனால் இக்கடிதத்தில் அவர் “இது தமிழ்ப்பயணம். இலக்கியப்பயணம். குழு நலன்களை பேசுவதற்கப்பாற்பட்ட முதிர்ச்சி அடைந்து விட்டேன்” என்று கூறுகின்றாரே கவனித்தீர்களா? கலகக்காரராகவே அறியப்பட்டவரின் பரிணாம மாற்றமல்லவா இது? அவ்வகையில் இக்கடிதத்திலுள்ள அவரது மேற்படி கூற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

தியாகராசா ராஜராஜன்:  உண்மைதான். காலம் ஒரு சிறந்த ஆசான். அனுபவத்திராட்ச்சிகள் பலரை முற்றுமுழுதாக மாற்றியமைத்து இருக்கின்றன.

பேனா மனோகரன்: சுவிஷேசப் பிரச்சாரகனாக எஸ.பொ.வைச் சென்னை மித்ர அலுவலகத்தில் சந்தித்தேன்.அவருடைய நூலொன்றில் கையெழுத்திட்டுத் தந்தார்.2000 க்குப் பின்னராக இருக்கலாம்.ஆண்டு ஞாபகம் இல்லை.

ராஜாஜி ராஜகோபாலன்: உங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் “இலக்கிய ஊழியர்கள்” என்றொரு பதம் பாவித்திருக்கிறார், சொக்கிப்போனேன்.

giri2704@rogers.com