வாசிப்பும், யோசிப்பும் 309: தற்போதுள்ள இலங்கைச் சூழல் பற்றி…

வாசிப்பும், யோசிப்பும் 309: தற்போதுள்ள இலங்கைச் சூழல் பற்றி...தற்போதுள்ள இலங்கைச் சூழலில் மீண்டும் மகிந்த ராஜபக்சவிடம் சரண்டைந்திருக்கின்றார் மைத்திரி. இலங்கை அரசியலைப்பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க துரதிருஷ்டம் பிடித்த அரசியல்வாதி. அன்று யுத்த நிறுத்தம் கொண்டுவரக் காரணமாகவிருந்தார் அவர். ஆனால் அவர் துரதிருஷ்டம் சந்திரிகா அம்மையார் அவர் தலைமையிலான பாராளுமன்றத்தைக் கலைத்தார். மீண்டும் மோதல்களுக்கு அடிகோலினார். அடுத்து கைக்கெட்டிய தூரத்திலிருந்த ஜனாதிபதிப்பதவியை விடுதலைப்புலிகள் தேர்தலைப்பகிஸ்தரித்ததன் விளைவாக ஏற்பட்ட சாதகச்சூழலில் மகிந்த ராஜபக்சவிடம் பறிகொடுத்தார். பின்னர் யுத்தத்தை வென்ற துட்ட(:-) காமினியாக வெறி பிடித்தாடிக்கொண்டிருந்த மகிந்தாவின் ஆட்சியிலிருந்து , உபகண்ட. உலக அரசியற் சக்திகளுடன் இணைந்து , ஶ்ரீலங்கா கட்சியை உடைத்து நல்லாட்சி என்னும் பெயரில் மைத்திரியுடன் இணைந்து இலங்கையைக் கைப்பற்றினார். ஆனால் அதனையும் இன்று மைத்திரியின் முதுகு குத்தலால் இழந்து நிற்கின்றார். அன்று சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்குச் சகல நிறைவேற்றதிகாரங்களும் இருந்தன. ஆனால் இன்று மைத்திரி சிற்சேனாவின் ஜனாதிபதிப்பதவியை பத்தொன்பாதாவது திருத்தச் சட்டம் சிறிது கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அவர் பிரதமரைப் பதவி நீக்கம் செய்தது இலங்கை அரசியல் அமைப்புக்கு முரணானது என்றே கருதுகின்றேன். இது பற்றி ஜெயம்பதி விக்ரமரட்ன (Jayampathy Wickramaratne ) நல்லதொரு கட்டுரையினைக் ‘கொழும்பு டெலிகிறாப்’ பத்திரிகையில் ‘The Removal Of The Prime Minister: Why It Is Unconstitutional’ என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். இலங்கை அரசியல் அமைப்புச்சட்டத்தின் பல்வேறு சரத்துகள் பற்றி ஆராய்ந்து அவர் இம்முடிவுக்கு வந்திருக்கின்றார். அவரது கட்டுரைக்கான இணைய இணைப்பு: https://www.colombotelegraph.com/index.php/the-removal-of-the-prime-minister-why-it-is-unconstitutional/

‘இந்நிலையில் அலரி மாளிகையில் இன்னும் தங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன் மக்கள் ஆதரவை வெளிப்படுத்த அழைப்பு விடுத்த மக்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியையே அளித்துள்ளது. இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ஆதரவளித்திருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களைப்பொறுத்தவரையில் தற்போதுள்ள சூழலில் எவ்விதம் செயற்பட  வேண்டும்?

இச்சமயத்தில் ஒன்றை நாம் மறக்கக் கூடாது? அது 2015ம் ஆண்டுக்கு முற்பட்ட சூழல். இலங்கையின் அனைத்து மக்களும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இருண்ட காலகட்டம் அது. இருண்ட அக்காலகட்டத்தில் வெள்ளை வான் ஆட் கடத்தல்களும், காணமல் போதல்களும் அன்றாட வாழ்வின் அம்சங்களாகவிருந்தன. இலங்கைத் தமிழ்ப்பிரதேசங்களில் படையினரின் ஆதிக்கம் கடுமையாகவிருந்த காலகட்டம் அக்காலகட்டம்.  யுத்த முடிவுக்குப் பின்னான காலகட்டத்தில் அபிவிருத்திகள் நடைபெற்றன . உண்மைதான் ஆனால் அவை மக்கள் மீதுள்ள உண்மையான பற்றினால் அல்ல. அவற்றின் மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான ஊழற்பணத்துக்காக அவை நிறைவேற்றப்பட்டதாகக் கருத வேண்டும். அவ்வூழல் செயற்பாடுகளுக்கான வழக்குகள் பல இன்னும் நிலுவையில் நீதிமன்றங்களில் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.

இவ்விதமானதொரு சூழலிலிருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் மக்கள் முன்பைப்போல் பயந்து நடமாடும் சூழல் நீங்கியிருந்தது என்பதையும் மறக்கக் கூடாது. பாராளுமன்ற அரசியல் நடவடிக்கைகளினூடாகத் தமிழ் அரசியல்வாதிகள் துணிச்சலுடன், எவ்வித அச்சமுமற்று உரத்துக்குரலெழுப்பும் சூழல் உருவாகியிருந்தது. 2015ற்கு முற்பட்ட ஆட்சிக்காலத்தில் இவ்விதமான சூழல் இருக்கவில்லை என்பதையும் மறக்கக் கூடாது.

தற்போதுள்ள அரசியற் சூழல் தென்னிலங்கையில் பலரையும் ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவாக மாற்றியுள்ளது. தென்னிலங்கை ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகள் பலவற்றுக்குக் கருத்துகளை இடும் சிங்கள வாசகர்கள் பலரின் கருத்துகளிலிருந்து இதனையே உய்த்துணர முடிகின்றது. அவர்களில் ரணிலை இதுவரை எதிர்த்தவர்கள் கூட தற்போது அவரை ஜனாதிபதி பதவி நீக்கிய செயலானது இலங்கை அரசியல் அமைப்புச்சட்ட விதிகளுக்கு முரணானது என்றே கருதுகின்றார்கள். மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினரின் வாக்குகளையும் பெற்று  பதவிக்கு வந்தவர் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா என்பதையும் மறந்துவிடக்கூடாது.

உண்மையில் எதற்காக 2015இல் மக்கள் அவருக்கு வாக்களித்தார்களோ ,அவ்வாக்குகள் மூலம் பதவிக்கு  வந்த அவர் இன்று அம்மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராகச் செயற்பட்டிருக்கின்றார். ஊழல் அரசியல்வாதிகளுக்கெதிராக மக்கள் வாக்களித்தார்கள். அவ்வூழல் அரசியல்வாதிகளுக்கெதிரான வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன; விசாரணையிலுள்ளன. இந்நிலையில் அவ்வரசியல்வாதிகளை  மீண்டும் பதவியில் அமர்த்தியிருப்பது நியாயமானதல்ல.

என்னைப்பொறுத்தவரையில் 2015ம் ஆண்டில் தமிழ் மக்கள் எக்காரணங்களுக்காக மைத்திரி -ரணில் கூட்டணிக்கு ஆதரவளித்தார்களோ, அதே காரணிகளுக்காக மைத்திரி -மகிந்தா கூட்டணிக்கெதிராகவும் செயற்பட வேண்டும். மாறாகக் குதிரைப்பேரங்களுக்கு அடிபணிந்து மகிந்தாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டால் எவ்விதம் 2005 ஜனாதிபதித்தேர்தலைப் புறக்கணித்து ஆட்சியை மகிந்தா பெறக்காரணமாகவிருந்தார்களோ, அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கு, மானுட அழிவுகளுக்குக் காரணமாகவிருந்தார்களோ அது போன்றே எதிர்காலத்தில் மகிந்தா – மைத்திரி அரசின் மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாகவிருப்பார்கள்.

இவை என் கருத்துகள். தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். அவை எதிரானவையாக இருந்தாலும் அவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். ஆனால் அவை நட்புரீதியிலான தர்க்கங்களாக இருப்பதையும் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி கார்ட்டூன் பாவனைக்காக – thinkworth.wordpress.com

ngiri2704@rogers.com