கனடா மூர்த்தி என்று அறியப்படுகின்ற மு.நாராயணமூர்த்தி பல்துறை திறமை கொண்டவர். கதை, கட்டுரைகள் எழுதுவதில் , ஆவணப்படங்கள் தயாரிப்பதில், ஓவியம் வரைவதில், நகைச்சுவை ஆக்கங்கள் படைப்பதில், ஒலி(ளி) பரப்பாளராகப் பணி புரிவதில் என்று பல்துறை ஆற்றல் கொண்ட இவரை நான் முதன் முதலில் கண்டது யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த காலகட்டத்தில்தான். அப்பொழுது இவர் சமயத்தில் ஈடுபாடு மிக்க ஒருவராக நினைவிலுள்ளார். தேவாரங்கள் கூடப் பாடியதாக ஒரு நினைவு. ஆனால் அப்போது இவரை நான் பார்த்ததோடு சரி. கதைத்தது இல்லை. இவர் எனக்கு ஒரு வருட ‘சீனியர்’. அதன் பின்னர் நான் இவரைக் கனடாவில் சந்தித்தபோது ஆளே மாறிப்போயிருந்தார். ருஷ்யாவில் புலமைப்பரிசு பெற்று சென்று பொறியியல் படித்து முடித்து திரும்பியிருந்த ஒருவராக, சமூக, அரசியலில் நாட்டமுடையவராக, இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவராக மாறிப்போயிருந்தார்.
தாயகம் பத்திரிகை(+ சஞ்சிகை) வெளிவந்த போது அதில் இவரது கை வண்ணத்தைக் கண்டு வியந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில்தான் இவரை முதன் முறையாகச் சந்தித்திருக்கின்றேன். 260 பார்ளிமென்ற் வீதித் தொடர்மாடிக் கட்டடத்தில் கனடாவில் முதன் முதலாகச் சந்தித்ததாக நினைவ. அப்பொழுது தாயகம் பத்திரிகையில் எனது தொடர்கதைகள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதிலொன்று ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’ அதற்கு ஓவியம் வரைந்தவர் இவரே என்பதைப்பின்னரே அறிந்து கொண்டேன். அதுபோல் தாயகம் பத்திரிகையில் (+சஞ்சிகை) வெளிவந்து பலரின் கவனத்தையும் கவர்ந்துகொண்டிருந்த பகுதிகளில் ஒன்று ‘முனியின் பதில்கள்’. சுவையான முனியின் பதில்களை இரசித்தவர்களில் நானுமொருவன். அம் முனி இவர்தானென்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். அம்முனிவரின் படத்தை வரைந்தவரும் இவர்தான் என்பதையும் பின்பு அறிந்தேன்.
கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகள் பலருடன் புகைப்படமெடுப்பதில் விருப்புள்ளவர் இவர். அப்புகைப்படங்கள் அனைத்தையும் தனியொரு தொகுதியாக வெளியிடலாம். எப்பொழுது கண்டாலும் கலகலப்பாகச் சிரித்துப்பேசும் ஆளுமை மிக்கவர்களிலொருவர் கனடா மூர்த்தி. அண்மையில் நூலகம் தளத்தை மேய்ந்துகொண்டிருந்த பொழுது எழுபதுகளில் வெளியான ‘செங்கதிர்’ சஞ்சிகையில் வெளியான இவரது அறிவியற் கட்டுரையான ‘அணு ஆக்கத்திற்கா அல்லது அழிவுக்கா’ கண்டேன். அது பற்றி இவர் அடுத்து வந்த செங்கதிர் சஞ்சிகையில் எழுதிய வாசகர் கடிதத்தையும் கண்டேன். அதிலிருந்து இவரது அணு பற்றிய கட்டுரையே இவர் எழுதிப்பிரசுரமான முதலாவது கட்டுரை என்பதை அறிய முடிகின்றது.
என்றும் மார்க்கண்டேயராகக் காட்சியளிக்கும் கனடா மூர்த்தி அவர்களிடம் ஒரு கேள்வி: ‘உங்கள் இளமையின் இரகசியத்திற்கான காரணம்தான் யாதோ?’ 🙂
ngiri2704ம்@rogers.com