வாசிப்பும், யோசிப்பும் 325 : எழுத்தாளர் பூர்ணிமா கருணாகரனின் கவிதைத்தொகுப்பு – ‘பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்!?

எழுத்தாளர் பூர்ணிமா  கருணாகரனின் கவிதைத்தொகுப்பு -  'பெட்டைக் காகங்களிடுm குயில் குஞ்சுகள்!?'  – பூர்ணிமா கருணாகரனின் பெப்ருவரி 23, 2019 , ஸ்கார்பரோவில் (கனடா) நடைபெறுவுள்ளதாக அறிகின்றோம். நிகழ்வு வெற்றியடைந்திட வாழ்த்துகள். –


எழுத்தாளர் பூர்ணிமா  கருணாகரன்எழுத்தாளர் பூர்ணிமா  கருணாகரனின் கவிதைத்தொகுதியான ‘பெட்டைக் காகங்களிடு குயில் குஞ்சுகள்!?’ என்னும் கவிதைத்தொகுப்பினை முகநூல் நண்பர் யோக  வளவன் தியா மூலம் கிடைத்தது. அதற்காகக் கவிஞருக்கு என் நன்றி. பொதுவாக நூல் மதிப்புரைக்காக நூல்களைத் தருபவர்கள் மதிப்புரைக்காகத் தம் நூல்களை அனுப்புவார்கள். ஆனால் கனடாவிலோ வசதியாக வாழ்பவர்கள் தம் நூல்களையும் வாங்கி அவற்றுக்கான மதிப்புரையினையும்  எழுத வேண்டுமென்று நினைப்பார்கள். இந்நிலையில் எங்கோ தொலைவிலிருக்கும் கவிஞர் பூர்ணிமா கருணாகரன் தன் நூலினை எனக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றார். அதற்காக அவருக்கு மனப்பூர்வமான நன்றி. நூலினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் பெயரினை நூலில் காணவில்லை. அதனால் நூலை நூலாசிரியரே  எடிசன் அச்சகம் உதவியுடன் நூலினை வெளியிட்டுள்ளார் என்று கருதுகின்றேன். எடிசன் ‘பிரிண்டர்ஸ்’ மூலம் வடிவமைப்புச் செய்யப்பட்டு நூல் வெளிவந்துள்ளதை நூலிலுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. பளபளப்புத் தாள்களில் நூல் சிறப்பாக வெளிவந்துள்ளது. வாழ்த்தப்பட வேண்டியதொன்று.

நூலினை மேலோட்டமாக வாசித்தபோது அவதானித்த சில விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்: ஆசிரியர் மீதான அவரது தந்தையாரின் ஆளுமை ஏற்படுத்திய பாதிப்புகளையும், அவற்றின் விளைவாக ஆசிரியரின் எண்ணங்களிலுதித்த கருத்துகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் நூலின் வாசிப்பின்போது அவதானித்தேன். இவை தவிர நூல் ஆசிரியரின் பார்வையிலான பெண்கள் பற்றிய் நோக்கு பெண் உரிமை பற்றி விரிவாக அறியப்பட்டு, புரியப்பட்டுள்ள நிலையில் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிடலாம். கவிதைகளின் ஏனைய கூறு பொருட்களாக மனிதத்துவம், பெண் கல்வி, தாய்மை, தந்தைமை, பெண்ணுரிமை, விதவைகளின் நிலை, மானுட வாழ்க்கை, சமூகச்சீரழிவுகள் காரணமாக முதிர்கன்னிகளாக வாடும் பெண்களின் நிலை, புகலிடத்தமிழர்தம் வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்புகள், முன்னாட் போராளிகளின் நிகழ்கால நிலை, முதியவர்களின் நிலை, மானுட சமுதாயத்தில் தொடரும் வன்முறை என்று பல்வேறு விடயங்களைப்பற்றிய கவிஞரின் எண்ணங்கள், அறச்சீற்றங்கள் கவிதைகளாகியுள்ளன.

தொகுப்பின்  முதற் கவிதை அவரது தந்தையாரின் ஆளுமையினை, அவ்வாளுமை கவிஞரின் மீது ஏற்படுத்திய பாதிப்பினை வெளிப்படுத்துகின்றது. கூடவே தந்தையாருக்கு நடந்த கொடுமையினையும் எடுத்துக்கூறுகின்றது. முதலாவது கவிதையான ‘அப்பாவின் கை பிடித்து..’ தந்தையின் ஆளுமையினைப் பற்றி விபரிக்கையில் அவரது தலைமைத்துவப்பண்பினை விபரிக்கின்றது. அவ்விதம் விபரிக்கையில் அவ்வாளுமை கவிஞருக்குக் கற்றுத்தந்த அப்பண்புகளையும் எடுத்துரைக்கின்றது:

” தலைவன் என்பவன் எப்படி
தலைமைத்துவம் என்பது
எப்படி என்பதைக்
கற்பித்து வந்தவன் நீ”

“மிருக வதை
வேள்வித் தடை
அன்றே
அதை
உரத்துச் சொன்னவன் நீ” என்று கூறும் கவிஞரின்  வரிகள் தந்தையாரின் மிருக வதைக்கெதிரான குரலினையும் எடுத்துக்காட்டுகின்றன. கீழுள்ள வரிகள் தந்தையாரின் மேலுமொரு முக்கிய பண்பொன்றினை எடுத்துரைக்கின்றது.

“வீரத்தை உன் பேச்சில் காட்டி
விவேகம் செயலில் காட்டி
வணங்காய் முடியாய்
வாழ்ந்து மடிந்தவன் நீ”

இவ்விதமாக வணங்காமுடியாய் வாழ்ந்தவர் கவிஞரின் தந்தை. இவ்விதமாகத் தந்தையாரின் ஆளுமை. அது ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றிக் குறிப்பிடும் கவிதை இன்னுமொரு விடயத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது போர்ச்சூழலில் அவர் தந்தையை இழந்தது எப்படி, இழப்பதற்குரிய காரணம் அல்லது காரணங்கள் எவை என்பவை பற்றியெல்லாம் கவிதை ஆராய்கின்றது. பின்வரும் வரிகள் கவிஞரின் தந்தைக்கு ஏற்பட்ட நிலையினை விபரிக்கின்றது.

” எதிரிகளின் முன்னால் மரணபயம் தாண்டி மரணித்தவன் நீ ” இவ்விதமான அவரது  ஆளுமையே அவரது முடிவுக்கும் காரணமாக அமைந்திருந்தது. அதனைத்தொடர்ந்து  மேற்படி கவிதையில் தொடர்ந்துவரும் வரிகள்,

‘உன்னைக் கொன்றதால்
அவர்கள் எதிர்காலம்
தன்னை இழந்தார்கள்”

இவ்வரிகள் தந்தை கொல்லப்பட்டதைக் கூறுகின்றது. ஆனால் கொன்றவர்கள் யார் என்பதைக்கூறவில்லை. அரச படைகளினால் கொல்லப்பட்டாரா? அல்லது போராட்ட அமைப்பொன்றினால் கொல்லப்பட்டாரா ? என்பதை இவ்வரிகள் தெரிவிக்கவில்லை.  ஆனால் தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதையான ‘யார் பெரியவன்?’ என்னும் கவிதையில் கொன்றவர்கள் யார் என்பதை ஊகிக்கும் வகையில் சொற்பதங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. ‘யார் பெரியவன்?’ கவிதையைக் கவிஞரின் தந்தையின் சுருக்கமான வாழ்க்கைச் சரிதை என்றும் கூறலாமோ என்று கருதும் வகையில், தந்தையின் வாழ்க்கைச் சம்பவங்களால் நிறைந்துள்ளது. ஒன்பது வயதில் தந்தையை இழந்து பல இன்னல்களைச் சந்திக்கின்றார். தந்தையை  இழந்தவர் உதவ வேண்டிய உறவுகளால் உதாசீனப்படுத்தப்படுகின்றார், அவர் ஒரு எரிபொருள் கூட்டுத்தாபனப் பொறியியலாளர். தனக்கென்று எதனையும் சேமிக்காது போனாலும், மனைவி பிள்ளைகளே உயிரென வாழ்ந்தார். இவை போன்ற தந்தையாரின் வாழ்க்கைச் சரித விபரங்களைத் தரும் கவிதை அவர் படுகொலை செய்யப்பட்டதைப்பின்வருமாறு விபரிக்கின்றது:

“தலையிலே சுட்டிடத்தான்
பயிற்சிகள் எடுத்தீரா?
சுடும் போதேனும்
சிந்திக்க மறுத்தாயா?
இவனை நம்பியும் குடும்பமொன்று
இருக்குமே? சுடுவதால் அவர்களும்
தலைவனை இழப்பரே.
தலையில்   சுடுகையில் ஒரு
தரம் நினைத்தாயா? வரலாற்றுத்
தவறொன்று நிகழ்த்துகின்றேனென்று.’

நல்லதொரு முக்கியமான கவிதை. மேற்படி இரு கவிதைகளும் கவிஞரின் தந்தையைப்பற்றி விரிவாகக் கூறுகின்றன.  தொகுப்பானது எவ்வளவு தூரம் கவிஞரை அவரது தந்தையார் பாதித்துள்ளார் என்பதைப்புலப்படுத்துகிறது. அத்துடன் போராட்டச்சூழலில் நடைபெற்ற மனித உரிமை மீறலினையும்  வெளிப்படுத்துகின்றது.  தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதையான ‘அப்பா நீ வேண்டும் நான் தூங்க’ கவிதையும் கவிஞரின் தந்தை பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது.

தொகுப்பிலுள்ள ஏனைய கவிதைகளில் பல பெண்களின் பல்வேறு பிரச்சினைகளைப்பற்றிக்கூறுகின்றன. ‘பெண் சாபங்கள்’ என்னும் கவிதை  பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட பெண்ணொருத்தியின் கூற்றாக வெளிப்படும் கவிதை. அப்பெண் குழந்தையாக இருக்கும்போது சீரழிக்கப்பட்டுக்கொல்லப்படுகின்றாள். இவளது மரணத்தைச் சாட்டாக வைத்துக் மதச்சண்டைகளைத் தூண்டுவதாக இறந்த அப்பெண்மணியின் கூற்றிலிருந்து தெரிய வருகின்றது. இதனால்தான்,

“காமத்தின் கூத்துகளுக்குத் தனி மனிதமே
காரணமென்பேன். இதில் மதங்களின் தவறுமில்லை.  \
தனி மனிதமே காரணமென்பேன். “

என்று கவிஞரால் பாட முடிகின்றது.

தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதை பெண் உரிமைகளைப்பற்றிப் பேசுகின்றது. ‘உரிமைகள் உன் வசம்’ என்பது அதன் தலைப்பு. ஆனால் கவிதையின் ஆரம்பத்தில் வரும் ,

“பெண்ணாய்ப்பிறந்ததற்காய்
பெருமையும் கொள். முதலில்
பெண்ணியம் பேசும்
பிதற்றலையும் நிறுத்து”

இவ்வரிகளிலுள்ள,

“பெண்ணியம் பேசும்
பிதற்றலையும் நிறுத்து”

என்னும் வரிகளை என்னால் அப்படியெ உள்வாங்கிட முடியாது.  பெண்ணியத்தைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பேன்.  கவிஞருக்கு இன்றுள்ள பெண்ணியக் கோட்பாடுகளில் சம்மதமில்லை என்பதாகவே இவ்வரிகளை வாசிப்பவர்கள் அர்த்தம் கொள்வார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண் தலையெடுத்த சமுதாயத்தில் அடிமைப்பட்டு வாழ்ந்து வந்து கொண்டிருந்த பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்பினை, புரிதலை வெளிப்படுத்தும் சொல்லாடல் அது. அதனைப் பிதற்றல் என்று கவிஞர் கூறுவதை ஜீரணிப்பது சிறிது சிரமமானது. இக்கவிதையில் அவர் விரிவாகவே தான் ஏன் பெண்ணியத்தை எதிர்க்கின்றேன் என்பதைக் கவிஞர் குறிப்பிட்டிருக்கின்றார்.

“யாரிடம் நீ
கேட்கின்றாய்
விடுதலை வேண்டுமென்று.
முதலில் உன்னைப்
புரிந்து கொள்
உலகமே திருந்தும்”

என்று குறிப்பிடும் கவிஞர்  

‘பெண்ணே
பிரம்மனும் உனக்கே
வனப்பினைத் தந்தான்’

என்று பெண்ணின் அழகைப்பற்றிய வரிகளுடன் கவிதையை ஆரம்பிக்கின்றார். இன்னுமோரிடத்தில்

‘புருசனையும் அடக்கினாய்.
பிள்ளைகளையும் அடக்கினாய்
மாமியாராகியதும்
மருமகளையும் அடக்கினாய்
இன்னும் எதைக்கேட்டு
சண்டையிடத்துணிகிறாய்.

பிள்ளை வரம்
கேட்கையில் மட்டும்
உனக்கு ஆண்பிள்ளை வேண்டும்’

‘உரிமையெல்லாம் உன்னிடமே
உணர்வாய் பெண்ணே
விடுதலை என்பதெல்லாம்
வெறும் பேச்சு பெண்ணே!’

இவை சமுதாயத்தில் பெண்களின் நிலையைப்பற்றிய வரலாற்றுரீதியிலான புரிதலைக் கவிஞர் தவற விட்டு விட்டாரோ என்ற எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு தளைகளால் சமுதாயத்தில் அடக்கப்பட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை அவர்கள் சகல தளைகளிலிருந்தும் விடுதலை பெற வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுவதற்குப் பதில் , உங்களிடம் எல்லா உரிமைகளும் உள்ளன. நீங்கள்தாம் உங்களை உங்கள் செய்கைகளால் உயர்த்த வேண்டுமே தவிர இவ்விதமான பெண் விடுதலைப் பேச்சால் அல்ல என்று தன் கருத்தை முன் வைத்திருக்கின்றார் கவிஞர். என்னால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கவிஞரின் பெண் விடுதலை பற்றிய கருத்துகள் நிச்சயம் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தும்.

இவ்விதமாகப் பெண்ணியத்தை மறுக்கும் கவிஞர் இன்னுமொரு கவிதையில், ‘உண்மையொன்று கேள்..’ என்னும் கவிதையில் பெண்களை அடக்கியாள நினைக்கும் ஆண்களையும் கண்டிக்கின்றார்.

‘ஆடைகளில் தவறில்லை
அதை அணிபவரிலும்
தப்பில்லை
உன் கண்களில் தவறென்பேன்
உன் விழி அணிந்திருக்கும்
ஆடை களைந்தால்
கன்னியர் அங்கமெல்லாம்
கவராது உன்னை’ என்கின்றார்.

‘போர்த்தும் ஆடைக்குள்
பெண்ணை
பூட்ட நினைக்கும்
மனிதா
உரைப்பேன் உண்மையொன்று கேள்’ என்கின்றார்.

‘அங்கம் என்பது
ஆண்டவன் படைப்பு
அதில் காமம் பார்ப்பது
உந்தனது தவறு’

‘வேலிகள் என்பது
நாம் போட்டது
அதிகாரம் பண்ணி
நீயும்
அடக்க நினைத்தால்
வேலிகள் கிழித்தே
வெள்ளாடுகள் வெளியேறும்’ என்கின்றார்.

மேலும்,
‘முடக்கி வைக்க
பெண்ணொன்றும்
உன் வீட்டு
பெட்டகமல்ல.

மூடிய ஆடைக்குள்
பெண்ணை மூடி
வைப்பதால்
கற்பு காக்கப்படும்
என்று கனவும் காணாதே’

இவ்விதமாகப் பெண்ணின் இன்றைய நிலையில் தெளிவுள்ள கவிஞர் எதற்காக ‘உரிமைகள் உன் வசம்’ என்னும் கவிதையில் பெண் விடுதலையில் தெளிவற்ற நிலையில் கருத்துகளை முன் வைக்கின்றார்? ‘அடக்க நினைத்தால் வேலிகள் கிழித்தே, வெள்ளாடுகள் வெளியேறும்’ என்று இக்கவிதையில் அறை கூவல் விடுப்பவர் எதற்காக ‘உரிமைகள் உன் வசம்’ கவிதையில்,

”புருசனையும் அடக்கினாய்.
பிள்ளைகளையும் அடக்கினாய்
மாமியாராகியதும்
மருமகளையும் அடக்கினாய்
இன்னும் எதைக்கேட்டு
சண்டையிடத்துணிகிறாய்.’ என்கின்றார்?

என்னைப்பொறுத்தவரையில் ‘உரிமைகள் உன் வசம் ‘ கவிதையைத் தவிர்த்திருக்கலாம் அல்லது அதில் பாவிக்கப்பட்டுள்ள சொல்லாடல்களைத் தவிர்த்திருக்கலாம் என்பேன். இது தவிர ‘பெண் கல்வியும் சமூக மாற்றமும்’ என்னும் கவிதையிலும் கவிஞர் பெண்கள் விடுதலை பற்றிய தெளிவான சிந்தனையுடன் இருப்பதைக் காண முடிகின்றது.

‘காலங்கள் மாறினாலும்
சிந்தனைத்தெளிவுகள்
சீர் பெற்றாலும்
மூடக் கொள்கைகள்
அணிந்திருக்கும் மனிதா!
உன் வக்கிர ஆடை கழற்றியே
வெளியேறி வா’ என்று  ஆரம்பமாகும் கவிதையில்

‘உன்னைப்பெற்றவளும் பெண்தானே
புரிந்துமேன் பெண்ணைப்
பூட்டி வைத்தாய்?’

‘விலங்கிட்டுச் சிறையில்
பூட்ட நினைக்காதே
விலங்குகள் போல் பெண்ணை
வீட்டுக்குள் முடக்காதே
வெளியே விடு ‘ என்கின்றார்.

விதவையொருத்தியின் உணர்வுகளைப் படம் பிடிக்கின்றது  ‘ஒரு விதவையின் கேள்வி’. அவளது காதல் உணர்வுகளை, உடல்ரீதியிலான , உளரீதியிலான தேடல்களை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. இன்று விதவைகளின் திருமணம் என்பது மிகவும் பிரச்சினைக்குரியதொன்றல்ல என்றாலும், இன்னும் அவர்களை மனப்பூர்வமாக ஏற்று, மனைவியாக ஏற்கும் பக்குவமுள்ளவர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கதே. இன்றைய நிலையில் இலங்கையில் யுத்தச்சூழலால் ஆயிரக்கணக்கில் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் நிலை இதற்கு நல்லதோர் உதாரணம்.

‘தாய்மை’யைப்பற்றி, பெண்மையின் சிறப்பைபற்றித் தொகுப்பில் பல கவிதைகளுள்ளன. ‘தாய்மைக்கு ஏது விலை’ என்னும் கவிதை தாய்மையின் சிறப்பை, பெருமையினை விபரிக்கையில் , போர்ச்சூழலால் தாயைப்பிரிந்து, புகலிடம் நாடொன்றில் தவிக்கும் மகனொருவனின் நிலையினை, யுத்தம் தாயைக் காவுகொண்ட நிலையிலும் அவளுக்கருகில் இருக்க முடியாத நிலையினை விபரிக்கின்றது. கவிதையின் இறுதியில் ‘வன்முறை இல்லாத உலகம் வேண்டும்’ என்று அறைகூவல் விடுக்கின்றார் கவிஞர். இன்றைய மானுட உலகில் வன்முறை பல வடிவங்களில் மானுடர் மத்தியில்  நிறைந்துள்ளது. அவை அனைத்தும் நீங்கவேண்டுமென்ற கவிஞரின் ஆதங்கத்தினைக் கவிதை வெளிப்படுத்துகின்றது.

பெண்களைப்பற்றி , விதவையின் நிலை பற்றி, தாய்மை பற்றித் தன் கவனத்தைத் திருப்பியிருக்கும் கவிஞர் முதிர்கன்னிகளின் நிலை பற்றியும் ‘முதிர்கன்னிகள்’ என்னும் கவிதையில் தன் கவனத்தைச் செலுத்தியிருக்கின்றார்.

‘தெய்வ மகள்’ என்னும் கவிதை இக்காலகட்டத்தில் முக்கியமான கவிதைகளிலொன்று. தாய், தந்தையரை அவர்கள்தம் வயது முதிர்ந்த காலத்தில் தம்முடன் வைத்துப் பாதுகாக்க வேண்டிய குழந்தைகள் , அவர்களை  முதியவர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையினை விபரிக்கும் கவிதையிது.

‘வலது குறைந்த பிள்ளையென்றாலும்
அன்னை என்றும்
வெறுக்க மாட்டாள்.
ஆனால்
ஆரோக்கிய அன்னை தந்தையை
ஆச்சிரமத்தில் சேர்க்கும்
வலது குறைந்த பிள்ளைகள்
நாம் மட்டுமே..’ என்று நெற்றியில் அறையும் வகையில் இவ்விதமான குழந்தைகளை நோக்கிக்குரலெடுப்பும் வரிகளிவை.

தொகுப்பிலுள்ள சிறுகவிதைகளிலொன்றான ‘பிரபஞ்ச அதிசயங்கள்’ கவிதை தாய், தந்தையைப்பற்றிக் கூறும் கவிதை.  அதில் ‘பிரஞ்ச அதிசயங்கள், ஏழுக்குள், அடக்கப்படாத, முதன்மை, ஆச்சரியங்கள்’ என்று அவர்களைக்குறிப்பிடுகின்றார். அது உலக அதியசங்கள் என்று நினைக்கின்றேன். பிரபஞ்ச அதிசயங்கள் ஏழு என்று  கேள்விப்பட்டதில்லை. உலக அதிசயங்கள் ஏழு என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் எம்மத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகளிலொன்று முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை. ‘நாங்கள் மனிதர்களாம்’ என்னும் கவிதை அவர்களின் இன்றைய நிலையினை எடுத்துரைக்கின்றது.

‘ஒரு காலத்தில்
எங்களையும் சாமியாக்கிப் பார்த்தீர்.
வீடு வீடாக அழைத்து
சாப்பாடும் போட்டீர்.
சந்தியிலே  வைத்து
மாலைகளும் போட்டீர்.
இப்போது சகதிகளாக்கி
எங்கள்மீது சேறும் வாரியடித்தீர்.’ (நூலில் எங்களை சேறும் வாறியடித்தீர் என்றுள்ளது. அச்சுப்பிழையாக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.). இவ்விதம் தொடரும் கவிதை மேலும் தொடர்கிறது:

“இறுதி யுத்தத்தில்
நாங்களும் செத்திருந்தால்
மாவீரர் குடும்பமென்று
மாலைகள் போட்டு
தேசியப்போராளிகள் என்று
மைக் வைத்துப் பேசியிருப்பீர்….

இவ்வரிகள் முன்னாள் போராளிகளின் சமகால நிலையினை வெளிப்படுத்துகின்றன.

‘பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்’ தொகுப்பின் தலைப்பு. அத்தலைப்பில் கவிதையேதுமில்லை.  இத்தலைப்பினை எதற்காக இத்தொகுப்புக்கு வைத்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்கின்றேன். பெட்டைக் காகங்கள் குயில் குஞ்சுகளை இடுவதில்லை. குயில்கள்தாம் காகங்களின் கூடுகளில் முட்டைகளையிடுகின்றன. காகங்களின் கூடுகளில் மட்டுமல்ல வேறு பல சிறு பட்சிகளின் கூடுகளில் கூடத் தம் முட்டைகளையிடுகின்றன. குயில்கள் தாமாகத் தம் முட்டைகளைப் பராமரித்து , அடை காக்கத் தெரியாதவை. குயில் குஞ்சுகளும் எதிர்காலத்தில் காகங்களின் , ஏனைய பட்சிகளின் கூடுகளில் முட்டைகளிட்டுத் தாய்மையின் பொறுப்பினைத் தட்டிக்கழிக்க இருக்கும் பட்சிகள். ஆனால் இத்தொகுப்போ தாய்மையைப்பற்றி, தந்தைமையைப்பற்றிச் சிறப்பாகப்பேசும் தொகுப்பு. எதற்காக இத்தலைப்பினை வைத்தார்கள் என்று சிந்தித்துப்பார்க்கின்றேன். சரியான காரணம் புரியவில்லை எனக்கு. ஆனால் கவிஞர் இதற்கான விளக்கமொன்றினை நூலின் பின் அட்டையில் குறிப்பிட்டிருக்கின்றார். அதில் குயிற் குஞ்சுகளைத் ‘தீதும் நனறாகத் தீதுகள் உண்டிங்கு , நாளும் நற்பெயருடன் வாழ்பவருக்கு’  உவமையாக்கியிருக்கின்றார்.  ‘பாரினிலே நன்மைகள் அழிந்திங்கு, தீமைகள் வளர்த்து, நாட்டையும் வீட்டையும் நாசம் பண்ணும்’ சக்திகளுக்கு உவமையாக்கியிருக்கின்றார். இவ்விளக்கத்தை எதற்காகப் பின் அட்டையில் பிரசுரித்திருக்கின்றார் என்று தெரியவில்லை. தொகுப்பின் தலைப்பை அவர் பார்வையில் விபரிக்கும் கவிதை வடிவிலான இவ்விளக்கத்தைத் தொகுப்பின் உள்ளடக்கத்தில் உள்ளடக்கியிருக்க வேண்டும். ஏன் அதனை அவர் செய்யவில்லை?

பூர்ணிமா கருணாகரனின் இத்தொகுப்பு என்னைப்பொறுத்தவரையில் இது கூறும் பொருளையிட்டு முக்கியத்துவம் பெறுகின்றது. தான் வாழும் சமுதாயத்தில் நிலவும் பல்வகையான  சமூக, அரசியற் சூழல்கள் கவிஞர் மேல் ஏற்படுத்திய பல்வகைத்தாக்கங்களின் விளைவாக எழுத்த அவரது அறச்சீற்றமே கவிதைகளாகியுள்ளன. அவர் தமது  உணர்வுகளை  போலி மறைப்புகளேதுமற்று வெளிப்படுத்துகின்றார்.  மொழி சாதாரண எளிய நடையில் அமைந்திருந்தாலும் வாசிப்பவர் நெஞ்சங்களை ஈட்டிகளாகத்தாக்குகின்றது. குறிப்பாகக் கவிஞரின் மீது அவரது தந்தையாரின் ஆளுமையின் பாதிப்பினை வெளிப்படுத்தும் கவிதைகள் , அவர் முடிவுக்குக் காரணமான மானுட வன்முறையின் மீது காறித்துப்ப வைக்கின்றது. கவிஞரின் வாசிப்புக்கும், எழுத்தாற்றலுக்கும் காரணமான அவரது தந்தையாருக்கே இத்தொகுப்பினைக் கவிஞர் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். அதுவும் பொருத்தமானதே.

ngiri2704@rogers.com