வாசிப்பும், யோசிப்பும் 330: கே.எஸ்.எஸ் சிவகுமாரனின் நூல்கள் மூன்று பற்றி….

கே.எஸ்.எஸ் நூல்கே.எஸ்.சிவகுமாரன்கே.எஸ்.சிவகுமாரனின் ‘ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை’ (ஜீவநதி பதிப்பக வெளியீடு), ஈழத்து உளவியற் சிறுகதைகள் (மணிமேகலை பிரசுர வெளியீடு) மற்றும் ‘அருமையான ஆளுமைகளும், சுவையானமதிப்புரைகளும்’ (மணிமேகலை பிரசுர வெளியீடு) ஆகிய மூன்று நூல்களையும் நண்பர் காலம் செல்வத்திடமிருந்து இன்று பெற்றுக்கொண்டேன். நூல்களைக் கொண்டுவந்து சேர்ப்பித்தற்காக அவருக்கு நன்றியினை இத்தருணத்தில்தெரிவித்துக்கொள்கின்றேன். சிறுகதை நூல் தவிர ஏனைய நூல்களிரண்டும் கே.எஸ்.எஸ் அவர்களின் பல்வேறு புத்தகங்கள் பற்றிய, அவர் இரசித்த ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஜீவநதி பதிப்பகம் நூலினை மிகவும் சிறப்பாக வெளியிட்டுள்ளது. நூலினை ஒரு மூச்சில் வாசிக்க வேண்டுமென்ற அவாவினைத் தூண்டுகின்றது. 73 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் சிறந்ததோர் ஆவணம். இந்நூலினைப்பார்த்தபோது ஒரு சிந்தனையோடியது. இதுவரை கே.எஸ்.எஸ் அவர்கள் எழுதிய நூல்கள், எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரு பெருந்தொகுப்பாக இது போன்றதொரு சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டால் அதுவோர் சிறப்பான ஆவணமாகவிருக்கும்.

ஜீவநதி வெளியீடாக வெளியான ”ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை” நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தபோது உடனடியாகத் தோன்றிய எண்ணம் இந்நூலில் விடுபட்டவர்கள் பற்றிய கட்டுரைகள். ஈழத்துச் சிறுகதைகளும் , ஆசிரியர்களும் ஒரு பன்முகப்பார்வை என்றிருப்பதால் அப்பன்முகப்பார்வையில் தவிர்க்கப்பட முடியாத பலர் தவிர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. தொகுப்பு கே.எஸ்.எஸ் அவர்கள் 1962 – 1998 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அக்காலப்பகுதியில் கே.எஸ்.எஸ் மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி எழுதாமலிருந்திருக்கலாம். அல்லது எழுதியிருந்தாலும் தொகுத்த ஜீவநதி பதிப்பகம் அவற்றைக் கவனத்திலெடுக்காமலிருந்திருக்கலாம்.

2. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் வெளியான தொகுப்புகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் தொகுப்புகள் இக்காலப்பகுதியில் வெளிவராதிருக்கலாம். ஆனால் இக்காலப்பகுதியில் ஈழத்துப்படைப்பாளிகள் எழுதிய அரிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்புகள் பல வெளியாகியுள்ளன.. அவற்றில் மேலே குறிப்பிடப்பட்ட தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் பல உள்ளடங்கியுள்ளன. அத்தொகுப்புகளைப்பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும்பட்சத்தில் தவிர்க்கப்பட்டவர்களின் தொகுப்புகள் வெளிவராதிருக்கும் பட்சத்தில் கூட நினைவு கூரப்பட்டிருப்பார்கள். மேலும் தொகுப்பில் நீர்வை பொன்னையன் சிறுகதைகள் பற்றிய இரு கட்டுரைகள் இடம் பெற்று:ள்ளன. இதுபோலவே காவலூர் ஜெகநாதனின், செ.யோகநாதனின், யோ.பெனடிற்பாலனின், கோகிலா மகேந்திரனின், சுதாராஜின் சிறுகதைகள் பற்றி ஒன்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதற்குப்பதில் அவர்களைப்பற்றி ஒவ்வொரு கட்டுரையும், பதிலாகப் பிற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரைகளும் வெளிவந்திருக்கலாம். அதே சமயம் ‘மட்டக்களப்புப் பிராந்தியப் பேச்சு வழக்கின் கதை’ கட்டுரை தொகுப்பொன்றிலில்லாத படைப்பாளிகளின் சிறுகதைகளைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.

எழுத்தாளர்களின் தொகுப்புகளில் அடங்காத சிறுகதைகளைப்பற்றியும் கருத்துகள் கூறப்பட்டிருப்பதால் , கே.எஸ்.எஸ் அவர்கள் இது போல் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்படாதவர்களின் சிறுகதைகளைப்பற்றியும் 1962 -1998 காலப்பகுதியில் எழுதியிருந்தால் அவற்றிலிருந்தும் கட்டுரைகளை இத்தொகுப்பில் சேர்த்திருக்கலாம். இத்தொகுப்புக்கான கட்டுரைகளை கே.எஸ்.எஸ் அவர்களே தெரிவு செய்தார்களா? அல்லது ஜீவநதி பதிப்பகம் தெரிவு செய்ததா என்பது தெரியவில்லை.

தொகுப்பிலுள்ள காவலூர் ஜெகநாதன், நெல்லை க.பேரன் பற்றிய கட்டுரைகள் அக்கட்டுரையின் மீதான என் கவனத்தை ஈர்த்தன. இவர்களில் காவலூர் ஜெகநாதனை தமிழ் விடுதலை அமைப்பொன்று சுட்டுக்கொன்றதாகக் குற்றச்சாட்டொன்று எழுகின்றது. நெல்லை க.பேரனைப் பொருத்தவரையில் குடும்பத்தினர் அனைவருமே இலங்கை அரசபடையினர் நடாத்திய ஷெல்லடிகளுக்குள் அகப்பட்டு உயிரிழந்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.

கே.எஸ்.எஸ் நூல்

இவையே முக்கியமான காரணங்களாக எனக்குப்படுகின்றது. இனி இத்தொகுப்பில் தவிர்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் எவரென்று பார்ப்போம்:

அ.செ.முருகானந்தன், அகஸ்தியர், அ.ந.கந்தசாமி, தாமரைச்செல்வி, நா.பாலேஸ்வரி, குறமகள், சொக்கன், தேவன் – யாழ்ப்பாணம், செங்கை ஆழியான், க.தி.சம்பந்தர், சி.வைத்திலிங்கம், கனக செந்திநாதன், தாழையடி சபாரத்தினம், சு.வேலுப்பிள்ளை, நந்தி, இ.நாகராஜன், எஸ்.எல்.எம்.ஹனிபா, நந்தினி சேவியர், வடகோவை வரதராஜன் போன்ற தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்த எழுத்தாளர்கள் பலர் விடுபட்டுள்ளார்கள். தொகுப்புகளை இன்னும் விரிவாக வாசிக்கவில்லை. தொகுப்புகள் பற்றிய விரிவான என் கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரையொன்றினை விரைவில் எழுதுவேன்.

நூல்களை அனுப்பிய கே.எஸ்.எஸ் அவர்களுக்கும் , அவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பித்த காலம் செல்வம் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி.

கே.எஸ்.எஸ் நூல்

ngiri2704@rogers.com