வாசிப்பும், யோசிப்பும் – 33 : புஷ்பராணியின் ‘அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’

a_pushparanee.jpg - 4.87 Kbbook_akaalam.jpg - 10.53 Kbஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி  புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது ‘அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)’ என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடாக வெளிவந்த நூல்.  

இந்நூலுக்குப் பல முக்கியத்துவங்களுள்ளன. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பெண் போராளிகளில் முன்னோடியான புஷ்பராணியின் அனுபவப் பதிவுகளிவை. இந்த நூல் ஏனைய இதுபோன்ற அண்மைக்காலப் பதிவுகளிலிருந்து இன்னுமொருவகையில் வேறுபடுகின்றது. ஏனைய நூல்களெல்லாம் ஆவணப்பதிவுகளென்ற வகையில் முக்கியத்துவம் பெற்றால், ‘அகாலம்’ ஆவணப்பதிவாக இருக்கும் அதே சமயம் இலக்கியத்தரமிக்க பிரதியாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதற்கு புஷ்பராணி ஓர் எழுத்தாளராகவுமிருப்பது காரணம். தனது போராட்ட அனுபவங்களை விபரிக்கையில் அக்காலத்து மெல்லிய உணர்வுகளையெல்லாம், தன் இளமைக்காலத்து வாசிப்பு அனுபவங்களையெல்லாம் விபரித்துச் செல்கின்றார். அடுத்த முக்கியமான அம்சம் தனது அனுபவங்களை வெளிப்படையாக, குறைநிறைகளுடன் விபரிக்கின்றார். சிவகுமாரின் தாயாரான அன்னலட்சுமி அம்மையாரின் சிறப்புகளை விபரிக்கும் அதே சமயம் சிவகுமாரின் அந்திரட்டியில் அவ்வூர்த் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாக உணவு வழங்குவதையும் அதுபற்றிய அன்னலட்சுமி அம்மையாரின் மன உணர்வுகளையும் கூடவே விபரிக்கின்றார். அது போல் தமிழ் மகளிர் அமைப்பின் ஆரம்பகாலப் பெண் போராளிகளிலொருவரான அங்கயற்கண்ணி மறைந்து மறைந்து தன்னை வந்து சந்திப்பதையும் விபரிக்கின்றார். இவ்விதமாகப் பலருடனான அனுபவங்களை விபரிக்கையில் அவர்களின் குறைநிறைகளை விபரிக்கின்றார். அவர்கள்மேல் கோபம் போன்ற உணர்வுகளின்றி விபரிக்கின்றார். தமிழ், சிங்களப் பொலிசாரின் வன்முறைகளை விபரிக்கும் அதே சமயம் அவர்களது நல்ல அம்சங்களையும் குறிப்பிடுகின்றார். இவ்விதமான விபரிப்பால் இவர் கூறும் நபர்களைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பிம்பங்கள் கிடைக்கின்றன. பெண் போராளிகளாகக் கைது செய்யப்பட்ட இவரும், கல்யாணி போன்றவர்களும் விசாரணைகளில் அடைந்து சித்திரவதைகள் துயரகரமானவை. அவற்றையெல்லாம் தாங்கித் தப்பிபிழைத்த இவர்களது துணிவு மிக்க ஆளுமை வியப்பூட்டுவது.
 
இவரது அனுபவப் பதிவுகளின் இன்னுமொரு முக்கியமான அம்சம் வெலிக்கடையில் இவருடன் பல்வேறு காரணங்களுக்காக (அரசியல், சமூகக் குற்றங்கள்) அடைபட்டிருக்கும் சிங்களப் பெண் கைதிகளைப் பற்றிய விபரங்களாகும். எந்தவித இனத்துவேசமுமின்றி அவர்களைப் பற்றி விபரிக்கின்றார். ஒருவருக்கொருவர் துணையாகவிருப்பதை விபரிக்கின்றார். இந்த அனுபவப் பதிவுகளில் சிங்களப் பெண் கைதிகளைப் பற்றிய விபரங்களும் முக்கியமானதோர் அம்சம்.
 
அடுத்த முக்கியமானதோர் அம்சம் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத மயப்பட்ட காலகட்டத்தில் அதற்காகத் தம்மை அர்ப்பணித்த பெண்களைப் பற்றிய விபரங்கள். இந்த நூல் விபரிப்பதைப் போல் ஏனைய அனுபவப் பதிவுகள் இவ்வளவு தகவல்களை ஆரம்பகாலப் பெண் போராளிகளைப் பற்றி விபரிக்கவில்லையென்றே நினைக்கின்றேன். உதாரணமாக வீமன்காமம் பத்மினி, குருநகர் குலம் அக்கா, சங்கானை அம்மா, காங்கேசந்துறை டொறத்தி, காங்கேசந்துறை திலகமணி, திருகோணமலை பிலோமினா அக்கா, மயிலிட்டி அங்கயற்கண்ணி, வேலணை திலகவதி, மாவிட்டபுரம் பாப்பா அக்கா, வசாவிளான் ஜெயராணி, காரைநகர் கனகராணி, வசாவிளான் செல்வராணி, மாவிட்டபுரம் செல்வராணி என்று தன்னுடன் இணைந்து போராட்ட நடவடிக்கைகளில் பங்குபற்றிய தோழிகளைப் பற்றிய இவரது விபரிப்புகள் முக்கியமான ஆவணப்பதிவுகள். இத்தோழிகளைப் பற்றிக் குறிப்பிடும் புஷ்பராணி ‘இந்தத் தோழிகளது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், தியாகங்களும் மிகச்சீக்கிரமே வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்டன.  ஆனால் எனது மனதில்  என்னை மரணம் தழுவும்வரை இந்தத் தோழிகள் நிறைந்திருப்பார்கள். ஈழத்தின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் எனது தோழிகளது பாடுகள் பதிந்துள்ளன.’ என்கின்றார். ஆனால் நூலாசிரியர் தனது ‘அகாலம்’ அனுபவப் பதிவுகள் மூலம் அத்தோழிகளை வரலாறு மறக்காமல் செய்துவிட்டாரென்றே கூறவேண்டும். வரலாற்றால் இதுவரை மறக்கப்பட்டிருந்த பெண் போராளிகளைப் பற்றிய விபரங்களைப் பதிவு செய்வதும் இந்நூலின் முக்கியமானதோர் அம்சம்.
 
இவ்வனுபவப் பதிவுகளின் இன்னுமொரு முக்கியமான அம்சம் அமைப்புகள் பலமடையத் தொடங்குவதற்கு முன்னர் , 1983ற்கு முன்னர் நிலவிய தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் போன்றவற்றில் இயங்கிய ஆண் தோழர்கள் பலரைப் பற்றியும் வரலாறு மறந்துவிடாமலிருக்கும் வகையில் பதிவு செய்ததாகும். அத்துடன் பின்னர் பல்வேறு போராட்ட அமைப்புகளின் தலைவர்களாக விளங்கிய பலரைப் பற்றி (விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், ஈரோஸ் தலைவர் பாலகுமார், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணித் தலைவர் நா.பத்மநாபா, வரதராஜப்பெருமாள், சந்ததியார் போன்ற பலரைப்பற்றி) தனது அனுபவங்களை நூலில் புஷ்பராணி பகிர்ந்திருக்கின்றார். அவையும் ஆவணமுக்கியத்துவம் மிக்கவை.
 
ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் இன்றைய நிலைக்குக் காரணமானவர்களென்று தான் நினைப்பவர்களை, அதற்கான காரணங்களையும் கடுமையாக் கண்டனம் செய்யும் பணியினையும் ‘அகாலம்’ செய்கின்றது. ஆனால் இதுவரை நடைபெற்ற விடுதலைப் போராட்ட வரலாற்றை, அதன் இன்றைய நிலையினை உணர்ச்சிவசப்படாது, ஆய்வுரீதியில் அணுகுவது பயனுள்ளதென்பதென் தனிப்பட்ட கருத்து.
 
இப்பதிவுகளின் இன்னுமொரு குறிப்படத்தக்க அம்சம் புஷ்பராணி தான் பிறந்த தாழ்த்தப்பட்ட சமூகம் காரணமாக அடைந்த அவமானங்களை, அனுபவங்களை விபரிப்பதாகும்.  காவற்துறையினர் குறிப்பாகத் தமிழ்ப் பொலிசார் அவர்களை அவர்களது சமூகப் பின்னணி காரணமாக நையாண்டி செய்து புரியும் வதைகள், அதன் காரணமாக அவரும், அவருடன் கைது செய்யப்பட்ட கல்யாணி போன்றவர்கள், அடையும் சித்திரவதைகள், பெண்களாகவிருப்பதால் அடையும் மன உளைச்சல்கள் (உதாரணமாக மாதவிடாய்க் கால அனுபவப் பதிவுகள்) இவை முக்கியமான அனுபவப்பதிவுகள். கைது செய்யப்பட்டவர்களையும் அவர்களது சமூகநிலை காரணமாகச் சட்டம் எவ்விதம் பாரபட்சமாகக் கையாள்கிறது என்பதைத் தெளிவுடன் ‘அகாலம்’ விபரிக்கின்றது. சிலர் சித்திரவதைகளிலிருந்து விடுபடுகின்றார்கள். இன்னும் சிலர் விரைவாக விடுதலையாகின்றார்கள். இவ்வளவு அவமானங்களினூடும் ஈழத்தமிழ் மக்கள் அனைவரினிதும் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட இவரைப் போன்ற போராளிகள் அனைவரையும் முழுத் தமிழினமும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதற்குரிய உண்மையான நன்றி ஈழத்தமிழர்கள் மத்தியில் புரையோடிப்போய்க்கிடக்கும் தீண்டாமைப் பேயை ஒழிப்பதாகும்.
 
இந்நூலில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற கலவரம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
 
“இரா ஜனார்த்தனம் பேசியதாலேயே அங்கே குழப்பம் ஏற்பட்டதென்றும் சிவகுமாரன் அல்லது தமிழ் மாணவர் பேரவையினர் காவற்துறையோடு மோதியதாலேயே  குழப்பம் ஏற்பட்டது எனச்சொல்வதெல்லாம் தவறான செய்திகளே. மாநாட்டில் வந்த ஊர்திகளில் ஓர் ஊர்தியில் கட்டப்பட்டிருந்த  உலோகத்தாலான கொடிக்கம்பம்  மின்சாரக் கம்பியைத் தொட்டதினால் ஊர்தியில்  வந்த இருவர் முதலில் பலியானார்கள்.’
 
இதனை யாராவது உறுதிப்படுத்த வேண்டும். நானும் அன்று சிறுவனாகக் கலவரம் நடந்த சமயம் அங்கிருந்தேன். மேடை அமைந்திருந்த வீரசிங்கம் மண்டபத்துக்கு முன் புறத்துக்கும், முற்றவெளிக்குமிடையில் வீதி ஊடறுத்துச் சென்றுகொண்டிருந்தது. கூட்டத்தில் பங்குபற்றிய மக்கள் அந்த வீதியிலும் முற்றாக நிறைந்திருந்தார்கள். அப்பொழுது அங்கு வந்த பொலிசார் அம்மக்களைக் கலைத்து வீதியைத் திறக்க முனைந்தார்கள். அப்பொழுது அவ்விதம் முற்பட்ட பொலிசார்மீது சுற்றிவர இருந்த மக்கள் தமது செருப்புகள் உட்படக் கிடைத்ததையெல்லாம் எறியத் தொடங்கினார்கள். இதனை எதிர்பாராத பொலிசார் பின்வாங்கிச் சென்றார்கள். சென்றவர்கள் சென்ற வேகத்திலேயே மீண்டும் வந்தார்கள். கூட்டத்தினர்மீதி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள். இதுதான் நான் என் அனுபவத்திலிருந்து புரிந்துகொண்டது. எனக்கு அடுத்த நாளே ஒன்பது தமிழ் மக்கள் இறந்த விடயம் தெரிந்தது. அது பொலிசார் மின்சாரக் கம்பிகளைச் சுட்டி வீழ்த்தியதால் விழுந்த கம்பிகளின் மீது இறந்த தமிழர்களென்று கூறியதைக் கேட்டேன். இது பற்றிய பூரண விபரங்கள் அறிந்துகொண்டவர்கள்தாம் கூறவேண்டும்.
 
நூலின் சமர்ப்பணத்தில் ‘.. ஈழப்போராட்டத்தில் தங்களது உயிர்களைத் துறந்த அனைத்துப் போராளிகளையும் ஞாபகம் கொள்கிறேன். நீங்கள் எல்லாவித அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாலும் என் இதயத்தில் இருப்பீர்கள்’ என்கின்றார். இது நூலாசிரியரின் பண்பட்ட உள்ளத்தின் வெளிப்பாடு. இவ்விதமான முதிர்ச்சியுடன் தனது அனுபவங்களை அணுகி விபரித்திருப்பதும் ‘அகாலம்’ பதிவுகளின் இன்னுமொரு சிறப்பு. இது போன்ற அனுபவப் பதிவுகள் அதிக அளவில் வரவேண்டிய காலகட்டமிது. அவ்விதம் வந்தால்தான் அவற்றைப் பற்றிய, ஒன்றுடன் ஒன்று ஒப்பு நோக்கிய,  விரிவான ஆய்வுகள் சாத்தியம். இதுவரைகால ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட
வரலாற்றின் குறைநிறைகளை அறிவதற்கு இவ்விதமான ஆய்வுகள் அவசியம்.
 
நூல்: அகாலம் (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்)
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
பதிப்பாசிரியர்: ஷோபாசக்தி