வாசிப்பும், யோசிப்பும் 335: தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

அம்மாஇன்று , மார்ச் 26, அம்மாவின் நினைவு நாள். நவரத்தினம் டீச்சர் என்று அன்புடன் அவரது மாணவர்களாலும், ‘மங்கை’ என்று அவரது சிநேகிதிகளாலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவரது நினைவு நாள் என் சிந்தையில் அவருடன் கழித்த நாள்களை நினைவு கூர்ந்திட வைக்கின்றது. யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம், அராலி இந்துக்கல்லூரி என அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த பாடசாலை மாணவர்களைத் தன் அன்பால், சிரிப்பால், மென்மையான அணுகுமுறையினால் கட்டிவைத்தவர் அவர். வாழ்நாளில் ஆத்திரப்பட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. சில சமயங்களில் குரலில் சிறிது கண்டிப்பைக் காட்ட முற்பட்டாலும் கூட அக்கண்டிப்பை அவரால் வெளிப்படுத்தவே முடிந்ததில்லை.

என் பால்யபருவத்தில் ஆரம்பத்திலிருந்து ஏழாம் வகுப்புவரை வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த காலகட்டத்து நினைவுகள் அழியாத கோலங்கள். அதிகாலையிலேயே எழுந்து, காலைச்சாப்பாடு, மதியச்சாப்பாடு எல்லாம் தயாரித்து, மதிய உணவையும் பார்சல்களாகக் கட்டி அல்லது ‘எவர்சில்வர்’ தூக்கு பாத்திரத்திலிட்டு பாடசாலை அழைத்துச் செல்வார். குழந்தைகள் நாமும் குருமண்காட்டிலிருந்து பாடசாலைக்கு அவரணைப்பில் பின் தொடர்வோம்.

அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் ‘றோட்டின்’ ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.

அவரது உலகமெல்லாம் பாடசாலையும் , குடும்பமும்தாம். அவற்றிலேயே அவர் இன்பமுற்றார். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் ‘றோட்டி’ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு.

அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாகச் செல்லும் காலைப்பொழுதுகளில் எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி வருவார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் ‘என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்’ என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் ‘இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்’ என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் ‘வாயெல்லாம் பல்’. 🙂 இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.

அவர் அன்னையாகவும், வவுனியா மகா வித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் புவியியல் ஆசிரியராகவும் விளங்கியவர். . அவ்வப்போது குட்டிக் கதைகள் சிலவற்றையும் பாடத்தின் இடை நடுவில் கூறிச் சிரிக்க வைத்து, மாணவர்களை உற்சாகப்படுத்திப் பாடத்தைத் தொடர்வார்.

சில சமயங்களில் பாடசாலையில் ஏதாவது நிகழ்வுகள் நடக்கும் சந்தர்ப்பங்களில் வீடு திரும்ப நேரமாகிவிடும். நகர் நேரத்துடனேயே இருண்டு விடும். வவுனியா மகாவித்தியாலயத்திலிருந்து குருமண்காடு வரை எம்மை அரவணைத்தபடி ‘ சிவசிவா’ சிவசிவா என்ற முணுமுணுப்புடன் (அவர் தெய்வபக்தி மிக்கவர்) அழைத்துச் செல்வார். ஆங்காங்கே மாடுகள் சிலவற்றின் அசைபோடும் ஒலிகள் தவிர வேறெதுவுமற்ற நிலையில், ‘ஸ்டேசன் றோடு’ வழியாக மன்னார் றோடேறிக் குருமண்காட்டுப்பகுதியை வந்து சேர்வோம்.

வவுனியா மகா வித்தியாலயம் என்றதும் என் நினைவில் நிற்கும் இன்னுமொரு விடயம். ஒருமுறை (அறுபதுகளில்) அங்கு கலைவிழாவும் (கண்காட்சியுடன் கூடிய) இரண்டு மூன்று நாள்களாக நடைபெற்றது. அக்கலைவிழாவின் இறுதி நாளன்று அப்பொழுதுதான் மைதானத்தின் ஒரு புறத்தே இவ்விதமான நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி மேடையில் நடைபெற்ற அரிச்சந்திரா நாடகம். நாடகத்தின் மயானக் காட்சியும் நடிகர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும் இன்னும் ஞாபகத்திலுள்ளன. அக்காலகட்டத்தில் மூன்று முறிப்பிலுள்ள பாடசாலையொன்றின் அதிபராக இளைஞரொருவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆங்கிலப்பட்டதாரியான அவர் நீண்ட தலை முடி வளர்த்து ஹிப்பி போன்ற தோற்றத்தில் திரிவார். அவரை அடிக்கடி அக்காலகட்டத்தில் நகரில் காண்பதாலும், அக்கலைவிழாவிலும் கண்டதாலும் அக்கலைவிழாவைப்பற்றி எண்ணியதும் அவரது தோற்றமும் கூடவே ஞாபகத்துக்கு வந்து விடுவது வழக்கம். அக்கலைவிழாவில் ஆசிரியையான அம்மாவுக்கு முன்னர் மாணவனைப்போன்று பவ்வியமாக , மரியாதையுடன் அவர் சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருந்ததும் நினைவிலுள்ளது.

இன்னுமொரு விடயமும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. பல்கலைக்கழக நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் வீடு திரும்புவேன். அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்த காலம். அம்மா அராலி இந்துக்கல்லூரியில் படிப்பித்துக்கொண்டிருந்தார். எதிர்பாராமல் நான் வந்ததைக்கண்டதும் அவர் அடையும் மகிழ்ச்சியைப்பார்க்க வேண்டுமே.. அங்கிருக்கும் அடுத்த சில தினங்களும் எனக்குப்பிடித்த இட்லி, தோசையென்று ஆக்கிப்போட்டுத் திக்கு முக்காட வைத்து விடுவார். பின்னர் மீண்டும் அதிகாலையொன்றில் காலை யாழ்தேவியை எடுப்பதற்காக மீண்டும் பல்கலைக்கழகம் திரும்புவேன். அன்றும் அதிகாலை நேரத்துடன் எழுந்து வழியில் உண்பதற்காக உணவு வகைகளை ஆக்கிக் கட்டித்தருவார். வீட்டை விட்டு வெளியில் கால் வைக்கும்போது, பின்னால் கலங்கிய கண்களுடன் விடை தரும் அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் செல்வேன். எனக்குத்துணையாக பஸ் தரிப்பு வரை போடும் உணவுக்கு நன்றியாக வீட்டை அண்டி வாழும் ஞமலி (நாய்) துணைக்கு வரும். அந்த அதிகாலைக்கருக்கிருளில் தலை விரித்தாடிக்கொண்டிருப்பர் பனைப்பெண்கள். அந்த அதிகாலைகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.

முகநூல் என் பால்யபருவத்து நண்பர்கள் பலரை மீண்டும் என் வாழ்வில் இணைத்துள்ளது. அவர்களில் பலருக்கு நவரத்தினம் டீச்சரைத் தெரியும். பலர் அவருடனான தம் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்திருக்கின்றார்கள். அம்மாவின் நினைவு நாள் மீண்டும் அவரைப்பற்றிய பல நினைவுகளை நெஞ்சில சிறகடிக்க வைத்துவிட்டன. அவரது மறைவையொட்டி எழுதிய கவிதையுடன் இப்பதிவினை முடிக்கின்றேன்.

தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?
நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ? இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ? இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!
உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய்.
உணர்வெல்லாம் காற்றாக நீ போனதினால்
நனவாய்க் கனவாய் வந்து வந்து
மோதும் செயலென்னே!
என்றேனும் உனைப்பற்றி நீ எண்ணியதுண்டா ?
நாம் நன்றாயிருந்தாலது போதுமென
உன்பணிசெய்து கிடந்தாயே ?
தாயே!உனை நாமெங்கினிக் காண்போமோ ?
இங்கு நீ இருந்ததெல்லாம்,
இங்கு நீ நடந்ததெல்லாம்,
இங்கு நாம் திரிந்ததெல்லாம்
இருந்ததொரு இருப்போ ?
விரியும் வினாக்கள் விடைநாடிச்
சிறகடிக்கும் சிட்டுக்களாய்
சித்தவானினிலே.
விடை தெரியா விடைநாடும்
வினாக்கள் பல சுமந்து
ஒட்டகமாயிப் பாலையிலே
காலையும் மாலையுமாய்
பயணமின்னும் தொடருமோ ?
பயணத்தின் ஒளித்தெறிப்பெல்லாம்
கானற் காட்சியாய் கடந்ததுவோ ?
பாலையும் கானலோ ?
இப்பயணமும் கானலோ ?
இங்கு இப் பயணமும்
கானலோ ?
நெஞ்சிலுரமூட்டியெமை வளர்த்தாய் தாயே!
அஞ்சிடாதுளம் தந்தெமை வார்த்தாய்.
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறும் நிழலா ?
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறுங் கனவா ?
உன்னிருப்புமென்னிருப்பால் விளைந்ததொரு
பொய்யானதொரு மெய்யோ ? தாயே!
பொய்யானதொரு மெய்யோ ?
உனது சொல்லும் செயலும்
உணர்வும் பரிவும்
பரவிக்கிடக்கும் வெளிக்குள்
வெளியாய் பரவிக் கலந்தாய்.
மீண்டுமொருமுறை
‘நான் ‘ ‘ஏன் ‘ ‘யார் ‘ என
ஆய்ந்திட வைத்துச் சென்றாய் ?
தாயே!
ஆயினுன் உயிரின் உறவின்
உதிரத் துளியாய் இன்னுமிங்கே
இருக்குமென் இருப்பில் நான்
உனைக் கண்டு தெளிவேன். அதனால்
உனைப் புரிந்தேனிந்த
உலகை அறிந்தேன். ஏன்
எனையும் தெரிந்தேன். என்
இருப்பில் இருந்த
உன்
இருப்பின் பொருள் உணர்ந்தேன்.
தாயே! பொருள் கண்டேன்.

ngiri2704@rogers.com