வாசிப்பும், யோசிப்பும் 342: வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் & வ.ந.கிரிதரனின் யாழ் நூலகம் பற்றிய முகநூற் பதிவுகள்.

- வ.ந.கிரிதரன் -

நண்பர்களே! எனது ஐம்பத்தாறு கட்டுரைகளை (இலக்கியம், கட்டடக்கலை, நகர அமைப்பு மற்றும் அறிவியல்) ஏழு பகுதிகளாக ‘வ.ந.கிரிதரன் பக்கம்’ என்னும் எனது வலைப்பதிவில் நீங்கள் வாசிக்கலாம். அவற்றின் இணைய முகவரிகள் வருமாறு:

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஒன்று (1 – 10) – https://vngiritharan230.blogspot.com/2019/06/1-10.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி இரண்டு (11 – 20) – https://vngiritharan230.blogspot.com/2019/06/11-20.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி மூன்று (21 – 30) – https://vngiritharan230.blogspot.com/2019/06/21.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி நான்கு (31 -36) – https://vngiritharan230.blogspot.com/2019/06/31-36.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஐந்து: கட்டடக்கலை & நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் _37 – 45 ) – https://vngiritharan230.blogspot.com/2019/06/37-45.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஆறு : அறிவியற் கட்டுரைகள் (46 – 50) – https://vngiritharan230.blogspot.com/2019/06/46-50.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஏழு (51 – 56) – https://vngiritharan230.blogspot.com/2019/06/51.html#more


வ.ந.கிரிதரனின் யாழ் நூலகம் பற்றிய முகநூற் பதிவுகள்.

1.

- வ.ந.கிரிதரன் -

மே 31, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். பொதுவாக இன்று மட்டுமல்ல என்றுமே அவ்வப்போது யாழ பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என் மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழராக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பர். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பர். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.

என் பால்யகாலத்தில் நான் என் ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எட்டாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடசாலை விடுமுறையின்போது என் அம்மாவின் சகோதரியொருவரின் பிள்ளைகள் வவுனியா வருவார்கள். அல்லது நாம் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்வோம். அவ்விதம் செல்கையில் அக்கா முறையிலான என்று ஒன்று விட்ட சகோதரியொருவர் , என்னைவிட சுமார் ஏழு வயது மூத்தவர், யாழ் நூலகத்துக்கு செல்கையில் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். காற்சட்டையும் , சட்டையுமாக நானும் அவருடன் செல்வேன். அக்காலகட்டத்தில் நான் பொதுவாக நடக்கும்போது மிகவும் விரைவாக நடந்து செல்வேன். என்னைத் துணைக்கழைத்துச் செல்லும் அக்காவுக்கோ என் நடை வேகத்துடன் ஈடு கட்டி நடப்பதற்குச் சிரமமாயிருக்கும். இருந்தாலும் அவரும் இயலுமானவரையில் ஈடு செய்தபடி என்னுடன் நடந்து வருவார். ஆயினும் அவ்விதம் நடந்து வருகையில் ‘ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே. மெதுவாப் போடா. மூச்சு வாங்குது ‘என்னும் அர்த்தப்பட வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டுதான் கூட நடந்து வருவார். இப்பொழுது கூட அவ்வப்போது சந்திக்கையில் அதனை அவர் நினைவு கூர்வதுண்டு. அவருடன் யாழ் நூலகத்துச் சென்றதுதான் முதற் தடவை.

அக்காலகட்டத்தில் எனக்கு வயது பதினொன்று. அப்பொழுதே தமிழகத்து வெகுசனப்படைப்புகளைத் தீவிரமாக வாசிக்கத்தொடங்கியிருந்தேன். நான் ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கையில் எனக்கு வயது எட்டு. அக்கா அவருடன் யாழ் நூலகம் செல்லும் காலங்களில் அங்கு காணப்பட்ட நூல்களில் என் நினைவில் நிற்கும் நூல்களிலொன்று அரு .ராமநாதன் எழுதிய ‘வீரபாண்டியன் மனைவி’. மூன்று பாகங்களை உள்ளடக்கிய நூல். அவ்விதம் ஆரம்பித்த யாழ் நூலகத்துடனான தொடர்பு பின்னர் என் வாழ்வு யாழ்ப்பாணத்துக்கு மாறியதும் அதனுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகிப்போனது.

யாழ்ப்பாண நூலகம் என்றதும் எனக்கு நினைவில் வரும் இன்னுமொரு முக்கியமான விடயம். அது அமைந்துள்ள சூழல். பண்ணைக்கடல், திறந்த வெளிகளை உள்ளடக்கிய யாழ் முற்ற வெளி, திறந்த வெளியரங்கு, சுப்பிரமணியப்பூங்கா, சரித்திரம் கூறி நிற்கும் யாழ் டச்சுக் கோட்டை, முனியப்பர் கோயில்.. இவற்றுக்கு மத்தியில் வீணையும் கையுமாக வரவேற்கும் சரஸ்வதி தேவியின் சிலையுடன் அமைந்த யாழ்பொது நூலகம் அமைந்திருந்தது. காற்று எப்பொழுதும் சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருக்கும். யாழ் நூலகத்தை நெருங்கையிலேயெ எமது உள்ளங்கள் சூழல் காரணமாக ஒருவித அமைதியை, இனிமையை உணரத்தொடங்கிவிடும். நூலகத்தைச் சுற்றியுள்ள அமைதி கலந்த சூழலே அங்கு செல்லுமொருவருக்கு அங்கு சென்று வாசிப்பதற்குரிய உணர்வினை ஏற்படுத்தி விடும். யாழ் நூலகத்தில் வாசிப்பது மட்டுமல்ல அதனை நோக்கிச் செல்வது கூட இன்பமானதோர் உணர்வுதான்; அனுபவம்தான். அபிவிருத்தி என்னும் போர்வையில் அப்பகுதிச் சூழலைச் சிதைத்து விடாமல் , நகர அமைப்பாளர்கள் எதிர்காலத்திலும் யாழ் நகர அபிவிருத்தித்திட்டங்களை வடிவமைப்பது மிகவும் அவசியம்.

இன்னுமொரு தடவை அங்கு ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி நடைபெறுகையில் சிறிது நேரம் ‘லைற்’ அணைந்து களேபரம் ஆகி மீண்டும் நிலைமை வழமைக்குத் திரும்பியது. ஆனால் அக்கண்காட்சி பற்றி மேலும் விரிவான நினைவுகளில்லை. இங்குதான் அம்மா தன் சம்பாத்தியத்தில் ஆசை ஆசையாக எனக்கு வாங்கித்தந்த ‘ரலி’ சைக்கிள் களவு போனதும் நிகழ்ந்தது. அக்காலகட்டத்தில் ‘ரலி’, ‘றோட் மாஸ்ட்டர்’ சைக்கிள்கள் மிகவும் புகழ்பெற்றவையாக விளங்கின.

நூலகத்தின் வடிவமைப்பும் கூட எளிமையானது ஆனால் அதே சமயம் நூலகமொன்றுக்குரிய சூழலை ஏற்படுத்தித்தரும் வகையில் அமைந்துள்ளதொன்று. உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் நூல் இரவல் பெறும் பகுதி, வலது பக்கம் பத்திரிகை, சஞ்சிகைகள் வாசிப்பதற்குரிய கூடம்.

யாழ் பொதுசன நூலகம் மட்டுமல்ல அது பற்றிய நினைவுகளும் பசுமையானவை; இனிமையானவை.


2.

- வ.ந.கிரிதரன் -

“மே 31! யாழ் நூலகத்தின் வரலாற்றிலொரு கரி நாள். நூலகம் எரிக்கப்பட்ட தினம். அன்று எரிக்கப்பட்ட நூலகம் இன்று மீண்டும் புதுப்பொலிவுடன் நிமிர்ந்து நிற்கின்றது. ஆனால் அன்று நூலகம் எரிந்தபோது எரிந்து அழிந்து போன விலை மதிப்பற்ற ஆவணங்கள், ஆய்வுப்பிரதிகள் & ஓலைச்சுவடிகள் போன்றவை மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. அதிர்ச்சியில் மறைந்த தாவீது அடிகளர் மீண்டும் திரும்பி வரப்போவதில்லை.

இத்தினத்தில் நான் அந்நூலகத்தில் கழித்த இன்பமான நாட்களை நினைத்துப் பார்க்கின்றேன். என் மாணவப்பருவத்தில் என் உற்ற தோழர்களில் ஒருவராக விளங்கிய நூலகம் அது. அங்கு நான் கழித்த நாட்கள் பல. என் இன்றைய இலக்கிய ஆளுமைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று யாழ் நூலகம்.

அறிவியல், இலக்கியம், புனைபு, அபுனைவு மற்றும் ஏராளமான சஞ்சிகை, பத்திரிகைகள் என்று அங்கு நான் வாசித்து என் பொழுதுகளைப் பயனுள்ளதாகக் கழித்தது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.

அறிவியலில் எனக்கு வானியற்பியல் (Astro Physics) மிகவும் பிடித்த துறை. அதற்கு அத்திவாரம் அமைத்துக்கொடுத்ததே யாழ் நூலகம்தான். அங்கு அக்காலத்தில் வாசித்த விஞ்ஞான நூல்களை மறக்க முடியாது. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல்கள் அவை. பெளதிகத்தின் வரலாறு, உயிரியலின் வரலாறு, நீங்களும் விஞ்ஞானியாகலாம்.. என்று எத்தனை நூல்கள்? பல ஆங்கில நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். தமிழகத்திலிருந்து அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர் சரியாக நினைவிலில்லை. ஆனால் கைக்கடக்கமான அளவில், தடித்த அட்டைகளுடன் வெளியான நூல்கள் அவை. குறிப்பாகப் ‘பெளதிகத்தின் வரலாறு’ நூலை மறக்க முடியாது. சிவ்ராம் காரந்தின் ‘மண்ணும் மனிதரும்’ , பேர்ல் பக்கின் ‘நல்ல நிலம்’, ‘இளமைக்கனவு’ என்றோரு அமெரிக்க நாவலின் மொழிபெயர்ப்பு என்று பல மொழிபெயர்ப்பு நாவல்களை நான் அங்கிருந்து பெற்றே வாசித்தேன். மறக்க முடியாத நாட்கள் அவை.

நூலகமே! என் வாழ்வில் என் உற்ற தோழனாக விளங்கினாய். அது போல் இன்றும் இளைய சமுதாயத்துக்கு நீ விளங்கி நிற்பாய். நான் செல்லும் ஆலயங்கள் நூலகங்களே! நீயே அவற்றில் தலை சிறந்த ஆலயம். உன் வாழ்க்கையில்தான் எத்தனை ஏற்ற , இறக்கங்கள். ஆனால் அவற்றையெல்லாம் உள் வாங்கி இன்று நிமிர்ந்து நிற்கின்றாய். இரவியென அறிவொளி வீசி நிற்கின்றாய்! உன் அறிவொளியில் இவ்வுலகம் ஒளிரட்டும்!

நீ! எனக்கு வழங்கிய அனைத்துக்கும் நன்றி! நன்றி!”

இப்பதிவு மீண்டும் என் யாழ் பொது நூலகத்து அனுபவங்களை இரை மீட்டிட வைத்து விட்டது. மாணவப்பருவத்தில் அங்கு கழித்த நாட்களை நினைவு கூர வைத்து விட்டது.

நூலகத்தின் எரிந்ததன் பின் நூலகத்தினர் பொதுமக்களிடமிருந்து நூல்களை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டிருந்தனர். அப்போது என்னிடமிருந்த நூல்கள் சிலவற்றையும் அன்பளிப்பாகக் கொடுத்தபோது மனதுக்குச் சிறிது திருப்தி ஏற்பட்டது.


3.

- வ.ந.கிரிதரன் -

யாழ் நூலகத்தைப்பற்றிய நினைவுகள் மேலும் சில விடயங்களையும் நினைவு படுத்தி விட்டது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் உற்ற தோழர்களில் ஒருவராக விளங்கிய நூலகமிது. அக்காலகட்டத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வெகுசனப்படைப்புகளை தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த காலகட்டம். கல்கியின் ‘அலையோசை’ , சாண்டில்யனின் ‘கடல்புறா’ இவையெல்லாம் நீண்ட நாள்களாக எனக்கு அகப்படாமலேயே இருந்தன. குறிப்பாக ‘அலையோசை’ நாவலுக்காகப் பதிவு செய்தும் அந்நாவல் என் கைகளுக்குக் கிடைக்காமலிருந்தது. அதற்குக் காரணங்களிலொன்று …. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிலர் தமக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இவ்வகையான அதிக தேவையுள்ள நூல்களை
எவ்வித முன் பதிவிகளுமில்லாமல் பெற்றுக்கொள்ள உதவுகின்றார்கள் என்றொரு குற்றச்சாட்டையும் கேள்விப்பட்டிருந்தேன். எனக்கு அலையோசை போன்ற நூல்கள் கிடைக்காததற்கும் அதுவே காரணமென்று எண்ணினேன்.

அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையில் என் படைப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தன. குறிப்பாக மாணவர் மலரில் என்னை அறிமுகப்படுத்திய ஈழநாடு எனது சிறுகதைகளைப் பிரசுரிக்கத்தொடங்கியிருந்த காலகட்டம். யாழ் நூலகத்தில் எனக்கேற்பட்ட நிலையினை மையமாக வைத்து கடிதமொன்றினை ஈழநாடு பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். அவர்களும் பிரசுரித்து விட்டார்கள்.

அப்பொழுது நூலகப்பொறுப்பாளராக இருந்தவர் திருமதி ரூபவதி நடராஜா அவர்கள். அவர்கள முகநூல் நண்பர்களிலொருவராகவும் விளங்கி வருகின்றார். இப்போது நான் கூறப்போகும் விடயம் அவருக்குத் தெரிந்திருக்கலாம்; மறந்திருக்கலாம். ஆனால் அக்கடிதத்தை எழுதிய கிரிதரன் நான் தான் என்பது இதுவரை தெரிந்திருக்காதென்று நினைக்கின்றேன். அக்கடிதம் அக்காலகட்டத்தில் ‘பிரதம நூலக’ராகவிருந்த அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்திருக்குமானால் அதற்காக அவரிடம் இன்று வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அக்கடிதம் நூலக ஊழியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அடிக்கடி அங்கு செல்லும் யாருக்குமே என் மேல் எவ்விதச் சந்தேகமும் ஏற்பட்டிருக்கவில்லை. மாணவப்பருவத்தில் நானிருந்தது அதற்கான காரணங்களிலொன்றாக இருந்திருக்கக் கூடும். ஆனால அக்காலகட்டத்தில் நூலக அங்கத்தவராகவிருந்த கிரிதரன் என்னும் பெயருள்ள இன்னுமொருவர் பேரில் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர் குளப்பிட்டியும் மானிப்பாய் வீதியும் சந்திக்குமிடத்திற்கண்மையில் , குளப்பிட்டி வீதியில் வசித்தவர். அவருடைய சகோதரியொருவர் யாழ் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவிருந்தவர். யாழ்ப்பாண நூலக ஊழியர்கள் ஈழநாட்டுக் கடிதமெழுதியவர் அவர்தானென்று நினைத்து குளப்பிட்டி கிரிதரனையும் , அவரது சகோதரியையும் அவர்கள் நூலகம் சென்றபோது திட்டித்தீர்த்திருக்கின்றார்கள். இதனால் ஆத்திரமுற்ற குளப்பிட்டி கிரிதரன் ஈழநாடு பத்திரிகை நிறுவனத்துக் சென்று எனது அராலி
வடக்கு முகவரியைப்பெற்று அங்கு சென்றிருக்கின்றார். அப்போது நான் ஆச்சி வீட்டில் யாழ்ப்பாணத்தில் தங்கி நின்றதால் அவரைச் சந்திக்கவில்லை.

பின்னர் அவ்விடயம் பற்றி அறிந்து குளப்பிட்டி வீதியில் வசித்துக்கொண்டிருந்த நண்பர் அநபாயனுடன் குளப்பிட்டி கிரிதரனின் வீட்டுக்குச் சென்றேன். அப்பொழுது அவர் அங்கிருக்கவில்லை. அங்குள்ளவர்களிடம் நூலகப்பிரச்சினைக்குக் காரணமான கிரிதரன் நான் தான் என்றும், நான் அப்பிரச்சினையைக் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறிவிட்டுத் திரும்பினேன்.

அதன் பின்னர் மீண்டுமொரு கடிதமொன்றினை ஈழநாடு பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். அதில் நூலகம் தற்போது மீண்டும் சிறப்பாக இயங்குவதைக் குறிப்பிட்டு , ஊழியர்களின் நடத்தையையும் பாராட்டியிருந்தேன். ஈழநாடு அக்கடிதத்தையும் பிரசுரித்தது. அத்துடன் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

திருமதி ரூபவதி நடராஜா யாழ் நூலகம் பற்றிய ‘யாழ்ப்பாணப்பொது நூலகம் அன்றும் இன்றும்’ என்னும் நூலானது நிச்சயம் யாழ் நூலகம் பற்றிய நல்லதோர் ஆவணமாக வி:ளங்கும். விழா சிறப்புறவும் , வெற்றியடையவும் மீண்டும் எனது வாழ்த்துகள்..