மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (35 & 36)

(35) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

வெங்கட் சாமிநாதன்இப்போதும் நினைவிலிருந்து இன்னும் இரண்டு படங்களைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். இம்மாதிரி படங்கள் தயாரிக்கவேண்டும், தம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையை, மனிதர்களைப் பற்றிச் சொல்லவேண்டும், அதுவும் சினிமாவாக உருப் பெறவேண்டும் என்ற நினைப்பு தமிழில் இது வரை எவருக்கும் வராத காரணத்தால், நம்மிலிருந்து அதிகம் வேறுபடாத, அதாவது வாழ்க்கை அம்சங்களில், சினிமா உலக வசதிகளில் அதிகம் வேறுபடாத என்று அர்த்தப் படுத்திக்கொள்கிறேன், அப்படி வேறுபடாத, நாமும் நம் வாழ்க்கை போலத்தான் இவர்களதும், நம்மைப் போன்றவர்கள் தான் இவர்களும் என்று நாம் இனம் காணக்கூடிய கன்னட, மலையாள படங்களிலிருந்தே உதாரணம் எடுத்துக்கொள்கிறேன். நான் ஏதும் இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் போகவில்லை. நமக்குள்ள சுதந்திரம் தரப்படாத, மதக் கெடுபிடிகளும், அரசியல் கெடுபிடிகளும் நிறைந்த, அரசு ஏற்றுக்கொள்ளாத (அப்படி ஏற்றுக்கொள்ளாத அம்சங்கள் படத்தில் என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை) படங்களைத் தயாரித்ததற்காக சிறைவாசம் செய்யும் இயக்குனர்களைக் கொண்ட இரான் நாட்டிலிருந்தும் கூட நான் உதாரணங்களைத் தேடவில்லை. நமக்கு நயனதாராவையும் அசீனையும்  பிரித்வி ராஜையும், இன்னும் பல டஜன் கனவுக் கன்னிகளையும் நக்ஷத்திர நாயகர்களையும் தந்த மலையாளத்திலிருந்தும், நம் உலகத் தமிழினத் தலைவரும் புராணப் படங்களில் மூழ்கித் தோய்ந்திருந்த தமிழ் சினிமாவை மீட்டெடுத்து பகுத்தறிவுப் பாதைக்கு இழுத்து வந்து விமோசனம் அளித்த கலைஞர் அவர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று அழைத்து மகிழ்ந்திடும் சரோஜா தேவி, கனவுக்கன்னி ரம்யா, இப்படி நாயகிகளும், பிரகாஷ் ராஜ், ஆக்‌ஷன் கிங், அர்ஜுன், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், நூற்றுக் கணக்கீல் உள்ள இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு நம் தமிழ் சினிமா என்னவெல்லாம் சாத்தித்துள்ளது, அதே மலையாளமும் கன்னடமும் வளர்க்கும் சினிமா கலாசாரம், நமக்குத் தெரியாத, அல்லது நமக்கு வேண்டாத, தெரிந்து கொள்ள விருப்பமுமில்லாத அந்த கலாச்சார உலகத்திலிருந்து சில உதாரணங்களைத் தரலாம் என்று எனக்கு எண்ணம்.

ஏனெனில் அந்த சினிமா தான் சினிமா என்ற பெயருக்கு தகுதி பெற்றது, என் பார்வையில். அது தான் உண்மையான நேர்மையுமான சினிமா உலக முயற்சிகள் இந்த பெயர் தகுதி பெற தமிழ்த் திரையுலகில் கிடைப்பது வெகு சிலவே. ஆரம்பத்திலிருந்து இன்று வரைய, 1930 களிலிருந்து 2012 வரைய காலத்தில் குப்ப9யாகக் குவித்து மேடிட்டுள்ள பல்லாயிரம் திரைப் படங்களில் சினிமா என்று சொல்லத் தகுந்தது ஒரு சில தான் என்றால், தமிழில் சினிமா இல்லையென்று தான் பொருள். இப்படி நான் சொல்வது மொள்ளமாறித்தனம் என்று ஒரு அன்பர் குறிப்பிட்டுள்ளார். மொள்ளமாறித்தனம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் ஆத்திரம் மேலிட்டு பதில் சொல்லும் வகையறியாது கோபம் கொப்புளிக்க வசையில் இறங்கியுள்ளார் என்றே இதற்குப் பொருள். அவருக்குத் தெரிந்ததை அவர் செய்கிறார் .எனக்குத் தெரிந்ததை நான் செய்கிறேன் “உன்னெ எவண்டி பெத்தான்……பெத்தான்,…..… அவன்..செத்தான் செத்தான் …….” என்று சிம்பு பாடி ஆடும் பாட்டையும் நடனத்தையும் பார்த்துக் கேட்டு ஆழ்ந்து மகிழ்ச்சியில் திளைக்கட்டும். என் வாழ்த்துக்கள். அவரும் வாழ்வேண்டும். சிம்புவும் வாழ்வேண்டும். இது மாதிரியான கலைப் படைப்புக்களைத் தரும் தொழிலும் வாழவேண்டும். இதைப் பார்த்து மகிழும், பரவசப்பட்டுக் கொண்டாடும் அரசியல் தலைமைகளும் வாழ்வேண்டுமே. இல்லையா?

என் உலகமும் என் சினிமாவும் வேறு. அதற்கான சூழல், கலாசாரம் எங்கு இருக்கிறது என்று ஒரு தேடல் எனக்கு.

மலையாளமும், கன்னடமும் ஏதும் வேறு உலகில் வாழ்வில்லை. நம் அண்டை நிலத்தவர்கள் தாம். அங்கு ராஜ் குமார்களும் உண்டு. கிரீஷ் காசரவல்லியும் உண்டு. சீமாக்களும் உண்டு. அரவிந்தன்,களும் உண்டு. இங்கு நம்மிடம் ஹிட் படங்கள் தருபவர்களுக்கே இடம் உண்டு. எம்.ஜி.ஆரையும், ரஜனி காந்தையும் அவர்கள் எங்கு பிறந்திருந்தாலும், என்ன மொழி பேசினாலும், தமிழ் மண்ணில்தான் வளரத் தக்கவர்கள் என்று தமிழ் ரசிகர்களுக்கென்றே கடவுள் படைத்து இங்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தோன்றுகிறது. நாம் அவர்களை மக்கள் திலகமாக்கி, புரட்சி ந்டிகர்களாக்கி, சூப்ப்ர் ஸ்டார்களாக்கி, பாலாபிஷேகம் செய்து, மொட்டையடித்து மண்சோறு தின்று பூஜிக்கிறோம். நமக்குத் தெரிந்ததை நாம் செய்கிறோம்.  .

ஆக மலையாள மண்ணில் தான் “ஓரோரிடத்து பயில்வான்” போன்ற ஒன்று விளைவது சாத்தியம். அது ஏதோ மிகச் சிறந்த கலைப்படைப்பு என்று நான் சொல்ல வரவில்லை. இது ஏதும் சரித்திரம் படைத்து விடவில்லை. மௌண்ட் ரோட் நடைபாதையில் எதிர்ப்படும் எந்த ஒரு சாதாரண நடைபாதையாள் போல், இதுவும் ஒரு மலையாளப் படம். அவ்வளவே. ஆனால் அதில் தமிழ்த் திரையுலக மசாலாக் குப்பை எதுவும் இல்லை. ஒரு இரண்டு நிமிடக் காட்சி தவிர. ஆனால் ஒன்று. இம்மாதிரியான நேர்மையும் உண்மையுமான கேரள வாழ்க்கையின் பிரதிபலிப்புகளைக் கொண்ட திரைப் படங்கள் எழும் சூழலில் தான் கலைகள் மலரும்.

நினைவிலிருந்தே எழுதுகிறேன். இத்தொடர் எழுத ஆரம்பித்த போது போன வருடம் எப்போதோ பார்த்த இந்த மலையாளப் படத்தையும் முன் சொன்ன ஒடியாப் படத்தையும் தான் மனதில் கொண்டு எழுத ஆரம்பித்தேன் இப்போது தான் இவற்றின் நேரம் வாய்த்து இருக்கிறது. விவரங்கள் பல மறந்தும் போய்விட்டன.

ஒரோரிடத்து பயில்வான் என்றால் அந்தந்த ஊர் பயில்வான் என்று பொருள் என்று நினைத்துக் கொள்கிறேன். இது ஒரு பயில்வானை மையமாகக் கொண்ட கதை. பஹல்வான் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் பயில்வான் என்று சொல்வதைப் போல மலையாளத்திலும் பயில்வான் என்று தான் வழங்குகிறது.

கிராமத்துச் சூழல். முன் இருட்டில் தவளை பிடிப்பவர்கள் யாரோ ஒருவன் நதியை நீந்திக் கரையேறுவதைப் பார்க்கிறார்கள் தவளை பிடிக்க வந்தவர்களில் ஒருவனிடமிருந்து துவாலையை உருவி தலை துவட்டிக்கொண்டு திருப்பி விட்டெறிகிறான். இப்படி ஆரம்பிக்கிறது படம். அவன் அங்கேயே ஒரு மரத்தடியில் படுத்துறங்குகிறான். அவனுக்குப் பசி. யார் நீ என்று எழுப்பிக் கேட்பவர்களிடம் விசாரிக்கிறான். அவனைக் கிராமத்துக்கு அழைத்து வந்து ஒரு சின்ன கடையும் தையல் மெஷினும் வைத்திருக்கும் ஒருவனிடம் சேர்த்து பயில்வானை அறிமுகப் படுத்துகிறான். பக்கத்திலிருக்கும் கடை யாருடையது என்று பயில்வான் கேட்க, அதுக்கும் நான் தான் முதலாளி என்று இவன் பெருமையுடன் சொல்ல, அவன் அந்தக் கடையில் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பிக்கூடையிலிருக்கும் முட்டைகள் ஒவ்வொன்றாக உடைத்துச் சாப்பிட்டு விடுகிறான். கூடை காலி. திகைத்துப் போய் இருக்கும் முதலாளியிடம் எவ்வளவு காசு கொடுக்கணும் என்று கேட்டு தன் பையிலிருந்து நோட்டு ஒன்றைக்கொடுக்க, “சரி இந்த ஆள் பசையுள்ள ஆள் தான் என்று மகிழ்ந்து போகிறான். அங்குமிங்கும் உள்ள ஜனங்கள் அந்த இடைத்தைச்  சுற்றிக் கூட்டமிடுகிறார்கள். கடை முதலாளிக்கு தான் ஒரு விஐபி ஆகிவிட்ட சந்தோஷம். பயில்வானிடம் அலட்சியமாக இருந்தவன் இப்போது வெகு பவ்யமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு  எட்டி நின்று அவன் கட்டளைக்குக் காத்திருக்கும் உதவியாளாக தன்னை வரித்துக் கொள்கிறான்.

பயில்வானுக்கு இருக்க இடம் வேண்டும்.. பசி எடுக்கும் போது சாப்பிட வேண்டும். அதுக்கு காசு வேண்டும். தன் கடைக்கு வரும் வாடிக்கை ஒருத்தி, கோழி வளர்ப்பவள், ஒரு வயது வந்த பெண்ணுக்கு அம்மா அவள், அவளிடம் பயில்வானுக்கு சாப்பாடும் இடமும் கொடுக்கச் சொல்கிறான். பயில்வான் தண்டால் பஸ்கி எல்லாம் முறையாகச் செய்கிறான். பயில் வான் அங்கு வந்த காரணம் எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு குஸ்திப் போட்டியில் தோற்றுவிட்டான். தோற்ற இடத்தில் வாழக்கூடாது என்று சம்பிரதாயமோ, அல்லது அது தான் போட்டி நிபந்தனையோ. . அதனால் தான் கிராமத்தை விட்டு வெளியேறியவன் அவன். அந்தக் கிராமத்துக்கு வந்து முட்டை வகையறா சப்ளை செய்ய ஒரு சின்ன டெம்போ ஓட்டிக்கொண்டு வருபவனுடன் சண்டை. பயில்வானைக் காட்டி மிரட்டுகிறான் தையல்கடைக்காரன். பந்தயம். நடக்கிறது. பயில்வான் இழுத்துப் பிடிக்க ஸ்டார்ட் செய்த வண்டி நகரமறுக்கிறது. பயில்வான் தன் பலத்தை நிரூபித்து கிராமத்துக்கு வீரனாகிறான். சம்பாதிக்க வேண்டுமே. தினம் கோழிக்கறி வேண்டுமே. தையல்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. நோட்டீஸ் அடித்து தன் கிராமத்திலும் பக்கத்து கிராமங்களிலும் விளம்பரம் செய்து ஒரு போட்டி வைக்கலாம். காசு வரும். செலவு கொஞ்சம் ஆகும். ஆனால் டிக்கட் வைத்து காசு பார்க்கலாம். போட்டி நடக்கிறது.  கிராமத்துக் காட்சிகளும் சரி, குஸ்திப் போட்டியும் சரி, மிக யதாரத்தமான காட்சிகள். நம்மூர் ஸ்டுடியோ ஸ்டண்ட் மாஸ்டர் தயாரிக்கும் குஸ்திப் போட்டி அல்ல. யாரும் அடி வாங்க்கிகொண்டு திரும்பத் திரும்ப வரவில்லை. யாரும் ஆகாயத்தில் அழகாக சுருண்டு பறந்து மிதக்கவில்லை பின் மறுபடியும் எழுந்து வரிசையில் நின்று அடி வாங்கிக் கொண்டு மறு[படியும் விழவில்லை. நிஜமான, நம்பிக்கை தரும் குஸ்திப் போட்டி. போட்டிக் காட்சிகள். கூட்டங்கள்.

தனக்குக் கிடைத்த வரும்படியை தனக்கு வேண்டியவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறான். தையல் கார கடை முதலாளிக்கு பயில்வானை கிராமத்திலேயே தங்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. கோழி வளர்க்கும் வாடிக்கைக் காரியிடம் சொல்லி அவள் மகளை பயில்வானுக்குக் கட்டிக் கொடுக்கிறான். 
 
இந்தப் படத்திலேயே தமிழ் சினிமாவை நினைவு படுத்தும் காட்சி அந்த முதல் இரவுக் காட்சிதான். கனவுக்காட்சி இல்லை. பாட்டும் குத்தாட்டமும் இல்லை. ஆனால் பயில்வானுக்கு குஸ்தியும் தொடை தட்டி போட்டிக்கு சவால் விடுவதும் தான் தெரியும். கட்டிக்கொண்டவளிடம் தான் பயில்வான் தான் இங்கும் பயில்வான் என்று தான் காட்டுகிறான். அவளைத் தூக்கி பந்து விளையாடுகிறான். தொடை தட்டு கிறான். தன் எதிரிக்கு சவால் விட்டு சுற்றிச் சுற்றி வருவது போல இங்கும் படுக்கை அறையை குஸ்திக் களமாக்கிவிடுகிறான். இது வேடிக்கைக்காகச் செய்த காட்சியா இல்லை டைரக்டருக்கு வேறு ஏதும் சிந்தனைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை. இந்த இரண்டு நிமிடக் காட்சியை நாம்  மறந்து விடலாம். மற்றபடி படம் முழுதிலும் அபத்தங்களேதும் இல்லை.என்று தான் என் நினைவு.

ஒரு குஸ்திப் போட்டியில் சம்பாதித்த காசு எவ்வளவு நாட்களுக்கு தாங்கும்? சம்பாத்யம் இல்லாது கர்லாக்கட்டை சுற்றிக்கொண்டும் கோழிக்கறி தின்று கொண்டும் இருக்கும் மாப்-பிள்ளை யாருக்கு வேண்டும்? மாமியாருக்கும் பெண்ணுக்கும் சண்டை. மாமியாரின் ஏளனமும் வசையும் கேட்க மாப்பிள்ளை பயில்வானுக்கும் முடிவதில்லை. ஒரு நாள் கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். தான் திரும்பும் வரை தன் குஸ்திப் பயிற்சி சாதனங்களை மழையில் நனைந்து கெடாமல் பத்திரமாகப் பார்த்துக்கொள், நான் திரும்பி வருவேன் என்று சொல்லிக் கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். மாமியார்க்காரி தையல் காரனைத் திட்டுகிறாள். எல்லாம் உன்னால் வந்த வினை என்று./

அவள் பெண்ணுக்கு, பயில்வானுக்குக் கட்டிக்கொடுக்கும் முன் அந்த கிராமத்துப் பையன் ஒருவனிடம்  சினேகம் இருந்துள்ளது. இப்போது அந்தப் பையன் இனி நமக்கில்லை என்று ஒதுங்கி இருக்க, கடைக்கு சாமான்கள் சப்ளை செய்யும் ஆட்டோக்காரனிடம் இந்தப் பெண் தன்னை இழக்கிறாள். அந்தப் பையன் தன்  பழைய சினேகிதத்தை மறக்காது, அவளைத் தான் காப்பாற்றுவதாகச் சொல்கிறான்.

ஒரு நாள் பயில்வான் திரும்பி வருகிறான். திரும்பியவனுக்கு தன் வீட்டு வாசலில் அந்தப் பையன் உட்கார்ந்திருக்க உள்ளே தாயும் மகளும். தான் இல்லாத சமயத்தில் நடந்ததை அவன் தன்  போக்கில் யூகித்து வெளியே வந்து அந்தப் பையனை ஓட ஓட விரட்டி அடித்து துவம்சம் செய்து வாய்க்காலில் எறிகிறான். திரும்பி வந்தவனின் குரோதத்தைப் பார்த்த அந்தப் பெண் அரிவாளை எடுத்து மிரட்டுகிறாள். பயில்வானின் சட்டைகிழிந்து மார்புத் தோலில் அரிவாள் கீறிக் காயம். அவளிடமிருந்து அரிவாளைப் பிடுங்கிக்கொண்டவன் அவளை வெறித்துப் பார்க்கிறான். “நான் வேண்டாமா உனக்கு?” என்று அவன் வெறுப்பும் கோபமுமாகக் கேட்க, “வேண்டாம்” என்று தான் அவளிடமிருந்து தீர்மானம் தொனிக்கும் பயம் கலந்த மெல்லிய பதில் வருகிறது.  அரிவாளைத் தரையில் வீசி எறிந்தவன் கிராமத்தை.விட்டு வெளியேறுகிறான். கால்வாயில அடிபட்டுக் கிடக்கும் தன் பால்யகால சினேகிதனை அவள் வீட்டுக்கு அழைத்து வருகிறாள்.

இந்தக் கதையும் சுற்றியிருக்கும் கிராமத்து ஜனங்களும், (கேரளத்தில் ஒரு கிராமத்து ஜனங்கள் எவ்வளவு இருப்பார்கள்?) பயில்வானைச் சுற்றியே வருகிறார்கள். மையப் பாத்திரம் பயில்வான் தான். அவன் பிரசினைகள். தான். அவனும் ஒரு சாதாரண மனிதன். பயில்வானாகிவிட்ட ஒரு கிராமத்தான். சினிமா ஹீரோ இல்லை.

அடுத்த வாரம் கன்னட படம் மனே (வீடு) பற்றி எழுதுகிறேன். கிரீஷ் காஸரவல்லியினது. 


(36) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

வெங்கட் சாமிநாதன்மனே என்னும் கன்னடப்படம் பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். மனே இரண்டு மாதங்களுக்கு முன் லோக் சபா தொலைக்காட்சியில் பார்த்திருந்த ஞாபகத்தில், ஓரோரிடத்து பயில்வான் என்னும் மலையாளப் படம் பற்றி எழுதி வரும் போது ஒரு கன்னடப் படம் பற்றியும் அதுவும் சமீபத்தில் பார்த்த படம் என்ற காரணமாகவும் அது பற்றி பிரஸ்தாபித்தேன். மேலும் கன்னடத்தில் சினிமா என்னும் கலைச் சாதனத்தை அறிந்தவர்கள், அதில் சீரியஸாக ஆழ்ந்து தாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி பேசுபவர்கள் பலர் உண்டு. அங்கு பலர் உண்டு என்றேன். தமிழ் நாட்டில் ஒருவரைக் கூட காணோம். அங்கு இருக்கும் ராஜ்குமார் போன்ற மாடல்கள் தான் நம்மிடம் உண்டு. நாம் அங்கிருந்து தமிழ் படங்களுக்காக இறக்குமதி செய்து வரும் எம்.வி..ராஜம்மா, சரோஜா தேவி, போன்றவர்களுக்குஅங்கு தேவை இருக்கவில்லை. சரி அததது அந்தந்த மண்ணுக்கான குணம். சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன். நம்மவர்கள் செமத்தியாக மூளைச் சலவை செய்யப்பட்டு வருவதால், ஏதும் அதிகம் பலன் இருப்பதில்லை.

போகட்டும். கன்னட சினிமாவில் வித்தியாசமாக செயல்படுபவர்கள் பலர் உண்டு என்று சொன்னேன்.
அவர்களில் எல்லாம் கிரிஸ்காசரவல்லியை எனக்கு மிகவும் பிடிக்கும். எழுதுபதுகளில் கட ஸ்ராத்தா பார்த்ததிலிருந்து. அவரது ஒரு படம் க்ளோப் டாக்கீஸ் பற்றிக்கூட இங்கு முன்னரே அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.

மனே நகரத்தில் வீடு தேடும், தேடிய வீட்டில் நிம்மதியாக குடியிருக்க விரும்பும் சாதாரண நடுத்தரக் குடும்பத்து தம்பதிகளின் அவஸ்தைகளைப் பற்றியது. இது நம் பெரும்பாலோரின் அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளைப் பற்றியது.  இதுவும் ஒரு சினிமாவுக்கான கதையா என்று அதைப் பற்றிய சிந்தனை யாருக்கும் எழும் முன்னரே அதை உதறி எறிந்துவிடும் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் நம் தயாரிப்பாளர்களிலிருந்து ரசிகர்கள் வரை. ஆயினும் ஒரு காலத்தில் இத்தைகைய பைத்தியக்கார எண்ணங்களோடு தான் தமிழ் சினிமாவுக்குள் ஒருவர் புகுந்தார். பாலுமகேந்திரா என்று பெயர் அவருக்கு. வெகு சீக்கிரம் அவர் புத்தி தெளிந்து அத்தகைய பைத்தியக்கார எண்னங்களிலிருந்து விடுபடச் செய்துவிட்டோம் நாம். நாம் என்றும் நம் பண்பாட்டை கறைஏதும் படாமல் பாது காக்கிறவர்கள்.

போகட்டும். கர்நாடக சினிமா தானே. ஆகையால் நம் பண்பாடுக்கு எவ்வித களங்கமும் விளைந்து விடாமல் அதைப் பற்றிக் கொஞ்சம் கேட்கலாம்.

புதுமணத் தம்பதிகள். கணவன் முதலில் வீடு தேடி வருகிறான். அவனுக்கு வீடு மறுக்கப்படுகிறது. பின்னர் தன் மனைவியுடன் வரும்போது ஒரு பெரியவர் அவர்களை வரவேற்று வீட்டை வாடகைக்குக் கொடுக்கிறார். தம்பதிகள் குடியேறுகின்றனர். வீடு எல்லாம் உள்ளே சௌகரியமாகத்தான் இருக்கிறது. சௌகரியம் என்றால், தனியே இருக்கலாம். எவ்வித வெளித் தொந்திரவும் இல்லாமல். அது தானே புது மணத் தம்பதிகள் விரும்புவது? சந்தோஷமாகத் தான் இருக்கிறது.. கணவன் ராஜண்ணாவாக நடிப்பது நாஸருத்தீன் ஷா. மனைவி கீதாவாக தீப்தி நவல். கணவனுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் அது அதிக நேரம் நீடிப்பதில்லை. வீட்டைச் சுற்றி நிறையக் குடும்பங்கள். என்னென்னவோ பட்டறைகள். தொழிற்கூடங்கள். இரவு முழுதும் ஒரே சத்தம். தாங்க முடிவதில்லை. என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள், அந்த சத்தத்தை மறந்து பொழுதைக் கழிப்பதற்கு. முடிவதில்லை.

கீதாவுக்கு அங்கு ஒரு சினேகம் கிடைக்கிறது. தனியாக வாழும் அவளுடைய அல்லது ராஜண்ணாவின் உறவுக் கார பெண்மணி. மகாத்மா படத்தில் கஸ்தூரிபாவாக நடித்த ரோஹிணி ஹட்டங்கடி. மத்திம வயதுக் காரி. நல்ல செல்வாக்கும் சௌகரியங்களும் கொண்டவள். தன்  கணவனை விட்டுப் பிரிந்து வாழ்பவள். அவளுடன் கீதாவுக்கு நெருங்கிய சினேகம் ஏற்படுகிறது. ரோஹிணி ஹட்டங்காடிக்கு ஒரு இன்ஸ்பெக்டருடன் நெருங்கிய தொடர்பு. அது தனியாக வாழும் அவளூக்கு ஒரு சௌகரியமும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. கீதாவின் சங்கடத்தை உணர்ந்து அவள் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி இரவு  நேரங்களில் வேலை ஏதும் அந்த பட்டறைகளில் நடக்கக்கூடாது, பகலில் மாத்திரம் வேலை செய்யவேண்டும்  என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது கொஞ்ச நாட்கள் அமைதியாகக் கழியவும் தம்பதிகளுக்கு சந்தோஷம் தான். ஆனால் அது அதிக நாட்கள் நீடிப்பதாக இல்லை. மறுபடியும் இரைச்சல் கொஞ்ச நாட்களில் மீண்டும் தொடங்கி விடுகிறது. இரவு பகல் என்று பாராமல். ஏன்? ரோஹிணி ஹட்டங்காடி இன்ஸ்பெகடர் மூலம் கார்ப்பரேஷன் அதிகாரிகளை அணுக முடியுமானால், பட்டறைக்காரர்களும் மற்றவர்களும் அதே கார்ப்ப்ரேஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தம் வழிக்குக் கொண்டுவர முடியாதா என்ன? உலகத்தில் நடக்காத காரியமா என்ன? மறுபடியும் இன்ஸ்பெக்டரிடம் முறையீடு போகிறது. இது தானே நகர வாழ்க்கை! இன்ஸ்பெக்டர் மறுபடியும் தன்  அதிகாரத்தைக் காட்டுகிறார். பட்டறைகள் முழுவதுமாக அகற்றப் படுகின்றன. மக்கள் வாழும் பகுதிகளில் பட்டறைகள் எப்படி செயல்பட முடியும்? சட்டம் என்று ஒன்று இருக்கிறதே. சரி.ஆனால் பட்டறைகளை நம்பி வாழ்ந்த எத்தனை ஏழைக் குடும்பங்கள், குழந்தைகள், குட்டிகள். அவர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளார்களே. அவர்கள் பிழைப்பக் கெடுத்த பாவத்துக்கு ஆளாகிவிட்டார்களே இந்த தம்பதிகள், தம் புதுமண சுக வாழ்க்கைக்காக. அவர்கள் வேண்டும் அமைதிக்காக இத்தனை குடும்பங்கள் பிழைப்பை இழந்து தவிக்கவேண்டுமா? சுற்றி இருப்போர் அத்தனை பேரின் பார்வையும் கோபமும் இவர்களைச் சாடுகின்றன. கீதாவுக்கு இதைப் பார்க்கப் பொறுப்பதில்லை. ஆனால் இந்த நிம்மதியும், குற்றம் சாட்டும் அயலார் பார்வைகளும் அதிக காலம் நீடிப்பதில்லை. பட்டறைகள் காலியான இடத்தில் இன்ஸ்பெக்டரின் உறவிக்காரன் ஒருவன் வந்து விடுகிறான். தன் வீடியோ பார்லரோடு. பட்டறைச் சத்தம் போய் வீடியோ பார்லரின் சத்தம் வந்து விடுகிறது. இனி யாரிடம் போய் புகார் செய்வது.? வீடியோ பார்லர் வந்தது மட்டுமல்லாமல் இன்ஸ்பெக்டரின் உறவுக்காரன், வீடியோ பார்லர் சொந்தக் காரன், ராஜண்ணா தம்பதியினரை வீடியோ பார்லரின் திறப்பு விழாவுக்கும் அழைக்கிறான். இந்தப் புதிய இரைச்சலில் பங்கு கொண்டு அதைக் கொண்டாடுவதாகவும் காட்டீக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இது தவிர தம்பதியினரிடையே இன்னுமொரு பூசல். ரோஹிணி ஹட்டங்கடியுடன் கீதா பழகுவதை ராஜண்ணா விரும்புவதில்லை. தடுக்கிறான். ஆனால் அவள் உறவுக்காரி. சினேகமாகப் பழகுகிறாள். கணவனை விட்டுப் பிரிந்திருப்பவள். தனியே தன் சுதந்திரத்துடன் வாழ்கிறவள். உதவுகிறவள். பட்டறையில் வேலை செய்தவர்களும் ஏழைகள் தான். தம் பிழைப்புக்கு ஏதோ செய்கிறார்கள். விரட்டப்பட்ட குடும்பங்களில் ஒரு குடும்பம் தமிழ்க் குடும்பம் . அவர்கள் போய் குடியேறிய சேரியை தகர்க்கிறார்கள். யார்? ராஜண்ணாவின் அலுவலகம் தான். அவர்களுக்குஆறுதல் சொல்லக் கிளம்பிய ராஜண்ணா இதற்கு என்ன செய்யமுடியும்? கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் புகார் செய்தது போல தன் அலுவலகத்தோடு மோத முடியுமா?

இது தான் இன்றைய வாழ்க்கையின் சிக்கல்கள். எப்படித் திரும்பினாலும் சிக்கல். பாதிக்கப் படுபவர்கள் இருக்கிறார்கள்.  எந்த பிரசினையிலிருந்தும் யாரும் பாதிக்கப்படாத தீர்வு என்பதோ, பிரசினைகளிலிருந்து முற்றிலுமான விடுதலை என்பதோ இல்லை. .ஒரு பிரசினையிலிருந்து இன்னொரு பிரசினைக்கான தாவலாக, நகர்வாகத்தான் வாழ்க்கை இருந்து விடுகிறது. அப்படித்தான் வாழ்க்கை வாழ்வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

iஇப்படியும் ஒரு இயக்குனர் இருக்கிறார், நமது அண்டை நிலத்தில். ராஜ்குமாருக்கு சிலை எழுப்பும், நம் கலைஞர் கன்னடத்துப் பைங்கிளி என்று போற்றும் சரோஜா தேவியை அளித்த, நமக்கு பிரகாஷ்ராஜையும் இன்னும் மற்றோரையும் தந்த சமூகத்தில், 1977 லிருந்து சுமார் முப்பத்தைந்து வருடங்களாக கடஸ்ராத்தாவிலிருந்து இன்று வரை தம் சமூகத்தோடு தம் திரைப்படங்களோடு சம்பாஷித்துவருபவர். அவரையும் அவர் போல இன்னும் சுமார் அரை டஜன் கலைஞர்களையும் தம் கலைமுகமாக உலகின் முன் நிறுத்தி வருகிறது கர்நாடகம். கன்னட சினிமாவில் நம்மூர் சிவாஜி போல அங்கும் ஒரு ராஜ்குமார் இருந்தார் தான். அவருக்கு மணிமண்டபமும் சிலை எழுப்பலும் நடக்கின்றன தான். அவர்களது திரையரங்கிலும் தொலைக் காட்சிகளும் நம்மூர் கூத்தடிப்புகள் போல கூத்தடிப்புகளும் உண்டு தான். ஒரே வித்தியாசம். நம்மூரில் கூத்தடிப்புகள் மாத்திரமே உண்டு. அங்கு பட்டாப் ராம ரெட்டிகளும், காரந்துகளும், ஜி.வி. அய்யர்களும், கர்நாடுகளும்  எம்.எஸ் சத்யூக்களும், காஸரவல்லிகளும் உண்டு. கன்னட சமூகத்திற்கு பெருமை சேர்ப்பவர்களும் அதன் கலை முகத்தை வெளி உலகுக்குக் காட்டுபவர்களும் இவர்கள் தான். நம் சமூகத்தில் இவர்கள் இல்லை. இவர்களுக்கு இடமும் இல்லை.

vswaminathan.venkat@gmail.com