வாசிப்பும், யோசிப்பும் 354: மகாகவியின் குறும்பா தமிழுக்குப் புது வரவா?>

வாசிப்பும், யோசிப்பும் 354: மகாகவியின் குறும்பா தமிழுக்குப் புது வரவா?>
– கவிஞர் மகாகவியின் குறும்பா பற்றிய பயனுள்ள , ஆரோக்கியமான முகநூல் உரையாடலுக்கு ஜவாத் மரைக்கார் அவர்களின் ‘நவமணி’க் கட்டுரை வழிவகுத்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றி. எனது முகநூற் பதிவும் , அதனையொட்டிய முகநூல் எதிர்வினைகளும் கீழே தரப்பட்டுள்ளன. – வ.ந.கி –


எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவொன்றில் ‘நவமணி’ பத்திரிகையின் ‘ஜலதரங்கம்’ பகுதியில் வெளியான ‘மகாகவியின் குறும்பா LIMERICKS’ என்னும் கட்டுரையினைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் ‘குறும்பா தமிழுக்குப் புதிய வடிவமன்று. ஏற்கனவே தமிழிலுள்ள நந்தவனத்திலோர் ஆண்டி’ என்னும் .சித்தர் பாடலையொத்தது’ என்றும் கூறியிருந்தார். அத்துடன் மேனாட்டுக் கவிதை வடிவங்களிலொன்றான ‘லிமரிக்’வுடன் ஒப்பிட்டு குறும்பாவும் .லிமரிக் கவிதை வடிவமும் ஒன்றல்ல என்றும் கூறியிருந்தார்.


மகாகவியின் குறும்பா கவிதை வடிவத்தைப் பலர் ‘லிமரிக்’ என்னும் ஆங்கிலக் கவிதை வடிவத்தின் தமிழ் வடிவமாகக் கருதுகின்றார்கள். உண்மை அதுவல்ல. குறும்பா தமிழுக்குப் புதிய வடிவம். குறும்பா நூலினை வெளியிட்ட அரசு பதிப்பக உரிமையாளர் எம்.ஏ.ரஹ்மான் ‘தமிழுக்குப் புதிய யாப்பும், புதுப் பொருள் மரபும் அமைத்து, தமிழ்க் கவிதையை வளப்படுத்தும் இக் கவிக்கோவை.’ என்று நூலுக்கான பதிப்புரையில் கூறுகின்றார்.


நூலுக்கு மிகச்சிறப்பானதொரு ‘முன்னீடு’ எழுதியிருக்கின்றார் எழுத்தாளர் எஸ்.பொ. அதிலவர் குறும்பா பற்றிய பல தகவல்களைத் தருகின்றார். அதில் அவரும் குறும்பாவை மகாகவி தமிழுக்குத் தந்த புது வடிவமாகவே குறிப்பிட்டிருக்கின்றார். குறும்பாவை லிமரிக்கின் தமிழ் மொழிபெயர்ப்பு எனக்கூறும் விமர்சகர்களை அவர் கடுமையாகச் சாடியிருப்பார். அதற்கு எடுத்துக்காட்டு பின்வரும் கூற்று:


“ஆற்றலிலக்கிய எழுத்தில் ஏற்பட்ட நபுஞ் சகத்தனத்தினலேயே ‘இலக்கிய விமர்சகர்கள்’ எனத் தம்மைக் கருதுவோர் நம் நாட்டில் அநேகர் உளர். சோம்பலை ஓம்பி, நுனிப் புல் மேய்ச்சலிடும் சுபாவமுள்ள அவர்கள், ‘குறும் பாக்கள் விமரிக்கின் மொழிபெயர்ப்பே’ என்று ஏக வசனத்திற் கூறிவிடுவார்கள். இது பிரமை அன்று. இக் குறும் பாக்களுட் சில இளம் பிறை’ மாசிகையிற் பிரசுரமான காலத்தில், தாழ்வுச் சிக்கலிஞலும், விரக்தியினுலும் சாம்பிக் கொண்டிருக்குஞ் சில ‘இலக்கியகாரர்’ இத்தகைய அபிப்பிராயம் ஒன்றைப் பரப்பியதை நான் அறிவேன்.”


இவ்விதம் விமர்சகர்கள் சிலரைச் சாடும் அவர் தொடர்ந்து இவ்விதம் கூறுவார்:


“குறும் பாக்களிலே சுயம்புவான கருத்து வீறும், மொழி வீச்சும், கற்பனை வளமும் இருக்கின்றன. இத் தன்மைகளே குறும்பா புதிய தமிழ்க் கவிதை முயற்சி என்பதை நிறுவுவதற்குப் போதுமானவை”

எஸ்.பொ.வும் ‘குறும்பா’ தமிழுக்குப் புதிய வடிவம் என்றே தெளிவாகக் கூறுகின்றார்.


அதே சமயம் ‘குறும்பா’ உருவாவதற்கு லிமரிக் கவிதை வடிவம் உதவியிருக்கின்றது என்பதை மகாகவியே தன்னிடம் கூறியதாகவும் எஸ்.பொ. மேற்படி ‘முன்னீ’ட்டில் “ஆனால் இத்தகைய கவிதை முயற்சியைத் தமிழில் அறிமுகப்

படுத்துதல் வேண்டும் என்ற எழுச்சி, லிமரிக் கவிதைகளிலிருந்த திளைப்பு ஊட்டிய அருட்டுணர்விலேதான் (1nspiration) மஹாகவிக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதும் மறுப்பதிற்கில்லை. அதை அவர் எனக்குக் கூறியுமிருக்கிறார்” என்று கூறியிருக்கின்றார்.


மேலும் குறும்பாவின் யாப்பு வடிவம் முற்று முழுதாக எவ்விதம் அமைந்துள்ளது என்பதையும் எஸ்.பொ. பின்வருமாறு விளக்கியிருக்கின்றார்:


“மஹாகவி குறும்பாவில் அறிமுகப்படுத் துஞ் செய்யுளுக்கான யாப்பு முறையை விளக்குதலும் என் கடமையாகின்றது. அத்துடன், மஹாகவி வகுத்துள்ள இந்த முறையைப் பின்பற்றப் போகின்ற கவிஞர்களுக்கு யாப்புப் பற்றிய விளக்கம் பயனுடையதாகவும் அமையும். குறும்பா ஒரே எதுகையுடைய மூன்று அடிகளைக் கொண்டது. முதலாம் அடியின் மூன்றாம் ஆறாம் சீர்களும், மூன்றாம் அடியின் கடைசிச் சீரும் ஒரே இயைபு உடையவை. ஒசை ஊறுபடாது “கா”யின் இடத்தில் ‘விளம்’ வருதலும், வெண்சீர் வெண்டளைபினிடத்து இயற்சீர் வெண்டளை வருதலும் ஆகும். இந்த மூன்று அடிகளையும் ஐந்து வரிகளில் அமைத்து விடுவதால் அமைப்பிற்கு அழகு சேர்கின்றது; “லிம ரிக்’கிற்கு ஒத்த அமைப்பினைப் பெறுகின்றது. முதல் அடியின் முதற் சீரும் நான்காம் சீரும், மூன்றாம் அடியும் இடப் பக்கம் ஒரே நேரான இடத்தில் ஆரம்பமாகி, முறையே முதலாம், இரண்டாம், ஐந்தாம் வரிகளாக அமையும், இரண்டாம் அடி மூன்றாம் நான்காம் வரிகளாக இடப்பக்கம் சற்றே உள்ளிடிந்து அமையும். எனவே, குறும்பா பின் வரும் வாய்பாட்டைக் கொண்டு அமைகின்றதெனலாம்:


காய் – காய் – தேமா –

காய் – காய் – தேமா –

காய் – காய் –

காய் – காய் –

காய் – காய் – தேமா.


இவ்வுருவம் பல ஓசை வேறுபாடுகளுக்கும் இடம் அளிப்பது. மேலும், ஈரடி இறுக்கத்திற்கு மாறு படும் இந்த மூவடிச் செய்யுள் முறை பொருளுக்கேற்ற இலகுத் தன்மையையும் எளிமையையுஞ் சேர்க்க உதவுகின்றது. முதலாம் அடி அடிகோலுவதாகவும், இரண்டாம் அடி கட்டி எழுப்புவதாகவும், மூன்றாம் அடி முத்தாய்ப்பிடுவதாகவும் குறும்பா அமைதலே சிறப்புடைத்து.”


மேற்படி ‘முன்னீ’ட்டில் எஸ்.பொ உண்மையில் ‘லிமரிக்’கிலும் பார்க்க குறும்பாவின் பார்வை அகலமானது. ஆழமானது என்றும் குறிப்பிடுவார்:


“விமரிக்கிலும் பார்க்க, குறும்பாவின் பார்வை அகலமானது, ஆழமானது என்று ஏலவே குறித்தேன். அதனை நிறுவதல் நன்று.


There was an old man of Cape Hon

Who wished he had never been born;

So he Sat om a chair Till be died of despair

That dolorous man of Cape Horn.


கேப் ஹோனில் ஒரு கிழவன் இருந்தான் தான் எப்பொழுதுமே பிறந்திருக்கக் கூடாது என விரும்பினான். எனவே, அவன் நம்பிக்கையின்மையாற் சாகும் வரை கதிரையில் அமர்ந்தான் . கேப் ஹோனின் அந்த வருத்தந் தோய்ந்த மனிதன்!. லிமரிக்கின் பிதாமகரெனக் கொண்டாடப்படும் சாட்சாத் லியர் இயற்றிய லிமரிக்கின் தமிழ் உரை இது. இதிலே கேலிச் சிரிப்பு மண்டிக்கிடக்கிறது; சிந்தனையைத் தூண்டும் கூர்மை இல்லை. அந்த ‘லிமரிக்’குடன் குறும்பாவின் பிதாமகரான மஹாகவியின் குறும்பா ஒன்றினை ஒப்பிட்டுப் பார்த்தால், பின்னவர் சிரிப்பைச் சிந்தனையைத் தூண்டும் ஆயுதமாக எவ்வாறு கையாளுகின்றார் என்பது புலப்படும்.


பெஞ்சனிலே வந்தழகக் கோனார்

பெருங்கதிரை மீதமர லானார்,

அஞ்சாறுநாள் இருந்தார்.

அடுத்ததிங்கள் பின்னேரம்

பஞ்சியினா லே இறந்து போனார்,”


மேலுள்ள குறும்பா ஜவாத் மரைக்கார் குறிப்பிட்டுள்ள சித்தர் பாடலான ‘நந்தவனத்திலோர் ஆண்டி’ குறும்பாவை ஒத்ததுபோலிருந்தாலும் அதில் பாவிக்கப்பட்டுள்ள யாப்பின்படி அவ்விதமில்லை. மேலுள்ள குறும்பாவுடன் ‘நந்தவனத்திலோர் ஆண்டி’யையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். சித்தர் பாடல் நான்கடிகளைக் கொண்டது. அடிதோறும் நாற் சீர்களையும் , அவன் , அதை என்னும் தனிச்சொற்களையும் உள்ளடக்கியது.


“நந்தவ னத்திலோ ராண்டி – அவன்

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,

கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!“


இவற்றிலிருந்து வரக்கூடிய முடிவுகள்:


1. குறும்பா லிமெரிக் கவி வடிவமல்ல. லிமரிக் கவி வடிவம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மகாகவி தமிழில் எழுதிய கவி வடிவம்.


2.தனது கட்டுரையின் இறுதியில் ஜவாத் மரைக்கார் குறிப்பிடுவது போல் குறும்பா நடையில் தனித்துவம் மிக்கது. அத்துடன் அதன் யாப்பு வடிவைப்பொறுத்து தமிழ் இலக்கியத்துக்கு, கவிஞர் மகாகவி வழங்கிய எஸ்.பொ , எம்,ஏ,ரஹ்மான் ஆகியோர் கூறுவதுபோல் கவிஞர் மகாகவி வழங்கிய புது வடிவம்.

குறும்பா நூலினை வாசிக்க: http://noolaham.net/project/05/427/427.pdf


முகநூல் எதிர்வினைகள்..

Vicky Vigneswaran அந்த நூல் என்று பார்க்கையில், சௌ கொடுத்த ஓவியங்களையும் தாண்டிப் போகலாகாது.

Sugan Paris “தென்னைமரம் ஏறுகிறான் சித்தன்
இன்ன கண்டான் அவ் வழகுப் பித்தன்
தன்னுடையை மாற்றுகிறாள் கிணற்றடியில் தங்கம்மாள்
இன்னும் இறங்கானாம் அவ் எத்தன் “
இப்படி கொச்சையாகவும் சாதிய உணர்வின் சாயலில் அவரது குறும்பா ஒன்று இருக்கு கிரி அண்ணா

Giritharan Navaratnam மேலுள்ள பதிவு ஜவாத் மரைக்காரின் கருத்துக்கான எதிர்வினையே தவிர குறும்பா நூல் பற்றிய விமர்சனமல்ல. குறும்பா தமிழுக்குப் புதிய வடிவமல்ல என்று கூறும் ஜவாத் மரைக்கார் அதனை மேனாட்டுக் கவி வடிவமான லிமெரிக் கவிதை வடிவத்துடன் ஒப்பிட்டுக் கருத்துகள் கூறிய அவரது கட்டுரை நவமணி பத்திரிகையின் ஜலதரங்கம் பகுதியில் வெளியாகியுள்ளது. அக் கட்டுரையினை ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.அதற்கான எதிர்வினை. குறும்பா பற்றிய உங்கள் நூல் விமர்சனத்தைப் பதிவு செய்யுங்கள் சுகன்.

Sugan Paris Giritharan Navaratnam முன்னர் அனிச்ச இதழில் விமர்சனம் எழுதியுள்ளேன். தற்போது இல்லை.

Giritharan Navaratnam Sugan Paris நன்றி சுகன். இணையத்தில் தேடிப்பார்க்கின்றேன்.

Vicky Vigneswaran என்ன கண்டான் அவ்வழகுப் பித்தன்…  சாதிய உணர்வின் சாயலில்…?

Sugan Paris மரம் ஏறும் ஒருவரது நிலையில் இருந்து இந்த அபத்த குறும்பாவை நோக்கவும் விக்கி அண்ணா.

Giritharan Navaratnam Sugan Paris அக்குறும்பாவுக்கான ஓவியர் செளவின் சித்திரத்தில் மரமேறும் தொழில் செய்யும் ஒருவர் பாவிக்கும் உபகரணங்கள் எவற்றையும் காணவில்லை. சித்தன், பித்தன் , எத்தன் என்று எதுகைக்காகப் பாவித்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது. மேலும் குறும்பாக்கள் எல்லாம் நையாண்டியூடு சமூக அவலங்களைக் கூறுபவை; சாடுபவை. நையாண்டியை நையாண்டியாகப் பார்ப்பதே சரியாகப்படுகின்றது.

Sugan Paris Giritharan Navaratnam இக் குரும்பாவிற்கு வேறு ஓவியங்களும் உள்ளன .

Giritharan Navaratnam Sugan Paris http://noolaham.net/project/05/427/427.pdf…

David Krishnan மரத்தில் எறியவன்
அவள் உடைமாற்றியதை
பார்த்தான்….…
.
Rajakavi Rahil மிக அருமையான பதிவு. குறும்பா மகாகவியின் தனித்துவமான புதிய வடிவம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் லிமரிக் ஒரு தூண்டுதல் ஏற்படுத்தியதையும் நாம் மறுக்க முடியாது

Giritharan Navaratnam //லிமரிக் ஒரு தூண்டுதல் ஏற்படுத்தியதையும் நாம் மறுக்க முடியாது// அவ்விதமே நூலுக்கான முன்னீட்டில் எஸ்.பொ. கூறுகின்றார். மகாகவியே அவ்விதம் கூறியதாகவும் கூறுகின்றார்.

Kokula Ruban பதிப்பாளர் எம் ஏ ரஹ்மான் என்று தவறுதலாக எழுதியுள்ளீர்கள் அவர் எம் ஏ நுஃமான்.

Giritharan Navaratnam பதிப்பாளர் எம்.ஏ.ரஹ்மான். அரசு பதிப்பக உரிமையாளர். ‘இளம்பிறை’ சஞ்சிகையை வெளியிட்டவர்.

Kokula Ruban Giritharan Navaratnam ஓ…மன்னிக்கவும்

Jawad Maraikar Giritharan Navaratnam அண்ணல் என்பவர் கிண்ணியாவைச் சேர்நத கவிஞர். சாலிஹ் என்பது அவர் பெயர். ‘ அண்ணல் கவிதைகள் ‘ தொகுப்பை எம்.ஏ. ரஹ்மான் 1960 களின் முற்பகுதியில் தனது அரசு பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.

Giritharan Navaratnam Jawad Maraikar நன்றி திரு.ஜவாத் மரைக்கார், தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு. திருத்தி விட்டேன். நன்றி.

Jawad Maraikar Giritharan Navaratnam , எனது ஆக்கத்தில்

தெள்ளுதமி ழுக்குதவு சீலன் – துதி
செப்பணாம லைக்குமனு கூலன் – வளர்
செழியப் புகழ்விளைத்த
கழுகு மலை வளத்தை
தேனே ! சொல்லு வேனே.”

என்ற காவடிச் சிந்தையும் ( 19 ஆம் நூற்றாண்டு )

“முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன் .
முன்னாலே வந்து நின்றான் காலன்.
சத்த மின்றி வந்தவனின்
கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான் . போனான்முச் சூலன்!”

என்ற குறும்பாவையும் காடடியுள்ளேன். குறும்பாவானது காவடிச் சிந்துக்கு ‘ வடிவத்தில் ‘ நெருக்கமானதாக இருப்பதை இங்கு அவதானிக்கலாம். இறுதியாக ,” மஹாகவி தனது குறும்பாக்களில் தனக்கேயுரிய தனித்துவமான நடையைக் கையாண்டுள்ளார் என்று கருதுவதே பொருத்தமானதாக இருக்கும் ” என்றே எனது ஆக்கத்தை முடித்துள்ளேன். அதனை நிறுவியுமுள்ளேன். இவற்றையும் உங்கள் பதிவினபோது கவனத்திற் கொண்டிருக்கவேண்டும் .

Giritharan Navaratnam வணக்கம் ஜவாத் மரைக்கார் அவர்களே, முதலில் உங்கள் எதிர்வினைக்கு நன்றி. காவடிச் சிந்தும், சித்தர் பாடலும் குறும்பாவையொத்தது போன்று காணப்பட்டாலும், குறும்பாவின் வடிவம் வேறுபட்டது என்றே எனக்குத் தோன்றுகின்றது, நீங்கள் கூறுவது போல் குறும்பாவின் நடை தனித்துவமானதுதான். லிமரிக் வடிவம் வேறு. குறும்பாவின் வடிவம் வேறு என்பதைத் தெளிவாக எஸ்.பொ. விபரித்திருப்பதால், அது பற்றி ஏற்கனவே பதிவில் விபரித்திருப்பதால் அதைக் குறிப்பிடத் தவறிவிட்டேன். அதையும் குறிப்பிடுவேன்.


Jawad Maraikar Giritharan Navaratnam , பல வருடங்களுக்கு முன்னர் நான் ( பத்திரிகையில் ) எழுதிய கருத்தொன்றிலிருந்து சில விடயங்கள் ( சில்லையூரார் என்னிடம் நேரில் தெரிவித்தது ) :சில்லையூராரின் இல்லத்துக்கு மஹாகவி சென்றிருந்தவேளை தன்னிடமிருந்த LIMERICKS தொகுதியையும் அதை அடியொற்றி தான் எழுதி வைத்துள்ள சில பாக்களையும் ( அவை குறும்பா அல்ல ) மஹாகவியிடம் காட்டியுள்ளார் சில்லையூரார். LIMERICKS நூலைப் பார்த்த மஹாகவி , இப்படியான ஒரு வடிவத்தைத்தானடா நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறி அந்த நூலைப் பெற்றுச் சென்றிருக்கிறார். சில்லையூராரும் மஹாகவியும் முருகையனும் தினகரனில் மாறிமாறி தமிழில் LIMERICKS எழுதுவதென்று முடிவுசெய்து அதற்கான ஆயத்தங்களையும் செய்தார்களாம். அதன் பின்னால் அக்காரியம் வேறொருவரின் கைங்கரியத்தால் நிறைவேறாமல் போயிருக்கின்றது. சம்பந்தப்பட்ட நால்வரும் இப்போது உயிருடனில்லை யென்பதாலும் அவர்களே இதுபற்றிப் பகிரங்கப்படுத்தாததாலும் நானும் இப்போது அதுபற்றிச் சொல்லவில்லை. ஆனால் தினகரனில் இதுபற்றி நான் எழுதியபோது முருகையன் உயிருடனிருந்தார். எனவே , முருகையனே இதுபற்றிக் கூறவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.முருகையன் அதனைப் படித்திருக்கமாட்டார் என்பது என் எண்ணம்.

அடுத்ததாக , எஸ்பொ என்ன சொன்னாலும் குறும்பா முற்றிலும் புதிய வடிவமல்ல என்பதே என் கருத்து. வடிவம் வேறு இலக்கணம் வேறு. உதாரணமாக , வெண்பா இலக்கணப்படி எழுதப்பட்டாலும் அளவடி வெண்பா , சிந்தியல் வெண்பா , குறள் வெண்பா , பஃறொடை வெண்பா , முதலியவை வடிவத்தில் வேறுபட்டவை. அதுபோலவே அளவடி வெண்பாவை மாத்திரம் எடுத்துக்கொண்டால் ஏந்திசைச் செப்பல் , ஒழுகிசைச் செப்பல் , தூங்கிசைச் செப்பல் என ஓசைகள் மாறி வருவதும் இன்னிசை வெண்பாக்களில் வடிவம் மாறி வருவதும் நீங்கள் அறிந்ததே.

காவடிச் சிந்து , குறும்பா ஆகிய இரண்டும் சர்வசமனானவை என்பது எனது வாதமல்ல. அவற்றின் இலக்கணத்தில் வேறுபாடு இருந்தாலும் அவற்றின் ஓசையும் வடிவமைப்பும் பெருமளவு நெருக்கமாகவுள்ளன. எனவே முற்றிலும் புதிதல்ல என்பதே என் கருத்து. ஆனால் குறும்பாவிலுள்ள தனித்தன்மையை நான் எனது பதிவிலும் ஏற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் “ இப்படியொரு வடிவத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்ன மஹாகவியின் கவனத்தில் காவடிச்சிந்து ஏன் பளிச்சிடவில்லை என்பதுதான்.

Giritharan Navaratnam Jawad Maraikar நன்றி ஜவாத் மரைக்கார் அவர்களே , உங்கள் விரிவான, தெளிவான எதிர்வினைக்கு. மேலும் நீங்கள் கூறிய தகவல்கள் வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை


Jawad Maraikar Giritharan Navaratnam மிக்க நன்றி. வணக்கம்.

ngiri2704@rogers.com