வாசிப்பும், யோசிப்பும் 355: புதுமைலோலனின் ‘தடுப்புக் காவலில் நாம்’

எழுத்தாளர் புதுமைலோலன் அவர்களைச் சில தடவைகள் யாழ் பிரதான சந்தைக்கண்மையிலுள்ள அவரது புத்தகக்கடையான ‘அன்பு புத்தகசாலை’யில் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அப்பொழுது நான் பதின்ம வயதை நெருங்கிக் கொண்டிருந்த சிறுவன. மாணவன். எழத்தில் ஆர்வம் மிகுந்து குழந்தைகளுக்கான சஞ்சிகைள், பத்திரிகைகளில் வெளியாகும் சிறுவர் பகுதிகளுக்கு ஆக்கங்களை அனுப்பத் தொடங்கியிருந்தேன். புதுமைலோலன் அவர்கள் எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணன் என்று அக்கடையில் பணிபுரிந்த இளைஞர் (பெயர் மறந்துவிட்டது) கூறியிருந்தார். அவ்விளைஞரே எனக்கு அக்காலகட்டத்தில் தன்னிடமிருந்த மார்க்சிக் கார்க்கியின் ‘தாய்’ நாவலைத் தந்தவர். எழுத்தாளர் ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் வெளியான நாவல்.

அண்மையில் ‘நூலகத்’தில் புதுமைலோலன் எழுதிய ‘தடுப்புக் காவலில் நாம்’ என்னும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல். 1961இல் யாழ் கச்சேரிக்கு முன்பாகத் தமிழரசுக் கட்சியினர் ‘சத்தியாக்கிரக’மிருந்தனர், பெண்களும் அதில் பங்குபற்றியிருந்தனர். அதனை அன்றிருந்த ஶ்ரீமா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசு படைபலம் கொண்டு அடக்கியது. தமிழ் அரசியல்வாதிகளுட்பட ஏனைய சத்தியாக்கிரகிகள் யாவரும் தாக்குதல்களுள்ளாகிக் கைது செய்யப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் அடைக்கப்பட்டனர். அவர்களில் எழுத்தாளர் புதுமைலோலனும் ஒருவர். அவர் 18.4.1961 தொடக்கம் 26.7.1961 வரை பனாகொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தனது தடுப்புக் காவலிலிருந்த சமயம் தம்  அனுபவங்களைத் தன் மகள் அன்பரசிக்குக் கடிதங்களாக எழுதினார். அக்கடிதங்கள் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.  அக்கடிதங்களின் தொகுப்பே மேற்படி நூலான் ‘தடுப்புக் காவலில் நாம்’.

இந்நூலின் முக்கிய சிறப்புகளில் முக்கியமான இரண்டு:  முதலாவது புதுமைலோலனின் தடுப்பு முகாம் வாழ்வை விபரிப்பது. இரண்டாவது அவருடன் கைதாகித் தடுப்பு முகாமில் சுமார் நூறு நாள்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனையவர்களைப் பற்றிப் பதிவு செய்வது. இவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்வாதிகளில் முக்கியமானவர்கள்: உடுவில் தர்மலிங்கம், ‘தானைத்தலைவர்’ அ.அமிர்தலிங்கம், திருமதி அமிர்தலிங்கம், இவர்களைப்போல் கிழக்கிலங்கை அரசியல்வாதிகள் பனாகொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இக்கடிதங்களில் உடுவில் தர்மலிங்கம், திருமதி அமிர்தலிங்கம் பற்றியெலாம் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். வவுனியா தா.சிவசிதம்பரம், சாம் தம்பிமுத்து, செ.இராஜதுரை எனப்பலர் பற்றிய விபரங்கள்  ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

 இன்று ஆய்வாளர்கள் என்னும் பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரைப்பற்றி மிகவும் தரக்குறைவாக சமூக ஊடங்கள், மின்னூடகங்கள், அச்சூடகங்களில் விமர்சிக்கும் ஒவ்வொருவரும் இவரைப்போன்றவர்களின் கடந்தகாலம் பற்றியும், இவர்களது இளமைப்பருவத்தில் தமிழரசுக்கட்சியில் இயங்கிக் கொண்டிருந்த சமயம் பங்கு பற்றிய சத்தியாக்கிரகம் போன்ற அமைதிவழிப் போராட்டங்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இரா.சம்பந்தரும் அச்சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றிப் பனாகொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர். அவரைப்பற்றி நூலிலுள்ள கடிதமொன்று பின்வருமாறு பதிவு செய்கின்றது:

கடந்த காலங்களில் தமிழர்கள் உரிமைகளுக்காகப் அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தமிழ் அரசியல்வாதிகள் பற்றி இலங்கைத்தமிழர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இன்று ஆய்வாளர்கள் என்னும் பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரைப்பற்றி மிகவும் தரக்குறைவாக சமூக ஊடங்கள், மின்னூடகங்கள், அச்சூடகங்களில் விமர்சிக்கும் ஒவ்வொருவரும் இவரைப்போன்றவர்களின் கடந்தகாலம் பற்றியும், இவர்களது இளமைப்பருவத்தில் தமிழரசுக்கட்சியில் இயங்கிக் கொண்டிருந்த சமயம் பங்கு பற்றிய சத்தியாக்கிரகம் போன்ற அமைதிவழிப் போராட்டங்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இரா.சம்பந்தரும் அச்சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றிப் பனாகொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர். அவரைப்பற்றி நூலிலுள்ள கடிதமொன்று பின்வருமாறு பதிவு செய்கின்றது:

“இ.சம்பந்தர் : திருமலை வழக்கறிஞர் ஆகிய இ.சம்பந்தர் .. அறப்போரின்போது ஓய்வற்றுத் திருமலையில் தொண்டாற்றியமைக்காகக் கைது செய்யப்பட்டவர். பண்பும் அமைதிப்போக்கும் கொண்டு திகழ்கிறார்.” (பக்கம் 9)

கூட்டமைப்பின் தலைவரின் அரசியலில் உங்களுக்கு மாற்றுக் கருத்துகளிருக்கலாம். ஆனால் அவரைப்போன்ற பலர் தமிழர்தம் உரிமைகளுக்காகப் போராடியவர்கள். போராடிச் சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

புதுமைலோலனின் இந்நூல் இலங்கைத்தமிழர்தம் உரிமைப்போராட்டத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் பற்றியும், அதன் விளைவாக அனுபவித்த தடுப்புமுகாம் அனுபவங்களைப் பதிவு செய்யும் அதே சமயம், அப்போராட்டத்தில் பங்குபற்றி சிறைவாசம் அனுபவித்த ஏனைய தமிழ்ச் சமூக, அரசியற் செயற்பாட்டாளர்களைப்பற்றியும் பதிவு செய்கின்றது. அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.

ngiri2704@rogers.com