வாசிப்பும், யோசிப்பும் 356: மல்லிகை 43ஆவது ஆண்டு மலரும், முனைவர் க.குணராசாவின் (செங்கை ஆழியான்) “‘ஈழநாடு’ இதழின் புனைகதைப் பங்களிப்பு” ஆய்வுக் கட்டுரையும்.

மல்லிகை 43ஆவது ஆண்டு மலர்மல்லிகை சஞ்சிகையின் 43ஆவது ஆண்டு மலரை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். இம்மலரில் எழுத்தாளர் செங்கை ஆழியான் (முனைவர் க.குணராசா) ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி “‘ஈழநாடு’ இதழின் புனைகதைப் பங்களிப்பு” என்னும் தலைப்பில் நல்லதோர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஈழநாட்டில் வெளியான பல்வகைப்புனைகதைகள் பற்றிக் (சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் போன்ற) குறிப்பிட்டுள்ளதுடன் , ஈழநாட்டில் எழுதிய எழுத்தாளர்களை ஏழு தலைமுறைப் படைப்பாளிகளாக வகைப்படுத்தியுமுள்ளார். அவர்களைப்பற்றியும் , அவர்கள்தம் படைப்புகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க ஆய்வுக்கட்டுரை. வேறு யாரும் இவ்விதம் விரிவாக ஈழநாடு பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி ஆய்வுக் கட்டுரையேதாவது எழுதியதாகத் தெரியவில்லை. அவ்விதம் எழுதியிருந்தால் நான் இதுவரை அறியவில்லை.


ஈழநாட்டில் எழுதியவர்களைப்பற்றிய அவரது வகைப்படுத்தலில் என் பெயர் , வடகோவை வரதராஜன் ஆகியோரின் பெயர்களை ஏழாந்தலைமுறைப்படைப்பாளிகள் பிரிவினுள் கண்டேன். என் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் “வ.ந.கிரிதரன் (இப்படியும் ஒரு பெண், மணல் வீடுகள்)” என்று என் இரு சிறுகதைகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அக்காலகட்டத்தில் என் பதின்மவயதுப்பருவத்தில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் என் ஆரம்பகாலச் சிறுகதைகள் நான்கு வெளியாகியுள்ளன. அவற்றில் இரண்டு மட்டுமே செங்கை ஆழியானுக்குக் கிடைத்திருப்பதுபோல் தெரிகின்றது.


மேற்படி கட்டுரையில் ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் பகுதிகளை இங்கு ஒரு பதிவுக்காகப் பகிர்ந்துகொள்கின்றேன். மல்லிகை மலரையும் மேற்படி கட்டுரையையும் முழுமையாக வாசிப்பதற்குரிய இணைய முகவரி: http://noolaham.net/project/29/2870/2870.pdf

கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே:


8. ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகள்


ஈழநாடு இதழ்களில் சிறுகதை எழுதியதன் மூலம் ஈழத்துச்சிறுகதை உலகிற்கு அறிமுக மாகியிருக்கும் ஏழாந் தலைமுறை எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் 223 பேராவர். அவர்கள் வழங்கியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை 330 ஆகும். இவர்களில் ஓரிரு கதைகளோடு இன்று காணாமற் போயிருக்கும் எழுத்தாளர்களின் பட்டியலைத்தரில் நீண்டுவிடும். ஆதலால் இன்னமும் தொடர்ந்து ஏதோ வகையில் தமது பங்களிப்பினைத் தருபவர்களில் காங்கேயன், குமார் தனபால், ச.பாலசுப்பிரமணியம், குகன், புலவர் தமிழ்மாறன், அனலை ஆறு இராசேந்திரன், வ.ந. கிரிதரன், எஸ்.கே.சுப்பையா, வடகோவை வரதராஜன், கந். தர்மலிங்கம், சிங்கை தீவாகரன், செங்கதிர், வன்னியூர் அன்ரனி மனோகரன், ஐ. சண்முகலிங்கம், மண்டைதீவுக் கலைச் செல்வி, வவுனியூர் இரா. உதயணன், திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார், சி.கதிர்காமநாதன், சந்திரா தியாகராசா, இயல் வாணன் , தேவி பரம லிங்கம் ந. இரத்தினசிங்கம் முதலானோரைக் குறிப்பிடலாம்.


ஈழநாடு இதழ்களில் நிறையவும் நிறைவாயும் எழுதியவர் காங்கேயன் ஆவார். “பொங்கிற்றாம் புயல் கடல், வெள்ளி மல்லிகை, அட்டமிச்சந்திரன், கலை மான் கொம்பு, இன்பநிலை, பசும்புல், ஒரே ஒரு கோட் என்பன அவரின் எழுத்துக்களாம். இவரை இப்பொழுது எப்பத்திரிகைகளிலும் காணமுடியவில்லை. குமார் தனபாலை ஏழாந்தலை முறையில் அடக்குவது கடினம் அவர் ஈழநாட்டில் ‘காவோலை, உயிர் ஒரு துரசு’ முதலான ஆறு சிறுகதைகளை எழுதியுள்ளார். சுப்பிரமணியம் (நிறைவு, பாசக் கயிறு, டாக்டர் சுந்தரம், ஆணிவேர்), குகன் (ஆடிக்குழப்பம், அழிவுப்பாதையில், நந்தாவதி), செந்தாரகை (முருக்கம் பூ, அவள் பெண்மை), புலவர் தமிழ்மாறன் (நான் ஒரு அனாதை, பிரமதேவன் பென்ஷன் எடுக்கிறான்), வ.ந.கிரிதரன் (இப்படியும் ஒரு பெண், மணல் வீடுகள்), எஸ்.கே. சுப்பையா (அவனுக்கும் உலகம் புரிகின்றது, கனவுகள் கலைகின்றன) ஆகியோர் எழுதியுள்ளனர். இவர்கள்’ இப்பொழுது எங்கே?


இவ்விரிசையில் கவன ஈர்ப்பிற்கு உள்ளாகுபவர்கள் அனலை ஆறு. இராசேந்திரன், சிங்கைத் தீவாகரன், தேவி பரமலிங்கம், கந் தர்மலிங்கம், த.சண்முகசுந்தரம், மண்டைதீவுக் கலைச் செல்வி, திக்கம் சிவயோக மலர் ஜெயக்குமார், சி. கதிர்காமநாதன் ஆகியோராவர். அனலை ஆறு. இராசேந்திரன் ஈழநாடு மூலம் தன்னை நல்லதொரு எழுத்தாளராக இனங்காட்டிக் கொண்டவர். பாசத்தின் தீர்ப்பு, மலர்ந்தும் மலராத வாழ்வு, சேவலும் பேடும், நிலம் நோக்கும் நாள் எதுவோ?, ஒன்றுக்குள் ஒன்று’ ஆகிய குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியுள்ளார். சிங்கைத்தீவாகரன் அவருக்கு இணையாகக் கடலலை ஏன் உறங்கவில்லை?, எங்கே போவது?, நிழல் தரும் காலம் வரை, ஒ இந்த மனிதர்கள் முதலான சிறுகதைகளை வரைந்துள்ளார். க.தர்மலிங்கம், “கல்நெஞ்சன், அவன் செய்த காரியம்’ முதலான ஐந்து சிறுகதைகளை எழுதியுள்ளார். வடகோவை வரதராஜன் ஓர் அற்புதமான படைப்பாளியாகத் தன்னை இனங்காட்டியவர். ‘பாசத்தின் விலை, கோடை தகர்ந்தது, உயிரின் ஆராதனை, பழியும் பாவமும், பிச்சைக்காரிகள், நீலமணி, போகாத பாதைகள், முன்னிரவும் பின்னிரவும்’ முதலான சிறுகதைகளைத் தரமாக ஈழநாடு இதழ்களில் எழுதியுள்ளார். த. சண்முகசுந்தரம் மிக மூத்த நாடகாசிரியர் எனினும் சிறுகதைத் துறையைப் பொறுத்தளவில் ஈழநாட்டில் பிற்காலத்திலேயே இணைந்தார். அவர் “காட்டுக் கோழி, நடுத்தர வாழ்க்கை நடக்கிறது’ முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். மண்டைதீவுக் கலைச்செல்வி நல்ல தொரு படைப்பாளியாக முகிழ்த்தவர். ஈழநாடு இதழ்களில் அவள் துயில் கொள்கிறாள், அவளுக்கொரு கண்ணிர்ப்பூ, அவளுக்கொரு வாழ்வு, கரை காணாத கப்பல் முதலான சிறு கதைகளை எழுதியுள்ளார். திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமாரின் நல்ல சிறுகதைகளாக அவள் அகதி யில்லை, மயங்குகிறாள் ஒரு மாது, மலர் தாவும் வண்டுகள் வெளிவநதுள்ளன. அவ்வகையில் ஜனனி சபா புஸ்பநாதனின் நினைவில் நிற்கும் நெஞ்சங்கள், அவளுக்கு வேறென்ன தகுதி தேவை ஆகிய சிறுகதைகள் அமைந்துள்ளன. சி. கதிர் காமநாதன் ஈழத்து சிறுகதை உலகிற்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார். அவரின் எங்கள் கூட்டினுள்ளே, மணலெடுத்து, தாய முதலான சிறுகதைகள் ஈழநாட்டில் வெளிவந்துள்ளன. ஈழநாடு இதழ்களில் நல்ல சிறுகதைகளைத் தந்த இன்னும் சிலரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.


கு. ராதா ரமணன் (அறை), தேவி பரமலிங்கம் (செய்திவேட்டை), மயிலை சிவசண்முகநாதன (மனப் புயல்), சி.புண்ணியமூர்த்தி (தெளிவு), எஸ்.எம பாவர் ( கங்கை கடலை நோக்கி ஓடிக் கொண்டிருக் கிறது), செல்வி ஜி. ஜோ. செல்லத்துரை (ஒரு பட்டதாரி சம்பளம் எடுக்கிறாள்), வன்னியூர் அன்ரனி மனோகரன் (பிடிவாதக் காரன், தண்டவாளங்களும் சிலிப்பர் கட்டைகளும்), ஐ. சண்முகலிங்கம் ( சிறிய மனிதர்கள்), அகளங்கன் (தீக்குளிப்பு), வவனியூர் இரா. உதயணன் ( அந்த இரண்டு பைத்தியங்கள்), ஜனக மகள் சிவஞானம் (தீர்வு), இயல்வாணன் (தாகம்), பா.சிவபாலன் (அகதிமுகாம்). ந. கிருஷ்ணசிங்கம் (அந்த நாய் வந்தது) ஆகியோர்களாவர்.


11. ஈழநாடு புனைகதைகளில் தேறுபவை

ஏழாந்தலை முறைப் படைப்பாளிகளில் த.சண்முகசுந்தரத்தின் காட்டுக்கோழி, மாத்தளை வடிவேலனின் பூபாளராகங்கள், குமார் தனபாலனின் நான் ஒரு சண்டியன், ச.சுப்பிரமணியத்தின் ஆணி வேர், செந்தாரகையின் முருக்கம்பூ, தேவ பரமலிங் கத்தின் செய்தி வேட்டை, வடகோவை வரதராஜ னின் உயிரின் ஆராதனை, கோப்பாய் எஸ். சிவத் தின் இரசனைகள், த.இந்திரலிங்கம் அவன் மனிதன், காங்கேயனின் அட்டமிச்சந்திரன், பரமின் சுயரூபம், அனலை ஆறு இராசேந்திரனின் சேவலும் பேடும், சி.கதிர்காமநாதனின் தாய், இயல்வாணனின் தாகம், ந. கிருஷ்ணசிங்கத்தின் அவன் மட்டும் வீடு திரும்ப வில்லை, வந.கிரிதரன் மணல் வீடுகள், சிங்கை தீவா கரனின் எங்கே போவது?, செங்கதிரின் வாயும் வயிறும், க.தர்மலிங்கத்தின் காலம் காத்தி ருப்பதில்லை, மண்டைதீவுக் கலைச் செல்வியின் அவள் துயில் கொள்கிறாள், சிவயோகமலர் ஜெயக்குமாரின் அவள் அகதியில்லை என்பன நல்ல சிறு கதைகளாகத் தேறுகின்றன.


ஈழநாடு புனைகதைத் துறையை ஒரு காலகட்டத்தில் முன்னெடுத்துச் சென்றுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் ஈழத்து புனைகதை இலக்கியத்திற்குரிய அதன் பங்களிப்பினை வருங்காலமே முடிவுசெய்யும். “

ngiri2704@rogers.com