வாசிப்பும், யோசிப்பும் – 36 : கோபிநாத்தின் ‘நீயா நானா’ பற்றி நான்!

கோபிநாத்தின் 'நீயா நானா' பற்றி நான்! ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன்நண்பர் ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன் கூறியதால் இன்று (ஜனவரி 19, 2014)  கோபிநாத்தின் ‘நீயா நானா’ பார்க்கவேண்டுமென்று நினைத்தேன். சந்தர்ப்பமும் அமைந்தது. இதுதான் நான் முதல்முறையாக ‘நீயா நானா’ நிகழ்வொன்றினை முழுமையாகப் பார்ப்பது. கல்லூரியில் படிக்கும் ஏழை , பணக்கார மாணவர்களின் உளவியலை அவர்களுடனான உரையாடல் மூலம் கோபிநாத் வெளிக்கொணர்ந்தார். இந்நிகழ்வின் முக்கியமானதோர் அம்சமாக அவர் ஏழை மாணவர்கள் பக்கத்திலுள்ளவர்களிடம் ‘நேரு இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும், பணக்கார மாணவர்கள் பக்கத்திலிருந்தவர்களிடம் ‘அம்பேத்கார் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் இரண்டு நிமிடங்களாவது பேசக் கூறியபோதூ அவர்களிலொ ருவராளாவது பேச முடியவில்லை. அப்பொழுது கோபிநாத் மாணவர்களைப் பார்த்து இதனைப் பார்வையாளர்களிடமே மதிப்பிட விட்டுவிடுகின்றேன். என்று கூறியதுடன் மாணவர்களைப் பார்த்து இதே நேரம் உங்களிடம் இரு நடிகர்களைப் பற்றிப் பேசுமாறு கூறினால் பேச மாட்டீர்களா என்று கேட்பார். மாணவர்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் கேள்வியது. இன்னுமொரு மாணவர் அரசியல்வாதியாகப் போக விரும்புவதாகக் கூறியிருப்பார். அவராலும் நேரு, அம்பேத்கார் பற்றிச்சிறிது நிம்மிடங்களாவது பேச முடியவில்லை. வெட்கப்பட வேண்டிய விடயமிது. அதனையும் கோபிநாத் சுட்டிக்காட்டியிருப்பார்.
 
இதேபோல் செந்தில்நாதன் தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய விடயமும் முக்கியமானது. இன்று இணையம் ஒன்றே போதுமானது எத்தனையோ விடயங்களை அறிவதற்கு. ஊடக வசதிகள், பயன்கள் இவ்வளவுதூரத்துக்கு முன்னேறியிருக்கும் இச்சமயத்திலும் மாணவர்களுக்கு ஓரிரு உழைக்கக்கூடிய வேலைகளைத் தவிர வேறு கல்வித் துறைகளைப் பற்றித் தெரியவில்லையென்பது மாணவர்களின் ஊக்கமின்மை காரணமாகத்தானே தவிர அவர்களது பொருளாதாரத்தால் அல்ல என்னும் கருத்துப்பட அவர்  கூறியதும் சரியான கூற்று.  பொருளியல்ரீதியில் பிளவுணடிருந்தாலும் மாணவர்கள் இந்த விடயத்தில் ஒன்றாகத்தானிருக்கின்றார்கள். அந்தஸ்த்துக்காக, ஆடை அலங்காரங்களுக்காக ஊடகங்களைப் பாவிக்க முடிந்த மாணவர்களுக்கு தங்களது அறிவினை அதிகரிப்பதற்கு முடியவில்லையென்பது செந்தில்நாதன் கூறியதுபோல் அதிர்ச்சிகரமானதுதான்.  அபிலேஷ் சந்திரன் தன் கருத்துரையில் தெரிவித்திருப்பதைப்போல் மாணவர்களில் பெரூம்பாலானவர்களின் நோக்கம் ஒரு வசதியான, உறுதியான வேலையொன்றில் அமர்ந்து வாழ்க்கையின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்வதுதான்.
 
இதற்கு முக்கியமானதொரு காரணம் இன்று இந்தியா போன்ற நாடுகள் உலகமயமாக்கல் மூலம் தங்களது வாழ்க்கை முறைகளை மேற்குலகநாட்டு வாழ்க்கைமுறைக்கு மாற்றிக்கொண்டிருப்பதுதான். எல்லாவற்றையுமே கடனுக்கு வாங்கும் வாழ்க்கை மக்களை வாழ்நாள் முழுவதும் உழைப்பு அடிமைகளாக வைத்திருப்பதற்கே வழிகோலுகிறது. அதற்கு முக்கியமான தேவை ஊதியத்துடன் கூடிய வேலைப் பாதுகாப்பே. எனவேதான் இவ்விதமான மேற்குலக வாழ்க்கைமுறைகளின் மீது நாட்டம் கொண்டுள்ள இன்றைய மாணவர்களுக்கு (அவர்கள் எந்த வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலென்ன) அத்தகைய வாழ்க்கை முறைகளுக்குத் தேவையான தொழில்களைப் பற்றி மட்டுமே தெரிந்திருக்கிறது. ஏனையவற்றைப் பற்றி அறிவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை.
 
மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயம் வர்க்கப்பிளவுகளும், மாணவர்களும், இன்றைய கல்வித்திட்டங்களும். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நேரு பற்றியோ அம்பேத்கார் பற்றிய ஆழமாக அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி சில நிமிடங்களாவது பேச முடியவில்லை. ஒரு சில பாடத்திட்டங்களைத் தவிர ஏனையவற்றைப் பற்றி போதிய அறிவு இல்லை. முக்கிய காரணம்: இன்று தாராளமாகக் தகவல் சுரங்கங்களாகவிருக்கின்ற பல்வேறு ஊடகங்களையும் பயன்படுத்தித் தம் அறிவினை வளர்ப்பதற்குரிய ஆர்வம் அவர்களுக்கில்லை. வாசித்தறிவினை வளர்க்கும் ஆர்வம் அவர்களுக்குப் போதிய அளவிலில்லை. தலை முடியினை அழகு படுத்துவதற்கு, விதம் விதமான காலணிகளை வாங்குவதற்கு, ‘பார்ட்டிக’ளுக்குச் செலவழிப்பதற்கு எல்லா மாணவர்களுமே நாட்டமாகவிருக்கின்றார்கள் (வர்க்க வித்தியாசங்களென்ற எல்லைகளையும் மீறி). அந்த நாட்டத்தை தம் அறிவினை வளர்ப்பதற்கும் அவர்கள் பாவிக்க வேண்டும். அதற்கு இணையம் போன்ற நவீன ஊடகங்களே போதுமானவை. ஒரு முறையாவது கூகுளில் ‘நேரு’ பற்றி, ‘அம்பேத்கார்’ பற்றித் தேடிப்பார்த்திருந்தீர்களானால் , உங்களால் இந்நிகழ்வில் திணறியதைபோல் திணறியிருந்திருக்கத் தேவையில்லை.

ngiri2704@rogers.com