வாசிப்பும், யோசிப்பும் (360) : எழுத்தின் எளிமையும் , ஆழமும் பற்றி…

எந்த விடயத்தைப் பற்றி எழுதுவதென்றாலும் முதலில் அந்த விடயத்தைப்பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். அது பற்றிப் பல்வேறு கோணங்களில் விளக்கமளிக்கும் நூல்களை, கட்டுரைகளை வாசியுங்கள். அது பற்றிய புரிதல் நன்கு ஏற்பட்டதும் அது பற்றி மிகவும் எளிமையாக அதே சமயம் மிகவும் ஆழம் நிறைந்ததாகவும் எழுதுங்கள். எளிமையாகவும், ஆழம் நிறைந்ததாகவும் எப்படியிருக்க முடியும் என்று ஆச்சரியப்படுகின்றீர்களா? தெரியாவிட்டால் மகாகவி பாரதியாரின் மகத்தான கவிதைகள் போன்ற பல படைப்புகளை இருக்கின்றனவே. ‘நிற்பதுவே நடப்பதுவே ‘ கவிதையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் அக்கவிதையில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வளவு எளிமையானவை. ஆனால் அக்கவிதை கூறும் பொருள் அவ்வளவு எளிமையானதுதானா? இல்லையே . மிகவும் ஆழமானது. அதுபோல்தான் அவரது ‘இன்று  புதிதாய்ப்பிறந்தோம்’ போன்ற கவிதைகளும். கவிஞர் கண்ணதாசனின் பல சிறந்த திரைப்படப்பாடல்களும் எளிமையும், ஆழமும் நிறைந்தவைதாம். இவ்வகையில் எளிமையான ஆற்றொழுக்குப்போன்றதொரு நடையில் ஆழமான விடயங்களை எழுதுவதில் , கூறுவதில் வல்லவராக விளங்கியவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. ஸ்டீபன் ஹார்கிங் வானியற்பியலில் சிறந்த அறிவியல் அறிஞராக விளங்கியவர். அவர் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சார்பியற் தத்துவம், குவாண்டம் இயற்பியல் போன்ற விடயங்களைப்பற்றியெல்லாம் மிகவும் எளிமையான நடையில் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்னும் அற்புதமானதொரு அறிவியல் நூலினை எழுதியுள்ளார். எளிமையும், ஆழமும் நிறைந்த நூல் அது.

பலர் அறிவியல் கட்டுரைகளை  , இலக்கியக் கட்டுரைகளை எழுதும்போது தம் புலமையினை வெளிக்காட்டுவதற்காகப் பல உசாத்துணை நூல்கள், கட்டுரைகளையெல்லாம் மேற்கோள் காட்டி, கடினமான மொழி நடையில் சித்து விளையாட்டுகள் காட்டுவார்கள். இவர்களில் பலர் எழுதும் பல பக்கக் கட்டுரைகளின் ஓரிரு பந்திகளை வாசித்ததுமே அவர்கள் ஆழமான விடயமொன்றினைப்பற்றிய பூரண ஆய்வும், புரிதலுமற்று, மேற்கோள்கள் மூலம் தம் புலமையினை வெளிப்படுத்த முனைகின்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்து விடும். எந்த விடத்தைப்பற்றி இவர்கள் வாசகர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கின்றார்களோ அவ்விடயத்தின் சாரத்தைக் கூடச் சுருக்கமாக வாசகர்களுக்குப் புரிய வைக்க முடியாமல், தாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பி விடுவார்கள். அவ்விதம் வாசகர்களைக் குழப்பி விடுவதன் மூலம், தாம் வாசகர்களுக்குப் புரியாத விடயம் பற்றி எழுதும் மகத்தான சிந்தனைவாதிகளாகத் தம்மை இனங்காட்ட முனைகின்றார்கள்.

‘மாசறு பொன்னே! வலம்புரி முத்தே’ என்று பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் காப்பியம் பாடிச் சென்றான் கவிஞனொருவன். அவனிடமில்லாத எளிமையா? ஆழமா? ‘பாலுத் தெளிதேனும்’பாடிச் சென்றாளே தமிழ் மூதாட்டி ஒருத்தி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர். அவளிடமில்லாத எளிமையா? ஆழமா?

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

– பாரதியார் –

ngiri2704@rogers.com