வாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: ‘அமிர்த கங்கை’

சஞ்சிகை அமிர்த கங்கை; ஆசிரியர்: செம்பியன் செல்வன் -

‘நூலகம்’ தளத்தில் சஞ்சிகைகள் பகுதியை மேய்ந்துகொண்டிருக்கையில் கண்களில் பட்ட சஞ்சிகை ‘அமிர்த கங்கை’. எழுத்தாளர் செம்பியன் செல்வனை கெளரவ ஆசிரியராகக்கொண்டு வெளியாகிய சஞ்சிகையின் 12 இதழ்கள் ( ஜனவரி 1986 தொடக்கம் ஜூன் 1987 வரையிலான காலகட்டத்துக்குரிய) சேகரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஏப்ரில் 1986, செப்டெம்பர் 1986, டிசம்பர் 1986, ஜனவரி 1987, பெப்ருவரி 1987 ஆகிய இதழ்களைக் காணவில்லை. ஜனவரி 1986 வெளியான இதழே முதலாவது இதழ்.


இதழில் சிறுகதைகள், தகவல்கள், குட்டிக்கதைகள், செம்பியன் செல்வனின் உருவகக்கதைகள், ஓவியர் ரமணியின் ஓவியங்களுடன் கூடிய ‘ரமணி’என்னும் சிறுவர் பகுதி, கட்டுரைகள், செங்கை ஆழியானின் ‘தீம்தரிகிட தித்தோம்’ தொடர் நாவல், புதுமைப்பித்தனின் பேஸிஸ்ட் ஜடாமுனி (பாஸிச வரலாறு) என்னும் தலைப்பிலான முசோலினி பற்றிய தொடர், சத்ஜித்ரேயின் வங்காள நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் (லீலா றே மொழிபெயர்த்தது) தமிழ் மொழிபெயர்ப்பு ‘பக்திக் சந்த்’ தலைப்பில் வெளியான தொடர், கேலிச்சித்திரங்கள் இவற்றுடன் சஞ்சிகையின் இறுதிப்பகுதியில் சோதிடம் (இராசி பலன்) ஆகியவை காணப்பட்டன. சத்ஜித்ரேயின் தொடரைத் தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் சொக்கன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஞ்சிகையில் தாமரைச்செல்வி, கோப்பாய் சிவம், மலர் மகள், செளதாமினி, நா,பாலேஸ்வரி, ஆதிலட்சுமி இராசையா, கந்.தர்மலிங்கம், பா.இ.ரதி, தமிழ்ச்செல்வி, கு.பரராஜசேகரன், சந்திரா தியாகராஜா, தயா- பொன்னையா, வவுனியா திலீபன், இளவாலை விஜேந்திரன், கலைமகள் சிவஞானம், குறமகள், ச.பத்மநாதன், இணுவையூர் திருச்செந்திநாதன், கே.ஆர்.டேவிட், எம்.கே.முருகானந்தன், யோ.றெகான், இராஜதர்மராஜா என்று பலர் ஒரு தொகுப்பாகத் தொகுக்கக்கூடிய அளவுக்குச் சிறுகதைகள் எழுதியுள்ளார்கள். டானியல் அன்ரனியின் குறுநாவலான ‘தடம்’, யாழ்பல்கலைக்கழகம் நடாத்திய குறுநாவல் போட்டியில் வெற்றிபெற்ற ஸ்வாதி ஆகியவற்றையும் சஞ்சிகையின் இதழ்களில் காணமுடிகின்றது. கதைகளுக்குரிய ஓவியங்களை ரமணி, லங்கா போன்றோர் சிறப்பாக வரைந்துள்ளார்கள்.


‘ஆகாயகங்கை’ சஞ்சிகையின் கடந்தகால இதழ்களை வாசிக்க விரும்புவோருக்காக இவ்விணைய இணைப்பினை இங்கு தருகின்றேன்: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

ngiri2704@rogers.com